2009

2009

ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் இம்முறையே கூடுதலான வேட்பாளர்கள்

sri_election.jpgஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை தேர்தல் செயலகத்தில் இடம்பெற உள்ளது. எதிர்வரும் ஜனவரி 26ம் திகதி நடைபெறவுள்ள தேர்தலுக்காகக் கட்டுப்பணம் செலுத்த வழங்கப்பட்டிருந்த காலக்கெடு நேற்று நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைந்தது.  ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு 23 வேட்பாளர்கள் கட்டுப் பணம் செலுத்தியுள்ளனர். இதில் 18 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும் 5 சுயேச்சை வேட்பாளர்களும் இருப்பதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.

ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் இம்முறையே கூடுதலான வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். 2005 தேர்தலில் 13 வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. வேட்புமனுத் தாக்கலை முன்னிட்டு ராஜகிரிய தேர்தல் செயலக பிரதேசத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் போக்குவரத்து ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளன.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்யவுள்ளதால் பொரளையில் இருந்து வெலிக்கடை பொலிஸ் நிலையம் வரையிலான வீதி மற்றும் டி. எஸ். சேனாநாயக்க சந்தி முதல் பாராளுமன்ற பாதையினூடாக வெலிக்கடை பொலிஸ் வரையிலான வீதி ஆகியவற்றில் இன்று காலை 9.00 மணி முதல் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டிருக்கும். இதேவேளை தேர்தல் செயலக பகுதியில் மேலதிக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

வேட்புமனுத் தாக்கலுக்கு முன்னதாக வேட்பாளர்கள் தமது பதாகைகள், சுவரொட்டிகள் என்பவற்றை அகற்றுமாறு கோரப்பட்டுள்ளது. வேட்பு மனுத் தாக்கலின் பின்னர் சகல சுவரொட்டிகள் பதாகைகள் என்பன அகற்றப்பட உள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இதேவேளை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த காலக்கெடு இன்றுடன் நிறைவடைவதாக தேர்தல் செயலகம் கூறியது. புனர்வாழ்வு பெற்றுவரும் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கும் தபால் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. வேட்புமனுக்கள் தாக்கல் செய்வதற்காக குறித்த வேட்பாளருடன் மேலும் இருவருக்கு தேர்தல் செயலகத்துக்கு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் வேட்பாளருடன் மேலும் 10 விருந்தினர்களுக்கும் அங்கு வர அனுமதி கிடைக்கும்.

வேட்பு மனுக்கள் தொடர்பில் ஆட்சேபங்களை முன்வைக்க இன்று காலை 9.00 மணி முதல் 11.30 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆட்சேபங்களின் பின்னர் தேர்தலில் போட்டியிடத் தகுதியான வேட்பாளர்களின் விபரங்களை தேர்தல் ஆணையாளர் அறிவிப்பார்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடுகிறார். ஐ. தே. க.வும், ஜே. வி. பியும் இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை. புதிய ஜனநாயக முன்னணி சார்பாக சரத் பொன்சேகா போட்டியிடுகிறார்.

இது தவிர இடதுசாரி முன்னணி சார்பாக விக்ரமபாகு கருணாரத்ன, ஐ. தே. க மாற்று முன்னணி வேட்பாளராக சரத் கோங்கஹகே, ஐக்கிய சோசலிசக் கட்சி வேட்பாளராக சிறிதுங்க ஜயசூரிய, சோசலிச சமத்துவக் கட்சி சார்பாக விஜே டயஸ் அனைவரும் பிரஜைகள் அனைவரும் மன்னர்கள் கட்சி வேட்பாளராக எம். பி. தெமினி முல்ல, இலங்கை முற்போக்கு முன்னணி வேட்பாளராக ஜே. ஏ. பி. பீடர் நெல்சன் பெரேரா, புதிய சிஹல உருமய வேட்பாளராக சரத் மனமேந்திர, தேசிய அபிவிருத்தி முன்னணி வேட்பாளராக அசல அசோக சுரவீர, இலங்கை தொழிலாளர் கட்சி வேட்பாளராக ஜி. டி. பி. எஸ். ஏ. லியனகே, எமது தேசிய முன்னணி வேட்பாளராக கே. பி. ஆர். எல். பெரேரா, ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி சார்பாக எம். சீ. எம். இஸ்மாயில், ருகுணு மக்கள் கட்சி சார்பாக அருண த சொய்சா, தேசிய முன்னணி சார்பாக சனத் பின்னதுவ, தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி வேட்பாளராக சேனரத்ன சில்வா, ஜனசெத முன்னணி சார்பாக பத்தரமுள்ள சீலரத்ன தேரர், ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பாக சன்ன ஜானக கமகேயும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

சுயேச்சையாக போட்டியிட 5 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

யாழ். மாவட்ட முன்னாள் எம்.பி., ஐ. எம். இலியாஸ், முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா, முன்னாள் ஐ. தே. க. எம்.பி, யு. பி. விஜேகோன், தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி, கே. சிவாஜிலிங்கம், டபிள்யு. வி. மஹிமன் ரஞ்சித் ஆகியோரே இவ்வாறு சுயேச்சையாக போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

