2009

2009

நிரம்பி வழியும் நிலையில் 24 பாரிய குளங்கள் 10 வீடுகள் நாசம்; 41 வீடுகள் சேதம்

water-levels.jpgநாட்டிலுள்ள 24 பாரிய குளங்கள் நூறு சதவீதம் நிரம்பியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்வள முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் பொறியியலாளர் ஜானகி மீகஸ்தென்ன நேற்றுத் தெரிவித்தார்.

இதேநேரம், கடந்த சில தினங்களாகத் தொடராகப் பெய்த மழை காரணமாகப் பொலன்னறுவை மாவட்டத்தில் 51 குடும்பங்களைச் சேர்ந்த 183 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பொலன்னறுவை மாவட்ட இணைப்பாளர் பி. கே. யு. நாணயக்கார கூறினார்.

இம்மழை காரணமாக பத்து வீடுகள் முழுமையாகவும், நாற்பது வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொறியியலாளர் ஜானகி மீகஸ்தென்ன மேலும் குறிப்பிடுகையில், அனுராதபுரம் மாவட்டத்தில் ராஜாங்கனைகுளம், திஸாவெவகுளம், பதுளை மாவட்டத்தில் தம்பராவ குளம், சந்திஎல, சொரபொற குளம், மட்டு மாவட்டத்தில் வாகனேரி, குளம் உன்னிச்சை குளம், உறுகாமம் குளம், நவகிரி குளம், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பந்தகிரிய குளம், தெபராவெவ குளம், மெளஆற குளம், வேரகல குளம், வீரவில குளம், குருநாகல் மாவட்டத்தில் இம்புல்வான குளம், நாகல்லகுளம், பொலன்னறுவை மாவட்டத்தில் கிரித்தல குளம், கெளடுல்லகுளம், மின்னேரிய குளம், பராக்கிரம சமுத்திரம், திருமலை மாவட்டத்தில் மகாதிவுல்வெவ குளம், வான் எல குளம் ஆகியன நூறு சதவீதம் நிரம்பியுள்ளது.

இதன் காரணத்தினால் உடைப்பெடுக்கும் அச்சுறுத்தல் மிக்க ராஜாங்கனை குளத்தின் நான்கு வான் கதவுகளும், வாகனேரி, உறுகாமம் குளங்களின் இரண்டு வான் கதவுகள் படியும், வேரகல குளத்தில் இரு வான் கதவுகளும், இம்புல்வான குளத்தில் மூன்று வான் கதவுகளும் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்படுகின்றன. இதேவேளை பராக்கிரம சமுத்திரத்தின் சகல வான் கதவுகளும் நேற்று மூடப்பட்டன என்றார்.

பெற்றோலின் விலை 15 ரூபாவால் குறைப்பு

pump-patrol.jpgஇலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இந்தியன் ஒயில் கம்பனி (ஐ. ஓ. சி.) என்பன பெற்றோலின் விலையை நேற்று நள்ளிரவு முதல் 15 ரூபாவினால் குறைத்துள்ளது. இதன்படி 90 ஒக்டேன் கொண்ட பெற்றோல் ஒரு லீட்டர் 115 ரூபாவாகவும், 95 ஒக்டேன் கொண்ட பெற்றோல் ஒரு லீட்டர் 133 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும் என பெற்றோலியக் கூட்டுத்தாபனமும், இந்திய ஒயில் கம்பனியும் அறிவித்துள்ளன.

முன்னர் 90 ஒக்டேன் 130 ரூபாவு க்கும், 95 ஒக்டேன் 148 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

சரத் பொன்சேகாவிடம் 500 மில். ரூபா நஷ்டஈடு கோருகிறார் கரன்னாகொட

karannagoda.jpgஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவிடம் 500 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி முன்னாள் கடற்படை தளபதியும் தற்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளருமான வசந்த கரன்னாகொட தனது சட்டத்தரணி ஊடாக கோரிக்கை கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

தனக்கு அபத்தமாகவும், அபகீர்த்தி ஏற்படும் வகையில் பொதுமக்களின் பார்வையில் தனக்கு அவமதிப்பு ஏற்படும் வகையிலும் சரத் பொன்சேகா சிரச தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தமைக்காகவே அவர் இவ்வாறு கோரிக்கைக் கடிதம் அனுப்பியுள்ளார். தனது சட்டத்தரணி அத்துல டி சில்வா மூலம் குறிப்பிட்ட பணம் 14 நாட்களுக்குள் செலுத்தப்பட தவறினால் 500 மில்லியன் ரூபாவை வசூலிக்க சட்ட நடவடிக்கையில் இறங்க நேரிடும் என்று அந்த கோரிக்கைக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

முன்னாள் கடற் படைத் தளபதியின் அறிவித்தலின் பேரில் தனது கட்சிக்காரருக்கு மேற்படி பேட்டியில் கூறப்பட்ட பிதற்றல்கள் வேண்டுமென்றே செய்யப்பட்டதாகவும் தனது கட்சிக்காரரின் கண்ணியம் நற்பெயர் மற்றும் பொது மக்களிடையிலான மதிப்புக்கு களங்கம் ஏற்படுத்துவதுடன் மீளப்பெற முடியாத அளவுக்கான பாதிப்பையும் தோற்றுவித் துள்ளது என்று முன்னாள் கடற்படை தளபதியின் சட்டத்தரணி அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அவையாவன:

அ) எனது கட்சிக்காரர் தனது பதவியை 48 மணி நேரத்தில் துறக்குமாறு கேட்கப்பட்ட போது அவர் உண்மையிலேயே சிறுபிள்ளை போல அழுதார்.

ஆ) எனது கட்சிக்காரரை 48 மணி நேரத்தில் வெளியேறுமாறு கேட்கப்பட்ட போது அவர் அழுதார்.

இ) எனது கட்சிக்காரருக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அல்லது அது போன்ற ஏதோ ஒன்றைப் பற்றி குறிப்பிடும் பொய்யான கடிதமொன்றை ஜனாதிபதி வழங்கிய போது அவர் அதனை இரு கைகளையும் நீட்டாமல் கூட ஒரே கையை நீட்டி வாங்கிக் கொண்டார்.

ஈ) ஜனாதிபதி கோபமடைந்து எனது கட்சிக்காரருக்கு சத்தம் போட்டு திட்டினார். (ஜனாதிபதி தனக்கு அநீதி இழைத்து விட்டதாக அவர் கூறிய போது) எனது கட்சிக்காரர் அழுதபோது பாதுகாப்புச் செயலாளர் அவரை ஜனாதிபதி செயலகத்தில் உள்ள தனது அறைக்கு அழைத்துச் சென்று திட்டினார்.

உ) அதற்கு மாறாக தன்னை இராணுவத் தளபதி பதவியை துறக்குமாறு கேட்கப்பட்ட போது தான் அழவில்லை.  அத்துடன், அவ்வாறான கெளரவ குறைச்சல்களுக்கு தான் முகங்கொடுக்க நேர்ந்திருந்தால் அரச சேவையில் தொடர்ந்து இருந்திருக்கப் போவதில்லை.

கடற்படைத் தளபதிக்கு இவ்வாறு அதிகாரத்தின் முன்னிலையில் அழுது வடிவது ஏற்றதல்ல (அப்போது அவர் கடற்படை தளபதியாக இருந்தார்)

ஊ) தனது கட்சிக்காரர் எந்த சுயமரியாதையும் அற்ற கேவலமிக்க ஒருவர் என்பதை இந்த நாட்டு மக்களுக்கு காட்டுவதாகவும் பொது வாழ்க்கையில் உயர்ந்த பொறுப்பினை வகிக்க தகுதியில்லாதவர் என்ற வகையிலும் அமைகிறது.

எ) எனது கட்சிக்காரர் பொதுமக்களிடையே பெற்றுள்ள உயர் மதிப்பினை பாதிக்கும் வகையில் அந்த பிதற்றல்கள் அமைந்துள்ளன.

உம்மால் விடுவிக்கப்பட்ட மேற்குறிப்பிட்ட கூற்று தவறானதும் மற்றும் உங்கள் அறிவுக்கேற்ப தவறானதுமாகும். அது எனது கட்சிக்காரரின் பெயரைக் கெடுப்பதாக உள்ளது என்று கூறுமாறு தனது கட்சிக்காரரால் அறிவுறுத்தப்பட்டதாகவும் சட்டத்தரணிகள் கூறியுள்ளனர்.

துரிதமாக மறைந்து வரும் உங்கள் பொதுமக்களிடையிலான மதிப்பினை தூக்கி நிறுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட பொய்யான திட்டமிட்ட, பொறாமை மிகுந்த முயற்சி இது. உம்மையும் எனது கட்சிக்காரரையும் பொய்யாக ஒப்பிடுவதன் மூலம் எனது கட்சிக்காரர் மீதான தனிப்பட்ட விரோதத்தை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது. மேற்கூறிய குறிப்புகள் எனது கட்சிக்காரரின் பொதுமக்களி டையிலான மதிப்புக்கு களங்கம் ஏற்படுத்தும் விஷமமான பழிவாங்கும் முயற்சியாகும்.

காத்தான்குடியில் டெங்கு தீவிரம்:

காத்தான் குடியில் டெங்கு காய்ச்சலினால் சிறுமியொருவர் ஞாயிற்றுக்கிழமை இரவு மரணமடைந்துள்ளார். காத்தான்குடி மில்லத் மகளிர் வித்தியாலயத்தில் நான்காம் ஆண்டில் கல்வி கற்று வந்த நஜிமுதீன் பாத்திமா ஆப்ரீன் (09) எனும் மாணவியே டெங்கு காய்ச் சலினால் மரணித்தவரென தெரிவிக்கப்ப டுகின்றது.

காத்தான்குடிப் பிரதேசத்தில் கடந்த மூன்று தினங்களில் 10 சிறுவர்களுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கைத் தமிழரது எதிர்காலம்: ரவி சுந்தரலிங்கம்

mahinda1.jpgsarath2.jpgsivaji.jpgபாகம் 7
சுயஅறிவே தற்பாதுகாப்பு, தெளிவாக்கமே அதன் வழி.

உள்ளடக்கம்
•கடந்த ஆறு கட்டுரைகளின் சாரம்:
மாதிரிவடிவத்தின் அவசியம்
•தமிழ் பேசுவோரும் மூன்று தேர்தல்களும்: வாக்குகளும், வாக்குரிமைகளும்,
வட்டுக்கோட்டை, நாடுகடந்த தமிழீழ, ஜனாதிபதித் தேர்தல்கள்.

கடந்த ஆறுமாதங்களில் “இலங்கைத் தமிழரது எதிர்காலம்” என்ற தலைப்புடன் ஆறு பாகங்களில் {வன்னியன் பிரபாகரன்: புலிகளின் ஆட்சிக் காலம் (20ஆனி 2009, பாகம் 1), நேற்றைய போராட்டம் நாளைய போராட்டம் (20 ஆடி 2009, பாகம் 2), பழசுகள் புதியவை தரா (16 ஆவணி 2009, பாகம் 3), எங்கிருந்து, யாரைப்பற்றி, எக்காலத்தில் (25 ஆவணி 2009, பாகம் 4), ஜனநாயகமயப்படுத்தல் (10 புரட்டாசி 2009, பாகம் 5), தேர்தலும் வாக்களிப்பும் (12 மார்கழி 2009, பாகம் 6) எனும்} உப-தலையங்களுடன், எமது சில ஆய்விலான கருத்துக்களையும் அவற்றினை நாம் வந்தடைவதற்கான சித்தாந்த நிலைப்பாடுகளையும் அவற்றைத் தாங்கி நிற்கும் மாதிரி வடிவங்கள் பற்றியும் சில விளக்கங்களை தேசம்-இணையத்தள வாசகர் சிலருடன் பகிர்ந்திருந்தோம்.

