…எழுத்தாளனுடைய வாழ்க்கை என்பது அதி பலவீனமானது. அநேகமாக அம்மணமான நடவடிக்கை. அதற்காக நாம் அழுது கொண்டிருக்கத் தேவையில்லை. எழுத்தாளன் தனது தேர்வை மேற்கொள்கிறான். அதில் அவன் உறுதியாக நிற்கிறான். நீங்கள் எல்லாத் திசைகளிலிருந்தும் வீசம் காற்றுக்கும் திறந்த நிலையில்தான் இருக்கிறீர்கள். சில திசைக் காற்று கடுங்குளிராகத்தான் இருக்கும். உங்கள் விருப்பப்படிதான் நீங்கள் வெளியே வந்திருக்கிறீர்கள். நீங்கள் இடர்களை எதிர்கொள்ளத்தான் வேண்டும். உங்களுக்குத் தங்குமிடமில்லை. பாதுகாப்பில்லை – நீங்கள் பொய் சொன்னால் ஒழிய – நிஜத்தில் நீங்கள்தான் உமது சொந்தப் பாதுகாப்பைக் கட்டமைத்துக் கொள்கிறீர்கள், இப்படியும் இதனைச் சொல்லலாம், நீங்கள் அரசியல்வாதியாக ஆகிறீர்கள்…
நாடகாசிரியர் ஹெரால்ட் பின்ட்டர்
நோபல் பரிசு உரை
…பாசிச இலங்கை அரசை ஒரு அப்பாவி மூன்றாம் உலக அரசாக சர்வதேச சமூகம் பார்க்கிற பார்வையில் மாற்றம் வந்தால் மட்டுமே இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் பேசப்படும்….புலிகளே அழிக்கப்பட்ட பிறகு இனி என்ன பேசி என்ன செய்ய என்கிற மனநிலைக்குச் சென்றுவிடாமல் தமிழகத்தில் உள்ள புலிகள் ஆதரவாளர்கள் எதிர்ப்பாளர்கள் அனைவரும் ஒரே குரலில் உடனடியாகப் பேசத்துவங்க வேண்டும். இன்றுவரை இலங்கையில் ஆட்சியிலிருந்த எந்த அரசும் தமிழ் மக்களுக்காக உருப்படியான எந்த அரசியல் நடவடிக்கையும் ஒரு திட்டமாகக் கூட முன்வைக்கவில்லை என்பதைக் கணக்கில் கொண்டு நாம் குரல் எழுப்ப வேண்டும்…
எழுத்தாளர் ச. தமிழ்ச் செல்வன்
துப்பாக்கிகள் அடங்கியிருக்கும் இப்போதேனும்
1
சாருவும் ஜெயமோகனும் ஈழப் பிரச்சினை குறித்து, அரசியல் மற்றும் கலாச்சாரம் என முன்பாக ஏதும் எழுதியிருக்கிறார்களா?
சாரு இரண்டு மாஸ்டர் பீஸ்கள் எழுதியிருக்கிறார். முதலாவது மாஸ்டர் பீஸ் : அவருடைய சிறுகதையான ‘உன்னத சங்கீதம்’. இரண்டாவது மாஸ்டர் பீஸ் : தமிழகச் சஞ்சிகையில் வரமுடியாத அளவு புரட்சித்தன்மை கொண்ட(சாருவின் இணையத்தில் வந்திருக்கிற) கலாகௌமுதிக் கட்டுரை. கலாகௌமுதிக் கட்டுரையை விடவும் கடுமையான ஈழத்தமிழர் குறித்த கட்டுரைகளை தமிழகத்தில் உயிர்மையும், காலச்சுவடும் நெஞ்சுரத்துடன் வெளியிட்டிருக்கிறது. எந்தவொரு மதிமுக, திமுக பத்திரிக்கையிலும் வந்திருக்கக் கூடிய கட்டுரைதான் சாருவின் கலாகௌமுதிக் கட்டுரை. கோரிக் கொள்கிற மாதிரியான அப்படியான எந்தக் கலகப் பண்பும் அந்தக் கட்டுரையில் இல்லை. சாருவின் முதலாவது மாஸ்டார் பீஸான உன்னத சங்கீதத்தில் சாரு தெரிவிக்கும் ஈழப் போராட்டத்தின் வரலாற்றுப் பின்னணி அவரது ஈழம் குறித்த, குறிப்பான அறிவுக்கு ஒரு சான்று : இலங்கைக்கு வந்த இந்திய அமைதிப் படையினர் இலங்கைச் சிங்களப் பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்ததால் வெகுண்ட சிங்கள இளைஞன் ஒருவன், தமிழர்களுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராட சிங்கள ராணுவத்தில் சேர்ந்து தமிழர்களைக் கொல்கிறான். ஈழப் போராட்ட வரலாறு பற்றிய நூற்றுக்கணக்கான தமிழ்-சிங்கள-ஆங்கில நூல்கள் எதிலும் காணக்கிடைக்காத சாருவின் நுண்விவர வரலாறு இது.
சாருவின் ஈழப் பிரச்சினை பற்றிய ‘அறிவு’ என்னை மெய்சிலிர்க்கச் செய்கிறது.
ஜெயமோகன் அவ்வப்போது, திண்ணை, காலம், ஜெமோ வலைத்தளம் என எழுதிய ஈழ இலக்கியவாதிகள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு ‘எனிஇன்டியன்’ பதிப்பக வெளியீடாக வந்திருக்கிறது. அப்புறமாக ஈழத்தமிழர்களின் தமிழகத் தமிழர்கள் குறித்த பார்வையெனத் தான் கற்பித்துக் கொண்டது குறித்து, தனது அவுஸ்திரேலியப் பயணத்தை முன்வைத்து ஜெமோ ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். ஷோபாசக்தியின் ‘கொரில்லா’ நாவல் குறித்த பதிவுகள் வலைத்தள விமர்சனம் ஈழத்தின் விடுதலைப்போராட்டம், அதனது ஆயுதப் போராட்டம் குறித்து முன்கூட்டிய ஜெயமோகனின் மனப்போக்கை முன்வைத்த ஆவணங்களாகும். மனிதனின் இயல்பான மிருகத்தனத்துக்கும் ஆயுதப் போராட்டத்தின் வன்முறைக்கும் பூடகமாக முடிச்சுப்போடப்பட்ட ஒரு விமர்சன மொழியை கெரில்லா நாவல் விமர்சனத்தில் ஜெமோ பாவித்திருப்பதை எம்மால் உணரமுடியும். ஈழத்தமிழர்களுக்கு உலக இலக்கிய, இந்திய இலக்கிய வாசிப்பில்லை என எழுதினார். கவிஞர் மு.புஷ்பராஜன் ‘ஈழத்தமிழர்கள் விரல்சூப்பிக் கொண்டிருக்கவில்லை’ எனக் காட்டமாகப் பதில் எழுதியதன் பின் ஜெமோ வாயைத் திறக்கவில்லை. தமிழகத் தேர்தலை முன்வைத்து அவர் எழுதிய கட்டுரையில், பேரினவாதத்தினால் ஈழத்தமிழர் மீதாகச் சுமத்தப்பட்ட படுகொலைகள் மற்றும் வன்முறைகளை, இந்திய தமிழக ஆட்சியாளர்களின் கொள்கைகளால் விளைந்த தமிழகத் தமிழர்களின் வறுமையுடனும் பட்டினி வாழ்வுடனும் ஒப்பிட்டு எழுதுவது ஜெமோவின் நியாமற்ற செயல்..
