அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து ஜனவரி 6 இல் சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

ind-pan.jpgகிளிநொச்சி நகரத்தை அரச படை கைப்பற்றியுள்ளது கவலையளிக்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடுப் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு பிரிவு செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை; இலங்கையில் பல ஆண்டுகளாக தீர்க்க முடியாமல் நீடித்து வரும் இனச்சிக்கல் இனப் போராக மாற்றமடைந்து கிளிநொச்சி நகரத்தை இராணுவம் கைப்பற்றி விட்டதாக வந்துள்ள செய்தியை கவலை தரத்தக்க செய்தியாகவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயற்குழு கருதுகிறது.

சில நாடுகளின் இராணுவ உதவிகளுடன் போராடி இலங்கை இராணுவம் பயங்கரவாதிகளாகக் கூறப்படும் விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்கப் போவதாகக் கூறிய போதிலும் அரசு நடத்திய கண்மூடித்தனமான வான், தரைப்படைத் தாக்குதல்களால் நிராயுத பாணிகளான தமிழ் மொழி பேசும் மக்கள் கொல்லப்பட்டார்கள். பல இலட்சம் பேர் அகதிகளாக்கப்பட்டார்கள். இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற மூர்க்கத்தனத்தையே இது காட்டுகிறது. 2009 ஆம் ஆண்டு புத்தாண்டு விழாப் பிரார்த்தனையிலும் விழாவிலும் ஈடுபட்டிருந்த மக்கள் மீதும் குண்டு வீசப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியதாகும். போர் கொடூரத்தையும் இலங்கைத் தமிழ் மக்கள் அநியாயமாகக் கொல்லப்படுவதைக் கண்டும் கேட்டும் கலங்கிப் போன இந்தியத் தமிழர்கள் அரசுடன் பேசி போர் நிறுத்தம் கண்டு தமிழ் மக்களின் உயிரைக் காப்பாற்ற எழுச்சி கொண்டு குரல் கொடுத்தனர்.

முதல்வர் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் மூலமும் சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலமும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் டில்லியில் பிரதமரைச் சந்தித்து முறையிட்ட பின்னரும் தமிழ் மக்களின் உணர்வையும் வேதனையையும் புரிந்து கொண்டு அதற்கேற்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பது வேதனையைத் தருகிறது. முதல்வர் தலைமையில் பிரதமரைச் சந்தித்த அனைத்துக் கட்சிக் குழு மிகக் குறைந்தபட்ச கோரிக்கையாக வெளியுறவுத்துறை அமைச்சரை இலங்கைக்கு அனுப்பிடக் கேட்டும் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை.

இலங்கையில் நடக்கும் தமிழ் இனப் பேரழிவுக்குத் தீர்வு காண வேண்டும் என்பதில் இந்திய அரசுக்கு எவ்விதக் கவலையுமில்லை. தமிழ் மக்களின் மதிப்புக் குரலை அலட்சியப்படுத்தி விட்டது. இருப்பினும் கிளிநொச்சியைப் பிடித்ததால் இராணுவ வெற்றி எனக்கூறும் அரசை இன்றுடன், இத்துடன், போரை நிறுத்துமாறு இந்திய அரசு பகிரங்கமாக வற்புறுத்த வேண்டும். இலங்கை அரச உடனடியாகப் போர் நிறுத்தத்தை அறிவித்து இலங்கை வாழ் தமிழ் மக்களின் மனித ஜனநாயக அரசியல் உரிமைகளை வழங்கி நடைமுறைப்படுத்தக் கூடிய திட்டத்தை அறிவிக்க வேண்டுகின்றோம். தமிழக மக்களின் உணர்வுகளையும் வேதனையையும் உணர்ந்து நடவடிக்கை எடுக்கத் தவறிய மத்திய அரசைக் கண்டித்து ஜனவரி 6 ஆம் திகதி சென்னையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தும். இதர இயக்கங்கள் மத்திய அரசைக் கண்டித்து நடத்தும் இயக்கங்களுக்கு ஆதரவு தருவது என்றும் மாநில செயற்குழு முடிவு செய்கிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

யாழ். அரச அதிபரின் சேவைக்காலம் நீடிப்பு

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக பதவி வகிக்கும் கே. கணேஷின் பதவிக்காலத்தை பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு மேலும் ஆறு மாதகாலத்துக்கு நீடித்துள்ளது. அவரது பதவிக் காலம் ஜூன் முப்பதாம் திகதிவரை நீடிக்கப்பட்டிருப்பதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

