அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

தகவல், ஊடக அமைச்சராக தொடர்ந்தும் அநுர யாப்பா

anura-priyatharsana.jpgமுதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா, ஊடகத்துறை அமைச்சராகவும் தொடர்ந்தும் கடமையாற்றுவார் என தகவல் திணைக்களம் தெரிவிக்கிறது. தகவல் திணைக்களத்தின் தலைவர் அனுஷ பெல்பிட்ட வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பொன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா, 5ஆம் திகதி திங்கட்கிழமை கொழும்பு கோட்டையில மைந்துள்ள உலக வர்த்தக நிலையத்தின் 25ஆவது மாடியிலமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் தனது கடமையை பொறுப்பேற்பார். இந்நிகழ்வுக்கு அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேம ஜயந்த, மைத்திரிபால சிறிசேன, ஜோன் செனவிரட்ன, டளஸ் அழகப்பெரும, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, கலாநிதி சரத் அமுனுகம, மனோ விஜேரட்ன உட்பட பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

முதலீடு ஊக்குவிப்பு அமைச்சராகவிருந்த கலாநிதி சரத் அமுனுகம பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிலி’ வீழலாம். ஆனால் புலி வீழ மாட்டார்கள் – கவிஞர் வைரமுத்து

vairamuthu.jpg
இன்றைக்கு கிளிநொச்சி வீழ்ந்துவிட்டது என்ற செய்தி வருகிறது. நெஞ்சில் இடி விழுகிறது. ஒரு தமிழன், தமிழ் சகோதரி அங்கு அடிபடுகிற போது, எனக்கு குளிப்பதற்கோ, உண்பதற்கோ, சிரிப்பதற்கோ தோன்றவில்லை.

கிளிநொச்சி வீழலாம். கிலி’ வீழலாம். ஆனால் புலி வீழ மாட்டார்கள். அவனும் சேர்த்து தான் தமிழர். அவன் நம் ரத்தத்தின் நீட்சி. அவனை இழப்பதற்கு நாம் தயாராக முடியாது. 

நாங்கள் போர் நிறுத்தம் வேண்டும் என்று கேட்கிறோம். பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். அங்கே போர்முனைக்கு செல்லுமாறு வேண்டிக்கொண்டோம். இன்னும் காலம் கடந்துவிடவில்லை.

இலங்கையில் போர்நிறுத்தத்தை எவ்வளவு வலியுறுத்துகிறோமோ அதைப் போல இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் போர் வந்துவிடக்கூடாது என்பதும் முக்கியம். பொருளாதார சீரழிவு வந்து கொண்டிருக்கும் நேரத்தில் இன்னொரு யுத்தத்தை உலகம் தாங்காது. பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்கள் ஒழிக்கப்படவேண்டும். போர் மூலம்தான் அது நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை என்றார்.

“மிட்டாய்’ காட்டி புத்தாண்டில் வாக்குக் கொள்ளைக்கு தயாராகிறது அரசு -ஐ.தே.க.

unp-logo1.jpg
உயர்நீதிமன்ற உத்தரவுக்கு அடிபணிய மறுக்கும் அரசாங்கம் 2009 ஆம் வருடத்திலும் நாட்டு மக்களை ஏமாற்றிவிட முயற்சிப்பதாகத் தெரிவித்திருக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி மிட்டாய்களை காட்டி பிறக்கும் புதிய வருடத்தில் வாக்குக் கொள்ளையொன்றுக்கு அரசு தயாராகி வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. எதிர்க்கட்சியின் பக்கம் மக்கள் அணிதிரள்வதைக் கண்டு அரசு அச்சம் கொண்ட நிலையிலேயே திடீரென மக்களை கனவுலகுக்கு அழைத்துச் செல்லும் நாடகத்தை அரங்கேற்றியிருப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டிருக்கின்றது. எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோக பூர்வ வாசஸ்தலமான கேம்ப்ரிட்ஜ் ரெரஸில் புதன்கிழமை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளரான காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க மேற்கண்ட தகவல்களை வெளியிட்டார்.

செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது; அரசாங்கம் திடுதிப்பென்று “மினி பட்ஜட்’ போன்ற ஒன்றை அறிவித்துள்ளது. இதன் மூலம் பெரும் நிவாரணப் பொதியை நாட்டு மக்களுக்குப் பெற்றுக் கொடுத்திருப்பதாக கூப்பாடு போடுகின்றது. நேற்று முன்தினமிரவு அரச ஊடகங்கள் “பிரேக்கிங் நியூஸ்’ அடிக்கடி வெளியிட்டன. அவசர அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டதும் அனைவரும் எதிர்பார்த்தது படையினர் கிளிநொச்சியை பிடித்துவிட்டதோ அல்லது பிரபாகரன் கைது செய்யப்பட்டுவிட்டாரோ என்பதைத்தான். அந்தளவுக்கு போர் முனையின் வேகம் இருப்பதாக அரசு தென்னிலங்கை மக்கள் மத்தியில் பிரசாரம் செய்து வருவதால்தான் மக்கள் இப்படியான செய்தியை எதிர்பார்த்தனர். ஆனால் நடந்திருப்பது சிறிய மிட்டாய் பொதியை காட்டி மக்களை மீண்டுமொரு தடவை ஏமாற்றியிருப்பதுதான்.

உலக சந்தையில் எரிபொருட்களின் விலைகள் நாளாந்தம் குறைந்து கொண்டிருக்கும் நிலையில் அரசாங்கம் அதனைக் கண்டு கொள்ளவே தவறியுள்ளது. அரசின் கண்களைத் திறக்கும் வகையில் உயர்நீதிமன்றம் அண்மையில் பெற்றோலின் விலையை நூறு ரூபாவாக குறைக்குமாறு உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அடிபணிய மறுத்துவரும் அரசாங்கம் மக்களை தவறான திசைக்கு திருப்பிவிடும் ஒரு முயற்சியில் இறங்கியுள்ளது. பிறக்கும் 2009 ஆம் ஆண்டு ஒரு தேர்தல் ஆண்டாக எதிர்பார்க்கப்படுவதால் மேலும் பல தேர்தல் வாக்குறுதிகளையும் சின்ன சலுகைகளையும் நிறையவே அளிக்கத் தயாராகி வருகின்றது.

உயர்நீதிமன்றத்துடன் மோத முடியாத நிலையில் அரசு ஐக்கிய தேசியக் கட்சி மீது சேறுபூசும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இன்று அரசு வழங்க முன்வந்திருப்பது வெறும் கண்துடைப்பு நிவாரணங்களையே ஆகும். பெற்றோலுக்கு இரண்டு ரூபாவும் டீசல், மண்ணெண்ணெய் ஆகியவற்றுக்கு 10 ரூபாவும் குறைப்பதாகக் கூறி அதனை பெரிய சாதனையாக்க முயற்சிக்கின்றது. உலக சந்தை விலைக்கேற்ப இன்று பெற்றோல் ஒரு லீற்றர் 55 ரூபாவுக்கும் டீசல் 32 ரூபாவுக்கும் மண்ணெண்ணெய் 26 ரூபாவுக்கும் வழக்க முடியும். அதனை அரசு ஒருபோதும் செய்யப்போவதில்லை. சமையல் எரிவாயுவைக் கூட ஒரு சிலிண்டரை 550 ரூபாவுக்கு வழங்க முடியும். இன்று மசகு எண்ணெயின் உலக சந்தை விலை 109 டொலருக்கும் குறைவாகவே காணப்படுகின்றது. இந்த நிலையிலும் சமையல் எரிவாயுவின் விலை இன்று இரண்டு மடங்குக்கும் கூடுதலாக உள்ளது. அரசாங்கம் அழுகின்ற பிள்ளைக்கு மீட்டாய் காட்டி ஏமாற்றப்பார்க்கின்றது.

அரசிடம் நாம் கேட்பது நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுங்கள் இல்லாவிட்டால் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லத் தயங்கமாட்டோம். மக்களின் அடிப்படை உரிமைகளை வென்று கொடுப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி உறுதியுடன் செயற்படும். எதிர்க்கட்சி பலமடைந்து மக்கள் சக்தியாக மாறி வருவதைக் கண்டு அச்சம் கொண்ட நிலையிலேயே அரசு அவசர அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி நாட்டு மக்களை ஏமாற்றும் நாடகத்தை மேடையேற்றியுள்ளது எனவும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

வரலாற்றில் முதற் தடவையாக பங்களாதேஷ் பாராளுமன்றத்திற்கு 64 பெண்கள் தெரிவு

world.gif
பங்களாதேஷ் வரலாற்றில் முதற் தடவையாக 64 பெண் உறுப்பினர்களைக் கொண்ட ஒன்பதாவது பாராளுமன்றம் அமையவுள்ளது. நடைபெற்று முடிந்த தேர்தலில் 23 தொகுதிகளில் போட்டியிட்ட 19 பெண்கள் தமது போட்டியாளர்களை பாரிய வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளனர்.

