வன்னி முகாம்களில் அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டு உள்ளது அரசு மீள்குடியேற்றும் விடயங்களில் அக்கறையுடன் ஈடுபட்டு வருகின்றது என ரிஎன்ஏ குழுவில் சென்ற ரெலோ பாராளுமன்ற உறுப்பினர் சிறிகாந்தா டெய்லி மிரர் பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார். ஆனால் அங்கு முகாம்களில் இருந்து அழைத்துச் செல்லப்படுபவர்கள் பெரும்பாலும் மீண்டும் வருவதில்லை என மக்கள் தன்னிடம் முறையிட்டதாக பி அரியநேந்திரன் குளோபல் தமிழ் செய்திக்கு தெரிவித்து இருக்கின்றார். ஆனால் இது பற்றி என் சிறிகாந்த டெய்லி மிரருக்குத் தெரிவிக்கையில் புலிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் அவர்களது குடும்பங்களில் இருந்து பிரிக்கப்பட்டு தனியாக தடுத்து வைக்கப்பட்டு இருப்பதாக மக்கள் கூறியதாகக் கூறியுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வன்னி முகாம்களுக்குச் சென்று திரும்பிய சில மணிநேரங்களுக்குள் வெளிவந்த செய்திகள் ஒன்றுக்கொன்று முரண்பாடாக உள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் என் சிறிகாந்தா, பி அரியநேந்திரன், சிவநாதன் கிஸோர், விநோ நோதரலிங்கம், செல்வம் அடைக்கலநாதன், ஆர் எம் இமாம், தோமஸ் வில்லியம் தங்கத்துரை ஆகியோரே வன்னி முகாம்களுக்கு பயணித்திருந்தனர். இவர்கள் அரசினால் தெரிவு செய்யப்பட்டு அனுப்பியதாக குளொபல் தமிழ்செய்தி குறிப்பிட்டு இருந்தது. ஆனால் இது பற்றி பிபிசி தமிழோசையில் செவ்வி வழங்கிய செல்வம் அடைக்கலநாதன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இரு பிரிவுகளாக வன்னி முகாம்களுக்குச் செல்லவே திட்டமிட்டு இருந்ததாகவும் இரண்டாவது பிரிவு விரைவில் வன்னி செல்லும் என்றும் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் நாளை சுவிஸ்மாநாட்டுக்குச் செல்ல இருப்பதால் அவருடைய வயது காரணமாக அலைச்சலைத் தவிர்க்கும்படி உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.
வன்னி முகாம்களில் உள்ள மக்கள் தாங்கள் உடனடியாகவே தங்கள் வீடுகளுக்கு செல்லும் தங்கள் விருப்பத்தை வெளியிட்டதாக என் சிறிகாந்தா, செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் தெரிவித்தனர். மீள்குடியேற்றப்பட்ட மக்கள் தாங்கள் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பியதில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்ததாக செல்வம் அடைக்கலநாதன் பிபிசி தமிழோசைக்கு தெரிவித்துள்ளார்.
அங்குள்ள மக்கள் சூழ்நிலையைப் புரிந்துகொண்டுள்ளார்கள் என்று தெரிவித்துள்ள என் சிறிகாந்தா அரச அதிகாரிகள் இராணுவ அதிகாரிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஒரு பகுதி மக்கள் மீள்குடியேற்றப்பட்டதால் முகாம்களில் இருந்த சுகாதார மற்றும் குடிநிர்ப் பிரச்சினைகள் சற்றுக் குறைந்துள்ளதை ரிஎன்ஏ குழு சுட்டிக்காட்டி இருந்தது.