அறுபத்தேழு வயதான கே. கணேஷ், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்ட பின்னர் இரு தடவைகள் அவரது பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பணியாற்றும் அரசாங்க அதிபர்களில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரே வயதில் கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மன்னார் மடுக்கரையிலுள்ள லீட்ஸ் நிறுவனத்தை வெளியேறுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை

மன்னார் நானாட்டான் மடுக்கரையிலுள்ள லீட்ஸ் எனப்படும் சர்வதேச தொண்டு நிறுவனத்தை அங்கிருந்து வெளியேறுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நானாட்டான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட மடுக்கரை கிராமத்தில் சுமார் 4 வருடங்களாக லீட்ஸ் எனும் நிறுவனம் இயங்கி வருகின்றது. இந்த நிலையில் தமது கிராமத்தை அடித்தளமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனத்தினால் எவ்விதப் பயனும் தமக்கோ அல்லது கிராமத்திற்கோ இல்லை என்று மடுக்கரை மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கடந்த பல வருடங்களாக மடுக்கரை மக்களின் குடிநிலக்காணிகளிலிருந்தும் அக்கிராமவாசிகளின் பயிர் செய்கைக்குரிய காணியிலிருந்தும் மணல் அகழ்ந்து அதனை கூட்டெருவாகத் தயாரித்து அதனை மன்னார் நகரப்பகுதியில் லீட்ஸ் நிறுவனம் விற்பனை செய்வதாகக் குற்றம் சாட்டியுள்ள மடுக்கரை மக்கள், இவ்விதம் லீட்ஸ் நிறுவனம் தமது கிராமத்தின் வளத்தை சுரண்டுவதோடு, தமது விவசாய நடவடிக்கைகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கின்றனர். இதேவேளை, மடுக்கரையில் இருந்து மனனாருக்கு லீட்ஸ் நிறுவனத்தினால் ஐந்து உழவு இயந்திரங்களில் ஏற்றிச் செல்லப்பட்ட கூட்டெருவினை அங்கிருந்து கொண்டு செல்லாது தடுத்து நிறுத்திய மடுக்கரை மக்கள் மீது முருங்கன் பொலிஸார் கடுமையாகத் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன், இது தொடர்பாக நானாட்டான் பிரதேச செயலாளரிடம் மகஜரொன்றையும் கையளித்துள்ளளனர். இதேவேளை, மடுக்கரை விடயம் தொடர்பாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், மன்னார் அரசாங்க அதிபர் ஏ.நிக்கிலாஸ்பிள்ளை ஆகியோர்களின் கவனத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

படை வீரர்களை நேரில் சந்தித்து இராணுவத் தளபதி நன்றி தெரிவிப்பு

kilinochchi-victory.jpgகிளிநொச்சி வெற்றிக்கு பங்களிப்பு வழங்கிய இராணுவ வீரர்களுக்கு பாராட்டுத் தெரிவிப்பதற்கு இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேக வன்னிக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார் வன்னி பாதுகாப்பு தலைமையகத்திற்கு நேற்று சனிக்கிழமை சென்ற அவர் வன்னி இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அனைத்துப் படைப்பிரிவுகளினதும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன் போது கிளிநொச்சி வெற்றிக்கு பங்களிப்பு வழங்கிய இராணுவ வீரர்களுக்கு இராணுவத்தளபதி பாராட்டு தெரிவித்துள்ளார்.எதிர்கால இராணுவ நடவடிக்கை குறித்தும் ஆராயப்பட்டதாகவும் இராணுவத் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது

புலிகள் மீதான தடை குறித்து அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம்

0301-ltte.jpgவிடுதலைப் புலிகளை தடை செய்வது குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பரிசீலித்து வருவதாகவும் இந்த விடயம் தொடர்பாக அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படுமெனவும் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவைக் கைப்பற்றிய பின்னர் புலிகள் அமைப்பை தடை செய்யவதென ஜனாதிபதி முன்னர் முடிவு செய்திருந்ததாகவும் இப்போது கிளிநொச்சி நகர் கைப்பற்றப்பட்டதையடுத்து அதற்கு முன்பாக புலிகளை தடை செய்யும் சாத்தியம் இருப்பதாகவும் சிரேஷ்ட அமைச்சர் ஒருவரை மேற்கோள் காட்டி “லங்கா டிசன்ற்’ நேற்று சனிக்கிழமை செய்தி வெளியிட்டிருந்தது.

