அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

வவுனியா ஆஸ்பத்திரியில் 37 புலிகளின் உடல்கள்

வவுனியா பொது வைத்தியசாலையில் விடுதலைப் புலிகளின் 37 உடல்கள் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் இந்த 37 உடல்களும் படையினரால் கொண்டுவரப்பட்டு வவுனியா ஆஸ்பத்திரியில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. வன்னிப் போர் முனையில் உயிரிழந்த விடுதலைப் புலிகளின் உடல்களே இவையெனவும் தெரிவிக்கப்படுகிறது.

பிரேத பரிசோதனைகள் நடைபெற்ற நிலையில் இந்த உடல்களை பொறுப்பேற்று விடுதலைப் புலிகளிடம் ஒப்படைக்குமாறு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தை கேட்கப்பட்டுள்ளது. எனினும் இந்த உடல்கள் எப்போது வன்னிக்குக் கொண்டு செல்லப்படுமெனத் தெரியவில்லையெனவும் கூறப்படுகிறது.

பயங்கரவாத அமைப்பொன்றினால் மேற்கொள்ளப்பட்ட அதிகளவிலான தற்கொலைத் தாக்குதல்

nimal_sripaladesiva_.jpg1984  மற்றும் 2000 ஆண்டுகளுக்கிடைப்பட்ட காலப்பகுதிகளில் புலிகள் 168 தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாகவும் இந்த காலப்பகதிகளில் இதுதான் ஒரு பயஙகரவாத அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட மிகவும் அதிகளவிலான தற்கொலைத்தாக்குதல் எனவும் சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

குருநாகலில் உள்ள யு.பி.எவ்.ஏ யின் அலுவலகத்தில் சனிக்கிழமை (10.01.009) நடைபெற்ற தேர்தல் சந்திப்பின்போது அமைச்சர் டி சில்வா இத்தகவலைத் தெரிவித்துள்ளார். நாட்டின் பல பாகங்களில் அப்பாவிப் பொதுமக்கள் மீதான 346 தாக்குதல்களை மேற்கொண்ட புலிகள் 1984-2006 காலப்பகுதிகளில் 3,262 பொதுமக்களைக் கொன்றுள்ளனா. இதில் 2,252 சிங்கள மக்களும் 309 தமிழ் மக்களும் மற்றும் 701 முஸ்லிம் மக்களும் அடங்குவர். மற்றும் 3,494 பொதுமக்கள் கடுமையான காயங்களுக்குள்ளாகினர் எனவும் அவர்களில் பெண்கள், சிறுவர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மாரும் அடங்குவர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

“இலங்கை யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர உடனடி நடவடிக்கை வேண்டும்’ ஒபாமா, ஹிலாரிக்கு மகஜர் அனுப்ப கையெழுத்து வேட்டை

obama.jpgஅமெரிக்காவில் இயங்கும் “ஒபாமாவுக்கான தமிழர்கள்’ (Tamils for Obama) என்ற அமைப்பு, அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள பராக் ஒபாமாவுக்கும் அமெரிக்க வெளிவிவகார அமைச்சராக நியமனம் பெறுகின்ற ஹிலாறி கிளிண்டனுக்கும் அனுப்புவதற்கான ஒரு மனுவிற்காக கையெழுத்து வேட்டையில் இறங்கியுள்ளது. தமிழர்களின் சார்பில் அனுப்பப்படவுள்ள இந்த மனுவில் ஒரு வாரத்திற்குள்ளாகவே 50 ஆயிரம் பேர் கையெழுத்திட்டிருப்பதாக அந்த அமைப்பின் ஊடகத் தொடர்பாளர் தெரிவித்துள்ள?ர்.

