அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

பொலிஸார் பொதுமக்களிடையே நல்லுறவுகளை பலப்படுத்துவதன் மூலம் குற்றச்செயல்களை குறைக்க முடியும்’

blast.jpg பொலிஸாருக்கும் ,பொதுமக்களுக்குமுள்ள நல்லுறவுகள் பலப்படுத்தப்படும் போதே குற்றச் செயல்களை பெருமளவில் குறைக்க முடியும். ஆகையால் பொலிஸாருக்கு பொதுமக்கள் கூடிய ஒத்துழைப்புகளை வழங்க வேண்டியது அவசியமாகும் என்று பதுளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுனில் மத்துரட்ட தெரிவித்தார். பசறை மியன்கந்துர கிராமத்தின் சமூகதிட்ட மொன்றினை ஆரம்பித்து வைத்ததன் பின் அங்கு நடைபெற்ற நிகழ்வொன்றில் தலைமை வகித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந் நிகழ்வின் போது, மியன்கந்துர ஏத்பிட்டிய கிராமியப்பாதை சீரமைப்பு, வைத்திய சிகிச்சை மூலம் தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொடுக்கும் நடமாடும் சேவை போன்ற வேலைத்திட்டங்களை பதுளை பொலிஸ் அதிகாரி சுனில் மத்துரட்ட வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றிய போது கூறியதாவது;” தற்போதைய நிலையில் பொலிஸாரை பலவாறாக விமர்சிக்கும் வகையில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

பொலிஸார் மிகவும் மோசமானவர்களாக சித்திரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். பொலிஸார் தொடர்பாக எமக்கு கிடைக்கும் புகார்கள் தொடர்பாக உடனுக்குடன் கவனத்திற்கு எடுக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிடைக்கப்பெற்ற புகார்கள் ஊர்ஜிதப்படுத்தப்படும் போது சம்பந்தப்பட்ட பொலிஸாருக்கு எதிராக தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். இது போன்ற விடயங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு பொலிஸாருடனான நல்லுறவுகளைப் பலப்படுத்தும் வகையில் ஊடகங்கள் செயல்படவேண்டும் என்பதை நான் விரும்புகின்றேன். குளிரூட்டப்பட்ட அறைகளிலிருந்து விடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேலைத்திட்டங்களினால் எப்பயனும் கிடைத்துவிடப் போவதில்லை. மியன்கந்துர போன்ற பின்தள்ளப்பட்ட கிராமங்களுக்கு நேரடியாக சென்று அக்கிராம மக்களின் தேவைகளை அறிந்து அதற்கமைவான வேலைத்திட்டங்களையே முன்னெடுக்கவேண்டும்.

அதுவே மக்களுக்கு பயன்படக்கூடியதாக இருக்கும். மேலும் கிராமப்புறங்களில் சட்டவிரோத மதுபானம் உற்பத்தி மற்றும் ஏனைய சட்டவிரோத செயல்கள், சிறுவர் துஷ்பிரயோகம் போன்ற குற்றச் செயல்களைத் தடுப்பதற்கு பொதுமக்கள் பொலிஸாருக்கு பூரண ஒத்துழைப்புகளை வழங்கவேண்டும். பொலிஸாருக்கும், பொதுமக்களுக்குமான நல்லுறவுகள் பேணப்படவேண்டும்’ என்றார்

மூன்று முறைப்பாடுகள் – பவ்ரல் அறிவிப்பு

vote.jpg
தேர்தலை கண்காணிப்பதற்கான பவ்ரல் அமைப்பிற்கு இது வரை மூன்று முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தேர்தல் நடைபெறவுள்ள ஐந்து மாவட்டங்களிலும் நிலையங்களை அமைத்து வன்முறை தொடர்பில் அவதானித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அவ்வமைப்பின் தலைவர் கிங்ஸ்லி ரொட்ரிகோ தெரிவிக்கையில் கூறியதாவது;

வேட்புமனு திகதி அறிவிக்கப்பட்டது முதல் இன்று(03) வரை நாம் மூன்று தேர்தல் வன்முறைகளை பதிவு செய்துள்ளோம். நேற்று முன்தினம் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சாந்தினி ஹோங்ககே தனதுதேர்தல் அலுவலகத்தை அமைத்த போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தரப்பினரால் தாக்கப்பட்டுள்ளார். இதனால் இவரது சகோதரி காயமடைந்துள்ளார். இதற்கு அடுத்ததாக மிகப்பெரிய தேர்தல் வன்முறை தேர்தல் வேட்பு மனுத் தாக்கல் செய்ததினமான டிசம்பர் 31 ஆம் திகதி தலவாக்கலையில் இடம்பெற்றுள்ளது. மற்றைய மூன்றாவது சம்பவமும் நுவரெலியாவில் இடம்பெற்றுள்ளது.