விடுதலைப் புலிகளை தடை செய்தால் அந்த அமைப்புடன் ஏதாவது தொடர்புகளை வைத்திருக்கும் அரசியல்வாதிகள் சர்வதேச அமைப்புகளையும் தடை செய்வதற்கு ஏதுவான சட்ட மூலமும் நிறைவேற்றப்படுமென அந்த அமைச்சர் கூறியுள்ளார். 1979 இல் பாராளுமன்றத்தில் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு புலிகள் அமைப்பு மீது முதலாவது தடை விதிக்கப்பட்டது. பின்னர் 1994 இல் சமாதானப் பேச்சு வார்த்தை மேற்கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தடையை நீக்கியிருந்தார். பின்னர் 1998 மார்ச் 21 இல் மீண்டும் அவசர கால ஒழுங்கு வீதிகளின் கீழ் புலிகள் மீது தடை விதிக்கப்பட்டது. பின்னர் 2001 டிசம்பரில் பதவிக்கு வந்த ஐ.தே.க. அரசாங்கம் 2002 பெப்ரவரி 22 இல் யுத்த நிறுத்த உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு முன்பாக புலிகள் மீதான தடையை நீக்கியது

அரச அலுவலகங்களில் நாளை தேசிய கொடியை பறக்க விடஅரசாங்கம் வேண்டுகோள்

kilinochchi-victory.jpg கிளிநொச்சியின் வெற்றிக்காக போராடிய படையினருக்கு நன்றி தெரிவித்தும் களமுனையில் உயிரிழந்த படையினரை நினைவுகூரும் நோக்குடனும் நாளை 5 ஆம் திகதி திங்கட்கிழமை சகல அரசாங்க அலுவலகங்கள், கட்டிடங்களில் தேசியக் கொடி பறக்கவிடப்பட வேண்டும் என பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது. காலை 8.30க்கு தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும்.

காலை 8.35 மணிக்கு நாட்டிற்காகவும் உயிர் நீத்த படை வீரர்களை நினைவு கூர்ந்தும் இரண்டு நிமிட நேரம் மெளனஞ்சலி செலுத்த வேண்டும். இயலுமானவரை மதத் தலைவர்களின் பங்களிப்புடன் மத அனுஷ்டானங்களைச் செய்ய வேண்டும். நாட்டின் ஆட்புல ஒருமைப்பாடு, இறைமை போன்றவற்றின் முக்கியத்துவம் பற்றியும், களமுனையில் பெற்ற வெற்றியின் முக்கியத்துவம் பற்றியும் நிறுவனங்களின், திணைக்களங்களின் தலைவர்கள் உரை நிகழ்த்த வேண்டும். இந்த நடைமுறையை தனியார் துறை நிறுவனங்களும் கடைப்பிடிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு நகரின் பாதுகாப்பை பலப்படுத்த விசேட நடவடிக்கை – மேலதிக பொலிஸார் கடமையில்

check1.jpgகொழும்பு நகரின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்காக மேலதிக பொலிஸாரும் இராணுவத்தினரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர கூறினார்.

கிளிநொச்சி முழுமையாக மீட்கப் பட்டுள்ளதையடுத்து புலிகள் கொழும்பிலும் அண்டிய பகுதிகளிலும் தாக்குதல் நடத்தலாம் என்பதாலேயே கொழும்பு நகரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மீட்கப்பட்ட நேற்று முன்தினம் விமானப்படை தலைமையகத்தின் முன்பாக தற்கொலைத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதேவேளை ரயில், மற்றும் பஸ்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக அவர் கூறினார். கொழும்பு நகரின் பாதுகாப்பிற்கென முக்கிய இடங்கள் மற்றும் வீதிகளில் வீடியோ கெமராக்களை பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாருமே இல்லாத கிளிநொச்சியைத் தான் ராணுவம் பிடித்துள்ளது.- புலிகள் கருத்து

