இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே, சரணடைய வந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் மூன்று முக்கிய தலைவர்களையும் சுட்டுக்கொல்லுமாறு உத்தரவிட்டதாக ஜனாதிபதி வேட்பாளரும், முன்னாள் இராணுவ தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்று வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். வன்னியில் இறுதிகட்ட யுத்தத்தின் கடைசி மூன்று நாட்கள் தமக்கு தொடர்புகள் இருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். யுத்தம் நடந்த சமயத்தில் களத்தில் நின்ற இராணுவத் தளபதிகளுடன் தொடர்பில் இருந்த உள்ளூர் ஊடகவியலாளர்கள் மூலம் தனக்கு இந்த விபரங்கள் கிடைத்ததாக அவர் கூறியுள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்கள், நோர்வே மற்றும் வெளிநாட்டு தரப்புக்கள் ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்சவுடன் தொடர்பு கொண்டு விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பாலசிங்கம் நடேசன், சமாதான செயலக பிரதானி புலிதேவன் எனப்படும் சீவரட்ணம் பிரபாகரன் மற்றும் சிரேஸ்ட இராணுவ தளபதி ரமேஸ் ஆகியோரும் அவர்களின் குடும்பத்தினரும் படையினரிடம் சரணடையப்போவதை அறிவித்துள்ளனர்.
இந்த செய்தியை பசில் ராஜபக்ச பின்னர், கோத்தபாய ராஜபக்சவுக்கு தெரிவித்துள்ளார். இதன்படி கடந்த மேமாதம் 17 ஆம் திகதி, அதிகாலை, இந்த மூன்று தலைவர்களும் தமது குடும்பத்தினருடன் பசில் ராஜபக்ச மற்றும் வெளிநாட்டு தரப்பு ஆலோசனையின்படி வெள்ளையாடை அணிந்து சரணடைவதற்காக வந்துள்ளனர். இதன் போதே கோத்தபாய ராஜபக்ச, 58 வது படையணித்தளபதியாக இருக்கும் சவேந்திர சில்வாவுக்கு எந்த ஒரு தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்களையும் சரணடைய அனுமதிக்கவேண்டாம் அவர்களை சுட்டுக்கொல்லுமாறு உத்தரவிட்டுள்ளதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
சரத் பொன்சேகாவின் கூற்றை அரசாங்கம் முற்றாக நிராகரிப்பதுடன், வன்மையாகக் கண்டிக்கிறது. சரத் பொன்சேகாவின் இந்த கூற்றானது நாட்டுக்கும், படை வீரர்களுக்கும், மக்களுக்கும் இழைக்கும் மிகப்பெரிய துரோகம் என்று இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
முன்னுக்கு பின் முரணான தகவல்களை அவ்வப்போது வெளியிட்டு வரும் சரத் பொன்சேகாவின் இந்த கூற்று மிகவும் பாதகமும், பாரதூரமானதுமாகும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
விசேட செய்தியாளர் மாநாடு நேற்றுப் பிற்பகல் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் இடம்பெற்றது. தகவல், ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா, சுற்றாடல் அமைச்சர் பாடலி சம்பிக ரணவக்க, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலைய பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்லே, பொலிமா அதிபர் மஹிந்த பாலசூரிய, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார ஆகியோர் கலந்துகொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க மேலும் உரையாற்றுகையில், ‘தற்பொழுது மாறுபட்ட தகவல்களை வெளியிட்டு வரும் இதே சரத்பொன்சேகா தனக்கு ஜுலை மாதம் 10ம் திகதி அம்பலாங்கொடையில் வழங்கப்பட்ட கெளரவிப்பு நிகழ்வில் உரையாற்றும்போது கூறியதாவது:-
“நான் படை வீரர் என்ற வகையில் அவ்வப்போது தேவையான உத்தரவுகளை பிறப்பித்து யுத்தத்தை வெற்றிகொண்டேன். படை வீரர்களிடம் சரணடைய வரும் எவரையும் ஒன்றும் செய்ய வேண்டாம் என எனக்கு உத்தரவு வழங்கப்பட்டிருந்தது. குளிர் அறையிலிருந்து சொல்பவர்களின் உத்தரவை ஏற்கவில்லை என்றார்”. எனவே அன்று அவ்வாறு கூறிய இதே சரத் பொன்சேகா இன்று தனது இராணுவ உடையை களைந்த பின்னர் அரசியல் இலாபத்துக்காக மாறுபட்ட கருத்துகளை வெளியிட்டு வருகிறார். இதுபோன்ற மாறுபட்ட கருத்துகளை வெளியிடுவதன் மூலம் இந்த நாட்டையும் படை வீரர்களையும் காட்டிக்கொடுப்பதுடன், அவர்களுக்கு பாரிய துரோகம் இழைக்கின்றார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பிரபாகரனின் பெற்றோர், ஜோர்ஜ் மாஸ்டர், தயா மாஸ்டர் மற்றும் ஐந்து டாக்டர்கள் தான் வெள்ளைக் கொடிகளை காண்பித்த வண்ணம் படையினரிடம் சரணடைய வந்தவர்கள். அவர்கள் கொல்லப்படவில்லை. இன்னும் பாதுகாப்பாக இருக்கின்றார்கள் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