தேர்தல் வன்முறை தொடர்பில் நாம் 5 மாவட்டங்களிலும் எமது நிலையங்களை அமைத்து அவதானித்து வருவதுடன் இதனை அவதானிப்பதற்கு இரு மாகாணங்களிலும் 3 ஆயிரம் பேரை நாம் பயிற்சியளித்து நியமித்துள்ளோம் . 2,400 பேர் நிலையாகவும் 600 பேர் நடமாடியும் இதனை அவதானிக்கவுள்ளனர்.தற்போது இரு மாகாணங்களிலும் 50 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் ஆள் அடையாள அட்டை இல்லாமையால் வாக்களிக்க முடியாது வாக்களிக்கும் உரிமையை இழக்கவுள்ளனர். இதனால் இவர்களுக்கு அடையாள அட்டையை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கையை எடுத்து வருகின்றோம் என்றார

நுவரெலியாவில் கடும் பனி; இயல்பு நிலை ஸ்தம்பிதம் -தோட்டத் தொழிலாளர்கள் மோசமாக பாதிப்பு

நுவரெலியா பிரதேசத்தில் பனிமழை பெய்யும் காலம் ஆரம்பிக்கப்பட்டு மூன்று நாட்களுக்குள் பெய்த பனி மழையினால் நுவரெலியா, கந்தப்பளை,ஹைபொரஸ்ட் , நானுஓயா, ரதல்ல போன்ற இடங்களிலுள்ள தோட்டங்களில் தேயிலை கொழுந்துகள் கருகிப் போயுள்ளது. தற்போது நுவரெலியாவில் இரவில் வழமை நாட்களை விட குளிர் அதிகமாகவும் பகலில் சூரிய வெப்பம் அதிகமாக காணப்படுகிறது. ஏற்கனவே இப்பிரதேசத்திலுள்ள தோட்டங்களில் வேலைநாட்கள் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுவந்தன.

தற்பொழுது பனியினால் தேயிலை கொழுந்து கருகியதால் மேலும் வேலைநாட்கள் குறைப்பதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மேலும் இப்பிரதேச தோட்ட தொழிலாளர்கள் வறுமை கோட்டின் கீழ் தள்ளப்படுகின்றார்கள். இதேவேளை, இப்பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு , பீட் , கரட், உட்பட மரக்கறி செடிகளும் புற்தரைகளும் கருகிப்போயுள்ளன. உருளைக் கிழங்கு , மரக்கறி உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் இரசாயன உரம் , மருந்து விதைகள் இறக்குமதி செய்யப்பட்ட விதை உருளைக்கிழங்கின் விலை அதிகரிப்பாலும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் இயற்கை பனியாலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

மேலும் இப்பகுதியிலுள்ள புற்தரைகளும் கருகியதால் இப்பிரதேசத்தில் கால்நடை வளர்ப்பவர்களும் கால்நடைகளுக்கு உணவு தேடுவதில் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. நுவரெலியாவில் பனி காலம் ஆரம்பித்ததையடுத்து இப்பகுதி மக்களின் இயல்பு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

போர்க்களம் தான் மாறியிருக்கிறது, போர் தொடரும் – தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள்

kili-01.jpgகிளி நொச்சி வீழ்ந்து விட்டதால் ஈழப் போர் முடிவடைந்து விடாது. விடுதலைப் புலிகள் தங்களது உத்திகளை மாற்றிக் கொண்டு போரைத் தொடருவார்கள். போர்க்களம் தான் மாறியிருக்கிறது, போர் தொடரும் என்று தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் தலைநகரமான கிளிநொச்சியை இலங்கை ராணுவம்  கைப்பற்றியது. இதுகுறித்து தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் தலைவர்கள், அமைப்புகளின் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அவர்களின் பொதுவான கருத்து, போர்க்களம் மாறி விட்டது. ஆனால் போர் தொடரும். விடுதலைப் புலிகள் தங்களது போர் உத்தியை மாற்றிக் கொண்டு போரைத் தொடருவார்கள் என தெரிவித்துள்ளனர்.