நிறைவேற்று ஜனாதிபதிக்கான அதிகாரம் புலிகளுக்கு எதிராகவே பயன்படுத்தப்பட்டது – ராஜபக்ஷ

mahinda0.jpgநிறைவேற்று ஜனாதிபதிக்கான அதிகாரத்தை நான் தவறாகப் பயன்படுத்தியதாக எவரும் கூற முடியாது.  புலிகளைத் தடை செய்தமை, புலிகளுடனான உடன்படிக்கையை இல்லாதொழித்தமை போன்றவற்றிற்கே அதனைப் பயன்படுத்தியுள்ளேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அதேவேளை, நாம் திறைசேரியிலிருந்து பெருமளவு நிதியைச் செலவிட்டதாக எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். நாட்டின் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளுக்கே இந்த நிதியைச் செலவிட்டதாக தெரிவித்த ஜனாதிபதி, எந்த முறைமையின் கீழாவது இலவசக் கல்வியையோ, சுகாதாரத்தையோ இல்லாதொழிக்க முற்படவில்லையென்றும் ஜனாதிபதி தெரிவித்தார். பதிவு செய்யப்பட்ட மற்றும் உதவி மருத்துவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேற்று அலரிமாளிகையில் சந்தித்தனர். இந்நிகழ்வில் உரையாற்று கையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, திருமதி பேரியல் அஷ்ரப், ராஜித சேனாரத்ன, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, ஜயரத்ன ஹேரத், மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா ஆகியோர் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் கூறியதாவது, மனிதாபிமான யுத்தத்தில் ஈடுபட்ட படைவீரர்கள் தொடர்பாக வெளியிடப்பட்ட கூற்றுக்கள் சர்வதேச அளவில் பெரும் அசெளகரியங்களுக்கு நாடு முகங்கொடுக்க காரணமாகியுள்ளன.

இதனால் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மட்டுமன்றி முழு நாடும் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாத்து எதிர்கால சந்ததிக்கு சிறந்ததொரு நாட்டை உருவாக்கிக் கொடுக்க நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுகையில் ஒரு தவறான கூற்றின் மூலம் தாய் நாட்டைக் காட்டிக்கொடுக்க சிலர் முனைகின்றனர்.

இந்தவறான கூற்று காரணமாக 58வது படையணியினர் வெளிநாட்டுப் பயிற்சிகளில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான வெளிநாட்டு விசாவும் மறுக்கப்பட்டுள்ளது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியால் எதையும் செய்ய முடியும் என்று சொல்பவர்கள் புலிகளுடனான உடன்படிக்கையை ஞாபகப்படுத்திப் பார்க்க வேண்டும். அன்று நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இருந்தபோதும், பாராளுமன்றத்தின் பலத்தைப் பயன்படுத்தி ரணில் விக்கிரம சிங்கவே புலிகளுடன் உடன்படிக்கையை மேற்கொண்டார். நிறைவேற்று ஜனாதி பதியால் முடியாததை ரணில் விக்கிரமசிங்க செய்தார், ஜனாதிபதியால் வெறுமனே அதனைப் பார்த்துக்கொண்டிருக்கத்தான் முடிந்தது.

அரசாங்கம் நாடளாவிய ரீதியில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. கடல் வர்த்தகத்தின் கேந்திர நிலையமாக இலங்கையை உருவாக்கும் வகையில் ஐந்து துறைமுகங்கள் ஒரே சமயத்தில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. எந்தகைய அபிவிருத்தி முன்னேற்றங்களை நாம் எட்ட முடிந்தாலும், நல்லொழுக்க முள்ள இளைய சமுதாயமொன்றைக் கட்டியெழுப்ப முடியாமற் போனால் எதிலும் பயனில்லை.

அதனைக் கருத்திற்கொண்டே நாம் எதிர்கால சந்ததியினரின் நலனைக் கருத்திற்கொண்ட திட்டங்களை மேற்கொண்டு வருகிறோம். எமது கலா சாரத்தை மதிக்கின்ற, நாட்டை நேசிக்கின்ற எதிர்கால சமுதாயத்தை உருவாக்குவதே எமது நோக்கமாகும். சமூகத்தையும், பிள்ளைகளையும் பாது காத்து புதிய யுகமொன்றை உருவாக்கு வதற்கான நடவடிக்கைகளையே நாம் மேற்கொண்டு வருகிறோம்.

நாம் எந்தளவு நிதியைச் செலவிட்டும் பயனில்லை. தொழில் வாய்ப்புக்கான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தியும் பயனில்லை. எமது எதிர்கால தலை முறையினர் சிறந்த கல்விமான்களாக, ஒழுக்கம் மிகுந்தவர்களாக உருவாக்கப்பட வேண்டும்.

