மலையகம்

மலையகம்

பெருந்தோட்டத்துறையில் புதிய தலைமைத்துவம் உருவாக இத்தேர்தலை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்தவேண்டும் – திஸ்ஸ அத்தநாயக்க

tissa.jpgமலையக பெருந்தோட்டத்துறையில் புதிய தலைமைத்துவம் உருவாக இத் தேர்தலை ஒரு தேசிய சந்தர்ப்பமாக பயன்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்க நுவரெலியா புதிய நகரமண்டபத்தில்  நடைபெற்ற மத்திய மாகாண சபையின் நுவரெலியா மாவட்ட தேர்தல் செயல் திட்டம் சம்பந்தமாக விளக்கமளிக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பொழுது வேண்டுகோள் விடுத்தார்.  இக்கூட்டத்தில் திஸ்ஸ அத்தநாயக்க தொடர்ந்தும் உரையாற்றுகையில்; மலையக பெருந்தோட்ட தலைவர்களான ஆறுமுகம் தொண்டமான், சந்திரசேகரன் போன்றவர்கள் ஐக்கிய மக்கள் முன்னணியின் வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்டாலும் தொழிலாளர்கள் எமது யானை சின்னத்திற்கே வாக்களித்து பழக்கப்பட்டவர்கள்.

நடைபெறவிருக்கும் மாகாணசபை தேர்தலை சாதாரண மாகாணசபை தேர்தலாக நினைக்காமல் பொதுத் தேர்தலாக நினைத்து அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டு  செய்யவேண்டும். சிரச நிலையத்தை தாக்கியதோடு சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவையும் படுகொலை செய்ததற்கு அரசாங்கம் பதில் கூறவேண்டும்.இந்நாட்டில் தற்பொழுது ஜனநாயகம் நீங்கி சர்வாதிகாரம் தலைதூக்கி வருகின்றது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய தேசியகட்சி வெற்றிபெற வேண்டும். அரசாங்கத்தின் அராஜகத்திற்கு எதிராக நாம் நடத்திய கண்டன எதிர்ப்பு கூட்டங்களில் விக்கிரமபாகு உட்பட என்றும் எம்முடன் சேர்ந்துகொள்ளாத பல கட்சி தலைவர்கள் இப்போது இணைந்துள்ளனர். எனவே இந்நாட்டில் மீண்டும் ஜனநாயக ஆட்சி வருவதற்கு ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சிக்கு வரவேண்டும். எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் பொதுதேர்தல் ஒன்று வரலாம். அத்தேர்தலிலும் ஐ.தே.க. வெற்றிபெற வேண்டும் என திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில்தான் மலையகத்தில் நிறைவான அபிவிருத்திப் பணிகள் – அமைச்சர் ஆறுமுகன்

aarumugam.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் ஆட்சிக் காலத்தில் மலையகத்தில் நிறைவான அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், இளைஞர் வலுவூட்டல், சமூக பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார். மலையகத் தோட்டப் புறங்கள் மாத்திரமன்றி, நகரங்களும் பாரிய அபிவிருத்தியடைந்து வருவதாக அமைச்சர் தொண்டமான் தெரிவித்தார்.

மஹிந்த சிந்தனை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மலையகத்தில் மேற் கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக, கொழும்பிலிருந்து சென்ற செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், ‘மக நெகும’ திட்டத்தின் கீழ் மலையகத் தோட்டப்புறப் பாதைகள் பல செப்பனிடப்பட்டுள்ளன. குறிப்பாக கரடுமுரடாகக் காட்சியளித்த பாதைகள் கொங்கிட் போட்டு புனரமைக்கப்பட்டுள்ளன. இதனால், நீண்ட காலத்திற்கு இந்தப்பாதைகள் சேதமடையாமல் பாதுகாக்கப்படும். அதே போன்று மின்சார வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டார்.

இளைஞர் வலுவூட்டல் அமைச்சின் மூலம் மலையகத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மலையக இளைஞர் யுவதிகளுக்கு சுயதொழில் பயிற்சிகள் வழங்கப்பட்டு அவர்களுக்குக் கடன் பெற்றுக் கொடுக்கப்படுகிறது. இவ்வருடம் இளைஞர், வலுவூட்டல் அமைச்சுக்கென 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.  இதனைக் கொண்டு மேலும் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள திட்டங்களை வகுத்துள்ளோம்’ என்றும் அமைச்சர் தொண்டமான் மேலும் தெரிவித்தார்.

கட்சிகளுக்கு முன்னுரிமை வேண்டாம் சமூக மேம்பாட்டை கவனத்தில் எடுங்கள்

Estate Workersமலை யக மக்கள் அரசியல் கட்சிகளுக்கு முன்னுரிமை அளிக்காது சமூக மேம்பாட்டைக் கருத்திற்கொண்டு எதிர்வரும் மத்தியமாகாண சபைத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

மத்திய மாகாணசபைத் தேர்தலில் ஐ.ம.சு.மு.சார்பில் மாத்தளை மாவட்டத்தில் போட்டியிடும் இ.தொ.கா. வேட்பாளரான எஸ்.சிவஞானத்துக்கு ஆதரவு திரட்டும் பொருட்டு நேற்று சனிக்கிழமை மாத்தளை மாநகர மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;  சிறுபான்மை சமூகத்தினரான எமக்கு இந்நாட்டில் தனித்து ஆட்சி செய்யமுடியாது. ஆகையால், அவ்வப்போது பதவிக்கு வரும் அரசுகளுடன் இணைந்து செயல்பட்டே எமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டியுள்ளது.

அமரர் தொண்டமான் இதனடிப்படையிலேயே செயற்பட்டு மலையகத்திற்கு பல்வேறான அபிவிருத்தி வேலைகளை முன்னெடுத்துள்ளார். அதனடிப்படையிலேயே நாமும் செயற்பட்டு வருகின்றோம். நாம் எமது அரசியல் பலத்தின் மூலம் மாத்திரமே அரசுக்கு அழுத்தம் கொடுத்து எமது தேவைகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் கிடைத்த அரசியல் பலத்தைக் கொண்டே தற்போது பல்வேறு அபிவிருத்தி வேலைகளை முன்னெடுத்துவருகிறோம்.

இதேபோல ஏனைய மாவட்டங்களிலும் அரசியல் பலத்தைப் பெறவேண்டும். பலமான அரசியல் சக்தியொன்றை உருவாக்குவோமானால் சிறுபான்மையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இலகுவாக தீர்த்துக் கொள்ளமுடியும். ஒரு சில தோட்டங்கள் அரசியல் வாதிகளுக்கும் அவர்களது நண்பர்களுக்கும் கையளிப்பதற்கு திட்டமிட்டு காடாக்கப்பட்டு வருகிறது. மாதாந்தம் 25 நாட்கள் வேலை வழங்கவேண்டும். அல்லது அதற்கான வேதனம் வழங்கவேண்டும் என்று சட்டம் இருந்தும் அது அமுல்படுத்தப்படவில்லை.

எனவே தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளிலிருந்து விடுபடவேண்டுமானால் மேலும் அரசியல் பலம் பெறவேண்டும். ஆகவே எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் மத்தியமாகாணத்தில் போட்டியிடும் இ.தொ.கா. வேட்பாளரை வெற்றி பெறச் செய்து எமக்கு அரசியல் பலத்தை வழங்குவதற்கு மலையக மக்கள் முன்வரவேண்டும்.
 

வன்முறை அரசியல் கலாசாரத்தை மலையகத்திலிருந்து அகற்றுவோம் – மனோகணேசன் எம்.பி.

Estate Workersவேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் இறுதி நாளன்று மலையகத்தில் வன்முறை கலாசாரம் தலைவிரித்தாயிருக்கிறது. இரண்டு பெரும் மலையக அமைச்சர்களின் கட்சியினர் தலவாக்கலையில் மோதிக்கொண்டுள்ளார்கள். மக்கள் பிரதிநிதிகளே முன்னின்று வன்முறை நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கியுள்ளார்கள். மணித்தியாலக்கணக்கில் போக்குவரத்தை ஸ்தம்பிதம் அடையச்செய்து, கல்வீச்சுக்களை நடத்தி, வர்த்தக நிலையங்களை மூடச்செய்து வாக்களித்த நமது மக்களையே பீதிக்குள்ளாக்கிய தலைவர்களை பார்த்து முழு நாடுமே கைகொட்டி சிரிக்கின்றது. இத்தகைய அரசியல்வாதிகளுடனேயா நாமும் அரசியல் செய்கின்றோம் என நாங்களும் வெட்கித் தலைகுனிகின்றோம். பெப்ரவரி 14 ஆம் திகதி நடைபெறவிருக்கும் தேர்தலில் இந்த வன்முறை பாண்பாட்டாளர்களுக்கு மலையக மக்கள் தகுந்த பாடம் புகட்டவேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோகணேசன் எம்.பி. கோரியுள்ளார்.

தலவாக்கலை வன்முறை சம்பவங்கள் தொடர்பில் மனோ எம்.பி. விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இத்தகைய வன்முறை சம்பவங்களை எதிர்நோக்கிய படியால் தான் எமது கட்சியினருக்கு வாகன பேரணிகளையும் அரசியல் பிரசாரத்தையும் வேட்புமனு இறுதி தினத்தன்று நடத்தவேண்டாம் என நாங்கள் அறிவுறுத்தல் வழங்கியிருந்தோம். நாம் எதிர்பார்த்தபடியே சட்டவிரோத ஆயுதங்களும் மதுவும் துணைவர வன்முறை நாடகம் அரங்கேறி இருக்கின்றது. 150 ஆண்டுகளாக உழைத்து, உழைத்து உருக்குலைந்து போயிருக்கும் அப்பாவி மலையகத் தோட்டத்தொழிலாளர்களின் வாழ்க்கையை உயர்த்தி நிறுத்திட வக்கற்றவர்கள் வன்முறையை தூண்டுகின்றார்கள். வாக்களித்து உங்களை பதவிகளில் அமர்த்திய எங்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரவம் செய்யாமலாவது இருந்தால் போதும் என மலையக வாக்காளர்கள் கையெடுத்து கும்பிடும் நிலைமை உருவாகியுள்ளது.

மத்திய மாகாணசபை கலைக்கப்பட்ட மறுதினம் காலை முதல் நுவரெலியா மாவட்டம் முழுக்க எமது கட்சியினரின் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. எமது சுவரொட்டிகளை தேடித்தேடி அவற்றின் மீது தமது சுவரொட்டிகளை மலையக மக்கள் முன்னணியினர் ஒட்டினார்கள். அதேபோல், ஹட்டன் வெலியோய தோட்டத்தில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த எமது ஆதரவாளர்கள் மீது இ.தொ.கா.வைச்சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்த முயற்சி செய்தார்கள். எனது கவனத்திற்கு இச்சம்பவங்கள் கொண்டுவரப்பட்டன. மலையக மக்களின் நன்மை கருதி பொறுமையுடனும் ஜனநாயக உணர்வுடனும் நடந்துகொள்ளும்படி எனது கட்சியினருக்கும் வேட்பாளர்களுக்கும் நான் கூறியிருக்கின்றேன். இன்று ஒரே அரசாங்கத்தில் இருந்துகொண்டு ஒரே அரசாங்க கூட்டணியில் போட்டியிடுகின்றவர்கள் தங்களுக்குள்ளே மோதிக்கொள்கின்றார்கள். இது தொடர்பிலே அரசாங்க தலைமையிடம் முறையீடு செய்யப்போவதாக ஒரு தரப்பினர் கூறுகின்றார்கள். எங்கே முறையிட்டு என்ன பயன்?

மலையக கட்சிகள், வட,கிழக்கு தமிழ்க் கட்சிகள், முஸ்லிம் கட்சிகள் தங்களுக்குள்ளே முட்டிமோதி நாசமாக வேண்டும் என்பதுதானே அரசாங்கத்தின் திட்டம். மலையக மக்கள் அப்பாவிகள்தான் பொறுமைசாலிகள்தான், ஆனால் முட்டாள்கள் அல்ல என்பது தேர்தல் முடிவுகளின் மூலம் நிரூபணமாகும்.