தங்கள் தாயக உறவுகளுக்காக புலம்பெயர்ந்த லண்டன் தமிழர்கள் உலகின் தலைநகரில் ஓங்கிக் குரல் எழுப்பினர். ஜனவரி 31 பிரித்தானிய தமிழர் பேரவையினால் ஒழுங்கு செய்யப்பட்ட யுத்தத்தை நிறுத்தக் கோரும் ஆர்ப்பாட்ட ஊர்வலம் புலம்பெயர்ந்த தமிழர்களின் தங்கள் உறவுகள் மீதான அன்பையும் வேதனையையும் சர்வதேசத்திற்கு எடுத்தக் காட்டியது. பெரும்தொகையான இளவயதினர் இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அரசாங்கம் யுத்தத்தை நிறுத்த வேண்டும் வன்னி மக்கள் மீதான இன அழிப்பை நிறுத்த வேண்டும் என்ற கோசங்கள் உரத்து ஒலித்தன. மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற இந்த ஊர்வலத்தில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். 50000 வரையானோர் கலந்து கொண்டதாக ஸ்கொட்லன்யாட் தெரிவித்து உள்ளது. கலந்த கொண்டவர்களின் தொகை இதனிலும் இரட்டிப்பானது என ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அரசியல் நடவடிக்கைகளில் எவ்வித ஆர்வத்தையும் கொண்டிராதவர்கள் விடுதலைப் புலிகள் மீதான கடுமையான விமர்சனத்தைக் கொண்டிருந்தவர்கள் இடதுசாரிகள் விடுதலைப் புலி ஆதரவாளர்கள் என பல்வேறு அரசியல் முரண்பாடுடையவர்களும் யுத்தத்தின் அவலத்திற்கு முடிவுகட்டப்பட வேண்டும் வன்னியில் யுத்தத்திற்குள் சிக்குண்டுள்ள மக்களுக்கு ஏற்படப் போகும் மனித அவலம் நிறுத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.
லண்டனில் மட்டுமல்ல புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழர்களின் வரலாற்றில் நிகழ்ந்த மிக முக்கியமானதொரு மக்கள் எழுச்சி இதுவென முன்னாள் மாற்று இயக்க உறுப்பினர் கா பாலமுருகன் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார். தனக்கு புலிகளுடன் எவ்வித உடன்பாடும் இல்லை. அவர்கள் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையை எப்போதும் தீர்க்கக் கூடியவர்கள் அல்ல என்று குறிப்பிட்ட அவர் ஆனால் இந்நிலையில் இலங்கை அரசாங்கத்தை எதேச்சையாக செயற்படவும் தமிழ் மக்களை அழிக்கவும் அனுமதிக்க முடியாது என்றார்.
இந்த ஊர்வலத்திற்கு வந்த பெரும்தொகையான மக்களால் லண்டன் நிலக்கீழ் புகையிரதம் ஊர்வலம் நடந்த பகுதிகளில் இருந்த புகையிரத நிலையங்களில் நிறுத்தாமல் செல்ல வேண்டி இருந்தது. வீதிகள் சில பொலிசாரால் மூடப்பட்ட போது பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் சிறிய சலசலப்பு ஏற்பட்டு அடங்கியது. மற்றும்படி ஊர்வலம் மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
கோசங்களை எழுப்பி பலருக்கும் நாவறண்டு தொண்டைகட்டியதாக முதற்தடவையா ஒரு ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்துகொண்ட செல்வலக்ஸ்மி தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார். தனக்கு இந்த ஊர்வலத்தை யார் நடத்தினார்கள் என்பது தெரியாது ஆனால் நான் கேட்கின்ற செய்திகள் தன்னை குடைவதாகத் தெரிவித்தார்.
இந்த ஊர்வலம் தொடர்பாக ஸ்கை நியூஸிற்கு கருத்து தெரிவித்த பிரித்தானிய தமிழர் பேரவையின் தலைவர் சுரேன் சுரேந்திரன் இந்த யுத்தம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் பிரதிநிதிகளான புலிகளுடன் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்று தெரிவித்தார். அதே செய்திச் சேவையில் கருத்துத் தெரிவித்த லிபிரல் டெமொகிரட் பா உ சைமன் ஹியூச் இலங்கை அரசாங்கம் சர்வதேச ஊடகங்களை மனிதாபிமான ஸ்தாபனங்களை யுத்த பகுதிக்குள் அனுமதிக்காததைக் கண்டித்தார். யுத்தத்தில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் சர்வதேச சட்ட விதிகளை மதித்து நடக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
சைம்ன் ஹியூச்சின் அதே கருத்தை அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் வெளியிட்ட நியூஹாம் துணை மேயர் போல் சத்தியநேசன் தனது நாட்டு மக்களைக் காக்க வேண்டிய கடமை அந்த நாட்டு அரசுக்கு உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டினார். யுத்தத்தின் மூலம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்பதனைச் சுட்டிக்காட்டிய அவர் தங்களுடைய தாயக உறவுகளுக்காக ஆயிரக்கணக்கில் மக்கள் லண்டன் நகரில் கூடி குரல் கொடுப்பதாகத் தெரிவித்தார்.
இந்த ஊர்வலத்தில் ஏனைய நாடுகளில் இடம்பெற்றது போன்று விடுதலைப் புலிகளின் கொடியோ அல்லது அதன் தலைவர் வே பிரபாகரனது உருவப்படமோ ஊர்வலத்தில் இடம்பெற்றிருக்கவில்லை. ஏற்கனவே இது தொடர்பாக பொலிகார் அறிவுறுத்தி இருந்ததாகவும் தெரிய வருகிறது. ஆனால் ஆங்காங்கே எங்களது தலைவர் வே பிரபாகரன் புலிகளின் தடையை நீக்குங்கள் போன்ற கொசங்களும் இடம்பெற்றது என்று தெரிவித்த புலிகளின் தீவிர ஆதரவாளரான ஆர் நந்தகுமார் ஆனால் வன்னி மக்கள் மீது இன அழிப்பை நிறுத்து என்பதே பிரதான கோசமாக அமைந்ததாக தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார்.
இந்த மக்கள் எழுச்சி தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்விகளுடனேயே தாங்கள் வீடு திரும்பியதாகக் குறிப்பிட்ட முன்னாள் புலிகளின் உறுப்பினர் எஸ் ரவிக்குமார் புலம்பெயர்ந்த நாங்கள் எங்களால் முடிந்ததை எமது உறவுகளுக்குச் செய்ய வேண்டும் என்றும் அவர்களை நாங்கள் கைவிட்டுவிடவில்லை என்பதையும் இங்கு வந்து உறுதிப்படுத்தி இருக்கிறோம் என்றார்.
ஊர்வலத்தின் முடிவில் ரிஎன்ஏ பாராளுமன்ற உறுப்பினர்கள் சிவாஜிலிங்கம் ஜெயானந்தமூர்த்தி ஆகியோரும் தொழிற்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் கீத்வாஸ் ஆகியொரும் உரையாற்றினர். இவர்களின் உரையில் இந்த யுத்தத்தை நிறுத்த இந்தியாவின் தலையீட்டின் அவசியம் வலியுறுத்தப்பட்டது. பல பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.