இதற்கான ஒரு வழிமுறையாகவே பொது இடங்களில் புகை பிடித்தல், போதை ஒழிப்பு போன்ற செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளோம். அத்துடன் இவ்வருடத்தை ஆங்கில மொழி மற்றும் தொழில்நுட்ப வருடமாகவும் பிரகடனப் படுத்தியுள்ளோம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

வடக்கில் மீள்குடியேறுவோரின் வாழ்க்கைத் தரத்ததை உயாத்த அரசு நடவடிக்கை – அமைச்சர் ஜீ. எல் . பீரிஸ் அறிவிப்பு

gl_pereis.jpgபயங்கர வாதம் காரணமாக வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்தும்போது அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர் மட்டத்துக்கு கொண்டுவர அரசு சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் வெளிநாட்டு வர்த்தக அமைச்சர் ஜீ. எல் . பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தகவல் தெரிவித்தபோதே இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

வடக்கில் மீள்குடியமர்த்தப்படுவோரின் நன்மை கருதி அப்பிரதேசத்தின் விவசாய நடவடிக்கைகளையும் கடற்றொழில் நடவடிக்கைகளையும் முன்னெப்போதுமில்லாத அளவில் அபிவிருத்தி செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில் நாட்டில் பொருளாதாரத்திலும் ஏற்றுமதி வர்த்தகத்திலும் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் நாட்டின் சமூக கலாசாரத்திலும் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. அரசியலிலும் ஒரு ஸ்திரமான நிலைக்கு நாம் வந்துள்ளோம் என்றும் அமைச்சர் கூறினார்.

உலகில் பயங்கரவாத ஒழிப்புக்கு வளைகுடா ஒத்துழைப்பு மாநாடு ஆதரவு. பிராந்தியத்தில் பொது நாணயத்திற்கும் இணக்கம்.

உலகில் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட் டுவதற்கு ஆதரவு தெரிவிப்பதென வளை குடா நாடுகளின் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம், பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை க்கும் பாதுகாப்புக்கும் ஒத்துழைப்புடன் செயற்படுவதெனவும் குவைத்தில் நடைபெற்ற 30 ஆவது உச்சி மாநாட்டில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

குவைத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற வளைகுடா ஒத்துழைப்பு நாடுகளின் உச்சி மாநாடு நிறைவின் பின்னர் நடந்த செய்தியாளர் மாநாட்டில் குவைத் பிரதி பிரதமரும் வெளிநாட்டு அமைச்சருமான ஷேக் கலாநிதி மொகமட் சபா அல்-சலீம் அல்-சபா தெரிவித்தார்.

வளைகுடா ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளர் நாயகம் அப்துல் ரஹ்மான் அல்-அட்டியாவும் கலந்துகொண்டு கூட்டாக நடத்திய இந்தச் செய்தியாளர் மாநாட்டில் அவர்கள் மேலும் தகவல் தருகையில் :-

உச்சி மாநாட்டின் பெறுபேறுகள் அனைத்து எதிர்பார்ப்புகளையும் விஞ்சி நிறைவேறியிருப்பதாகத் தெரிவித்தனர். குறிப்பாக வளைகுடா நாடுகளுக்கிடையில் கூட்டு மின்சார இணைப்பை ஆரம்பிக்க முடிந்தமை பாரிய வெற்றியாகும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

எதிர்காலத்தில் இந்த நாடுகளுக்கிடையில் ரயில்வே போக்குவரத்தை ஆரம்பிக்கவும், பொதுவான நாணயமொன்றை உருவாக்குவதற்கான பொறிமுறையைத் தயாரிக்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

குவைத், சவூதி அரேபியா, கட்டார், பஹ்ரெய்ன், துபாய், ஓமான் ஆகிய ஆறு நாடுகளின் கூட்டமைப்பான ஜீசிசி உச்சி மாநாடு குவைத் மன்னர் சபா அல்-அஹ்மட் அல்-சபீர் அல்-சபாவின் தலைமையில் பயான் மாளிகையில் நடைபெற்றது.

யாழ்ப்பாணத்திலிருந்து பிற மாவட்டம் செல்லும் பயணிகளுக்கு புதிய ஏற்பாடுகள்

buss.jpgயாழ். குடாநாட்டில் இருந்து பிற மாவட்டங்களுக்கு ஏ-9 தரைப்பாதை மூலம் பேருந்துகளில் பயணஞ் செய்கின்ற பொதுமக்கள் தற்போது எதிர்நோக்கி வருகின்ற சிரமங்களை நிவர்த்திக்கும் முகமாக சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அனைத்துத் தரப்பினருடனும் கலந்துரையாடி சில தீர்மானங்களை எடுத்துள்ளார்.

பயணிகள் எதிர்கொள்ளும் சிரமங்கள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதையடுத்து திங்கட்கிழமை (14) அதிகாலை யாழ். புகையிரத நிலையக் கட்டிடப் பகுதிக்குச் சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அங்குள்ள நிலைமைகளை நேரில் கண்டறிந்தமை குறிப்பிடத்தக்கதாகும். எடுக்கப்பட்ட தீர்மானங்களின் பிரகாரம், கிளிநொச்சி செல்லும் அரச ஊழியர்கள் காலை 6.00 மணிக்கு யாழ். சிங்கள மகா வித்தியாலய மைதானத்திற்கு வருகை தர வேண்டும் இவர்கள் பயணஞ் செய்யும் பேருந்துகள் காலை 7.00 மணிக்கு அங்கிருந்து புறப்படும்.

இதேநேரம் சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் பகுதிகளில் இருந்து கிளிநொச்சி செல்லும் அரச ஊழியர்களை அப்பகுதிகளில் வைத்து பேருந்துகளில் ஏற்றிச் செல்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இலங்கை போக்குவரத்து சபைக்குரிய பேருந்துகளில் கொழும்பு செல்லும் பயணிகள் காலை 6.00 மணிக்கு யாழ். பிரதான பஸ்தரிப்பு நிலையத்திற்கு வருகை தர வேண்டும். பின்னர் 7.00 மணிக்கு இப்பயணிகள் சிங்கள மகா வித்தியாலய மைதானத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு சோதனைக் கடமைகள் முடிவுற்றதன் பின்னர் இவர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் காலை 8.30 க்கும் 9 மணிக்கும் இடையில் கொழும்பு நோக்கிப் புறப்படும்.

