“கோல் டன் கீ’ கடனட்டை நிறுவனம் தொடர்பாக ஜே.வி.பி.யின் பாராளுமன்ற குழுத்தலைவரான அநுரகுமார திஸாநாயக்க எழுப்பிய கேள்வியால் புதன்கிழமை சபையில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் விசேட அறிக்கையொன்றை விடுத்து பேசிய அநுரகுமார திஸாநாயக்க பதிவு செய்யப்படாத நிதி நிறுவனங்களின் செயற்பாடுகளை நிறுத்த மத்திய வங்கி எடுத்திருக்கும் நடவடிக்கை என்ன? கோல்டன் கீ கடனட்டை நிறுவனத்தின் வைப்பீட்டாளர்கள் மற்றும் ஊழியர்கள் தொடர்பாக அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை என்ன? போன்ற கேள்விகளை எழுப்பியிருந்தார். கேட்கப்பட்ட கேள்விகள் தொடர்பாக அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக சுட்டிக் காட்டி பிரதி நிதியமைச்சர் கேள்விக்கு சுருக்கமான பதிலை வழங்கியதுடன், விரிவான பதிலை அறிக்கையாக சபைக்கு ஆற்றுப் படுத்துவதாகவும் கூறினார்.
இதேநேரம், பிரதி நிதியமைச்சரிடம் மீண்டுமொரு விளக்கத்தை கோரிய அநுரகுமார திஸாநாயக்க எம்.பி., “நிதி நிறுவனங்களில் மோசடி ஏற்பட்டு மூடி விட்ட பின்னர், அந்த நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டதொன்றல்லவென மத்திய வங்கி கூறுகிறது. ஏற்கனவே சக்வித்தி மோசடியின் போது மத்திய வங்கி இதையே கூறியது. தற்போது, கோல்டன் கீ கடனட்டை நிறுவனம் மூடப்பட்டதும் இதையே மத்திய வங்கி கூறுகிறது. 2006 ஆம் ஆண்டில் பொது நிறுவனங்கள் பற்றிய பாராளுமன்றக் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட போதே, பதிவு செய்யப்படாத நிதி நிறுவனங்கள் பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க மத்திய வங்கியின் ஆளுநரான அஜித் நிவாட் கப்ரால் 2 மாதகால அவகாசம் கோறியிருந்தார். ஆனால் இதுவரை அவ்வாறான அறிக்கை எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை’ என்று சுட்டிக்காட்டினார்.
எனவே, கோல்டன் கீ விவகாரத்தில், வைப்பீட்டாளர்களும் அந்த நிறுவனத்தின் ஊழியர்களும் அத்துடன் வங்கியாளர்களும் பாதிக்கப்பட்டிருப்பதால் இந்த விடயம் தொடர்பில் மத்திய வங்கி மற்றும் அரசாங்கத்தால் எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் என்னவென்று அது பற்றிய பதிலை மட்டும் சபைக்கு தெரிவிக்குமாறு பிரதி நிதியமைச்சரிடம் கோரினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய பிரதி நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, தான் ஏற்கனவே பதிலை சபைக்கு சமர்ப்பித்து விட்டதாகக் கூறியதுடன் மத்திய வங்கியால் பதிவு செய்யப்பட்ட நிதி நிறுவனங்களின் பெயர் விபரங்கள் வெளியிடப் பட்டதன் மூலம், ஏனையவை பதிவு செய்யப்படாத நிறுவனங்களாகவே பொருள்படுமென சுட்டிக் காட்டினார். பதிவு செய்யப்படாத நிறுவனங்களின் பெயர் விபரங்களை வெளியிட சென்று, அதில் ஏதாவதொரு பதிவு செய்யப்படாத நிறுவனத்தின் பெயர் உள்வாங்கப்படவில்லையெனில் அந்த நிறுவனம் பதிவு செய்த நிறுவனமாக அர்த்தப்படுத்தப்பட்டு விடுமென்று பிரதி அமைச்சர் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். எனினும் அந்த பதிலில் திருப்திப் படாத அநுரகுமார திஸாநாயக்க, கோல்டன் கீ விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் என்னவென்பதை மட்டும் பதிலாக தருமாறு கோரினார்.