குறிப்பிட்ட மாணிக்கப் பரல்கள் தவிர சாருவோ ஜெமோவோ ஈழத்தமிழர்களின் அவலவாழ்வும் போராட்டமும் குறித்து எதுவும் எழுதியவர்கள் இல்லை.
2
ஈழ வன்முறைகள் பற்றி எழுதும்போது, கியூபப் பிரஜைகளைச் சுதந்திரமாகவிட்டால் தொண்ணூறு சதமானவர்கள் கியூபாவை விட்டு ஓடிப்போய்விடுவார்கள் என தடாலடியாக எழுதுகிறார் சாரு. குவேராவை காந்தியுடன் ஒப்பிட முடியாது எனும் ஜெமோ, குவேரா தனிமனித மூப்புக்கு கொண்ட ஒரு சாகசவாதி என எழுதுகிறார். சான்றுக்கு குவேரா பற்றிய காஸ்டநாடாவின் நூலை நல்ல நூல் என்கிறார். முன்பாகவே அ.மார்க்சும் அந்தப் புத்தகம் நல்ல புத்தகம் எனச் சான்றிதழ் கொடுத்திருக்கிறார்.
பகத்சிங் விடயத்திலும் காந்தியை நிலைநாட்ட அ.மார்க்சின் புத்தகம் ஜெமோவுக்கு உதவுகிறது. ஆச்சரியப்படத்தக்க விதத்திலான ஒற்றுமை என்ன வென்றால், பகத்சிங் மற்றும் சேகுவரா திருவுருக்களைக் ‘கட்டு’ உடைத்துவிடுவதென்று அ.மார்க்சும் புறப்பட்டிருக்கிறார். ஜெமோவும் புறப்பட்டிருக்கிறார். இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை என்னவெனில் ஜெமோ, அமா இருவரும் பின்நவீனத்துவம் பேசுபவர்கள்தான். வித்தியாசம், வலது மற்றும் இடது பின்நவீனத்துவத்திற்கு உள்ள வித்தியாசம்.
கியூபாவிலிருந்து மியாமிக்கு ஓடிப்போனவர்கள் கியூபப் புரட்சியின் கருத்துருவம் பிடிக்காமல் ஓடிப்போனவர்கள். பாடிஸ்டா அமெரிக்காவுக்கு ஓடிப்போய் நாடுகடந்த கியூபா அரசும் கூட அமைத்தார். பிறிதொரு வகையில் கியூபாவிலிருந்து விலகுகுகிற கியூப இளைய தலைமுறையினர் கலாச்சாரக் காரணங்களுக்காக, இலக்கியம் மற்றும் இசை குறித்த கியூபாவின் கட்டுப்பாடுகளை மீறி ஓடிப் போகிறார்கள். இப்போது நிலைமை வேறு. முன்னொரு காலத்தில் கியூபாவில் தடைசெய்யப்பட்டிருந்த மரியா வர்கஸ் லோசாவின் நாவல்கள் உடனடியில் இப்போது வெளியாகிறது. இசை குறித்த எந்தக் கட்டுப்பாடுகளும் தற்போது இல்லை. கியூப இசைச் சாதனைக்கு சான்றாக ‘புனாவிஸ்டா இன்டர்நேசனல்‘ விவரணப்படத்தை சாருவுக்குப் பரிந்துரைக்கிறேன். கியூபாவில் சிறுதொழில் முகவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். சிறுமுதலாளிகள் தோன்றுகிறார்கள். வேற்றுநாட்டவர்கள் புதிதாகக் கட்டப்படும் மாளிகைகளில் கியூபாவில் வாங்கிக் குடியேறலாம். இப்படி நிறைய மாற்றங்கள் அங்கு நடந்து வருகிறது.
முன்னொருபோது இலத்தீனமெரிக்க நாடுகளிடமிருந்து தனிமைப்பட்டிருந்த கியூபா இன்று சகல நாடுகளாலும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கக் கண்டத்தில் தற்போது அந்நியப்பட்டிருக்கிற ஒரே நாடு வடஅமெரிக்காதான். ‘தவறு எங்கள் பக்கமும் இருக்கலாம்‘ என கிலாரி பில்கிளின்டன் பேசுகிற காலம் இது. கியூபக் கலைஞர்களின் சுதந்திரத்தையும் அரசியல் சுதந்திரத்தையும் முன்னிட்டு இரண்டு அமெரிக்கக் கலைஞர்களின் ஆக்கங்களைச் சாருவுக்குப் பரிந்துரைக்கிறேன். ‘அபோகலிப்ஸ் நவ்‘ திரைப்பட இயக்குனர் பிரான்ஸிஸ் கொப்போலா, கியூபாவில் கலைஞனின் சுதந்திரம் குறித்து எழுதியிருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கியூபா சென்ற ‘பிளட்டுன்’ திரைப்பட இயக்குனர் ஆலிவர் ஸ்டோன், ஃபிடலைச் சந்தித்து இரண்டு விவரணப்படங்கள் தந்திருக்கிறார். மூன்றாமுலக மக்களும் கியூப மக்களும் ஃபிடலை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதை அந்த விவரணப்படத்தில் சொல்கிறார்கள். ‘தங்களுக்கென அடையாளம் தந்த தலைவன்’ ஃபிடல் என கரீபிய ஆப்ரிக்க முதியவர் சொல்கிறார். இது கியூபாவின் சமீபத்திய அரசியல் கலாச்சாரச் சித்திரம்
கியூபாவின் அனைவருக்குமான கல்வி மற்றும் மருத்துவம் சம்பந்தமான சாதனைகளில் உலகில் கியூபாவுடன் ஒப்பிட எந்த நாடும் இல்லை. இது கியூபா குறித்த பிறிதொரு பரிமாணம். இதே கியூபாவில் மாற்றுக் கருத்தாளர்கள் மீதான அரசியல் ஒடுக்குமுறை ஒப்பீட்டளவில் நிலவி வருகிறது. ஓற்றைக் கட்சி இருக்கிறது. வீட்டுவசதிப் பிரச்சினை இருக்கிறது. கியூபாவுக்கு தற்போது பயணம் செய்யவும் மியாமியிலிருந்து கியூபஉறவுகளுக்கு பணம்தரவும் ஆன தடையை ஒபாமபா அரசு தளர்த்தியிருக்கிறது. இலத்தீனமெரிக்காவில் முன்னாள் கொரில்லாக்கள் அனைவரும் தேர்தல் அரசியலைத் தேர்ந்து கொண்டிருக்கிறார்கள். இலத்தீன் அமெரிக்கர்கள் என்ற தேசியப் பெருமிதம் அவர்களுக்கிடையில் வளர்ந்து வருபதால்தான் அமெரிக்கா இந்தப் புவிப்பரப்பில் தனிமைப்பட்டிருக்கிறது. இலத்தீனமெரிக்காவில் நிகரகுவா, பொலிவியா, எல்ஸல்வடோர் என வறிய நாடுகளின் மக்கள் வாழ்கிறார்கள். அவர்களிடம் தமது சின்னஞ்சிறு தேசியம் குறித்த குறைகள் இருக்கிறது. அதுபோல பெருமிதமும் இருக்கிறது. மெக்ஸிக்கோவிலிருந்து அமெரிக்காவுக்குப் புலம்பெயர்கிற மக்கள் அவ்வாறு ஆவதற்கான காரணம் பொருள்தேட்டம்.
