January

January

48 மணி நேர காலக்கெடுவின் போது பாரிய தாக்குதல்கள் நடத்தப்படாது – லக்ஷ்மன் யாப்பா

laksman-yaappa.jpgவடக்கில் புலிகளின் பிடியில் சிக்கியுள்ள பொது மக்கள் பாதுகாப்பு வலயத்திற்கு செல்வதற்காக வழங்கப்பட்டுள்ள 48 மணி நேர காலக் கெடுவின் போது பாரிய தாக்குதல்கள் எதுவும் நடத்தப்படாது எனவும் சிறு சிறு குழுக்களாக காட்டிற்குள் சென்றே படையினர் தாக்குதல் நடத்தி வருவதாகவும் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாபா தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது:- இராணுவ நடவடிக்கையினால் பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை தடுப்பதற்காகவே 48 மணி நேர காலக்கெடு அறிவிக்கப்பட்டது. இதற்காக பாதுகாப்பு வலய எல்லையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது வரை 3848 பேர் பாதுகாப்பு வலயத்துக்கு வந்துள்ளனர். 48 மணி நேர காலக்கெடுவின் போது பெருமளவு மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

இந்தக் காலக்கெடுவின் போது பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்படும். 5-10 பேர் கொண்ட சிறு சிறு குழுக்களாக பிரிந்து படையினர் புலிகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவ்வாறான தாக்குதலின் போதே புலிகளின் அரசியல் ஆலோசகர் மகாதேவன் படுகாயமடைந்தார். பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது. இதனை சர்வதேச சமூகமும் ஏற்றுக் கொண்டுள்ளது. அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்துமாறு அமெரிக்க அரசு கூட புலிகளை கோரியுள்ளது.

இராணுவ நடவடிக்கை தொடர்பாக எதிர்க்கட்சிகள் கூறி வந்த கருத்துக்கள் யாவும் பொய்யாகியுள்ளன. மக்கள் அரசுடனே உள்ளனர். பயங்கரவாதத்தை ஒழிக்க அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கை காரணமாக மக்கள் கட்சி பேதங்களை மறந்து அரசுக்கு ஆதரவு வழங்கத் தொடங்கியுள்ளனர் என்றார்.

இந்திய வெளியுறவு அமைச்சரின் வருகை தொடர்பாக கருத்துத் தெரிவித்த அமைச்சர், இந்திய வெளியுறவு அமைச்சருடனான பேச்சுவார்த்தை தொடர்பான சகல இரகசியங்களை வெளியிடுமாறு ஜே. வி. பி. கூறியுள்ளது. ஆனால், பிரணாப் முகர்ஜியின் வருகை தொடர்பில் எதுவித ரகசியமும் இல்லை. இது தொடர்பாக நான் ஜனாதிபதியுடன் உரையாடினேன். முகர்ஜியுடனான சந்திப்பில் பேசப்பட்ட சகல விடயங்களையும் அரசாங்கம் வெளியிட்டுள்ளது என்றார்.

இராணுவ வெற்றிகள் தொடர்பாக ஐ. தே. க. தலைவர் பாராட்டுத் தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. பாராட்டுவதோடு நின்றுவிடாது இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் நடவடிக்கைக்கு ஐ. தே. க. ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வடக்கு முழுமையாக மீட்கப்பட்ட பின்னர் உடனடியாக அங்கு உள்ளூராட்சி சபைத் தேர்தல்களும் மாகாண சபைத் தேர்தலும் நடத்தப்படும். 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு உட்பட்டே அரசினால் அதிகாரங்கள் வழங்க முடியும். அதனை விட கூடுதல் அதிகாரம் வழங்குவதா னால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை இதற்கு சகல கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

மும்பையில் பிடிபட்ட தீவிரவாதி அஜ்மல் இறந்துவிட்டதாக பாக். பத்திரிகை தகவல்

mumbai.jpgமும்பையில் தாக்குதல் நடத்திய 10 தீவிரவாதிகளில் அஜ்மல் என்பவர் கைது செய்யப்பட்டார். அவனை மும்பையில் பொலிஸார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அஜ்மலை மும்பை பொலிஸார் விசாரணையின்போது கொன்றுவிட்டதாக பாகிஸ்தான் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு உள்ளன.

பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தகவலை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டு உள்ளது. அதில் ‘அஜ்மல் வாக்கு மூலங்கள் பற்றி சமீப காலமாக இந்தியாவிடம் இருந்து தகவல்கள் ஏதும் வரவில்லை. அவருடைய மரபு அணு மாதிரியை (டி. என்.ஏ) அனுப்புவதாக இந்தியா கூறியது. ஆனால் இதுவரை மரபு அணு அனுப்பப்ப டவில்லை. எனவே அஜ்மலை கொன்று விட்டார்கள்’ என்று குறிப்பிட்டு உள்ளனர்.

இதற்கிடையே இந்திய உளவு அமைப்பான ‘ரோ’ ஏராளமானோரை பயிற்சி அளித்து பாகிஸ்தானில் நாச வேலை செய்ய அனுப்பி வைப்பதாகவும் பாகிஸ்தான் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு உள்ளன. இப்படி வந்த 3 பேரை நேற்று முன்தினம் கைது செய்து இருப்பதாகவும் செய்தி வெளியிடப்பட்டு உள்ளது.

வன்னியிலிருந்து வரும் மக்களுக்கு அனைவரும் உதவ வேண்டும் – டக்ளஸ்

 epdp.jpgவன்னிப் பகுதியிலிருந்து இடம் பெயர்ந்து யாழ் நோக்கி வரும் எமது மக்களுக்கு மனிதாபிமான ரீதியில் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதற்கு யாழ் குடாநாட்டு மக்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் முன்வரவேண்டுமென சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் வட மாகாணத்திற்கான விசேட செயலணியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொதுமக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, புலிப் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து ஏ-9 பாதை விடுவிக்கப் பட்டுள்ளதால் அதன் மூலம் பெரும் நன்மையடையப் போவது குடாநாட்டு மக்களேயாவர் என்றும் இதேபோன்று புலிப் பயங்கரவாதம் முற்று முழுதாகத் தோற்கடிக்கப்படும்போது அனைத்துத் தமிழ் பேசும் மக்களும் பாரிய நன்மைகளை அடைவார்கள் என்பதில் சந்தேகமில்லை என்றும் தெரிவித்தார்.

தற்போது தங்களது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் புலிகள் தங்களது இறுதிப் பாதுகாப்பு அரணாக அப்பாவி பொதுமக்களையே பயன்படுத்தி வருகின்றனர் என்றும் தெளிவுபடுத்தியதுடன் இந்த மக்களை விடுவித்துக் கொள்வதும், விடுவிக்கப்பட்டு வரும் மக்களைப் பேணிப் பாதுகாப்பதும் இன்று எம் முன்னுள்ள பாரிய பொறுப்பாக உள்ளதென்றும் உணர்த்தினார்.

வன்னியில் இருந்து வரும் மக்களின் பல்வேறு தேவைகள் குறித்து அரச மட்டத்தில் உரிய நடவடிக்கைகளை தான் எடுத்து வருவதை சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குடாநாட்டில் உள்ள மக்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் இம்மக்களின் நலன்கருதி செயற்பட முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

போர் நிறுத்தம்: சிங்கள-இந்திய அரசின் கூட்டு நாடகம் – திருமாவளவன்

thirumavalavan-1601.jpgகூடுதலான ஆயுதங்களையும் படையினரையும் ஒருசேரக் குவித்து கொடூரமான இடைவிடாத தாக்குதல்களை நடத்துவதற்காகவே இலங்கையில் போர் நிறுத்தத்தை சிங்கள-இந்திய அரசுகள் செய்துள்ளன என்றும், இலங்கை போர் நிறுத்தம் சிங்கள-இந்திய அரசின் மோசடி நாடகம் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

விடுதலைப் புலிகளிடமிருந்து தமிழர்களை வெளியேற்றுவதற்கென 48 மணி நேரம் ஒரு இடைக் காலப்போர் நிறுத்தம் செய்வதாக சிங்கள அரசு அறிவித்தள்ளது. இது ஈழத்தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும் என்னும் மனிதநேய அக்கறையோடு அறிவிக்கப்பட்டதாக ஒரு நாடகத்தை சிங்கள  இந்திய அரசுகள் கூட்டுச் சேர்ந்து நடத்துகின்றன.

இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் கருணையால் இந்தப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் இந்திய ஆட்சியாளர்கள் ஏய்க்கப்பார்க்கின்றனர். ஐ.நா. பேரவை உள்ளிட்ட சர்வதேசச் சமூகம் சிங்கள இந்தியப்படையினரின் இன அழித்தொழிப்பு நடவடிக்கைகளை வெளிப்படையாகக் கண்டிக்கத் தொடங்கிய பிறகு இந்த நாடகத்தைத் தற்போது அரங்கேற்றுகின்றனர்.

48 மணி நேரம் கெடு விதித்த பின்னரும் தமிழர்கள் யாரும் வெளியேறவில்லை என்பதால் அவர்கள் பொதுமக்கள் அல்லர். அனைவருமே புலிகள்தான் என முத்திரை குத்தி பொதுமக்களைக் கொன்று குவிப்பதற்குரிய சாக்குப் போக்குகளைச் சொல்லவே இந்த இடைக்காலப் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.  மேலும் கூடுதலான ஆயுதங்களையும் படையினரையும் ஒருசேரக் குவித்து கொடூரமான இடைவிடாத தாக்குதல்களை நடத்து வதற்காகவே இந்த இடைநிறுத்தத்தை சிங்கள  இந்திய அரசுகள் செய்துள்ளன. சர்வதேச சமூகம் இந்தக் கூட்டுச் சதியை உணர்ந்து ஒரு நிரந்தரப் போர் நிறுத்தத்திற்கு வழிவகை செய்ய வேண்டும்.

சிங்களப் படையினரை நம்பி முல்லைத் தீவில் சிக்கியிருக்கும் தமிழர்கள் ராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருவதற்கான வாய்ப்புகளே இல்லை. இளம் ஆண்களையும் பெண்களையும் வெள்ளை வேனில் கடத்திச் சென்று கொடூரமான வதைகளைச் செய்து கொன்று புதைத்து வருகின்றனர். சிங்களப் படையினர் என்கிற நிலையில் எவ்வாறு தமிழர்கள் ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செல்ல முடியும். அண்மையில் பாதுகாப்பு வளையம் என சிங்களப் படையினர் அறிவித்த பகுதிக்கு நகர்ந்து வந்த பொதுமக்கள் மீது ஈவிரக்கமின்றி நூற்றுக் கணக்கானவர்களைக் குண்டுவீசிப் படுகெலை செய்தனர்.

இவ்வாறான நிலையில் பொதுமக்கள் சிங்கள இனவெறியர்களின் அறிவிப்பை நம்பி புலிகளின் பாதுகாப்பிலிருந்து வெளி யேற வாய்ப்பே இல்லை. இது சிங்கள இந்திய ஆட்சி யாளர்களுக்கு நன்றா கவே தெரிந்திருந்தும் இடைக்காலப் போர் நிறுத்தத்தை அறி வித்திருப்பது தமிழினத் தையும் சர்வதேசத் சமூகத்தையும் ஏமாற்றும் நடவடிக்கையே ஆகும். எனவே ஒரு நிரந்தரப் போர் நிறுத்தத்தைச் செய்து போர்நிறுத்தத்துக்குரிய ஏற்பாடுகளைச் செய்ய சர்வதேச நாடுகள் முன்வர வேண்டும் என்பதே தமிழ்ச் சமூகத்தின் விருப்பமாகும் என்று கூறியுள்ளார்.

புலிகளின் தற்கொலைப் படகு முல்லைக் கடலில் தாக்கி அழிப்பு

sl_navy.jpgபுலிகளின் தற்கொலைப் படகு ஒன்றை கடற்படை படகுகள் நேற்றுக் காலை தாக்கியழித்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் டி. கே. பி. தஸநாயக்க தெரிவித்தார். முல்லைத்தீவுக்கு வடக்கே கரையோரத்தை அண்மித்த பிரதேசத்தில் நேற்று அதி காலை 3.00 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கடற்படையின் கடுமையான தாக்குதல்களில் புலிகளின் தற்கொலைப் படகு வெடித்துச் சிதறி நிர்மூலமாக்கப்பட்டுள்ளதுடன் அந்த படகிலிருந்தவர்களும் கொல்லப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். முல்லைத்தீவு வடக்கு கரையோரத்தை அண்மித்த கடற்பரப்பில் புலிகளின் தற்கொலைப் படகு ஒன்று செல்வதை கடல் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கடற்படையினர் அவதானித்து கடற்படையின் அதிவேக தாக்குதல் மற்றும் டோரா படகுகளைப் பயன்படுத்தி கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

