மலையகம்

மலையகம்

ஆசிரிய நியமனத்தில் முறைகேடு: 4 கல்விப் பணிப்பாளர்கள் சப்ரகமுவயில் பணி நீக்கம்

மலையக ஆசிரிய நியமனத்தின் போது சப்ரகமுவ மாகாணத்தில் முறைகேடுகளில் சம்பந்தப்பட்ட தாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு கல்விப் பணிப்பாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சப்ரகமுவ மாகாணத்தின் மேலதிகக் கல்விப் பணிப்பாளர் ஒரு மாதத்திற்கு முன்பு பணிநீக்கம் செய்யப்பட்டதுடன் ஒரு பிரதிப் பணிப்பாளரும், இரண்டு வலய உதவிப் பணிப்பாளர்களும் சில தினங்களுக்கு முன்னர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாகாண கல்வித் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.

நல்லமலை ஸ்பிரிங்வெலி தோட்டத்தில் பாரிய மண்சரிவு; 150 பேர் இடம்பெயர்வு

பதுளை நமுனுகுல பிரதேசத்திலுள்ள நல்ல மலை கிராம சேவகர் பிரிவிலிருக்கும் ஸ்பிரிங்வெலி தோட்டத்தில் நேற்று முன்தினம் மாலை பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இம்மண்சரிவு காரணமாக 35 தோட்டக் குடியிருப்புக்களில் வசித்து வந்த 150 பேர் இடம்பெயர்ந்து நல்லமலை வித்தியாலயத்தில் தங்கி இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பதுளை மாவட்ட இணைப்பாளர் நிமல் பியசிறி பண்டார நேற்றுத் தெரிவித்தார். கடந்த சில தினங்களாக இப்பகுதியில் பெய்துவரும் மழை காரணமாகவே இம்மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. என்றாலும் இரண்டு தோட்டக் குடி யிருப்புக்கள் முழுமையாக சேதமடைந்தி ருப்பதாகவும், ஏனையவற்றில் வெடிப்புக்கள் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இம்மண்சரிவு காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உடனடி நிவாரணத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார். சுமார் நான்கு ஏக்கர் பரப்பளவில் ஏற்பட்டுள்ள இம்மண்சரிவு சுமார் அரை கிலோமீட்டர் தூரம் வரை இடம்பெற் றுள்ளது என்றும் அவர் கூறினார்.

ஜனாதிபதிக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்க இ.தொ.கா. முடிவு

mu-siva.jpgஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்க இ.தொ.கா. முடிவு செய்துள்ளதென அதன் தலைவர் பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம் நேற்றுத் தெரிவித்தார். இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்தே இ. தொ. கா. தலைவரும் பிரதி அமைச்சருமான முத்து சிவலிங்கம் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் இ. தொ. கா.வின் நிலைப்பாட்டை தெரிவிப்பதற்காகவே இவ் ஊடகவியலாளர் மாநாடு இடம்பெற்றது.  அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு பல அபிவிருத்தித் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் இ. தொ. காங்கிரஸின் நிலைப்பாட்டை பற்றி பல விதமான ஊகங்களை பலர் தெரிவித்து வந்தனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியிலேயே பெருந்தோட்டப் பகுதி வைத்தியசாலைகள் அரச வைத்திய சாலைகளாக மாற்றம்பெற்றன.

3179 பேருக்கு ஆசிரியர் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. 500 பேருக்கு தொடர்பாடல் உத்தியோகமும் 300 பேருக்கு தபால் துறையில் வேலை வாய்ப்பும் பெருந்தோட்ட இளைஞர், யுவதிகளுக்கு இந்த அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது. மற்றும் கல்வித் துறையிலும் பாரிய வெற்றியை பெற உதவியுள்ளது. அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் வழிகாட்டலின் கீழ் பத்து வருட வேலைத்திட்டம் ஒன்றை பெருந்தோட்டப் பகுதியில் அமுல்படுத்த உள்ளோம். இதற்கு வெளிநாட்டு நிதி உதவி பயன்படுத்தப்படும். இதற்கான தனது முழு ஆதரவையும் ஜனாதிபதி வழங்கி, அனுமதி வழங்கி உள்ளார்.

200 வருட பின்புல சரித்திரத்தைக் கொண்ட பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றம் நிகழ வேண்டும் என்பதில் இ. தொ கா. பெரும் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. இன்று இந்த அரசாங்கத்தில் இணைந்தமையின் பயனாகவே லயன்முறை அழிக்கப்பட்டு தனி வீடுகள் பெருந்தோட்டத்தில் நிருமாணிக்கப்பட்டு வருகின்றன.

பாதைகள் திருத்தப்பட்டு காபட் போடப்பட்டு வருகிறது. வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் பல திட்டங்களை எதிர்காலத்தில் ஜனாதிபதி மலையக பகுதியில் செயல்படுத்த உள்ளார். எமது மக்களின் தொழில் வாய்ப்பு, கல்வி, சுகாதாரம், வீடமைப்பு திட்டம் என அவர்களின் எதிர்காலத்தை முன்னேற்றம் பெற வைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மலையகத்தில் பெரும் வாக்குகளால் வெற்றிபெற அனைவரும் கடுமையாக உழைப்போம் என்றார்.

ஜனாதிபதியின் வெற்றிக்காக இ.தொ.கா பரவலான ஏற்பாடு மலையகமெங்கும் அமைப்புகளுக்கு அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களிப்பதுடன் அவரது வெற்றிக்கு உறுதுணையாகப் பாடுபட வேண்டுமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மலையகமெங்கும் பரவலாக அறிவித்து வருகிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கடந்த நான்காண்டு பதவிக் காலத்தில் மலையகத்திற்குப் பெரும் சேவையாற்றி யுள்ளாரென்றும், எதிர்வரும் காலங்களிலும் பல்வேறு அபிவிருத்திப் பணிகளைச் செய்ய உறுதி பூண்டுள்ளா ரென்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, தொழிலாளர்கள், ஆசிரிய சமூகம் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஜனாதிபதியையே ஆதரித்து வாக்களிக்க வேண்டுமென அறிவித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் கல்வி பிரதியமைச்சருமான மு. சச்சிதானந்தன் தெரிவித்தார்.

இதற்கமைய மாகாணம் மாகாணமாகத் தமிழ் மக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருவதாக அவர் கூறினார். மலையகத்தில் கல்விக் குறைபாடுகளை நிவர்த்திக்கவும், பொறுப்பாசிரியர்களாக உள்ளவர்களை நிரந்தர அதிபர்களாக நியமிக்கவும் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகக் கூறிய பிரதியமைச்சர் சச்சிதானந்தன், கடந்த நான்காண்டுகளில் ஆசிரிய நியமனம், சிற்றூழியர் நியமனம் என்பன வழங்கப்பட்டுள்ளதோடு, வைத்தியசாலை அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மின்சார விநியோகம் என்பன மேற்கொள்ளப்பட்டிருப்பதோடு, மலையகப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

சமூக, பொருளாதார, கல்வி பாதுகாப்பு போன்றவை உள்வாங்கப்பட்டு மலையகத்தை மேம்படுத்த ஜனாதிபதி உறுதிபூண்டுள்ளாரென்றும் அவர் கூறினார். இதேவேளை, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த், அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் இரு தினங்களுக்கு முன் கொட்டகலை சென்று முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதன் போது மலையகத்திற்குக் கூடுதல் அபிவிருத்திகளை மேற்கொள்வதாக பெசில் ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். இ. தொ. கா. பிரதியமைச்சர்களின் பிரேரணைகளுக்கு முன்னுரிமை அளித்துச் செயற்படு வதாகவும் அவர் கூறியதாக பிரதியமைச்சர் சச்சிதானந்தன் தெரிவித்தார்.

மலையக வீடமைப்புத் திட்டத்திற்கு தமிழக அரசு ரூ. 7½ கோடி வழங்க முடிவு

மலையக வீடமைப்புத் திட்டத்திற்கென தமிழ்நாடு மாநில அரசு எழரைக் கோடி ரூபாவை (இலங்கை நாணயம்) வழங்க முடிவு செய்துள்ளது.

இந்த நிதி மூலம் மலையகத்தில் 500 வீடுகளை கட்டுவதற்குத் தீர்மா னிக்கப்பட்டுள்ளதாக இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூக பொரு ளாதார அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக விடுக்கப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி அமைச்சு பெருந்தோட்டத் தொழி லாளர்களுக்கென வீடமைப்புத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த முன் வந்துள்ளது. அமைச்சர் ஆறு முகன் தொண்ட மான் தமிழக அரசின் உதவியோடு இத்திட்டத்தை மலை யகத்திற்கு அறிமுகப்படுத்துகின்றார்.

இந்த உத்தேச 500 வீடுகளில் தோட்டப்புறங்களை ஒட்டிய கிராமப் புறங்களுக்கும் 50 வீடுகள் கட்டப்படவுள்ளன.

இதன் மூலம் மலையகத்தில் உள்ள தோட்டப்புற மக்களுக்கும் தோட்டங்களை அண்டியுள்ள கிராமப் புற மக்களுக்கும் இடையே புரிந்துணர்வையும் செளஜன்ய உறவையும் நிலைநாட்ட வழி வகை செய்ய ப்பட்டுள்ளது.

தமிழக எம். பிக்களின் வருகை மலையக அபிவிருத்தியின் ஆரம்பம் – முத்து சிவலிங்கம்

151009sivalingam.jpgதமிழக எம். பிக்களின் வருகை, மலையக அபிவிருத்தியின் நல்லதொரு ஆரம்பமாகுமென்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

மலையகத்தில் வாழ்கின்ற மக் களின் உண்மையான வாழ்வாதாரத் தைத் தமிழக பாராளுமன்ற உறுப் பினர்கள் நேரில் பார்த்துத் தெரிந்து கொண்டுள்ளதால், அந்த மக்களின் மேம்பாட்டுக்கும், பிரதேச அபிவிரு த்திக்கும் தமிழக மாநில மற்றும் இந்திய மத்திய அரசுகளின் உதவி இனிக் கூடுதலாகக் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளதாகவும், இதனை ஓர் ஆரம்பமாகக் கொண்டு எதிர்கால அபிவிருத்தி செயற்பாடுகளைத் திட்டமிட முடியுமென்றும் பிரதியமைச்சர் சிவலிங்கம் கூறினார்.

மலையகத்தில் எதிர்காலத்தில் தோட்டத் தொழிற்றுறை அருகி விடு மென்றும், அதனால் மாற்று ஜீவனோபாயத்தினை மக்களுக்குத் தேடிக் கொடுக்க வேண்டுமென்றும் தமிழக பாராளுமன்ற குழுவிடம் கூறியதாக பிரதியமைச்சர் கூறினார்.

பழைமையான “லயன்” வரிசைக் குடியிருப்பு முறையை இல்லாதொழித்து கிராம வாழ்க்கையை ஏற்படுத்துவது தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.

மலையக அபிவிருத்தி தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தயாரித்துள்ள பத்து அம்ச திட்டத்தினை இந்திய அரசுக்கும் சமர்ப்பித் துள்ளதாக பிரதியமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தமிழகக் குழுவினர் இன்று மலையகத்துக்கு விஜயம்!

12kanimoly.jpgதமிழ கத்தின் முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் இலங்கை வந்துள்ள 10 பேர் அடங்கிய குழுவினர் இன்று மலையகப் பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் அழைப்பின் பேரில் மலையகத்திற்கு வருகை தந்த இக்குழுவில் டி.ஆர்.பாலு, கலைஞரின் மகள் கனிமொழி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உட்பட பலரும் அடங்குகின்றனர்.
 
ஹெலிகொப்டர் மூலம் நோர்வூட் மைதானத்திற்கு வந்த இக்குழுவினர் அங்கிருந்து ஹட்டனை நோக்கி வாகனத்தில் பயணித்தனர். ஹட்டன் நகரை இன்று காலை 10.45 மணியளவில் வந்தடைந்த இக்குழுவினருக்கு ஹட்டன் நகர் வர்த்தகர்கள், பொதுமக்கள் திரண்டு வந்து வரவேற்பளித்தனர்.

கனிமொழியைச் சுழ்ந்து கொண்டு மக்கள் அவரை மலர்மாலைகள் அணிவித்து வரவேற்றனர்.கலைஞர் வாழ்க, தமிழ்நாடு வாழ்க என உற்சாக கோஷங்கள் எழுப்பினர். மலையக மக்களின் வரவேற்பில் திக்குமுக்காடிப்போன கனிமொழி உள்ளிட்ட குழுவினரைப் பாதுகாப்பு பிரிவினர் மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் மறுபடி வாகனங்களில் ஏற்றி அங்கிருந்து அழைத்து செல்ல முயன்றனர்.

இந்நிலையில் வாகனத்தைச் சுழ்ந்து கொண்ட மக்கள் கனிமொழி மற்றும் திருமாவளவனின் பெயர்களை உரக்க உச்சரித்து வாழ்த்துத் தெரிவித்தனர். சுமார் ஒரு மணிநேரம் இம்மக்களின் அன்புப் பிடியில் சிக்கிக் கொண்ட குழுவினர் கொட்டகலைக்குச் சென்றனர். இவர்களுக்கு அங்கும் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

மலையக தோட்டங்களிலிருந்து வீட்டு வேலைக்கு சென்றோரின் விபரம் திரட்டும் பணி ஆரம்பம்

091009puttirasigamani.jpgமலையகப் பெருந்தோட்டங்களிலிருந்து வெளி இடங்களுக்கு வீட்டு வேலைக்காரர்களாகச் சென்றுள்ளவர்கள் தொடர்பான விபரங்களைத் திரட்டும் பணிகளை இவ்வாரம் ஆரம்பித்துள்ளதாக நீதி, சட்ட மறுசீரமைப்பு பிரதி அமைச்சர் வீ.  புத்திரசிகாமணி தெரிவித்தார்.

தகவல்களைத் திரட்டுவதற்காகக் குழுக்களை நியமித்துள்ளதுடன், அதற்கெனத் தனியான ஒரு படிவத்தை அச்சிட்டு வெளியிட்டுள்ளதாகக் கூறிய அவர் எதிர்வரும் தீபாவளிப் பண்டிகைக்குத் தோட்டங்களுக்குத் திரும்புவோரின் தகவல்களைத் திரட்டும் வகையில் விபரப் படிவங்களை விநியோகிக்க குழுக்களை நியமித்து நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறினார்.

தெல்தோட்டை மினி சூறாவளியில் 25 குடும்பங்கள் பாதிப்பு

011009rain-in-upcountry.jpgதெல் தோட்டை, பட்டிகாமம் தோட்டப் பகுதியில் வீசிய மினி சூறாவளி காரணமாக 3 லயன்களிலுள்ள 25 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. லயன்களிலுள்ள வீடுகளின் கூரைகள் காற்றில் அள்ளிச் செல்லப்பட்டதுடன் வீட்டின் சுவர்கள் இடிந்து வீழ்ந்துள்ளன. நேற்று முன்தினம் பிற்பகல் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

25 குடும்பங்களைச் சேர்ந்த 49 பேர் பட்டிகாமம் மலைமகள் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்குரிய சமைத்த உணவுகள் வழங்கப்பட்டுள்ளன. உடனடியாக நிவாரணங்களை பெற்றுக் கொடுக்கு மாறு அரச அதிபர் பணிப்புரை வழங்கியிருக்கிறார். பிரதேச செயலர்பால கிருஷ்ணன் நேரில் சென்று பார்வையிட்டார்.

மலையகப் பகுதிகளில் மண்சரிவு அபாயம்: வீடுகளுக்கு சேதம்; போக்குவரத்து துண்டிப்பு

011009rain-in-upcountry.jpgநாட்டின் தற்போதைய சீரற்ற காலநிலையின் காரணமாக மலையப் பகுதிகளில் கடும் மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மண் சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், ஆங்காங்கே பாரிய மரங்கள் சரிந்து வீழ்ந்துள்ளன. இதனால் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

பலத்த மழையுடன் கடும் காற்றும் வீசுவதால், மின்சாரக் கம்பங்களும், தொலைத் தொடர்புக் கம்பங்களும் சரிந்து வீழ்ந்துள்ளன. ஹட்டன் வனராஜா பகுதியில் பாரிய கல்லொன்றும், மரமொன்றும் சரிந்துள்ளது. இதன்போது அந்த வழியால் சென்ற பால் வேனொன்று சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.

ஹட்டன், வட்டவளை உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் மழை பெய்து வருவதால் வீதிகளில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கினிகத்தேனை, ஹட்டன் வீதியில் மழை காலங்களில் மண்சரிவு ஏற்பட்டுப் போக்குவரத்து பாதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கண்டி பகுதியில் சிறு மினிசூறாவளி எனக் கருதப்படும் அளவுக்கு மரங்கள் பன்வில, கோம்பர, ஹேவாஹெட்டை, கண்டி, ஹாரிஸ்பத்துவ போன்ற பல இடங்களில் முறிந்து விழுந்துள்ளன. பிரமாண்டமான மாறாமரம் கண்டி பேராதனை வீதியில் கிங்ஸ்வூட் கல்லூரிக்கு முன்பாக உடைந்து விழுந்ததால் தெய்வாதீனமாக எவருக்கும் எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை. பாடசாலை முடிவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் இந்தச் சம்பவம் இடம்பெற்றதால் பாரிய விபரீதம் எதுவும் இடம்பெறவில்லை.

இதே போன்று கண்டி கட்டுகஸ்தோட்டை வீதியில் வட்டாரந்தன்னையில் பாரிய மாமரம் ஒன்றும் முறிந்து விழுந்ததால் போக்குவரத்துக்கள் சில மணி நேரம் தடைப்பட்டன. உடனடியாக இந்த மாம ரம் வீதி அதிகார பிரிவினால் அகற்றப்பட்டது. இவ்வாறு பெய்யும் அடைமழையினால் மலையகத்தில் பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்படலாம் என தேசிய கட்டட நிர்மாண ஆராய்ச்சிப் பிரிவைச் சேர்ந்த பூகற்பவியல் அதிகாரி எம். எம். சி. டபிள்யூ. மொரேமட தெரிவித்தார். மண்சரிவுகள் குறிப்பாக சப்ரகமுவ, மத்திய ஆகிய பிரதேசங்களில் ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு எனவும் அவர் தெரிவித்தார். இரத்தினபுரி மாவட்டத்தில் கடும் மழை, சூழல் காற்றினால் வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன. இறக்குவானை பகுதிகளில் மின் தடையும் ஏற்பட்டுள்ளது.

பெல்மதுளை வன்னியாராச்சி கிராமத்தில் நேற்று இடம்பெற்ற கடும் மழை, சூழல் காற்றினால் வீட்டுக் கூரை அள்ளுண்டு சென்றுள்ளது. இதேவேளை இறக்குவானை டெல்வீன் ஏ பிரிவில் மரமொன்று சரிந்து விழுந்ததால் தோட்டத் தொழிலாளியின் வீடு பலத்த சேதங்களுக்குள்ளாகியுள்ளது. பல வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளன. இறக்குவானை பல பகுதிகளில் நேற்று முதல் மின்வெட்டு இடம் பெற்றுள்ளது.