இவை எமது ஆய்வு-ஸ்தாபனத்தின் கருத்துகாளாக அல்லது முன்மொழிவுகளாக தந்திருந்தோமே அன்றி, மக்களை வழி நடத்திச் செல்வது போன்ற தோரணையிலோ அல்லது ஏதாவது ஒரு கட்சியின் நிலைப்பாடுகளாகவோ முன்வைக்கப் படவில்லை என்பதில் நாம் மிகத் தெளிவாக இருப்பது போல, கரிசனமான வாசகர்களும் தெளிவாக இருக்க வேண்டும் என்பதில் எமக்கு அக்கறை.

இதற்கு முதற் காரணம், ஆய்வுக்-கருத்துச் சொல்வதற்கும் (considered opinion) நிலைப்பாடுகளைச் முன்வைப்பதற்கும் (advocacy) உள்ள வேறுபாடுகளை, அதற்கான பொறுப்புகளை, உணர்ந்தவர்களாக நாம் இருக்க வேண்டும் என்பது எமக்கு நாம் கொடுத்துள்ள வரையறுப்பாகும். மேலும், கட்சிகள் அற்றவர்கள் என்பதிலும் பார்க்க, தற்காலத்தில் கட்சிகளுக்கு அப்பாற்பட்டே எமது மக்களது பிரச்சனைகளை ஒழுங்காக ஆராய முடியும் என நாம் கொண்டுள்ள முடிவு இரண்டாவது காரணமாகும்.

‘சொல்லிச் செய்ய வைப்பதற்கும்’ ‘புரிந்து கருமம் ஆற்றுவதற்கும்’ இடையே பாரிய வேறுபாடுகளை நாம் யாவரும் அநுபவத்தால் அறிந்துள்ளோம். இவற்றினை புரிந்து கொள்வதற்கான வளர்ச்சி தமிழ் பேசும் சமுதாயங்களது பெரும் திரளானவரிடம் சுயஇயல்பாகிக் கொண்டுள்ளது என்பதும் எமது அவதானிப்பு. ஆதலால், ‘உரையாடல்’ அல்லது ‘ஆய்வு’ ரீதிகளில் சில தகவல்களை முன்வைக்கும்போது, அவற்றின் உள்ளார்த்தங்களையும் தமது தேவைகளின் நியாயப்படுத்தல்களையும் தொடர்புபடுத்தி, தமது முடிவுகளை சுயமாகவே வந்தடையும் இயல்பின் வளர்ச்சியை தூண்டியபடி இருப்பதே, எமது முதற் கடமையென நாம் கருதுகின்றோம்.

ஆனால், இவ்வாறு வளர்ச்சி காணும் அவர்களது இயல்புகளை, நிலத்தில் அவர்களது இருப்பை, தம் உடமைகள் மீதான தன்நம்பிக்கையை, உடைத்திட பேரினவாதிகளும் அவர்களது ஊடுருவிகளும் நடத்தும் சதிகள் ஒரு புறமாகவும், குழப்பமான நிலைமைகளுள் தாண்டு முடிவுகளை எடுக்கும் சுயஇயல்புகளை இழந்து சிலவேளைகளில் தம்மை அறியாதே பேரினவாதிகளது மறைமுகத் திட்டங்களுக்கு சாதகமாகிடும் ‘தலைவர்களது’ நிலைமைகளும் உள்ளன என்பதை நாம் அறியாமல் இல்லை. இவற்றின் எடுத்துக்காட்டலாக, புனைபெயர்களின் பின் ஒளிந்திருந்து ஏதோ நகைச்சுவை நாயகர்களாகவும் அல்லது பலதையும் புரிந்த பொதுப்-புத்திவாதிகளாகவும் காட்டி ஏற்கனவே குழம்பியுள்ள ஏரியை குட்டையாக்கிடும் சிலரது முயற்சிகளிலும் கண்டு கொள்ளலாம். இவர்களது ஊடுருவல் மிகவும் ஆழமானதால் நாம் வெறும் எச்சரிக்கையாக இருந்திடுவது மட்டும் ஒவ்வாது.

எமது தனிப்பட்ட சுயமுற்சியாலான நிலைப்பாடுகளையும் முடிவுகளையும் எடுத்துக்கொள்ளும் தெளிவைப் பெற்றுக் கொள்வதே என்றும் இவற்றிற்கான தகுந்த பதில் நடவடிக்கை என நாம் கருதுகிறோம். இதன்பேரிலும்தான் நாம் கூறுபவற்றைக்கூட வெறும் கருத்தாக, தங்களது சிந்தனைப்போக்கில் ஒரு உந்தலாக மட்டுமே, கருதிக் கொள்ளவேண்டும் என்கிறோம்.

“யாரையும் நம்பிடுதலாகாது” எனும்போது “சுயமான முடிவுகளைக் கொள்ளுங்கள்” என்கிறோமே அன்றி “எம்மை மட்டும் நம்பிடுங்கள்” என்று கூப்பாடு போடும் பேதைகளோ அதற்கான தேவைகள் கொண்டவரோ நாம் இல்லை.

இவை ஒருபுறமிருக்க, எமது ஆறு பாகங்களின் முக்கிய உள்ளடக்கம் பற்றிய தெளிவு காத்திரமான வாசகர்களிடம் ஆழமானதாக இருக்க வேண்டும் என்பதும் எமது அவா. எனவே, இன்று இடம்பெறும் சிறீலங்காவின் ஜனாதிபதித் தேர்தலுடன் ஈடுபடுத்தி அவற்றினை மீளாக்கம் செய்திடவேண்டியது எமது கடமை ஆகிறது. இவற்றினை காத்திரமான வாசர்கள், குழப்பவாதிகளிடமிருந்து எழுந்த சில விடயங்களுடாக அணுகுவதே பொருத்தமானது.

எம்மைப் பொறுத்தவரை வெறுமனே அன்றாட விடயங்களுக்கு running commentry சொல்வதற்கும் அன்றாட விடயங்களைக் கொண்டு கருத்துச் சொல்பதற்கும் பாரிய வேறுபாடுகள் உள்ளன. எனவே, நடந்தவையை விட்டு இனிமேல் நடக்கப் போபவை குறித்து எம்மால் இதுவரை முன்வைக்கப் பட்டவையில் அதிமுக்கியமான விடயம் என்றால் அது மாதிரி வடிவம் பற்றியதாகும் என்கிறோம்.

அதாவது, ஆய்வு தேடல் என்பவற்கு எப்போதும் ஒரு மாதிரி வடிவம் (modal) அவசியம் என்ற எமது கருத்தாகும்.

மக்களது சமூக-அரசியல் விடயங்களில், மாதிரி வடிவம் எனும்போது அவர்களது,

(i) பிரச்சனைகளையும் அவர்கள் கைவசம் உள்ளவற்றையும் அக்குவேறு ஆணிவேறாக பிரித்தறிய உதவும் கருவிகள், tools of investigation,
(ii) பிரச்சனைகள், basic problems
(iii) உறவுகளை பிறிதுபடுத்தும் அல்லது சுற்றாருடன் ஒன்றுபடுத்தும் காரணிகள், defining variables,
(iv) தொகுதியின் வரைவு, definition of the set/group
(v) தொகுதியுள் இருக்கும் உபதொகுதிகள், definition of subsets/subgroups
(vi) சுற்றாடலுடனும் தன்னுள்ளேயும் கொண்டுள்ள இயங்கியல் உறவுகள், dynamics within and outside the set/group,
என்பவற்றை உள்ளடக்கியவை என்கிறோம்.

இவ்வகையில், இலங்கையில் இடம்பெற்றுவரும் அடிப்படைப் பிரச்சனைகள்பற்றி:

(i) ஆய்வதற்கான தகுந்த கருவி சமூக-பொருளாதாரத்தை அவற்றின் செயற்பாடுகளை தெளிவாக்கும் தத்துவார்த்த சிந்தனைகள் எனவும், அதுவே தர்க்கீகம் என்றும் தேர்ச்சி செய்கிறோம்.

(ii) இலங்கைவாழ் சகல மக்களது பிரச்சனைகளுள் அவர்களின் சமூக-பொருளாதார வளர்ச்சியின் பின்தங்கலை பிரதானமானதாகவும், அதனுள்ளே கொழும்பையும் அதனை அண்டிய பிரதேசத்திற்கும் எஞ்சியவற்றிக்கும் உள்ள பாரிய ஏற்றத்தாழ்வை அதனடி தொடரும் இரண்டாவதாகவும் காண்கிறோம்.

இப்பாகுபாட்டினை வறண்ட-ஈரவலய பிரதேச வேறுபாடுகளின் தேர்ச்சி எடுத்துக் காட்டுவதாகவும் அவதானிக்கின்றோம்.

இவ்வகையில் பிரதேச சமூக-பொருளாதார-ஜனநாயகங்களை மட்டுப்படுத்தும் போக்கிற்கு சிங்களப் பேரினவாதமும் அதற்கு மறுத்தால் போலான தமிழ் தேசியவாதமும் தாங்கிச் செல்பனவாகவும், நடைமுறையில் அவற்றினை ஊர்ஜிதம் செய்பனவாகவும் காண்கிறோம்.

(iii) இப்பிரச்சனைகளின் அடிக் காரணிகளாக வேலைவாய்ப்பு (gainful employment), ஊதியத்-தொழில் (waged-labour), தகுந்த வாழ்க்கைத் தாராதரம் (basic standard of living), சனத் தொகை (population growth) என்பவைற்றை யாரும்தான் கணிப்பார்கள்.

ஆனால், தேசியவாதச் சக்திகளோ சமூக-பொருளாதார வளர்ச்சியின் பற்றாக்குறையை இலங்கையின் அடித்தளப் பிரச்சனையாக ஏற்றுக் கொள்ளாத நிலையில், வளங்கள் குறித்த சர்ச்சைகளே (problem of resources) அடித்தளக் காரணிகள் என அவற்றினால் உருவாக்கப் பட்டுள்ளன.

எனவே பேரினவாதிகளும் தேசியவாதிகளும் அவ்வளங்களை மட்டும் தமதாக்கிடுவதால் தமது மக்களது பிரச்சனைகள் போய்விடும் என்ற போலி வாதத்துடனான போட்டியில் ஈடுபட்டுள்ளதை நாம் அவதானிக்கிறோம். பொருளாதார வளர்ச்சி பிரதேசங்களை, குறிப்பாக வறண்ட பிரதேசங்களை வந்தடையும்வரை இந்நிலைமை தொடரப்போகும் விடயம் என்பதோ மறுக்கப்பட முடியாத விடயம்.

