._._._._._.
கேள்வி நேரம் : ஜனாதிபதி வேட்பாளர் எம் கெ சிவாஜிலிங்கத்துடன் சந்திப்பு
காலம் : மாலை 5:30 டிசம்பர் 21 2009 திங்கட்கிழமை
இடம்: Quakers Meeting House, Bush Road, Wanstead, London, E11 3AU.
தொடர்பு : த ஜெயபாலன்: 07800 596 786 அல்லது 0208 279 0354, ரி சோதிலிங்கம் 07846 322 369, ரி கொன்ஸ்ரன்ரைன்: 0208 905 0452
._._._._._.
‘என்னைத் துரோகி என்று இன்று அழைப்பவர்கள் அரசியல் யதார்த்தம் தெரியாதவர்கள்!’ என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம் கெ சிவாஜிலிங்கம் இன்று (மே 18 2009) தேசம்நெற்க்குத் தெரிவித்தார். தமிழரசுக்கட்சி ஆரம்பிக்கப்பட்டு 60வது ஆண்டை நினைவுகூருமுகமாக அதன் ஸ்தாபகர் தந்தை செல்வநாயகத்திற்கு மாலை அணிவித்துவிட்டு யாழில் தங்கியிருந்த எம் கெ சிவாஜிலிங்கம் தேசம்நெற்க்கு வழங்கிய சிறப்புப் பேட்டியில் மேற்கண்டவாறு தெரிவித்தார். ரெலோ அமைப்பில் இருந்து எம் கெ சிவாஜிலிங்கம், என் சிறிகாந்தா ஆகியோர் விலகியதாக வெளிவந்த செய்திகளிலும் உண்மையில்லை எனவும் தான் சுயேட்சை வேட்பாளராக நிற்பது தொடர்பாக கட்சிக்குள் எவ்வித முரண்பாடும் இல்லை எனவும் அவர் உறுதிபடத் தெரிவித்தார். அவருடைய நேர்காணல்…..
தேசம்நெற்: அண்மைக்காலம் வரை புலியாதரவு ஊடகங்களின் கௌரவிப்புக்களைப் பெற்ற நீங்கள் தற்போது அதே ஊடகங்களினால் துரோகியாக காட்டப்படுகின்றீர்கள் அது பற்றி என்ன கூற விரும்புகின்றீர்கள்?’
எம் கெ சிவாஜிலிங்கம்: என்னைத் துரோகி என்று இன்று அழைப்பவர்கள் அரசியல் யதார்த்தம் தெரியாதவர்கள்! பெப்ரவரி மாதத்தில் தேசம்நெற்க்கு வழங்கிய பேட்டியில் ( ”ஆயுதங்களை சர்வதேச கண்காணிப்பில் வைத்துவிட்டு புலிகள் பேச்சுவார்த்தைக்கு முன்வருவதை வரவேற்கிறோம்” சிவாஜிலிங்கம் – நேர்காணல் : ரி சோதிலிங்கம் & த ஜெயபாலன் ) தமிழீழ விடுதலைப் புலிகள் மூன்றாம் தரப்பிடம் ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பில் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைய வேண்டும் என்று கேட்டிருந்தேன். அன்று அதைச் செய்திருந்தால் இன்று இவ்வளவு மோசமான அழிவு ஏற்பட்டு இருக்க மாட்டாது. அப்போது பேசாமல் இருந்துவிட்டு இப்போது வந்து என்னைத் துரோகி என்கிறார்கள். இவர்கள் அரசியலைக் கொஞ்சம் படிக்க வேண்டும்.
தேசம்நெற்: ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளையும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் வெளிக் கொணர்வதற்கான சந்தர்ப்பம் என்று தெரிவித்துள்ளீரகள். ஆனால் நீங்கள் சுயேட்சையாகப் போட்டியிடுவதன் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பை அரசியல் ரீதியாகப் பலவீனப்படுத்தி உள்ளீர்கள்.
எம் கெ சிவாஜிலிங்கம்: தமிழ் தேசியக் கூட்டமைப்புக் கூட்டிய போது அனைவரும் ஒரே முடிவை எடுக்கவே முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு இத்தேர்தலை பகிஸ்கரிகலாம் என்ற அபிப்பிராயமும் சிலரால் முன்வைக்கப்பட்டது. சிவசக்தி ஆனந்தன் மட்டும் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் சரத் பொன்சேகாவை ஆதரிக்கலாம் எனத் தெரிவித்தார். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இன்னும் சிலர் பொறுத்திருந்து முடிவெடுக்கலாம் என்ற கருத்தைக் கொண்டிருந்தனர்.