அதே நேரம் தனியார் பேருந்துகளில் கொழும்பு செல்லும் பயணிகள் காலை 6.30 மணிக்கு நேரே சிங்கள மகா வித்தியாலய மைதானத்திற்கு வருகை தர வேண்டும். இப்பயணிகளும் 8.30 க்கும் 9.00 க்கும் இடைப்பட்ட நேரத்தில் புறப்படும் முதலாவது வாகனத் தொடரணியில் கொழும்பு நோக்கிப் புறப்பட இயலும்.

இதனிடையே வவுனியா செல்லும் பயணிகள் காலை 6.00 மணிக்கு யாழ். புகையிரத நிலையக் கட்டிடத்திற்கு வருகை தர வேண்டும். இப்பயணிகள் அங்கிருந்து நேரே வவுனியா செல்வதற்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதால் அவ்வேற்பாடுகள் நிறைவுறும் வரையில் தற்பொழுது நடைமுறையில் இருக்கும் முறைமை சில நாட்களுக்கு நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது வாகனத் தொடரணி காலை 10.30 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்படும்.

‘ரணில் யாழ்ப்பாணம் சென்றுவர வழி ஏற்படுத்தியவர் ஜனாதிபதி’

கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொள்ள முடியாமலிருந்த எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு யாழ்ப்பாணம் சென்று வர வழி ஏற்படுத்திக் கொடுத்தவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவாகும் என்று போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூறினார்.

மாத்தறை சென். தோமஸ் கல்லூரியில் திங்களன்று நடந்த நிகழ்வொன்றில் அவர் கலந்து கொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது, ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் கூட அவரால் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ய முடியவில்லை.

ஐ.தே.கட்சியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்க அமைச்சர்களாக பதவிப் பிரமாணம்

honstonindika.jpgஐக்கிய தேசிய கட்சியின் அதிருப்தியாளர்களான இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
 
இதன்படி குருநாகல் மாவட்ட ஐ.தே.கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்ரன் பெர்ணாண்டோ அமைச்சரவை அந்தஸ்து உள்ள காணி,  காணி அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் படைவீரர்களின் நலன் காக்கும் அமைச்சராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். இதேவேளை, இயற்கை வளத்துறை அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சராக இந்திக பண்டாரநாயக்காவும் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
 
இவர்கள் இருவரும் நேற்று பிற்பகல் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் தாம் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிக்கப் போவதாக அறிவித்திருந்தனர்.

வடக்கில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட மூவரடங்கிய குழு நியமனம்!

வடக்கில் 30 வருடகால மோதல் முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து அங்கு சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகளை நீதிமற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு மேற்கொண்டுள்ளது. இதற்கென உயர்நீதிமன்ற நீதியரசர் தே.சிறிபவன் தலைமையில் மூன்று பேரடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளதாக அமைச்சின் ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதித்துறைக் கட்டமைப்பை வடமாகணத்தில் உடன் அமுலுக்குக் கொண்டு வருவதற்கும் நீதி மன்ற நிர்வாகத்தை உடன் அமுல்படுத்துவதற்குமான ஏற்பாடாக இக்குழுவை நியமித்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். அரச அதிபர் கே.கணேஸ் உட்பட நீதி மற்றும் அரசியலமைப்பு விவகார அமைச்சின் அதிகாரிகள் சிறைச்சாலை உயர் அதிகாரிகளும் இக்குழுவில் இடம்பெறுகின்றனர

“தினமின’ சிங்களப் பத்திரிகைக்கு வயது 100

dinamina.jpgலேக் ஹவுஸ் பத்திரிகையான ‘தினமின” (சிங்கள நாளிதழ்)  நூறு வருடங்களை இன்று பூர்த்தி செய்கின்றது.

இதனை முன்னிட்டு தேசம்நெற் வாசகர்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

1909ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ம் திகதி இந்தப் பத்திரிகை முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்டது.

மறக்கப்படும் வன்னி மக்களும், மறந்து போகும் புலம்பெயர் மக்களும். – லிற்றில் எய்ட்கள் தொடர வேண்டும்!!! : த ஜெயபாலன்