சுற்றாடல் அமைச்சர் பாடலி சம்பிக ரணவக்க உரையாற்றுகையில், அரசியல் இலாபங்களை கருத்திற்கொண்டு இதுபோன்ற உண்மைக்குப் புறம்பான பல கதைகளை சரத் பொன்சேகா வெளியிடலாம். இது சரத் பொன்சேகாவினதும் அவரது பின்னணியில் உள்ளவர்களினதும் பாரிய சூழ்ச்சியாகும். இதற்கு நாங்கள் ஒருபோதும் சிக்கிக்கொள்ளப் போவதில்லை. நல்ல விடயங்களை நான்தான் செய்தேன் என்று பொறுப்பேற்கும் பொன்சேகா, தவறுகள் இருப்பின் அதனையும் பொறுப்பேற்க வேண்டும். இதுவே சரியான முறையாகும். லைபீரியா ஜனாதிபதி சார்ள்ஸ் டைலருக்கும் அந்த நாட்டு தளபதி இதுபோன்ற ஒரு சூழ்ச்சியையே செய்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தியுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மிலேனியம் சிட்டி சம்பவத்தைவிட பாரதூரமான காட்டிக்கொடுத்தல் – பொன்சேகாவின் கூற்று குறித்து விமல் வீரவன்ச கருத்து
மிலேனியம் சிட்டி காட்டிக் கொடுத்தல் சம்பவத்தைவிட மிகவும் பாரதூரமான காட்டிக் கொடுத்தலை ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா செய்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, மற்றும் படைவீரர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு முன் நிறுத்தும் சர்வதேச சதியின் ஒரு அங்கமாகவே சரத் பொன்சேகா தற்பொழுது செயற்படுவதாக அவர் குற்றஞ்சாட்டினார். சர்வதேச சதியின் ஒரு ஒப்பந்தக்காரராக பொன்சேகா இலவசமாக செயற்படுவது தெளிவாகியுள்ளது என்றும் விமல் வீரவன்ச சுட்டிக்காட்டினார். விமல் வீரவன்ச இங்கு மேலும் உரையாற்றுகையில்:-
சர்வதேச சமூகத்திற்கு எமது தலைவர்கள் மீதும், படைவீரர்கள் மீதும் குற்றஞ்சுமத்துவதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. களங்கத்தை ஏற்படுத்தும் நோக்குடனே சரத் பொன்சேகா ஒப்பந்தக்காரராக செயற்படுகின்றார். சரத் பொன்சேகா தற்பொழுது ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ளார். எந்த ஒரு வேட்பாளரும் தனக்குள்ள வாக்குகளை தக்கவைத்துக் கொண்டு மேலதிக வாக்குகளை பெறும் முயற்சிகளையே மேற்கொள்வார்கள். ஆனால் சரத் பொன்சேகாவின் இந்த கூற்று அவருக்கு எந்த வாக்கு அதிகரிப்பையும் கொடுக்கப்போவதில்லை. இதன் மூலம் வாக்கு வங்கியை பெறுவதைவிட தனது ஒப்பந்தத்தின் அடிப்படையில் செயற்படுவதே முக்கியம் என்று தெளிவாகி தெரிகிறது.
அரச உயர் அதிகாரிகள் ஓய்வு பெறுவது வழக்கம். ஆனால் அவ்வாறு ஓய்வு பெற்ற அல்லது ஓய்வு பெறுவதற்கு முன்னர் ஓய்வை பெற்றுக்கொண்டு அடுத்த நாளே அரசியலுக்கு வந்ததில்லை. எமது நாட்டில் அரச உயர் பதவியிலிருந்து ஓய்வுபெற்று அடுத்த நாளே ஜனாதிபதி வேட்பாளராக வந்த முதல் நபர் சரத் பொன்சேகாவாகும். சாதாரணமாக அரசியலுக்கு வரவிரும்பும் எவரும் தனது அரசியல் பயணத்தின் ஆரம்பத்தை ஜனாதிபதி வேட்பாளர் என்று ஆரம்பிப்பதில்லை.
மாகாண சபையிலிருந்தே ஆரம்பிப்பர். ஆனால் சரத் பொன்சேகா படிப்படியாக அரசியலில் நுழையாமல் திடீரென ஜனாதிபதி வேட்பாளராக ஏன் வந்தார் என்று கேள்வி எழும்பியது. இவருக்குப் பின்னர் சர்வதேச சதியும் ஒரு குழுவின் அழுத்தமும் இருக்கின்றமை தெளிவாக தெரிகிறது. பொன்சேகாவின் இது போன்ற கூற்றானது, மேலே பார்த்து தனக்குத் தானே எச்சில் துப்புவது போன்ற செயலாகும்.
பொன்சேகாவிடம் கேட்டுக் கொள்கின்றேன். உங்களுக்கு முடியுமான பொய்களை சொல்லி வாக்குகளை கேளுங்கள். ஆனால் தாய் நாட்டிற்காக செயற்பட்ட ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர், படைவீரர்களுக்கோ அபகீர்த்தி ஏற்படும் வகையில் எந்த பொய்யான தகவல்களையும் வெளியிட வேண்டாம். அதற்கு மாறாக அரசியல்வாதிகளான எங்கள் மீது எந்த பொய்க்குற்றச்சாட்டுக்களையும் முன்வையுங்கள் என்றார்.
நாட்டையும், படைவீரர்களையும் காட்டிக் கொடுக்கும் நோக்குடன் முன்னு க்கு பின்னர் மாறுபட்ட தகவல்களை வெளி யிட்டு வரும் சரத்பொன்சேகாவை நம்பி மக்கள் எவ்வாறு வாக்குகளை வழங்குவது என்றும் இவரை எவ்வாறு ஜனாதிபதி ஆக்குவது என்றும் விமல் வீரவன்ச இங்கு கேள்வி எழுப்பினார்.