06

06

பாதுகாக்கப்படுவதற்கான உரிமை எங்களுக்கும், பாதுகாப்பதற்கான பொறுப்பு மற்றவர்களுக்குமுண்டு : நஜிமிலாஹி

Sri lanka Mapமனித உரிமைகள் பற்றி அதிகம் பேசப்படும் காலகட்டம் இது. மனித உரிமைகள் பற்றிய சர்வதேச அவதானங்கள் அதிகரித்து வரும் இன்றைய நிலையில் இலங்கை மனித உரிமைகளை மீறும் விடயத்தில் உலகில் முன்னணி இடம் வகிக்கும் நாடுகள் வரிசையில் இடம்பிடித்துள்ளதை நாம் அறிவோம். இன்று மனித உரிமைகளைப் பாதுகாப்பதன் உச்சகட்டமாக ‘பாதுகாப்பதற்கான பொறுப்பு’ (Responsibility to protect-R2P)  என்றொரு கருத்தாக்கம் சர்வதேச அரசியல் அறிஞர்களால் முன் வைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நெருக்கடிக் குழு ( International Crisis Group) என்ற அமைப்பின் தலைவர் கரீத் இவான்ஸ் கொழும்பில் நடந்த மாநாடொன்றில் இலங்கைக்கும் இவ்வெண்ணக்கருவின் பொருத்தப்பாடு பற்றி விளக்கினார். “ ஒரு நாட்டில் வாழும் மக்களைப் பாதுகாக்க வேண்டியது அந்த நாட்டு அரசாங்கத்தின் பிரதான பொறுப்பாகும். தனது இயலாமை காரணமாகவோ அன்றி வெறுப்பின் காரணமாகவோ அரசாங்கம் இந்தப் பொறுப்பை ஏற்க வேண்டியது பரந்த சர்வதேச சமூகத்தின் கடமையாகிறது. இதுவே சுருக்கமாக ‘பாதுகாப்பதற்கான பொறுப்பு’என்று சொல்லப்படுகிறது. இலங்கை இப்போது இந்த R2P நிலைமையிலேயே இருக்கிறது”. கரீத் இவான்ஸ் இங்கு மேலும் கூறுகையில் “கம்போடியா ருவாண்டா, ஸ்ரேபிரேனிகா மற்றும் கொசோவோ பாணியிலான பாரியளவிலான கொடூர நிலைமை இப்போது இங்கே காணப்படாமல் இருக்கலாம். அல்லது உடனடியாக அப்படியான ஒரு நிலமை தோன்றும் ஒரு சூழல் இப்போது இங்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால் அத்தகைய ஒரு மோசமான நிலைமை ஏற்படக்கூடிய ஒரு சூழ்நிலை இப்போது இங்கு இருக்கிறது. எனவே அது ஒரு R2P நிலைமைதான். சர்வதேச சமூகத்தின், இந்த நிலைமை இன்னும் மோசமடைந்து செல்வதைத் தடுப்பதற்கான நடவடிக்கையை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்பதையே இது வேண்டி நிற்கிறது”.  கரீத் இவான்ஸின் இந்தக் கருத்து சில சிங்கள அறிவுஜீவிகளாலும் அரசியல் வாதிகளாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
 
எனினும் இலங்கையின் சமகால அரசியல் போக்குகளைப் பார்க்கும் போது எதிர்காலத்தில் இலங்கையை இத்தகையதொரு நிலைமைக்கு இட்டுச்செல்லும் வாய்ப்புகளே அதிகம் உள்ளன என சொல்லத் தோன்றுகிறது. உடல்சார் வன்முறைகள் இல்லாவிட்டாலும் கருத்தியல்சார்  வன்முறை ரீதியாக் சிறுபான்மையோருக்கு எதிராக சிங்களப் பேரினவாதம் செயற்படத் தொடங்கியுள்ளது. குறிப்பாக முஸ்லிம்களுக் கெதிராக இந்தக்கருத்தியல் வன்முறையை ஜாதிக ஹெல உறுமயசார்ந்த அரசியல் அணியினர் மேற்கொண்டு வருகின்றனர். முஸ்லிம்களை வரலாரற்றவர்கள் வந்தேறுகுடிகள் நாட்டுரிமம் அற்றவர்கள் போன்ற  மெகா கதையாடல்களை அவிழ்த்து விடுவதன் மூலம் ஹெல உறுமய இதனைச்சாதித்து வருகிறது. வெகுசன மக்கள் பரப்பில் இது எதிர்காலத்தில் மோசமான விளைவுகளைத் தோற்றுவிக்கலாம். மஹிந்த அரசாங்கம் இந்த இனவாத சக்திகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவதாக இல்லை. இராணுவத்தளபதி கூட நாட்டுரிமம் தொடர்பில் அண்மையில் வெளியிட்டிருந்த கருத்தும் சிறுபான்மை நலனுக்கு எதிராகவே அமைந்திருந்தது.
 