(iv) வறண்ட பிரதேச மக்கள், புவியியற் காரணிகளாலும் இனவாதத்தாலும் பிறிதுபடுத்தப்பட்டு, பிரதேசக் காரணிகளை தமக்கே உரிய தேசியவாதங்கள் தேசியமயமான-இடதுசாரி வாதங்களுடாகப் பிரதிபலித்து, அவற்றின் பேரில் தமது உடமைகளை ஊர்ஜிதம் செய்து கொள்ள எடுத்த முயற்சிகள் இன்றுவரை தோல்விகளையே கண்டுள்ளன.

இவற்றுள் இலங்கை முழுவதையுமே கைப்பற்றுவது அல்லது அதனைத் துண்டாடுவது என்ற வழிமுறைகளால், தமது சமுதாயங்களுக்கு கைவசம் இல்லாத சமூக-பொருளாதார ஜனநாயகப் பலத்தை இராணுவ ரீதியில் ஈடுசெய்யலாம் என்ற முயற்சிகளே இதுவரை இடம்பெற்றன என்பதையும் நாம் அவதானிக்கின்றோம்.

எனவே மக்கள் எனும்போது ஒரே சமூக-பொருளாதார நிலைப்பாட்டுள் அமைந்துள்ள இவர்கள் அனைவரையும் ஒரே கண்ணுடன் பார்க்க வேண்டியதும் ஒன்றாகக் கணிக்க வேண்டியதும், சித்தாந்த ரீதியிலும் மனிதாபிமான ரீதியிலும், மேலும், தமிழ் பேசும் மக்கள் பேரில் கேந்திர ரீதியிலும் அவசியமானதாகிறது.

இவ்வகையில், வடண்ட பிரதேச மக்கள் யாவருமே சமூக-பொருளாதார அரசியல்-அதிகார ரீதிகளில் ஒரு தொகுதியாகக் கருதப்பட வேண்டியவர்கள் என்கிறோம்.

(v) தமிழ் பேசும் சமுதாயங்களே பிறம்பான அடையாளங்களைத் தேடும்போது, ஈழவர் போன்ற பொதுமைப்படுத்தும் முயற்சிகளோ தோல்வி கண்டுள்ளபோது, சிங்களம் பேசும் சமுதாயங்களையும் உட்படுத்தும் சமூகக் கருத்துக்கள் பகற் கனவே என சிலர் கூறுவது நியாயமானதாகப் பட்டாலும், அது தர்க்கீகம் அற்ற முரட்டுவாதமேயன்றி வேறல்ல.

முதலாவதாக, இவ் வாதங்கள் நாம் காணும் மக்கள் தொகுதியின் உபதொகுதிகளை வரைவு செய்ய உதவுகின்றனவேயன்றி பெரும் தொகுதியின் வரைவை நிராகரிப்பவை அல்ல.

இலங்கைவாழ் தமிழ் சமுதாயங்கள் யாவும் சிறீலங்கா அரச அமைப்பினால் பொதுப்பட்ட பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் என்பதால் அவர்களை ஒரு தொகுதியாகக் காண்பது தவறல்ல. அவர்களை இவ்வாறு ஒரு தொகுதியாகக் கண்டபின் அவர்களிடையே உள்ள வேறுபாடுகளைக் கொண்டு பிரித்துப் பார்ப்பதும் தவறல்ல. எனவே, ஒரு பெரும் தொகுதியுள் வேறுபாடுகள் இல்லை என்பதற்கல்ல. வலுக்கட்டாயமாக ஒற்றுமையை உருவாக்க முற்பட்ட புலிகளின் முயற்சியின் எதிர் விளைவுகளையும் கண்டவர் நாம்.

தமிழீழப் போராட்டம் இராணுவரீதியில் தோல்வி கண்டதிலிருந்து “சிங்கள மக்களுடன் சேர்ந்ததே எமது வாழ்வு” என்பதை தமிழ்தேசியவாதிகளும் ஏன் தமிழீழவாதிகளும்தான் ஏற்றுக் கொண்டுள்ளனர். இதனை நடைமுறையில் எவ்வாறு ஒழுங்குபடுத்துவது என்பதுதான் அவர்களது பிரச்சனை என்பது எமது நிலைப்பாட்டிலிருந்து வேறுபாடுகள் கொண்டதில்லை. தோல்வியின் பின்னடியில் இவ்வாறான மனோநிலை ஏற்படுமாயின், எவ்வாறான சமூக-மனோவியல் ரீதியில் எமது கருத்தை நிர்ணையம் செய்வது என்பது பலத்த கேள்வியே என்பதை நாம் அறியாமலும் இல்லை.

சிறீலங்காவின் அரசமைப்பு சிறுபான்மை இனத்தவரது ஜனநாயக உடமைகளை நிராகரிக்கிறது என்பதில் ஐயமில்லை. அது முற்றாக மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்பதிலும் ஐயம் இருக்க முடியாது. தமிழ் பேசும் சமூகங்கள் சிங்கள அரசின் அப்புறப்படுத்தலால் ஒருமைப்படுத்தப் படுபவர்கள் என்பதால் அவர்கள் ஒரு தேசத்தவர் என்றிட முடியாது.

அதுபோலவே, எமது பொதுமைப்படுத்தப்பட்ட மக்கள் கூட்டத்திடையே தமிழ்பேசும் சமுதாயங்களோ மற்றைய சமூகங்களோ தமது உடமைப் பிரச்சனைகளைக் கைவிடவோ அடகு வைத்திடவோ வேண்டியதில்லை என்கிறோம்.

எனவே, வறண்ட பிரதேச மக்களிடையே சிங்களம் பேசும் தமிழ் பேசும் சமூகங்கள் இரண்டாகவும், அவ்விரு சமூகங்களிடையே உள்ள சாதி சமய பிரதேச ரீதியிலான வேறுபட்ட சமுதாயங்கள் உபசமூகக்-குழுக்களாகவும் ஏற்கப்பட வேண்டியவை என்கிறோம்.

(vi) இயங்கியல் உறவுகள் என எவற்றை நாம் பார்ப்பது?

எமது இதுபற்றிய வரைவாக சமூக-பொருளாதார வளர்ச்சியில் தாக்கம் விளைவிக்கும் சகல சமுதாய சக்திகளும் இயங்கில் உறவு தருபவை என்பதை முன்வைக்கிறோம். கடந்த 30 வருட இன ரீதியிலான உள்நாட்டு யுத்த காலத்தில் தமிழ் பேசும் சமூகங்களிடையே உற்பத்தி, அதன் உறவுகள் என்பவை பாரிய மாற்றம் கண்டுள்ளன என்பது எமது அவதானிப்பு.

தமிழரிடையே, தேசியவாதம் சக்தியாக (energy) அமைய, புலிகள் அதன் அதிஉயர் இயங்கியல் விசை (force) ஆனார்கள்.
இவற்றினால் தம்முள்ளேயும் வெளியோருடனும் உள்ள சமூக உறவுகளிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதும் அவதானிப்பு.

தேசியவாதம் என்ற சக்தியால் வறண்ட பிரதேசங்களில் வாழும் எந்தச் சமுதாயங்களும் பலனடையாது போகினும் அவற்றின் விசைகளால் தாக்கம் காணத சமுதாயங்கள் எங்கும் இல்லை. அமைப்புகள் தேசியவாதங்களின் விசைகளாக இருப்பது இன்று இரு இனங்களிடையேயும் மட்டுக் கண்டுள்ளது போன்ற காட்சி இருந்தாலும் இலங்கைத் தீவில் சமூக-பொருளாதார முன்னேற்றத்தைக் குறிக்கும் மாற்றுச் சக்திகள் இன்னமும் நிலை கொள்ளவில்லை என்பதும் குறிப்பிட வேண்டியது. எனவே, மாற்றுச் சக்திகளுக்கான சுற்றாடல் உருவாகும்வரை தேசியவாதங்களே பின்/முன்னேற்ற மாற்றங்களை கொண்டு செல்வனவாக அமையும் என்கிறோம்.

தமிழ் பேசும் சமுதாயங்களும் தேர்தல்களும்

இலங்கையில் தேர்தல்கள் என்பவை தமிழ் பேசுவோரைப் பொறுத்தவரை அவர்களது உடமைப் பிரச்சனைகளுடனேயே எப்போதும் தொடர்புபட்டவை. ஆயினும், ஆரம்ப காலத்தில் தமிழ் பேசும் மக்களாக பல தொகுதிகளில் பிரதிநிதிகள் ஆனபோது, மூன்றாம் உலகநாட்டு நியதிகளுள்ளே மக்கள் இருந்த போதிலும், ஓரளவு தன்உணர்வுடன் தமது தேவைகள் நிமிர்த்தமும் வாக்களிக்கும் நிலையில் மக்கள் இருந்தனர். தமிழ் பேசும் பிரதிநிதிகளது தொகை அரசாங்கத்தை நிர்ணயம் செய்யக் கூடியதாகவும் அச் சிறுகாலம் இருந்தமையும் அந்நிலைக்கு உதவியாக அமைந்தது.

எனவே, தமிழ் பேசுவோர் தமது அரசாங்கங்களை நிர்ணயம் செய்யும் நிலைமைக்கு முடிவு கட்ட வேண்டிய அவசியமும், மலையகத்தவரை நாடற்றவர் ஆக்குவதற்கு, பேரினவாதிகளின் முக்கியமானதொரு காரணமாகிற்று. அதன் பின்னர் ஒவ்வொரு தேர்தலிலும் தமிழ் மக்களது வாக்குகள் முற்றாக அவர்களது ‘உரிமைகள்’ என்ற ஒரேஒரு நிலைப்பாட்டைக் குறித்த கணிதப் பரீட்சையுமாகிற்று.

இந்த ‘உரிமைகள்’ கொழும்பு அதிகாரத்திலும் அதனைச் சார்ந்த அரசியல் வாழ்வினிலும் பங்கு கோருபவையாக இருந்தனயே அன்றி, தமிழ் பேசும் மக்களது உடமைகள் பற்றியதாகவோ, பிரதேச சமூக-ஜனநாயகம் குறித்தவையாகவோ அவற்றை பெறுவதற்கான தீர்மானங்களுடனோ ஒருபோதும் இருந்ததில்லை. இல்லாவிடில் டட்லி-செல்வா உடன்பாடுவரை பூர்வீகப் பிரதேசம் பற்றிய கோரிக்கை எப்படி எழும்பாது இருந்திருக்கும்?

தேர்தல் 1: வட்டுக்கோட்டைக் கோட்டைத் தீர்மான வாக்கெடுப்பு

தீர்மானம் என்ற வகையில் வட்டுக்கோட்டை விடயம் முன்னேற்றமாகினும், அத்தீர்மானங்களை நடைமுறைப்படுத்த என்ன திட்டங்கள்தான் அங்கே முன்வைக்கப்பட்டன? என்றால் வெறும் ஏமாற்றமே எஞ்சும். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் பின்னர் இடம்பெற்ற தேர்தலை வெகுசன வாக்கெடுப்பாக பிரதிபலித்த த.வி.கூட்டணியினர், தேர்தலின் பின்னர் அத்தீர்தானங்களுக்கு மிகவும் குறைவான மாவட்டசபைத் தீர்வினை ஏற்கத் தயாராக இருந்தமை வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு எப்படியான முடிவை தந்தது என்பது முக்கியமான கேள்வியே.

