06

06

சிரஸ, சக்தி, எம்.டி.வி தொலைக்காட்சி நிறுவனம் தாக்குதல். வழமையான சேவைகள் ஸ்தம்பிதம்.

sirasa.jpgகொழும்பு பன்னிப்பிட்டிய தெப்பானமவில் அமைந்துள்ள மஹாராஜா நிறுவனத்தின் எம்டிவி, எம்பிசி ஊடக நிறுவன பிரதான கலையத்தின் மீது இன்று அதிகாலை 2.10 மணியளவில் இனம்தெரியாத நபர்களினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பிரதான கலையகம் பாரிய சேதத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்த தாக்குதல் காரணமாக எம்பிசி நிறுவனத்தின் தொலைக்காட்சி சேவைகளான எம்டிவி, சிரச, மற்றும் சக்தி தொலைக்காட்சி சேவைகளும் இன்று நண்பகல் வரை தமது வழமையான சேவைகளை நடத்தவில்லை.  இதுவரை பிந்திய செய்தி என்றடிப்படையில் இத்தாக்குதல் சம்பவத்தையே மூன்று தொலைக்காட்சி சேவைகளும் ஒளிபரப்பி வருகின்றன. வழமையான நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில் பிரதான கலையகம் பாதிக்கப்பட்டுள்ளமையினால் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன என தகவல் தெரிவிக்கின்றன.

இலக்கத்தகடற்ற வெள்ளை வேனில் வந்த சுமார் 15 தொடக்கம் 20 பேர் வரையிலான ஆயுதம் தாங்கிய கும்பலே இத்தாக்குதலை நடத்தியதாகவும் அவர்களிடம்  டி 56 ரக துப்பாக்கிகளும், கைத்துப்பாக்கிகளும், கைகுண்டுகளும் இருந்ததாகவும்  தெரிவிக்கப்படுகின்றது. அங்கு சென்ற பொலிஸார் கைக்குண்டு ஒன்றை மீட்டதாகவும் கூறியுள்ளனர்.

இனந்தெரியாத கும்பல் கலையகத்துக்குள் நுழைந்து பல இடங்களில் கைக்குண்டு வீச்சுகளை நடத்தியதுடன் துப்பாக்கி சூட்டுகளையும் பொல்லுகளாலும் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். இதன் காரணமாக தொலைக்காட்சி ஒளிபரப்பின் பிரதான கலையகம் தீயுண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அவ்விடத்திற்கு விரைந்த தீயணைக்கும் படையினர் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும்,  கலையகத்தில் பொறுத்தப்பட்டிருந்த அதிநவீன ஒளி,  ஒலி பரப்புச் சாதனங்கள் முற்றாக சேதமாக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பலகோடிக்கணக்கான ரூபாய்கள் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பவத்தின்போது, ஆயுததாரிகள் அங்கு சேவையில் இருந்த பாதுகாப்பு ஊழியர்களையும் தாக்கியுள்ளனர். இதன்போது பல ஊழியர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் நேற்றைய தினமும் இலக்கத்தகடற்ற வெள்ளை வானின் நடமாட்டம் இருந்ததாகப் பொலிஸிலும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக மஹரகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த வெள்ளிக்கிழமையன்றும் தெப்பானம கலையகம் மீது பெற்றோல் குண்டு வீச்சு நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
sirasa-02.jpg

ஆனையிறவின் தென்பகுதி படையினரால் முற்றாக மீட்பு ஒட்டுசுட்டான் பிரதேசமும் முழுமையாக வீழ்ந்தது

lanka-map.jpgபுலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த முக்கிய பிரதேசங்களில் ஒன்றான ஆனையிறவின் தென்பகுதி பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் கூறினார். இதற்கமைய, ஆனையிறவுக்கு தெற்கே உள்ள கரையோர பகுதிகள் முழுவதும் படையினரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

கிளிநொச்சியை முழுமையாக விடுவித்த இராணுவத்தின் 58வது படைப் பிரிவினர் யாழ். குடாவின் நுழைவாயிலான ஆனையிறவை நோக்கி முன்னேறி வந்தனர். பரந்தன், கிளிநொச்சியை கைப்பற்றிய இராணுவத்தின் 58வது படைப் பிரிவினர் தற்பொழுது ஆனையிறவுக்குள் பிரவேசித்துள்ளனர். இந்தப் படைப்பிரிவினர் கடந்த ஐந்து நாட்களுக்குள் பெற்ற மூன்றாவது பாரிய வெற்றி இதுவாகும்.