தற்பொழுது அந்தப் பிரதேசத்தில் கடற்படையினர் பாரிய தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, புலிகளின் விநியோகங்களையும், புலிகள் தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் வடக்குக் கரையோர பிரதேசம் மற்றும் கடற்பரப்பில் கடற்படையினர் நான்கு தடை வலயங்களை ஏற்படுத்தியுள்ளனர் என்று தெரிவித்த கடற்படைப் பேச்சாளர், முதலாவது, இரண்டாவது தடை வலயங்களில் கடற்படையின் துரித செயலணி, விசேட படகு அணி, அதிவேக தாக்குதல் படகுகளும், மூன்றாம், நான்காம் தடை வலயங்களில் பீரங்கி படகுகளும், கரையோர காவல் படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டை மீட்டெடுக்கும் இரண்டாவது யுத்தம் – தென்மாகாண முதலமைச்சர்

ballot-box.jpgமாகாண சபைத் தேர்தலை நாட்டை மீட்டெடுப்பதற்கான இரண்டாவது யுத்தம் எனக் கருதி  மக்கள் ஐக்கிய மக்கள் முன்னணி வேட்பாளர்களை தேர்தலில் வெற்றி பெறச் செய்ய வேண்டுமெனத் தென் மாகாண முதலமைச்சர் ஷான்விஜயலால் தசில்வா தெரிவித்தார். மாத்தளை சுதந்திரக் கட்சி பணிமனையில் கட்சியின் அமைப்பாளர்கள் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மேலும் கூறுகையில்;

ஆங்கில ஏகாதிபத்திய வாதிகளிடமிருந்து தாய் நாட்டை மீட்டெடுக்க உயிர்த்தியாகம் செய்த வீரபுரன் அப்பு, கொங்கடுவெல பண்டார போன்ற வீர புருஷர்கள் மாத்தளை மாவட்டத்திலேயே தோன்றியுள்ளனர். மாத்தளை மண்ணில் இருந்தே வெள்ளைக்காரர்களிடமிருந்து தாய் நாட்டை மீட்கும் புரட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அந்நியரிடமிருந்து மீட்கப்பட்ட எமதுமண் இன்று பயங்கரவாதிகளின் பிடிக்குள் சிக்குண்டுள்ளது. அன்றைய வீரபுருஷர்களை போன்றே இன்று எமது முப்படையினரும் , உயிர்த்தியாகம் செய்து போராடி, எமது நாட்டை படிப்படியாக மீட்டு வருகின்றனர். ஜனாதிபதியின் அரசியல் சாணக்கியமும் ஆளுமை மிக்க தலைமைத்துவமுமே இதற்கான காரணம்.

நாட்டின் இறைமையையும் , ஒருமைப்பாட்டையும் தக்க வைத்துக் கொள்ளவேண்டுமாயின் ஜனாதிபதியின் கரத்தைப் பலப்படுத்த வேண்டும் .நாட்டு மக்கள் ஆட்சிமாற்றத்துக்கு இடமளிப்பார்களானால் இதுவரை கைப்பற்றப்பட்ட பிரதேசங்களை இழக்க வேண்டிய அவல நிலை ஏற்படும். ஜனாதிபதித் தேர்தலை விட இந்த மாகாணசபைத் தேர்தல்களில் பெருமளவு மக்கள் செல்வாக்கை ஜனாதிபதி பெற்றுள்ளார்.  என முதலமைச்சர் ஷான்விஜயலால் தசில்வா குறிப்பிட்டார்.

புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் தங்கியிருந்த நோயாளர்கள் பாதுகாப்பாக அழைத்துவரப்பட்டுள்ளனர்.

redcrose2801.jpgமுல்லைத்தீவு பிரதேசத்திலுள்ள புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் தங்கியிருந்து நோயாளர்களில் ஒரு தொகுதியினர் அழைத்துவரப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் (29) இவர்களை மீட்டுள்ளதாக கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகளின அமைப்பின் பேச்சாளர் கோடன் வைஸ் தெரிவித்துளளார்.