எனவே, அக்காலத்து அரசியல் சூழலில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை எடை போடுவோமாயின் அது வெற்றுக் கோஷம் என்பதையும் கட்சிகளுடன் இரகசியப் பேச்சு வார்த்தைகளை நடத்துவதற்கு உதவியாக bargaining position தரும் மிரட்டலாக முன்வைக்கப்பட்டது என்பதையும் அறிவோம்.

ஆனால், வட்டுக்கோட்டைத் தீர்மானங்கள் பற்றிய ஆய்வோ அதுபற்றிய விமர்சனமோ இங்கே அவசியமற்றவை.

ஏனெனில், வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் பின் இடம்பெற்ற தேர்தல் வெகுசன வாக்கெடுப்போ இல்லையோ, அத்தேர்தலுடன் த.வி.கூட்டணியினர் அதனைக் கைவிட்டதால் அதன் அதிகாரம் அற்றுப்போனதோ இல்லையோ, விடுதலைப் புலிகளது MOU ஏற்பாடு அவற்றிலும் மேலானவை என்பதும், சர்வதேசிய ரீதியில் அங்கீகாரம் பெற்றதும் வட்டுக்கோட்டைத் தீர்மானங்களை நடைமுறையில் மேலோங்கியவை (superceeded) என்ற விடயமே முக்கியமானது.
வட்டுக்கோட்டைத் தீர்மானங்கள் வெறும் தீர்மானங்களேயன்றி, தேர்தலின் பின்னர் வெற்றி பெற்றவர்களால் கைவிடப்பட்டவை என்பதுமன்றி, MOU போல சிறீலங்கா அரசுடனான சர்வதேசிய ரீதியிலான உடன்பாடல்ல.

எனவே வட்டுக்கோட்டைத் தீர்மானம்பற்றிய வாக்கெடுப்பு, தமிழ் பேசும் மக்கள் அனைவரது தீர்வுக்கான வழியல்ல என்ற அதிமுக்கிய விடயத்தை மனக்கண்ணிலிருந்து அப்புறப்படுத்தி, வெறும் தமிழர்களது தீர்வாகப் கொண்டாலும் தமிழர்களை பின்னோக்கி இழுத்துச் செல்லும் செயலாகவே இருக்கிறது.

தேர்தல் 2: நாடு கடந்த தமிழீழ வாக்கெடுப்பு

தமிழீழத்திற்கு யார் வாக்களிப்பது என்பது சர்ச்சையான விடயம். (வாக்குரிமை பற்றிய எமது சில கருத்துகள் பின் தரப்பட்டுள்ளன.)

வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கென பாராளுமன்றம் ஒன்றினை உருவாக்குவதில் தப்பில்லை. இங்கிலாந்தில் வாழும் இஸ்லாமியரும் தமக்கென ஒரு பாராளுமன்றத்தை நடத்துகிறார்கள். அதற்கு அதிகாரம் இல்லை என்றபோதிலும், பிரித்தானியா வாழ் இஸ்லாமியருடைய பிரச்சனைகளைப் பிரதிபலிக்கவாவது அது உதவும் எனவாதிடலாம்.

ஆனால், அது ஈராக்கிய அல்லது அவ்கனிஸ்தானிய அல்லது பாலஸ்தீனிய இஸ்லாமிய பாராளுமன்றம் என்று தன்னை அழைக்கவில்லை. அதன் பிரதிநிதிகள் பிரித்தானிய இஸ்லாமியரது வெளிவிவகார விடயமாகவே தமது ஈராக்கிய, மற்றும் ‘சகோதரர்களது’ பிரச்சனைகளை அணுகுகிறார்கள். எனவே, தமிழீழம் என்ற அடையாளத்துடன் இலங்கைத் தமிழர்களையா, புகலிகளையா, இல்லை அனைவரையுமே அது பிரதிநிதித்துவம் செய்யுமா? என்பது ஒரு கேள்வி. இவ்வாறான முரண்பாடுகள் பல ஒருபுறம்.

அதனைவிட, அது ஒரு வெளியேற்றப்பட்டவரின் அரசாங்கமாக (government in exile) இயங்குவதாயின் ‘வன்னி அரசின்’ அதிகாரங்களை பராமரித்த உறவுகளை ஏற்கனவே உருவாக்கி இருந்திருக்க வேண்டும். இல்லாவிடில், எந்த வழக்கில் (presedent) இப்பாரளுமன்றம் இலங்கைத் தமிழரது உடமைகளின் பொறுப்பாளர்களாக முடியும்? என்பது அடுத்த கேள்வி. (இவை தொடர்பான விளக்கங்களும் சில பின்னே.)

இதற்கு இஸ்லாமிய தமிழ் பேசும் சமுதாயங்களது பங்கு இல்லாத தறுவாயில் தமிழீழம் என்பது முன்னர் போல புலிகளது ISGA பிரேரணைத் திட்டங்களுள் அமைந்தது போலாகுமா? இல்லாவிடில் அவர்களது உடமைப் பிரச்சனைகளை எவ்வாறு பிரதிபலிக்கப் போகிறது? என்பவையும் முக்கிய கேள்விகளாகின்றன.

இந்தப் பாராளுமன்றம் தமிழ் பேசும் சமுதாயங்கள் யாவுமே சிங்கள அரசினால் பொதுமைப்படுத்தி ஒடுக்கப்படுகின்றன என்பதை எவ்வாறு கையாளும்? ஏற்கனவே உள்ள மாகாண சபைகளுடன் எவ்வாறான உறவுகளை ஏற்படுத்தப் போகிறது? என்பவையும் பிரதான கேள்விகளாகும். இவற்றுடன், இப்பாராளுமன்ற ஏற்பாட்டால், இலங்கைத் தமிழரது இனத்தீர்வுக்கான நிலைப்பாடுகளை முன்னெடுக்க எவ்வகையில் உதவப்போகிறது என்பதே முக்கிய கேள்வியாகும்.

எனவே, முரண்பாடுகள் குழப்பங்கள் விளக்கமற்ற நிலையுள் நாடுகடந்த தமிழீழ வாக்கெடுப்பு புலிகளது பழைய ஆதரவாளர்களால், தமது சித்தாந்தத்திற்கு, சிதைந்து இறந்து போய்கொண்டுள்ள அதன் உடலுக்கு, உயிர்வாய்வு கொடுத்து வாழ்வு கொடுப்பதற்கான முயற்சி என்பதிலும், தத்தமது அரசியல் வாழ்வுகளுக்கு புகலிடம் தேடும் இன்னுமொரு போலி நடத்தை என்ற விசமமான கருத்துகள் நியாயமாகப் படுவதில் வியப்பில்லை.

வாக்குரிமை/வாக்கெடுப்பு

இவற்றிக்கெல்லாம் முக்கியமான விடயம், வாக்களிக்கும் உரிமை யாருக்கு என்பதாகும். 05/09 வரை புலம் பெயர்ந்தவர்களது கருத்துக்கள் எவையாகினும் அவை செல்லாதவை என்றும், நிலத்தில் இடம்பெறுவதே முக்கியமானது என்ற யாதார்த்த வாதங்களே எமது அரசியலை ஆட்கொண்டிருந்தது. அதனை புலிகளது ஆதரவாளர்கள் முன்வைத்திருந்தாலும் அதற்கென்ற தத்துவார்த்தம் இருந்தது.

புலிகளோ, புலிப்-புகலிகளைக்கூட தமது அதிகார அமைப்பு வடிவத்தில் பார்வையாளராகக்கூட அநுமதித்து இருக்கவில்லை. அப்படியான அமைப்பு வடிவம் அவர்களது வன்னி அரசகாலத்தில் இருந்திருந்தால், அது வன்முறையால் ஒழிக்கப்பட்டபோது அதன் வெளிநாட்டு அங்கம் முழுப் பொறுப்புகளையும் பெற்றுக் கொள்வதற்கான உரிமை கொண்டது என்று வாதிடுவதற்கு சாதகமாக இருந்திருக்கும்.

அவ்வாறு வன்னி அரசின் அங்கமென இல்லாது போகினும், காலாகாலத்தில் தாம் எடுத்த முடிவுகளை புகலிகளிடம் வாக்கெடுப்பிற்கு விட்டிருந்தால், அது நடைமுறை ரீதியிலாவது ஒரு அதிகார வழக்கை (presedent) உருவாக்க உதவி இருக்கும். அவ்வழக்கைக் கொண்டு வன்னி அரசு இல்லாத தறுவாயில், புகலிகள் வாக்களிப்பை அதிகாரபூர்வமான விடயமாக பிரதிபலிக்க முயன்றிருக்கலாம்.

புகலிகள் தம் இச்சையில் தமது பூர்வீகப் பிரதேசங்களிலிருந்து வெளியேறி இருந்தாலும், அங்கே கடந்த 30 வருடங்களாக உக்கிர போர் நடந்தது என்பதும், சிங்கள அரசின் கொலைகார ஒடுக்குமுறைகளுடன் தமிழ் அமைப்புகளது அராஜாங்கப் போக்கும் ஒத்தாசையாக, மக்கள் விரோத நிலைமையே நிலவியது என்பது உண்மை. எனவே, எவ்வாறான தனிப்பட்ட காரணத்தைக் கொண்டு மனிதர் வெளியேறியிருந்தாலும் ‘போர்’ என்ற நிலமையே அவர்களது வெளியேற்றப் போகிற்கு அடிப்படைக் காரணி என்பது மறுக்க முடியாதது. ஆகவே, புகலிகளை வெளியேறியவர்களாகக் கொள்ளாது, வெளியேற்றப் பட்டவர்களாக கணிப்பதும், அவர்களுக்கு இலங்கைத் தீவில் ஜனநாயக உடமைகள் உண்டெனக் கருதுவதும் சர்வதேசிய வழக்கில் தவறான வாதமல்ல. இவ்வகையில் புகலிகளுக்கு வாக்குரிமை உண்டு என்பது தவறல்ல.

ஆனால், அவர்கள் வெளிநாட்டுப் பிரஜைகளாக மாறியபின், பலகாலம் தமது வாழ்க்கையை இருத்தியபின், நிரந்தரமாக நாடு திரும்பும் நோக்கம் அற்றபின், அந்த உரிமையை எவ்வாறான மனோநிலையிலிருந்து, நாட்டில் இருப்பவரது வாக்குரிமைகளுக்கும் மேலாக நியாயப்படுத்த முடியும் என்பது தனிப்பட்ட மனிதர்கள் தம்மைக் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வியாகும். இவ்வகையில், இலங்கையில் வாழும் எமது சகோதரங்களது வாக்குகளின் பெறுமதியும், பங்கும், உரிமையும் இவ்வாறான புகலிகளிடம் மட்டுமே இடம்பெறும் வாக்கெடுப்புகளில் என்ன? என்பது வேறு ஒரு பிரச்சனை ஆகிறது.

இந்நிலையை மன ரீதியிலாவது சீர்செய்திட, தமிழ் பேசுவோரது அரசியற் கட்சிகள், குறைந்தபட்சம் TNAயினர் இவ்வாக்கெடுப்புகள் பற்றி ஆதரித்து கருத்துக்களைக் கூறினால் இவற்றினை நிலத்தில் வாழ்பவர்களிடமும் உலகத்திடமும் நியாயப்படுத்த ஒருவேளே உதவலாம்.