பங்களாதேஷ் அரசியல் ஏற்பாட்டின் பிரகாரம் 45 பெண்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படுவர். இந்நிலையில் ஏனைய 19 பேரும் ஆளுங்கட்சியுடனேயே இணைந்து கொள்வர். நடைபெற்று முடிந்த தேர்தலில் 65 தேர்தல் தொகுதிகளுக்காக 60 பெண்கள் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள 19 பேரும் ஷேக் ஹசீனா, காலிதா ஷியா மற்றும் முன்னாள் முதல் பெண்மணியான நௌசான் எர்சாத் ஆகியோரின் கட்சிகளிலிருந்து தெரிவாகினர்.

இம்மூவரும் தலா மூன்று ஆசனங்களுக்காக போட்டியிட்டிருந்த நிலையில், நௌசான் எர்சாத் இரு ஆசனங்களையும் ஏனைய இருவரும் தலா மூன்று ஆசனங்களையும் பெற்றுக் கொண்டனர். பங்களாதேஷின் மொத்த வாக்காளர் தொகையில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தகவல்களை தெரிவிக்க 114 பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு

phone.jpg
கொழும்பிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை 114 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு வழங்கலாமென பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில்,

கொழும்பு நகரிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் இடம்பெறும் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக பொதுமக்கள் இந்த அவசர தொலைபேசி இலக்கத்துடன் (114) தொடர்பு கொண்டு தகவல்களை வழங்க முடியும்.கொழும்பு நடவடிக்கை தலைமையகத்திற்கு இந்தத் தொலைபேசி இலக்கத்தின் ஊடாகத் தொடர்பு கொண்டு பயங்கரவாதிகள் தொடர்பான தகவல்களையும் தெரிவிக்க முடியுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

யுனெஸ்கோவின் நிரந்தர தூதராக லயனல் பெர்னாண்டோ

யுனெஸ் கோவின் இலங்கைக்கான நிரந்தர தூதுவராக லயனல் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். பாரிஸிலுள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் அமைப்பின் பணிப்பாளர் நாயகம் கொய்சுரோ மட்சூராவிடம் புதன்கிழமை நியமனக் கடிதத்தை லயனல் பெர்னாண்டோ சமர்ப்பித்தார்.

இதன்பின் யுனெஸ்கோ நடவடிக்கைகள் தொடர்பாக இருவரும் கலந்துரையாடினர். யுனெஸ்கோ நிறைவேற்றுக் குழுவில் இலங்கை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை – மட்டக்களப்பு புகையிரத சேவை விரைவில் ஆரம்பம்

train-121208.jpg
திருகோணமலை – மட்டக்களப்பு நகரங்களுக்கு இடையிலான புகையிரத சேவை விரைவில் சீரமைக்கப்படும். தினமும் மேலதிகமாக மூன்று சேவைகளை நடத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.  இந்தியாவில் இருந்து கிழக்கு மாகாண போக்குவரத்துக்காக வழங்கப்பட்ட ரயில் வண்டிகள் இதற்கு பயன்படுத்தப்பட உள்ளன.

திருகோணமலையில் இருந்து மட்டக்களப்பு செல்வோர் கல்ஓயா புகையிரத நிலையத்தில் நான்கு மணி நேரத்திற்கும் அதிகமாக காத்திருக்க வேண்டும். இதனால் பத்து மணி நேர பயணத்தை மேற்கொள்ள வேண்டியவர்களாகின்றனர். புதிய சேவை ஆரம்பிக்கப் பட்டால் நான்கு மணி நேரத்தில் எதிர்காலத்தில் பயணம் செய்யக் கூடியதாக இருக்கும். இச் சேவை அடுத்த வருடம் முதல் மாதத்தில் இருந்து மேற்கொள்ள தாங்கள் நடவடிக்கை எடுத்து இருப்பதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