இணையம் ஊடாக கையெழுத்துகள் சேகரிக்கப்படும் இக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; தமிழ்த் தேசிய இனப் போராட்டத்தையும் ஈழத் தமிழர்கள் இன்று எதிர்நோக்கியிருக்கும் இனப் படுகொலை அபாயத்தையும் எடுத்து விளக்குவதுடன், இலங்கைப் பிரச்சினையில் தாமதமின்றி தலையிட்டு, தமிழர்களுக்கு நீதி கிடைக்க உடனடியாக வழி செய்யுமாறும் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியையும் வெளியுறவு அமைச்சரையும் கேட்டுக்கொள்கின்றது.

“உலகம் எங்கும் பரந்து வாழும் தமிழர்கள் ஒவ்வொருவரையும் இதில் கையெழுத்து இடுமாறு நாம் வேண்டுகின்றோம். ஒரே குடும்பத்தில் இருந்தாலும் தனித்தனியான ஒவ்வொருவரது கையெழுத்தும் மிகவும் பெறுமதி வாய்ந்தது. அது அவர் அவரது கருத்தைப் பிரதிபலிப்பதாக அமையும். அதனால், ஒவ்வொரு தமிழரும் இதில் கையெழுத்திடல் வேண்டும்’ என்று ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பின் ஊடகத் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார். தமிழர்கள் தாம் கையெழுத்திடுவதுடன் மட்டும் நின்றுவிடாமல், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், வேலைத் தளங்களில் உள்ள தமிழர்கள் அல்லாத தமது நண்பர்களுக்கும் தமிழர் நிலைமையை எடுத்து விளக்கி, அவர்களையும் இதில் கையெழுத்திட வைக்க வேண்டும்’ எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார். காலத்தின் மிக அவசரமான தேவை கருதி எல்லோரும் இதனை உடனடியாகச் செய்ய வேண்டும்’ என்று அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.

அந்தக் கடிதத்தின் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது. இதில் கையெழுத்திட விரும்புவோர் கீழே உள்ள இணைப்பு (Link) ஊடாக கையெழுத்திடும் பக்கத்திற்குச் சென்று கையெழுத்திடுமாறும் “ஒபாமாவுக்கான தமிழர்கள்’ கேட்டுக்கொண்டுள்ளது. கையெழுத்திடும் இணைப்பு: http://www.tamilsforobama.com/sign/usersign.html/ கடிதத்தின் விபரம் வருமாறு:

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கும் மற்றும் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளிண்டனுக்கும் இக்கடிதத்தில் கையொப்பம் இட்டிருக்கும் நாங்கள், இலங்கையில் நடக்கும் போரை முடிவுக்கு கொண்டுவர உடனடியாக தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பணிவாகக் கேட்டுக்கொள்கின்றோம். ஏனெனில்,

1.இந்தப் போரானது தமிழர்களின் பூர்வீக நிலமான இலங்கையின் வடகிழக்கு பகுதி மீது இலங்கை அரசால் மேற்கொள்ளப்படுகின்றது. பெரும் அழிவை ஏற்படுத்தி, தமிழர்களின் பாரம்பரிய தாயகத்தில் இருந்து அவர்களை அகற்றி இனச்சுத்திகரிப்புச் செய்வதே இந்தப் போரின் நோக்கமாகும். முதலாம் நூற்றாண்டு காலத்தில், ரோமன் இராச்சியத்தில் பலஸ்தீனத்திலிருந்து யூதர்களைத் துரத்தியது போன்ற பெரும் மக்கள் இடம்பெயர்வு அங்கு இப்போது நிகழ்கின்றது.

2.ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை சுதந்திரமடைந்த 1948 இலேயே இந்தத் தமிழின அழிப்பு ஆரம்பித்துவிட்டது. தமிழர் நிலங்களைப் பறித்து, அவற்றுக்கு சிங்களப் பெயர்களைச் சூட்டி, அவற்றில் குடியேற்றி, அவற்றில் இராணுவ முகாம்களை நிறுவுதல் என இந்த இனச் சுத்திகரிப்பு ஆரம்பித்தது. தொடர்ந்து, தமிழர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு, வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டு தமிழர்களது பொருளாதார வாழ்வு சீரழிக்கப்பட்டது. மேலும், கடந்த 25 வருட காலமாக தமிழர் படுகொலைகளும் கைதுகளும் காணாமல் போதலும் மட்டுமன்றி, தமிழர் வாழ்விடங்கள் மீது வான், தரை மற்றும் கடல் வழியான தொடர்ச்சியான குண்டுவீச்சுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

3.இலங்கை அரசாங்கமானது புத்த மதத்தை நாட்டின் அரச மதமாக்கி, இந்து மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களை குண்டுவீசி அழித்துவிட்டு, பின்னர் அந்த இடங்களில் புத்த விகாரைகளைக் கட்டுகின்றது.