சாரு உளறுகிறமாதிரி இருந்திருந்தால் கியூபா உள்ளிட்ட இலத்தீனமெரிக்க நாடுகளில் இருந்து தொண்ணூறு சதவீதமானவர்கள் இலத்தீன் அமெரிக்காவை விட்டே ஓடியிருக்க வேண்டும். முன்பாக இந்த நாடுகளிலிருந்து வேறு நாடுகளுக்கு ஓடியவர்கள் அமெரிக்க ஆதரவு ராணுவக் கொடுங்கோன்மைக்கு எதிராகவே வெளிநாடுகளுக்கு ஓடினார்கள். மறுதலையாக கியூபாவிலிருந்து ஓடியவர்கள், பெரும்பாலானவர்களாக மயாமியில் வாழ்கிறவர்கள். பாடிஸ்டாவின் அரசியலை ஆதரித்த காரணங்களுக்காக ஓடினார்கள். இந்த அரசியல் யதாரத்தங்கள் ஏதும் அறியாத முட்டாளாக ஈழப்பிரச்சினையும் ஆயுதவிடுதலைப் போராட்டமும் குறித்துப் பேசுகிற வேளையில் கியூபாவின் மீது பாய்கிற சந்தர்ப்பவாதியாக சாரு இருக்கிறார்.
அமாவும் ஜெமோவும் பாராட்டுகிற கஸ்டநாடா இலத்தீனமெரிக்காவில் அமெரிக்காவின் அரசியல் செல்வாக்கை விரும்புகிறவர். சாவேசினதும் கியூப அரசினதும் எதிர்மறை விமர்சகர். சே கியூபாவை விட்டுப் போனதற்கு பிடல்-சேகுவேரா முரண்பாடே காரணம் என்பதை முன்வைப்பவர் இவர். இந்த வாதத்தை அமாவும் முன்வைக்கிறார் ஜெமோவும் முன்வைக்கிறார். இவர்கள் இருவருடையதும் வாசிப்பு எனக்கு மெய்சிலிர்க்கிறது. ஃபிடல் ஒரு அரசுத்தலைவர். ஓரு நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டியவர். சேகுவேரா ஒரு மனோரதியமான புரட்சியாளர். முதலும் முடிவுமாக சேகுவேரா சர்வதேசியவாதி. ஃபிடலின் ஒப்புதலின்படிதான் சேகுவேரா ஆப்ரிக்கா சென்றார். அங்கிருந்து மீண்டு மாறுவேடத்தில் பொலிவியா சென்றார். எந்த இரண்டு புரட்சியாளர்களும் போலவே அவர்களுக்கிடையிலும் அரசியல் முரண்பாடுகள் இருந்தன. சோவியத் யூனியன் மற்றும் சீனா தொடர்பாக இருவருக்கும் முரண்பாடு இருந்தது. சோவியத் யூனியனின் அரசியல் பொருளியல் அணுகுமுறைகள் குறித்து முதலில் அதிருப்தி வெளியிட்ட ஃபிடல், பிற்பாடு கியூபாவின் அன்றைய நலன்கருதி சோவியத் யூனியனை ஆதரித்தார். சேகுவேரா அவ்வாறு இருக்கவில்லை.
சேகுவேரா மரணமுற்று நாற்பதாவது ஆண்டு நிறைவையொட்டி நிறைய புதியநூல்களும் விவரணப்படங்களும் வந்திருக்கின்றன. அமாவும் ஜெமோவும் இவ்வகையில் செய்வது பச்சை அயோக்கியத்தனம். பொலிவியாவில் அல்லாவிட்டால் கியூபாவிலேயே சேகுவேரா கொல்லப்பட்டிருப்பார் என எழுதுகிற ஜெமோ, இதற்கான ஆதாரம் என்ன என்பதை முன்வைக்கவேண்டும். வரலாறு இந்தக் கழிசடைத் தனத்திற்கு எதிராகத்தான் இருக்கிறது. சேகுவேராவின் மனைவியும் மகளும் மகனும் கியூபாவிலிருந்துதான் சேகுவேராவின் தொகுப்பு நூல்களை வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
சோடர்பர்க்கின் சேகுவேரா குறித்த ஐந்து மணிநேரத் திரைப்படத்தின் 20 பிரதிகளை சோடர்பரக் ஃபிடலின் கியூபாவுக்குத்தான் அன்பளிப்பாகக் கொடுத்திருக்கிறார்.
3
எஸ்.ராமகிருஷ்ணன் முன்னுணர்வுடன் ஈழப் பிரச்சினை பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். எஸ்ராவின் நேர்மை என்னவென்றால் பொத்தாம் பொதுவாக எழுதிச் செல்வது. கீழ் வரும் நான்கு புள்ளிகளில் எஸ்ரா யாரைக் குறிப்பாகச் சொல்லுகிறார் என்று ஒரு தெளிவில்லை.
எஸ்ராவின் முதல் மேற்கோள் இது : நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை நமது எதிரியே முடிவு செய்கிறான் என்று சொன்ன புரட்சி கருத்துகளை நேற்று வரை கொண்டாடி வந்த பலரும் இன்று வன்முறை பாதை தவறானது. வன்முறையில்லாமல் நாம் அமைதியாக போராடி வெற்றி பெற வேண்டும் என்ற யோசனைகளை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
எஸ்ரா, யார் அள்ளி வழங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று நேரடியாகவும் தெளிவாகவும் சொல்லுங்கள்.
எஸ்ராவின் இரண்டாவது மேற்கோள் இது : ஆயிரமாயிரம் மக்கள் கொட்டடிகளில் நிராதரவாக அடைக்கபட்டிருக்கிறார்கள். வதை முகாம் போல அகதிமுகாம்கள் உள்ளன என்ற கண்கூடான உண்மைகள் வெளிவந்த பிறகும் அதைபற்றிய எவ்விதமான கலக்கமும் இன்றி இனி ஈழம் செய்ய வேண்டியது என்னவென்று இலவச புத்திமதிகளை ஈழத்திற்கு வாரிவழங்கும் அறிவுவேசைத்தனம் வன்முறையில்லையா?
இந்த அறிவுவேசைத்தனத்தை, வன்முறை-அகிம்சை எனும் எதிர்மையில் செய்து கொண்டிருப்பது யார்? அது சாருவும் ஜெமோவும் அல்லவா? பெயரைக் குறிப்பிடாமல் எதற்கு குசுகுசுத்துக் கும்மியடித்துக் கொண்டிருக்கறீர்கள் எஸ்ரா?
இது எஸ்ராவின் மூன்றாவது மேற்கோள் : பிரபாகரன் உயிரோடு இல்லை. அவர் கொல்லபட்டுவிட்டார் என்ற செய்தியை (வதந்தியை) எதற்காக இத்தனை உற்சாகமாக ஊடகங்கள் கொண்டாடுகின்றன. என்ன வெறுப்பு அது. ஈழமக்களின் கடைசி யுத்தம் முறியடிக்கபட்டுவிட்டது என்பதை பொதுவெளிகள் ஏன் களிப்போடு பேசி கதைக்கின்றன.
செய்தி, அப்புறமாகப் பிராக்கெட்டில் வதந்தி என எழுதுகிறீர்கள். செய்தியா வதந்தியா நிஜமா? புனைவுக்கும் நிஜத்துக்கும் பிம்பத்திற்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான இடைவெளியை மயங்கவைப்பது இலக்கியத்துக் பொருந்தும். அரசியலில் இதற்கு அர்த்தமில்லை.