இந்நிலை இல்லாதபோது, புகலிகள் தமிழர்களது இலட்சியங்கள் குறித்தும், இலங்கையில் வாழ்பவர்கள் தமது அன்றாட வாழ்க்கை குறித்தும், வேறுபட்ட வாக்கெடுப்புகளில் ஈடுபடும்போது எது முக்கியம் என்ற கேள்வி எழுவதும், புகலிகளது முயற்சிகள் விரையமாகப் போவதும் எதிர்பார்க்க வேண்டியதே.

ஆனால், இம்முயற்சிகளின் விரையங்களிலும் பார்க்க, நடைமுறையில் சட்டபூர்வமாக நியாயப்படுத்தக்கூடிய MOU பற்றி சாரரம்சங்கள் கவனமற்று கழித்து வைக்கப்பட்டு விரையமாக்கப்படுவதே பாரிய நஸ்டமாகும்.

தேர்தல் 3: சிறீலங்காவின் ஜனாதிபதி

புலிகளது இராணுவம் மிகைப்படுத்திக் காட்டப்பட்டதால் அது தோல்விகண்டபோது பலருக்கு பலத்த அதிரடி போன்ற ஏமாற்றம். அதனால், அத் தோல்வியின் பின்னணியை உற்று நோக்காது விட்டுவிடுகிறார்கள் பலர். எமக்கோ அத் தோல்வியின் தாக்கத்திலும் பார்க்க அதனை நோக்கிய முடிவுகளே முக்கியமானவையாகும். அவையே எமது மக்களது மட்டுமின்றி இலங்கைத் தீவில் வாழும் சகலரதும் அண்மித்த எதிர்காலத்தை சுட்டிக் காட்டுவனவாகும்.

புலிகள் தமது ஆயுதங்களை வெளியாரின் பொது ஸ்தாபனம் ஒன்றிடம் கையளிக்க வேண்டும் என நாம் எப்போதோ கூறியிருந்தோம். அதற்கு தமிழ் பேசும் மக்களது எதிர்காலத் தலைமை பற்றி நாம் கொண்டிருந்த அக்கறையே அடிப்படைக் காரணமாகும். நாமோ புலிகளை தமிழரது சமுதாயங்களது தலைவர்களாகக்கூட ஏற்றிருக்கவில்லை என்பது யாவரும் அறிந்ததே. ஆனால், வலுக்கட்டாயமாக அத்தலைமைப் பீடத்தை கைப்பற்றிக் கொண்ட புலிகள் மற்றைய அரசியல் தலைமைகளை எல்லாம் அழித்தொழிப்பதால் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டலாம் என்பதுடன் வெளியார் ஊடுருவலையும் தடுத்திடலாம் என நினைத்துக் காரியமாற்றினர்.

எஞ்சியோர், சிறீலங்காவசம் தள்ளப்பட்டனர், சிறீலங்கா வசமானமையால் தலைமைத்துவத்திற்கான சுயஇயல்பையும் தகமையையும் இழந்தனர். தமிழ் பேசும் இஸ்லாமிய சமுதாயத் தலைவர்களது நிலைமைகள் சற்று வேறுபட்டாலும் அவர்களும்தான் புலிகள் எதிர்ப்பு அரசியல் நடத்த வேண்டியவர்களாகவும் சிறீலங்கா சார்படைய வேண்டியவர்களும் ஆனார்கள்.

இந்நிலையில் புலிகள் அழிவது, neutron குண்டு வெடிக்கும்போது உயிர்கள்போக கட்டிடங்கள் தப்பிடும் நிலைபோல, வடகிழக்கு அரசியலில் மக்கள் சடப் பொருட்களாகிட, தலையில்லாத பாரிய வெற்றிடம் உருவாகும் என்பது நாம் புரிந்து கொண்ட விடயம். எனவே, இவ்விடத்தில் புலிகளை அழிப்பது தமிழர்களது அரசியல் தலைமையை முற்றாக நிராகரிப்பது என்பதற்கு ஒப்பானது என்பது உண்மை. அதனைத் தவிர்திருக்க முடியுமா? என்பது பாரிய, இன்றோ வெறும் ஆய்வுக்கான கேள்வி. ஆனால், தமிழ் பேசும் சமுதாயங்கள், குறிப்பாக தமிழர்கள் ஏதாவது ஒரு குறிப்பிட்ட நிலைப்பாட்டை தாமாக தமது பலத்துடன் எடுத்துக் கொள்ளும் நிலமையை அற்றுப் போகச் செய்வதற்கான முடிவே இது என்பது மட்டும் தெளிவு.

இந்நிலையை உருவாக்கிடும் முடிவை, சிறீலங்கா எப்போதோ எடுத்திருக்க முடியும், ஆனால் நடை முறைப்படுத்த முடியவில்லை என்பது சரித்திரப் பாடம்.

புலிகள் வெளிக்காட்டிக் கொண்டதிலும் பலவீனமானவர்கள், இராணுவ தளபாடங்களது கொள்வனவு உள்வரவுகளை தம் இச்சைப்படி செய்ய முடியாது போனவர்கள், மக்களது உலகநாடுகளது ஆதரவுகளை இழந்து கொண்டு போனவர்கள், மாறாக அவர்களுடன் நிற்பதாகக் காட்டிக் கொண்ட நோர்வே தொடக்கம் தென் ஆபிரிக்காவரை சகல நாடுகளும் ஆயுதங்களை சிறீலங்காவிற்கு வழங்கின, என்பவை ‘புலிகளது அதிகாரத்தை முற்றுக்குக் கொண்டு வருவது’ என்ற முடிவு சர்வதேசிய அரசுகளிடம் இருந்தன என்பதற்கு அத்தாட்சி. இருந்தும் இவையாவும், நாம் இறுதியில் கண்ட இலகுடன், புலிகள் இராணுவத்தை முறியடித்துவிடும் நிலையை உருக்கின என்பதற்கில்லை.

அதற்கு (1) மக்களுக்கு என்னதான் அநியாயம் நடந்தாலும் முகம்பார்ப்பதில்லை (2) எவ்வாறான ஆயுதங்களைப் பாவித்தாலென்ன புலிகள் ஒழிந்தால் சரி என்ற அரசியல் முடிவுகளும், அவற்றிலும் மேலாக, (3) புலிகளது நடமாட்டங்களை விண்ணிலிருந்து கண்டு சிறீலங்காவை தயார்ப்படுத்தும் நிலமையைத் தந்தமை இராணுவ ரீதியில் அதிமுக்கிய முடிவாகும்.

இலங்கையின் இனப் பிரச்சனைக்கு இராணுவத் தீர்வு இல்லை வாய்பாட்டாக சொல்லிக் கொண்டிருந்த இந்தியா சரி, மேற்கத்திய நாடுகள் சரி, தென் ஆபிரிக்கா போன்ற மூன்றாம் உலக நாடுகள் சரி, ஏன் சிறீலங்கா பக்கமாகின? ஏன் ஆயுத உதவிகள் வழங்கின? ஏன் multiple barrel rocket launchers போன்ற ஆயுதங்களை புலிகளுக்கு கேடயமாக கட்டி வைக்கப்பட்டிருந்த மக்கள் மீது பிரயோகித்த போதும் வெறும் வார்த்தைகளுடன் தம்மை நிறுத்திக் கொண்டன?

இவற்றிக்கெல்லாம் ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். புலிகள் பயங்கரவாதிகள் அல்-குவேடாவுடன் கூட தொடர்பு கொண்டவர்கள், இந்தியாவிற்கு எதிரானவர்கள், பிரிவினைவாதிகள், என பலவிதமான நிலைமைகள் இருக்கக் கூடும்.
ஆனால், 2008 வரை பேச்சு வார்த்தைகளை புலிகளுடன் பிரத்தியேகமாக, மிக இரகசியமாக நடத்தியவர்கள், மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள் சிறீலங்காவினது கட்டுக்கு அப்பாலிருந்து சுய இயல்புடன் முடிவுகள் எடுக்கக் கூடிய காலத்தை வாங்கித் தர முயலாதவர்கள், இனப்பிரச்சனைக்கு இராணுவத் தீர்வே இல்லை என அடித்துச் சொன்னவர்கள், சடுதியாக மனம் மாறும்போது காரணங்கள் என்ன என ஆராய்வது எம்மை நாமே ஏமாற்றும் செயலாகும்.

இதனிலும், எம்பால் விளைவுகள் என்ன என்பதே எமக்கு முக்கியமான விடயம். இதற்கு ஒரேஒரு பதில்: தலைமைத்துவம் இழந்த தமிழர்களும் தமிழ் பேசும் மக்களும் என்ற நிலையே என்பதுதான். இந்நிலையை உணர்ந்தவர்கள் தமக்குத் தாமே ஆறுதல் காணச் சொல்வது, “புலிகளை அழிக்க அநுமதி கொடுக்கமுதல் வெளிநாட்டுச் சக்திகளுக்கும் சிறீலங்கா அதிகார வர்கங்களுக்கும் இடையே ஏதோ ஒரு deal இருக்க வேண்டும்” என்பதே.

இதில் ஒரு logic இருக்கும் போதிலும், அப்படியான ஒரு dealதனை காரியம் முடிந்தபின் சிறீலங்கா சரி வெளிச்சக்திகள் சரி ஏன் நிறைவேற்ற வேண்டும்? என்பதே எமது கேள்வி.

இவற்றைப் பின்னணியாகக் கொண்டே 27 தை, 2010 நடைபெறவுள்ள சிறீலங்கா ஜனாதிபதித் தேர்தலை நாம் கணிப்பிடுகிறோம்.

பிரதான வேட்பாளர்கள்
தமிழ் பேசும் மக்களைப் பொறுத்தவரை ராஜபக்ஷாவும் பொன்சேகாவும் ஒரே சோழன் செடியில் பிறந்த இரு பொத்திகள்.
இலங்கை சிங்கள மக்களது சொத்து என்பதில் அசைவிலா நம்பிக்கை கொண்டவர்கள். அதன்பின்னர், தமிழ் பேசுவோரை எவ்வாறான கரிசனக் கண்ணுடன் அணுகுகிறார்கள் என்பதில் வேறுபடுகிறார்கள் என்பதால் நாமும் குதூகலமடைய வேண்டும் என கருதுபவர்கள் தம்மை ஏமாற்றும் தன்நம்பிக்கை அற்றவர்கள்.

இவர்களே முள்ளிவாய்காலில் என்ன தமிழரது இரத்தக் களரிக்கு முற்றாகப் (புலிகளது பங்கு வேறு) பொறுப்பானவர்கள். ஒரே கரையில் நின்று சிங்கள அரசுக்கு எதிரான தமிழர்களது போராட்டத்தை முறியடித்தவர்கள்.

இவர்களிடையே தமிழ் பேசுவோர் குறித்து வேறுபாடுகாண விளைவது ஒரு பாறாங் கல்லின் வெடிப்பிடையே நாக்கால் நீராவியைத் தேடுவது போலாகும். இந்த எமது அநுபவங்களைவிட இவர்கள்பற்றி வேறேதாவது நல்ல விடயங்கள் மறைந்து கிடக்கின்றனவா?

ஒருவேளை, ஜனாதிபதி ஆட்சி முறையை (ஆறு மாதத்தில்) மாற்றி அமைப்பது என்ற பொன்சேகாவின் வாக்குறுதி கண்ணை ஈர்க்கக் கூடும். ஆனால், கடந்த தேர்தலின் முன்னர் ராஜபக்ஷா ஜேவிபி அமைப்புடன் எழுத்தில் கொண்ட ஏற்பாடும்தான் இதனை வாக்குறுதியாகத் தந்திருந்தது. எனவே, தேர்தலின் முன்னர் தரும் வாக்குறுதிகள் எல்லாம் நடப்பவை என்பதற்கல்ல.