முன்னாள் குழந்தைப் போராளிகள்தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களைப் பற்றிக் கட்டிய விம்பமும் இறுதிப் போர்! இறுதிப் போர்!! என்று முழங்கி தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச ஊடகங்கள் புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு தவறான தகவல்களை அள்ளிவீசி அவர்களை ஒரு மாயை உலகிற்குள் தள்ளிவிட்டிருந்தனர். இன்று இந்த ஊடகங்களில் போர் முழக்கம் இல்லை. ஆனால் வெற்று முழக்கங்களுக்கு குறையுமில்லை. ஆனால் இந்த ஊடகங்களினால் யுத்த வலைக்குள் நிர்ப்பந்திக்கப்பட்ட வன்னி மக்களது வாழ்வு இன்னமும் கேள்விக்குறியுடன் தொடர்கின்றது. மே 18 வரை வன்னி மக்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் பணயக் கைதிகளாக்கி அவர்கள் வகைதொகையின்றி கொல்லப்படுவதற்கும் வகைதொகையின்றி அங்கவீனர்கள் ஆவதற்கும் தங்கள் பூரண ஆதரவை வழங்கி வந்த புலிசார்பு ஊடகங்களும் தெரிந்தும் தெரியாமலும் புலிசார்பு ஊடகங்களால் வழிநடாத்தப்பட்ட இந்த மக்களது அவலத்திற்குப் பொறுப்பான புலம்பெயர்ந்த மக்களும் மே 18க்குப் பின் அந்த மக்களை பெரும்பாலும் கைவிட்டுள்ளனர். பாலியல் வல்லுறவு கொண்டவனையே கணவனாக்கும் தமிழ் தேசிய மரபின் அறத்தினையே புலித் தேசியம் பேசுபவர்கள் வன்னி மக்கள் விடயத்தில் எடுத்துள்ளனர். வன்னி மக்களுக்கு மிகப்பெரும் அவலத்தை ஏற்படுத்திய அம்மக்களை மானபங்கம் செய்த இலங்கை அரசுதான் அந்த மக்களுக்கு வாழ்க்கை கொடுக்க வேண்டும் என்று இவர்கள் அம்மக்களைத் கைகழுவி விட்டுள்ளனர்.

மே 18க்குப் பின் தற்போது 6 மாதங்கள் ஓடிவிட்டது. இந்த மக்களுக்கு குறைந்தபட்ச உதவிகளையாவது செய்வது பற்றி தமிழ் மக்களுக்காக குரல்கொடுக்கின்றோம் மக்களுடன் நிற்கின்றோம் என்ற எந்த புலம்பெயர் அரசியல் அமைப்புகளும் முன்வரவில்லை. அந்த மக்களைச் சென்று பார்க்க தங்களை அனுமதிக்கவில்லை என்று ஒப்பாரி வைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு சென்று பார்த்த பின் அந்த மக்களுக்கு என்ன செய்தார்கள் என்றும் தெரியவில்லை. வன்னி மக்களின் பாராளுமன்றப் பிரதிநிதிகள் போல் அல்லாது புலிகளின் புலம்பெயர்ந்த புலி ஆதரவு அமைப்புகளின் பிரதிநிதிகளாகச் செயற்பட்ட இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பிக்கள் வன்னி மக்கள் தொடர்பில் எதனையும் செய்ய முன்வரவில்லை. இலங்கையில் இருந்து ஐரோப்பா வந்து யுத்த முழக்கம் இட்டவர்கள் ஏன் மீண்டும் ஒருமுறை லண்டன் வந்து அந்த மக்களின் புனர்வாழ்விற்கு முழக்கம் இடக்கூடாது? அதற்கு யார் தடைவிதித்தனர்?

2004 டிசம்பர் 26 சுனாமி நடைபெற்று 5வது ஆண்டு நிறைவடைகின்றது. இந்த சுனாமி நிதி, கண்ணீர் வெள்ளம் என்றெல்லாம் மக்களிடம் சேர்த்த நிதி பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடையவில்லை. வெண்புறா என்றும் வணங்கா மண் என்றும் தமிழ் சுகாதார அமைப்பு என்றும் பல பெயர்களில் தமிழ் மக்களுக்காகச் சேர்க்கப்பட்ட நிதிக்கு இதுவரை சரியான கணக்குகள் பொதுத் தளத்தில் வைக்கப்படவில்லை. வெண்புறா பொதுத்தளத்தில் வைத்த கணக்கு விபரம் சுண்டைக்காய் கால்ப் பணம் சுமைகூலி முக்கால் பணம் என்றளவிலேயே செலவிழிக்கப்பட்டு உள்ளது. தாயக மக்களின் அவலத்தின் பெயரில் புலிசார்பு அமைப்புகளால் சேகரிக்கப்ட்ட நிதி பெரும்பாலும் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள அவ்வமைப்பு சார்ந்தவர்களின் புனர்வாழ்விற்கே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

அன்று சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேசம் நிவாரணப் பணிகளைச் செய்ய முற்பட்ட போது நிதர்சனம் போன்ற இணையங்கள் அரசின் கைக்கூலிகள் என்ற சேறடித்தன. இன்று வன்னி மக்களுக்கான நிவாரணங்களை தேசம், லிற்றில் எய்ட் மேற்கொண்டபோது அதற்கு சேறடிப்பதற்கு நிதர்சனம் இயங்கவில்லை. அதன் வேலையை வேறு சிலர் (புலி மார்க்ஸிஸட்டுக்கள்) பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இன்று இந்தப் புலம்பெயர் புலிசார்பு அமைப்புகளால் கைவிடப்பட்டவர்கள் அப்பாவிப் பொது மக்கள் மட்டுமல்ல ஆயிரக்கணக்கான போராளிகளும் அவர்களது குடும்பத்தினரும் ஆவர். குறிப்பாக சரணடைந்த சிறுவர் படையணியைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான போராளிகளில் ஒரு சிறு பிரிவினர் அம்பேபுச புனர்வாழ்வு மையத்தில் வைத்துப் பராமரிக்கப்பட்டனர். நவம்பர் 15 உடன் அம்பேபுச புனர்வாழ்வு மையம் மூடப்பட்டு அவர்கள் இரத்மலானை இந்துக் கல்லூரிக்கு மாற்றப்பட்டனர். தற்போது இரத்மலானை இந்துக் கல்லூரியில் 277 குழந்தைப் போராளிகள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். http://littleaid.org.uk/sites/littleaid.org.uk/files/Ambepusse_Project_Little_Aid.pdf