இரு எஸ்ராவின் கடைசி மேற்கோள் : நான் ஆழ்ந்த அரசியல் அறிவு கொண்டவன் இல்லை. ஈழப்போராட்டத்தின் வரலாற்றை முழுமையாக கற்று தேர்ந்து சரி தவறுகளை நிறுத்துப் பார்த்து எனது நிலைப்பாட்டை எடுப்பவனுமில்லை.
அறிவும் ஈடுபாடும் எப்படி வரும்? தேடலும் படிப்பும் இருந்தால்தான் வரும். அக்கறை இருந்தால்தான் வரும்.
4
அரசியலில் தனக்கு ஈடுபாடோ, நிலைபாடுகள் எடுக்கிற தேடலோ தன்னிடம் இல்லை என்கிறார் எஸ்ரா. இலக்கியம் போல திரைப்படத்திலும் அரசியலிலும் தனக்கு ஈடுபாடு இல்லை என்கிறார் ஜெயமோகன். தனக்கு நுண்ணுரசியலில் ஈடுபாடு இல்லை என்றும் அவர் சொல்கிறார். தான் அடிப்படையில் இலக்கியவாதி, அதை விட்டுவிட்டு தான் அரசியல் குறித்து எழுத வேண்டியிருக்கிறது என்கிறார் சாருநிவேதிதா.
அரசியல் குறித்த முன்னுரிமை வழங்காத அவர்களது தேர்வுகள் குறித்து எவரும் கேள்வி எழுப்ப முடியாது. அதைப் போலவே, திரைப்படத்திலும் அரசியலிலும் ஈடுபாடு காட்டி, எனக்கு இலக்கியத்தில் அவ்வளவு ஈடுபாடு இல்லை எனத் தேர்கிற ஒருவரது சுதந்திரத்திலும் எவரும் தலையிட முடியாது.
பிரச்சினை எங்கு வருகிறது?
இலக்கியத்தில் அக்கறையோ ஈடுபாடோ இல்லை எனப் பிரகடனப்படுத்தி விட்டு, தமது உன்னதப் படைப்புக்கள் என்று கருதுகிறவைகள் குறித்து ஒருவர் விமர்சனத்தை முன்வைக்கும் போது, எஸ்ரா சாருநிவேதிதா, ஜெயமோகன் போன்றவர்களின் எதிர்விணை எத்தகையதாக இருக்கும்? இலக்கியம் குறித்து ஆணித்தரமாக கருத்துக்கள் முன்வைக்கிற ஒருவர், இலக்கியத்தின் நுண்விவரங்களிலோ, குறைந்தபட்சம் இலக்கிய வாசிப்பிலோ அல்லது தேடலிலோ தனக்கு அக்கறையில்லை எனத் துவங்கினால் இவர்களது எதிர்விணைகள் எவ்வாறாக இருக்கும்?
இலக்கியத்தில் இவர்கள் தேடலையும் நுண்விவரங்களையும் வைத்து, தமது படைப்புக்களைத் தற்பாதுகாப்பதோடு, பிறரது படைப்பையும் கடுமையாக விமர்சிக்கிறார்கள். விஷ்ணுபுரம் குறித்த அல்லது பின்தொடரும் நிழல் குறித்த ஜெயமோகனின் எதிர்விணைகள், சு.வெங்கடேசனின் காவல்கோட்டம் குறித்த எஸ்.ராவின் கட்டுரை, தனது படைப்புக்கள் குறித்த ஜெயமோகனின் கருத்துக்களுக்கு சாருநிவேதிதாவின் எதிர்விணைகள் என இவர்களுக்கிடையில் எப்படிப் பொறிபறந்தது என யோசித்துப் பாருங்கள். நான் சொல்வது விளங்கும்.
இலட்சக் கணக்கிலான மக்கள் முள்கம்பி வேலிக்குள் நிற்கிறார்கள். பத்தாயிரக் கணக்கில் இனக் கொலையினால் இறந்து போயிருக்கிறார்கள். முழு உலகினதும் வல்லரசுகள் அந்த மக்களுக்கு எதிராக நிற்கிறது.
இதில் அக்கறையோ, ஈடுபாடோ, நுண்விவரங்களோ குறித்து அறியாமல், எப்படி அய்யன்மீர், நீங்கள் எழுந்த மேனியாக எழுத முடியும் என்று கேட்பது எப்படித் தவறாகும்?
5
சில நிலைபாடுகள் தமிழகச் சூழலில் மட்டும்தான் எழு முடியும் என்று தோன்றுகிறது. இலக்கிய உணர்வு இல்லாமல் எழுத்தாளர்கள் இருக்க முடியுமா? இந்தக் குறிப்பிட்ட கேள்வி, எழுத்தாளன் என்பவன் யார், இலக்கிய உணர்வு என்பது யாது, இலக்கிய ஈடுபாட்டின் தன்மைகள் எத்தகையது என விரிய வேண்டும் என நான் கருதுகிறேன்.
இலக்கிய ஈடுபாட்டின் தன்மைகள் அவரவரது தேர்வுகளும் ஈடுபாடும் சம்பந்தப்பட்டது. இதனை இரண்டு விதங்களில் முன் வைக்கலாம். எழுத்தாளன் என்பவன் இலக்கிய உணர்வு கொண்டிருக்க வேண்டும் எனக் கட்டாயமில்லை. எழுத்தாளன்; எனும் பொதுப் பெயருக்கும் இலக்கியவாதி என்கிற தனித்த ஆளுமைக்கும் வித்தியாசங்கள் இருக்கிறது.
அரசியல், பொருளியல், வணகவியல், குற்றவியல், சமூகவியல், விஞ்ஞானம் போன்ற எத்தனையோ அறிவுத் துறைப் போக்குகள் இருக்கின்றன. இவைகள் குறித்து மட்டுமே தனித்து எழுதுகிறவர்கள் தத்தமது துறைகளில் ஈடுபாடும் அக்கறையும் நுண்விரங்களில் தேடலும் கொண்ட எழுதுபவர்கள். இவர்கள் இலக்கியம் பற்றி எழுதும் போது இலக்கியத்தில் ஈடுபாடும் தேடலும் நுண்விவரங்களில் அக்கறையும் இருந்தால் தான் எழுத வேண்டும். அல்லவெனில் தத்தமது துறைகளுடன் அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இலக்கியவாதிகள் பிற துறைகளில் ஈடுபாடும் அக்கறையும் தேடலும் இருந்தால்தான் எழுத வேண்டும். அல்லவெனில் அது குறித்து எழுதுவதனை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
ஒரு எழுத்தாளனின், அவன் எத்துறை சார்ந்த எழுத்தாளன் ஆயினும் இலக்கிய உணர்வுகளையும், அவனது தேர்வுகளையும் அவனது முன்னுரிமைகளும், காலப் பரிமாணம் குறித்த அவனது திட்டங்களையும் சார்ந்துதான் இயங்க முடியும். குறிப்பாகச் சொல்வதானால், தமிழில் இன்று குவிந்து கொண்டிருக்கிற இலக்கியப் படைப்புக்களை முழுமையிலும் ஒருவன் வாசித்து முடித்து அபிப்பிராயம் சொல்ல அவனது வாழ்காலம் போதாது. வாழ்வு குறித்த ஒருவனது தரிசனத்தின் அளவில்தான் வாசிப்பு குறித்த அவனது தேர்வுகளும் அமைகிறது.
என் அனுபவத்திலிருந்து பேசுவதுதான் இங்கு பொருத்தமாக இருக்கும்.