மேலும், மூன்றில் இரண்டு பாராளுமன்ற அதிகாரமின்றி இதனைச் சாதிக்க, அதாவது அரச சாசனத்தை மாற்றிட, வெகுசன வாக்கெடுப்பு அவசியம். பொன்சேகாவோ பாராளுமன்ற அரசியற் காலச்சாரம் அறியாதவர், கட்சித் தளம் இல்லாதவர். இவ் இரண்டு வழியுமோ, வெற்றியை நிச்சயமாகத் தரும் என்று கூற முடியாது. எனவே, ஆறு மாதத்தில் ஜனாதிபதி ஆட்சிமுறையையே மாற்றுவதாக யாரும் கூறுவதை எவ்வாறு கணிப்பது என்பது கேள்வியே. ஆறு மாதத்தில் இது குறித்த வெகுஜன வாக்கெடுப்பை நடத்துவேன் என்று கூறுவதே சாத்தியமான வாக்குறுதியாகும். எனவே, இது தொடர்பாக இவ்விரு வேட்பாளர்களுக்கும் இடையே வேறுபாடு காண்பவர்கள் இரகசிய தகவல்களைப் பெற்றவர்களாகவே இருக்க முடியும்.

இவற்றைத் தாண்டிய ஜனநாயகவாதம் கொண்டு வேறுபாடுகள் காண்பவர்களும் உண்டு. ராஜபக்ஷா சிறீலங்காவிற்கு ‘பரம்பரை’ ஆட்சிமுறையை கொண்டு வந்துள்ளார் அதனை மாற்றிட பொன்சேகா உதவுவார் என்பது இவர்களது சொத்தி வாதம்.

மூன்றாம் உலக நாடுகளில் ஆளும் வர்க்கங்கள் சில குடும்பங்களையே சார்ந்திருக்கும் என்பது புதிய விடயமல்ல. பண்டாரநாயக்காகளும் ஜெயவர்த்தன செனிவரத்னா குடும்பங்கள் தொடர்புகள் கொண்டவை என்பதும் அவர்களது கூட்டத்தினரே சிறீலங்காவை சுதந்திர காலம் தொட்டு ஆண்டுவருகிறார்கள் என்பதும் புதிய கதையல்ல. ராஜபக்ஸா குடும்பம் ஒட்டு மொத்தமாக ஒரே நேரத்தில் அரசேறியமைதான் சற்று வேறுபட்ட விடயம். ஆனால், குடியானவர்-ஜனநாயகத்தில் (feudal-democracy) ஆழும் குடும்பத்தை (clan) மாற்றிவிடுவதால் மக்களது விடயங்களில் பாரிய மாற்றம் ஏற்படக் கூடும் எனக் கூறும் புரட்சிவாதிகளைப் பார்த்து என்ன சொல்வது என்பது புரியாத விடயம். இதனை இவர்கள் ஏதோ கணித-விஞ்ஞான ஆய்வு போல சூத்திரங்கள் பீடிகைகளுடன் சொல்லும்போது எமக்குள்ளே நாம் தாண்டு போவதைத் தவிர வேறு வழிதான் ஏது?

சிறீலங்காவின் அரசியலிலை வன்முறை பலாத்காரமாகச் சூழ்ந்ததில் இருந்து தமிழர்களது போலவே சிங்களவரிடையேயும் சில சமூக-மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை அவதானிக்கலாம். வன்முறைச் சூழல் மத்திய வர்க்கங்களை நாலு திக்கும் ஓடவைப்பது என்பதை நாம் அறிவோம். தமது வசதியான, உயிருக்கு உத்தரவாதமான சூழுல்களில் இருந்தபடி வன்முறையை ஆதரிப்பது அவர்களது பொழுதுபோக்கான அரசியல் என்பதையும் நாம் உணர்ந்துள்ளோம். இதே நிலைமையையே சிங்களச் சமுதாயங்களும் சந்தித்துள்ளதையும், அதனால் கரையோரச் சிங்களச் சமுதாயங்கள் அரசியல் அதிகாரம்பெற முனைவதையும் நாம் அவதானிக்கலாம்.

இதனை ஒரு நிலையான ஸ்தாபனமாக உருவாக்கப்பட்டுள்ள இராணுவதினூடாகவும், ராஜபக்ஷா குடும்பத்தினரை பராமரிப்பதூடாகவும், ஜேவிபி ஜேஏச்யு போன்ற அமைப்புகளுடாகவும் அரசியலாக்கம் செய்ய முயல்வதையும் நாம் காண்கிறோம். இவ்வழியில், இவர்களுக்கும் சிங்கள பண்டைய தலைக்-குடும்பங்கள் சார்ந்த சமுதாயங்களுக்கும் அரசியற் போட்டி உருவாகுவது எதிர்பார்க்க வேண்டியதே.

சரி, பொன்சேகாவின் தளம் எது? அவர் பழைய தலைக் குடும்பங்களது அபிலாசைகளைப் பிரதிபலிக்க வேண்டிய வர்க்க உந்தல்கள் ஒரு புறமாகவும், நம்பத்தகுந்த தேசிய-ஸ்தாபனமாக உருவாகி வரும் அரசபடையின் அபிலாசைகளது சார்பாக மறுபுறமாகவும் அவரது தளம் சற்றே பரவலானது. இன்று பல மாகாணங்களது ஆளுனர்கள் (governers), அரச-ஸ்தாபனங்களது தலைவர்கள், மேலும் பல விதமான சமுதாயப் பொறுப்பாளர்கள் அரச படையைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். மேலும், இராணுவமயப் படுத்தப்பட்டுள்ள இலங்கைச் சமுதாயங்களிடையே கட்சிகளது குண்டர் படைகளைத் தவிர, அரசியற் பலத்தைக் கொண்டதும் தன்னிச்சையில் கொலைகளைச் செய்யக் கூடியதும் இராணுவம்தான். இவற்றைவிட, இரத்தத்தால் தொடுத்த clanக்கும், இராணுவ-அமைப்பு விசுவாசத்தால் தொடுத்த clanக்கும் மூன்றாம் நாடுகளின் குடியானவர்-ஜனநாயகத்தில் என்னதான் வேற்றுமைகள் என்பது எமது கேள்வி.

நாம் தொடக்கத்திலே ஞாபகப்படுத்தியது போல அவர் இவர் என்றெல்லாம் அலையாது, ஒரு மாதிரி வடிவத்துளிருந்து இந்தச் circusதனைப் அவதானிப்பவர்க்கு அதன் முடிவுகள் என்வாகும் என்பது புதிருமல்ல, புதினமுமல்ல.

எம்மைப் பொறுத்தவரை, தமிழ் பேசுவோர்களதும் உழைக்கும் வர்க்கங்களுக்கும் இவ்விருவராலும் வேறுபட்ட பயன்கள் கிட்டும் என பெரிதுபடுத்திப் பார்ப்பது கானல்நீர் கதையாகும். தமிழ் பேசுவோரைப் பொறுத்தவரை ஜனதிபதி அரசோ, பாராளுமன்ற அரசோ, அரசியல் பலமற்ற அவர்களது நிலையை மாற்றப் போவதில்லை. எனவே, இந்தப் “பாரிய ஜனநாயக விவாதத்தில்” எமக்கும் கருத்துண்டு என்பதற்காக ஏதாவது பங்கு பெறலாம் என நினைப்பது பகற்கனவே.

ஆனால், புலிகளது சரித்திரத்தின் எச்ச சொச்சங்களுக்கு முடிச்சுகள் போடவேண்டிய கருமங்கள் உண்டென அவர்களுடன் அரசியற் காலம் கழித்தவர்கள் சிந்திக்கலாம்.

இன்று வாக்குரிமை அற்று, அன்று இலங்கை பிரஜா உரிமை பறிக்கப்பட்ட மலையகத்தவர் போல இலட்சக் கணக்கில் உள்ள தமிழர்களது பிரச்சனையும், பொதுப்பணி செய்யப் புறப்பட்டு போராளிகளாகி, இன்று அரச தடுப்பு முகாங்களில் அனாதரவாக மனோவியல் தாக்கங்களுடன் வாடும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் யுவதிகள் பிரச்சனையும் தம்மால் உதவக்கூடியவை என இவர்கள் கருதலாம்.

எனவே, இவைபற்றிய dealகளை தலைவர்களெனக் கூறியபடி யார் செய்தாலும் வரவேற்கப்பட வேண்டும் என்ற வாதம் எமக்கு எட்டாமல் இல்லை. ஆனால், தடுப்பு முகாங்களிலிருந்து இதுவரை மக்கள் விடுவிக்கப்பட்டமைக்கு எதாவது dealகளா, அல்லது வெளியாரின் தலையீடுகளா காரணம்? என்ற கேள்வியே பதில் சொல்கின்றது. காகமிருக்க விழும் பழத்தை நாம் பறித்துத் தந்தோம் என்று சொல்வதால் எதுவித பயனும் மக்களுக்கு இல்லை. ஆகவேதான் அர்த்தமற்ற பிரத்தியேக இரகசிய dealகள் பற்றி எப்போதுமே எமக்கு ஐயப்பாடே எழுகின்றன.

இதனைவிட, இவற்றினைத் தொடர்ந்து இனப்பிரச்சனைக்கும் தீர்வு பெற்றுத்தருவோம் என்ற dealகளைப் பற்றி யாராவது கதைப்பார்களேயாயின் அதற்கு வெளியார் தரும் தெம்பு இருப்பதாகவும், இல்லாவிடில் வெறும் பிதற்றல் என்றுமே நாம் கருத வேண்டும். இவற்றைவிட, வியாபார வர்த்தக வர்க்கத்தினர் அல்லது கட்சி நலம் தனியார் உயிர் நலம் என தனிப்பட்ட ரீதிகளில் ஏதாவது dealகள் போடுவதையே நாம் ஆச்சரியமின்றி எதிர்பார்க்க முடியும்.

தமிழர்களது வாக்குகள்

இந்தத் தேர்தலில் தமிழர்கள் எப்படி வாக்களிக்க வேண்டும்? என்பது பலராலும் எழுப்பப்படும் கேள்வியே. எம்மைப் பொறுத்தவரை,

1.அவர்களில் பலர் வாக்குரிமையற்று, தடுப்பு முகாங்களுள் இருக்கும்போது வாக்களிப்பு என்பதே போலியான விடயம்.
2.அரசியல் பலத்தையும் அதை நிரப்ப உருவான இராணுவப் பலத்தையும் இழந்து நிற்கும் அவர்கள் வாக்குப் பலத்தால் எதையும் பெறலாம் என்று கருதுவதும் போலியான விடயம்.
3.இரு வேட்பாளர்களிடையே ஏதாவது வேறுபாடுகள் உள்ளன எனக் கருதுவது பகற் கனவான விடயம்.
4.அரசமைப்பையே மாற்றி அமைக்காது, அதன் உயர் பீடத்தின் வகையை மாற்றிடுவதால் தமிழருக்கோ, தமிழ் பேசும் சமுதாயங்களுக்கோ அல்லது ஒட்டு மொத்தமாக உழைக்கும் மக்களுக்கோ பயன் கிட்டும் என்று கூறுவது மக்கள் விரோதமான விடயம்.
5. தமிழரது வாக்குகளைப் பயன்படுத்தி பெரும்பான்மையோரது அரசாங்கத்தை நிர்ணையம் செய்ய முற்படுவது, இனப் பிரச்சனையின் தீர்வுக்கு எதிர்காலத்தில் குந்தகம் தரும் என்பதால், தவறான விடயம்.
6. தமிழரை அவர் அல்லது இவருக்கு வாக்களியுங்கள் என தலைமைத்துவத்தையே அற்று இருப்பவர்கள், வழிகாட்ட முனைவது மக்களது ஜனநாயகத் தன்மைக்கு குரோதமான விடயம்.