இலங்கையின் சமகால அரசியல் முக்கிய அடையாளமாக இனவாதம் இருந்து வருவது ஒன்றும் நமக்குப்புதிதல்ல எனினும் சிறிது காலம் வெளிப்படையான இனவாதக் கருத்துக்கள் மற்றும் செயற்பாடுகள் இங்கு ஓரளவு தணிந்திருந்தன. கிழக்கு அரச கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டதன் பின்னரும் வடக்கில் இராணுவ வெற்றிகள் பலவற்றை அரசாங்கம் அடைந்து வருவதையடுத்தே தற்போது இந்த இனவாத அலை மேற்கிளம்பியுள்ளது. நன்கு திட்டமிடப்பட்ட வகையில் பௌத்த பேரினவாதக் கருத்துநிலை வெகுசனப்பரப்பில் ஊட்டிவளர்க்கப்படுகிறது.

எனவே சிறுபான்மை அரசியல்-சமய தளங்களில் ஒரு பெரும் மோதலை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டதே இச்செயற்பாடு என எண்ணத் தோன்றுகிறது. பௌத்த அடிப்படைவாதம் முஸ்லிம்களின் சமய மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் குறித்து குறுகிய மனப்பான்மையை கொண்டுள்ளன. தற்போது முஸ்லிம்களின் சில சமய நடவடிக்கைளில் தலையீடுகளைச் செய்து வருகின்றனர். முஸ்லிம்களின் பூர்வீகத்தை மறுக்கின்றனர் அவர்களின் பூர்வீகப் பிரதேசங்களை சிங்களமயப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

இதுவெல்லாம் இப்போது செய்யப்படுவதன் நோக்கமென்ன? அரசாங்கம் இராணுவ வெற்றிகளை அடைந்து வரும் இந்நிலையிலேயே இது போன்ற கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. வடக்கிலும் ஒரு பூரண வெற்றி கிடைத்த பின்னர் தமிழ் சிறுபான்மையினருக்கும் எதிரான நேரடி மோதல்களை பௌத்த அடிப்படைவாதிகள் மேற்கொள்ளக்கூடும்.
 
அப்படியானால் சிறுபான்மை சமூகங்கள் எதிர்கொள்ளப்போகும் சவால்கள் பயங்கரமானவை என்பதையே சமகால அரசியல் நடப்புகள் காட்டுகின்றன. ஏனவே R2P போன்ற கருத்தாக்கங்கள் இலங்கைக்கும் பொருந்தி வருகிறது. இக்கருத்தாக்கத்தை மக்கள் மயப்படுத்துவதும் இலங்கைக்க்ன அதன் பொருத்தப்பாட்டை சர்வதேச சமூகத்துக்கு எடுத்தக்காட்டுவதும் சமூக சக்திகளின் தலையாயப் பொறுப்பாகும்.
 
இப்போது கருத்தியல் வடிவில் முன்வைக்கப்படும் இந்த வன்முறைகள் பின்னர் மக்களை உணர்ச்சியூட்டி சமூக மோதல்களாக திட்டமிட்டு மாற்றப்படலாம். அதன் பின் ஏற்படப்போகும் அழிவுகள் மோசமானவை. எனவே இந்த விவகாரம் சிறுபான்மை சமூக சக்திகளாலும் பெரும்பான்மையின மாற்று அரசியல் செயற்பாட்டாளர்களாலும் சிறந்தமுறையில் அணுகப்பட்டு முடிவுகள் கண்டடையப்பட வேண்டும். எனவே சிறுபான்மை சமூகங்கள் தங்களது அரசியல் களத்தை வடிவமைக்க வேண்டிய ஒரு கட்டத்திற்கு வந்துள்ளனர். சிங்கள பௌத்த அடிப்படைவாதத்தை எதிர்கொள்ளத்தக்க வகையில் சிறுபான்மை அரசியல் களம் வடிவமைக்கப்பட வேண்டும். பௌத்த அடிப்படைவாதக்குழுவொன்று இப்போது பாரிய திட்டமொன்றுடன் இயங்கத் தொடங்கயுள்ளது.

நடைமுறையிலிருக்கம் இந்த அரசாங்கத்தின் துணையுடன் இலங்கையை பௌத்தமயப்படுத்தம் திட்டமொன்றை வகுத்தள்ளனர். இத்தகைய திட்டத்தை நடைமுறைப்படுத்தவதில் முதலில் முன்னுள்ள தடைகளை அடையாளங்கண்டு அவைகளை அழித்தாக வேண்டும். புலிகள் இதற்குப்பாரிய தடையாக இருந்தனர் இராணுவ ரீதியான வெற்றிகள் இத்தடையையும் விரைவில் முற்றாக நீக்கிவிடுவதற்கான நம்பிக்கையை அவர்களுக்குக் கொடுத்துள்ளது.
 