மாறி மாறி ஆட்சிக்கு வருபவர்களை ஆதரித்த பழக்கத்தை விடும்படி கேட்டேன். குறைந்தபட்சம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மகிந்த ராஜபக்சவையோ சரத்பொன்சேகாவையோ ஆதரிக்க மாட்டாது என்று அறிக்கைவிடும்படியும் கேட்டேன் அவர்கள் உடன்படவில்லை. இவ்வாறு எவ்வித முடிவில்லாமல் கூட்டம் முடிவடைந்தது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடைசி வரை தமிழ் மக்களை காக்க வைக்க முடியாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையைப் பொறுத்தவரை அவர்கள் யாருடையதோ சமிஞசைக்காக காத்திருப்பதாகவே நான் நினைக்கின்றேன். இந்தத் தலைவர்களுடன் சர்வதேச அமைப்புகளும் இந்தியாவும் பேசிக்கொண்டுள்ளன. ஆனால் இதுவரை எவ்வித சமிஞ்சையும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை என்றே நினைக்கிறேன். தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் என்ஜிஓ ஒன்றின் அழைப்பில் ஜெனிவா சென்றுள்ளார். அது பற்றிய விபரம் எனக்குத் தெரியாது.
ஆனால் அக்கூட்டத்தில் கலந்துகொண்ட பன்னிருவரில் ஏழு பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவதற்கு ஆதரவு தெரிவித்தனர். நால்வர் ரெலோ இயக்கத்தைச் சார்ந்தவர்கள் இவர்களுடன் தங்கேஸ்வரி சந்திரநேரு மற்றும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்.
தேசம்நெற்: நீங்கள் சுயேட்சையாகப் போட்டியிடுவதால் உங்களுடைய ரெலோ அமைப்பிற்குள் பிளவை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளதே?
எம் கெ சிவாஜிலிங்கம்: இது ஊடகங்களினால் திரிபுபடுத்தப்பட்ட செய்தி. தமிழ் தேசியக் கூட்டமைப்பு பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த முன்வராததால் நான் சுயேட்சையாகப் போட்டியிட முடிவு செய்தேன். ஆனால் இந்த முடிவு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு அங்கமாக உள்ள ரெலோவினைப் பாதிக்கக் கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். அதனால் தான் நான் ரெலோ சார்பாக இல்லாமல் சுயேட்சையாகப் போட்டியிடுவது என்று கூடித் திர்மானித்தோம். அது மட்டுமல்ல அதற்காக எனது பதவியையும் உறுப்புரிமையையும் விட்டுச் செல்லவும் தயாராக இருந்தேன். இந்த விடயங்களே ஊடகங்கள் ரெலோவிற்குள் பிளவு ஏற்பட்டு விட்டது என்று தவறாக அர்த்தப்படுத்திக் கொண்டன. நான் இப்போதும் ரெலோ உறுப்பினன். எங்களுக்குள் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது.
தேசம்நெற்: நீங்கள் தமிழ் மக்களுக்கு என்ன உரிமைகளைக் கோருகின்றீர்களோ அவ்வுரிமைகளுக்காக நீண்ட காலமாகக் குரல் கொடுத்து வருபவர்கள் சிறிதுங்க ஜெயசூரியவும் விக்கிரமபாகு கருணரட்ணாவும். அப்படி இருக்கையில் நீங்களும் சரி தமிழ் தேசியக் கூட்டமைப்பும் சரி அவ்வாறான முற்போக்கு சக்திகளை ஆதரிக்க முன்வரவில்லை. ஏன்?
எம் கெ சிவாஜிலிங்கம்: நான் அன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டத்திற்குச் செல்வதற்கு முன்பாகவும் விக்கிரமபாகு கருணரட்ணவுடன் பேசிவிட்டுத்தான் சென்றேன். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஒருவரை பொது வேட்பாளராக நிறுத்துமாறும் இல்லையேல் விக்கிரமபாகு கருணாரத்னவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்க வேண்டும் என்று நான் கருத்தை முன் வைத்தேன். விக்கிரமபாகு கருணாரட்னாவை ஆதரிப்பதற்கு கஜேந்திரகுமார் மட்டுமே விருப்பம் தெரிவித்தார். ஏனையவர்கள் கொள்கையளவில் அதனை ஏற்றுக்கொண்டாலும் நடைமுறையில் விக்கிரமபாகு கருணாரட்ன வெல்வதற்கான வாய்ப்பில்லை என்பதன் அடிப்படையில் அவரை ஆதரிக்க முன்வரவில்லை.