ஆனையிறவுக்கு தெற்கே தமிழ்மடம் கரையோரப் பிரதேசம் இராணுவத்திடம் முழுமையாக வீழ்ந்ததையடுத்து யாழ்ப்பாணத்தின் களப்பு பிரதேசம் பாதுகாப்பு படையினரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. அதேசமயம், பூநகரி – பரந்தன் வீதி, பரந்தன் ஆனையிறவு வீதி மற்றும் ஏ-9 வீதிக்கு தென் பகுதி முழுவதும் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளதாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனையிறவுக்குள் பிரவேசித்த படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் கடுமையான மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மோதல்களின் போது புலிகளுக்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த பிரிகேடியர், படையினரின் கடுமையான தாக்குதல்களில் பெருந்தொகையான புலிகள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆனையிறவை புலிகளிடமிருந்து ஏற்கனவே மீட்டெடுக்கும் படை நடவடிக்கைகளின் போது முக்கிய பங்களிப்பை வகித்து இராணுவத்திற்காக தன்னை அர்ப்பணித்த ஹஸலக காமினியின் உருவச்சிலை ஒன்றும் ஆனையிறவு பிரதேசத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்தது.

தற்பொழுது படைவீரர்கள் அந்த உருவச் சிலையையும் தாண்டி, வடக்கே நோக்கி முன்னேறி வருவதாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, ஆனையிறவு பிரதேசத்தில் நிலைகொண்டுள்ள பாதுகாப்பு படையினர் தற்பொழுது தமது நிலைகளை மேலும் பலப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பரந்தனுக்குக் கிழக்காக அமைந்துள்ள முரசுமோட்டை பகுதியிலும் இராணுவத்தினருக்கும் புலிகளுக்கும் இடையில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருவதாகவும் இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புலிகள் வன்னி நிலப்பரப்பில் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ள பல முக்கிய பிரதேசங்களை நாளுக்கு நாள் இழந்து வருகின்றனர். புலிகள் பாவித்து வந்த பல விநியோக பாதைகளையும் பாதுகாப்பு படையினர் நாளுக்கு நாள் துண்டித்து வருகின்றனர். முகமாலை, செம்பியன்பற்று மற்றும் முல்லைத்தீவு ஆகிய தரை வழிப்பாதைகளின் ஒரு சில பகுதிகள் மாத்திரமே தற்பொழுது புலிகளிடம் எஞ்சியுள்ளதாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, முல்லைத்தீவிலுள்ள ஒட்டு சுட்டான் பிரதேசத்திற்குள் நேற்று முன் தினம் பிரவேசித்த இராணுவத்தின் நான்காவது செயலணியினர் தற்பொழுது ஒட்டுசுட்டான் முழுவதையும் நேற்றைய தினம் விடுவித்துள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார். இதற்கமைய ஏ-32 பிரதான வீதியில் மாங்குளத்திலிருந்து ஒட்டுசுட்டான் வரையான பிரதேசம் படையினரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் பிரிகேடியர் தெரிவித்தார். இதன் மூலம், முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, மாங்குளம் மற்றும் நெடுங்கேணி ஆகிய பிரதேசங்கள் ஊடாக புலிகள் முன்னெடுத்து வந்த பயங்கரவாத மற்றும் விநியோக நடவடிக்கைகளும் நிர்வாக செயற்பாடுகளும் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
 

சந்தேகத்திற்கிடமான பொருட்கள், நபர்கள் தொடர்பாக மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் – பொலிஸார் அறிவுறுத்தல்

police.jpgகொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் குண்டு வெடிப்புகள் காரணமாக மக்களை விழிப்புடன் செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். சந்தேகத்திற்கிடமான பொருட்களையோ அல்லது நபர்களையோ கண்டால் உடனடியாக அருகிலிருக்கும் பொலிஸாருக்கு தெரியப்படுத்துமாறு பொலிஸ் ஊடகப்பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரஞ்சித் குணசேகர மக்களைக் கேட்டுள்ளார்.

குண்டுத் தாக்குதல்களை தடுத்துக்கொள்ளும் முகமாக பொலிஸார் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு இவ்வாறான செயற்பாடுகள் மூலம் ஒத்துழைப்பு வழங்குமாறு அவர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதேநேரம், படையினர் கிளிநொச்சியை கைப்பற்றியதை அடுத்து, விடுதலைப்புலிகள் நடத்தக்கூடிய எதிர்பாராத தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில் கொழும்பு உள்ளிட்ட தென்னிலங்கைப் பகுதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதத்தில் பொலிஸார் விஷேட திட்டமொன்றை ஆரம்பித்திருப்பதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்திருக்கிறார்.

சர்வகட்சி மாநாட்டை உடனடியாக கலைக்குமாறு வற்புறுத்துகிறது ஜே.வி.பி.

jvp.jpgசர்வகட்சி மாநாட்டை உடனடியாக கலைக்க வேண்டுமென வலியுறுத்தியிருக்கும் ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் தேசப்பற்றுள்ள தேசிய நிலையத்தின் செயலாளருமான விஜித ஹேரத், சர்வகட்சி மாநாடு தயாரித்துள்ள தீர்வுத் திட்டம் பிரிவினை வாதம் பலமடையவே வாய்ப்பளிக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். அனைத்து இனமக்களையும் ஒன்றுபடுத்தி தேசிய ஐக்கியத்தை உருவாக்குவதன் மூலம் பிரச்சினைக்குத் தீர்வு தேட முடியுமெனவும் பெரும்பான்மை சிங்கள மக்களுக்குரிய விதத்தில் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கும் சமமான உரிமைகள் வழங்கப்படவேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பாலஸ்தீனத்திலும் ஈராக்கிலும் ஆயிரக் கணக்கான அப்பாவிப் பொதுமக்களைச் கொன்று குவித்து வரும் அமெரிக்காவுக்கு இலங்கையில் சமாதானப் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட வேண்டுமெனக் கேட்பதற்கு என்ன யோக்கியதை இருக்கின்றது? எனவும் அவர் கேள்வி எழுப்பினார். தேசப்பற்றுள்ள தேசிய நிலையம் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு நிப்பொன் ஹோட்டலில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் அந்த அமைப்பின் ?ச்பாதுச் செயலாளரும் ஜே.வி.பி.யின் பிரசாரச் செயலாளருமான பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;

“இன்றைய அரசு அதிகாரத்துக்கு வந்த ஆரம்ப கட்டத்தில் போர் நிறுத்த உடன்படிக்கையை தொடர்வதிலேயே ஆர்வங்காட்டியது. ஜெனீவா பேச்சுவார்த்தையின் போதும் போர் நிறுத்தத்தை பாதுகாப்பதிலேயே ஆர்வம் காட்டியது. தென்னிலங்கை மக்கள் கொடுத்த அழுத்தம் காரணமாகவே பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் யுத்தம் தீவிரப்படுத்தப்பட்டது. நாட்டு மக்களின் இந்த வெற்றியை அரசாங்கமும் அரசில் உள்ள சில தலைவர்களும் தம்மால் ஈட்டப்பட்ட வெற்றிபோல் காட்டிக்கொள்ள முற்படுகின்றனர். நாட்டின் பொருளாதார பின்னடைவை மூடிமறைக்கவும் இதனைப் பயன்படுத்துவதைக் காண முடிகிறது. நாட்டின் பொருளாதார வளங்களை இந்தியாவுக்கும் சர்வதேசத்துக்கும் தாரை வார்க்கும் ஒரு முயற்சியிலும் அரசு மறைமுகமாக ஈடுபட்டு வருகின்றது.

பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையில் இயங்கிக் கொண்டிருப்பது சர்வகட்சி மாநாடல்ல. அதுவெறும் அரசாங்கக் கட்சிகளின் மாநாடாகும். அது எடுக்கும் தீர்வு முயற்சிகளுக்கு நாட்டு மக்கள் ஒரு போதும் அங்கீகாரமளிக்கப் போவதில்லை. 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு அப்பால் சென்று அதிகாரப் பரவலாக்கத்தைக் கொண்ட அரசியல் தீர்வு யோசனை முன்வைக்கப்படப் போவதாகக் கூறப்படுகின்றது. அவ்வாறானதொரு தீர்வுத் திட்டம் கொண்டுவரப்பட்டால் அது பிரிவினைவாதத்தை வலுவடையச் செய்யும் ஒரு திட்டமாகவே காணமுடியும். இந்தியாவில் இருக்கும் பிராந்திய அரசுகளுக்கு அப்பால் சென்ற அதிகாரத் தீர்வாகவே அமைய முடியும். அப்படி வந்தால் தற்போதைய பயங்கரவாத செயற்பாடுகளைவிடவும் மோசமான விளைவுகளையே நாடு எதிர்கொள்ள நேரிடலாம். திஸ்ஸ விதாரண தலைமையில் இயங்குவது சர்வகட்சி மாநாடாக நாம் ஏற்றுக் கொள்ளவில்லை. அது இன்று தவறான வழியில் சென்று கொண்டிருக்கின்றது. பிரதான கட்சிகள் அதிலிருந்து வெளியேறிவிட்டன. அரசாங்க சார்புக் கட்சிகள் மட்டுமே அங்கம் வகிக்கின்றன. எனவே சர்வகட்சி மாநாட்டை உடன் கலைக்க வேண்டுமென நாம் வலியுறுத்துகின்றோம்.

சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்கள் உட்பட நாட்டிலுள்ள அனைத்து இனங்களையும் ஒன்றுபடுத்தி தேசிய ஐக்கியத்தைக் கட்டியெழுப்புவதற்கான உறுதியான பணிகள் முன்னெடுக்கப்படவேண்டும். சிங்கள மக்களுக்குள்ள அனைத்து உரிமைகளும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கும் சமமாக பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். அனைவருக்கும் சமநீதி கிட்ட வேண்டும். அதனைச் செய்யத் தவறியதனால் தான் இந்தளவு பேரழிவை நாடு சந்திக்க நேரிட்டது. 1960 களில் ஐ.நா. தலையிட்டு பாலஸ்தீனத்தை வேறுபடுத்தியது. ஐ.நா.வின் சமாதானத் தீர்வுத் திட்டம் நிறைவேறியதா? அதன் விளைவு, இன்று பாலஸ்தீனம் பிணக்காடாக மாறியுள்ளது. அத்தகையதொரு நிலைக்கு இலங்கையை இனியும் தள்ளிவிடமுடியாது. தேசிய ஐக்கியத்தைக் கட்டியெழுப்பும் இயக்கத்தை அமைத்து ஒன்றுபட்டுச் செயற்பட அனைத்து சமூகங்களும் ஒன்றுபடவேண்டும்’ எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச் சாளர் கோர்டன்கிட் இலங்கையில் உடனடியாக சமாதானப் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படவேண்டுமென வலியுறுத்தியிருக்கிறாரே என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது பதிலளித்த விஜிதஹேரத் கூறியதாவது; “சர்வதேச பயங்கரவாதத்துக்கு ஊக்கமளித்த அமெரிக்கா எமக்கு யோசனை கூற முற்படுகின்றது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களுடன் அனைத்து உதவிகளையும் செய்து பாலஸ்தீனத்தில் குண்டுகளைக் கொட்டி அப்பாவி மக்களை கொன்றொழிப்பதில் அமெரிக்கா முனைப்புடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. சில தினங்களுக்கு முன்னர், அப்பாவி பாலஸ்தீன மக்கள் 400க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டனர். ஈராக்கை பிணக்காடாக மாற்றிய பெருமை கூட அமெரிக்காவையே சாரும். மிலேச்சத்தனமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் அமெரிக்கா எந்த யோக்கியதையுடன் இலங்கையை சமாதானப் பேச்சை ஆரம்பிக்குமாறு கேட்க முடியும்? அமெரிக்கா முதலில் ஒசாமா பின்லேடனுடனும் அல் ஹைடா அமைப்புடனும் சமாதானப் பேச்சுக்களை நடத்தட்டும். அதன் பின்னர் எமக்கு ஆலோசனை கூறட்டும்’ எனக் குறிப்பிட்டார்.

முல்லை, கிளிநொச்சியிலிருந்து வருவோருக்கு சகல வசதிகளையும் வழங்க ஜனாதிபதி பணிப்பு

mahi.jpgபயங்கர வாதத்தின் பிடியிலிருந்து விடுபட்டுவரும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு சகல வசதிகளையும் செய்து கொடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட சகல அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.

வடக்கு வசந்தம் அபிவிருத்திச் செயற்திட்டத்திற்காக இவ்வருடத்திற்கென 3000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இதற்கு மேலதிகமாக மீள் குடியேற்ற அமைச்சு 500 மில்லியன் ரூபா நிதியை வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது. வடக்கில் துரித அபிவிருத்தியை மேற்கொண்டு அங்குள்ள மக்களுக்கு தேவையான வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமெனவும் செயலகம் தெரிவித்தது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதேசங்களிலிருந்து இடம் பெயர்ந்துள்ள மக்களுக்கென வவுனியா செட்டிக்குளம் பகுதியில் இரண்டு அகதி முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இம் முகாம்களில் தற்போது 750 குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கான பாதுகாப்பு உணவு, மருந்து பொருட்கள், உட்பட அடிப்படைத் தேவைகளை வவுனியா மாவட்டச்செயலகத்தினரும் பிரதேச பாதுகாப்புப் பிரிவினரும் இணைந்து வழங்கி வருகின்றனர்.

வடக்கில் மீட்கப்பட்ட பகுதிகளில் விரைவில் உள்ளூராட்சித் தேர்தல் – அமைச்சர் ஜனக பண்டார

vote.jpgபயங் கரவாதத்திடமிருந்து மீட்கப்பட்டுள்ள வட மாகாணத்தில் விரைவில் உள்ளூராட்சிச் சபைத் தேர்தலை நடாத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்தார். தேர்தல் நடத்துவதற்கான முன்னோடி நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படுமென தெரிவித்த அவர், இது தொடர்பிலான சட்ட மூலத்தில் ஏற்கனவே திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதால் எவ்வித சிக்கலுமின்றி இதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க முடியுமெனவும் தெரிவித்தார்.

வடக்கின் பெரும்பாலான பகுதிகள் பயங்கரவாதத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளன. அங்கு இயல்பான நிர்வாகத்தை ஏற்படுத்தி மக்கள் தேவைகளைப் பெற்றுக்கொடுக்க உரிய நேரத்தில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, கொழும்பிலிருந்து ஓமந்தை வரைக்குமான நேரடி பஸ் சேவையை நடாத்துவதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. தற்போது கொழும்பிலிருந்து மதவாச்சி வரை மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ள இ. போ. ச. பஸ் சேவையை ஓமந்தை வரை விரிவுபடுத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாக இ. போ. ச. பிரதம நிறைவேற்று அதிகாரி எம். கே. ஏ. டபிள்யூ. குணவர்தன தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் இச்சேவை நீடிப்பைத் தொடர உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பரந்தனில் மும்முனைகளில் படையினரின் முன்நகர்வை முறியடித்ததாக புலிகள் தெரிவிப்பு

0301-ltte.jpgபரந்தன் பகுதியில்  ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் நடைபெற்ற கடும் மோதலில் 60க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதுடன், நூறு படையினர் வரை காயமடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து “புதினம்’ இணையத்தளம் கூறுகையில்;

பரந்தனிலிருந்து இரண்டாம் கட்டை நோக்கி படையினர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணி முதல் மும்முனைகளில் முன்நகர்வை மேற்கொண்டனர். இதையடுத்து விடுதலைப் புலிகள் கடும் பதில் தாக்குதலைத் தொடுக்கவே இரு தரப்புக்கும் இடையே சமர் நடைபெற்றது. கடும் ஷெல் வீச்சு, பல்குழல் ரொக்கட் தாக்குதல் மற்றும் மோட்டார் தாக்குதலுடன் படையினர் உக்கிர தாக்குதலைத் தொடுத்தனர். எனினும், பிற்பகல் வரை புலிகளும் மிகக் கடுமையான பதில் தாக்குதலைத் தொடுத்தனர். இதையடுத்து படையினர் பலத்த இழப்புகளுடன் தங்கள் பழைய நிலைகளுக்குத் திரும்பினர். இந்த முறியடிப்புச் சமரில் 60 படையினர் கொல்லப்பட்டதுடன், நூறுக்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளனர். இதன் போது படையினரின் சடலங்களும் இராணுவப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன், பி.கே.எல். எம்.ஜி.1, ஏ.கே.எல்.எம்.ஜி.1, ஆர்.பி.ஜி1, ரி. 56 ரகத் துப்பாக்கிகள்4 உட்பட பல ஆயுதங்கள் மீட்கப் பட்டுள்ளதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர்

இலங்கை பிரச்சினையில், மத்திய அரசின் கொள்கை என்ன?

05-raja.jpgஇலங்கை விமானப் படைக்கு உதவி செய்வதற்காக இந்திய விமானப்படை அதிகாரிகள் இலங்கை சென்றதாகக் கூறப்படுவது குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது. அக் கட்சியின் தேசியச் செயலாளர் ராஜா டெல்லியில் நிருபர்களிடம் பேசுகையி்ல்,

இலங்கை ராணுவத்துக்கு ஆயுத உதவி வழங்கியதன் மூலம் அங்குள்ள தமிழர்களுக்கு மத்திய அரசு ஏற்கனவே துரோகம் விளைவித்தது. இந் நிலையில், தமிழ்நாட்டில் இருந்து வந்திருந்த அனைத்துக் கட்சி குழுவினரிடம், இலங்கை பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண்பதற்காக, வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை அந்த நாட்டிற்கு அனுப்பி வைப்பதாக உறுதி அளித்திருந்தது.

அந்த உறுதிமொழியை நிறைவேற்றாததன் மூலம், இலங்கை தமிழர்களின் நலனுக்கு மீண்டும் இனியாவது, இலங்கை தொடர்பான தனது கொள்கையை மாற்றியமைத்து, பிரணாப் முகர்ஜியை உடனடியாக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை பிரச்சினையில், மத்திய அரசின் கொள்கை என்ன, போர் முடிவுக்கு வரும்வரை காத்திருக்க முடிவு செய்து இருக்கிறதா என்பதையும் விளக்க வேண்டும். 25 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் போரை உடனடியாக நிறுத்தி, இனப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும்படி இலங்கை அதிபர் ராஜபக்சேவை இந்திய அரசு அறிவுறுத்த வேண்டும். போரை தொடர்வதுதான் தீர்வு என்று ராஜபக்சே அரசு கருதக்கூடாது. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதுதான் ஒரே வழியாகும். தமிழர்கள் அங்கு அமைதியுடன் வாழ்வதற்கும், அவர்களுடைய சட்டபூர்வமான உரிமைகள் கிடைப்பதற்கும் இந்தியா உதவி செய்ய வேண்டும்.

வன்னியில் விமானத் தாக்குதலை நிறுத்த உதவுமாறு ஐ.நா.செயலருக்கு அவசர கடிதம்

mi24-1912.jpgவன்னியில் நடத்தப்படும் மனிதாபிமானமற்ற கொடூர விமானத்தாக்குதலை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வன்னித் தமிழர் பேரவை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூனுக்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. அவருக்கு அனுப்பப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

காஸா மக்கள் மீது நடத்தப்பட்ட இஸ்ரேலிய விமானத் தாக்குதலுக்கு எதிராக நீங்கள் தீர்க்கமான நடவடிக்கை எடுத்திருக்கும் இவ்வேளையில் உங்கள் கவனத்தை வன்னியில் நடத்தப்படும் மனிதாபிமானமற்ற கொடூர வான் தாக்குதல் மீது கொண்டுவரவேண்டும். இரவு பகல் பாராது தினமும் பொதுமக்கள் இலக்குகள் மீது இலங்கை விமானப்படையின் குண்டுவீச்சு விமானங்கள் தாக்குதல் நடத்துகின்றன. விமானப்படையின் புள்ளி விபரப்படி 2007 ஆம் ஆண்டில் 900 தாக்குதல்களும்,2008 ஆம் ஆண்டில் இதேபோன்று 800 தாக்குதல்கள் வன்னி நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இத்தாக்குதல்கள் பெரும் உயிர் அழிவுகளை ஏற்படுத்தியுள்ளன. இத்தாக்குதல்களால் பொது மக்கள் பலமுறை இடம்பெயரும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளனர். தொடரும் மற்றும் ஒரே இலக்கிலான தாக்குதல் மூலம் வன்னி நிலப்பரப்பில் இருக்கும் மக்களை இலங்கை அரசாங்கம் தனது இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் வர நிர்ப்பந்திப்பதற்கான தாக்குதலாகவே செய்கின்றது. இந்த நிலையானது எந்தவிதமான மனிதாபிமான சட்டங்களுக்குள்ளும் யாப்புகளுக்குள்ளும் அடங்காததும் மக்களை அவர்களது வாழ்விடங்களிலும் இருந்து பலவந்தமாக வெளியேற நிர்ப்பந்திப்பது முழுமையாக மனித உரிமை சட்டங்களை மீறும் செயற்பாடாகின்றது.

அரசாங்கம் வன்னி மீது ரஷ்யத் தயாரிப்பான கொத்தணிக் குண்டுகளை வீசுவது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதே இலங்கை அரசு கொத்தணிக்குண்டுகளைத் தடை செய்யும் ஒப்பந்தத்திலும் கைச்சாத்திட மறுத்துள்ளது. 20081231, 20090101,20090102 நாட்களில் இடம்பெற்ற இழப்புகளையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். 31 ஆம் திகதி நாலு பொதுமக்கள் கொல்லப்பட்டு 19பேர் படுகாயமடைந்தனர். 1 ஆம் திகதி ஆறு பொதுமக்கள் கொல்லப்பட்டு 26 பேர் படுகாயமடைந்தனர். 2 ஆம் திகதி ஏழு பொதுமக்கள் கொல்லப்பட்டு 20 பேர் படுகாயமடைந்தனர். இத்தகைய மனிதப்படுகொலையைக் கண்டித்து ஆக்கபூர்வமான நடவடிக்கை தங்களால் எடுக்கப்படும் என்று நம்புவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு நோக்கிய நகர்வில் 50,000 படையினர் ஈடுபடுவர்

kili-05.jpgமுல்லைத்தீவைக் கைப்பற்றுவதற்கான இறுதிப் போரில் ஐம்பதாயிரம் படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பாதுகாப்புத் தரப்பு தெரிவித்துள்ளது. கிளிநொச்சியைக் கைப்பற்றியுள்ள படையினர் தங்கள் முன் நகர்வு முயற்சியைத் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேநேரம், எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் விடுதலைப் புலிகளை முற்றாக அழித்து விடலாம் என இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். படை நடவடிக்கைக்குரிய இறுதி போரியல் வியூகங்களைப் படைத்தரப்பு வகுத்துள்ளது. அதன் பிரகாரம் இறுதி நடவடிக்கைக்கு ஆறு டிவிசன்களைப் பயன்படுத்த படைத்தரப்பு தீர்மானித்துள்ளது.57 ஆவது, 59 ஆவது டிவிசன்கள் மற்றும் நடவடிக்கை படையணிகள் 1, 2, 3, 4 என்பவற்றைச் சேர்ந்த 100 பற்றாலியன்களைக் கொண்ட 50,000 படையினருடன் இறுதிக் கட்ட நடவடிக்கையை தீவிரப்படுத்த படைத்தரப்பு திட்டமிட்டுள்ளது.

இந்தப் படையணிகள் முல்லைத்தீவை நோக்கிய தாக்குதலை நடத்தத் திட்டமிட்டுள்ளன. அடர்ந்த காடுகளுக்குள் விஷேட படையணிகளைக் கொண்டும் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. விடுதலைப் புலிகளின் மரபு வழிப் போரிடும் ஆற்றலை படையினர் எதிர்வரும் ஜூன் மாதமளவில் முறியடித்து விடுவார்களெனவும் தெரிவிக்கப்படுகிறது.