அரசியலன்றி சமயமே இந்த அரசியல் பௌத்தவாதிகளின் முக்கிய இயங்கு தளமாகும். இலங்கையைப் பொறுத்தவரை இந்துக்களும் பௌத்தர்களும் சமய ரீதியாக முரண்பட்டுக் கொள்ளவில்லை. இனம் சார்ந்த அரசியல் முரண்பாடுகளே இரு சமூகங்களுக்குமிடையில் நிகழ்ந்தது. சமய அடிப்படையில் இந்து சமயமும் பௌத்தமும் இந்தியாவில் தோற்றம் பெற்றன. இப்போதுள்ள நிலையில் இந்து சமயம் பௌத்தத்தை உள்வாங்கிக் கொண்டு விட்டது. இலங்கையிலும் இவ்விரு மதங்களும் தங்களுக்கிடையில் இடையூடாட்டத்தைக் கொண்டுள்ளன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்துக்களும் பௌத்தர்களும் ஒரே வணக்க ஸ்தலங்களில் வழிபடுமளவுக்கு சமய நெருக்கத்தினைக் கொண்டுள்ளனர்.

இந்நெருக்கம் அரசியல் தலையீடுகள் இல்லாவிட்டால் ஒரு ஆரோக்கியமான சமூக உறவை அவர்களுக்கிடையில் ஏற்படுத்தும். எனவே ஹெல உருமயவின் செயற்பாடுகள் தமிழ்த் தேசத்துடன் நேரடியான மோதுகை உறவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்க முடியாது. எனினும் அரசியல் தளங்களில் ஒட்டுமொத்தச் சிறுபான்மையினரும் புறக்கணிக்கப்படுவதற்கான சூழலையே தேசிய அரசியல் வெளிப்படுத்தி நிற்கிறது. எனவே சிங்கள தேசத்தின் அதிகார அரசியலுக்கு சவால் விடுக்கக் கூடிய சக்திகள் இல்லாத இலங்கையில் சிறுபான்மைக் காப்பீடென்பது இனி சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடன்தான் சாத்தியமாகும். எனவே R2P போன்ற கருத்தாக்கங்களை உரையாடல் மயப்படுத்தி சிறுபான்மைச் சமூகங்களாகிய நமது பிரச்சினைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவர முயற்சிக்க வேண்டும். பாதுகாக்கப்படுவதற்கான உரிமை எங்களுக்கும் பாதுகாப்பதற்கான பொறுப்பு மற்றவர்களுக்குமுண்டு என்பதை உணர்ந்தாக வேண்டும்.   

காஸா மீதான தாக்குதலைக் கண்டித்து இஸ்ரேல், அமெரிக்க கொடிகள் தீக்கிரை; ஐ. நா அலுவலகங்கள் மீது கல்வீச்சு

ag-gasa.jpgகாஸா மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் இஸ்ரேலின் கொடூரமான தாக்குதலைக் கண்டித்தும் உலகின் பல பாகங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன. ஐ. நா. வின் முயற்சிகள் தோல்வியுற்று இஸ்ரேல் தரை மார்க்கமான தாக்குதலை காஸாமீது ஆரம்பித்துள்ளதால் மிக மோசமான நெருக்கடிகளுக்கு அங்குள்ள மக்கள் முகங்கொடுக்கின்றனர். பள்ளிவாசல்கள், மருத்துவமனைகள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்களில் தஞ்சமடைந்த அப்பாவிகளையும் இஸ்ரேல் இராணுவம் தாக்குவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றைய தாக்குதலில் அறுபது பேர் உயிரிழந்தனர். காஸாவில் இதுவரை ஐநூற்றுக்கும் மேலானோர் உயிரிழந்தும் இரண்டாயிரம் பேர் காயமடைந்துமுள்ளனர். தரைத்தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு நாட்களின் பின்னர் காஸாவின் சில பகுதிகளை இஸ்ரேல் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. நான்கு பக்கங்களிலும் காஸாவை முற்றுகையிட்டுள்ள இஸ்ரேலின் தாக்குதலால் அங்கு பெரும் மனித அவலம் ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலும் குழந்தைகள், பெண்கள், வயோதிபர்களே பலியாகியும், காயமடைந்துமுள்ளனர். இவ்வாரான நிலைமைக்கு காரணமான இஸ்ரேலைக் கண்டித்து அரபு நாடுகள் உட்பட ஐரோப்பிய நாடுகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. பெருந்தொகையானோர் இதில் பங்கேற்பதால் பொலிஸார் திணறுகின்றனர். எகிப்து, லெபனான், மொரோக்கோ, நோர்வே, பிரான்ஸ், கிரேக்கம், கனடா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் பிரமாண்டமான ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. எகிப்தில் இடம்பெற்ற காஸாவுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தில் அறுபதாயிரம் பேர் கலந்து கொண்டனர். தலைநகர் ஸ்தான்புல் மக்கள் வெள்ளமாகக் காட்சியளித்ததால் அன்றைய தினம் வழமையான அலுவலகங்கள் அனைத்தும் செயலிழந்தன. அரபு ஆட்சியாளர்களையும் எகிப்து ஜனாதிபதியையும் மிக மோசமாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கண்டித்தனர்.