0301-ltte.jpgயாருமே வசிக்காத நகரமான கிளிநொச்சியைப் பிடித்து விட்டதாக ராணுவம் கூறுகிறது. அங்கிருந்த மக்கள் ஏற்கனவே இடம் பெயர்ந்து விட்டனர். எங்களது தலைமையகத்தையும் நாங்கள் ஏற்கனவே மாற்றி விட்டோம் என விடுதலைப் புலிகள் கருத்து தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி வீழ்ந்தது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை. இருப்பினும் ஆட்களே வசிக்காத கிளிநொச்சியைத்தான் ராணுவம் பிடித்துள்ளதாக அவர்கள் சார்பு இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதில், கிளிநொச்சியில், இருந்த மக்கள் அனைவரும், கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் ஏற்கனவே வட கிழக்குக்கு இடம் பெயர்ந்து விட்டனர். எங்களது தலைமை அலுவலகமும் வட கிழக்குப் பகுதிக்கு மாற்றப்பட்டு விட்டது. மொத்தத்தில் யாருமே இல்லாத கிளிநொச்சியைத்தான் ராணுவம் பிடித்துள்ளது.

கிளிநொச்சியைக் கைப்பற்றியபோது பொதுமக்களுக்கு இழப்பு எதுவுமில்லை * ஜனாதிபதி ராஜபக்ஷ கூறியதாக “இந்து’ ஆசிரியர் ராம் தெரிவிப்பு

கிளிநொச்சியைக் கைப்பற்றியதையடுத்து ஆனையிறவையும் ஏனைய முக்கிய இலக்குகளையும் கைப்பற்றுவதற்காக இலங்கையின் ஆயுதப்படைகள் துரிதமாக முன்னேறும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எதிர்பார்க்கிறார். அண்மித்த எதிர்காலத்தில் வட இலங்கையில் முல்லைத்தீவுக் காடுகளுக்கு வெளிப்புறமாக விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் எங்கும் செல்லமுடியாது என்ற நம்பிக்கையுடன் ஜனாதிபதி ராஜபக்ஷ இருக்கிறார் என்று சென்னையிலிருந்து வெளியாகும் “இந்து’ பத்திரிகையின் ஆசிரியர் என்.ராம் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் “இந்து’ பத்திரிகையின் முதல் பக்கத்தில் திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;  விடுதலைப் புலிகளின் நிர்வாகத் தலைநகராகவிருந்த கிளிநொச்சியை விடுவிப்பதற்காக ஆயுதப்படைகள் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது “பொதுமக்களுக்கு இழப்புகள் எதுவும் ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கொள்கையை’ படையினர் மேற்கொண்டமை குறித்து ஞாயிறு மாலை கொழும்பிலிருந்து தொலைபேசி மூலம் என்னுடன் உரையாடிய போது ஜனாதிபதி ராஜபக்ஷ திருப்தி தெரிவித்தார். தமது சகல நடவடிக்கைகளின் போதும் அவர்கள் இக்கொள்கையை தொடர்ந்து முன்னெடுப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாலஸ்தீனத்தில் என்ன நடக்கின்றது என்று பாருங்கள்!மோசம் அங்குள்ள உண்மையான நிலைவரத்தை அறிந்து கொள்வதற்காக பாலஸ்தீன ஜனாதிபதியுடன் (மஃமூட் அப்பாஸ்) நான் கதைத்தேன் என்று ஜனாதிபதி ராஜபக்ஷ கூறினார். கைதிகள் போன்று வைக்கப்பட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை விடுதலைப் புலிகள் விடுவிக்கவில்லையென கவலை தெரிவித்த ராஜபக்ஷ தமிழ் மக்களின் சுதந்திரம், மனித உரிமைகளை புலிகள் தொடர்ந்தும் நிராகரித்தால் அந்த அமைப்பு தடையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் ராஜபக்ஷ எச்சரித்தார். ஒருவார காலப்பகுதிக்குள் தடை அமுலுக்கு வரக்கூடும் என்பது விளங்கிக் கொள்ளக்கூடியது. இந்தியா உட்பட சுமார் 30 நாடுகளில் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பொதுமக்களை பராமரிப்பது தொடர்பாக நாம் அதிகளவு முன்னுரிமை கொடுக்கவுள்ளோம் என்று தொலைபேசி மூலமான உரையாடலின் போது ராஜபக்ஷ என்னிடம் தெரிவித்தார். “அவர்களின் பாதுகாப்பை நாம் விரும்புகிறோம் அதனாலேயே அவர்களின் விடுதலையை நான் கடுமையாக வலியுறுத்துகிறேன். நாம் அவர்களுக்கு உணவு அனுப்பிக் கொண்டிருக்கிறோம். நாம் புலிகளுக்கும் உணவு கொடுத்துக் கொண்டிருக்கிறோம். பொதுமக்கள் வந்த பின்னரும் கூட நாம் அவர்களை பட்டினியுடன் இருக்க விடமாட்டோம்’ என்று ராஜபக்ஷ கூறினார்.