இவற்றின் அடிப்படையிலேயே, TELO தலைவர்களில் ஒருவரும் அண்மையில் சிறீலங்கா மீண்டவருமான திரு. சிவாஜிலிங்கத்தின் தேர்தற்களப் பிரவேசத்தை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம். “யாருமே துணிவில்லாத போது தமிழரது பிரச்சனைகளை நாம் பேசுகிறோம்” என்பது மனோவியல் ரீதியில் இதமானதாக சிலருக்கு இருந்தாலும் அதன் விளைவுகள் என்னவாகும்? என்ற கேள்வியும் அவர்களுடன் கூடவே இருக்க வேண்டும்.

பிரதேச ஜனநாயகம் வேண்டிப் போராடும் நாம் மத்திய அரச அதிகாரப் போட்டியில் ஈடுபடுவது மூடத்தனம் என்பதிலும் பார்க்க, அதிலிருந்து நேரடிப் பலனை எதிர்பார்ப்பது போலியானது என்பதைத் தெரிந்து கொண்டே அதில் ஈடுபடுவது மாற்றாரது வேடிக்கைக்கும், சூட்சுமங்களுக்குமாகவே இருக்கும் எனச் சந்தேகப்பது தவிர்க்க முடியாதே போய்விடுகிறது.

தமது அரசியல் அபிலாசைகளுக்கு தடங்கலாக இருந்தமையாலேயே முதலில் மலையகத்தவரையும், பின்னர் தமிழ் பேசுவோரையும் சிங்களத் தேசியவாதிகளும், குறிப்பாக பேரினவாதிகளும் கவனிக்க வேண்டியதானது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஸ்கொத்லாந்து தேசத்தின் சுயநிர்ணைய உரிமையை கோரியபடி பிரித்தானியாவின் மத்திய அரசில் அவர்களது அதிகாரம் என்ன? என்றவாறான West Lothian வாதத்தை புரிந்தவர்களுக்கு நாம் கூறுவதின் நாசூக்கான கருத்துகள் புலனாகும்.

பெரும்பான்மைத்துவத்தை பாவித்து சிறுபான்மையினரது உடமைகளை, உரிமைகளை, மறுப்பதும் சிறுபான்மையினரின் குறைவான வாக்குகளால் பெரும்பான்மையினரின் அரசை நிர்ணயம் செய்வதும் ஜனநாயகத்திற்கு ஒவ்வாத செயல்களாகும். இதற்கு அதிகாரப் பரவலாக்கம் தரும் பிரதேச-ஜனநாயகமே பதிலன்றி பிரதேசவாதத்துடன் பொதுத் தேர்தலில்களில் தலையீடு செய்வது பொருத்தமானதல்ல.

எனவே தமிழ் பேசும் மக்கள் யாவரும், தலைமைத்துவம் என்பதை இழந்துவிட்ட கட்சிகளது அடிப்படைத் தீர்வுகளை நோக்கி அமையாத dealகளைப்பற்றிச் சிந்தியாது, தத்தமது நலன்களைக் கருதி சுயமாகவே தமது வாக்குகளை பிரயோகிப்பதா இல்லையா என்ற முடிவுகளுக்கு வர வேண்டும், அவர்களை வரவிட வேண்டும் என்பதே எமது ஒரேஒரு வேண்டுதல்.

அப்படியானால் சிவாஜிலிங்கத்தின் வேட்புமனு என்னாவது, தமிழ் பேசுவோரது உரிமைகள் பற்றி தவறான விடயமா?

சிறுபான்மையோரது உரிமைகளை முன்வைத்து பொதுத் தேர்தல்களில் போட்டிடுவது பற்றிய எமது விளக்கங்கள் சில மேலே தந்தோம், இங்கே சரி/பிழை என்பதல்ல எமது விவாதம்: விளைவுகள் என்ன என்பதே அவற்றை நிச்சயம் செய்பவை.

வெளியாரின் தலையீடுகள் இராது போகின், பொன்சேகாவோ மகிந்தாவோ தன்பாட்டிலேயே இனப்பிரச்சனைக்கு உடமைகளின் நீதியுடன் தீர்வுகளை வைக்கும் நிலைமைகளுள் இருக்கப்போவதில்லை. பேரினவாதிகளதும், தேசியவாதிகளதும் வர்க்க நோக்குக்காக அவர்கள் மனத்தால் விரும்பினாலும் நடத்தையில் அநுமதிக்கப் போவதில்லை.

அரசியற் பலமோ அதனைத் தரும் பொருளாதாரப் பலமோ இல்லாதமையாலேயே பிரதேசங்களில் ஆயுதக் கிளர்ச்சிகள் உருவாகுகின்றன. இன்று புலிகளது அழிப்புடன் அந்த இராணுவப்பலத்தை மட்டுமின்றி அவர்கள் உறுஞ்சிக் கைவசம் வைத்திருந்த தலைமைத்துவம், தன்நம்பிக்கை என பல பலங்களையும் தமிழ்மக்கள் இழந்து நிற்கிறார்கள். இவர்களை வழிநடத்திச் சென்ற தேசியவாதமோ இன்று நிலைகுலைந்து கிடக்கிறது.

இன்று அவர்களுக்கு மிக்க அவசியமான விடயங்கள்:
1.தனிமனிதர் குடும்பங்களது மீள் இணைப்பு,
2.நிலத்தில் இருப்பு,
3.வாழ்க்கைச் சுமூகம்,
4.அதற்கான பொருளாதார, பாதுகாப்பு காத்திரங்கள்,
5.மனோவியல், பொருளாதார, உயிர் இழப்புகள் குறித்த நஸ்டஈடுகள்,
6.இவற்றை உள்ளடக்கும் அரசில் நிலைப்பாடுகள் செயற் திட்டங்கள்,
என்பவையும், மேலாக
7.இவற்றைப் தரக்கூடிய ஒருமைப்பட்ட தலைமைத்துவமுமே.

ஒருமைப்பட்ட தலைமைத்துவம் என்றதும் ஒன்றுபட்ட அரசியல் அமைப்போ, ஒற்றுமையான அணியோ அல்ல. தமிழ் பேசும் மக்களது தலைவர்கள் என்பவரிடையே, குறைந்தபட்ச புரிந்துணர்வுணர்வினை ஏற்படுத்திக் கொள்வதையே தற்காலத்தில் தலைமைத்துவத்தை ஏற்படுத்துவதற்கான முதலாவது செயற்திட்டமாகக் கருதுகிறோம். இதனை ஒரு அமைப்பு மற்றதன் மீது திணிப்பதாலோ, பலத்தால் தம்வசம் இழுக்கலாம் என்ற நினைப்பாலோ, துரோகி-தியாகிப் பட்டங்களை மற்றவர்க்கு தகுந்தவண்ணம் சாதிக்க முடியாது.

இன்று தேசியவாதிகளாக வெளிநாடுகளில் வாழ்பவர்களும், வடகிழக்கில் தேசியவாதிகளாக புலிகளடியில் மடிந்து கிடந்தவர்களும் தமிழரது தலைமைத்துவம் இல்லாத நிலையை அறியாதவர்கள் அல்லர். இவர்கள் ஒருவரை ஒருவர் தேடாதே கண்டு கொள்வதும் புதிய உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதும் நியாயமானதே.

தமது தயவில் தமது பணத்தில் அரசியல் நடத்தும் தமிழ் அமைப்புகளுடன் இனப் பிரச்சனையின் தீர்வுக்கு ஒப்பந்தம் போடவேண்டிய அவசியமோ, அவர்களை தொடர்ந்தும் பராமரிக்க வேண்டிய நிர்ப்பந்தமோ சிறீலங்கா அரசுக்கு இல்லாத காலம் நெருங்கியபடி உள்ளது. போரை முடிவுக்குக் கொண்டுவந்த வெளியாரது விருப்பும் அவ்வழியே என்பதும் முற்கூறக் கூடியது. எனவே, கைது செய்யப்பட்ட சரணடைந்த புலித் தலைவர்கள் உட்பட்ட அரசியற் தளம் ஒன்றினை அனுமதிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுமாயின் ஆச்சரியமில்லை.

இவ்வாறு, அரசியல் வரம்புகளும் உறவுகளும் மீளாக்கத்திற்கு உள்ளான நிலையில், யாருமே தலைமைத்துவமும் தரும் பலங்கள் அற்று, வெளியாரின் தலையீட்டிலேயே தமிழரதும், தமிழ் பேசுவோரது எதிர்காலமே தங்கி உள்ள நிலையில், TELO அமைப்பினரே TNAனைப் பிளவுபடுத்தினார்கள், தமிழரது உடமைகளை தட்டில் வைத்து மகிந்தாவிற்கோ பொன்சேகாவிற்கோ கப்பமாக வழங்கினார்கள் என்ற போலியான வெற்றுப் பழியை தோளில் சுமந்திட வேண்டிய அவசியம் TELOவிற்கோ, ஏன் இரகசிய dealகள் போடும் வேறு எந்த அமைப்புகளுக்கோ ஏன் என்பது புரியவில்லை.

இராணுவத் தீர்வை நடத்தி முடித்த வெளியார் அரசுடன் தமிழ் பேசும் சமுதாயங்களுக்கும் உள்ள சர்ச்சையை தெரியாதவர்கள் அல்லர், இந்த ஜனாதிபதித் தேர்தலூடாக யாராவது மீணடும் சுட்டிக்காட்டுவர் என்று எதிர்பார்த்ததும் இல்லை. எனவே அதற்கான பொறுப்புகளையும் அவற்றின் சுமைகளையும் தலைமைத்துவம் ஒன்று உருவாகும்வரை அவர்களிடம் விட்டுவிடுவதே சமயோகிதம்.

எனவே, சிவாஜிலிங்கத்தின் தேர்தற் பிரவேசத்தை மீள் பரிசீலித்தால், அது அவசரக் குடுக்கைத் தனத்தால், தம்முடன் உள்ள மற்றைய அமைப்புகளுடன் கூட ஆலோசிக்காது, உட் போட்டிகளாலும் தவறான அரசியற் கணிப்புகளாலும் ஆலோசனைகளாலும் எடுக்கப்பட்ட முடிவு என்பது தெளிவு. எனவே, தகுந்த தருணத்தில் ஏதாவது அர்த்தமில்லா dealகளைச் சாட்டுச் சொல்லியபடி அவரது தேர்தல் மனுவை வாபஸ் பெற்றுக் கொள்வதே TELO சார்பிலும் தமிழ் பேசும் சமுதாயங்கள் சார்பிலும் செய்யக் கூடிய தகுந்த முடிவாகும்.