இஸ்ரேலைக் கண்டிக்கும் மிக மோசமான வார்த்தை கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பெனர்கள், போஸ்டர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. நோர்வே, கனடா, மொரோக்கோ உள்ளிட்ட நாடுகளில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் பெருமளவானோர் கலந்து கொண்டனர். இவர்கள் கடும் ஆவேசத்துடன் காணப்பட்டதால் பொலிஸாரால் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க முடியவில்லை. நிலைமை மோசம டையவே கண்ணீர்ப் புகைப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. ஆர்ப்பாட்டங்கள் நடந்த அனைத்து நாடுகளிலும் இஸ்ரேல், அமெரிக்கக் கொடிகள் எரிக்கப்பட்டன. ஜோர்ஜ் புஷ், பராக் ஒபாமா, இஸ்ரேல் தலைவர்களின் கொடும்பாவிகளும் எரிக்கப்பட்டன. சில நாடுகளில் இருந்த ஐ. நா. அலுவலகங்கள் அடித்து நொருக்கப்பட்டன. ஈராக்கில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் புஷ்ஷ¤க்கு காலணிகளை வீசிய ஊடகவியலாளரின் புகைப் படமும் ஏந்திச் செல்லப்பட்டது. கர்பவாவில் இது நடந்தது.

உரிமைகளைப் பாதுகாக்க நாளை தலைநகரில் எதிரணி ஆர்ப்பாட்டம்

ranil-2912.jpgயுத்தத்தையும் இராணுவ வெற்றியையும் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு அரசாங்கம் அரசியல் நாடகமாடி வருவதாகவும் நாட்டு மக்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டதாகவும் கடும் விசனத்தை வெளிப்படுத்தியிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் இறைமை, ஜனநாயகம், மக்களின் உரிமைகள் போன்றவற்றை பாதுகாக்கும் பொருட்டு நாளை புதன்கிழமை தலைநகரில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தவிருப்பதாகவும் அறிவித்தார். “பொறுத்தது போதும்’ எனும் தொனிப்பொருளில் நாளைய தினம் ஹைட்பார்க் மைதானத்தில் நடைபெறவிருக்கும் இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளவிருப்பதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி உட்பட பல்வேறு எதிரணிகள் ஒன்றிணைந்த கூட்டமைப்பின் விஷேட செய்தியாளர் மாநாடு நேற்று திங்கட்கிழமை எதிர்க்கட்சித் தலைவரின் கேம்பிரிட்ஜ் ரெரஸ் அலுவலகத்தில் நடைபெற்றபோதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ரணில் விக்கிரமசிங்க மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;

நாட்டில் ஜனநாயகமும் இறைமையும் பாதுகாக்கப்படாமல் எவ்வளவு காலத்துக்கு யுத்தம் செய்தாலும் மக்களுக்கு நல்ல தீர்வெதுவும் கிட்டப் போவதில்லை. யுத்தத்தில் கிளிநொச்சி படையினர் வசம் வீழ்ந்தது உண்மைதான். படைவீரர்களின் அந்தத் திறமையை நாமும் சேர்ந்து பாராட்டுகின்றோம். கௌரவிக்கின்றோம். இந்த யுத்த வெற்றி இராணுவத்துக்கும் நாட்டு மக்களுக்குமே உரியதாகும். ஆனால், ராஜபக்ஷ அரசாங்கம் யுத்த வெற்றியை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அரசியல் நாடகமாடிக் கொண்டிருக்கின்றார். ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டிய அதேசமயம் அரசியல் யாப்பையும் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு அரசுக்கு இருக்கின்றது. அரசு யாப்புக்கு முரணாகச் செயற்பட முடியாது. நினைத்தபடி யாப்பை மாற்றவும் முடியாது.

