அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

வன்னியில் அத். உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு கிடையாது: ஐ. நா. சபைக்கு உண்மை நிலையை தெளிவுபடுத்த இலங்கை அரசு முடிவு

mahinda-samarasinga.jpgவன்னியில் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு எந்தவிதமான தட்டுப்பாடும் கிடையாதென்று மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் நிலைமையை விளக்கி ஐக்கிய நாடுகள் சபைக்கு உத்தியோகபூர்வ பதில் கடிதமொன்றை இன்னும் ஓரிரு நாளில் அரசாங்கம் அனுப்பவுள்ளதாகவும் அமைச்சர் சமரசிங்க, இடர் முகாமைத்துவ, மனித உரிமைகள் அமைச்சில் நேற்றுக் காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

அரசாங்கம் மேற்கொள்ளும் எந்தவிதமான நடவடிக்கையும் புலிகளைப் பலப்படுத்துவதற்கோ, படையினரை பலவீனப்படுத்துவதற்கோ இடமளிக்கப்படமாட்டாது என்றும் அமைச்சர் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பான்கி மூனின், ஐ. நா. அகதிகள் விவகாரங்களுக்கான பிரதிநிதி வோல்ரர் கெலின் தெரிவித்துள்ளதைப் போன்று வன்னியில் எந்தவிதமான தட்டுப்பாடும் இல்லை. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்குத் தொடர்ச்சியாக உணவுப் பொருள்களை அனுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. என்று தெரிவித்த அமைச்சர் சமரசிங்க, கடந்த ஜனவரி மாதத்திலிருந்து டிசம்பர் இறுதிவரை வன்னிக்கு அனுப்பப்பட்ட உணவுப் பொருள்களின் விபரங்களையும் வெளியிட்டார். ‘வன்னியில் உணவு, மருந்து உள்ளிட்ட பொருள்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகவும், சர்வதேச பிரதிநிதிகள் வன்னிக்குச் சென்று நிலைமைகளை அவதானிப்பதற்கு இடமளிக்கப்படுவதில்லை என்று வோல்ரர் கெலின் கூறியிருக்கின்ற தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதாகும்.

கடந்த 29ம் திகதி வன்னிக்குச் சென்ற உணவு லொறித் தொடரணியுடன் 10 சர்வதேச பிரதிநிதிகள் சென்றுவந்தனர். அங்கு மக்களை நேரில் சந்தித்தபோது, எந்தவிதமான தட்டுப்பாடும் இல்லையெனத் தெரிவித்துள்ளனர். உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பணிப்பாளரும் இதனை உறுதிப்படுத்தியிருக்கின்றார்.  என்று தெரிவித்த அமைச்சர் வோல்ரர் கெலின் வழமையை மீறி செயற்பட்டுள்ளாரென்றும், எவ்வாறெனினும் அவர் இரு வாரங்களுக்கு முன்பு பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எழுதிய கடிதத்திற்கு அரசாங்கத்தின் சார்பில் உத்தியோகபூர்வமாக பதில் அளிக்கப்படுமென்றும் தெரிவித்தார்.

‘ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசுடன் தொடர்புகொள்ள வேண்டுமானால், அங்குள்ள எமது தூதரகத்தின் வாயிலாகவே விடயங்கள் கையாளப்பட வேண்டும். என்றாலும், அகதிகளுக்கான பிரதிநிதி வோல்ரர் கெலின் நேரடியாக பாதுகாப்புச் செயலாளருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். இது பிழையான அணுகுமுறையாகும். இதுகுறித்து நாம் கலந்துரையாடியிருக்கின்றோம். ஆயினும், அவரது கடிதத்திற்கு உரிய பதில் அனுப்பப்படும். இதற்கு பாதுகாப்புச் செயலாளர் பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லையெத் தீர்மானிக்கப்பட்டுள்ளது’ என்ற அமைச்சர்,