இவர்களது புனர்வாழ்வுக்கான உதவிகளை மேற்கொள்ள இவர்களை யுத்தத்திற்கு அனுப்பிய புலம்பெயர்ந்த புலி ஆதரவு அமைப்புகள் தவறிவிட்டன. இவர்கள் குழந்தைப் பருவத்திலேயே போராட்டத்தில் இணைக்கப்பட்டதால் சாதாரண குழந்தைகளுக்குரிய மனநிலையில் இல்லை. இவர்களுக்கு விசேட உளவியல் பரமாரிப்பு அவசியமாகின்றது. ஆனால் இவர்களைப் பராமரிக்கின்ற பொறுப்பை புலம்பெயர் அமைப்புகள் ஏற்க மறுக்கின்றனர். அதற்கு அவர்கள் பிரச்சினைக்குரியவர்கள், உளவியல் பிரச்சினையுடையவர்கள் என்பதே முக்கிய காரணமாக உள்ளது.

little_aidஇந்த குழந்தைப் போராளிகளை நேரில் சென்று பார்த்து அவர்கள் விரும்பியபடி அவர்களுக்கு லிற்றில் எயட் 1785பவுண்கள் செலவில் இசைக்கருவிகளை வழங்கி அவர்களுக்கு சிறு ஆறுதலை அளிக்க முற்பட்டது. மேலும் லிற்றில் எய்ட் தேசம்நெற் மேற்கொண்ட வன்னிமுகாம் மாணவர்களுக்கான கல்வித் திட்டத்திலும் பங்களிப்புச் செய்தது. வன்னி முகாம் குழந்தைகளுக்கான பால்மா, முகாமில் இருந்தவர்களுக்கான துணி வகைகள், மரக்கறிகள் தற்போது மருந்து வகைகள் என லிற்றில் எய்ட் பெயருக்கு ஏற்ற அளவில் முடிந்த அளவில் சிறு உதவிகளை வழங்கியது. இந்த மக்களுக்கு உதவுவதை லிற்றில் எய்ட் தனது கடமையாக சமூகப்பொறுப்பாகக் கருதுகின்றது. தனது கணக்கு விபரம் முழுவதையும் இணையத்தில் பிரசுரித்துள்ள லிற்றில் எய்ட் இதுவரை 5521 பவுண்களை நன்கொடையாகப் பெற்றுள்ளது. ஆனால் 10183 பவுண்களை வன்னி முகாம்களின் உதவிக்கு செலவழித்துள்ளது. 5000 பவுண்கள் வரை லிற்றில் எய்ட் ரஸ்டிகளே பொறுப்பெற்றுள்ளனர். http://littleaid.org.uk/project_reports

இந்த மக்களுக்கு முடிந்த எல்லா வகையிலும் உதவிகள் சென்றடைவதை உறுதிப்படுத்துவதே ஒவ்வொருவருடைய விருப்பமாக இருக்கும். ஆனால் துரதிஸ்டவசமாக இந்த மக்கள் விடயத்திலும் தங்கள் சொந்த அரசியல் விருப்பு வெறுப்புகளுக்காக அந்த உதவிகளுக்கு உபத்திரவம் விளைவிக்கின்ற ஒருசிலர் புலம்பெயர்ந்தவர்கள் மத்தியில் இருக்கவே செய்கின்றனர். வன்னி முகாம்களுக்கு தேசம்நெற் லிற்றில் எய்ட் மேற்கொள்ளும் உதவிகள் தொடர்பாக சேறடிப்பதில் புலம்பெயர் கீபோட் மார்க்ஸிஸ்டுக்களே முன்னணியில் நின்றனர். தங்கள் மீது மார்க்ஸிட்டுக்கள் என்று விம்பத்தைக் கட்டமைக்கும் இவர்கள் இவ்வாறான உதவிகள் மார்க்ஸிய விரோதமானவை என்றும் மக்கள் விரோதமானவை என்றும் கட்டுரைகளை வரைந்து தள்ளினர். இவர்கள் வன்னி முகாம் மக்களுக்கு உதவுவதன் மூலம் இலங்கை அரசுக்கு கைக் கூலிகளாகச் செயற்பட்டார்கள் என்று உதவிகள் வழங்குபவர்கள் மீது சேறடித்தனர். வன்னி மாணவர்கள் கல்வியைத் தொடர நூல்களை வழங்கினால் முகாம்களை தொடர்ச்சியாக வைத்திருந்து பிழைப்பு நடத்துவதாக கண்டு பிடிப்புகளைச் செய்தனர்.

இவர்களுக்கிருந்த நோக்கமும் புலிகளுடைய நோக்கமும் பாரிய அளவில் வேறுபடுவதில்லை. புலிகள் மக்களை வருத்தி தங்கள் அரசியலை முன்னெடுத்தனர். இவர்களும் அதே மக்களை வருத்தி துன்பக் கேணியில் தவிக்க விட்டு தாங்கள் அவர்களுக்காக புரட்சிகர நடவடிக்கைகளில் (கீபோட்டில் கட்டுரை வடிப்பது) ஈடுபடுவதாக றீல் விடுகின்றனர்.