முகாம்களில் மக்களின் நிலைமை தன்னை நெகிழ்ச்சி கொள்ளச் செய்தது. – அடைக்கலநாதன் : அவர்கள் மிகவும் திருப்தியான முறையில் உள்ளனர் – கிஷோர்
வவுனியா முகாம்களில் வாழும் மக்களின் நிலைமை தன்னை நெகிழ்ச்சி கொள்ளச் செய்ததாக அவர்களைச் சென்று பார்வையிட்டுத் திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளதாக பீ.பீ.ஸி தமிழோசை தெரிவித்துள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 7 உறுப்பினர்க்ள் கொண்ட குழு ஒன்று இலங்கை அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று வவுனியாவில் உள்ள முகாம்கள் மற்றும் வன்னியில் மக்கள் சிலர் மீள்குடியேற்றப்பட்ட இடங்கள் ஆகியவற்றைச் சென்று பார்வையிட்டுத் திரும்பியது. அந்தக் குழுவில் இடம்பெற்ற செல்வம் அடைக்கலநாதன் அவர்கள், தமிழோசையிடம் பேசுகையில், அந்த மக்களை உடனடியாக மீள்குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு அரசாங்கத்துக்கு தாம் ஒரு அறிக்கை சமர்ப்பிக்கவிருப்பதாக தெரிவித்திருந்தார். தற்போதை மழை காரணமாக முகாம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், ஆயினும், தமது உடனடி மீள்குடியேற்றத்தையே அந்த மக்கள் அவசரமாகக் கோருவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த விஜயம் தொடர்பாக சிவநாதன் கிஷோர் எம். பியுடன் தினகரன் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் பின்வருமாறு கருத்து தெரிவித்ததாக பிரதான செய்தியில் குறிப்பிட்டிருந்தது. “நாங்கள் எதிர்பார்த்ததைவிட மிகவும் குறுகிய காலத்திற்குள் எமது மக்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் அரசாங்கம் செய்து கொடுத்து அவர்களை மீளக்குடியமர்த்தவும் செய்துள்ளது. நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களையும், மீளக் குடியமர்ந்துள்ள மக்களையும் நாங்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். அந்த மக்கள் மிகவும் திருப்தியான முறையில் உள்ளனர். அந்த மக்கள் மத்தியில் சந்தோஷத்தை காணக் கூடியதாக இருந்தது. மக்களின் சந்தோஷமே எமது திருப்தியாகும்.”
இதேவேளை மன்னார் கட்டுக்கரைக்குளம், மன்னார் பாலம் புனரமைப்பு வேலைத் திட்டம் நடைபெறும் இடங்களுக்கும் விஜயம் செய்ததாக வன்னி எம்.பி. சிவநாதன் கிஷோர் தெரிவித்திருந்தார்.
இரத்மலானை விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் வன்னி சென்றடைந்த எம். பிக்களை வரவேற்ற வன்னி தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன மீள்குடியேற்றம் தொடர்பாக அரசாங்கம் முன்னெடுத்து வரும் அபிவிருத்தி தொடர்பாக விரிவான விளக்கத்தை வழங்கியுள்ளார். இந்த நிகழ்வு வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இடம் பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து எம். பிக்கள் செட்டிக் குளம், ஆனந்த குமாரசுவாமி, அருணாச்சலம் ஆகிய நிவாரண கிராமங்களுக்கும் சென்று மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். அடம்பன், மல்லாவி, துணுக்காய், மாங்குளம் போன்ற பிரதேசங்களுக்கு விஜயம் செய்த இவர்கள் மீளக் குடியேறிய மக்களுடனான சந்திப்பிலும் கலந்து கொண்டனர். இவர்களுடன் மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண அமைச்சர் றிசாட் பதியுதீன், வன்னி பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன, வட மாகாண ஆளுநர் உட்பட பாதுகாப்பு தரப்பு உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். மன்னார் மாவட்டத்தில் உயிலங்குளம் கருங்கண்டல் ஆகிய இடங்களுக்கும் இவர்கள் விஜயம் செய்தனர். மன்னார் தள்ளாடி இராணுவ முகாமில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வன்னியில் இடம் பெறும் மீள்குடியேற்றம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்ட இயந்திரங்கள் மூலம் நிலக் கண்ணி வெடி அகற்றல் இடம்பெறும் இடங்களையும் பார்வையிட இவர்கள் அனுமதிக்கப்பட்டனர். 2010 ஆண்டு ஜனவரியுடன் நிவாரண கிராமங்களில் தங்கியுள்ளவர்களின் மீள்குடியேற்றம் நிறைவுக்கு வரும் என படை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.