4.அனைத்து சமாதான முயற்சிகளையும் நிராகரித்து, சமரச உடன்பாடுகளையும் கிழித்தெறிந்த இலங்கை அரசாங்கங்கள், இப்படியான முயற்சிகளுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டைகளையும் போடுகின்றன.

5. தமிழ் மக்களுக்கு அனைத்துலக தொண்டு நிறுவனங்கள் வழங்கி வந்த அனைத்து உதவிகளையும் நிறுத்தியதோடு, அரசாங்கமானது அந்த நிறுவனங்களை நாட்டைவிட்டும் வெளியேற்றியது. இந்த இனப்படுகொலைப் போரை நிறுத்துவதற்கு, புதிய ஒபாமா அரசாங்கம் உடனடியாக காத்திரமான நடவடிக்கையை எடுக்குமென்றும், தமிழர்களுக்கு நல்ல வழி ஏற்படுத்தும் என்றும் நாங்கள் நம்புகின்றோம். எங்களது இந்த விண்ணப்பத்திற்கு மதிப்பளித்தமைக்கு எமது நன்றிகளும் உங்களுக்கு உரித்தாகட்டும்.

யாழ் சுண்டிக்குளம் பகுதி முழுவதும் படையினர் வசம்

army-1401.jpgபுலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த சுண்டிக்குளம் பகுதியையும் இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர். இராணுவத்தின் 55வது படைப் பிரிவினரே இந்தப் பிரதேசத்தை இன்று (14.01.2009) மாலை தமது பூரண கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர். இதன்போது இராணுவம் யாழ் தீபகற்பத்தை முழுமையாக விடுவித்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது

எமது முழு உரிமைகளையும் பெற இந்நாளில் சபதம் எடுப்போம் – அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்

aarumugam.jpg
தமிழர்களுடைய தனிப்பெரும் பண்டிகை பிறக்கிறது. இச்சமயத்தில் மலையக சமுதாயம் பல துறைகளிலும் சுபீட்சமடைய வேண்டுமென வாழ்த்துகின்றோம். உழவர்கள் அறுவடை கண்டு மகிழ்ச்சி அடையும் ஒரு நன்நாள் இதுவாகும். இவ்வாறு அமைச்சரும், இ. தொ. கா. பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் விடுத்துள்ள பொங்கல் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் தனது செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது :- மலையக சமுதாயத்தில் அன்று தொட்டு இன்றுவரை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மக்களுக்கான உரிமைகளையும் சலுகைகளையும் போராடியும் சாணக்கியமான அணுகு முறைகளாலும் பரஸ்பர பேச்சுவார்த்தைகளாலும் ஈட்டித் தந்துள்ளது. இது நாங்கள் பெற்ற அறுவடைகளாகும்.

இந்த நாட்டின் அரசியலில் பங்கெடுத்துள்ளோம், எனவே ஏனைய சமூகங்களுக்குரிய உரிமைகள், வசதிகள், வாய்ப்புகள் ஆகியவை முழுமையாக எங்கள் சமூகத்திற்கு கிடைக்க வேண்டும். அதுவே எங்களுடைய இலட்சிய நோக்கமாகும்.