அடிப்படையில் நான் என்னை ஒரு வாசகன் என்றே கருதிக்கொள்கிறேன். எழுத்து என்பது எனது வாசிப்பையும் எனது அனுபவங்களையும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிற ஒரு வழிமுறையாகவே நான் தேர்கிறேன். மனிதவிமோசனம் என்கிற எனது தந்தை விதைத்த அந்த உந்துதலே இன்றளவிலும் என்னைச் செலுத்துகிறது. இலக்கியத்தையும் அரசியலையும் அதனது வலிமை கருதி என்னால் பிரித்துப் பார்க்க முடியவில்லை. அரசியல் என்பதைக் கட்சி சார்ந்த அரசியல் என நான் புரிந்து கொள்ளவில்லை. தத்துவம் அதனது பகுதி என நான் புரிந்து கொண்டிருக்கிறேன். தத்துவம் இலக்கியத்தினதும் பகுதி எனவும் நான் புரிந்திருக்கிறேன். அரசியலுக்கும் இலக்கியத்திற்குமான உறவு நேரடியிலானது இல்லை எனினும், அறுதிப் பார்வையில் எந்தப் படைப்பும் ஒரு அரசியலைத் தனது உள்ளுறையாகக் கொண்டிருக்கிறது எனவும் நான் கருதுகிறேன். எழுத்து சார்ந்து இலக்கியத்திலிருந்து அரசியலுக்கும், அரசியலிலிருந்து இலக்கியத்திற்குமாகவே நான் அலைந்து கொண்டிருக்கிறேன்.
எனக்கு முன்னோடி ஆளுமைகள் தமிழில் உண்டு, ஞானி, எஸ்.வி.ராஜதுரை, ஆதி, எஸ்.என்.நாகராசன், எல்.ஜி.கீதானந்தன், இன்குலாப், என இருக்கிறார்கள். ஞானி, எஸ்.வி.ஆர். போன்றவர்களது முதன்மை ஈடுபாடு கோட்பாடும் அரசியலும் தான் எனினும் அவர்கள் சில தருணங்களில் படைப்பிலக்கியத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். எஸ்.வி.ஆர். சிறுகதைகள் எழுதியிருக்கிறார். ஞானி கல்லிகை என குறுங்காவியம் எழுதியிருக்கிறார். இன்குலாப்பினால் அரசியலையும் அவரது கவிதைகளையும் பிரிக்க முடியாது
எனது வாலிப நாட்களில் நான் கவிதைகள் எழுதியிருக்கிறேன். மனுஷ்யபுத்திரனை அப்படித்தான் எனக்குத் தெரியும். பாடல்கள் எழுதியிருக்கிறேன். பிற்பாடு பல பத்தாண்டுகளின் பின் ‘அம்மா’ இதழ் மனோ கேட்டுக்கொண்டதற்காக சிறுகதையும் எழுத முயன்றிருக்கிறேன். மறுபடியும் கவிதைகள் எழுதியிருக்கிறேன். அதனது தொடர்ச்சியான ஈடுபாட்டின் பகுதியாக இலத்தீனமெரிக்கக் கவிதைகள், குர்திஸ் கவிதைகள், மஹ்முத் தர்வீஷ் கவிதைகள் என தொகுப்புக்களையும் கொணர்ந்த வண்ணமே உள்ளேன். மேற்கத்திய நாவல்கள் குறித்தும் அறிமுகங்கள் எழுதுகிறேன். சமகாலத் தமிழ் இலக்கியம் நான் அதிகம் வாசிப்பதில்லை. காரணம் அது கீழானது எனக் கருதியதாக இல்லை. எனது வயதும் எனது முன்னுரிமைகளும் வேறுபட்டதுதான் காரணம்.
‘மேலதிகமாக ஒரு நாளும் கூட இல்லை, என விதிக்கப்பட்டதுதான் வாழ்வு’ என்கிறார் விஸ்லாவா ஸிம்போர்ஸ்கா.
ஐம்பது வயதின் பின் மரணம் என்னைத் துரத்திக் கொண்டேயிருக்கிறது.
எஸ்ரா, ஜெமோ, சாரு உள்பட எழுத்துக்களை நான் தேர்ந்தெடுத்து வாசிக்கிறனேயல்லாது அவர்களை முழுக்க வாசிக்கிற நேரமோ உத்தேசமோ எனக்கு இல்லை. பாலமுருகனின் ‘சோழகர் தொட்டி’ மாதிரியான நாவல்கள் அல்லது ஜீவா பற்றி அவரோடு அதிகமும் பழகிய தா.பாண்டியனின் ‘ஜீவா நினைவுகள்’ எனக்கு முன்பாக இருக்குமானால், இவைகளது ஆதாரத்தன்மை கருதி, ஜெயமோகனது புனைவை விடவும், சுராவினது ஜீவா நினைவுகளை விடவும், இவைகளுக்கே நான் முன்னுரிமை தருகிறேன். பிற்பாடுதான் நான் ஜெமோவையும் சுராவையும் வாசிப்பேன்.
உலக அளவிலான இலக்கியங்களை நான் நிறைய வாசிக்கிறேன். தமிழுக்கு அவைகளை அறிமுகம் செய்ய வேண்டிய தேவைகள் அதிகமாக இருப்பதாக நினைக்கிறேன். மைய இலக்கியங்களை விடவும் விளிம்புநிலைக் குரல்களும், தமிழில் இதுவரை பதிவுபெறாத உலகக் குரல்களும் தான் எனக்கு முக்கியம். தாஸ்தயாவ்ஸ்க்கி குறித்து எழுதத் தமிழில் தொகை ஆட்கள் உண்டு. தாஸ்தயாவ்ஸ்க்கியையும் மீறிச் செல்கிற கஸான்டாஸ்கிசில்தான் எனக்கு ஈடுபாடு அதிகம். இனக் கொலைக்கு உள்ளான ஜிப்ஸிகளின் படைப்புகளில்தான் எனக்கு ஈடுபாடு அதிகம். தற்கொலை செய்து கொண்ட வால்ட்டர் பெஞ்ஜமின் வாழ்வில்தான் எனக்கு ஈடுபாடு அதிகம்.
ஈழப் பிரச்சினை. எனது இருபத்தி ஐந்து ஆண்டுகால வாழ்வோடு, இலக்கியம் அரசியல் திரைப்படம் எனது அக்கறைகளையும் தாண்டிய எனது அன்றாட வாழ்வோடு கலந்த பிரச்சினை. ஈழப் பிரச்சினையோடு, எனது வாழ்வோடு கலந்த எனது வாசிப்புடன் கலந்த ரித்விக் கடக், ஜான் ஆப்ரஹாம், தெரிதா, நெருதா, கிராம்ஸ்க்கி பற்றி, ‘வெறும்’ இலக்கியம் மட்டுமே அறிந்த இலக்கியவாதிகள் உளறிக் கொண்டிருக்கிறார்கள். இதனைப் பற்றி விமர்சிப்பதற்கு நான் இவர்களது படைப்புக்களைப் படித்துத் துறைபோக வேண்டுமா என்ன? இதனைப் பேசுவதற்கு இவர்களது இலக்கியப் படைப்புக்களைப் படிக்க வேண்டியது அவசியம் இல்லை என நான் நினைக்கிறேன்.
எதனைப் பற்றி நாம் பேசுகிறோமோ அது குறித்த வாசிப்புத்தான் முக்கியம்.