விடுதலைப் புலி உறுப்பினர்கள் சிலர் படையினரிடம் சரணடைந்ததாகவும் அவர் தெரிவித்தார். அகதிகளாக சில தற்கொலைக் குண்டுதாரிகள் வருவதற்கு முயற்சி செய்யும் சாத்தியம் குறித்தும் தனது அரசாங்கத்துக்கு தெரியும் என்றும் ராஜபக்ஷ கூறினார். கொழும்பு மற்றும் சுற்றுப்புறங்களில் சுமார் 15 தொடக்கம் 20 வரையிலான தற்கொலைக் குண்டுதாரிகள் ஊடுருவியிருக்கலாமென நம்பப்படுகின்றது. அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் அரசாங்கம் முடிந்தளவுக்கு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்றும் ராஜபக்ஷ கூறினார்.

“கிளிநொச்சியில் புலிகளின் தலைமையகத்தில் ஒரு சிறுதுண்டு கடதாசியைக் கூட காணவில்லை’

கிளிநொச்சியைக் கைப்பற்றிய இராணுவத்தினர் விடுதலைப் புலிகளின் தலைமையகத்திற்குள் நுழைந்த போது அங்கு சிறு காகிதத் துண்டைக் கூட விடுதலைப் புலிகள் விட்டுச் சென்றிருக்கவில்லையென இந்துஸ்தான் ரைம்ஸ் தெரிவித்துள்ளது. இத் தகவலை விடுதலைப் புலிகளின் தலைமையகத்திற்குள் முதலாவதாக நுழைந்தவர்களில் ஒருவரான இராணுவ அதிகாரி மேஜர் அமுனுபுர தெரிவித்ததாக இச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சியை பார்வையிடுவதற்காக அழைத்துச் செல்லப்பட்ட செய்தியாளர்களில் இந்துஸ்தான் ரைம்ஸ் செய்தியாளரும் ஒருவராவார். நான்கு தளங்களைக் கொண்ட இக் கட்டிடத்திற்குள் நாம் நுழைந்தபோது சிறு காகிதத் துண்டைக் கூட விடுதலைப் புலிகள் விட்டுச் சென்றிருக்கவில்லை. இலேசாக மூடியிருந்த பிரதான கதவில் திறப்பு தொங்கவிடப்பட்டிருந்தது. கணினிகள், தொடர்பாடல் உபகரணங்கள், காகிதங்கள் என அங்கிருந்த ஒவ்வொன்றையும் அவர்கள் எடுத்துச் சென்றிருந்தனரென அமுனுபுர கூறியதாக இச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இந்துஸ்தான் செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளதாவது; விடுதலைப் புலிகளின் சமாதான செயலகமாகவும் போர் நிறுத்தகாலத்தில் பல முக்கிய சந்திப்புகள் நடைபெற்ற இடமாகவும் விளங்கிய இவ் தலைமையகம் புதிதாக குடியேறப் போகிறவர்கள் வசிக்கப் போகும் ஒரு வெறுமையான கட்டிடமாக காட்சியளித்தது. தமிழர் புனர்வாழ்வு அமைப்பின் அலுவலகமும் இதேபோன்று காணப்படும் அதேவேளை, ஏறத்தாழ கிளிநொச்சி நகரம் முழுவதிலும் இவ்வாறானதொரு வெறுமையே பரவியுள்ளது.