நான் விக்கிரமபாகு கருணாரட்னவுடன் தொடர்ந்தும் பேசி வருகின்றேன். ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் இருவரும் இணைந்தே தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட உள்ளோம். தமிழ் வாக்காளர்கள் மத்தியில் சிவாஜிலிங்கத்திற்கு வாக்களிக்கும்படி இருவரும் மக்களைக் கோருவோம். அதே போல் சிங்கள வாக்காளர் மத்தியில் விக்கிரமபாகு கருணரட்னாவை ஆதரிக்கும்படி இருவரும் கோருவோம்.
தேசம்நெற்: இணைந்து தேர்தல் பிரச்சாரம் செய்யும் நீங்கள் ஏன் இரு வேட்பாளராக தேர்தலில் நிற்கிறீர்கள்?
எம் கெ சிவாஜிலிங்கம்: கடந்த தேர்தல்களில் விக்கிரமபாகு கருணாரட்ன பெற்ற வாக்குகள் குறைவானது. இதுவொரு தந்திரோபாய நடவடிக்கையே. எமது நோக்கம் இரு பிரதான வேட்பாளர்களுக்கும் விழும் வாக்குகளைச் சிதறடிப்பதே. இதன் மூலம் இவர்களுக்கு 50 வீதமான வாக்குகளைக் கிடைக்காமல் செய்வதில் தான் எமது வெற்றி தங்கியுள்ளது. 50 வீதமான வாக்குகள் கிடைக்காத நிலையில் 2வது தெரிவை கணிக்க வேண்டிய நிலையேற்படும். இன்று என்னைத் துரோகி என்பவர்கள் நான் இந்நிலையை ஏற்படுத்தினால் என்ன சொல்வார்கள்.
தேசம்நெற்: நீங்கள் சுயேட்சையாக நிற்பதற்கு பின்னாலுள்ள அரசியல் பற்றிய சந்தேகங்கள் உள்ளது. நீங்கள் மகிந்த ராஜபக்சவின் உந்துதலால் அல்லது இந்தியாவின் உந்துதலால் தமிழ் வாக்குகளை பொன்சேகாவுக்குச் செல்ல விடாமல் தடுப்பதற்காகவே தேர்தலில் களம் இறங்கி இருப்பதாக குற்றம் சாட்டப்படுகின்றது. இது பற்றி என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?
எம் கெ சிவாஜிலிங்கம்: இப்படி பல ஊகங்கள் வெளிவரும். இவர்கள் ஒரு விசயத்தை மறக்கிறார்கள் இன்று யாழ்ப்பாணத்தில், வவுனியாவில் புளொட், கிழக்கில் ரிஎம்விபி கருணா, ஈபிஆர்எல்எப் என இவர்கள் மகிந்த ராஜபக்சவுக்காக தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். இவர்கள் மகிந்த ராஜபக்சவுக்கு கணிசமான வாக்குகளைப் பெற்றுக் கொடுப்பார்கள். இதற்கு எதிராக தீவிரமாக பிரச்சாரம் செய்யாவிட்டால் பெருமளவு தமிழ் வாக்குகள் மகிந்த ராஜபக்சவுக்கு செல்லும் வாய்ப்புகளும் உள்ளது. அதனையும் தடுப்பதற்காகவே நான் தேர்தலில் நிற்கின்றேன்.
இன்று இலங்கையில் உள்ள எந்தப் பாராளுமன்ற உறுப்பினர் யுத்தக் குற்றங்கள் தமிழ் மக்களின் படுகொலைகள் பற்றிக் கதைக்கிறார்கள். அப்படிக் கதைக்கும் ஒரு தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம் பியைக் கூறுங்கள். நான் இன்றைக்கும் இலங்கையில் இருந்து கொண்டு தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக் குரல் கொடுக்கின்றேன். சுயாட்சி ஒன்றே தமிழ் மக்களுக்கு தீர்வு என்கின்றேன்.