விடுதலைப் புலிகளுடனும் நடத்தப்பட்ட பேச்சுக்களை அடுத்து குறித்த இந்த 226 நோயாளர்களையும் போர் தணிந்திருந்த சிறிய இடைநேரத்தில்  அழைத்துவந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மீட்கப்பட்ட நோயாளர்களில் 50 சிறுவர்கள் அடங்கியுள்ளதாகவும் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்த நோயாளர்களை அழைத்துவருவதற்கான முயற்சிகளை ஐக்கிய நாடுகள் அமைப்புக்கள் பல தடவைகள் மேற்கொண்டிருந்த போதிலும் அது கைகூடவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது

சென்னையிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலைய அலுவலகத்தை சுற்றிவளைத்த மாணவர்கள் கைது

சென்னை உயர் கல்வி பயிலும் மாணவர்களில் சிலர் சென்னையிலுள்ள இலங்கை பிரதி உயர்ஸ்தானிகர் மீது தாக்குதல் நடத்த முற்பட்டவேளையில் இந்திய பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மாணவர்கள்; இன்று முற்பகல் இலங்கை உயர்ஸ்தானிகராலய அலுவலகத்தை; சுற்றி வளைக்க முற்பட்டுள்ளதாக சென்னையிலுள்ள பிரதி உயர் ஸ்தானிகர் பி.எம். ஹம்சா தெரிவித்தார். இதனையடுத்து 35 மாணவர்களை பொலிசார் கைதுசெய்ததாக பிரதி உயர் ஸதானிகர் குறிப்பிட்டார்.

அத்துடன் சென்னையில் அமைந்திருக்கும் இலங்கை அரசாங்கத்துக்கு சொந்தமான நிறுவனங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக மாநில அதிகாரிகள் தற்போது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர் என தெரிவித்துள்ள அவர் இது குறித்து தமிழ் நாடு மாநில பொலிஸ்மா அதிபருடன் தாம்; இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாகவும் இலங்கைக்கான பிரதி உயர் ஸ்தானிகர் ஹம்சா மேலும் தெரிவித்தார்.

முத்துக்குமார் உடலை அடக்கம் செய்வதை எதிர்த்து மாணவர்கள் போர்க்கொடி

muthukumar-30011.jpgமுத்துக்குமாரின் குறிக்கோள் நிறைவேறும்வரை அவரது உடலை அடக்கம் செய்ய விடமாட்டோம் என மாணவர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இன்று காலை 10 மணிக்கு முத்துக்குமாரின் உடல் அடக்கம் செய்யப்படுவதாய் இருந்தது. ஆனால் தமிழகமெங்கிலும் இருந்து மருத்துவ,சட்டக்கல்லூரி, கலைக்கல்லூரி மாணவர்கள் வந்து முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்துவதால் இன்று மாலை உடல் அடக்கம் செய்யலாம் என்று முடிவெடுத்தனர் அரசியல்வாதிகள்.

முத்துக்குமார் தனது கடைசிக்கடிதத்தில், ‘என் பிரேதத்தை உடனே எரித்து விடாதீர்கள். துருப்புச் சீட்டாக வைத்துக்கொண்டு முடிந்தவரை போராடுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார். அதனால் சீக்கிரத்தில் உடல் அடக்கம் செய்ய மாட்டோம் என்று மாணவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

மேலும்,முத்துக்குமார் உடல் அடக்கம் செய்வதை பொறுத்தவரை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். அரசியல்வாதிகள் தலையிடாதீர்கள் என்று சொல்லி வருகின்றனர். இதனால் முத்துக்குமாரின் உடல் அடக்கம் வரும் ஞாயிற்றுக் கிழமைதான் நடக்கும் என்று தெரிகிறது.

முத்துக்குமார் குடும்பத்துக்கு ரூ. 2லட்சம் நிதியுதவி

muthukumar.jpgஇலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க கோரி தீக்குளித்து உயர் நீத்த இளைஞர் முத்துக்குமாரின் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சட்டசபையில் இதற்கான அறிவிப்பை இன்று அவர் வெளியிட்டார். இன்று ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது மு.க.ஸ்டாலின் பேசுகையில், முத்துக்குமார் என்ற வாலிபர் தீக்குளித்து உயிரிழந்துள்ளார்.

தீக்குளித்து இறப்பதை யாராலும் ஏற்க முடியாது. இது உணர்ச்சி வசப்பட்டு எடுக்கக் கூடிய செயல். முத்துக்குமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்துக்கு முதல்வர் ஒப்புதலுடன் ரூ. 2 லட்சம் இழப்பீட்டுத் தொகை, முதல்வர் நிவாரண நிதியிலிருந்து அளிக்கப்படும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.