அரசகட்டுப்பாடற்ற பிரதேசம் நியமனம்பெற்ற பட்டதாரிகளுக்கு டக்ளஸ் தற்காலிக ஏற்பாடு

daglas.jpgஅரச கட்டுப்பாடற்ற பகுதிகளுக்கான ஆசிரியர் நியமனம் பெற்ற யாழ். குடாநாட்டு பட்டதாரிகள் நேற்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

அரச கட்டுப்பாடற்ற பகுதிகளில் தங்களால் பணி செய்வதற்குச் செல்ல இயலாதுள்ள நிலைமை மற்றும் ஏனைய இடையூறுகள் குறித்து இங்கு எடுத்துக் கூறப்பட்டது.
மேற்படி, ஆசிரியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மாகாண பிரதான செயலாளர் மற்றும் கல்விச் செயலாளர் ஆகியோருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கலந்துரையாடியதற்கு இணங்க இப்பட்டதாரி ஆசிரியர்களுக்கு யாழ். குடாநாட்டில் தற்காலிக ஆசிரிய நியமனங்களை வழங்குவதற்கும் இவர்களுக்கான ஊதியங்களை வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கொரியாவுக்கு இலங்கையர்களை அனுப்பும் நடவடிக்கை இடைநிறுத்தம்

korea_.gifகொரி யாவுக்குத் தொழில் வாய்ப்புக்காகப் புதிதாக இலங்கையர்களை அனுப்பும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளி நாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்தது. உலக பொருளாதார நெருக்கடி காரணமாக கொரியா மேற்கொண்டுள்ள தீர்மானத்துக்கமைய இலங்கை உட்பட 15 நாடுகள் கொரியாவுக்கு தொழிலாளர்களை அனுப்புவதை இடைநிறுத்தியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில், புதிதாக ஊழியர்களை அங்கு அனுப்புவதே இடைநிறுத்தப்பட்டுள்ளதெனவும் ஏற்கனவே இதற்கென பதிவு செய்யப்பட்டவர்களுக்கு இதன் மூலம் பாதிப்பில்லையெனவும் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், உலக பொருளாதார நெருக்கடியைக் கருத்திற் கொண்டு தென் கொரியா இத்தீர்மானத்தை எடுத்துள்ளதுடன் பெப்ரவரி மாதத்திற்குப் பின் இத்தற்காலிகத் தடை நீக்கப்பட்டு புதிய உடன்படிக்கையொன்று மேற்கொள்ளப்படுமெனவும் தெரிவித்தார்.

கொரியாவிலிருந்து வந்து இரண்டாவது தடவையாக மீண்டும் செல்பவர்களுக்கு இத்தடை எவ்விதத்திலும் பாதிப்பாக அமையாது எனவும் அவர் தெரிவித்தார். தென் கொரியா தமது நாட்டுக்குத் தொழிலுக்காக ஆட்களை இணைத்துக் கொள்ளும் 15 நாடுகளுக் கும் இத்தடை தொடர்பான அறிவித்தலை அனுப்பியுள்ளது. பெப்ரவரிக்குப் பின்னர் கடந்த வருடத்தை விட அதிகளவு இலங்கையரை அங்கு தொழிலுக்கு அனுப்பும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் அவர் தெரிவித்தார். உலக பொருளாதார நெருக்கடி காரணமாக தென் கொரியாவிலுள்ள பல தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பொதுமக்கள் மீதான விமானத் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் -யாழ். ஆயர் வேண்டுகோள்

jaffna_thomas.jpgபொது மக்கள் மீதான விமானத் தாக்குதல்களை உடனடியாக நிறுத்தும்படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு யாழ். ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் அவசர கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

“சென்ற மாதம் 31 ஆம் திகதியும் இம்மாதம் 1 ஆம் திகதியும் பரந்தனை அண்மித்த ஏ35 வீதியில் அமைந்துள்ள முரசுமோட்டையில் பொதுமக்கள் குடியிருப்பின்மீது விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. 31 ஆம் திகதி 4 பேர் ஸ்தலத்திலேயே இறந்தனர். மேலும், 18 பேர் படுகாயமுற்றனர். மீண்டும் 1 ஆம் திகதி 3 தடவைகள் காலையும் மாலையும் விமானத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், 1 பெண் உட்பட 5 பொதுமக்கள் பலியாகியுள்ளனர். 28 பேர் காயமுற்றுள்ளனர். இக்குண்டுகள் பிரதான வீதியிலும் வீழ்ந்து வெடித்துள்ளன.