இவர்களது மனவிகாரங்களுக்கும் பொறாமைகளுக்கும் போக்கிடமாக தங்கள் இணையங்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். லிற்றில் எய்ட் தலைவர் கொன்ஸ்ரன்ரைன் பற்றி இவர்கள் எழுதியவை அரசியல் அல்ல வக்கிரம். இந்த வக்கிரச் சொல்லாடல்களை கீபோட் மார்க்ஸிஸ்டுக்கள் மத்தியில் பொதுவாகக் காணலாம். ஏனெனில் இந்த கீபோட் மட்டைகள் ஊறியது ஒரே குட்டையில். தங்களுக்கு மார்க்ஸிய மகுடம் சூட்டுவதையே இவர்கள் தொழிலாகக் கொண்டுள்ளனர். இவர்களுக்கும் மக்களுக்கும் உள்ள இடைவெளியோ பல்லாயிரம் மைல்கள். அதற்குள் தங்களில் யார் மக்களின் பக்கத்தில் என்று இவர்களுக்குள் தற்போது குத்துவெட்டு. அந்தக் குத்து வெட்டுக்கு அணிசேர்க்க ஆளாய்ப் பறக்கின்றனர்.

மே 18க்குப் பின் 6 மாதங்கள் கடந்துவிட்டது. தற்போது குழந்தைப் போராளிகள் மட்டுமல்ல தமிழீழ விடுதலைப் புலிகளின் செஞ்சோலைக் குழந்தைகளும் தங்களுக்கான ஒரு உதவும் அமைப்பைத் தேடுகின்றனர். இச்சிறார்களும் உளவியல் ரீதியில் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதால் ஏனைய சிறுவர் இல்லங்களில் வைத்துப் பராமரிக்க முடியாத நிலையுள்ளது. அதற்கு உதவுதற்கு லண்டன் அமைப்பு ஒன்று தன் விருப்பத்தை வெளியிட்டுள்ளது. 65 சிறுவர்களைக் கொண்ட செஞ்சோலை இல்லத்தை லண்டனில் உள்ள இவ்வமைப்பு ஜனவரியில் பொறுப்பேற்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதற்கு முன்னர் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. குழந்தைப் போராளிகளைப் பராமரிப்பதில் காட்டிய அதே தயக்கம் இக்குழந்தைகள் விடயத்திலும் காட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த 277 குழந்தைப் போராளிகள் 65 செஞ்சோலைச் சிறார்கள் மட்டுமல்ல பல்லாயிரக்கணக்கான போராளிகள் மற்றும் மக்களுக்கு புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் உதவி மிக மிக அவசியமாகத் தேவைப்படுகின்றது. இவ்வுதவிகளை தனிநபர்களாக மட்டும் அல்லது ஒரு சில அமைப்புகளால் மட்டும் மேற்கொள்ள முடியாது. இலங்கை அரசிடம் இருந்து இந்த மக்களுக்கு அதிககட்ச உதவிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். அதே சமயம் இம்மக்களைப் போராளிகளை இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பில் மட்டும் விட்டுவிட்டு அரசாங்கம் அனைத்தையும் பார்த்துக் கொள்ளும் என்று நாம் எமது பொறுப்புக்களைத் தட்டிக்கழிக்க முடியாது. இலங்கை அரசாங்கத்தின் இனவாதப் போக்கும் இனவாதத்தை கக்குகின்ற அரச இயந்திரமும் அப்படியே தான் இருக்கின்றது. ஆகவே பாதிக்கப்பட்ட மக்களின் விடயத்தில் புலம்பெயர்ந்த மக்களின் கவனம் எப்போதும் இருந்து கொண்டிருக்க வேண்டும்.

வன்னி மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை தனிப்பட்ட முறையிலும் அரசியலுக்கு அப்பாலும் பலரும் செய்து வருகின்றனர். இருந்தாலும் பெரிய அளவான முயற்சிகளில் ஸ்தாபனங்கள் ஈடுபடுவது அவசியம். இந்த அமைப்புகள் மீது சமூகம் விழிப்பாக இருந்து அவர்களைக் கண்காணிக்க வேண்டுவது அவசியம். இவ்வமைப்புகள் மீதான கண்காணிப்பும் விமர்சனமும் மக்களுக்கு உதவிகள் சீராகச் சென்றடைவதை உறுதிப்படுத்துவதாக அமைய வேண்டும். அதைவிடுத்து அம்மக்களை துன்பத்திற்குள் அலையவிட்டு போராட்டத்திற்கு ஆள்பிடிக்க முயற்சிப்பதாக இருக்கத் தேவையில்லை. போராட்டத்திற்கான நேரம் வரும்போது அவர்கள் அதனைச் செய்வார்கள். புலத்து புலி மார்க்ஸிஸ்ட்டுக்கள் புரட்சியை ஏற்றுமதி செய்யத் தேவையில்லை.