தெரிதா பற்றிப் பேசுகிறபோது தெரிதாவைப் படித்துவிட்டுத்தான் பேச வேண்டும். சொன்டாக் பற்றிப் பேசினால் சொன்டாக்கைப் படிக்க வேண்டும். மார்க்ஸ் பற்றிப் பேசினால் மார்க்சைப் படிக்க வேண்டும். கிராம்சி பற்றிப் பேசுவதானால் கிராம்சியைப் படிக்க வேண்டும். ஜெயமோகனது பின்தொடரும் நிழல் பற்றிப் பேச வேண்டுமானால் அதனைப் படிக்க வேண்டும். சாரு நிவேதிதாவின் உன்னத சங்கீதம் பற்றிப் பேச வேண்டுமானால் அதனைப் படிக்க வேண்டும்.
ஈழம் பற்றிப் பேசுவதானால் ஈழம் பற்றி எனக்கு அக்கறையும் ஈடுபாடும் படிப்பும் தேடலும் இருக்க வேண்டும். இல்லையெனில் அது பற்றிப் பேசக் கூடாது. இவைகளைப் பற்றிப் பேசுவதற்கு எனக்குத் தெரிய வேண்டியதெல்லாம், சே குவேரா, கியூபா, பிரபாகரன் பற்றிய ஞானம் தானேயொழிய, சாரு-ஜெமோ-எஸ்ரா போன்றோரின் மொத்த இலக்கியப் படைப்புக்கள் பற்றிய ஞானம் இல்லை.
இது ஒரு அறிவு ஒழுக்கம். இதனைத்தான் நான் வலியுறுத்துகிறேன்.
6
ஈழப் பிரச்சினையை முன்வைத்து ஜெமோ, சாரு போன்ற இலக்கியவாதிகள் அபிப்பிராயம் தெரிவித்ததனையடுத்து, தமிழ்நதி, ஈழத்தின் ஆயுதவிடுதலைப் போராட்டம் குறித்துக் கருத்துச் சொல்வதற்கான இருவரதும் தகைமைகள் குறித்து கேள்வி கேட்டிருந்தார். இருவரும் தமிழ்நதிக்கு ஏதும் எதிர்விணை செய்திருக்கவில்லை. மதுரை இலக்கியச் சந்திப்பில், பொதுவாக ஈழத்தமிழர்களின் துயர்களுக்கான தமிழக இலக்கியவாதிகளின் எதிர்விணை என்ன என்பதுதான் தமிழ்நதியின் கேள்வியாக இருந்தது.
விடுதலைப் புலிகளுக்கு நீங்கள் ஏன் ஆதரவு தரவில்லை என தமிழ்நதி கேட்டிருக்கவில்லை. மேடையில் அதற்கு எதிர்விணை செய்த ஆதவன் தீட்சண்யா தவிர்ந்த பிற எழுத்தாளர்கள் எவரும் தமிழ்நதிக்கு அரசியல்ரீதியிலான பதிலைச் சொல்லியிருக்கவில்லை. ஆதவன் தீட்சண்யா தமிழ்நதியின் கேள்வியை முழக்கவும் தன்னுடைய கட்சி சார்ந்த அரசியல் நிலைபாட்டில் இருந்துதான் அணுகினார்.
ஈழப் பிரச்சினை தொடர்பான ஆதவனது அரசியல் இருமுனைகள் கொண்டது. ஈழம் தொடர்பான மாரக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் அவருடைய அரசியல். புகலிட புலி எதிர்ப்பாளர்களான ஷோபா சக்தி, சுசீந்திரன் போன்றவர்களால் தகவமைக்கப்பட்ட அரசியல் அவருடைய அரசியல். இருவரது நேர்முகத்தையும் ஆதவன் தனது புதுவிசையில் வெளியிட்டார். ஆதவன் தமிழக இலக்கியவாதி எனும் அடிப்படையில் தமிழ்நதியின் கேள்விகளை அணுகியிருக்கவில்லை. புகலிட புலி எதிர்ப்பாளர்களால் தகவமைக்கப்பட்ட அவரது கருத்துநிலையிலிருந்தே அவர் தமிழ்நதியை அணுகினார்.
இதற்கான காரணத்தையும் புகலிட நிகழ்வுகளை அறிந்தவர் அறிவர். கனடாவில் நடந்த பெண்கள் சந்திப்பில் புலிகளை விமர்சித்தவர்களுக்கும் தமிழ்நதிக்கும் இடையில், புலி எதிர்ப்பு-புலி ஆதரவு எனும் முனைகளிலிருந்து விவாதங்கள் நடந்திருந்தன. அந்தப் பெண்கள் சந்திப்பு தொடர்பாக தமிழ்நதி தனது விமர்சனங்களையும் பதிவு செய்திருக்கிறார். இவையனைத்தையும் ஆதவன் அறியாதவர் எனக் கொள்ளத் தேவையில்லை.
தமிழ்நதியைப் புலி ஆதரவாளராகக் கொண்டு, புலிகள் தலித்திய-மார்க்சிய விரோதிகள் எனக் கொண்டு, புகலிட புலி எதிர்ப்பாளர்களின் தமிழகக் குரலாகவே, தமிழ்நதிக்கு எதிரான ஆதவனது குரல் இருந்தது. இதனாலேயே பிற்பாடு இவர்களுக்கு இடையிலான விவாதத்தில் ஷோபா சக்தி பிரவேசிக்க வேண்டியிருந்தது.
எனக்கு ஆச்சர்யமூட்டக் கூடிய ஒரு விடயம் என்னவென்றால், ‘தமிழ்நதி ஜெயமோகனையும் சாருநிவேதிதாவையும் பிறாண்டி வைத்தார்’ என ஷோபா சக்தி எழுதுகிறார். சாருநிவேதிதா ஷோபா சக்தியைப் பொறுத்து சின்னக்கதையாடல்காரர். சாருநிவேதிதாவிடம் அவரது நேசத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஷோபா சக்திக்கும் ஜெயமோகனுக்கும் என்ன பொதுத்தன்மைகள் என்றே எனக்குப் புரியவில்லை. ஜெயமோகனைக் கடுமையான இந்துத்துவவாதி என ஆசான் அ.மார்க்ஸ் எழுதுகிறார். சுந்தர ராமசாமியை ‘வெட்டு ஒன்று துண்டு ரெண்டாக’ விமர்சிக்கும் ஷோபா சக்தி எந்தச் சந்தர்ப்பத்திலும் ஜெயமோகன் குறித்துக் கடுமையாக ஒரு சுடுசொல் சொல்வதில்லை.
கொரில்லாவுக்கு ஜெயமோகன் ‘பாசிடிவ்’ விமர்சனம் எழுதினார், அப்புறமாக இருவருக்கும் புலி எதிர்ப்பு. இது தவிர இவர்களை இணைக்கிற கண்ணிதான் என்ன?
சாருநிவேதிதா, ஜெயமோகன், எஸ்.ரா போன்றவர்களுக்கு இல்லாததொரு பரிமாணம் ஆதவண் தீட்சண்யா, ஷோபா சக்தி, தமிழ்நதி போன்றோருக்கு உண்டு. மூவரும் இலக்கியவாதிகள் என்ற பரிமாணத்தையும் தாண்டி ஈழம் குறித்து திட்டவட்டமான கருத்துக்கள் கொண்ட அரசியல்வாதிகள் என்ற பரிமாணம்தான் அது. இயல்பாகவே பின்மூவரதும் கருத்துக்களை அவர்கள் பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியலில் இருந்துதான் அணுகமுடியும். இவர்களது இலக்கியத் தகுதிகள் இந்தப் பிரச்சினையை அணுகுவதற்கு எந்தவிதத்திலும் ஒருவருக்கு அவசியமில்லை.