‘கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் இடம்பெயர்ந்தோர் தொடர்பாக அரசாங்க அதிபர்கள் சமர்ப்பிக்கும் விபரங்கள் பிழையானவையாக இருக்கின்றன. ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் வெவ்வேறு இடங்களிலும் பதிவாகியுள்ளன. எனவே, சரியான தகவல்களைத் திரட்டவுள்ளோம். தற்போதைக்கு கிளிநொச்சியில் 29,197 குடும்பங்களைச் சேர்ந்த 1,12,254 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 26,670 குடும்பங்களைச் சேர்ந்த 98,707 பேரும் மொத்தம் 2,10,000 பேருக்கு ஜனவரியிலிருந்து 9 வாகனத் தொடரணிகளில் உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

உலக உணவுத் திட்டத்திற்கு மேலதிகமாக முல்லைத்தீவுக்கு 24,769 மெட். தொன் உணவுப் பொருள்களும், கிளிநொச்சிக்கு 21,850 மெட். தொன் உணவுப் பொருள்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தகரம் மற்றும் பிளாஸ்ரிக் பொருள்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. எந்த நடவடிக்கையையும் புலிகளைப் பலப்படுத்தும்படி மேற்கொள்ளப்பட மாட்டாது. டிசம்பரில் மாத்திரம் ஒரு இலட்சம் கிடுகுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் தெரிவித்தார். இதேநேரம் இந்தியாவிலிருந்து கிடைத்த உதவிப் பொருட்களும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார்.

யுத்த முனைகளில் 3 ஆயிரம் படையினர் பலி 11,500 க்கும் மேற்பட்டவர்கள் காயம் – மங்கள சமரவீர எம்.பி.

mangala_saramaweera.jpgஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் யுத்த முனைகளில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டும் 11,500க்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்துமுள்ளதாக பாதுகாப்பு கண்காணிப்பகத்தின் பேச்சாளரும் எம்.பி.யுமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தல் பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அந்தத் திகதிக்குள் விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை கைதுசெய்வோமென அமைச்சர் ஹெலிய ரம்புக்வெல கூறியதன் மூலம் இந்த யுத்தத்துடன் அவர் அரசியல் விளையாடுவதாகவும் மங்கள சமரவீர சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்; இந்த அரசாங்கம் முறையான விதத்தில் போர் செய்யாததால் மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் 3000 க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டும் 11,500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புலிகள் தலைவர் பிரபாரகனை பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதிக்குள் கைது செய்யப்படுவாரென அமைச்சர் ரம்புக்வெல திங்கட்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் கூறியுள்ளார். அன்றைய தினமே மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளது.

வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டு முடிந்ததும் தேர்தல்கள் ஆணையாளரே தேர்தலுக்கான திகதியை தீர்மானிப்பார். அப்படியிருக்கையில் தேர்தல் 7 ஆம் திகதி நடைபெறுமென இவரால் எப்படிக்கூற முடியும்? கிளிநொச்சியை கைப்பற்றுவதுடன் புலிகளின் தலைவரையும் கைது செய்வோமென இந்த அரசாங்கம் கூறிவந்த போதும் இது வரை அவர்களால் எதுவுமே செய்ய முடியவில்லை. தேர்தலில் வெற்றிபெறுவதற்கான அரசின் ஒரே கோஷம் யுத்தம்தான் எனினும் நாட்டு மக்கள் தற்போதைய யுத்தம் குறித்து நன்கு அறிந்துள்ளனர். யுத்தத்தில் ஏற்படும் இழப்புகள் குறித்த விபரங்களை வேறு எவரையும் விட அப்பாவிக் கிராம மக்கள் நன்கு அறிந்துள்ளதுடன் அவர்கள் தான் பெருமளவு சடலங்களையும் பெற்றுவருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய யூனியன் கூட்டத்தில் காஸாவின் எல்லைகளைத் திறந்து பொருட்களைக் கொண்டு செல்ல முடிவு