இவற்றையெல்லாம் அடைவதற்காக முழு வீச்சில் எம்பணிகளை நாம் முன்னெடுத்து செல்வோம். இதற்கு முழு சமுதாயமும் ஒருங்கிணைந்து அமோக ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கி மென்மேலும் எமது இ. தொ. காவை பலப்படுத்தும் என்ற நம்பிக்கை எமக்குண்டு. எமது இலட்சியப் பணிகளை ஒருக்கிணைத்து மேற்கொள்ள இந்த பொங்கல் பெருநாளில் திடசங்கற்பம் பூணுவோமாக. 

பிரபாகரன் இந்தோனேஷியாவுக்கு தப்பியோடுவதற்கு திட்டம் – கருணா

murali.jpgபுலிகளின் தலைவர் பிரபாகரன் தற்கொலை செய்யமாட்டார். சிலவேளை இந்தோனேஷியாவுக்கு அல்லது கம்போடியாவுக்கு தப்பியோடலாமென தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் முரளிதரன் எம். பி. (கருணா) தெரிவித்துள்ளார். தமிழ் நாட்டில் வெளிவரும் மாலை மலர் பத்திரிகைகக்குக் கருத்துத் தெரிவித்துள்ள அவர்,

“பிரபாகரன் தப்பி ஓடப்பார்க்கிறார். நான் அவருடன் இருந்தவன். அவரை பற்றி எனக்கு நன்கு தெரியும். பிரபாகரன் இந்தோனேஷியாவுக்கோ கம்போடியாவுக்கோ தப்பி ஓட திட்டமிட்டு இருக்கிறார். தப்பி ஓடாவிட்டால் இராணுவத் தாக்குதலில் அவர் உயிர் இழக்க வேண்டிய நிலை ஏற்படும். அல்லது முசோலினி, சதாம் உசேன் போல இராணுவத்தினரிடம் பிடிபடுவார்” இவ்வாறு கருணா கூறியுள்ளார்.

ஷெல் தாக்குதலில் 3 சகோதரிகள் பலி; 30 பொதுமக்கள் படுகாயம்

vanni.jpgகிளிநொச்சி விசுவமடுப் பகுதியில் மக்கள் குடியிருப்புப் பகுதியில் நேற்றுக் காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற ஷெல் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரிகளும் வயோதிபர் ஒருவரும் கொல்லப்பட்டதுடன், 7 சிறுவர்கள் உட்பட 23 பேர் காயமடைந்தனர்.

முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பு ஆஸ்பத்திரி மீது நேற்றுக்காலை பத்து மணியளவில் மேற்கொள்ளப்பட்ட ஷெல் தாக்குதலில் பெண்ணொருவர் உட்பட இருவர் கொல்லப்பட்டதுடன், ஏழு பேர் படுகாயமடைந்தனர். இவை தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்றுக் காலை முதல் விசுவமடு பகுதியில் கடும் ஷெல் தாக்குதல் நடைபெற்றது. விசுவமடு மகாவித்தியாலயத்திற்கு அருகில் பொதுமக்கள் செறிந்து வாழும் குடியிருப்பு பகுதிகளில் தொடர்ந்து பல ஷெல்கள் வீழ்ந்து வெடித்தன.

இதனால், பல வீடுகள் முற்றாகச் சேதமடைந்தன. இதில் ஒரு வீட்டில் வீழ்ந்த ஷெல்லினால் அங்கிருந்த மூன்று சகோதரிகளும் மற்றொரு வீட்டில் வீழ்ந்த ஷெல்லினால் வயோதிபர் ஒருவரும் அந்த இடங்களிலேயே கொல்லப்பட்டனர். வேறு வேறு வீடுகளில் வீழ்ந்து வெடித்த ஷெல்களினால் ஏழு சிறுவர்கள் உட்பட 23 பேர் படுகாயமடைந்தனர். கொல்லப்பட்ட மூன்று சகோதரிகளதும் தாயாரும் படுகாயமடைந்த நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதல்களில் சகோதரிகளான மயூரி (வயது 19), சுஜிதா (வயது 14), சுஜீவனா (வயது 16) ஆகியோரும் வயோதிபர் ஒருவரும் (பெயர் கிடைக்கவில்லை) கொல்லப்பட்டனர்.