ஜனாதிபதியும் அவரது அரசும் அரசியல் யாப்பையும் சட்டத்தையும் மதித்துச் செயற்படத் தவறியுள்ளது. தன்னிச்சையான போக்கில் செயற்பட்டு வருகின்றது. நாட்டு மக்கள் பெரும் கஷ்டங்களை எதிர் கொண்டுள்ளனர். யுத்தத்தில் முனைப்புக்காட்டும் அரசு நாட்டு மக்களை பாதுகாக்கத் தவறிவிட்டது. ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தில் நாம் மேற்கொண்ட போர் நிறுத்த உடன் படிக்கைக்கு எவரும் தவறான அர்த்தம் கற்பிக்க முடியாது. அன்றைய போர் நிறுத்தத்தின் மூலம் பல்வேறு நன்மைகளை அடைய முடிந்தது. கிழக்கை மீட்டெடுக்க முடிந்தது. விடுதலைப் புலிகள் அக்கால கட்டத்தில் பலமடைந்ததாகக் கூறுவதும் தவறானதே. இக்கால கட்டத்தில் எந்தவொரு நாடும் புலிகளுக்கு ஆயுதம் வழங்கவில்லை. அதற்கு நாம் இடமளிக்கவுமில்லை. அன்று போர் நிறுத்த உடன்படிக்கையை ஆதரித்தவர்களில் இன்றைய இராணுவத்தளபதியும் ஒருவர் என்பதை பகிரங்கமாகத் தெரிவிக்கின்றேன்.

அன்று நான் மக்களிடம் போர் நிறுத்தம் செய்து சமாதான முயற்சிகளை முன்னெடுக்கவே மக்களிடம் ஆணைகேட்டேன். அதன் பிரகாரமே போர்நிறுத்தம் செய்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தேன். இடைநடுவில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு எமது முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடப்பட்டது. அதன் பின்னர் நடந்தவற்றுக்கு ஆட்சியிலிருக்கும் அரசுதான் பொறுப்புக்கூற வேண்டும். யுத்த முனையில் படைவீரர்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்படுவதாக தகவல்கள் கிட்டியுள்ளன. படைத்தரப்பிலிருந்து நிறையத் தகவல்களைத் திரட்டியுள்ளேன். காயமடையும் படைவீரர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகவே காணப்படுகின்றன. அவர்களை போர்களத்திலிருந்து கொண்டுவர ஒரு அம்புலன்ஸ் கூட வழங்கப்படவில்லை. பஸ்களிலும், டிராக்டர் வண்டிகளிலுமே கொண்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளன. அதற்குரிய ஆதாரம் கூட என்னிடம் இருக்கின்றது. (பஸ்ஸிலும் டிராக்டரிலும் காயமடைந்த படைவீரர்களை ஏற்றப்படும் படங்களை ரணில் ஊடகவியலாளர்களிடம் காண்பித்தார்) இவற்றைச் சுட்டிக்காட்டியதால்தான் இராணுவத்தளபதி ஆத்திரமடைந்துள்ளார்.

போர் மாயையில் மூழ்கி பொருளாதாரச் சீரழிவை மூடி மறைப்பதில் அரசு தொடர்ந்து தீவிரம் காட்டி வருகின்றது. இதற்கெதிராகவே நாளை புதன்கிழமை பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். மக்களையும் மக்களின் உரிமைகளையும் பாதுகாப்பதே இந்த ஆர்ப்பாட்டப் பேரணியின் பிரதான நோக்கமாகும். தலைநகர் கொழும்பு மற்றும் மேல் மாகாணத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் இன, மத, மொழி, கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கவிருக்கின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைவரையும் இணைந்து அரசுக்கு அழுத்தத்தைப் பிரயோகிக்க முன்வருமாறு அழைப்பு விடுக்கின்றேன் என்று ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

தேசிய சுதந்திர முன்னணி: 12 எம்.பிக்களும் இன்று ஆளும் தரப்பில் அமர்வு

parliamnet-1511.jpg
அரசாங்கத்தில் இணைந்து கொண்ட தேசிய சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள் 12 பேரும் இன்று (6) ஆளும் தரப்பு ஆசனங்களில் அமர உள்ளதாக கட்சி செயலாளர் நந்தன குணதிலக தெரிவித்தார். தேசிய சுதந்திர முன்னணி அண்மையில் அரசாங்கத்துடன் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டு அரசாங்கத்துடன் இணைந்து கொண்டது.

இதன்படி தமது கட்சி எம்.பிக்கள் அரச தரப்பில் அமர உள்ளதாக அவர் கூறினார். இதேவேளை தே.சு.மு. பாராளுமன்ற உறுப்பினர்கள் 12 பேரையும் ஆளும் தரப்பில் அமர வைப்பதற்கு போதுமான ஆசனங்கள் கிடையாது எனவும் சிலரை மட்டுமே ஆளும் தரப்பில் அமரவைக்க முடியும் எனவும் உதவி பாராளுமன்ற செயலாளர் நாயகம் நைல் இத்தவெல கூறினார். ஆளும் தரப்பில் 116 ஆசனங்களே உள்ளதெனவும் சிரேஷ்ட அடிப்படையில் உள்ளவர்கள் ஆளும் தரப்பில் உட்கார வைக்கப்படுவர் எனவும் கூறிய அவர் கூறினார்.

பொங்கல் பரிசாக யாழ். மாவட்டத்துக்கு 24 மணிநேர மின் விநியோகம்

power1.jpgயாழ். மாவட்டத்துக்கு பொங்கல் பரிசாக 24 மணித்தியால மின்சார விநியோகத்தை மின் சக்தி வள அமைச்சு வழங்கவுள்ளது. தற்போது சீன நிறுவனத்தினால் சுன்னாகத்தில் அமைக்கப்பட்டுள்ள “நோத்பவர்’ மின் உற்பத்தி நிலையம் தனது செயல்பாட்டை பூரணப்படுத்தியிருப்பதால் அடுத்த இருவாரங்களுக்குள் உற்பத்தி ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்நிறுவனம் தினமும் 35 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து வழங்கும் திறன் கொண்டுள்ளதால், குடாநாடு முழுவதும் நாள் முழுவதும் தேவையான மின்சாரத்தை வழங்க முடியுமென யாழ். மாவட்ட மின்சார சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது குடாநாட்டுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்து வழங்கும் பிரிட்டிஷ் நிறுவனத்தின் ஒப்பந்த காலம் கடந்த வருடத்துடன் முடிவடைவதால், புதிய சீன நிறுவனமே மின் உற்பத்தியை தொடரமுடியும். இதேவேளை வடபகுதிக்கு லக்ஸபான மின்சார பாதையை விஸ்தரிப்பதற்கு ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக அரச கட்டுப்பாட்டுப் பகுதியாகவுள்ள மாங்குளம் வரையான விஸ்தரிப்பு வேலைகள் அடுத்தமாதம் ஆரம்பமாகவுள்ளன.

பஸ் கட்டணங்கள் இன்று முதல் குறைப்பு

திட்ட மிட்டபடி சகல பஸ் கட்டணங்களும் இன்று முதல் (6) குறைக்கப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக் குழு அறிவித்துள்ளது.  பஸ் கட்டண அதிகரிப்பை இடை நிறுத்துமாறு சில பஸ் உரிமையாளர் சங்கங்கள் கோரியுள்ள போதும் திட்டமிட்டபடி கட்டண குறைப்பு அமுல்படுத்தப்படும் என ஆணைக்குழுத் தலைவர் அமல் குமாரகே தெரிவித்தார்.

டீசல் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதன் பிரகாரம் 4.3 வீதத்தினால் பஸ் கட்டணங்கள் குறைக்கப்படுவதோடு இதனுடன் இணைந்ததாக மேல் மாகாணத்தில் உள்ள 780 மார்க்கங்களில் நிலவும் பஸ் கட்டண முரண்பாடும் சீர்செய்யப்படுவதாக ஆணைக்குழு கூறியது. இதன் பிரகாரம், 231 மார்க்கங்களில் பஸ் கட்டணம் ஒரு ரூபா, முதல் 22 ரூபா வரை குறைக்கப்பட உள்ளதோடு 237 மார்க்கங்களில் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளன. பஸ் கட்டணங்கள் குறைக்காத பஸ்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கட்டணம் குறைக்காத பஸ்கள் தொடர்பாக முறையிடுமாறும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

புதிய கட்டணக் குறைப்பின்படி ஆரம்பக் கட்டணத்திலும் ஒன்பது ரூபா கட்டணத்திலும் மாற்றம் ஏற்படவில்லை. 12 ரூபா முதல் 33 ரூபா வரையான கட்டண தொகைகள் ஒரு ரூபாவினாலும் 35 ருபா முதல் 59 ரூபா வரையான கட்டணங்கள் 2 ரூபாவினாலும் 61 முதல் 96 ரூபாவரையான கட்டணங்கள் 3 ரூபாவினாலும் 98 ரூபா முதல் 118 ரூபா வரையான கட்டணங்கள் 4 ரூபாவினாலும் 120 ரூபா முதல் 142 ரூபா வரையான கட்டணங்கள் 5 ரூபாவினாலும் குறைக்கப்படுகின்றன. அரைச் சொகுசு, சொகுசு பஸ் கட்டணங்களும் இன்று முதல் குறைக்கப்படுகின்றன. பஸ் கட்டணங்கள் கடந்த டிசம்பர் மாதத்திலும் குறைக்கப்பட்டது தெரிந்ததே.

கிளிநொச்சி வீழ்ந்ததால் புலிகள் ஊடுருவாமல் தடுக்க நடவடிக்கை- தமிழக கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பு

tamils-conference.jpgசென்னையில் நடைபெறவுள்ள உலகத் தமிழர் வர்த்தக மாநாட்டுக்கு தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளதாலும் இலங்கையில் கிளிநொச்சி இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதால் விடுதலைப் புலிகள் ஊடுருவி வருவதைத் தடுக்கவும் தமிழக கடல் பகுதியில் தீவிர ரோந்துப் பணியும் கண்காணிப்பு பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. சென்னையில் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 7 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும் மாநாட்டில் ஜனாதிபதி பிரதீபா பட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். இந்த மாநாட்டில் வெளிநாடுகளில் வாழும் இந்திய தொழில் அதிபர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள் மற்றும் ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இந்த மாநாட்டில் தாக்குதல் நடத்தப்போவதாக சவூதி அரேபியாவில் இருந்து ஈமெயில் மூலம் தீவிரவாதிகள் மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளனர். எங்கள் அடுத்த தாக்குதல் இந்த மாநாடு தான் என்று மிரட்டல் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மும்பையில் தாக்குதல் நடத்திய “டெக்கான் முஜாகிதீன்’ தீவிரவாத இயக்கம் இந்த மிரட்டல் கடிதத்தை அனுப்பியுள்ளது. மிரட்டல் கடிதம் வந்தது பற்றி சென்னை சைபர் கிரைம் பொலிஸார் விசாரித்து வருகிறார்கள். தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளதால் தொழில் மாநாட்டுக்கு வரலாறு காணாத வகையில் 5 அடுக்கு பாதுகாப்புப்போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறும் இடத்தில் 2 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்புக்காகக் குவிக்கப்படுகிறார்கள். மாநாட்டில் கலந்துகொள்ள வரும் பிரதமரும் ஜனாதிபதியும் சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் ஓய்வு எடுக்கவுள்ளனர்.

எனவே, ஆளுநர் மாளிகைக்கும் வழக்கத்தைவிட கூடுதல் பாதுகாப்புப்போட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இப்போது இருந்தே சென்னை புறநகர் பகுதிகளில் பொலிஸார் தீவிர வாகன சோதனை நடத்துகிறார்கள். மும்பையில் தீவிரவாதிகள் கடல் வழியாக வந்து தாக்குதல் நடத்தியதால் தமிழக கடலோரப் பகுதியும் தீவிர கண்காணிப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதால் விடுதலைப் புலிகள் தமிழகத்திற்குள் கடல் வழியாக நுழையாமல் தடுக்கத் தமிழக கடலோரப் பகுதியில் தீவிர ரோந்து பணிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று உயர் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

மேல் மாகாண பொலிஸ் கணக்கெடுப்பு: 1657 பேர் புதிதாக பதிவு: போதிய ஆவணங்கள் இல்லாத 106பேர் கைது

colo-reg.jpgமேல் மாகாணத்தில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட பொலிஸ் கணக்கெடுப்புகளின் போது புதிதாக 1657 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.  இந்த கணக்கெடுப்பின் போது தனது வதிவை உறுதிப்படுத்த போதிய ஆவணங்களை சமர்ப்பிக்க முடியாமல் போன சிங்களம், தமிழ், முஸ்லிம் மூவினங்களைச் சேர்ந்த 106 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

2003ம் ஆண்டிற்கு பின்னர் வடக்கு, கிழக்கு பகுதிகளிலிருந்து மேல் மாகாணத்தில் தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும் வதிபவர்கள் தொடர்பான கணக்கெடுப்பு நேற்று முன்தினம் காலை 8.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரை நடைபெற்றது. கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களிலுள்ள பொலிஸ் பிரிவு களில் நடத்தப்பட்ட இந்த பொலிஸ் கணக் கெடுப்பின் போது 29,244 பேர் மொத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டார்.

29,244 பேரில் 15,975 ஆண்களும், 13,269 பெண்களும் அடங்குவர். இதேவேளை, கடந்த பல மாதங்களுக்கு முன்னர் பொலிஸார் நடத்திய தேடுதலின் போது பதிவு செய்யப்பட்ட வர்களிலிருந்து 1657 பேர் மேலதிகமாக இம்முறை பதிந்துள்ளனர். இவற்றில் 929 ஆண்களும், 728 பெண்களும் அடங்குவர்.

இதேவேளை மேல் மாகாணத்தில் தற்காலிகமாவோ, நிரந்தரமாகவோ தங்கியிரு க்கும் காரணத்தையோ, அதனை உறுதி செய்யும் ஆவணங்களையோ உரிய முறையில் சமர்ப்பிக்கத் தவறியவர்கள் 106 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். இவர்களில் 67 தமிழர்களும், 36 சிங்களவர்களும், இரண்டு முஸ்லிம்களும் அடங்குவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

அரசியல் தீர்வுமட்டுமே இலங்கையின் இன மோதலுக்கு முடிவைத் தரும் – ஜப்பான்

kilinochchi-victory.jpgவிடுதலைப் புலிகளின் நிர்வாகத் தலைநகர் கிளிநொச்சி வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், இலங்கைக்கு அதிகளவு உதவிவழங்கும் நாடுகளில் ஒன்றான ஜப்பான், இனநெருக்கடியை அரசியல் தீர்வினால் மட்டுமே முடிவுக்கு கொண்டுவர முடியுமென்று நேற்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளது. கிளிநொச்சியை கைப்பற்றிய இலங்கை இராணுவம் முல்லைத்தீவை நெருங்கியுள்ளதாக தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில் இன நெருக்கடிக்கு உண்மையான தீர்வை அரசியல் முயற்சிகளூடாகவே யதார்த்தபூர்வமானதாக்க முடியும், என்று ஜப்பானிய வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் ஏ.எவ்.பி செய்திச் சேவைக்கு நேற்று தெரிவித்துள்ளார். இலங்கை விவகாரத்துக்கு பொறுப்பான இந்த அதிகாரி மேலும் கூறுகையில்; வடகிழக்கு பிராந்தியத்திற்கு உள்ளக சுயாட்சியை கொண்டுவருவதற்கான அரசியல் தீர்வை முன்னெடுக்குமாறு இலங்கை அரசாங்கத்தை ஜப்பான் ஊக்குவிக்கும் என்று குறிப்பிட்டார்.

அதேவேளை இலங்கை நிகழ்வுகள் குறித்து ஜப்பான் இன்னமும் உத்தியோகபூர்வமான கருத்துகளை தெரிவிக்க வில்லையென்றும் தம்மை அடையாளம் காட்ட விரும்பாத அந்த அதிகாரி வேண்டுகோள் விடுத்தார். மோதல் மேலும் தொடருமென்று எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார். சட்டரீதியற்ற தலைநகரை கைப்பற்றுவது ஒரு அடையாளரீதியான விடயமாகும். ஆனால், யுத்தரீதியான முக்கியத்துவம் மட்டுப்படுத்தப்பட்ட விடயம் என்றும் அவர் தெரிவித்தார். இலங்கையின் கிழக்குப்பகுதி காட்டுக்குள் மோதல்கள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் கூறினார். இலங்கைக்குக் கிடைக்கும் சர்வதேச உதவிகளில் சுமார் மூன்றில் இரண்டு பகுதியை ஜப்பானே வழங்குகின்றது. கடந்த மூன்று வருடங்களில் 4 தடவைகள் விசேட தூதுவரை மோதலை முடிவுக்கு கொண்டுவருவதற்கான மத்தியஸ்த முயற்சியில் ஈடுபட ஜப்பான் அனுப்பியிருந்தது.

பங்களாதேஷின் பிரதமராக ஷேய்க் ஹசீனா இன்று பதவியேற்பு

haseena.jpgபங்களாதேஷின் பிரதமராக ஷேய்க் ஹசீனா இன்று செவ்வாக்கிழமை பதவியேற்கவுள்ளார்.  தலைநகர் டாக்காவிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

இவருடன் புதிய அமைச்சர்களும் பதவியேற்கின்றனர். ஜனாதிபதி அய்ஜுத்தீன் அகமது பிரதமருக்கும் புதிய அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். அவாமி லீக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சனிக்கிழமை பதவியேற்ற பின்னர் புதிய பிரதமராக ஹசீனாவைத் தேர்ந்தெடுத்தனர்.  பங்களாதேஷில் கடந்த மாதம் 29 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கூட்டணி மொத்தம் உள்ள 300 இடங்களில் 259 இடங்களில் வென்று மூன்றில் இருமடங்கு பெரும்பான்மையைப் பெற்றது.

இந்தக் கூட்டணியில், முன்னாள் ஜனாதிபதி எச்.எம்.எர்ஷத் தலைமையிலான ஜாதியா கட்சி முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. காலிதா ஷியா தலைமையிலான கூட்டணி கடும் தோல்வியைச் சந்தித்தது. தேர்தலில் குளறுபடி, மோசடி என்று தொடக்கத்தில் புகார் கூறி வந்தாலும் பின்னர் தமது கூட்டணியின் தோல்வியை ஒப்புக்கொண்டு புதிய அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி அளித்துள்ளார் காலிதா ஷியா . இருப்பினும் அவரது கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் இன்னும் பதவியேற்கவில்லை.