மஞ்சள் கண்ணாடியைப் போட்டுப் பார்த்துக் கொண்டு மஞ்சளாக இருக்கிறது என்றால் என்ன செய்ய. தமிழீழ விடுதலைப் புலிகளை வெளிப்படையாக ஆதரித்தவன். இன்று ஆயுதப் போராட்;டம் முடிவுக்கு வந்துவிட்டது. புலிகள் அழிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் அழிக்கப்படவில்லை. என்னைப் பொறுத்தவரை கொலை செய்தவனுக்கு அல்லது கொலை செய்யச் சொன்னவனுக்கு வாக்குப் போடு என்று தமிழ் மக்களிடம் போய்க் கேட்க முடியாது.
ஒருசிலர் திட்டமிட்ட பிரச்சாரங்களை என்மீது நடத்துகின்றனர். நான் இலங்கை அரசியலமைப்புக்கு கட்டுப்பட்டுவிட்டேன் என்றும் குற்றம்சாட்டுகின்றனர். அர்த்தமற்ற குற்றச்சாட்டுகள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருமே இலங்கை அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டு தான் பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். நான் ஜனாதிபதித் தேர்தலில் நிற்பதால் மட்டும் இலங்கை அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதாகி விடாது.
தேசம்நெற்: நீங்கள் டிசம்பர் 20ல் மீண்டும் ஐரோப்பா வரவுள்ளீர்கள். இதன் நோக்கம் என்ன? ஐரோப்பாவில் உங்களுக்கு புலம்பெயர் தமிழ் மக்களின் ஆதரவைத் தேடும் நோக்கம் உண்டா?
எம் கெ சிவாஜிலிங்கம்: என்மீதும் நான் சுயேட்சையாகப் போட்டியிடுவது தொடர்பாகவும் சிலர் விசமத்தனமான பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர். தமிழகத்தில் உள்ள ஊடகங்களையும் அதற்குத் தூண்டிவிட்டுள்ளனர். இதுவொரு சிறு குழுவினரால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்ற பிரச்சாரம். அதனால் லண்டனுக்கும் தமிழகத்திற்கும் சென்று என்னுடைய அரசியல் நடவடிக்கைகளைத் தெளிவுபடுத்துவதற்காகவே இந்த அவசர பயணம். லண்டனில் மூன்று நாட்களும் தமிழகத்தில் நான்கு தினங்களும் தங்கி இதனைச் செய்ய உள்ளேன்.
நிச்சயமாக புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் ஆதரவைத் திரட்டிக்கொள்வதும் எனது பயணத்தின் நோகம்.
அரைமணி நேரம் நீடித்த நேர்காணலின் முடிவில் லண்டன் தமிழர்களின் தேசம்நெற் வாசகர்களின் கேள்விகளுக்கு பொது மேடையில் பதிலளிப்பதற்கு நீங்கள் தயார எனக் கேட்டேன். சற்றும் தயக்கமின்றி ‘பொதுக்கூட்டத்தை கூட்டுங்கள் எல்லாவிதமான கேள்விகளுக்கும் பதிலளிக்கத் தயார்’ என ஜனாதிபதி வேட்பாளர் எம் கெ சிவாஜிலிங்கம் உறுதிபடத் தெரிவித்தார். அவரது உறுதிமொழிக்கமைய எம் கெ சிவாஜிலிங்கத்துடனான கேள்வி நேரம் ஒன்றுக்கு தேசம்நெற் ஏற்பாடு செய்துள்ளது. டிசம்பர் 21 2009 மாலை 5:30 முதல் 9:00 மணிவரை இக்கேள்வி நேரம் இடம்பெறும்.
நிகழ்வு விபரம்:
கேள்வி நேரம் : ஜனாதிபதி வேட்பாளர் எம் கெ சிவாஜிலிங்கத்துடன் சந்திப்பு
காலம் : மாலை 5:30 டிசம்பர் 21 2009 திங்கட்கிழமை
இடம்: Quakers Meeting House, Bush Road, Wanstead, London, E11 3AU.
தொடர்பு :
த ஜெயபாலன்: 07800 596 786 அல்லது 0208 279 0354
ரி சோதிலிங்கம் 07846 322 369
ரி கொன்ஸ்ரன்ரைன்: 0208 905 0452