மும்பைத் தாக்குதலைக் கண்டித்த ஒபாமா இஸ்ரேலைக் கண்டிக்கவில்லை -அரேபியர்கள் கவலை

israeli-aircraft.jpgமும்பைத் தாக்குதல் சம்பவத்துக்கு ஓபாமா கண்டனம் தெரிவித்தார். ஆனால் இஸ்ரேல் தாக்குதல் குறித்து மெளனம் காத்து வருகிறார். என்று அரபு நாட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து ஒபாமா தரப்பிடம் கேட்டபோது மும்பைத் தாக்குதல் சம்பவம் பயங்கரவாதம் தொடர்புடையது. இஸ்ரேல் தாக்குதல் நாடுகள் தொடர்புடையது என்று பதில் தெரிவித்ததாகக் கூறப்படு கிறது. இதனிடையே இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்தும் காசா பகுதியில் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதுவரை 370க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்ப தாகவும், 1,720 பேர் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அம்பாறை மாவட்டத்தில் கடந்த வருடம் 191 படையினர் பலி, 247 பேர் காயம் – விடுதலைப்புலிகள் தெரிவிப்பு

கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் கடந்த வருடம் தாங்கள் நடத்திய தாக்குதல்களில் 191 படையினர் கொல்லப்பட்டும் 247 படையினர் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.  இது தொடர்பாக இணையத்தளத்தில் புலிகள் தெரிவித்திருப்பதாவது; தமிழரின் தாயக பூமியை இன்று ஆக்கிரமித்து நிற்கும் இலங்கைப் படைகள் தமிழரிடமிருந்து புலிகளை பிரித்துவிட்டதாகவும், கிழக்கிலிருந்து புலிகளை விரட்டியடித்து விட்டதாகவும் நாள்தோறும் கூறி வருகின்றது. உண்மை என்னவென்பது எம்மக்களுக்கு தெரியும்.

தந்திரோபாய ரீதியிலான சில பின்நகர்வுகளை கிழக்கில் நாம் மேற்கொண்டாலும் படையினருக்கு எதிராகவும் இனத்துரோகிகளுக்கு எதிராகவும் நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டில் படையினருக்கு எதிராக பல தாக்குதல் நடவடிக்கைகள் இடம்பெற்றன. கடந்த 01.01.2008 தொடக்கம் 31.12.2008 வரையிலான ஒரு வருட காலப்பகுதியில் அம்பாறை மாவட்டத்திலும் அதனை சூழவுள்ள வனப்பகுதி உள்ளிட்ட சில பகுதிகளிலும் விடுதலைப்புலிகள் நடாத்திய தாக்குதலில் உயிரிழந்த படையினரது மொத்த எண்ணிக்கையை இந்த வேளையில் நாம் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.

பல்வேறு சம்பவங்களில் கொல்லப்பட்ட படையினரது எண்ணிக்கையை பார்ப்போம். கொல்லப்பட்ட விஷேட அதிரடிப்படையினரது எண்ணிக்கை 123, இராணுவத்தினரது எண்ணிக்கை 35, ஊர்காவல் படையினரது எண்ணிக்கை 15, பொலிஸாரின் எண்ணிக்கை 18, கொல்லப்பட்ட ஆயுதக்குழுக்களின் எண்ணிக்கை 07 ஆகும். இவ்வாறு உயிரிழந்த ஆயுதக்குழு தவிர்ந்த 191 படையினரில் 13 படையினர் புலிகளின் தந்திரோபாய தாக்குதல் வியூகங்களினால் தமக்கிடையிலான தவறுதலான துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளையில், காயமடைந்த படைத்தரப்பின் எண்ணிக்கையை பார்த்தால், காயமடைந்த விஷேட அதிரடிப்படையினரது எண்ணிக்கை 192, இராணுவத்தினரது எண்ணிக்கை 44, ஊர்காவல் படையினரது எண்ணிக்கை05, பொலிஸாரின் எண்ணிக்கை 06, காயமடைந்த ஆயுக் குழுவினரது எண்ணிக்கை 05 ஆகும். புலிகளின் தந்திரோபாய தாக்குதல் வியூகங்களினால் தமக்கிடையிலான தவறுதலான துப்பாக்கிச்சூட்டில் 09 படையினர் படுகாயமடைந்துள்ளதோடு, காயமடைந்த 247 படையினரில் 72 பேர் போர்முனைக்கு மீண்டும் செல்ல முடியாதவாறு தமது உடல் அவயங்களை இழந்துள்ளனர். இக்காலப்பகுதியில் படையினருடனான மோதல்களின் போது 23 போராளிகள் தமது இன்னுயிர்களை இம்மண்ணின் விடுதலைக்காக அர்ப்பணித்துள்ளனர். 13 போராளிகள் விழுப்புண் அடைந்துமுள்ளனர்மேலும், 2008 ஆம் ஆண்டில் எமது மக்கள் பல இன்னல்களையும் வேதனைகளையும் சந்தித்த ஆண்டாகவே இந்த ஆண்டு இருந்தது. படையினரின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் காரணமாக தமது சொந்த மண்ணிலேயே எமது மக்கள் அகதி வாழ்வு வாழ வேண்டிய நிர்க்கதிக்கு இன்று தள்ளப்பட்டுள்ளார்கள்.

