நாட்டின் சகல பகுதிகளிலும் தமிழர்கள் உயர் பதவிகளை வகித்து, வடக்கு – தெற்கு மக்கள் ஐக்கியமாக வாழ்ந்த காலமொன்றிருந்தது. இவ்வுறவை சீர் குலைத்த பிரபாகரன் இதற்கான பிரதி பலனை அனுபவிப்பது நியாயமானதென பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வடக்கில் யுத்தத்தை நிறுத்தவும் அதற்கான சர்வதேச ஒத்துழைப்பைப் பெறவும் நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் வகையில் சர்வதேச உதவிகளைத் தடைசெய்யவும் சில சக்திகள் சதிமுயற்சியில் ஈடுபட்டுள்ளன.
அனைத்துச் சவால்களுக்கும் முகம்கொடுக்க அரசாங்கம் தயாராகவுள்ளதெனவும் பிரதமர் தமதுரையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணையைச் சபையில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். பிரதமர் தமதுரையில் மேலும் தெரிவிக்கையில்:-
கிளிநொச்சியை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்ட வெற்றியை அறிவிக்கும் முக்கிமான காலகட்டமொன்றில் அவசரகால சட்டம் மேலும் ஒரு மாதகாலம் நீடிக்கப்படுவதற்கான பிரேரணை இன்று சபையில் சமர்ப்பிக்கப்படுகிறது. பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தமென்பது இலேசானதல்ல. கைகூடாத ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் எமது படையினர் சாதித்துக்காட்டியுள்ளனர். இதற்கான பின்னணியை ஏற்படுத்துவதற்காகவே மேலும் ஒருமாத காலத்திற்கு அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படுகிறது. விடுதலைப் புலிகளின் இறுதிமூச்சு உள்ளவாங்கப்படும் இன்றைய நிலையில் வத்தளையில் பல உயிர்களைக் காவு கொண்ட தாக்குதலை அவர்கள் மேற்கொண்டுள்ளனர்.
அரசாங்கம் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்குச் சமமானதாக சில சக்திகள் அரசாங்கத்துக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றன. நாட்டைச் சீர்குலைக்க இச்சக்திகள் பெரும் பிரயத்தனங்களை மேற்கொள்கின்றன. நாடு, இனம் என்ற உணர்வில்லாத இவர்களுக்கு என்ன நடந்தது என்ற கேள்வியையே இன்று நாட்டு மக்கள் முன்வைக்கின்றனர். பல அரசியல் வாதிகள் இதிலடங்குகின்றனர். இது போன்ற செயற்பாடுகளில் இறுதியில் நியாயமே வெல்லும்.
தேசிய உணர்வுள்ள மக்கள் வாழும் நாடு அதிஷ்டமிக்கது. எனினும் துரதிஷ்டவசமாக எமது நாட்டின் சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைக்க முடியாத நிலையே உள்ளது. புலிகளுக்கும் அல்கைதா இயக்கத்துக்குமிடையில் தொடர்புகள் இருப்பதாக இந்திய பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அண்மையில் காபுல் நகரில் இவர்களுக்கிடையிலான ஆயுத ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடந்ததாகத் தெரிய வருகிறது.
கேரளா, தமிழ்நாடு வழியாக நாட்டிற்குள் போதை மருந்துகளைக் கடத்தவும் இவர்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றைத் தடுப்பதற்கான சட்டதிட்டங்கள் அவசியம். இதற்குச் சகல தரப்பினரதும் ஒத்துழைப்பும் அவசியம். இவ்வேளையில் உயிரைப் பணயம் வைத்து பயங்கரவாதிகளின் கோட்டைக்குள் நுழையும் படைவீரர்களுக்கு மனதைரியத்தை வளர்க்கும் பொது நடவடிக்கைகளும் அவசியமென பிரதமர் மேலும் தெரிவித்தார்.