இச்செய்திகளை ஊடகங்கள் வாயிலாகவும் மின்னஞ்சல் வழியாகவும் அனைவரும் அறியக்கூடியதாகவுள்ளது. எனவே, அப்பாவி மக்கள்மீது நடத்தப்படும் விமானக் குண்டுத் தாக்குதல்களை உடனடியாக நிறுத்தும்படி பணிவுடன் வேண்டுகின்றேன். முல்லைத்தீவு, கிளிநொச்சி பிரதேசங்களிலுள்ள 2 1/2 இலட்சம் மக்கள் வன்னிப் பிரதேசத்தின் சிறு பகுதிகளுக்குள்ளேயே இடம்பெயர்ந்துள்ளனர். இவ்வேளையில், இவர்கள் மீது விமானக் குண்டுத் தாக்குதல்களை நடத்துவது மிகவும் மோசமான செயற்பாடாகும். இனி மேலாவது பொதுமக்கள் குடியிருப்புகள் மீது விமானத் தாக்குதல்களை நடத்துவதை தவிர்த்துக்கொள்ள வேண்டுகிறோம். அமைதியை வருவிப்பதற்கான செயற்பாடுகளை, பேச்சுவார்த்தையை ஆரம்பித்து அமைதியை நிலைநாட்ட வேண்டுகின்றோம்’.

இலங்கையர் இருவருக்கு சவூதியில் மரணதண்டனை

saudi-0301.jpgஇலங் கையைச் சேர்ந்த இருவருக்கு சவூதி அரேபியாவில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ரியாத்திலுள்ள வங்கி ஒன்றிற்கு வெளியே சூடானியர் ஒருவரை கொலை செய்து அவரிடம் இருந்த பணத்தினை கொள்ளை அடித்த குற்றத்திற்காகவே இவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த வருடம் மட்டும் சவூதி அரேபியாவில் 92 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

வன்முறை அரசியல் கலாசாரத்தை மலையகத்திலிருந்து அகற்றுவோம் – மனோகணேசன் எம்.பி.

Estate Workersவேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் இறுதி நாளன்று மலையகத்தில் வன்முறை கலாசாரம் தலைவிரித்தாயிருக்கிறது. இரண்டு பெரும் மலையக அமைச்சர்களின் கட்சியினர் தலவாக்கலையில் மோதிக்கொண்டுள்ளார்கள். மக்கள் பிரதிநிதிகளே முன்னின்று வன்முறை நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கியுள்ளார்கள். மணித்தியாலக்கணக்கில் போக்குவரத்தை ஸ்தம்பிதம் அடையச்செய்து, கல்வீச்சுக்களை நடத்தி, வர்த்தக நிலையங்களை மூடச்செய்து வாக்களித்த நமது மக்களையே பீதிக்குள்ளாக்கிய தலைவர்களை பார்த்து முழு நாடுமே கைகொட்டி சிரிக்கின்றது. இத்தகைய அரசியல்வாதிகளுடனேயா நாமும் அரசியல் செய்கின்றோம் என நாங்களும் வெட்கித் தலைகுனிகின்றோம். பெப்ரவரி 14 ஆம் திகதி நடைபெறவிருக்கும் தேர்தலில் இந்த வன்முறை பாண்பாட்டாளர்களுக்கு மலையக மக்கள் தகுந்த பாடம் புகட்டவேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோகணேசன் எம்.பி. கோரியுள்ளார்.

