06

06

புலித் தலைவர் பிரபாகரன் சயனைட் அருந்தி தற்கொலை செய்யும் காலம் நெருங்கிவிட்டது – கிழக்கு மாகாண முதலமைச்சர்

cm.jpgபுலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சயனைட் அருந்தி தற்கொலை செய்யும் காலம் நெருங்கிவிட்டதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார். (04)  மட்டக்களப்பிலுள்ள முதலமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன், புலிகளது நிருவாக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக விளங்கிய கிளிநொச்சியை படையினர் கைப்பற்றி இருப்பதானது பயங்கரவாதம். ஒழிக்கப்பட்டு சமாதானம், ஜனநாயகம் என்பன ஏற்படுத்தப்பட வேண்டுமென விரும்புகின்ற அனைவருக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி என நான் கருதுகின்றேன்.

ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களுக்கு சயனைட் குப்பிகளை வழங்கி கொலை செய்த பிரபாகரன் தானும் சயனைட் அருந்தி தற்கொலை செய்து கொள்ளும் காலம் நெருங்கிவிட்டது. இந்த வெற்றியினூடாக வடபகுதிக்குள் குறிப்பாக பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டு எல்லைக்குள் சிக்குண்டு இருக்கின்ற அப்பாவி பொதுமக்கள் மற்றும் இளைஞர் யுவதிகளையும் மீட்டு அவர்களுக்கான புனர்வாழ்வு அளிக்கப்படுகின்ற போது இவ்வெற்றியானது தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் வரவேற்கப்படும்.

கிழக்கைப் போன்று வடக்கிலும் ஒரு ஜனநாயக சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்காக எஞ்சியிருக்கின்ற பயங்கரவாதம் முற்றாக அழிக்கப்பட வேண்டும். பயங்கரவாதம் அழிக்கப்படுவதன் ஊடாக கிழக்கு மக்களைப் போன்று வடபகுதி மக்களும் ஒரு ஜனநாய சமூகப் பாதைக்கு வந்து தங்களுக்கான பலமானதொரு அரசியல் இருப்பிடத்தை ஏற்படுத்திக் கொள்ளமுடியும். இதற்காகவே தான் ஜனாதிபதியும் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றார்.

இவ்வெற்றியானது அண்மைக்கால இராணுவ முன்னேற்றங்களை வைத்துப்பார்க்கும் போது இது ஒரு பாரிய வெற்றியைக் காட்டுகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

அரபு நாடுகளில் 30,000 இலங்கையர் வேலைவாய்ப்பை இழக்கும் நிலை

kkhaliya.jpgஅரபு நாடுகளில் வேலை வாய்ப்புப் பெற்றுச் சென்றுள்ள சுமார் 30 ஆயிரம் இலங்கையர்கள் தமது வேலைவாய்ப்பை அந்நாடுகளில் இழக்க வேண்டிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல எச்சரித்துள்ளார். அரபு நாடுகளிலும் தென்கொரியாவிலும் கட்டிட நிர்மாணத்துறைகளில் தொழில்புரியும் வெளிநாட்டவர்களுக்கு இந்நிலை ஏற்பட்டுள்ளது. அண்மையில் சர்வதேச ரீதியாக ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியே இதற்கு காரணமென தெரிவிக்கப்படுகிறது.

தென்கொரியாவில் வேலைவாய்ப்புப் பெற்ற 18 ஆயிரம் இலங்கையர்கள் அவர்களது தொழில் ஒப்பந்தங்களில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். அல்லது நீக்கப்பட்டுள்ளனர். இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட 15 நாடுகளின் தொழிலாளர்களில் இலங்கையரும் அடங்குவர். தென்கொரியாவிலும் நிதி நிறுவனம் ஒன்று தனது பணியாளர்களில் சுமார் 4 ஆயிரம் பேரை அவர்களின் வேலையிலிருந்து நீக்கியுள்ளது. இவர்களில் சாதாரண தொழிலாளர்கள் மட்டுமன்றி உயர்பதவி வகிப்பவர்களும் உள்ளனர் எனவும் அமைச்சர் தெரிவித்தார். அரபு நாடுகளில் வேலைவாய்ப்புப் பெற்றிருக்கும் சுமார் 2 இலட்சத்து 38 ஆயிரம் இலங்கையர்களில் ஒரு இலட்சத்து 2 ஆயிரம் பேர் ஆண்களாவர். இவர்களில் அநேகமானவர்கள் கட்டிட நிர்மாணத் தொழிற்துறைகளிலேயே தொழில் புரிகின்றனர்.

அவர்களில் சாதாரண தொழிலாளர்கள் மாத்திரமன்றி நில அளவையாளர்கள் , படவரைஞர்கள் மற்றும் பொறியியலாளர்களும் அடங்குவர். பல கட்டிட நிர்மாணப்பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதால் இவர்கள் தமது தொழில்களை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், எதிர்காலத்தில் இந்நாடுகளில் வேலைவாய்ப்பை பெறுவதென்பது சிரமமானது என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார். அரபு நாடுகள் வேலைவாய்ப்புகான விஸா வழங்குவதை இடைநிறுத்தியுள்ளதாக வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் தெரிவித்துள்ளன. அதேபோல கிழக்கு ஆசிய நாடுகள் குறிப்பாக கட்டார் போன்ற நாடுகளின் கட்டிட நிர்மாணப்பணிகளிலும் இத்தாக்கம் ஏற்பட்டுள்ளது.

டியூசன் வகுப்பு குரோதம்- அதிபரை டியூசன் ஆசிரியர் அடித்துக் கொலை

இரத்தினபுரி கிலிமலே சமனல மகா வித்தியாலய அதிபர் (04) பொல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் பாடசாலையில் வைத்து இடம் பெற்றுள்ளது. பாடசாலையில் சிரமதான வேலையில் ஈடுபட்டிருந்த அதிபரை அங் கிருந்த ஒருவர் பொல்லால் தாக்கியுள்ளார். தாக்குதலுக்குள்ளான அதிபர் பாடசாலை காரியாலயத்திற்கு காயத்துடன் சென்று விழுந்து இறந்துள்ளார்.

அதிபரை பொல்லால் தாக்கியவர் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த இரத்தினபுரி பிரதேச சபை உறுப்பினரென தெரிய வந்திருப்பதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தின் போது கிலிமலே இந்துருவயை வசிப்பிடமாகக் கொண்ட குணபால பெரேரா (46) என்பவரே இறந்தவராவார்.  டியூசன் வகுப்பு சம்பந்தமாக நீண்டகாலமாக நிலவி வந்த குரோதமே இக்கொலைக்கு காரணமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சம்பவத்துக்கு காரணமான நபர் தறைமறைவாகியுள்ளார். இவரை தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும் தினத்தில் நாமும் பட்டாசு கொளுத்தி மகிழ்வோம் – மனோகணேசன்

mano_ganesan.jpgஆயுத போராட்டத்திற்கும் மனித உரிமை மீறல்களுக்கும் அடிப்படை காரணமாக அமைந்துள்ள தீர்க்கப்படாத தேசிய இனப்பிரச்சினைக்கு நேர்மையான அதிகார பரவலாக்கல் மூலம் அரசியல் தீர்வு காணப்படும் தினத்தன்று இந்நாட்டில் தமிழர்களாகிய நாங்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாட்டங்களில் ஈடுபடுவோம். அந்த கொண்டாட்டத்தை தலைநகர தமிழர்களின் மக்கள் பிரதிநிதி என்ற முறையில் கொழும்பு மாநகரில் நானே நேரடியாக நின்று பட்டாசு கொளுத்தி, தெருக்கள் எங்கும் ஊர்வலம் நடத்தி கொண்டாடுவேன். அன்றைய தினமே நேரடி அரசியலிருந்து நான் விடைபெறும் தினமாகவும் அமையும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோகணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி நகரை இராணுவம் கைப்பற்றியது தொடர்பிலும் இது காரணமாக நாடெங்கும் நடைபெற்றுள்ள கொண்டாட்டங்கள் தொடர்பிலும் தெரிவித்த மனோ எம்.பி. மேலும் கூறியதாவது; கிளிநொச்சி நகரை இராணுவம் கைப்பற்றியது தமிழர்களுக்கு எதிரான சிங்களவர்களின் வெற்றியுமல்ல வடக்கிற்கு எதிரான தெற்கின் வெற்றியுமல்ல என்ற ஜனாதிபதியின் கருத்தை வரவேற்கின்றேன். ஆனால், இந்த கருத்துகள் நடைமுறையுடன் பொருந்தவேண்டும். வடக்கிலே இன்று ஒரு போராட்டக்களம் இருக்குமானால் கிழக்கிலே ஒரு அரசியல் போராட்டக்களம் இருக்கின்றது. அதுதான் உங்களது கிழக்கு மாகாணசபையாகும். மாகாணசபை முறைமை தேசிய இனப்பிரச்சினைக்கு முழுமையான அரசியல் தீர்வாகாது. இருந்தாலும் அது இன்று அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தமாகும். ஆனால், நீங்கள் இந்த திருத்தம் என்ற சட்டத்தையும் முழுமையாக நடைமுறைபடுத்தவில்லை.

உங்களது கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன் மற்றும் அமைச்சர் ஹிஸ்புல்லா ஆகியோர் சொல்வதையும் நீங்கள் கேட்கவில்லை. அமைச்சர் திஸ்ஸவிதாரண தலைமையிலான உங்களது சர்வகட்சி கடையையும் இன்று மூடிவிட்டீர்கள். அரசாங்கம் யுத்த களத்தில் வெற்றிகளை குவிப்பதாக கூறுகின்றது. அது எங்களுக்கும் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. ஆனால், அரசியல் களத்தில் எதையுமே பார்க்கமுடியவில்லை என்பதையிட்டு நாங்கள் கவலையடைகின்றோம். அதிலும் இந்த அரைகுறை மாகாணசபை செயற்பாடுகளையும்கூட அரசாங்கத்தின் சில செல்வாக்குமிக்க பிரிவினர் எதிர்க்கின்றார்கள் இது நிலைமையை இன்னமும் மோசமடைய செய்கின்றது.

இந்நாடு சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கி, மலாய் ஆகிய அனைத்து மக்கள் பிரிவினருக்கும் சொந்தமானது என ஜனாதிபதி சொல்கிறார். ஆனால், இன்னொரு பிரிவினர் இந்நாடு பெரும்பான்மை இன, மதத்தவருக்கு மாத்திரமே சொந்தமானது என கூறுகிறார்கள். அரசியல் தீர்வு என்பது முழுமையான இராணுவ தீர்விற்கு பிறகு நடைமுறையாகும் என்ற கருத்தை தமிழர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த கருத்தை சர்வதேச சமூகமும் ஏற்றுக்கொள்ளும் என்று நான் நினைக்கவில்லை. இதுதான் இன்றைய மறுக்கமுடியாத யதார்த்தமாகும்.

மீளக்குடியேறாதோரின் காணியுரிமை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு

நாகர் கோவில் தெற்கு, வலிக்கண்டி மீள்குடியேற்றத் திட்டத்தில் இதுவரை மீளக் குடியேறாதவர்களின் விபரங்கள் மீள்பரிசீலனை செய்யப்பட்டு, காணியுரிமை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக வடமராட்சி கிழக்கு உதவி அரச அதிபர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் அறிவித்துள்ளதாவது;

வலிக்கண்டி மீள்குடியேற்றத் திட்டத்தில் (நாகர்கோவில் தெற்கு) 120 குடும்பங்களை மீள் குடியேற்றம் செய்வதற்கு தீர்மாணிக்கப்பட்டு வீடுகள் கட்டப்பட்டன. இவற்றில் 72 குடும்பங்கள் குடியேறியுள்ளன. மீதி 48 குடும்பங்களும் இதுவரை குடியேறவில்லை. இவ்வாறு குடியேறாதவர்களை உடனடியாக குடியேறுமாறு கேட்டுக்கொள்கின்றேன். குடியேறத்தவறுபவர்களின் வீடுகள் சம்பந்தமாக மீள்பரிசீலனை செய்யப்பட்டு காணி அபிவிருத்திச் சட்டத்தின் 106 ஆம் பிரிவின் கீழ் இவர்களுக்கான காணி ஒதுக்கீடு இரத்துச் செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதுவிடயமாக, மேலதிக விண்ணப்பங்கள் எவையும் பரிசீலனை செய்யப்படமாட்டாதெனவும் உதவி அரச அதிபர் அறிவித்துள்ளார்.