வடக்கு அபிவிருத்தியை ஆராய இன்று 2ம் கட்ட முக்கிய பேச்சு

laksman-yaappa.jpgகிழக்கை விட துரிதமாக வடக்கை அபிவிருத்தி செய்வதே அரசாங்கத்தின் திட்டமாகும். இது தொடர்பான இரண்டாவது முக்கிய பேச்சுவார்த்தை ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பெசில் ராஜபக்ஷ எம்.பி. தலைமையில் இன்று நடைபெறவுள்ளதாக தகவல், ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

வடக்கை மீட்டு முழுமையாக அபிவிருத்தி செய்வதுடன், அம்மக்களுக்கான இயல்பு வாழ்க்கையை துரிதமாக பெற்றுக் கொடுப்பதில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்துமென தெரிவித்த அமைச்சர், வடக்கின் துரித அபிவிருத்தி தொடர்பான முதலாவது கலந்துரையாடலில் வடக்கின் முக்கிய அரசியல் தலைவர்களுடன் இந்தியத் தூதுவரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகுமெனவும் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் அபிவிருத்தி மற்றும் தற்போதைய சூழ்நிலை தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு தெளிவுப்படுத்தும் செய்தியாளர் மாநாடொன்று நேற்று தகவல் ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் கலந்து கொண்டு விளக்கமளித்த அமைச்சர் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது,

அரசாங்கத்தின் சகல நடவடிகைகளையும் விமர்சனத்துக்குள்ளாக்கி அரசியல் இலாபம் தேடும் முயற்சியில் சில சக்திகள் ஈடுபட்டு வருகின்றன. அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஐ. தே. க. எம்.பி. ரவி கருணாநாயக்கா படையினர் கிளிநொச்சியைக் கைப்பற்றுவோமென மதவாச்சியையே கைப்பற்றப் போகின்றனர். அலிமங்கடவைக் கைப்பற்றுவோமென்று கூறி பாமன்கடையையே கைப்பற்றுவர் எனத் தெரிவித்தார். இன்று நடந்துள்ளது என்ன என்பதை சகலரும் அறிவர்.

வடக்கின் அபிவிருத்தி சம்பந்தமாக அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இது தொடர்பான பேச்சு வார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. சிறந்த திட்டம் ஒன்று வகுக்கப்பட்டு அதனைத் துரிதமாக நடை முறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். நேற்று முன்தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளிநாட்டு ஊடகவியலாளர்களைச் சந்தித்துள்ளார். இச்சந்திப்பின் போது படையினரின் மனிதாபிமான நட வடிக்கைகள் பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலேயே மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்துள்ளார். 1983ம் ஆண்டு கால கட்டத்திலுள்ள சில காட்சிப் படங்களை வைத்துக் கொண்டு சில சக்திகள் பொதுமக்கள் பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்படுவதாகப் பிரசாரங்களை மேற்கொள்ளுகின்றனர்.

வாகரையிலிருந்து 14,000 பொது மக்களைப் படையினர் எவ்வித பாதிப்புமில்லாதவாறு வெளிக்கொணர்ந்தமை குறிப்பிடத்தக்கது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

புலிகளின் முக்கிய இலக்குகளில் நேற்று விமானத் தாக்குதல்

mi24-1912.jpgபுலிகளின் இனங்காணப்பட்ட முக்கிய இலக்குகள் மீது இலங்கை விமானப் படையினர் நேற்றுக்காலை முதல் மாலை வரை 9 தடவைகள் விமானத் தாக்குதல்களை மேற்கொண்டதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இவ்விமானத் தாக்குதல்களின்போது புலிகள் இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் மற்றும் சிரேஷ்ட உறுப்பினர்கள் அடிக்கடி கூடும் முக்கிய இடங்கள் இரண்டும், இரண்டு பீரங்கி நிலைகள் மீதும் இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விமானப் படைக்குச் சொந்தமான எம்.ஐ – 24 மற்றும் ஜெட் ரக விமானங்களை பயன்படுத்தியே புலிகளின் இனங் காணப்பட்ட இந்த இலக்குகள் மீது ஒன்பது தடவைகள் விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார். முல்லைத்தீவு நோக்கி தரை வழியாக முன்னேறிவரும் படையினருக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையிலேயே நேற்றுக்காலை முதல் மாலை வரை மேற்படி பகுதிகளில் எட்டு தடவைகள் விமானத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

