நூலகம்

Wednesday, September 22, 2021

நூலகம்

நூல்கள் அறிமுகம், விமர்சனம் மற்றும் நூல் வெளியீட்டு விழாக்கள் பற்றிய பதிவுகளும் செய்திகளும்.

மஹியங்கனையில் சிங்கள ஆசிரியையினால் எழுதப்பட்ட தமிழ்நூல் வெளியீடு

மஹியங்கனை பண்டாரநாயக்க மத்திய மகா வித்தியாலயத்தில் தமிழ் மொழி கற்பிக்கும் ஆசிரியை விமலா கொடிஆரச்சி எழுதிய இரண்டு தமிழ்ப் புத்தகங்களின் (கைநூல்) வெளியீட்டு விழா அண்மையில் மஹியங்கனை தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. வெளியீட்டு விழா நிகழ்வில் நூலாசிரியர் விமலா கொடிஆரச்சி பேசுகையில்: ‘நான் சிங்கள மொழிமூலம் கற்றேனாயினும் தமிழ் மொழியின் மீதுள்ள பற்றுதல் மற்றும் ஆற்றல் காரணமாக இக்கைநூலை எழுதக் கிடைத்தது. இந்நூல் சிங்கள மொழி மூலக் கல்வி பயிலும் மாணவர்களின் தேவையில் ஒரு சிறு பங்களிப்பைச் செய்யும் என்று எதிர்பார்க்கிறேன்.’

‘6ம், 7ம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான தமிழ் மொழிக் கைநூல்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்புத்தகங்கள் நன்கு பிரயோசனப்படக் கூடியவையாகும். மஹியங்கனை ஜீ.எம். நூல் வெளியீட்டு நிறுவனத்தினால் இப்புத்தகங்கள் வெளியிட்டு வைக்கப்பட்டன

சர்வதேச டிஜிட்டல் நூலகம் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

images.jpgஉலகின் எந்த பகுதியில் உள்ளவர்களும் அரிய தகவல்களை தேடி பெற்றுக் கொள்ள வசதி செய்வதற்காக, பிரான்சின் பாரிஸ் நகரிலிருந்து செயல்படும் யுனெஸ்கோ அமைப்பு இந்த வசதியை ஏற்படுத்தியுள்ளது.  பழமையான புத்தகங்கள் வரைபடங்கள் சினிமா ஒலி வடிவங்கள் புகைப்படங்ள் உள்ளிட்ட தகவல்கள் இந்த டிஜிட்டல் நூலகத்தின் மூலம் பொதுமக்கள் பார்வையிடுவதுடன் அவற்றினை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விலை மதிப்பற்ற பழங்கால சீன பெர்ஷிய புத்தகங்கள் மற்றும் மேற்கத்திய நாடுகளின் அரிய புகைப்படங்களை இங்கு காண முடியும் என இணையத்தள வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கூகுள் புக் சேர்ச் மற்றும் ஈரோப்பியானியா போன்றவற்றுக்கு அடுத்தபடியாக உருவாக்கப்பட்டுள்ள மூன்றாவது பிரதான டிஜிட்டல் நூலகத்தின் முகவரி www.wdl.org   என்பதாகும். உலகின் பல்வேறு நூலகங்களில் இருந்து இதற்கு தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளன.

மேற்கத்திய நாடுகளின் தகவல் மட்டுமல்லாமல் பிற நாடுகளிலிருந்தும் ஆவணங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.

அராபிக் சீனா ஆங்கிலம் பிரெஞ்சு போர்ச்சுக்கீஸ் ரஷ்யன் ஸ்பெனிஷ் ஆகிய ஏழு மொழிகளில் இந்த இணையத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிற மொழிகளில் எழுதப்பட்ட புத்தகங்களையும் இந்த தளத்தில் வாசிக்க முடியும்.   பிரேசில் பிரிட்டன் சீனா எகிப்து பிரான்ஸ் ஜப்பான் ரஷ்யா சவுதி அரேபியா அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள நூலகங்கள் மற்றும் பண்பாட்டு நிறுவனங்களில் இருந்தும் தகவல்கள் திரட்டப்பட்டு இதில் தொகுக்கப்பட்டுள்ளன.

இந்த இணையத்தளமானது உலகின் மிகப்பெரிய நூலகமான அமெரிக்காவின் காங்கிரஸ் நூலகத்தில் பணியாற்றும் ஜேம்ஸ் பில்லிங்டனின் யோசனையில் உருவாக்கப்பட்டது. எதிர்வரும் 2010ம் ஆண்டுக்குள் ஒரு கோடி புத்தகங்களை இந்த இணையத்தளத்துடன் இணைக்கவுள்ளனர். இதற்கு ஒத்துழைக்கும் படி 60க்கும் மேற்பட்ட நாடுகளிடம் யுனெஸ்கோ வேண்டியுள்ளது.

