இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் விவகாரத்தில் சிறுபான்மையினக் கட்சிகளின் யோசனைகளை அறிந்து கொள்வதற்காக தமிழ், முஸ்லிம் கட்சிகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்க இந்தியா திட்டமிட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தியைத் தொடர்ந்து அது தொடர்பாக அரசாங்கத்திடம் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி நேற்று வெள்ளிக்கிழமை விளக்கம் கேட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட சிறுபான்மையினக் கட்சிகளை தனித்தனியே புதுடில்லிக்கு அழைத்து இந்தியா பேசவுள்ளதாக ஏசியன் ரிபியூன் இணையத்தளத்தில் செய்தி வெளியாகியிருந்த நிலையில் இது தொடர்பாக நேற்று பாராளுமன்றத்தில் கொழும்பு மாவட்ட ஐ.தே.க. எம்.பி. ரவி கருணாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த காலங்களில் இலங்கையில் அமைதி நிலவிய வேளையில் அண்டை நாடான இந்தியா குறிப்பிட்ட சில சக்திகளுக்கு ஆயுதங்களை வழங்கி குழப்பியதாகவும் பிரச்சினைகளை உருவாக்கியதாகவும் இந்த விடயம் அறியப்பட்டதொன்று என்றும் சாடிய ரவி கருணாநாயக்க சிறுபான்மைக் கட்சிகளுடன் இந்தியா ஏன் பேச்சு நடத்த வேண்டும்? என்று கேள்வி எழுப்பினார்.
சிறுபான்மையினரை ஐ.தே.க.வும் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிய அவர், தமிழரும் முஸ்லிம்களும் தனக்கு வாக்களித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். ஆயுதங்களைப் பதிவு செய்தல், சட்ட விரோத ஆயுதங்களை வைத்திருப்போருக்கு எதிராகத் தண்டனை விதித்தல் தொடர்பான தனிநபர் பிரேரணையைச் சபையில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே ரவி கருணாநாயக்க இந்தப் பிரச்சினை பற்றி சபையின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளார்.
சிறுபான்மையினக் கட்சிகளைச் சந்தித்துப் பேச இந்தியா ஏன் முயற்சிக்க வேண்டும் என்பதே எமது கேள்வியாகும்.ஐ.தே.க.வுடன் பேசலாம். எனக்கும் ரணில் விக்கிரம சிங்கவுக்கும் தமிழ், முஸ்லிம் மக்கள் வாக்களித்துள்ளனர். முஸ்லிம் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பது முஸ்லிம் கட்சியாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. இத்தகைய நடவடிக்கைகளால் பிரச்சினைகளே அதிகரிக்கும்.
கடந்த காலத்தில் நாடு அபிவிருத்தியடைந்து வந்த போது இந்திய ஆயுதங்களை வழங்கி குழப்பியது. எனவே மீண்டும் பயங்கரவாதம் ஏற்படாத வகையில் பிரச்சினையைத் தீர்க்கவேண்டும் என்று ரவி கருணாநாயக்க கூறியுள்ளார்.இது இவ்வாறிருக்க “தமிழர் பிரச்சினை தொடர்பாக இந்தியா சிறுபான்மையினக் கட்சிகளை பேச்சுக்கு அழைக்கவுள்ளதாக பேசப்படுகிறது. ஆனால், இது தொடர்பாக எந்தக் கட்சிகளுக்கும் இதுவரை அழைப்புகள் கிடைக்கவில்லை. ஆனால், அந்த மாதிரியான சந்திப்புகளை நாம் எதிர்பார்த்துள்ளோம் என்று முஸ்லிம் கட்சியொன்றின் தலைவர் ஒருவர் பி.ரி.ஐ.க்கு நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்திருக்கிறார். தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள அவர் விரும்பவில்லை. அதேசமயம் “புதுடில்லியிலுள்ள உயர்மட்ட அதிகாரிகள் இந்த உத்தேச பேச்சுவார்த்தை அடிப்படையில் நகல் வரைபுகளைத் தயாரிக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றனர்” என்று இணையத்தளச் செய்திகள் தெரிவித்துள்ளன.
இந்திய அரசு இலங்கையில் உள்ள சிறுபான்மை கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை ஐக்கிய தேசிய கட்சியின் நாடளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எதிர்ப்பது ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கையா என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இவ்வாறு ரவி கருணாநாயக்க கூறுவது முட்டாள்தனம் என நான் நினைக்கின்றேன். இவருடைய கருத்து ஐக்கிய தேசிய கட்சியின் கருத்தா என விரைவில் அதன் தலைமைத்துவம் சிறுபான்மையினத்தவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் வேண்டியுள்ளார்.
இந்திய அரசு இலங்கையில் உள்ள சிறுபான்மை கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை தடுக்க நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க முயற்சிக்கின்றார் என மனோ கணேசன் தெரிவித்தார்.