தலவாக்கலை வன்முறை சம்பவங்கள் தொடர்பில் மனோ எம்.பி. விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இத்தகைய வன்முறை சம்பவங்களை எதிர்நோக்கிய படியால் தான் எமது கட்சியினருக்கு வாகன பேரணிகளையும் அரசியல் பிரசாரத்தையும் வேட்புமனு இறுதி தினத்தன்று நடத்தவேண்டாம் என நாங்கள் அறிவுறுத்தல் வழங்கியிருந்தோம். நாம் எதிர்பார்த்தபடியே சட்டவிரோத ஆயுதங்களும் மதுவும் துணைவர வன்முறை நாடகம் அரங்கேறி இருக்கின்றது. 150 ஆண்டுகளாக உழைத்து, உழைத்து உருக்குலைந்து போயிருக்கும் அப்பாவி மலையகத் தோட்டத்தொழிலாளர்களின் வாழ்க்கையை உயர்த்தி நிறுத்திட வக்கற்றவர்கள் வன்முறையை தூண்டுகின்றார்கள். வாக்களித்து உங்களை பதவிகளில் அமர்த்திய எங்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரவம் செய்யாமலாவது இருந்தால் போதும் என மலையக வாக்காளர்கள் கையெடுத்து கும்பிடும் நிலைமை உருவாகியுள்ளது.

மத்திய மாகாணசபை கலைக்கப்பட்ட மறுதினம் காலை முதல் நுவரெலியா மாவட்டம் முழுக்க எமது கட்சியினரின் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. எமது சுவரொட்டிகளை தேடித்தேடி அவற்றின் மீது தமது சுவரொட்டிகளை மலையக மக்கள் முன்னணியினர் ஒட்டினார்கள். அதேபோல், ஹட்டன் வெலியோய தோட்டத்தில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த எமது ஆதரவாளர்கள் மீது இ.தொ.கா.வைச்சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்த முயற்சி செய்தார்கள். எனது கவனத்திற்கு இச்சம்பவங்கள் கொண்டுவரப்பட்டன. மலையக மக்களின் நன்மை கருதி பொறுமையுடனும் ஜனநாயக உணர்வுடனும் நடந்துகொள்ளும்படி எனது கட்சியினருக்கும் வேட்பாளர்களுக்கும் நான் கூறியிருக்கின்றேன். இன்று ஒரே அரசாங்கத்தில் இருந்துகொண்டு ஒரே அரசாங்க கூட்டணியில் போட்டியிடுகின்றவர்கள் தங்களுக்குள்ளே மோதிக்கொள்கின்றார்கள். இது தொடர்பிலே அரசாங்க தலைமையிடம் முறையீடு செய்யப்போவதாக ஒரு தரப்பினர் கூறுகின்றார்கள். எங்கே முறையிட்டு என்ன பயன்?

மலையக கட்சிகள், வட,கிழக்கு தமிழ்க் கட்சிகள், முஸ்லிம் கட்சிகள் தங்களுக்குள்ளே முட்டிமோதி நாசமாக வேண்டும் என்பதுதானே அரசாங்கத்தின் திட்டம். மலையக மக்கள் அப்பாவிகள்தான் பொறுமைசாலிகள்தான், ஆனால் முட்டாள்கள் அல்ல என்பது தேர்தல் முடிவுகளின் மூலம் நிரூபணமாகும்.

இலங்கைத் தமிழர் படுகொலையை கண்டித்து சென்னை வரும் இந்திய பிரதமருக்கு கறுப்புக்கொடி

இலங்கையில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதை தடுக்க இந்திய மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமையை கண்டித்து எதிர்வரும் 7 ஆம் திகதி சென்னை வரும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கறுப்புக் கொடி காட்ட தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

“இலங்கையில் தொடர்ந்து தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் கட்சி வேறுபாடின்றி எழுப்பிய குரலுக்கு இந்திய அரசு செவிசாய்க்கவில்லை. இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்படவேண்டுமென்றும் இந்திய அரசு இலங்கை அரசுக்கு ஆயுத உதவி வழங்கக்கூடாது என்றும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பினரும் இணைந்து விடுத்த வேண்டுகோளையும் இந்திய அரசு பொருட்படுத்தவில்லை.

இந்த நிலைமையில் எதிர்வரும் 7 ஆம் திகதி சென்னைக்கு வர இருக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழர்களின் கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவதென தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்துள்ளது. தமிழர்களின் தன்மானம் காக்கும் இப்போராட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் தமிழ் அமைப்புகளும் தமிழ் உணர்வாளர்களும் திரளாகக் கலந்துகொள்ளும்படி வேண்டிக்கொள்கிறேன்’