2008 ஆம் ஆண்டுக்கு விடை கொடுக்கும் இந்த வேளையிலே 2009 எனும் புதிய ஆண்டு எம் மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் ஆண்டாகவும், நிம்மதியான வாழ்வை கொடுக்கும் ஆண்டாகவும் அமைய வேண்டும். தமிழீழ தேசத்தின் விடிவுக்காக களமாடி தம் இன்னுயிர்களை இம் மண்ணுக்காக தந்த மாவீரர்களின் கனவு நனவாகும் ஆண்டாகவும் 2009 ஆம் ஆண்டு அமைய வேண்டும்என்ற எதிர்பார்ப்பு எம்மக்கள் மத்தியில் இருக்கிறது. இந்த வேளையில், உலகத் தமிழ் உறவுகள் அனைவருக்கும் எமது இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு, கடந்த ஆண்டுகளைப் போல் இப்புதிய ஆண்டிலும் தமிழீழ தேசத்தின் விடியலுக்காக எல்லா வகையிலுமான உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் நீங்கள் தொடர்ந்து வழங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம். தமிழர் சேனையின் கரங்களை பலப்படுத்தும் உங்களது செயற்பாடுகள் தான் எமது மண்ணின் விடுதலையை விரைவுபடுத்தும் என்பதனை என்றும் நினைவில் வைத்துக்கொள்ளுமாறும் வேண்டிக்கொள்கின்றோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கில் பாடசாலை மாணவர்களுக்கு முதலுதவிப் பயிற்சிகள் வழங்கத் திட்டம்

school-2.jpgகிழக்கு மாகாண பாடசாலைகளில் சென்.ஜோன் அம்புலன்ஸ் அமைப்பின் உதவியுடன் பாடசாலை மாணவர்கள் மத்தியில் முதலுதவிப் பயிற்சித் திட்டத்தினை முன்னெடுத்துச் செல்ல கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. தமது பிரதேசத்திலும் பாடசாலை சூழலிலும் திடீர் அனர்த்தம் மற்றும் விபத்துகள் ஏற்படும் வேளையில் முதலுதவி நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பாக மாணவர்களுக்கு அறிவூட்டுதல் தொடர்பாகவும் செய்முறை பயிற்சிகள் வழங்குவது தொடர்பாகவும் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

கடந்த கால யுத்த மற்றும் இயற்கை அனர்த்தங்களின் போது மாணவர்கள் மத்தியில் முதலுதவி சம்பந்தமான போதிய அறிவு இல்லாததினால் விலை மதிப்புள்ள பெறுமதி வாய்ந்த மக்களின் உயிர்கள் பறிபோயின. சரியான தருணத்தில் முதலுதவிகள் வழங்கப்பட்டிருந்தால் அதிகமான மக்களை உயிர் இழப்புகளிலிருந்து பாதுகாத்திருக்க முடியும். கிழக்கு மாகாணத்திலுள்ள 13 கல்வி வலயங்களிலும் வலய மட்டத்தில் முதலுதவி பயிற்சி முகாம்களை ஒழுங்கு செய்து பாடசாலை மாணவர்களுக்கான பயிற்சிகளை வழங்க வலயக் கல்வி பணிப்பாளர்கள் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.