இங்கு ஒரு பொதுமகனைக் கூட காண முடியவில்லை. குண்டுகளால் துளையிடப்பட்ட வீடுகள், கூரைகள், கதவுகள், யன்னல்களின்றி காணப்படுகின்றன. பெரிய நீர்த்தாங்கியொன்று சின்னாபின்னமாகியுள்ளது. விடுதலைப் புலிகளின் படையணிகள் இங்கிருந்து நகர்வதற்கு முன்னர் பொதுமக்களின் உதவியுடன் இங்கிருந்த ஒவ்வொன்றையும் தம்முடன் எடுத்துச் சென்றுள்ளனர். மின் குமிழ்கள், வீதி விளக்குகள், மின் இணைப்பிற்கான வயர்கள், விளம்பரப் பலகைகள், கூரைத் தகடுகள், ஜெனரேட்டர்கள், உடைகள், புத்தகங்கள், தளபாடம் மற்றும் வாகனங்களென ஒவ்வொன்றும் இங்கிருந்து அகற்றப்பட்டுள்ளன. தேவாலயங்கள், கோயில்கள் என்பன பக்தர்களின்றி வெறிச்சோடிக் கிடக்கின்றன. கொண்டு செல்ல முடியாத கூரைகள் மட்டுமே இங்குள்ள கட்டிடங்களில் எஞ்சியுள்ளது.

கிளிநொச்சி தேசிய மருத்துவமனையில் காயங்களுக்குப் பயன்படுத்தப்படும் சிறு பண்டேச் துணி கூட காணப்படவில்லை. அனைத்துவகை உபகரணங்களும் மருந்துப் பொருட்களும் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இங்குள்ள சில அரசாங்க கட்டிடங்களும் இதேபோன்று வெறுமையாகவே காணப்படுகின்றது. கடும் போர் நடந்தமைக்கான அறிகுறிகள் நகரெங்கிலும் தென்படுகின்றன. வெடிக்காத கிரைனேட்டுகள், வெடி பொருட்களின் வெற்றுப் பெட்டிகள், குண்டு துளைத்த வீடுகள் என்பன நீண்ட வரலாற்றைக் கொண்ட ஒரு நகரம் யுத்தத்தால் எவ்வாறு அழிவடைந்துள்ளதென்பதை ஒவ்வொருவருக்கும் நினைவு படுத்துவதாக உள்ளது. படையினர் கண்ணிவெடி எதிர்ப்புச் சப்பாத்துகளை அணிந்துள்ளதுடன், ஒவ்வொரு அடியையும் மிகவும் ஜாக்கிரதையாக எடுத்து வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆட்லெறி ஷெல்களின் சத்தங்களும் ஹெலிகொப்டர்களிலிருந்து மேற்கொள்ளப்படும் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களும் கிழக்குப் பகுதியிலிருந்து எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இங்குள்ள இராணுவத்தினரைப் பார்க்கும் போது தற்போது அவர்கள் சற்று ஆறுதவடைந்திருப்பதைப் போல் தோன்றுகின்றது எனத் தெரிவித்துள்ளார

வன்னிக்கள முனையில் இடம்பெற்ற மோசமான சம்பவம் தொடர்பாக வெளியான வீடியோ- விசாரணை நடத்தப்படுமென அரசதரப்பில் தெரிவிப்பு

rambukwella.jpg
வன்னிக்கள முனையில் இடம்பெற்ற மிக மோசமான சம்பவமொன்று தொடர்பாக வெளியான வீடியோ குறித்து விசாரணை நடத்துவதாக அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுத்த முனையில் உயிரிழந்த விடுதலைப் புலிகளின் பெண்போராளி ஒருவரது உடலை முழுமையாக நிர்வாணப்படுத்திய சில படையினர் அந்த உடலை மிகவும் மோசமான செயல்களுக்குட்படுத்துவது கையடக்கத் தொலைபேசியிலுள்ள கமெரா மூலம் படம்பிடிக்கப்பட்டுள்ளது.

சக படை வீரரொருவரால் வீடியோ படமெடுக்கப்பட்ட இந்த மோசமான செயல் பின்னர் இணையத்தளங்களூடாக உலகம் முழுவதும் வெளியாகியிருந்தது.  எழுத்துக்களாலோ சொற்களாலோ வர்ணிக்கப்பட முடியாத மிகவும் கேவலமானதொரு செயலென இதனை வர்ணித்துள்ள ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு அந்தப் பெண்போராளியை சுற்றி நிற்பவர்கள் அணிந்திருக்கும் சீருடைகளும் அவர்கள் கத்திக்கூச்சலிடும் வார்த்தைகளும் அவர்கள் யாரென்பதை அடையாளங்காட்டுவதில் எதுவித சிரமத்தையும் ஏற்படுத்தவில்லையெனவும் தெரிவித்திருந்தது.