லிற்றில் எய்ட் http://littleaid.org.uk/இன் முதலாவது உதவித் திட்டம் மே 18 2009ல் வன்னி முகாம்களைச் சென்றடைந்தது. ஒக்ரோபர் 12 2009 வரையான காலத்தில் 10 உதவித்திட்டங்களை http://littleaid.org.uk/projects லிற்றில் எய்ட் 9474 பவுண்கள் செலவில் மேற்கொண்டது. இத்திட்டத்தின் ஊடாக டென்மார்க்கில் உள்ள எல்லைகளற்ற மருத்துவ அமைப்பு லிற்றில் எய்ட் ஊடாக 1140 கிகி எடையுள்ள மருந்துப் பொருட்களை வவுனியாவிற்கு அனுப்பி வைத்தது. இதன் சந்தைப் பெறுமதி 16000 பவுண்கள். இவற்றை டென்மார்க் எல்லைகளற்ற மருத்துவ அமைப்பு முற்றிலும் இலவசமாக வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னைய திட்டம் எல்லைகளற்ற மருத்துவ அமைப்பின் விதிமுறைகளுக்கு அமைய வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதால் தற்போது அவ்வமைப்பு 5500 கிகி எடையுள்ள மருந்துகளை முற்றிலும் இலவசமாக லிற்றில் எய்ட்க்கு தர முன்வந்துள்ளது. இத்தொகுதி மருந்துப் பொருட்களின் சந்தைப் பெறுமதி 40 000 பவுண்களுக்கும் அதிகமாகும். இத்தொகுதி மருந்துப் பொருட்கள் தற்போது கொழும்பைச் சென்றடைந்துள்ளது. முன்னைய திட்டத்தைப் போன்று வன்னிக்கு இம்மருந்துப் பொருட்களை கொண்டு செல்வதற்கான செலவை லிற்றில் எய்ட் ஏற்றுள்ளது. அதற்கு ஒரு சில ஒத்துழைப்புகள் ஏற்கனவே கிடைக்கப்பெற்றும் உள்ளது. இம்முறை இம்மருந்துப் பொருட்களின் விநியோகத்தை மேற்பார்வையிட டென்மார்க் எல்லைகளற்ற மருத்துவ அமைப்பின் தலைவரும் லிற்றில் எய்ட் சார்பில் கொன்ஸ்ரன்ரைனும் இலங்கை செல்கின்றனர்.

மேலும் டிசம்பர் 20 லிற்றில் எய்ட் அமைப்பின் நிதி சேரிப்பு நடவடிக்கையின் ஓரு முயற்சியாக ஒன்றுகூடல் ஒன்றுக்கும் இராப்போசன நிகழ்வுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்நிகழ்வு நிதி சேகரிப்புடன் எதிர்காலத்தில் பாதிக்கப்பட்வர்களுக்கான நீண்ட காலத் திட்டங்களில் தங்களை ஈடுபடுத்த ஆர்வமுடையவர்களை அடையாளம் கண்டு அவர்களை பொது வேலைத்திட்டத்துடன் இணைக்கின்ற ஒரு முயற்சியாகவும் அது அமையும்.

நிகழ்வு விபரம்:
Doors Open – 8 :00pm – till late
32 Raliway Approach, Harrow Middlesex HA3 5AA
Contact: 07886530996

வன்னி மக்களின் நல்வாழ்வில் அக்கறையுடன் பல்வேறு அமைப்புகளும் தனிநபர்களும் தங்களை ஈடுபடுத்தி உள்ளனர். இங்கு லிற்றில் எய்ட் பற்றி எழுதியதன் மூலம் அவர்களது உதவிகளை குறைத்து மதிப்பிட முடியாது. லிற்றில் எய்ட் மூலம் அம்மக்களின் தேவைகளை தனித்து நின்று செய்துவிட முடியாது. புலம்பெயர்ந்த ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்த நம்பகமான அமைப்புகளுடாகவோ அல்லது தனித்தோ தங்களால் ஆன உதவிகளை மேற்கொண்டு அம்மக்களுக்கு எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அம்மக்களை அரசியல் சதுரங்கத்தின் காய்களாக பயன்படுத்துவதற்கு எவரையும் அனுமதிக்க முடியாது.

டிசம்பர் 26 2009ல் சுனாமியால் தன்னுயிரை இழந்த அனாமிகா பாலகுமாரின் நினைவு நிகழ்வு கிழக்கு லண்டனில் இடம்பெறவுள்ளது. பல்லாயிரக் கணக்கான மக்களின் இழப்புகளில் அனாமிகா போன்ற ஒரு சில இழப்புகளே அவரது பெற்றோர் லண்டனில் உள்ளதால் நினைவுகூரப்படுகின்றது. ஏனைய இழப்புகள் மறக்கப்பட்டு விட்டன. ஆனால் அந்த சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் இழப்புகளைத் தாங்கி தங்கள் வாழ்க்கையைத் தொடருகின்றனர். இந்நிலையே வன்னி அவலத்தில் இருந்து மீண்ட மக்களுக்கும். தம் அன்புக்குரியவர்களை தம் அங்கங்களை இழந்தவர்கள் என்று இவர்களது எதிர்காலம் கடினமானதாக அமையப் போகின்றது. இன்னும் சில மாதங்களில் திரையில் வன்னி மக்களின் முகங்கள் வராது, வானலைகளில் அவர்களின் குரல்கள் ஒலிக்காது, பத்திரிகை இணையங்களிலும் அவர்களது பதிவுகள் வராது. இம்மக்களுக்கான நலத்திட்டங்களை இப்போது ஆரம்பிக்காதுவிட்டால் இன்னும் சில மாதங்களில் இவர்கள் மறக்கப்பட்டு விடுவார்கள்.