gaasha-con.jpg
காஸாவில் காயமடைந்தோருக்கு சிகிச்சையளித்தல் மற்றும் உணவு, உடை, இருப்பிடங்கள் போன்ற முக்கிய தேவைகளை அவசரமாக அனுப்பி வைப்பதென ஐரோப்பிய யூனியன் வெளிநாட்டமைச்சர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் இந்தக் கூட்டம் நடந்தது. காஸா, இஸ்ரேல் பிரச்சினைகளுக்கு இராணுவ ரீதியிலன்றி பேச்சுவார்த்தைகளூடாக முடிவு காணப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ள ஐரோப்பிய யூனியன் இரு தரப்பையும் நிரந்தர யுத்த நிறுத்தத்துக்கு இணங்குமாறு கோரியுள்ள இஸ்ரேலின் தாக்குதலையோ ஹமாஸ் நடத்திய ரொக்கட் தாக்குதலையோ இம்மாநாடு கண்டிக்கவில்லை யென்பதும் குறிப்பிடத்தக்கது.

காஸாவின் சகல எல்லைகளையும் திறந்து காயமடைந்தோர் வெளியேற இஸ்ரேல் அனுமதிக்க வேண்டுமெனவும் ஐரோப்பிய மாநாடு இஸ்ரேலைக் கேட்டுள்ளது. பிரான்ஸ் வெளிநாட்டமைச்சர் இஸ்ரேல் வெளிநாட்டமைச்சர் சிபிலிவினியுடன் தொலைபேசியில் இது குறித்து உரையாடியுள்ளார்.  இன்று சிபிலிவின் பிரான்ஸ் புறப்பட ஏற்பாடாகியுள்ளது. ஜெரூஸலத்துக்கு பிரான்ஸ் ஜனாதிபதி சர் கோஷி விஜயம் செய்து இஸ்ரேல் பிரதமர், பலஸ்தீன ஜனாதிபதி ஆகியோரைச் சந்திக்கவுள்ளதாக வெளியான செய்தியை இஸ்ரேல் மறுத்துள்ளது.

இது இவ்வாறுள்ள நிலையில் ஜேர்மன் வெளிநாட்டமைச்சர் சிரியா, எகிப்து, இஸ்ரேல் அதிகாரிகளுடன் காஸா நிலைவரம் பற்றிப் பேசினார்.  ஐரோப்பிய வெளிநாட்டமைச்சர்கள் மாநாட்டின் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடந்தபோது காஸா மீது தாக்குதல் தொடுத்த இடங்களையும், இலக்குகளையும் இஸ்ரேல் வீடியோவில் காட்டியது.  சில இடங்களை இஸ்ரேல் தாக்கியதாக அறிவிக்க ப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்ட ஹமாஸின் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறும் இஸ்ரேல் பொதுமக்களின் இழப்பை இயன்றவரை தவிர்த்த போதும் துரதிர்ஷ்டவசமாக சிலர் உயிரிழப்பதாகவும் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் சமாதான வழியில் செல்லவுள்ளபோதும் இஸ்ரேலின் மனிதாபிமான மற்ற செயல் குறுக்கேயுள்ளதாக ஹமாஸின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஹமாஸின் ரொக்கட் தாக்குதல் தொடர்ந்தால் தரை மார்க்கமான இராணுவ முற்றுகையை ஆரம்பிக்க இஸ்ரேல் தயாரென வெளிநாட்டமைச்சர் தெரிவித்துள்ளார். லெபனானிலிருந்து மருந்து வகைகள், ஆடைகள், உணவுப் பொருட்களை ஏற்றிக் கொண்டு காஸா சென்ற கப்பலை இஸ்ரேல் வழிமறித்து திருப்பி அனுப்பியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பொலிஸ் இராச்சியம் உருவாகி வருவதாக கடுமையாக சாடுகிறது ஐ.தே.க.

check1.jpgபொலிஸ் திணைக்களத்தைச் சேர்ந்த சில உயர்மட்டங்கள் அரசாங்கத்தின் கையாட்களாகச் செயற்பட்டு வருவதாகவும், நடப்பவற்றைப்பார்க்கும்போது நாட்டில் பொலிஸ் இராச்சியமொன்று உருவாகி வருவதைக் காணக்கூடியதாக இருப்பதாகவும் கடுமையாக சாடியிருக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி, சில பொலிஸ் அதிகாரிகளின் நடவடிக்கைகளைப் பார்க்கும் போது சர்வாதிகார ஆட்சியொன்று நடப்பதாகவே எண்ண வேண்டியிருப்பதாகவும் விசனம் தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் மொரட்டுவ தேர்தல் தொகுதியில் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தனக்கு கீழிருக்கும் பொலிஸாரை பயன்படுத்தி எதிர்க்கட்சித்தரப்பினர் மீது பழிவாங்கும் முயற்சியிலீடுபட்டுவருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கட்சியின் மொரட்டுவ பிரதான அமைப்பாளர் ஜனாதிபதி சட்டத்தரணி சிறிநாத் பெரேரா மேற்கண்ட தகவல்களை வெளியிட்டார்.

அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது; மொரட்டுவ தொகுதியில் அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகளும், கட்அவுட்களும் நகரம் பூராவும் காணப்படுகின்றன. ஆளும்தரப்பினரின் கட்அவுட்கள் வீதியின் இரு மருங்குகளிலும் அணிஅணியாக போடப்பட்டுள்ளன. அவை குறித்து பொலிஸார் கண்டு கொள்ளவில்லை. இத்தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சி பிரதான அமைப்பாளரான எனது கட்அவுட்கள் சில கரையோரமாக உள்ள வீதியிலேயே போடப்பட்டுள்ளன. கடந்த 28 ஆம் திகதி மொரட்டுவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சில பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் வந்து எனது கட்அவுட்களை உடைத்தெறிந்து விட்டுச் சென்றார். 119 பொலிஸ் வாகனத்திலேயே இவர்கள் வந்து இக்காரியத்தைச் செய்தனர். ஏனைய கட்அவுட்களும் அப்புறப்படுத்தப்பட்டிருந்தால் அதனை நியாயமானதாகக் கருதமுடியும். அரச தரப்பு பெரும்புள்ளிகளின் சுவரொட்டிகளையும், கட்அவுட்களையும் பாதுகாத்துக் கொண்டு எதிரணியினர் மீது பொலிஸ் அதிகாரிகள் இவ்வாறு நடப்பது பக்கச்சார்பானதாகவே நாம் கருத வேண்டியுள்ளது.

இந்தப் பொலிஸ் அதிகாரி சம்பவம் நடந்த நாளன்று விடுமுறையில் இருந்தவராவார். லீவிலிருந்த அவர் பொலிஸ் சீருடையுடன் வந்து இக்காரியத்தை செய்ததன் மூலம் அரச தரப்பு பெரும் புள்ளிகளின் ஆதரவோடுதான் செய்திருக்கின்றார் என்பது புலனாகிறது. பொலிஸ் அதிகாரிகள் சகலருக்கும் ஒரேவிதமாக நடக்க வேண்டியவர்கள். அவர்கள் பாரபட்சமாக நடக்க முற்படக்கூடாது. அண்மைக்காலமாக பொலிஸ் திணைக்களம் தவறான வழியில் நடக்க முற்படுவதைக்காணக்கூடியதாக உள்ளது. அரசுக்கு சார்பாக நடப்பது மட்டுமன்றி எதிரணியினர் மீது கடும் போக்கை கடைப்பிடித்து வருகின்றனர். பொலிஸ் மா அதிபர் உட்பட பொலிஸ் உயர்மட்டத்தினர் பலரும் அரசின் அடிவருடிகளாகச் செயற்பட்டுவருகின்றனர். நாட்டில் இன்று பொலிஸ் இராச்சியமொன்று நடப்பதாக காண முடிகிறது. இதற்கு ஜனநாயக நாட்டில் இடமளிக்க முடியாது. மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க ஐக்கிய தேசியக் கட்சி தயங்கிப் போவதில்லை. சர்வாதிகாரத்தின் பக்கம் நாட்டை இட்டுச் செல்வதற்கு பொலிஸாரும் துணை போவதை எந்தவிதத்திலும் அனுமதிக்க முடியாது.