08

08

கிளிநொச்சி, முல்லைத்தீவு: 94 லொறிகளில் இன்று உணவுப் பொருட்கள்

aid-loryes1712.jpg
கிளிநொச்சி, முல்லைத்தீவு மக்களுக்குத் தேவையான உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிக்கொண்டு 94 லொறிகள் இன்று வன்னி புறப்படுமென வவுனியா மாவட்ட செயலக அதிகாரிகள் தெரிவித்தனர். 94 லொறிகளில் பொருட்கள் கொண்டு செல்லப்படவுள்ளது. உலக உணவுத்தாபனம், யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு 54 லொறிகளில் கோதுமை மா, பருப்பு சமையல் எண்ணெய், சீனி அடங்கிய சுமார் 600 மெற்றிக் தொன் பொருட்களை அனுப்பிவைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வவுனியா, தேக்கம்காடு களஞ்சியத்திலிருந்து லொறிகள் புறப்படும், அதேநேரத்தில், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரினால் அனுமதிக்கப்பட்ட சுமார் 300 மெற்றிக்தொன் உணவுப் பொருட்களும் மரக்கறிகளும் 40 லொறிகளில் அனுப்பிவைக்கப்படும்.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா 20 லொறிகள் வீதம் பொருட்கள் ஏற்றப்பட்டுள்ளன. கிளிநொச்சி நகரம் பாதுகாப்பு படையினரிடம் வீழ்ந்த பின்னர் புறப்படும் முதலாவது உணவு லொறி தொடரணி இது என்பது குறிப்பிடத்தக்கது. வழமையான வீதி வழியாக சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் வழித்துணையுடன் உணவு தொடரணி வண்டிகள் செல்லும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை விடுவிக்கப்படாத கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டப் பிரதேசங்களில் தங்கியுள்ள மக்களுக்கென வாராவாரம் 80 லொறிகளில் அத்தியாவசிய உணவு உள்ளிட்ட பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருவதாக வவுனியா மாவட்டச் செயலாளர் நேற்றுத் தெரிவித்தார். கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர்களின் வேண்டுகோள்களுக்கு ஏற்ப இப்பொருட்கள் அனுப்பி வைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விடுவிக்கப்படாத பிரதேசங்களில் தங்கியுள்ள மக்களுக்கென அரசாங்கம் அனுப்பிவைக்கும் அத்தியாவசியப் பொருட்களுக்கு மேலதிகமாக உலக உணவுத் திட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் நிறுவனங்கள் என்பவற்றினதும் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 20 வருடங்களாக அதிகரிக்க சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவேண்டும் – மேதானந்த தேரோ

ellawela-thera.jpgநாட்டின் பாதுகாப்பையும், அபிவிருத்தியையும் ஒரே தருணத்தில் முன்னெடுத்துச் செல்லக்கூடிய தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே. அவரது பதவிக்காலத்தை 20 வருடங்களாக அதிகரிக்கச் செய்வதற்கு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என எல்லாவல மேதானந்த தேரோ தெரிவித்தார்.  அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் கூறியதாவது:-  வன்னியில் சுமார் 3000 அரச சார்பற்ற நிறுவனங்கள் அபிவிருத்தி வேலைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் சுமார் 80 பில்லியன் ரூபா இப்பகுதியின் அபிவிருத்திக்காக செலவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.  ஆனால் அவர்கள் புலிகளுக்குரிய பங்கர்கள், முகாம்கள், பதுங்கு குழிகளையே அபிவிருத்தி செய்திருக்கிறார்கள்.  பிரபாகரன் தான் ஒருவரே தலைவர் என்றும் அவரை தோற்கடிக்க முடியாது என்றும் மார்தட்டிக் கொண்டிருந்தார். பல தலைவர்களை நாம் இழந்திருக்கிறோம். படையினரை இழந்திருக்கிறோம். இதற்கு காரணம் எமக்குடையே ஒற்றுமை இல்லை. ஒற்றுமை இல்லாமையை பயன்படுத்திக் கொண்டார்கள்.

புலிகள் தோல்வியை சந்தித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையிலாவது பேதங்களை மறந்து ஒற்றுமைப்பட வேண்டும். இது தொடர்பாக சிந்தித்து செயற்படவும் வேண்டும. படையினர் வடக்கில் கைப்பற்றும் சகல பிரதேசங்களிலும் பெளத்த விகாரைகள் இருந்தமைக்கான சான்றுகள் உள்ளன. இப்பகுதிகளில் சுமார் 1500 க்கும் மேற்பட்டகுளங்கள் இருக்கின்றன. 1500 குளங்கள் இருக்குமானால் 1500 கிராமங்கள் இருக்க வேண்டும். அப்படியானால் 1500 விகாரைகள் இருந்திருக்க வேண்டும். அதற்கான சான்றுகள் இருக்கின்றன.

117 தற்கொலைதாரிகள் கொழும்பினுள் ஊடுருவல்

laksman-yaappa.jpgவடக் கில் தமக்கு ஏற்படும் தோல்விகள் காரணமாக கொழும்பிலும், முக்கிய நகரங்களிலும் புலிகள் தற்கொலைத் தாக்குதல்களை நடத்தக்கூடுமென அரசாங்கம் எச்சரித்துள்ளது. கொழும்பில் 117 தற்கொலைக் குண்டுதாரிகள் ஊடுருவியுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளதென்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார் எனவே இது குறித்து ஊடகங்கள் மக்களை விழிப்படையச் செய்ய வேண்டுமென்று அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில்  நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பில் பொதுமக்களை விழிப்படையச் செய்யும் பணியில் அனைத்து ஊடகங்களும் ஒத்துழைக்க வேண்டுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

குறைந்த வயதினரை இயக்கத்தில் சேருமாறு புலிகள் அழைப்பு

_army.jpgமுல்லைத்தீவில் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள சிவிலியன்களில் குறைந்த வயதுடையவர்களை இயக்கத்தில் சேருமாறு புலிகள் வானொலி மூலம் அழைப்பு விடுத்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். முல்லைத்தீவில் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து மறைமுகமாக தப்பி ஓடிவந்து படையினரிடம் சரணடைந்துள்ள சிவிலியன்கள் இந்த தகவல்களை கூறியதாகவும் அவர்மேலும் தெரிவித்தார்.

இந்த அறிவிப்பு புலிகள் தமது பலத்தை இழந்துள்ளமையை உறுதிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார். தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் (06) நடைபெற்ற பாதுகாப்பு நிலைவரம் தொடர்பான செய்தியாளர் மாநாட்டில் பிரிகேடியர் மேலும் தகவல் தருகையில்,

இவ்வாண்டு முதலாம் திகதி முதல் ஆறாம்திகதி வரையான ஆறு நாட்களில் புலிகளின் பிடியிலிருந்து தப்பி அரச கட்டுப்பாட்டு பிரதேசத்தை நோக்கி 141 சிவிலியன்கள் வருகை தந்துள்ளனர். பரந்தன், கிளிநொச்சி, ஓமந்தை மற்றும் நெடுங்கேணி பகுதிகளிலுள்ள பாதுகாப்பு படையினரிடமே இவர்கள் சரணடைந்துள்ளனர்.

17வயதிலிருந்து 40 வயது வரையான இளைஞர்களை இயக்கத்தில் இணைந்து பயிற்சி பெறுமாறு புலிகள் பலாத்காரமாக அழைப்பு விடுப்பதுடன் ஏனையோரும் உதவி ஒத்துழைப்புக்களை வழங்குமாறு கூறிவருவதாக கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு வந்துள்ளவர்கள் கூறியுள்ளனர். அதேசமயம், நாளாந்தம் பெருந்தொகையான புலிகள் கொல்லப்படுவதுடன் படுகாயமடைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். அதிகமான புலிகள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

வடக்கில் மீட்கப்பட்ட பிரதேசங்களில் 2 மாதத்தினுள் அபிவிருத்திப் பணிகள் – லக்ஷ்மன் யாப்பா

laksman-yaappa.jpgவடக் கில் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட பிரதேசங்களில் இன்னும் இரண்டு மாதத்திற்குள் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுமென்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா  அபேவர்தன தெரிவித்தார். கிளிநொச்சியை மீட்பதற்காக முன்னெடுக்கப்பட்டது ஒரு இனவாதப் போராட்டமென்று தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு சமமான அபிவிருத்தியைத் துரிதமாக மேற்கொள்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும்” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் (06) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளை விடவும், வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படுமென்று தெரிவித்த அமைச்சர் யாப்பா, மீட்கப்பட்ட பிரதேசங்களுக்கு மக்களைக் கொண்டு வந்து சேர்ப்பதில் படையினருக்குப் பாரிய பொறுப்பு உள்ளதென்றும் கூறினார்.

“ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டுச் சரணடையுமாறும், சிவிலியன்களை விடுவிக்குமாறும் புலிகளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தர்ப்பம் வழங்கியிருந்தார். ஆனால் புலிகள் ஜனாதிபதியின் வேண்டுகோளை நிராகரித்துவிட்டார்கள்” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் ரணில் காட்டிக்கொடுத்துள்ளார் – அநுர பிரியதர்ஷன

anura-priyatharsana.jpgஎதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க புலிகள் இயக்கத்துடன் போலியான போர்நிறுத்த ஒப்பந்தம் செய்துகொண்டு நாட்டை முழுமையாக காட்டிக்கொடுத்துள்ளாரென தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன  யாப்பா தெரிவித்துள்ளார்.

தன்னால் கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மூலமே யுத்தத்தில் வெற்றியடைவதற்கான அடித்தளம் இடப்பட்டதாக (05) அவர் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளாரென்றும் தேசிய ரீதியாக வெற்றியை கொண்டாடும் இந்த வேளையில் பிரபா- ரணில் போலி போர் நிறுத்த ஒப்பந்தத்தின் தேசத்துரோகத் தன்மையை புரிந்துகொள்ள வேண்டியது மக்கள் பொறுப்பாகுமென்றும் அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

‘2002 பெப்ரவரி 21 ஆம் திகதி சைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கை எமது தாய் மண்ணின் இறைமையையும் ஆள்புல ஒருமைப்பாட்டையும் முழுமையாக காட்டிக் கொடுத்துள்ளது. இந்த காட்டிக் கொடுப்பின் முதலாவது காரியம் மிலேனியம் சிட்டி அனர்த்தமாகும். இராணுவ பிரிவினருக்குரிய மிலேனியம் சிட்டி இல்லத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருந்த சூழ்ச்சிகாரர்கள் ஒன்று கூடியிருப்பதாக கூறி புலனாய்வு பிரிவினரின் பெயர் விவரங்களை புலிகளுக்கு பெற்றுக்கொடுத்து அவர்களை கொலை செய்வதற்கு வழிவகுத்தன. அச்சமயத்தில் சுமார் 100 புலனாய்வு உத்தியோகத்தர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். தவிரவும் போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதிலிருந்து 2006ஆம் ஆண்டு மாவிலாறு மனிதாபிமான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது வரை போர் நிறுத்தம் என்ற போர்வையில் சுமார் 500 இராணுவத்தினரை படுகொலை செய்தனர். இதில் 34 தமிழ் அரசியல்வாதிகளும் கொல்லப்பட்டனர்.

ரணில் விக்கிரமசிங்கவின் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் தயவால் புலிகள் தோற்கடிக்கப்பட்டது எவ்வாறாக இருந்தாலும், அதன் மூலம் புலிகள் தமது கொலைச் செயலை தொடர்ந்து முன்னெடுத்து வலுவான இராஜதந்திரத்தை கட்டியெழுப்புவதற்கும் தேவையான தேசிய மற்றும் சர்வதேச ரீதியான அங்கீகாரத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் இதன்மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. அதுமாத்திரமன்றி புலிகளின் யுத்த பலம், தொலைத் தொடர்பு பலம், நிதி வளம் ஆகியவற்றை பல மடங்கு மேம்படுத்தி எமது இராணுவம் பலவீனமானதென காண்பித்து அவர்களை முகாமுக்குள் முடக்கும் மனோ பாவத்தை நாட்டில் ஏற்படுத்தும் வகையிலும் இவர்கள் செயற்பட்டனர். நிலைமை இவ்வாறிருக்க, நாட்டு மக்களை மேலும் தவறாக வழிநடத்த ரணில் விக்கிரமசிங்க கூறும் இந்தக் கருத்து உண்மைக்கு புறம்பானதாகும். இதனை எவருமே ஏற்றுக்கொள்ள மாட்டார்களென்பதும் எனது நம்பிக்கையாகுமெனவும் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண சபை: பொது மக்கள் சந்திப்புக்கு இரண்டு தினங்கள்

cm.jpgகிழக்கு மாகாண முதலமைச்சரரையும் செயலாளர் மற்றும் அதிகாரிகளையும் சந்திப்பதற்கென இரு தினங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சரின் அலுவலகம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு புதன், வெள்ளிக்கிழமைகளில் பொதுமக்கள் முதலமைச்சரரையும் மற்றும் அதிகாரிகளையும் சந்தித்து தங்களது குறை நிறைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும்.

இவ்வாறு ஒதுக்கப்பட்ட இந்த இரண்டு நாட்களும் பூரணமாக மக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதால் மக்களின் சிரமங்கள் குறைவடையும், இதேவேளை மற்றைய நாட்கள் அதிகாரிகள் தங்களது அலுவலக வேலைகளை மேற்கொள்வதற்கு இலகுவாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

தீவிரவாதிகளின் புகலிடம் பாகிஸ்தான்: பிரதமர் மன்மோகன் சிங்

singh.jpgமும்பையில் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகளின் தொடர்பு நிச்சயம் உள்ளது. அவர்களின் உதவி இல்லாமல் தீவிரவாதிகளால் இந்த செயலை செய்திருக்க முடியாது. தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் உள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

டெல்லியில் (06) உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான மாநில முதலமைச்சர்கள் மாநாட்டை பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி வைத்தார். இதில் பிரதமர் பேசுகையில், சில பாகிஸ்தான் அமைப்புகள், அதிகாரிகளின் உதவி இல்லாமல் மும்பைத் தாக்குதல் நடந்திருக்க முடியாது. மும்பைத் தாக்குதல் நடந்த விதம், அதில் ஈடுபட்டோர் செயல்பட்ட விதம் ஆகியவற்றைப் பார்க்கும்போது, நிச்சயம் சில பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு அதில் தொடர்பு இருப்பது நிரூபணமாகிகிறது.

தீவிரவாதத்தை ஒரு கொள்கையாகவே பாகிஸ்தான் வைத்துள்ளது. தீவிரவாதிகளின் புகலிடமாக மாறியுள்ளது பாகிஸ்தான். அதேபோல வடகிழக்கில் ஊடுறுவும் தீவிரவாதிகள் நமக்கு அருகாமையில் உள்ள இன்னொரு நாட்டிலிருந்துதான் (வங்கதேசம்) வருகின்றனர். அந்த நாடு, தீவிரவாதிகளுக்கு தொடர்ந்து புகலிடமாக திகழ்கிறது.

நமது அண்டை நாடுகளில் தீவிரவாதத்திற்கு ஆதரவான நிலை நிலவுகிறது. சில நாடுகளில் நிலைமை சரியில்லை. தீவிரவாதிகளை அவர்கள் கட்டுப்படுத்துவதில்லை. மும்பை போன்ற தீவிரவாத செயல்களை தடுப்பதற்கு நிரந்தரமான நெருக்கடி நிலை நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது. நமது புலனாய்வு அமைப்புகளுக்கிடையே தகவல் பரிமாற்றம் அவசியமானது, முக்கியமானதாகும் என்றார் மன்மோகன் சிங்.

ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்கள் நடத்துவது நிறுத்தப்பட்டுள்ளது

batti-mayer.jpgமட் டக்களப்பு மாவட்டத்தில் ஞயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புக்களை நடத்துவது நிறுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் கடந்த இரண்டு நாள் இடம்பெற்ற இந்து இளைஞர் பயிற்சி முகாமில் பங்குபற்றிவர்களுக்கு  சான்றிதழ் வழங்கும் நிகழ்வு  இடம்பெற்றது.
 
இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் 174 அறிநெறி பாடசாலைகள் இயங்குகின்றன. ஞாயிற்று கிழமைககளில் தனியார் வகுப்புக்கள் இடம்பெறுவதால் அறநெறி பாடசாலைகளுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைவடைவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

‘தெய்வேந்திரமுனை-பருத்தித்துறைவரை இலங்கை இப்போது ஒன்றாகிவிட்டது’- அமைச்சர் மைத்திரிபால

maithiri-pala.jpgகிளிநொச்சியைக் கைப்பற்றியதன் மூலம் பல உயிர்களைப் பலி கொண்ட புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஆட்சியை புல்டோஸரைக் கொண்டு தகர்த்து தெய்வேந்திரமுனையிலிருந்து பருத்தித்துறை வரையிலான இலங்கை இப்பொழுது ஒன்றாகி விட்டதாக ஸ்ரீ.ல.சு. கட்சியின் பொதுச் செயலாளரும் விவசாய கமத்தொழிற் சேவை அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஹாரிஸ்பத்துவ ஸ்ரீ.ல.சு.கட்சியின் அதிகாரசபை கூட்டத்தின்போது உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். நுகவெல தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் (ஞாயிறன்று) நடைபெற்ற இக் கூட்டத்திற்கு முன்னாள் மத்திய மாகாண சபை அமைச்சரும் நடைபெறப்போகும் மாகாண சபைத்தேர்தலில் போட்டியிடுபவருமான எதிரிவீரவர்தன (ஐ.ம.சு.மு) தலைமை தாங்கினார். அமைச்சர் தொடர்ந்தும் கூறியதாவது, நாட்டின் ஒரு பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்த புலிகளின் பலத்தை பாதுகாப்புப் படையினர் உடைத்தெறிந்து விட்டனர். இதன் மூலம் தெய்வேந்திரமுனையும் பருத்தித்துறையும் இப்பொழுது இணைக்கப்பட்டுவிட்டது. ஜே. ஆரின் யுகத்தில் பிரபாகரனின் ஆட்சிப்பலம் கிளிநொச்சியில் இருந்துவந்தது.

பிரேமதாஸ, விஜேதுங்க ஆகியோரின் காலப்பகுதியிலும் பிரபாகரனின் ஆட்சி கிளிநொச்சியில் இருந்து வந்தது. சந்திரிகாவின் யுகத்திலும் பிரபாகரனின் ஆட்சி நிலைத்தது. ஆனாலும் மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியின் காலத்தில் பிளவுபட்ட நாடு ஒன்றாகிவிட்டது. இந்த நாட்டில் இரு அரசாங்கங்கள் இருக்க இயலாதென்பதை அன்று எடுத்துக் கூறிய ஜனாதிபதியின் வார்த்தை யதார்த்த நிலைக்கு உள்ளாகிவிட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005ஆம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முன்வந்த பொழுது புதியதோர் நாட்டை உருவாக்கப்போவதாகவே அவர் அப்பொழுது கூறியிருந்தார்.