ஜெயகாந்தனுக்கு -பத்மபூஷன் விருது

jayakandhan.jpg
இந்தியாவில் 2009ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அணுசக்தி கமிஷன் தலைவர் அனில் ககோத்கருக்கு பத்ம விபூஷன் விருதும், ஜெயகாந்தன் உள்ளிட்டோருக்கு பத்மபூஷனும், நடிகர் விவேக் உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன.

பத்மவிபூஷன் விருது பெற்றோர் ..

டாக்டர் அனில் ககோத்கர், டாக்டர் சந்திரிகா பிரசாத் ஸ்ரீவத்சவா, பேராசிரியர் டி.பி.சட்டோபாத்யாயா, கோவிந்த் நாராயண், பேராசிரியர் ஜஸ்பீர் சிங் பஜாஜ், டாக்டர் புருஷோத்தம் லால், சுந்தர்லால் பகுகுணா, மாதவன் நாயர், சகோதரி நிர்மலா, டாக்டர் ஏ.எஸ். கங்குலி.

பத்மபூஷன் விருது பெற்றோர் ..
வி.பி.தனஞ்செயன், வைத்தியநாதன் கணபதி ஸ்தபதி, ஜெயகாந்தன், காஞ்சீபுரம் ஸ்ரீரங்காச்சாரி சேஷாத்ரி, சரோஜினி வரதப்பன், அபினவ் பிந்த்ரா உள்ளிட்ட 30 பேர்.

பத்மஸ்ரீ விருது பெற்றோர் ..

நடிகர்கள் விவேக், திலகன், அக்ஷய் குமார், நடிகை ஐஸ்வர்யா ராய், பாடகி அருணா சாய்ராம், ஹர்பஜன் சிங், மகேந்திர சிங் டோணி, பங்கஜ் அத்வானி, ஆறுமுகம் சக்திவேல் உள்ளிட்ட 93 பேர்

இலங்கையின் இனமோதல்கள் குறித்து பாரிஸ்,லண்டனில் நூல்கள் வெளியீடு

இலங்கையில் நடைபெற்று வரும் “இனமோதுகையின் அனைத்துலக பரிமாணம் என்ன, என்பதனை முழுமையாக ஆய்வு செய்யும் தமிழ் ஆவணமும், 2002 2006 காலப்பகுதியில் நடைபெற்ற சர்வதேச சமாதான முயற்சிகள் மற்றும் விடுதலைப் புலிகளின் அணுகுமுறைகள், அரசியல் வியூகங்கள் என்பனவற்றை ஆய்வு செய்யும் நூலும் பிரித்தானியா மற்றும் பிரான்ஸில் வெளியிடப்படவுள்ளன. இலங்கை இன மோதுகையானது தமிழ் சிங்கள தேசங்களுக்கு இடையேயான போர் மட்டுமல்ல, அனைத்துலக ஈடுபாடும், நோக்கங்களும் கொண்டதொரு அனைத்துலக விவகாரம் என கற்கையாளர்களும் சிந்தனையாளர்களும் விபரித்திருக்கின்றனர். இந்தப் பின்னணியில் இந்த மோதுகையின் அனைத்துலக பரிமாணம் என்ன என்பதை முழுமையாக ஆய்வு செய்யும் தமிழ் ஆவணமான “இலங்கை இனமோதுகையின் சர்வதேச பரிமாணம்’ எனும் நூல் வெளியிடப்படுகின்றது.

“குல்ரங்’ மூத்த பேராசிரியர் சத்தியேந்திரா, கலாநிதி சதானந்தன் உட்பட பல அனைத்துலக அறிஞர்கள் எழுதிய கட்டுரைத் தொகுப்பாக இது வெளியாகின்றது. இதேவேளை, 2002 2006 ஆம் ஆண்டு காலப்பகுதி வரை நடைபெற்ற சர்வதேச சமாதான முயற்சிகள் மற்றும் விடுதலைப் புலிகளின் அணுகுமுறைகள், அரசியல் வியூகங்கள் என்பனவற்றை ஆய்வு செய்யும் நூலாக “”மாற்றுநிலைப்படுத்தலின் அரசியல்’ எனும் நூல் வெளியிடப்படுகின்றது. சுதாகரன் நடராஜா, லக்சி விமலராஜா ஆகியோரின் ஆய்வுகளின் தமிழ் தொகுப்பாக இது வெளியாகின்றது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் எதிர்வரும் சனிக்கிழமை 31.01.09.மாலை 4 மணிக்கு இரு நூல்களும் வெளியிடப்படவுள்ளன. பிரித்தானியாவில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (01.02.2009) மாலை 5.30 மணிக்கு லண்டனில் இரு நூல்களும் வெளியிடப்படவுள்ளன. இரு நிகழ்வுகளிலும் நடேசன் சத்தியேந்திரா (தமிழ் புத்திஜீவி, தமிழ்நேசன் இணையத்தள முதன்மை ஆசிரியர்), அ.இ.தாசீசியஸ் (மூத்த புலத்தமிழ் ஊடகவியாளர் லண்டன்), ம.தனபாலசிங்கம் (தமிழ் சிந்தனையாளர், ஆய்வாளர் அவுஸ்திரேலியா,சிட்னி), கி.பி.அரவிந்தன் (பல்துறை செயற்பாட்டாளர், எழுத்தாளர் பாரிஸ்) ந.ஓ.பற்றிமாகரன் (ஆசிரியர், பத்திரிகையாளர், ஆய்வாளர் லண்டன்) ஆகியோர் சிறப்புரையாற்றவுள்ளனர

சாதனை:ஒபாமாவின் தேர்தல் பிரச்சார புத்தகம்

obama-2001.jpg
அமெரிக்காவின் புதிய அதிபராக பதவி ஏற்ற பராக் ஒபாமா ஜனநாயக கட்சி வேட்பாளர் தேர்வின்போது பேசிய ஆங்கில பேச்சுக்கள் புத்தகமாக தொகுக்கப்பட்டு ஜப்பானில் விற்கப்படுகிறது. புத்தக கடைகளில் இந்த புத்தகம்தான் அதிகமாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 95 பக்கங்கள் கொண்ட அதன் விலை 550 ரூபாய். கடந்த 2 மாதத்தில் மட்டும் 4 லட்சம் பிரதிகள் விற்பனையாகி உள்ளன. இந்த புத்தகத்துக்கு ஜப்பானிய மொழி பெயர்ப்பும் விற்பனைக்கு இருக்கிறது.

ஜப்பானில் பிரபலமான எழுத்தாளர்கள் எழுதிய நாவல்கள்கூட ஆண்டுக்கு 10 லட்சம் பிரதிகள்தான் விற்பனை ஆகும். ஆனால், அவற்றை மிஞ்சும் வகையில் ஒபாமா புத்தக விற்பனை சக்கை போடு போடுகிறது. இதற்கு முன் அதிபராக இருந்த புஷ் பேச்சு அடங்கிய புத்தகம்கூட இந்த அளவு விற்பனை ஆகவில்லை. ஜப்பான் அரசியல்வாதிகள்கூட ஒபாமா புத்தகத்தை வாங்கி படிக்கிறார்கள்.

கோல்டன் குளோப் விருதை வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான்

ar-rahman.jpgஹாலிவுட்டின் புகழ்பெற்ற கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். 66வது கோல்டன் குளோப் விருதுக்காக இங்கிலாந்து டைரக்டர் டேனி பாயல் இயக்கிய ஸ்லம்டாக் மில்லியனர் (‘Slumdog Millionaire’) படம் 4 விருதுகளுக்கு சிபாரிசு செய்யப்பட்டது. இந்த படத்துக்கு இசையமைத்த ரஹ்மானின் பெயரும் ஒரிஜினல் இசைக்காக விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்டது.

மேலும் சிறந்த படம், சிறந்த திரைக்கதை (சிமோன் பியூபோ) ஆகிய பிரிவுகளி்ன் கீழும் இந்தப் படம் கோல்டன் குளோப் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டது. இந் நிலையில் இந்தப் படம் இசைக்கான விருதை வென்றுள்ளது. படத்துக்கு இசைமைத்த ரஹ்மான் கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளார்.

இதன் மூலம் இந்த விருதை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை ரஹ்மான் பெற்றுள்ளார். இந்தப் படம் மும்பையைச் சேர்ந்த வீதிச் சிறுவன் ஒருவனின் கதையை விவரிக்கிறது. ஒரு ஏழைச் சிறுவன் கோன்பனேகா குரோர்பதி மாதிரி ஒரு ஷோவில் பங்கேற்று மாபெரும் பணக்காரனாகும் கதை இது.