மனித நாகரிகத்திற்கு அப்பாற்பட்ட மிகக் கொடூரமானதும் குரூரமானதுமான செயலென வர்ணிக்கப்படும் இந்தச் சம்பவம் குறித்து அரசு விசாரணை நடத்துமென பாதுகாப்பு விவகாரப் பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்இதுபற்றி அவர் கூறுகையில்; இதுபோன்ற சில சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெறுகின்றன. எனினும் இவ்வாறான சம்பவங்களை விடுதலைப் புலிகள் தங்கள் பிரசாரங்களுக்கு பயன்படுத்தி வருவது வரலாறு. ஐந்து இலட்சம் படையினர் மத்தியில் இவ்வாறான சில சில சம்பவங்கள் இடம்பெறத்தான் செய்யும். அதேநேரம் இவ்வாறான சில சம்பவங்களை வீடியோ படங்கள் மூலம் புலிகள் பெரும் பிரசாரங்களுக்கு பயன்படுத்தி வருவதை நாம் அறிந்துள்ளோம். இதன் மூலம் தமிழ்நாட்டு மக்களின் ஆதரவைப் பெறவும் அவர்கள் முயல்வர். எனினும் இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்போமெனவும் தெரிவித்தார்.

பொலிஸார் பொதுமக்களிடையே நல்லுறவுகளை பலப்படுத்துவதன் மூலம் குற்றச்செயல்களை குறைக்க முடியும்’

blast.jpg பொலிஸாருக்கும் ,பொதுமக்களுக்குமுள்ள நல்லுறவுகள் பலப்படுத்தப்படும் போதே குற்றச் செயல்களை பெருமளவில் குறைக்க முடியும். ஆகையால் பொலிஸாருக்கு பொதுமக்கள் கூடிய ஒத்துழைப்புகளை வழங்க வேண்டியது அவசியமாகும் என்று பதுளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுனில் மத்துரட்ட தெரிவித்தார். பசறை மியன்கந்துர கிராமத்தின் சமூகதிட்ட மொன்றினை ஆரம்பித்து வைத்ததன் பின் அங்கு நடைபெற்ற நிகழ்வொன்றில் தலைமை வகித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந் நிகழ்வின் போது, மியன்கந்துர ஏத்பிட்டிய கிராமியப்பாதை சீரமைப்பு, வைத்திய சிகிச்சை மூலம் தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொடுக்கும் நடமாடும் சேவை போன்ற வேலைத்திட்டங்களை பதுளை பொலிஸ் அதிகாரி சுனில் மத்துரட்ட வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றிய போது கூறியதாவது;” தற்போதைய நிலையில் பொலிஸாரை பலவாறாக விமர்சிக்கும் வகையில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

பொலிஸார் மிகவும் மோசமானவர்களாக சித்திரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். பொலிஸார் தொடர்பாக எமக்கு கிடைக்கும் புகார்கள் தொடர்பாக உடனுக்குடன் கவனத்திற்கு எடுக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிடைக்கப்பெற்ற புகார்கள் ஊர்ஜிதப்படுத்தப்படும் போது சம்பந்தப்பட்ட பொலிஸாருக்கு எதிராக தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். இது போன்ற விடயங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு பொலிஸாருடனான நல்லுறவுகளைப் பலப்படுத்தும் வகையில் ஊடகங்கள் செயல்படவேண்டும் என்பதை நான் விரும்புகின்றேன். குளிரூட்டப்பட்ட அறைகளிலிருந்து விடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேலைத்திட்டங்களினால் எப்பயனும் கிடைத்துவிடப் போவதில்லை. மியன்கந்துர போன்ற பின்தள்ளப்பட்ட கிராமங்களுக்கு நேரடியாக சென்று அக்கிராம மக்களின் தேவைகளை அறிந்து அதற்கமைவான வேலைத்திட்டங்களையே முன்னெடுக்கவேண்டும்.

அதுவே மக்களுக்கு பயன்படக்கூடியதாக இருக்கும். மேலும் கிராமப்புறங்களில் சட்டவிரோத மதுபானம் உற்பத்தி மற்றும் ஏனைய சட்டவிரோத செயல்கள், சிறுவர் துஷ்பிரயோகம் போன்ற குற்றச் செயல்களைத் தடுப்பதற்கு பொதுமக்கள் பொலிஸாருக்கு பூரண ஒத்துழைப்புகளை வழங்கவேண்டும். பொலிஸாருக்கும், பொதுமக்களுக்குமான நல்லுறவுகள் பேணப்படவேண்டும்’ என்றார்