இவர்கள் பேசுவது முழுமையாக ஈழ அரசியல். இதனை அரசியல் தளத்தில்தான் அணுக வேண்டும்.
ஆதவன் தீட்சண்யாசின் அரசியல் ரீதியான ஆவேச உரைவீச்சினை விலக்கிவிட்டு அவர் தமிழ்நதிக்குச் சொன்ன உருப்படியான எதிர்விணை இதுதான் :
இலங்கைத் தமிழர் பிரச்னை என்பது மட்டுல்ல பொதுவாகவே சமகால நிகழ்வுகளை உள்வாங்கிச் செரித்து படைப்பாக வெளிப்படுத்துவதில் தமிழகப் படைப்பாளிகளிடம் ஒரு மனத்தடை இருந்து கொண்டேதான் இருக்கிறது. ஏதோ ஒரு கண்ணி அறுபட்டுக் கிடக்கிறது. ஒருவேளை கூட்டாக விவாதித்து அதை கண்டுபிடிப்போமானால் உடனடி நிகழ்வுகள் மீது படைப்புகள் வரலாம். அதுகுறித்து வேண்டுமானால் பேசலாம்..
தமிழ்ச் செல்வனும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில்தான் இருக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் முழு நேர ஊழியராக இருக்கிறார். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும்தான் ஆதவனும் இருக்கிறார். இரண்டு குரல்களிளும் வெகு சாதாரணமாக வித்தியாசத்தைப் பாரக்க முடிகிறது.
‘ஏதோ ஒரு கண்ணி அறுபட்டுக் கிடக்கிறது’ எனச் சொல்லும் ஆதவன், எந்தக் கண்ணி ஏன் அறுபட்டக் கிடக்கிறது என்று பேசுவதற்குக் கூட, அவர் தனது தலித்தியப் பெருங்கதையாடலுக்குள்ளிருந்தும், சகலவற்றையும் கணிசூத்திரம் போல இரவல் புகலிடப் பார்வையில் தலித்திய விரோதமாக நிரல்படுத்தும் அவரது மூடுண்ட அரசியல் பார்வைக்குள்ளிருந்தும் அவர் வெளியே வரவேண்டும்.
அப்போதுதான் அவர் வெளிப்படையாக எல்லோருடனும் உரையாடல் மேற்கொள்வது சாத்தியம்.
7
உலகில் வெகுமக்கள் அறிவுஜீவிகள் (public intellectuals) எனும் பாத்திரத்தை இலக்கியவாதிகள் ஏற்றிருக்கிறார்கள். இந்தியாவிலும் தமிழகத்திலும் கூட அதற்கான உதாரணங்கள் உண்டு. இலக்கியவாதிகளாக செக்கோஸ்லாவியாவில் வஸ்லாவ் ஹாவல், இலத்தீனமெரிக்காவில் கார்ஸியா மார்க்வஸ், ஆப்ரிக்காவில் செம்பேன் ஒஸ்மான், ரஸ்யாவில் மயக்காவ்ஸ்க்கி, இங்கிலாந்தில் ஹெரால்ட் பின்ட்டர், அமெரிக்காவில் அலன் ஜின்ஸ்பர்க், இந்தியாவில் முல்க் ராஜ் ஆனந்த், தமிழகத்தில் மகாகவி பாரதி என இவர்கள் அந்தந்த சமூகம் சார்ந்து வெகுமக்கள் அப்பிப்பிராயங்களை உருவாக்குபவர்களாக இருந்திருக்கிறார்கள்.
தத்துவவாதியாக ஸார்த்தர், இலக்கிய விமர்சகராக எட்வர்ட் ஸைத், மனித உரிமையாளராக நோம் சாம்ஸ்க்கி, பத்திரிக்கையாளராக ஜான் பில்ஜர், தமிழகத்தில் கோட்பாட்டாளராக எஸ்.வி.ராஜதுரை போன்றவர்கள் இப்படி இயங்கியிருக்கிறார்கள். குறிப்பிட்ட ஆளுமைகள் அனைவரும் தாம் பேசுகிற விடயங்களில், ஈடுபாட்டுடன், அறிவுடன், நுண்விவரங்களுடன் தமது நிலைபாடுகளைத் தெளிவாக அச்சமின்றி முன்வைத்தவர்கள்.
இன்றைய தமிழகத்தின் தீவிர-சீரிய இலக்கியவாதிகள் அல்லது புகழ்பெற்ற இலக்கியவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு இந்தத் தகுதிகள், அறிவுஜீவி என்கிற தகுதி இல்லை என நான் அச்சமின்றிச் சொல்கிறேன்.
ஓரு படைப்பாளியாக இன்குலாப் மட்டுமே இதில் விதிவிலக்கு.
வெகுமக்கள் அறிவுஜீகளுக்கு அரசு மட்டுமல்ல, சகலவிதமான அதிகார மையங்களையும் எதிர்கொள்ள வேண்டிய திடமனம் வேண்டும். அது இன்றைய தமிழ் இலக்கிய ஜாம்பவான்களுக்குக் கிஞ்சிற்றும் இல்லை.
இலக்கியம் என்பது ஒரு வகையிலான கற்பனா சாம்ராஜ்யம். அது கற்பனா சம்ராஜ்யம் எனும் அளவில் ஒரு கருத்தியலைத் தன்னளவில் முன்வைக்கிறது (literature is itself an utopia and as an utopia it represents and constitutes an ideology). இந்தக் கருத்தியலை, ‘நிலவும்’ கருத்தியல்களோடு இணைத்தோ ஒப்புநோக்கியோ பாரக்கத் தேவையில்லை. வரலாறு, அக்காலத்தின் இலக்கியச் சூழல், இலக்கிய வடிவங்களின் வளர்ச்சி போன்றவை பற்றின அவதானிப்புடன், இலக்கியம் விரிக்கும் கருத்தியலை மார்க்சியர்கள் அவதானிக்கிறார்கள். மார்க்ஸ் முதல் டிராட்ஸ்க்கி வரை, இலக்கியத்தில் அழகியலுக்கான முக்கியத்துவத்தை அவர்கள் அங்கீகரிக்கிறார்கள். அதே வேளை, அதனது கருத்தியலையும் அரசியலையும் அவர்கள் அவதானிக்கவே செய்கிறார்கள்.
இலக்கியத்தை இலக்கியவாதியின் பிரக்ஞைபூர்வமான பிரகடனங்கள் மட்டும் தீர்மானிப்பதில்லை. அதனைத் தீர்மானிப்பதற்கு வேறு வேறு காரணிகள் இருக்கின்றன. இலக்கியம் அரசியலையும் கருத்தியலையும் தாண்டி, மனுக்குலத்தைப் பேசுகிறது. இந்த வகையில் அதனை சமூக நோக்குக் கருதி பிற்பாடாக அதனது அரசியலையும் கருத்தியலையும், மானுட உள்ளடக்கத்தையும், அதனது வலதுசாரி-இடதுசாரி போக்குகளையும் பிரித்தறிகிறோம். நீட்ஷேவின் ‘இப்படிப் பேசினான ஜராதுஷ்டாவின்’ கவித்துவத்தில் தன்னை முற்றிலும் இழந்துவிடுகிறவன், நாசிக் கொலைக் களங்களை மறந்து விடுகிறான்.
எந்த இலக்கியவாதியினதும் கவித்துவத்திலும் மொழியிலும் தோயத் தெரிந்த ஒரு இலக்கிய வாசகன், அதே இலக்கியவாதியின் அபத்த அரசிலையும் மறந்துவிட வேண்டிய அவசியமில்லை.