நன்றி.
ரவி சுந்தரலிங்கம்
28 மார்கழி. 2009

ஜனாதிபதி மஹிந்தவின் வெற்றிக்காக அமைச்சர் முரளிதரனுடன் இணைந்து செயற்படுகிறேன் – சந்திரகாந்தன்

siva.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காகத் தானும் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனும் இணைந்து பணியாற்றி வருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

ஜனாதிபதி வெற்றிபெற வேண்டுமென்பதே இருவரதும் ஒரே நோக்கமாகுமெனத் தெரிவித்த முதலமைச்சர், இருவருக்கிடையில் பிணக்குகள் நிலவுவதாக வெளியான செய்திகளில் எந்த உண்மையும் இல்லையெனத் தெரிவித்தார்.

இருவரும் வெவ்வேறு கட்சிகளைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், ஜனாதிபதித் தேர்தலில், ஒரே நோக்கத்துக்காகப் பாடுபடுவதில் எந்தப் பிரச்சினையும் கிடையாது எனத் தெரிவித்த முதலமைச்சர் சந்திரகாந்தன், கடந்த காலங்களில் சில கருத்து முரண்பாடுகள் நிலவியபோதிலும் தற்போது இணைந்தே செயற்படுவதாகவும் குறிப்பிட்டார்.

சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 738 தமிழ் கைதிகள் இந்தவாரம் விடுதலை

முன்னாள் குழந்தைப் போராளிகள்இறுதி யுத்தத்தின் பின்னர் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டுத் தடுத்து வைக்ககப்பட்டுள்ளவர்களுள் 738 பேர் இவ்வார இறுதிக்குள் விடுதலை செய்யப்படுவார்களென சட்ட மாஅதிபர் மொகான் பீரிஸ் தெரிவித்தார்.  நிவாரணக் கிராமங்களில் இருந்த போது விசாரணைக்கென கொண்டு செல்லப்பட்டவர்களுள் 700 பேரும், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களுள் 38 பேருமே இவ்வாறு விடுவிக்கப்படுவதாக சட்ட மாஅதிபர் கூறினார்.

சி. ஐ. டி.யினரால் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டுள்ளவர்களுள் 55 பேர் புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். விடுவிக்கப்பட்டவர்கள் எவ்வித குற்றச் செயல்களிலும் சம்பந்தப்படாதவர்கள் என்பது நிரூபணமாகியிருப்பதாகவும், ஏற்கனவே 100 பேர் இவ்வாறு விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் சட்ட மாஅதிபர் கூறினார்.

தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுபவர்களைத் துரிதமாக விடுவிப்பதோடு, ஒரு மாதத்தில் குறைந்தது 100 பேரையாவது விடுவிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். புலிகள் இயக்க உறுப்பினர்கள் என அடையாளம் காணப்பட்ட சுமார் 11,500 பேருக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருகின்றது.  இவர்கள் தவிர இறுதி யுத்தத்தின் போது இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்களுக்கு வந்து சேர்ந்தவர்களுள், பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அவர்களுள் சந்தேகத்திற்கிடமானவர்கள் தொடர்ந்தும் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், 700 பேர் இவ்வாரம் விடுதலையாகின்றனர்.  இவர்களை மீளக்குடியர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மருமகனின் ஆயுதக் கொள்வனவு பற்றி தொலைக்காட்சி விவாதம் நடத்த பொன்சேகாவுக்கு விமல் அறைகூவல்

vimal-weera.jpgசரத் பொன்சேகாவின் மருமகன் தாருக்க வெளிநாடுகளில் ஆயுதம் கொள்வனவு செய்து இலங்கைக்கு விற்பனை செய்தமை, இலங்கையிலும் வெளிநாடுகளிலும் அவர் வாங்கிய சொத்துக்கள், அவரது கம்பனி மற்றும் வங்கிக் கணக்கில் உள்ள பணம் ஆகியவை சம்பந்தமாக ஒரு வாரத்துக்குள் சரத்பொன்சேகாவோ அல்லது அவரது பிரநிதிகளோ நேரடி தொலைக்காட்சி விவாதத்துக்கு வருமாறு அழைக்கிறேன்.  அவ்வாறு வராவிட்டால் இவை பற்றிய சகல விபரங்களையும் ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்துவோம். என்று விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இந்த நாட்டில் வீண்விரயம், லஞ்சம், களவு இடம்பெறுவதாக சொல்லித்திரியும் சரத்பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்து கொண்டு ஆயுதக் கொள்வனவில் சேர்த்த சொத்து க்களை பற்றி அரசு மக்களுக்கு வெளிப் படுத்தும். பத்தரமுல்லையில் உள்ள அவரது கட்சி தலைமையகத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் அங்கு கருத்துத் தெரிவிக்கையில், சரத் பொன்சேகாவை ஜனாதிபதி வேட்பாளர் என பிரேரித்தவர் ஜே.வி.பி. என்றும் இன்னொரு இடத்தில் ரணில் விக்கிரமசிங்க என்றும் கூறுகின்றனர். ஆனால் ரவூப் ஹக்கீம் சரத் பொன்சேகா முஸ்லிம் காங்கிரசின் வேட்பாளர் என்றும் அவரை பிரேரித்தது அவரது கட்சியே என்றும் அட்டாளைச்சேனையில் கடந்த வாரம் கூறியுள்ளார்.

சரத்பொன்சேகா சன்டே லீடர் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் வெள்ளைக் கொடி கொண்டுவரும்போது சுடும்படி பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்தார் எனச் சொல்லியிருந்தார். அடுத்த நாள் நான் அடிப்படிச் சொல்லவில்லை என மறுப்புத் தெரிவித்திருந்தார்.  ஆனால் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இரத்தினபுரியில் நடைபெற்ற கூட்டத்தில் பாதுகாப்புச் செயலாளரே சுடும்படி உத்தரவு பிறப்பித்துள்ளதாக மீண்டும் தெரிவித்துள்ளார்.

இவரது உரை கடந்த 25 ஆம் திகதி தெரன தொலைக்காட்சியில் செய்தியின்போது ஒளிபரப்பப்பட்டது. இவ்வாறாக நாட்டைக் காட்டிக்கொடுப்பதற்கும் அமெரிக்க மற்றும் மேலைத்தேய நாடுகளுக்கும் நியாயபூர்வமாக யுத்தத்தை காட்டிக்கொடுக்கும் ஒப்பந்தத்துக்கும் மனோ, ஹக்கீம், ரணில், மங்கள, சோமவன்ச ஆகியோரின் நிகழ்ச்சி நிரல்களுக்கும் அவர் சோரம் போகியுள்ளார் என விமல் வீரவன்ச தெரிவித்தார்.

சரத்பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்த சமயத்தில் சீன நாட்டுக்குச் சென்று 330 கோடி ரூபாவுக்கு ஆயுதம் கொள்வனவு செய்திருந்தார். பாதுகாப்புச் செயலாளர் யுத்தம் முடிவுற்றதும் பாகிஸ்தான், சீனா நாடுகளுக்கு ஆயுதம் கொள்வனவை நிறுத்தியிருந்தார். இதன் விளைவாகவே இந்தக் கப்பல் திருப்பியனுப்பப்பட்டது. சரத் பொன்சேகா மேற்கொண்ட இந்த ஆயுதக் கொள்வனவில் சீன அரசுக்கு 330 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று வீரவன்ச மேலும் கூறினார்.

ஏப்ரல் முதல் யாழ்தேவி ஓமந்தை வரை செல்லும்

railroad-tracks.jpgயாழ்தேவி ரயில் சேவை எதிர்வரும் ஏப்ரல் முதல் ஓமந்தை வரை நீடிக்கப்படுமென ரயில்வே பொது முகாமையாளர் பி.பி. விஜேசேகர தெரிவித்தார்.தாண்டிக்குளத்தில் இருந்து ஓமந்தை வரையான 10 கிலோ மீட்டர் நீளமான ரயில் பாதைகள் மீளமைக்கும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்படுவதோடு ஓமந்தை ரயில் நிலையத்தை நிர்மாணிக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சுமார் 2 தசாப்தங்களின் பின்னர் யாழ்தேவி ரயில் ஓமந்தை வரை பயணிக்க உள்ளதாக பொது முகாமையாளர் பி.பி. விஜேசேகர கூறினார்.

400 மில்லியன் ரூபா செலவில் ரயில் பாதை புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. ஓமந்தை ரயில் நிலையத்தை மீளமைக்கும் பணிகளை பிரதியமைச்சர் லயனல் பிரேமசிறி பொறுப்பேற்று முன்னெடுத்து வருகிறார். மோதல் காரணமாக கொழும்பில் இருந்து வவுனியா வரையே ரயில் சேவைகள் இடம்பெற்றன. புலிகளின் பிடியில் இருந்து வட பகுதி முழுமையாக மீட்கப்பட்டதையடுத்து வவுனியாவில் இருந்து தாண்டிக்குளம் வரை சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன.

30 வருடகாலம் நீடித்த மோதல்களின்போது வவுனியாவுக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான ரயில் பாதைகள், ரயில் நிலையங்கள் என்பன புலிகளினால் நாசமாக்கப்பட்டதாகவும் ரயில் தண்டவாளங்கள் பங்கர் அமைப்பதற்காக புலிகளினால் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் பொது முகாமையாளர் தெரிவித்தார். யாழ்தேவி ரயில் சேவையை யாழ்ப்பாணம் வரை ஆரம்பிக்க துரித நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளதையடுத்து இதற்கான ஏற்பாடுகளை ரயில்வே திணைக்களம் துரிதமாக முன்னெடுத்து வருகிறது.

கொழும்பு – பதுளை ரயில் சேவை நானுஓயா வரையே : ஒஹிய – ஹிதல்கஸ் ஹின்னவுக்கு இடையில் சுரங்கப்பாதையில் மண் சரிவு

up-country-sri.jpgகொழும்பு-  பதுளை ரயில் பாதையில் ஒஹியவுக்கும் ஹிதல்கஸ்ஹின்னவுக்கு மிடையிலுள்ள சுரங்கப் பாதை நேற்று முன்தினமிரவு ஏற்பட்ட மண்சரிவு காரணமாக மூடப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பதுளை மாவட்ட இணைப்பாளர் எச். எம். என். பி. பண்டார நேற்றுத் தெரிவித்தார்.

இதனால் கொழும்புக்கும் பதுளைக்குமிடையிலான ரயில் சேவை நானுஓயா வரையே இடம்பெறுவதாக ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பதுளை மாவட்ட இணைப்பாளர் மேலும் கூறுகையில், பதுளை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகப் பெய்துவரும் மழை காரணமாகவே இம்மண்சரிவு நேற்று முன்தினமிரவு ஏற்பட்டுள்ளது என்றார்.

இதனால் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி நேற்று முன்தினம் புறப்பட்ட தபால் ரயில் அப்புத்தளை ரயில் நிலையத்தில் தரித்து நிற்கிறது. கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த ரயில் நானுஓயாவில் நிறுத்தப்பட்டிருப்பதாக ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரியொருவர் கூறினார். கொழும்பு- பதுளை ரயில் போக்குவரத்து சேவையை மீண்டும் வழமை நிலைக்குக் கொண்டுவர சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.