பாராளுமன்ற விவாதங்களில் இனி கலந்து கொள்வதில்லை எனக் கூறி ஐ. தே. க. உறுப்பினர்கள் நேற்று சபையிலிருந்து வெளியேறிச் சென்றனர். அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்தது ஐ. தே. க. தலைமையிலான எதிர்க்கட்சியினரே. விவாதம் நடத்த வேண்டிய நாட்களை தீர்மானிக்க வேண்டியதும் எதிர்க்கட்சியினரே. எனினும் ஆளும் கட்சியே இதனைத் தீர்மானிக்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே, விவாதங்களில் கலந்து கொள்வதில்லை என ஐ. தே. க. தீர்மானிப்பதுடன் சபையிலிருந்து வெளிநடப்பும் செய்கிறது எனக் கூறிய ஜோசப் மைக்கல் பெரேரா சபையிலிருந்து வெளியேறிச் சென்றார்.
அவரைத் தொடர்ந்து ஐ. தே. க. உறுப்பினர்கள் வெளியேறிச் சென்றனர். நேற்றுக் காலை பாராளுமன்றம் சபைநாயகர் வி. ஜே. மு. லொக்கு பண்டார தலைமையில் கூடியது. சபையின் வழமையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எதிர்க்கட்சியினர் கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் நாளை வெள்ளிக்கிழமை (இன்று) நடைபெறும் என சபாநாயகர் சபையில் அறிவித்தார்.
ஆளும் தரப்பு, எதிர்த்தரப்பு இருவரையும் ஒரு இணக்கப்பாட்டுக்குள் கொண்டு வந்து வியாழன், வெள்ளி ஆகிய இரு தினங்களிலும் விவாதத்தை நடத்துவதற்கு முயற்சிகள் செய்த போதும் முடியாமல் போனது. நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இரண்டு தினங்கள் நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சியினர் கேட்டுக் கொண்டதுடன் அடுத்த வாரம் பாராளுமன்ற அமர்வுகள் இல்லாத இரு தினங்களில் விசேடமாக பாராளுமன்ற அமர்வுகளை ஏற்படுத்தி விவாதம் நடத்துமாறும் எதிர்க்கட்சி கேட்டுக் கொண்டது. அதற்கும் ஆளும் தரப்பு இணக்கம் தெரிவிக்கவில்லை என்றும் சபாநாயகர் தெரிவித்ததுடன் இன்று வெள்ளிக்கிழமை விவாதம் நடத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.
இதனை ஆட்சேபித்த ஜோசப் மைக்கல் பெரேரா இவ்விவாதத்துக்கு ஐ. தே. க. ஆயத்தமாக இல்லை என்றும் இன்று விவாதம் நடத்தப்படுமானால் நள்ளிரவு வரை நடத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். அத்துடன் உடனடியாக எமது எதிர்க்கட்சி உறுப்பினர்களை அவசரமாக அழைக்கவும் முடியாது. அவர்கள் வெவ்வேறு கடமைகள் நிமித்தம் சென்றுள்ளார்கள் என்றும் குறிப்பிட்டார்.