8
‘கலையில் மொழியின் இடம் என்பது கூடார்த்தத் தன்மை கொண்ட ஊடாட்டம் கொண்டது. புதைமணல் போன்றது. கழைக் கூத்தாடியின் மெத்தை போன்றது. எழுத்தாளனாக மொழி என்பது எப்போதும் காலடியில் உங்களுக்கு வழிவிடும் உறைந்த ஏரி போன்றது‘ என்பார் பின்ட்டர்.
அரசியலில் மொழிப் பாவனை பெரும் இடம் இலக்கியத்திலிருந்து முற்றிலும் வித்தியாசமானது. மொழி இங்கு நேரடி அர்த்தம் தரவேண்டும். கூடார்த்தம் அரசியலில் செல்லுபடியாகாது. அரசியல் கருத்துக்களை எவரும் பிரதி இன்பத்திற்காகப் படிப்பதில்லை. அரசியலில் நக்கல் நையாண்டிகளை எவரும் சீரிய அர்த்தத்தில் எடுத்துக் கொள்வதில்லை.
இலக்கியமொழிக்கும் அரசியல் மொழிக்குமான வித்தியாசத்தை ஹெரால்ட் பின்ட்டர் தனது நோபல் பரிசு உரையில் துல்லியமாக வித்தியாசப் படுத்திக் காட்டுகிறார்.
இந்த அறிவு நேர்மை தமிழ் இலக்கியவாதிகளுக்கு இல்லை.
ஈழப் போராட்டம் இரத்தவெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்ட தருணத்தில் சாரு நிவேதிதா, ஜெமோ, எஸ்ரா போன்றவர்கள் கட்டுரை எழுதுகிறார்கள். ஈழ அரசியலை வெகுஜன ஊடகங்களும் இடைநிலைப் பத்திரிக்கைகளும் பேசுவது ஜெமோவுக்கு அலுப்பாக இருக்கிறது. அமெரிக்காவுக்குப் போனாலும் நந்திகிராம் பற்றிப் பேசுகிறபோது, அங்கு குடியேறிய பங்களாதேஷ் இஸ்லாமியர்கள் இனி வங்கத்திலும் ‘ஆசாதி கேட்பார்கள்’ என்று நக்கலாக ஜெமோவுக்குச் சொல்லத் தோன்றுகிறது. ஜெயமோகனது வார்த்தைகள் ஒவ்வொன்றும் அரசியல் வெளியில் நஞ்சை விதைக்கும் வார்த்தைகள்.
இலக்கியவாதிகள் அரசியல் பேச வேண்டும் என அவசியமில்லை. அவன் அரசியல் பேசுவானானால் அது அவனது தேர்வு. அவனது தேர்வுக்கும் அதனது விளைவுகளுக்கும் அவன் பொறுப்பாக இருத்தல் வேண்டும். அவன் இப்போது அரசியல்வாதியாகவும் ஆகியிருக்கிறான். அரசியல்வாதி எனும் போது கட்சி சார்ந்த அரசியல்வாதியாக அல்ல, வெகுமக்கள் நலன் சார்ந்த, அறம் சார்ந்த அரசியல் பேசுவதாக அவன் கருதுகிறான்.
வெகுமக்கள் நலன் சார்ந்த அரசியல் பேசபவனாக, வெகுமக்கள் அறிவுஜீவி எனும் பாத்திரத்தையும் அவன் ஏற்கிறான்.
ஸ்பானிஸ் உள்நாட்டுப் போர், வியட்நாம் யுத்தம், ஈராக் யுத்தம் போன்வற்றில் இலக்கியாவதிகள் இவ்வாறு அரசியல்வாதிகளாக, வெகுமக்கள் அறிவுஜீவிகளாக ஆகியிருக்கிறார்கள். ஜியார்ஜ் ஆர்வல், ழான் பவுல் ஸார்த்தர், ஹெரால்ட் பின்ட்டர் என இவ்வாறான மரபு உலக இலக்கியத்தில் உண்டு.
இந்தத் தெளிவும் ஆளுமையும் கடப்பாடும் நெஞ்சுரமும் தமிழ் இலக்கியவாதிகளுக்கு இல்லை.
ஜெயமோகன் தனக்கான வாசகர்களைத் தனது ரசிகர் வட்டம்போலப் பாவித்து ஒரு நிறுவனம் போல இயங்குபவர். தனக்கு ஈடுபாடு இல்லை எனச் சொல்லிக் கொண்டே, அரசியலில் எதனை வெறுக்க வேண்டும், எதனைத் துவேசம் செய்ய வேண்டும், எதனுடன் உரையாட வேண்டும், எதனைப் பாராட்டி முன்நிறுத்த வேண்டும் என்பதனைத் தெளிவாக அறிந்தவர். பிஜேபி, அரசியலில் உருவாக்கி வைத்த சமூக வெளிதான் ஜெயமோகன் இயங்கிக் கொண்டிருக்கும் கலாச்சார வெளி. மார்க்சிய வெறுப்பு, இந்துத்துவ உலக நோக்கு என இதுவே அவரது சிந்தனையுலகம். இது தமிழ்ச்சூழலுக்கு நேர்ந்திருக்கும் அவமானம் என நான் கருதுகிறேன். இதனைச் சொல்ல ஜெயமோகனின் ‘மொத்த’ இலக்கியப் படைப்புகளையும் வாசிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.
இதனைச் சுட்டிக் காட்டுவதற்கு ஈழப் பிரச்சினை சார்ந்த விவாதங்கள் ஒரு தருணமாக வாய்த்திருக்கிறது.
வாசிப்பு ஞானம் பற்றிய சர்ச்சை என்பாதால் இதையும் சொல்ல வேண்டியிருக்கிறது. ஜெயமோகனின் வாசிப்பு இலட்சணம் இது : இஸ்லாமியர் குறித்த ஒற்றை அரசியலை எஸ்.வி.ஆர், அ.மார்க்ஸ், யமுனா ராஜேந்தின், அ.முத்துக் கிருஷ்ணன் போன்றோர் செய்கிறார்கள் எனக் கொஞ்சமும் கூச்சமில்லாது எழுதுகிறார் ஜெமோ. உயிர்மை வெளியீடான எனது ‘அரசியல் இஸ்லாம்’ நூலிலுள்ள முதல் அத்தியாயத்தைப் படித்திருந்தாலே போதும், அ.மார்க்சின் இஸ்லாம் பற்றிய பார்வைக்கும் எனது அணுகுமுறைக்கும் எந்தவிதத்திலும ஒற்றுமை இல்லை என்பதை ஜெமோ அறிந்திருப்பார். அரசியல் இஸ்லாம் என்பது விடுதலை இறையியல் அல்ல, அது ஒரு சீரழிவு இயக்கம் என்கிறேன் நான். அமா இப்படியா சொல்கிறார்?
பேசுகிற விஷயங்களைத் தெரிந்து கொண்டு, அது குறித்த வாசிப்புடன், அது குறித்த ஈடுபாட்டுடன், அக்கறையுடன் பேசுங்கள் என நான் கேட்கிறபோது, இவர்களது இலக்கியப் படைப்புக்களைப் படித்துவிட்டுப் பேசுங்கள் என என்னிடம் சொல்பவர்களைச் செவியுறக் கேட்கும் போது…
அவர்களது குரல்கள் எனக்கு ஆபாசமாக இருக்கிறது.
நன்றி : உயிரோசை