முல்லைத்தீவு நகருக்கு தெற்கே அமைந்துள்ள புலிகள் சந்திக்கும் முக்கிய இரகசிய இடமொன்றை இலக்குவைத்து நேற்றுக்காலை 9.10, 9.20, 11.30 மற்றும் மாலை 3.35 ஆகிய வேளைகளிலேயே விமானத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இதேவேளை முல்லைத்தீவுக்கு அருகிலுள்ள புலிகள் சந்திக்கும் இன்னுமொரு முக்கிய இரகசிய இடம் மீதும் காலை 10.15 மணி, நண்பகல் 12.10, 1.45 மாலை 3.15 ஆகிய நேரங்களில் ஜெட் விமானங்கள் மூலம் தாக்குதல்களை மேற்கொண்டன.

அதனைத் தொடர்ந்து மாலை 4 மணியளவில் யாழ்ப்பாணம், சுண்டிக்குளம் களப்புக்கு அருகில் இனங்காணப்பட்ட புலிகளின் இரண்டு பீரங்கி நிலைகளையும் விமானப் படையினரின் ஜெட் விமானங்கள் தாக்கியழித்தன. விமானப் படையின் உளவுப் பிரிவினர் இலக்குகளை நன்கு இனங்கண்டதன் பின்னரே தாக்குதலை நடத்தியிருப்பதாக கூறிய ஊடக மத்திய நிலைய அதிகாரி மேற்கொள்ளப்பட்ட ஒன்பது தாக்குதல்களும் வெற்றியளித்திருப்பதனை விமான ஓட்டிகள் உறுதி செய்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இன்று கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் பொங்கல் விழாவில் கலைப்பிரிவில் முதலிடம் பெற்ற மாணவிக்கு கௌரவிப்பு

pongal-02.jpgஅண் மையில் வெளியான 2008 க.பொ.த.உயர்தரப்பரீட்சையில் கலைப்பிரிவில் தேசிய மட்டத்தில் முதலாவதாக வந்து சாதனை நிலைநாட்டிய கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரி மாணவி செய்னுலாப்தீன் பாஹிமா இன்று புதன்கிழமை காலை திருகோணமலையில் கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சு நடத்தவிருக்கும் பொங்கல் நிகழ்வில் பாராட்டிக் கௌரவிக்கப்படவுள்ளார்.

இன்றைய தினம் கடந்த வருடத்தில் வெளியான க.பொ.த.சாதாரணதரப் பரீட்சையில் தேசிய மட்டத்தில் முதலாவதாக வந்து சாதனை புரிந்த காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரி மாணவி எஸ்.ஷாலினியும் பாராட்டப்பட்டு கௌரவிக்கப் படவிருப்பதாகக் தெரிவிக்கப்படுகின்றது. இளம் புத்தாக்குநர் கழகங்களுக்கு இடையே கிழக்கு மாகாண மட்டம், தேசிய மட்டம் ஆகியவற்றில் நடத்தப்பட்ட புத்தாக்கக் கண்டுபிடிப்புக்களில் மாகாண மற்றும் தேசியநிலையில் சிறந்தவை எனத் தெரிவு செய்யப்பட்ட புத்தாக்கங்களை கண்டுபிடித்த மாணவரும் இப்பொங்கல் நிகழ்வில் கௌரவிக்கப்படவிருப்பதாகத் தெரிகிறது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சர் விமலவீரா திஸநாயக்க கலந்துகொள்வார். மாகாணக் கல்வி அமைச்சின் மாநாட்டு மண்டபத்தில், கௌரவிப்பு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன