::பொருளாதாரம்

Sunday, September 19, 2021

::பொருளாதாரம்

இலங்கை மற்றும் சர்வதேச பொருளாதாரம் பற்றிய செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க உலக நாடுகள் மேலும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்

imf.jpgதற் போதைய உலக நிதிநெருக்கடியை சமாளித்து, சர்வதேச நிதிக்கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையை மீண்டும் நிலைநிறுத்துவதற்கு உலக நாடுகள் அனைத் தும் மேலதிக உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று, ஐ எம் எப் எனப்படும் சர்வதேச நாணயநிதியம் கோரியிருக்கிறது.

நிதி நிலைமையில் சிறிது முன்னேற்றம் காணப்படுவதாகவும், நிதி நிலைமை தொடர்பான நம்பிக்கை அதிகரிக்கத்துவங்கியிருப்பதாகவும், ஐஎம்எப் அமைப்பின் புதிய அறிக்கை தெரிவிக்கிறது.

அதேசமயம் இதுவரை உலகநாடுகள் எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் தனித்தனியான சிறு நடவடிக்கை களாகவும், எதிர்வினைகளாகவும் இருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

உலக அளவில் சிக்கலுக்குள்ளான நிதிச்சுமைகள் குறித்து புதிதாக வெளியிடப்பட்டுள்ள மதிப்பீட்டின்படி, அவற்றின் மதிப்பு நான்கு டிரில்லியன் டாலர்களாக மதிப்பிடப்பிடப்பட்டிருக்கிறது. இந்த நிதி நெருக்கடி காரணமாக சில நிறுவனங்கள் மூடப்படவேண்டியோ அல்லது வேறுநிறுவனங்கள் அவற்றை தம்வசப்படுத்திக் கொள்ளவேண்டிய நிலையோ உருவாகியிருப்பதாக்வும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

கட்டுப்பாட்டு விலையிலும் குறைவாக சந்தையில் பாவனைப் பொருட்கள்- அமைச்சர் பந்துல

bandula_gunawardena.jpgபருப்பு, சீனி உட்பட முக்கிய பாவனைப் பொருட்களுக்கு அரசு கட்டுப்பாட்டு உச்ச விலையை அறிவித்தபோதும் அக்கட்டுப்பாட்டு விலைகளுக்கும் குறைவாகவே சந்தையில் அப்பொருட்கள் விற்கப்படுகின்றன என வர்த்தக, சந்தை  அபிவிருத்தி,  கூட்டுறவு, மற்றும் பாவனையாளர் சேவைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் தொடாந்தும் கூறுகையில்,

கடந்த வருட புதுவருடத்தை விட இவ்வருடம் பாவனைப் பொருட்கள் மிகவும் குறைந்த விலையில் பாவனையாளர்களுக்கு கிடைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தேங்காய் எண்ணெய் ஒரு போத்தல் 100 ரூபாவாக நேற்று முதல் குறைக்கப்பட்டுள்ளது. தேங்காய் மற்றும் முட்டை என்பன விலை குறைந்துள்ளன.; போட்டி வர்த்தகத்துக்கு இடமளிக்கப்பட்டதே இதற்கான காரணமாகும்.

பாவனைப் பொருட்களின்  விலை அதிகம் வீழ்ச்சியடைவதால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். அவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பும் அரசாங்கத்து உண்டு. கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்ட பொருட்கள் பெக்கட்டுக்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும்போது அவற்றுக்கு கட்டுப்பாட்டு விலை செல்லுபடியாகாது என நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை வைத்து சில் வர்த்தகர்கள் அப்பொருட்களை கூடுதல் விலைக்கு விற்கின்றனர் என முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. தனியார் திறந்த பொருளாதாரக் கொள்கையை முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தன முதன்முதலாக அமுல்படுத்தினார். ஆனால் நாட்டுக்குப் பொருத்தமான  உண்மையான திறந்த பொருளாதாரக் கொள்கையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிமுகப்படுத்தியுள்ளார்

இதன் மூலம் அரசாங்கமும்  தனியார் துறையினரும் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையமும் பொதுவான நன்மைகளை அடைந்துகொள்ள வழி ஏற்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

G20 உச்சி மகாநாட்டின் நிலைப்பாடுகளும் மூல உபாயங்களும்: (The G20- Part 2) : வி வசந்தன்

g20-1.jpgபங்குபற்றும் நாடுகளின் நிலைப்பாடுகள்

இந்த உச்சி மகாநாட்டில் கலந்து கொள்ளும் நாடுகள் ஒவ்வொன்றும் தமக்கு என்று தாமே தயாரித்த தாம் விரும்பிய நிகழ்ச்சி நிரலுடன்தான் வரவிருப்பதாக புலப்படுகிறது. ஓவ்வொரு நாடும் வேறு வேறான விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற போதிலும் அந்நாடுகள் அக்கறை காட்டும் முக்கிய பிரச்சினைகள் பலவற்றுக்கு வேறு சில நாடுகளும் முக்கியத்துவம் கொடுக்கின்றன. எனவே ஒவ்வொரு நாடும் எதற்கு முக்கியத்துவம் கொடுத்து இம்மகாநாட்டில் பங்குபற்றுகிறது என்பதை கவனிக்க வேண்டிய அத்தியாவசியம் எழுகிறது. இம்மகாநாட்டில் பங்குபற்றும் ஒவ்வொரு நாட்டினதும் நிலைப்பாட்டை கீழே பார்க்கலாம்.

•உலக நிதி முறைமையை சீரமைப்பதும், புதிய விதிகளை உருவாக்கி கட்டுப்பாட்டுக்குட்படுத்துவதும்.

•வரி ஏய்ப்புப் புகலிடங்களை ஒழிப்பது.

•உள்நாட்டு உற்பத்தியை பாதுகாக்குமுகமாக வெளிநாட்டு இறக்குமதிகளை தடை செய்வதை தடுப்பது.

•உலக நாணய நிதியத்தை (IMF) புனரமைப்பதும் மிகவும் பெரிய அளவில் அதன் முதலாக்கத்தை (Capitalisation) அதிகரித்தல்.

•சந்தைகளை சீரமைப்பது.

•ஏனைய நாடுகளின் கையிறுப்பு பணம் தொடர்ந்தும் அமெரிக்காவின் நாணயமான டொலரில் வைத்திருப்பதா இல்லையா என்பது குறித்து ஆய்வு செய்வது.

•உலகபொருளாதார ஊக்கிப் பொதிகளை விஸ்த்தரிப்பதும் அதிகரிப்பதும்.

•உருப்படாத வங்கிகளை மூடுதல்.

•வங்கிகள் கடன்களை வழங்குதற்கு தடையாக விளங்கும் நச்சுச் சொத்துக்களை தனிமைப்படுத்த கையாளும் வரைமுறையை உருவாக்க ஆதரவு வழங்குவது.

•உலக நாணய நிதியத்தில் (IMF) வளர்ச்சியடையும் நாடுகளுக்கான வாக்குரிமைகளை அதிகரிக்க அழுத்தம் கொடுப்பது.

•கடன் பெறுவோரது தகமைகளை பரிசீலிக்கும் முகவர்களை சீரமைத்து எதிர்காலத்தில் உருவாகக்கூடிய நிதி நெருக்கடிகளை முன்மதிப்பிட்டுரைப்பதற்காண திறன்களை வளர்ப்பது.

•மேழும் அதிகளவில் வளர்ச்சியடையும் நாடுகளுக்கு ஆதரவுவளிப்பது.

•சூழல் பாதுகாப்பு.

•வங்கிகளின் உயர்நிலை ஊழியர்களின் ஊதியங்களுக்கு உச்சவரம்பு நிர்ணயித்தல்.

அமெரிக்காவும் பிரித்தானியாவும் உலகபொருளாதார ஊக்கிப் பொதிகளை விஸ்தரிப்பதும் அவற்றை ஏனைய நாடுகளும் பின்பற்றி அமுல்ப்படுத்துவதுமே மிக முக்கியம் என கருதுகிறது. இந்த நிலைப்பாட்டை ஜப்பான், இந்தியா, சீனா, பிரேசில், தென்கொரியா போன்ற நாடுகளும் ஆதரிக்கின்றன. அதே வேளையில் ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் உலக நிதி முறைமையை சீரமைப்பதும் புதிய விதிகளை உருவாக்கி கட்டுப்பாட்டுக்குட்படுத்துவதும் எதிர்காலத்திற்கு மிக முக்கியமான அடிப்படைத் தேவைகள் என வாதாடுகின்றன. இந்த நிலைப்பாட்டை இத்தாலி, கனடா, ஒல்லாந்து, போன்ற நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் ஆதரிக்கின்றன. இது தொடர்பாக அமெரிக்கா உடன்பாட்டிற்கு வர மறுத்தால், ஜேர்மனி, பிரான்சு ஆகிய இவ்விரு நாடுகளும் வெளிநடப்புச் செய்யத் தயாராக இருப்பதாக அவ்விரு நாடுகளின் தலைவர்களும் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளனர்.

அதே வேளையில், வரி ஏய்ப்புப் புகலிடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் சீனா தயங்குவதற்கு கொங்கொங், மக்கவு போன்ற இடங்களில் சீனாவுக்கு இருக்கும் நலன்கள்தான் காரணம் என பிரான்சின் அதிபர் பத்திரிகையாளர் மகாநாட்டில் விசனப்பட்டுள்ளார்.

இந்தியாவும் சீனாவும், உள்நாட்டு உற்பத்தியை பாதுகாக்குமுகமாக வெளிநாட்டு இறக்குமதிகளை தடை செய்வதை தடுப்பது, உலக நாணய நிதியத்தை (IMF) புணரமைப்பது, வளர்ச்சியடையும் நாடுகளுக்கான வாக்குரிமைகளை அதிகரிப்பது போன்ற நோக்கங்களில் மிகவும் தீவிரமாக இருப்பதாக காணப்படுகிறது.

சீனா தனது மேலதிக அந்நியசெலாவணி 2,000,000,000,000 (2 திறில்லியன்) டொலர்களை அமெரிக்காவின் வெளிநாட்டு முறிகளில் (Treasury Bond) முதலீடு செய்துள்ளது. இன்றய பொருளாதார நெருக்கடிகளினால் அமெரிக்க டொலர்களில் செய்யப்பட்ட சீனாவின் முதலீடுகள் பாதிக்கப்பட்டு வெளிநாட்டுச் சொத்துக்கள் அதன் பெறுமதியை இழக்கலாம் என சீனா கவலைப்படுவதாகத் தெரியவருகிறது. அண்மையில் சீன மத்திய வங்கியின் ஆளுநர் இது பற்றி கருத்து தெரிவிக்கையில், உலக நாணய நிதியம் (IMF) அதன் அங்கத்துவர்களுடைய விசேட உரிமைகளை அதிகரிப்பது மட்டுமல்லாது, புதிய மேன்மையான இறைமையுள்ள கையிறுப்பு நாணயம் (Super Sovereign Reserve Currency) ஒன்றை உருவாக்க வேண்டும் எனக் கேட்டிருந்தார்.

பல வங்கிகள் அறவிட முடியாத வீடுகள் வாங்க கொடுக்கப்பட்ட கடன்களால் பாதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான கடன்களை வங்கிகளின் நச்சு சொத்தென அழைக்கப்படுகிறது. இவ்வாறான கடன்களை பட்டுவாட செய்த அமெரிக்க வங்கிகள் மூலதனப் பற்றாக் குறையால் உள்நாட்டு பிற நாட்டு வங்கிகளினிடம் பெரும் தொகையான கடன்களைப் பெற்று அவற்றை திரும்ப செலுத்த முடியாமல் போனதால் ஏற்பட்ட பணஓட்டத் தட்டுப்பாடே, இன்றய பொருளாதார நெருக்கடிகளுக்கு அடித்தளமாக அமைந்தது. இவ்வாறான நச்சு சொத்துக்களை சுததிகரித்து அப்புறப்படுத்தாவிடில் இன்று ஏட்பட்டிருக்கும் பொருளாதார மந்தம் இனி வரும் பல தலைமுறைகளுக்கு நீடிக்கப்படுமென உலக நாணய நிதியத்தின் (IMF) முகாமை இயக்குனர் டொமினிக் ஸ்றவுஸ் கான் எச்சரித்துள்ளார்.

இவ்வாறு பல உள் முரண்பாடான நிலைப்பாடுகளை கொண்டிருக்கும் இந்த கூட்டமைப்புக்கு, இன்றைய மாபெரும் பொருளாதார நெருக்கடியானது எதிர்காலத்தில் பெரும் பொருளாதார மந்த நிலைக்கு உலக நாடுகள் தள்ளப்படும் அபாயம் உள்ளதை உணர்ந்திருப்பதும்; இப்பிரச்சினைக்கு நாடுகள் இணைந்து தீர்வு காண வேண்டிய அவசியத்தையும் ஏற்றுக்கொண்டே இம்மகாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.

பிரித்தானியப் பிரதமர் பிரவ்ண் தலைமையில் நடாத்தப்படும் இவ்வுச்சி மகாநாட்டிற்கு அவர் தனது நேரம், செல்வாக்கு, அந்தஸ்த்து, அறிவாற்றல் அனைத்தையும் முதலீடு செய்திருந்தார். வங்கிகளின் வீழ்ச்சியால் தூண்டப்பட்ட இந்த நெருக்கடியிலிருந்து மீள ஏனைய நாடுகளை ஒரு புதிய சமூக பொருளாதார ஏற்பாட்டிற்க்கு (Global New Deal) பங்கு பற்றும் ஏனைய நாடுகளிடம் ஆதரவு கேட்டு கோரிக்கை விட்டிருந்தார். அவரது இந்த ஏற்ப்பாடு பின்வரும் அம்சங்களை கொண்டிருக்கும் என்றார்:

உலக பொருளாதாரம் மீள்வது மட்டுமல்லாது வங்கிகள் சிறந்த விதிகளுக்கு உட்பட்டு நடாத்தப்படும்.
வெளிநாட்டு பொருட்களையும் சேவைகளையும் இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்காமல் மும்முனை மூல உபாயங்களை பயன்படுத்தி பொருளாதாரத்தை மீளக்கட்டுதல்.

g20-21.jpgமூல உபாயங்களாவன:

1) குடும்பங்களும் வர்த்தக தாபனங்களும் பொருளாதார மந்தநிலையிலிருந்து மீள நிதிக்கான சந்தையை திட்டநிலைக்கு கொண்டு செல்ல எது தேவையோ அதனை செய்வது.

2) உலக நிதிச் சந்தையின் நம்பகத்தன்மையை மீளப்பெற அதனை மறுசீரமைத்து பலப்படுத்துவது.

3) உலக பொருளாதாரத்தை மீட்டு நீண்ட கால வளச்சிக்காக வழிவகைகளை அமைத்தல்.

இந்த உச்சிமகாநாட்டில் பங்குபற்றிய ஒவ்வொரு நாடும் தமது நோக்கங்களுக்கும் நிலைப்பாட்டிற்கும் முக்கியத்துவம் கொடுத்ததை பார்க்கும் போது மகாநாட்டின் இறுதியில் மக்களுக்கு நன்மை தரும் முயற்சிகளை எங்கே விட்டுவிடுவார்களோ என்ற எண்ணம் பலருக்கு தோன்றியதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்படியிருந்தும் கூட நிதி நெருக்கடியின் மிகவும் ஆக்ரோசமான தாக்கம் அவர்களை ஒரே மேசையைச் சுற்றி அமரச் செய்துள்ளது.

கடந்த 25 வருடங்களாக தொடர்ந்து அமுலாக்கி வந்த வோசிங்டனின் கருத்து (Washington Consensus) என்பது பொதுவாக வளர்ச்சியடையும் நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்படாவிடினும், உலக நாணய நிதியம் (IMF), உலக வங்கி (World Bank) அமெரிக்காவின் திறைசேரி (US Treasury Department) போன்ற பலம்மிக்க நிதி தாபனங்களால் வளர்ச்சியடையும் நாடுகள் மீது திணிக்கப்பட்ட நவ தாராளவாத பொருளாதாரக் கொள்கைகளே (Neoliberal Policies). மற்றய காரணிகளை கருத்தில் எடுக்காது, திட்டநிலை (Stability) தனியார் மயமாக்கல் (Privatisation), தாராளமயமாக்கல் (Liberalization) என்னும் மூன்று பொருளாதார கோட்பாடுகளை அடிப்படையாக கொண்டதே இந்த வோசிங்டனின் கருத்து. இந்த கொள்கைகளால் பாதிக்கப்பட்ட வளர்ச்சியடையும் நாடுகள் பல. இந்த உச்சிமகாநாடு வோசிங்டனின் கருத்துக்கு எதிராக மாற்றுக்கருத்தை வைக்க முடியுமா என்னும் சர்ச்சையை ஆரம்பித்துள்ளது.

உச்சி மகாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்

பிரித்தானியப் பிரதமர் கோர்டன் பிரவ்ண் இறுதி அறிக்கையில் “இன்று நாம் வாக்குறுதி கொடுத்திருப்பது எதற்கென்றால் எவற்றை அத்தியாவசியமாக செய்ய வேண்டுமோ அவற்றை செய்து:

1.நம்பிக்கை, பொருளாதார வளர்ச்சி, தொழில் வாய்ப்புகளை புதுப்பிப்பது.

2.நிதி முறைமையை மீள் சீரமைத்து கடன் வழங்களை மீண்டும் ஆரம்பிப்பது.

3.நிதி தொடர்பான விதிகளை பலப்படுத்தி மீள நம்பிக்கை ஊட்டுவது.

4.இந்த நிதி நெருக்கடி மீண்டும் உருவாகாமலிருக்க சர்வதேச நிதி நிறுவனங்களுக்கு நிதி வழங்குவதுடன் இவ்நிறுவனங்களை மறுசீரமைத்தல்.

5.இறக்குமதிக்கெதிராக தடை விதிப்பதை நிராகரிப்பதுடன் உலக வர்த்தகத்திற்கும் முதலீடுகளுக்கும் ஊக்கமளித்து வளத்தை பெருக்குதல்.

6.சகலரையும் உள்ளடக்கிய, சுற்றாடலை பேணும்தக்க வைக்க வல்ல பொருளாதார மீட்சியை உருவாக்குதல் போன்றவைகளாகும்.

தீர்மானங்களும் அமுலாக்கல்களும்

மேலே குறிப்பிட்ட குறிக்கோள்களை அடைய பல வகையான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டியுள்ளது. அவையாவன:

1.உலகநாணய நிதியத்தின் ஊடாகவும் (IMF) மற்றய சர்வதேச நிதி நிறுவனங்கள் ஊடாகவும் சுமார் 1.1 திரில்லியன் டொலர்களை உதவி வேண்டும் நாடுகளுக்கு கடனாக விநியோகிப்பது.

2.நிதி திடநிலை சபை (Financial Stability Board) ஒன்றை ஸ்தாபித்து நிதி முறைமையை பலப்படுத்துவது.

3.சர்வதேச நிதி நிறுவனங்களை பலப்படுத்துமுகமாக அவற்றிற்கு போதிய மூலதனத்தைப் பெற ஏற்பாடுகளை செய்து கொடுத்தல். இதுவரை காலமும் உலக நாணய நிதியம் (IMF) கடன் கொடுப்பதில் காட்டிய கடும் போக்கினை தளர்த்தி தேவையின் நோக்கமறிந்து கடன் உதவிகளை செய்வதற்கேட்ப மறுசீரமைக்கப்படுகிறது.

4.இறக்குமதிக்கெதிராக தடை விதிப்பதை தவிர்ப்பதற்கான சகல முயற்சிகளையும் மேற்கொள்வதுடன், உதவும் நோக்கத்துடன் வர்த்தகம் மேம்பட 250 பில்லியன் டொலர்களையும் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் டோகா அபிவிருத்தி சுற்றுப் பேச்சு வார்த்தைகளையும் சுமூகமாக முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளையும் மேற் கொள்ளப்படுகிறது.

5.நீதியானதும் தக்கவைக்க கூடியதுமான பொருளாதார மீட்சி பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஏழைகளுக்கும் உதவும்முகமாக பழைய திட்டங்களை பலப்படுத்துவதுடன் புதிய திட்டங்களும் அமுல் செய்யப்படவுள்ளது. இது தொடர்பாக 6 பில்லியன் டொலர்கள் கடன் வழங்க ஒதுக்கப்பட்டுள்ளது.

6.வங்கிகளும் நிதி நிறுவனங்களும் தமது ஊழியருக்கு வழங்கும் ஊதியம், ஊக்கத்தொகை தொடர்பான வெளிப்படையான காலத்திற்கு காலம் வெளியிட நிர்பந்திக்கப்படுவர்.

7.வரி ஏய்ப்பு புகலிட நாடுகள் தொடர்பாக உருப்படியான பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது.

8.கணக்கியல் துறையில் கோட்பாடுகள் தொடர்பாக தேவையான மாற்றங்களை செய்வது.

9.கடன் பெறுவோரது தகமைகளை பரிசீலிக்கும் முகவர்களை கண்கானிப்பதற்கான தேசிய அளவில் அதிகார சபைகளை உருவாக்குதல்.

இந்த உச்சிமகாநாடானது பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்டு ஆக்கபூர்வமான பல திட்டங்களை முன் வைத்ததுமல்லாமல் அதற்கான அரசியல் ஆதரவையும் முக்கிய நாடுகளிடமிருந்து பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது. இத்திட்டங்களெல்லாம் இன்றைய நிதி நெருக்கடியை தீர்த்து வைத்து பொருளாதார தேக்கத்தை அல்லது மந்தத்தை போக்கும் என்று திட்டவட்டமாக கூறுவது கடினம். அதே வேளை மகாநாட்டின் வெற்றியை மனதில் கொண்டு பல முரண்பாடுகள் மூடி மறைக்கப் பட்டிருக்கலாம். இவ்வாறன முரண்பாடுகள் அந்தந்த நாடுகளின் உள்நாட்டு அரசியலைப் பொறுத்தே தங்கியுள்ளது.

சில கேள்விகளுக்கு இன்னும் விடை கிடையாது.

1.இரண்டு திரில்லியன் பெறுமதியுடைய நச்சு சொத்துக்களை என்ன செய்வது?.

2.உலக நாணய நிதியம் (IMF) பல வளர்ச்சியடையும் நாடுகளால் விரும்பப்படாத ஒரு சர்வதேச நிதித்தாபனம். வோசிங்டன் கருத்தை” மிக மோசமான வழிகளில் ஈவு இரக்கமின்றி அமுல்படுத்தி பல நாடுகளில் மக்களை மிகவும் துன்பத்தில் ஆழ்த்தியதில் உலக நாணய நிதியத்திற்கு பெரும் பங்குண்டு. இத்தாபனம் மறுசீரமைக்கப்பட்டாலும் தனது பழைய சிந்தனையிலிருந்து புதிய பாதைக்கு வருமா என்பது கேள்விக்குறியே.

3.உலக நாணய நிதிற்கு (IMF) பணமாக்குவதற்கான அதிகாரம் வழங்கப்படவுள்ளது. இவ்வாறான அதிகாரங்கள் எவ்வாறான பக்கவிளைவுகளை எதிர் காலத்தில் உருவாக்கும் என்பதில் தெளிவில்லை.

4.நிதி சார்பு முறைமைகள் கட்டுமானங்கள் ஆகியவற்றில் அடிப்படையானதும் முழுமையானதுமான மாற்றங்களை ஏற்படுத்தாமல் இன்று உருவாக்கியிருக்கும் நிதி நெருக்கடி எதிர்காலத்தில மீண்டும் உருவாகாது என உறுதியாக கூற முடியாது.

5.இன்று நிதி நெருக்கடியையும் பொருளாதார தேக்கத்தையும் அகற்ற மேற்கொள்ளப்படும் இம்முயற்சிக்கு ஏராளமான நிதி தேவைப்படுகிறது. இதனை வட்டியும் முதலுமாக மீட்கப்போவது எதிர் கால சந்ததியினர். எமது பொறுப்பற்ற செயலால் ஏற்பட்ட விளைவுகளை சுமக்கப் போவது அவர்களே.

எது எப்படியிருப்பினும் பிரித்தானியா பிரதமர் கோர்டன் பிரவ்ன் தனது முடிவுரையில் கூறியது போல “வோசிங்டன் கருத்து” மேலாதிக்கம் செய்த காலம் முடிவுக்கு வந்துவிட்டது

இன்றைய வளரும் சந்தைகளைக் கொண்ட பிரேசில், ரஸ்சியா, இந்தியா, சீனா (BRIC) போன்ற நாடுகளின் பொருளாதார வளர்ச்சியானது இதுவரை காலமும் கண்டிராத அதிகார அதிர்வுகளையும் நகர்வுகளையும் ஏற்படுத்தியுள்ளது. மேற்குலக நாடுகள் தம்மிடமிருந்த பொருளாதார பலம் படிப்படியாக மேலே குறிப்பிட்ட நாடுகளுக்கு கடந்த பல வருடங்களாக நகருவதை உணர்ந்த பொழுதிலும் அதற்கு ஏற்ற அங்கீகாரம் இந்த நாடுகளுக்கு கொடுக்கப்படவில்லை. ஆனால் கடந்த கார்த்திகை மாத உச்சி மகாநாடும் சித்திரை இரண்டாம் நாள் நடந்தேறிய மகாநாடும் இந்த நாடுகளுக்கு உரிய அங்கீகாரத்தை பெற்றுத் தந்துள்ளது. இவ்வாறான அங்கீகாரங்கள் அடுத்த கட்ட அரசியல் அதிகாரங்களை பகிர்ந்து கொள்ள வழிவகுக்கும்.

உலக பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க ஜி20 மாநாட்டில் நடவடிக்கை

g-20.jpgலண்டனில் ஆரம்பமாகியுள்ள ஜி 20 உச்சி மாநாட்டின் 2ஆம் நாள் அமர்வுகளின் போது, உலக நாடுகளின் தலைவர்கள் சர்வதேச பொருளாதர நெருக்கடிக்கு முகம் கொடுப்பது தொடர்பில் பல்வேறு தீர்மானங்களை எடுத்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்துக்கான பணத்தை அதிகரிப்பது, நிதி கண்காணிப்பை வலுப்படுத்துவது உள்ளிட்ட நெருக்கடியைச் சமாளிக்கும் பிரச்சினைகள் குறித்து லந்துகொண்ட தலைவர்கள் கலந்துரையாடியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பல இன்னல்களில் சிக்கியுள்ள நாடுகளுக்கு உதவி செய்யும் பொருட்டு, சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி உள்ளிட்ட நாணய நிறுவனங்களுக்கு 750 பில்லியன் அமெரிக்க டொலரை வழங்க 20 நாடுகள் குழுவின் தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.மேலும் 25 பில்லியன் டி அமெரிக்க டாலர் மதிப்புள்ள சிறப்பு நிதியுதவி, உறுப்பு நாடுகளுக்கு அளிக்கப்படும் என்று பிரிட்டன் தலைமையமைச்சர் கோர்டன் பிரவுண் தெரிவித்துள்ளார். செல்வாக்கு வாய்ந்த அனைத்து நிதி நிறுவனங்கள், நிதி உற்பத்தி பொருட்கள் மற்றும் சந்தைகள் மீது, கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும். புதிய நிதி ஆணையத்தை உருவாக்கி, சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து, உலக பொருளாதாரம் மற்றும் சந்தையின் அபாயத்தையும், கண்காணிக்க வேண்டும் என்று தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் மேலும் தெரிவிகின்றன. 

G20 கூட்டமைப்பும் லண்டனில் நடைபெறவுள்ள உச்சி மாநாடும் – (The G20- Part 1) : வி வசந்தன்

G20_Noteகடந்த சனிக்கிழமை (Mar 28, 2009)லண்டன் மாநகரில் பெரிய அளவில் கண்டன ஊர்வலம் ஒன்று “மக்களுக்கு முதலிடம் கொடு” என்னும் வானவில் கூட்டமைப்பினால் நூற்றி ஐம்பதுக்கும் அதிகமான தொழிற் சங்கங்கள், கிறிஸ்த்தவ தளங்கள், அரசு சார்பற்ற ஸ்தாபனங்கள் இணைந்து மிகவும் வெற்றிகரமாக நடாத்தினர். இது போன்று இன்னும் பல கண்டன ஊர்வலங்கள் இனிவரும் தினங்களில் நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதில் சித்திரை முதலாம் நாள் “யுத்தத்தை நிறுத்துவதற்கான கூட்டமைப்பு”, “நிதி அழிவு (Meltdown)”, “மக்களும் கிரகமும்” “சூழல் பாசறை”  போன்ற அமைப்புகள் நடாத்த உள்ள எதிர்ப்பு ஊர்வலங்கள் மற்றும் இவற்றை தவிர சித்திரை இரண்டாம் நாள் பல விதமான ஜனநாயக போரட்டங்களையும் வேறுவேறு அமைப்புகள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளன. அனைத்து அமைப்புகளும் வேறுவேறு நோக்கங்களுக்காக தங்கள் எதிர்ப்புகளை வெளிப்படுத்தினாலும் அவற்றின் அடிப்படை கோரிக்கையானது “லாபத்தை விட மக்களுக்கு முதலிடம் கொடு” என்பதே. இவ்வாறான ஒட்டுமொத்த எதிர்ப்புக்களையும்,  கண்டனங்களையும் சர்ச்சைகளையும் கிளப்பியிருப்பது சித்திரை இரண்டாம் நாள் நடைபெறவிருக்கும் G20 உச்சி மகாநாடு.
 
இம்மகாநாடு பத்தொண்பது நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் (EU), தென் கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (ASEAN), ஆபிரிக்க அபிவிருத்திக்கான புதிய கூட்டுறவு (NEPAD), ஐக்கிய நாடுகள் சபை(EN) ஆகியவை பங்கு பற்றுகின்றன. G20 நாடுகளின் மொத்த சனத்தொகை உலக சனத்தொகையின் 67 சதவிகிதமும், இந்நாடுகளின் ஒட்டுமொத்த ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் அண்ணளவாக உலக நாடுகளின் 80 சதவிகித வர்த்தகத்திற்கு சமனாகவே உள்ளது. இவைதவிர உலக நாடுகளின் 90 விகித உள்நாட்டு உற்பத்தியை G20 நாடுகளே மேற்கொள்கின்றன. ஆகவே இந்நாடுகள் தமக்கிடையே உள்ள பொதுவான பொருளாதாரம் நிதி உலகமயமாக்கள் போன்ற விடயங்கள் தொடர்பாக தமது கருத்துக்களை பறிமாற்றிக்கொள்ளும் அத்தியாவசியத்தினை உணர்ந்து 1990 நடுப்பகுதியில் ஏற்பட்ட கிழக்காசிய நாடுகளின் அந்நியசெலாவணி நெருக்கடியினால் உந்தப்பட்டு 1999முதல் தொடக்கம் பல சந்திப்புகளை அந்நாடுகளின் அரசுகளின் தலைவர்களும், நிதி அமைச்சர்களும் மத்திய வங்கிகளின் ஆளுநர்களும் நிகழ்த்தியுள்ளனர். ஆனால் இம்முறை நடக்கவிருக்கும் சந்திப்பானது கடந்த ஆறு மாதங்களுக்குள் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டாவது மிக முக்கியமான மகாநாடுவாகும்.

கடந்த பல வருடங்களாக பொறுப்பற்ற முறையில் உலக நிதியைக் கையாண்ட வங்கிகள், எச்சரிக்கையற்று இருந்த அரசு கட்டுப்பாட்டாளர்கள், பொறுப்பற்ற பொருளாதாரக் கொள்கைகள், நிபந்தனையற்ற எல்லைகளற்ற பணப்பாச்சல்கள், இவையனைத்தும் உருவாக்கியதே இந்த உலகளாவிய நிதியியல் நெருக்கடி. இந்த நெருக்கடியானது கடன் பெறுவதற்கான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி பொருளாதார தேக்கத்தையும் பின்னடைவையும் மேற்குலக நாடுகள் மட்டுமல்லாது ஏனைய வளர்ச்சியடையும் நாடுகளையும் பாதித்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

G20 குழுவின் நோக்கங்களும் கட்டுமாணங்களும்

இக்குழுவானது இதனுள் அங்கம் வகிக்கும் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கும் வளர்ந்து வரும் சந்தைகளை கொண்டிருக்கும் நாடுகளுக்குமிடையே உலக பொருளாதார திடநிலை தொடர்பாக வெளிப்படையானதும் உருப்படியானதுமான கருத்துப் பரிமாற்றம் செய்யும் கருத்தரங்காகவே ஸ்தாபிக்கப்பட்டது. நாடுகளின் அபிவிருத்தியயையும் அவற்றின் பொருளாதார வளர்ச்சியையும் ஆதரிப்பதும்; இவற்றிற்கு ஆதரவாக உலக நிதிக் கட்டுக்கோப்புக்களையும் பலப்படுத்துவதோடு தேசிய கொள்கைகள், உலகலாவிய ஒத்துழைப்பு, உலக நிதி ஸ்தாபனங்கள் போன்ற விடயங்களில் உரையாடலுக்கான வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுப்பதும் இக்குழுவின் நோக்கமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.

பேர்லினில் 2004 ஆண்டு கார்த்திகை மாதம் நடைபெற்ற நிதி அமைச்சர்கள் மத்திய வங்கி ஆளுநர்கள் அடங்கிய மகாநாட்டில் சில கொள்கை இணக்கங்கள் காணப்பட்டது. அவையாவன:

•பணம் நிதி ஆகியவற்றின் திடநிலை பேணல் (Stability)

•விலைகளின் திடநிலை பேணல், பணவீக்கத்தை கட்டுப்படுத்தல்

•உள்நாட்டு வரவு செலவுத்திட்ட பற்றாக்குறையை நிரவும் பொதுக்கடனானது அந்நாட்டின் உற்பத்திக்கு பொருத்தமான அளவில் பேணப்படல்.

•உள்நாட்டு நிதியியல் துறையை பலப்படுத்தல்

•அந்நிய செலாவணிக்கான கட்டுப்பாடுகளை கவனமாக தளர்த்தல்
    
•போட்டியை பேணல் (Competiton)

•உள்நாட்டு வெளிநாட்டு வர்த்தகங்கள் மீதுள்ள தடைகளை படிப்படியாக தளர்த்தல்

•நெகிழ்வான தொழிளாளர் சந்தையை உருவாக்குதல்

•சிறிய, மத்திய நிறுவனங்களை ஊக்குவித்தல்

•நேரடி வெளிநாட்டு மூலதனங்களை அனுமதித்தல்
 
•உரிமை கொடுத்தல் (empowerment).

•கல்வி கற்கவும் பயிற்சிகளைப் பெறவும் வசதிகளை செய்து கொடுத்தல்

•சிறிய நிறுவனங்களை ஆரம்பிக்க இலகு முறையில் கடன் பெற வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்

•சமூக கட்டுமாணங்களான நன்நீர் வசதிகளை தருவது, சுகாதார சூழலை உருவாக்குதல்

  
கடந்த பத்துவருட காலங்களில் இக்குழுவின் சாதனைகள் என பட்டியல் போடப்படுபவை கீழே தரப்படுகின்றன:
•நாடுகளின் பொருளாதார வளர்ச்சி தொடர்பான கொள்கைகளில் இணக்கம்

•நிதி முறைமையை துஸ்பிரயோகங்களை குறைத்தல்

•நிதி நெருக்கடியை கையாள்வது

•பயங்கரவாதத்திற்கு பயன்படும் பண முதலீடுகளுக்கு எதிராக செயல்படல்

•உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ஏற்புடைக் கோட்பாடுகளை பயன்படுத்தி இறைதிறை கொள்கைகளில் (Fiscal Policy) ஒளிவின்மையை கொணர்தல்

•உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ஏற்புடைக் கோட்பாடுகளை பயன்படுத்தி பணச்சலவை, பயங்கரவாததிற்கு பயன்படும் பண முதலீடுகளுக்கு எதிராக செயல்படல்

•வரி ஏய்ப்பு, நிதி முறைமையை துஸ்பிரயோகங்கள், சட்டங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை பரிமாறிக் கொள்வது

•உலக நிதி கட்டுமாணத்தை மறுசீர்அமைப்பது.

•இவ்வருடம் பங்குனி 14 திகதி வெளிட்ட அறிக்கையில், இன்றைய நிதி குழப்ப நிலையிலிருந்து விடுபட நாடுகள் கூட்டாக செயல்பட வேண்டிய அவசியத்தினை வலியுறுத்தி மத்திய வங்கிகளின் ஆளுநர்கள், நிதி தொடர்பான விதிகளையும் அவற்றின் நிர்வாகத்தையும் செம்மைப்படுத்துவதன் மூலமே உலக நிதிச்சந்தையை சீராக்க முடியும் என ஏற்றுக்கொண்டனர்.

தேர்தல்களின் பின்னர் அத்தியாவசிய பொருட்களுக்கான விலை உயர்வடையும்:- கயந்த கருணாதிலக்க

gayantha.jpgமேல் மாகாணசபைத் தேர்தல்களின் பின்னர் அத்தியாவசிய பொருட்களுக்கான விலை உயர்வடையும் என ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்தகருணாதிலக்க தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் நாட்டில் ஏற்படவுள்ள பாரிய பொருளாதாரச் சீரழிவிலிருந்து மக்களை மீட்டெடுக்க மஹிந்த சிந்தனை கொள்கைகளினால் முடியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணசபைத் தேர்தல்களின் போது ஒரு கிலோ சீனியின் விலை 54 ரூபா எனவும், மத்திய மற்றும் வடமத்திய மாகாணசபைத் தேர்தல்களின் போது ஒரு கிலோ சீனியின் விலை 64 ரூபா எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடமத்திய மற்றும் மத்திய மாகாணசபைத் தேர்தல்களின் பின்னர் ஒரு கிலோ சீனியின் விலை 75 ரூபாவாக உயர்வடைந்துள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு எதிர்வரும் மேல் மாகாணசபைத் தேர்தல்களின் பின்னர் அத்தியாவசிய பொருட்களுக்கான விலையில் பாரியளவு அதிகரிப்பு ஏற்படுவதனை தடுக்க முடியாதென அவர் எதிர்வு கூறியுள்ளார். அரசாங்கம் தேர்தல்களை இலக்காக வைத்தே பொருட்களின் விலையை கட்டுப்படுத்தி வருவதாகவும் மாகாணசபைத் தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் உலகப் பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டி பொருட்களின் விலை ஏற்றப்படும் என தெரிவித்துள்ளார்.

.

29 டொலருக்கு மசகு எண்ணெயினை கொள்வனவு செய்யும் அரசு பெற்றோலை 120 ரூபாவுக்கு விற்கின்றது – ரவி எம்.பி.

ravi-karunanayaka.jpgஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தின் போது 43 டொலர்களுக்கு மசகு எண்ணெய் கொள்வனவு செய்யப்பட்டு ஒரு லீற்றர் பெற்றோல் 75 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், இன்று 29 டொலர்களுக்கு மசகு எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகின்ற போதிலும் பெற்றோல் ஒரு லீற்றர் 120 ரூபாவுக்கே விற்பனை செய்யப்படுகின்றது.

அரசாங்கம் ஏன் மக்களுக்கு இவ்வாறான அநீதியை இழைக்கின்றது என்று ஐக்கிய தேசிய கட்சி எம்.பி. ரவி கருணாநாயக்க நேற்று சபையில் கேள்வி எழுப்பினார். எரிபொருள் தொடர்பான சிறிய கேள்விக்கு பதிலளிப்பதற்காக அமைச்சர் உலகத்தையே சுற்றிவருவதாகவும் ரவி எம்.பி. பரிகாசம் செய்தார். பாராளுமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை காலை 9.30 க்கு சபாநாயகர் வி.ஜே.மு. லொக்கு பண்டார தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் வாய்மூல வினா விடைக்கான நேரத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

உலகில் ஒவ்வொரு நிமிடத்துக்கும் சராசரியாக 5 பேர் வேலை இழப்பு

2009 ஆம் ஆண்டின் முதல் இரு மாதங்களில் உலகம் முழுவதிலும் வேலை இழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் நான்கு லட்சமாகும். அதாவது, ஒவ்வொரு நிமிடத்துக்கும் சராசரியாக 5 பேர் வேலை இழந்துள்ளனர்.

சில நிறுவனங்கள் குறிப்பிட்ட காலத்துக்கு பணியாளர்களை வேலையைவிட்டு நிறுத்துவது மற்றும் பணிநீக்கம் செய்வது போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளன. சில நிறுவனங்கள் தானாக முன்வந்து ஓய்வுபெற்றால் சலுகை அளிப்பது போன்ற சிறப்புத் திட்டங்கள் மூலம் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளன.

சர்வதேச பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த நிறுவனங்கள் தங்களது செலவைக்குறைக்க பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. இதன் தொடர்ச்சியாக 2008 ஆம் ஆண்டில் 10 மில்லியன் பணியிடங்களை சர்வதேச நிறுவனங்கள் குறைத்துள்ளன.

ஒவ்வொரு ரூபாவைவும் பாதுகாக்க சர்வதேச நிறுவனங்கள் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், தற்போதைய நெருக்கடிக்கு உடனடி நிவாரணம் ஏதும் இல்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2009 ஆம் ஆண்டின் ஜனவரி 26 ஆம் திகதி ஒருநாள் மட்டும் 80,000 பணியிடங்கள் குறைக்கப்பட்டன. பெப்ரவரியில் அதைவிடக் குறைவான அளவிலேயே வேலை இழப்பு ஏற்பட்டது.

பெப்ரவரியில் சுரங்கத்துறையில் பெரும் நிறுவனமான ஆங்லோ அமெரிக்கன் 19,000 பணியாளர்களைக் குறைத்துள்ளதாகத் தெரிவித்தது. ஜப்பானின் பனாசோனிக் நிறுவனம் 15,000 பணியிடங்களைக் குறைத்தது. இதுதவிர ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் 10,000 பணியாளர்களையும் நோர்ட்டல் நிறுவனம் 3,200 பணியாளர்களையும் வேலையை விட்டு நிறுத்தியது.

இதேபோன்று குட் இயர் நிறுவனம் 5,000 பணியாளர்களையும் மைக்ரான் 2,000 பணியாளர்களையும் யு.பி.எஸ். 1,600 பணியாளர்களையும் பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது. சர்வதேச பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த பணிநீக்கம் தொடரும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்தியாவசிய பொருட்களின் விலை விரைவில் குறையும். அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு

bandula_gunawadana.jpgஅரிசி உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை இன்னும் இரண்டொரு வாரங்களுக்குள் வெகுவாகக் குறைவடையும் என்று வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அதேநேரம் சமையல் எரிவாயுவின் விலையில் மார்ச் மாதமளவில் மாற்றம் ஏற்படும் என்றும் அவர் கூறினார்.

பணவீக்கம் குறைவடைந்து வருவதால் நூற்றுக்கு 28 ஆக விருந்த வாழ்க்கைச் செலவுப் புள்ளிவீதம் வெகுவாகக் குறைவடைந்து வருகிறது. எதிர்வரும் இரண்டு வாரங்களில் நூற்றுக்கு எட்டு அல்லது ஒன்பது வீதமாக இது குறைவடையுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.எதிர்வரும் புத்தாண்டு பண்டிகைக் காலங்களில் அத்தியாவசியப் பொருட்களுக்கான எவ்வித தட்டுப்பாடும் இருக்கமாட்டாதென தெரிவித்த அமைச்சர், குறைந்த விலையில் சகல பொருட்களையும் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்குமெனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், நெல் அறுவடைக்காலம் என்பதால் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அரிசியின் விலையில் வீழ்ச்சி ஏற்படும். பயங்கரவாதிகளிடமிருந்து கிழக்கு மாகாணம் மீட்கப்பட்ட பின் இம்முறை ஒரு இலட்சத்து இருபதினாயிரம் ஏக்கரில் புதிதாக நெற்செய்கை செய்யப்பட்டுள்ளது. இதனால் போதுமானளவு அரிசி கையிருப்பில் வருவதுடன் குறைந்த விலையிலும் அரிசியை விற்பனை செய்ய முடியும்.

அண்மைக்காலங்களில் சமையல் எரிவாயு, பெற்றோல், டீசல் உட்பட எரிபொருட்கள் மற்றும் பஸ், ரயில் கட்டணங்கள் குறைவடைந்துள்ளதால் வாழ்க்கைச் செலவுப் புள்ளிவீதம் குறைந்து வருகிறது. எதிர்வரும் இரண்டொரு வாரங்களில் வீழ்ச்சியும் பணவீக்கத்திற்கமைய நூற்றுக்கு எட்டு அல்லது ஒன்பது வீதமாக வாழ்க்கைச் செலவு குறைவடையும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

ஆசியாவில் வேலைவாய்ப்பின்மை 9 கோடி 70 இலட்சமாக அதிகரிக்கும்

economics.jpgஉலகப் பொருளாதார வீழ்ச்சி காரணமாக வேலை இழந்த ஆசிரியர்களின் தொகை இவ்வருடத்தில் 9 கோடியே 70 இலட்சமாக அதிகரிக்கும் சாத்தியமுள்ளதென சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் நேற்று புதன்கிழமை எச்சரித்துள்ளது. இது தொடர்பில் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

கடந்த ஆண்டில் வேலை இழந்த ஆசிரியர்களின் தொகையை விட இவ்வருடம் வேலையிழப்போர் தொகை 7.2 மில்லியன் அதிகமாகும். இதன்படி பிராந்திய ரீதியில் கடந்த ஆண்டில் 4.8 சதவீதமாகவிருந்த வேலையற்றோர் தொகை இவ்வாண்டில் 5.1 சதவீதமாக உயர்வடையவுள்ளது.

அண்மைய வருடங்களில் உலகப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கொன்றை ஆசியா வகிக்கின்ற போதிலும் மொத்த சனத்தொகையில் மூன்றிலொரு பகுதியினர் நாளொன்றிற்கு ஒரு அமெரிக்க டொலருக்கும் குறைவான வருமானத்தையே பெறுகின்றனர்.

ஆசியாவில் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் இளவயதினரின் அதாவது வேலைதேடும் பருவத்தினரின் சனத்தொகைக்கேற்ப இங்கு 51 மில்லியன் புதிய வேலைவாய்ப்புகளை இவ்வருடத்திலும் அடுத்த வருடத்திலும் உருவாக்க வேண்டிய தேவை உள்ளது.

இதில் இப்பிராந்தியத்தில் பாரிய பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளை இந்தியாவில் 20.3 மில்லியன் வேலைவாய்ப்புகளும் சீனாவில் 10.9 மில்லியன் வேலைவாய்ப்புகளும் இந்தோனேசியாவில் 3.6 மில்லியன் வேலைவாய்ப்புகளையும் உருவாக்க வேண்டியுள்ளது.

எனினும், வேகமாக அதிகரித்து வரும் வேலை தேடுவோரின் சனத்தொகைக்குப் போதுமான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான வாய்ப்பு மிகக் குறைந்தளவிலேயே காணப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆசியாவின் வெளிநாட்டு வருமானத்தில் செல்வாக்குச் செலுத்தும் அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடியும் ஆசியர்களுக்கான வேலைவாய்ப்புகளை குறைக்குமென உலக வங்கியின் அறிக்கையை மேற்கோள் காட்டி சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

கிழக்கு ஆசியா மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கு அமெரிக்காவிலிருந்து 44 வீத வெளிநாட்டு வருமானமும் தெற்காசியாவுக்கு 28 வீத வெளிநாட்டு வருமானமும் கிடைப்பதாகவும் இவ் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது