09

09

தேசம்நெற் – ஒன்றுகூடல்

ThesamNet_Invitationஜனவரி 11 2009
மாலை 3:00 முதல்

ஆர் புதியவனின் ‘ Through The Window ’
உட்பட சில குறும்படங்களும் காண்பிக்கப்படும்.
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

Quakers Meeting House,
Bush Road, Wanstead,
London, E11 3AU.

ஆனையிறவு பிரதேசம் பாதுகாப்பு படையினர் வசம் – ஜனாதிபதி தெரிவிப்பு.

presidentmahinda.jpgபுலிகளின் மற்றுமொரு முக்கிய பிரதேசமாக விளங்கிய ஆனையிறவு பிரதேசத்தை இன்று மாலை  பாதுகாப்பு படையினர் கைப்பற்றி விட்டதாக ஜனாதிபதி தெரிவித்தார். முகமாலை மற்றும் கிளாலி பிரதேசங்களிலிருந்து முன்னேறி வந்த இராணுவத்தின் 53 வது மற்றும் 55 வது படைப்பிரிவினர் ஆனையிறவு பிரதேசத்தை தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இராணுவத்தின் 53 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் கமல் குணவர்தன தலைமையிலான படையினரும், 55 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் பிரசன்ன சில்வா தலைமையிலான படையினருமே ஆனையிரவு நகரையும் அதன் சுற்றுப்புறத்தையும் முழுமையாக கைப்பற்றியுள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை, யாழ். – கண்டி ஏ-9 பிரதான வீதி படையினரின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  23 வருடங்களின் பின்பு யாழ். – கண்டி ஏ-9 பிரதான வீதி முழுவதும் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

சென்னை மாநாட்டில் இலங்கைப் பிரச்சினை குறித்து இந்தியப் பிரதமரும் கலைஞரும் மௌனம்

singh.jpgசென் னையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், காஸாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலினால் அப்பாவிப்பொதுமக்கள் கொல்லப்படுவது குறித்து கவலைதெரிவித்தபோதும் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து அவர் எதுவும் பேசாமல் மௌனம் காத்தார்.  இந்த விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் கருணாநிதியும் இலங்கை பிரச்சினை பற்றி மௌனம் சாதித்தார்.

நந்தம்பாக்கத்தில் நடைபெறும் வெளிநாட்டுவாழ் இந்தியர் விழாவை முறைப்படி ஆரம்பித்துவைத்து பேசிய பிரதமர் மன்மோகன் சிங், காஸா பகுதியில் பாலஸ்தீன அப்பாவிகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து கவலை தெரிவித்தார். பாலஸ்தீன பிரச்சினையில் இந்தியா பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த பகுதியில் அமைதி திரும்ப வேண்டும் என்றும் அவர் கூறினார். எனினும் இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றி எதுவும் அவர் குறிப்பிடவில்லை. அதே போல முன்னதாக உரையாற்றிய தமிழக முதல்வர் கருணாநிதியும் இலங்கை பிரச்சினை பற்றி குறிப்பிடவில்லை.

எம்.டி.வி தொலைக்காட்சி நிலையத் தாக்குதல் – சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது

sirasa-02.jpgஎம்.டி.வி தொலைக்காட்சி நிலையத் தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவரை மகரகம பொலிஸாரால் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ‘ரஞ்சித் குணசேகர’ தெரிவித்துள்ளார். 

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் கோட்டே நகரசபையின் ஐ.தே.க. உறுப்பினர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக அறிய வருகிறது .கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் ‘டிபென்டர்’ வாகனம் ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லசந்த படுகொலை; அரசு மீது எதிரணி குற்றச்சாட்டு

lasantha-02.jpgஊடக வியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையின் சூத்திரதாரி அரசாங்கமேயெனக் குற்றம் சாட்டியிருக்கும் பிரதான எதிர்க்கட்சிகள், அனைத்து ஊடகங்களும் ஒன்றுபட்டு குறைந்தபட்சம் இரண்டு நாட்களுக்காவது பகிஷ்கரிப்பை மேற்கொண்டு எதிர்ப்பை வெளிக்காட்ட முன்வர வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளன. 

லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையையடுத்து எதிரணிக் கூட்டமைப்பின் அவசர செய்தியாளர் மாநாடு நேற்று வியாழக்கிழமை மாலை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற போது கட்சிகளின் தலைவர்கள் தமது கடும் கண்டனங்களை வெளியிட்டனர்.

இங்கு கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்ததாவது; ”நாட்டில் ஜனநாயகம் தோல்வி கண்டிருப்பதன் அடையாளமாகவே லசந்தவின் படுகொலை காணப்படுகின்றது. விடுதலைப்புலிகள் அன்று நடத்திய படுகொலைகளைப் போன்றே இன்று மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் தென்னிலங்கையில் நடத்திக் கொண்டிருக்கின்றது. 2009 ஆம் ஆண்டு பிறந்த கையோடு எம்.ரி.வி. நிறுவனம் தீக்கிரையாக்கப்பட்டது. மூன்றாவது நாளில் ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவற்றின் பின்னணியில் அரசாங்கம் காணப்படுவதை உறுதிபடத் தெரிவிக்கின்றோம். சில அமைச்சர்களுக்கு இந்தச் சம்பவங்களுடன் நேரடித் தொடர்பு உண்டு என்பதை தெரிவிக்க நாம் பயப்படவில்லை.

அரசாங்கத்தின் பொலிஸ் விசாரணைகளில் நாட்டு மக்கள் நம்பிக்கை வைக்கவில்லை. சர்வதேச விசாரணையை கோர விருக்கின்றோம். அத்துடன் சர்வதேச ஊடக அமைப்புகள் அனைத்தையும் வரவழைத்து உண்மை நிலைகளை கண்டறியுமாறு கேட்கவிருக்கின்றோம்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது; ”லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையோடு ஊடக அடக்கு முறை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஊடக அடக்குமுறை மோசமான கட்டத்தை அடைந்துள்ளது. அரச பயங்கரவாதத்துக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்று பட வேண்டிய அவசரம் இன்று ஏற்பட்டுள்ளது.

லசந்தவை படுகொலை செய்தது ராஜபக்ஷ அரசாங்கம் தான் என்பது உலகறிந்த விடயமாகும். இது திட்டமிட்டுச் செய்யப்பட்ட படுகொலையாகும். அனைத்து எதிர்க்கட்சிகளும் இந்த விடயத்தில் ஒன்றுபட்டு குரல் எழுப்ப வேண்டும். ஜே.வி.பி., தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும் அழைத்துள்ளோம்.  சிவராம் தொடங்கி இதுவரையில் 17 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டு விட்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களான ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம், மகேஸ்வரன் போன்ற அரசியல்வாதிகள் கொலை செய்யப்பட்ட அதேபாணியில் தான் ஊடகவியலாளர்களும் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஊடகவியலாளர்கள் கொலை விவகாரத்தின் அண்மைய வரலாற்றில் ஈராக்குக்கு அடுத்த படியாக இலங்கை காணப்படுகின்றது. மிக விரைவில் ஈராக்கைப் பின்தள்ளி இலங்கை முன்னணிக்கு வரும் நிலையே காணப்படுகிறது?? எனவும் ஹக்கீம் கூறினார்.
 

கிளேமோர் குண்டுத் தாக்குதல் 7 பேர் பலி

morawawa_.jpg
திருகோணமலை மாவட்டத்திலுள்ள மொரவேவா நெலுவ பிரதேசத்தில் கிளேமோர் குண்டுத் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகத் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இத்தாக்குதலில் மூன்று விமானப்படை அதிகாரிகளும் 4 பொதுமக்களும் பலியாகியுள்ளனர் எனவும் 6 பேர் காயமடைந்துள்ளதாகவும்  விமானப்படையின் டிரக் வண்டி ஒன்றை இலக்குவைத்தே இக்கிளேமோர் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

94 லொறிகளில் உணவுப் பொருட்கள் அனுப்பி வைப்பு

aid-loryes1712.jpgஉலக உணவுத் திட்டம் மற்றும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரினால் அனுமதிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் 94 லொறிகளில் நேற்று வியாழன் காலை வன்னிக்கு கொண்டு செல்லப்பட்டன. உலக உணவுத்தாபனம் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு 54 லொறிகளில் 600 மெற்றிக்தொன் பொருட்களை அனுப்பிவைத்துள்ளது. வவுனியா தேக்கம்காடு களஞ்சியத்திலிருந்து இராணுவத்தின் பாதுகாப்புடன் லொறிகள் புறப்பட்டன.

ஓமந்தையிலிருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் புதுக்குடியிருப்பு வரை லொறிகளுக்கு பாதுகாப்பு வழங்கியதென தெரிவிக்கப்படுகின்றது. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரினால் அனுமதிக்கப்பட்ட சுமார் 300 மெற்றிக்தொன் உணவுப் பொருட்களும், மரக்கறிகளும் 40 லொறிகளில் அனுப்பி வைக்கப்பட்டன. இவை ஓமந்தை சோதனைச்சாவடியிலிருந்து புறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிளிநொச்சி நகரம் பாதுகாப்புப் படையினரிடம் வீழ்ந்த பின்னர் வன்னிக்கு புறப்பட்ட முதலாவது உணவு லொறி தொடரணி இதுவாகும். புளியங்குளம் வீதி வழியாக ஒட்டிசுட்டான் சென்று தர்மபுரம் புதுக்குடியிருப்பு பகுதிக்கு உணவு லொறிகள் சென்றன.

ஈழத்தமிழர்கள் யாருமற்ற அநாதைகள் அல்ல; இன்னல் ஏற்பட்டால் 7 கோடி தொப்புள் கொடி உறவுகள் குரல் கொடுப்பர் – புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர்

nadesan.jpgஈழத்தமிழர்கள் யாருமற்ற அநாதைகள் அல்லர். அவர்களுக்கு இன்னல்கள் ஏற்பட்டால் தொப்புள்கொடி உறவுகளான ஏழு கோடி தமிழர்கள் தமிழகத்திலிருந்து குரல் கொடுப்பார்கள் என்ற செய்தியே இலங்கை அரசிற்கும் இந்த உலகத்திற்கும் முக்கிய செய்தியாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது என்று விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். தமிழகத்திலிருந்து வெளிவரும் ஜுனியர் விகடன் வாரமிருமுறை இதழுக்கு அவர் அளித்த நேர்காணல் வருமாறு;

பத்தாண்டுகளாக உங்கள் கட்டுப்பாட்டில் இருந்த கிளிநொச்சி கடைசியில் இலங்கையின் வசம் போய்விட்டது. புலிகளுக்கு பின்னடைவுதானே…?

கிளிநொச்சி இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது முதல் தடவையல்ல பல தடவைகள் இராணுவத்திடமிருந்து கிளிநொச்சியை நாம் மீட்டதுமட்டுமல்ல கட்டுப்பாட்டுக்குள்ளும் நீண்ட காலம் வைத்திருந்துள்ளோம். இதுதான் வரலாறு. நாம் இதனைப் பின்னடைவாகப் பார்க்கவில்லை.

தற்போது நடந்து வரும் போரில் விடுதலைப் புலிகள் சில இடங்களில் எதிர்த்தாக்குதல் நடத்தாமல் பின்வாங்கி போகிறார்களே ஏன்…?

யுத்தத்தில் இழப்புக்களை குறைப்பதற்காக பின்வாங்குவதென்பது தந்திரோபாயம்.

இந்தப் போரால் என்ன சாதிக்க நினைக்கிறது இலங்கை அரசு?

முழுத்தமிழ் தேசிய இனத்தையும் பூண்டோடு அழிக்கவே இலங்கை அரசு நினைக்கின்றது. ஈழத் தமிழர்கள் யாருமற்ற அநாதைகள் அல்லர் என்பதையும் ஈழத் தமிழர்களுக்கு இன்னல்கள் ஏற்பட்டால் தொப்புள்கொடி உறவுகளான ஏழு கோடி தமிழர்கள் தமிழகத்திலிருந்து குரல் கொடுப்பார்கள் என்ற செய்தியை இலங்கை அரசிற்கும் உலகத்திற்கும் முக்கிய செய்தியாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது.

பிரபாகரனின் கனவு நகரமாக உருப்பெற்ற கிளிநொச்சி சிதைந்து தகர்க்கப்பட்டதில் உங்களுக்கு வருத்தம் இல்லையா…?

வருத்தம்தான். கட்டடங்கள் பாதிக்கப்பட்டனவே ஒழிய விடுதலைக்கான எமது கதவுகள் தகர்க்கப்படவில்லை. மீளவும் இழந்த பிரதேசங்களை கைப்பற்றி கட்டிடங்களை உருவாக்குவோம். ஆனால் காவல்துறை, வங்கி, நிதித்துறை என்பன இடம்பெயர்ந்த நிலையில் இயங்கி வருகிறது என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

கிளிநொச்சியில் இருந்த மக்கள் எல்லாம் இப்போது எங்கே இருக்கிறார்கள்?

அவர்கள் அனைவரும் வன்னிப்பெரு நிலப்பரப்பில் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து உள்ளனர். எமக்கு சாதகமாக சூழல் ஏற்படும்பொழுது கிளிநொச்சியை மீளவும் கைப்பற்றி மக்களை குடியேற்றுவோம்.

புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலப்பரப்பில் தற்போதுள்ள நிலைமை என்ன?

எம்முடைய மக்கள் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகளுக்கும் இடம்பெயர்வுகளுக்கும் முகங்கொடுத்த நிலையில் இழந்த பிரதேசங்களை மீளக்கைப்பற்ற வேண்டும் என்ற மனோநிலையில் வாழ்ந்து வருகின்றனர். இதற்காக சகல மக்களும் அளப்பரிய தியாகங்களையும் அர்ப்பணிப்புகளையும் நல்கி வருகின்றனர்.

புலிகளின் தலைமை மற்றும் புலிகளின் மனவுறுதி குறித்து வரும் செய்திகள் பற்றி…?

இந்த விடுதலைப் போராட்டம் ஒரு மக்கள் விடுதலைப் போராட்டமாக வளர்ச்சிபெற எம்முடைய மனவலிமையே காரணம். இந்த மனவலிமையே கடந்த முப்பது வருடங்களாக இராணுவத்துடன் வீராவேசத்துடன் நாங்கள் போரிடக் காரணம்.

புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் இராணுவத்தின் பிடியில் போனது அவர்களுக்கு பலம் என்பதை ஒத்துக்கொள்கிறீர்களா?

இலங்கை ஒரு அரசு. அதற்கு பல நாடுகள் இராணுவ பொருளாதார உதவிகளை நல்கி வருகின்றன. நாம் ஒரு விடுதலை இயக்கம். தமிழ் தேசிய இனத்தின் எண்ணிக்கை சிங்கள தேசிய இனத்தின் எண்ணிக்கையோடு ஒப்பிடும் போது சிறியதே. எம்முடைய மக்களின் பலத்துடனும் உலகத்தமிழ் இனத்தின் தார்மீக ஆதரவுடனும் இந்த விடுதலைப் போராட்டம் நடைபெற்று வருகின்றது. சமர்க்களங்களில் இடங்கள் பறிபோவதும் மீளநாம் கைப்பற்றுவதும் வழமை.

புலிகள் மீதான தடையை அகற்றி, விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும் என்கிறீர்கள். இது நடக்கக்கூடியதா?

உலகத் தமிழினம் ஒன்றுபட்டு எமது விடுதலைப் போராட்டத்திற்காக நல்கிவரும் ஆதரவு, எதிர்காலத்தில் இது சாத்தியம் என்பதை காட்டுகிறது.

புலிகளைவிட இலங்கை அரசு மீது இந்தியாவுக்கு நேசம் அதிகமாக இருக்கிறதே…?

இது எமக்கு மிகவும் மனவேதனையைத் தருகின்றது. இந்தியாவின் உண்மையான நண்பர்கள் தமிழ் மக்கள் தான் என்பதனை இந்திய அரசு விளங்கிக் கொள்ளவேண்டும் என்ற உண்மையை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

இலங்கையோடு பிற நாடுகள் கைகோர்த்துக் கொண்டு போர் நடத்தி வருகிறது என்று சொல்லப்படுகிறதே?

இது முற்றிலும் உண்மை. அவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து கப்பல் கப்பலாக ஆயுதங்கள் வந்த வண்ணம் உள்ளன. இதை கொழும்பில் உள்ள ஊடகங்களே உறுதிப்படுத்துகின்றன.

இலங்கைப் பிரச்சினையில் இந்தியாவின் தலையீடு எந்த வடிவில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

இலங்கை அரசுக்கு இராணுவ உதவிகளை நிறுத்தி எம்முடைய மக்களின் விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்கவேண்டுமென எதிர்பார்க்கிறோம்.

இலங்கை அரசின் வானூர்தி குண்டு வீச்சுகள், ஏறிகணைத் தாக்குதல்கள் அதிகமாகி வருகிறதே… இதில் இருந்து மக்கள் எப்படித் தங்களைத் தற்காத்து கொள்கிறார்கள்?

முப்பது வருடகாலமாக எம்முடைய மக்கள் வானூர்தி குண்டு வீச்சுக்களுக்கும் எறிகணை வீச்சுக்களுக்கும் பாரிய இராணுவ நடவடிக்கைகளுக்கும் முகங்கொடுத்த வண்ணமே வாழ்ந்து வருகின்றனர். அரசின் கொடிய தாக்குதல்களுக்கு இலக்காகும் பொழுது தம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்பதில் மக்களுக்கு நிறைய அனுபவங்கள் உண்டு. போராட்டமே வாழ்வாக மாறிவிட்ட எம் மக்கள் சிறு குழந்தைகளிலிருந்து முதியோர் வரை தம்மை தற்காத்துக்கொள்வதில் தேர்ச்சிபெற்று வருகின்றனர். உலக அளவில் தடைசெய்யப்பட்ட கிளஸ்டர் குண்டுகளையே அரசு எம்மக்கள் மீதான தாக்குதல்களுக்கு பயன்படுத்தி வருகின்றது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்கிறேன்.

தமிழக மக்கள் அனுப்பிய நிவாரணப் பொருட்கள் நேர்மையான முறையில் விநியோகிக்கப்பட்டதா?

தமிழக மக்களால் அனுப்பப்பட்ட உணவுப் பொருட்களும் உடைகளும் எம்முடைய பிரதேசத்தில் செயற்பட்டுவரும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன. முழுமையாக நேர்மையான முறையில் பொருட்களின் விநியோகம் இருக்கிறது. தொப்புள்கொடி உறவுகளான தமிழக மக்களின் இவ்வுதவி எமது மக்களின் மனங்களில் பசுமரத்தாணி போல பதிந்துள்ளது.

மரண வீட்டைப் போல காணப்பட்ட பாராளுமன்றம்

sl-parlimant.jpgஇன்று பாராளுமன்றம் 45 நிமிடங்களே கூடியது. பாராளுமன்றம் இன்று கூடிய போது அழுகுரல்களும்,  கூக்குரல்களும், ‘ஊ’ சப்தங்களுமே முக்கியத்துவம் பெற்றிருந்தன. பாராளுமன்றத்தில் மத்தியில் அமர்ந்திருந்த ஐக்கிய தேசியக் கட்சியினர் கருப்பு மற்றும் சிவப்பு துணிகளை கட்டியிருந்தனர். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சிவப்பு நிற துணியினால் வாயை மூடிக்கட்டியிருந்தார். அரசாங்கக் கட்சி அமைச்சர்கள் சபையில் பேச எழுந்தநேரத்தில் “ஐயோ கொலைகாரர்களே” என்று கூறிக்கொண்டு மரண விட்டில் அழுவதைப்போல அழுதனர்.

எதிர்க் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த அரசுக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்தது. பாராளுமன்றத்துக்குள் எதிர்க் கட்சியினரும்,  ஆளும்கட்சியினரும் அமைதியை கடைபிடிக்காதமையினால் இன்றைய கூட்டத் தொடர் 45 நிமிடங்களில் முடிவடைந்தது. இச்சந்தர்ப்பத்தில் எதிர்க் கட்சித் தலைவர் சண்டை லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை குறித்தும்,  சிரஸ ஊடக நிலைய தாக்குதல் குறித்தும் சர்வதேச ரீதியில் விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார். அரசுக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.   

‘ஐ.தே.க. தப்புவதற்கு எத்தனிக்கிறது’- நிமல் சிறிபால டி சில்வா

nimal-sripala.jpgஅரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்த பின்னரும் ஐ. தே. க அதிலிருந்து தப்பிச் செல்ல எத்தனிக்கிறதென அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவந்த பின்னர் அதனை நாம் சாதாரணமாக கருதவில்லை. அதனை அரசுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள பாரதூரமான விடயமாக கருதியதுடன், அதற்கு முக்கியத்துவம் அளித்தே ஒழுங்குப் பத்திரத்திலும் சேர்த்துள்ளோம். ஒழுங்கு பத்திரத்துள் சேர்க்கப்பட்டதன் பின்னர் இது ஐ.தே.க வுடையது என்று கூறமுடியாது. முழு சபைக்குமே சொந்தமானது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த விடயத்தை நன்கு ஆராய்ந்த பின்னரே சபாநாயகரும் அதற்கான தீர்ப்பையும் வழங்கினார். இருப்பினும் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஐ.தே.க தோல்வியை சந்திக்கும் என்பதுமட்டும் உண்மை. தொடர்ந்தும் ஐ.தே.க தோல்விகளையே சந்தித்து வருகிறது என்றும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பாக எப்போது விவாதம் நடத்தினாலும் தாம் ஆயத்தமாக இருப்பதாக ஜே. வி. பியினர் தெரிவித்தனர். ஐ.தே.கவினருக்கும் அரச தரப்பினருக்கும் இடையே இவ்விடயம் தொடர்பாக நீண்டநேரம் வாக்குவாதங்கள் ஏற்பட்டன.