05

05

மன்னார் மடுக்கரையிலுள்ள லீட்ஸ் நிறுவனத்தை வெளியேறுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை

மன்னார் நானாட்டான் மடுக்கரையிலுள்ள லீட்ஸ் எனப்படும் சர்வதேச தொண்டு நிறுவனத்தை அங்கிருந்து வெளியேறுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நானாட்டான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட மடுக்கரை கிராமத்தில் சுமார் 4 வருடங்களாக லீட்ஸ் எனும் நிறுவனம் இயங்கி வருகின்றது. இந்த நிலையில் தமது கிராமத்தை அடித்தளமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனத்தினால் எவ்விதப் பயனும் தமக்கோ அல்லது கிராமத்திற்கோ இல்லை என்று மடுக்கரை மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கடந்த பல வருடங்களாக மடுக்கரை மக்களின் குடிநிலக்காணிகளிலிருந்தும் அக்கிராமவாசிகளின் பயிர் செய்கைக்குரிய காணியிலிருந்தும் மணல் அகழ்ந்து அதனை கூட்டெருவாகத் தயாரித்து அதனை மன்னார் நகரப்பகுதியில் லீட்ஸ் நிறுவனம் விற்பனை செய்வதாகக் குற்றம் சாட்டியுள்ள மடுக்கரை மக்கள், இவ்விதம் லீட்ஸ் நிறுவனம் தமது கிராமத்தின் வளத்தை சுரண்டுவதோடு, தமது விவசாய நடவடிக்கைகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கின்றனர். இதேவேளை, மடுக்கரையில் இருந்து மனனாருக்கு லீட்ஸ் நிறுவனத்தினால் ஐந்து உழவு இயந்திரங்களில் ஏற்றிச் செல்லப்பட்ட கூட்டெருவினை அங்கிருந்து கொண்டு செல்லாது தடுத்து நிறுத்திய மடுக்கரை மக்கள் மீது முருங்கன் பொலிஸார் கடுமையாகத் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன், இது தொடர்பாக நானாட்டான் பிரதேச செயலாளரிடம் மகஜரொன்றையும் கையளித்துள்ளளனர். இதேவேளை, மடுக்கரை விடயம் தொடர்பாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், மன்னார் அரசாங்க அதிபர் ஏ.நிக்கிலாஸ்பிள்ளை ஆகியோர்களின் கவனத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.