அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இருந்து வந்த வெள்ள அச்சுறுத்தல் நீங்கியுள்ளது. நேற்று முதல் மழை ஓய்ந்துள்ளது. அம்பாறை மாவட்டத்தில் தேங்கியிருந்த வெள்ளநீர் படிப்படியாக குறைந்து வருகின்றது. இதேவேளை கல்முனை, கல்முனைக்குடி, பாண்டிருப்பு தாழ்ந்த பகுதிகளில் தேங்கியிருக்கும் வெள்ள நீரை அகற்ற கல்முனை மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
கிட்டங்கி வாவி நீர் மட்டம் குறைந்துள்ள போதிலும் கிட்டங்கி பாலத்தின் நீரோட்டத்தை சல்வீனியா தாவரம் தடுத்துள்ளதனால் வீதிக்குக் குறுக்காக வெள்ள நீர் ஓடிக் கொண்டிருக்கிறது. எனினும் போக்குவரத்து தடை ஓரளவு நீங்கியுள்ளது நீரோட்டத்தை தடை செய்யும் சல்வீனியா தாவரத்தை உடன் அகற்ற வீதி அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெள்ளத்தினால் சேமடைந்து இருக்கும் கிட்டங்கி வீதியை திருத்தம் செய்து மக்கள் பாவனைக்கு வழங்குமாறு கிழக்கு மாகாண உறுப்பினர் எஸ். புஸ்பராசா சம்பந்தப்பட்டவர்களைக் கேட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் மக்கள் இடம் பெயரும் நிலை ஏற்படலாம் என மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.
வெள்ளத்தின் காரணமாக செங்கலடி, பெருமாவெளிப் பிரதேசம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார். போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவின் 25 ஆம் கிராமம், வேத்துச்சேனை, ஆணைக்கட்டியவெளி, சின்னவத்தைக் கிராமங்கள் பாதிக்கப் பட்டுள்ளதாகத் தெரிவித்த அரச அதிபர், இக் கிராமங்களின் பாலத்தின் ஊடான போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
ஈரலக்குளம் பாதை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் படகுச்சேவை நடாத்தப்படுவதாகவும் தெரிவித்தார். ஐயங்கேணி, பலாச்சேலை, சித்தாண்டி கிராமங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகத் தெரிவித்த அரச அதிபர் முள்ளாமுனை வயல் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது என்றார். கடந்த 81 மணித்தியாலயத்தில் 144.7 மில்லி மீற்றர் மழை மட்டக்களப்பில் பெய்துள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலைய பதில் பொறுப்பதிகாரி எஸ். வசந்தகுமார் தெரிவித்தார். ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் இன்று (12) பிற்பகல் 5.30 வரை 1534.6 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.