10

10

அம்பாறை எங்கும் பெருமழை இயல்பு நிலை பாதிப்பு- நெல்வயல்கள் வெள்ளத்தில்

கடந்த மூன்று தினங்களாக அம்பாறை மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழை காரணமாக மாவட்டத்தின் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் தாழ்ந்த பிரதேசங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. அறுவடைக்குத் தயாரான நிலையிலிருந்த வேளான்மைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

நேற்று வெள்ளிக்கிழமை தொடர்ச்சியாகப் பெய்த அடைமழை காரணமாக பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டது. அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் இவ் அடைமழை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் அரசாங்க உத்தியோகத்தர்கள், முதலியோர் பாடசாலை மற்றும் அலுவலகம் செல்வதில் கடும் அசெளகரியங்களுக்கு முகம் கொடுத்தனர். அறுவடைக்குத் தயாரான நிலையிலிருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. வீதிகள் யாவும் நீர் நிரம்பி போக்குவரத்து செய்ய முடியாதுள்ளது. மழை தொடர்கின்றது.

இம்முறை பெரும்போக அறுவடைப் பணிகள் அறுவடை இயந்திரங்களின் உதவியுடன் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்குத் தேவையான புத்தம்புதிய அறுவடை இயந்திரங்கள் இந்தியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. அம்பாறை மாவட்டத்தில் அறுவடைப் பணிகளுக்கு தேவையான மேலதிக இயந்திரங்களையும், தொழிலாளர்களையும், பிற மாவட்டங்களிலிருந்து பெறுவதற்கான நடவடிக்கைகளிலும் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

பெரும்போக விவசாயிகளுக்கு இம் முறை சிறந்த விளைச்சல் கிடைத்து வருகின்றது. அறுவடையின் மூலம் கிடைக்கும் நெல்லை தனியார் வியாபாரிகள் கொள்வனவு செய்து வருகின்றனர். பெரும்போக அறுவடைப் பணிகள் ஆரம்பித்ததையடுத்து நெல் மற்றும் அரிசி விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

இதேவேளை, நாவிதன் வெளி பிரதேசசெயலகப் பிரிவுக்குட்பட்ட சடயந்தலாவ கண்ட நெற் பயிர்கள் நீரின்றி கருகும் நிலையில் அந்த விவசாயிகளுக்கு இம் மழை மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. நேற் றைய தொடர் மழை காரணமாக கல்முனைக்குடி, சாய்ந்தமருது, பாண்டிருப்பு கிராமங் களில் உள்ள வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. மற்றும் சுனாமி வீடமைப்பு நிர்மாணப் பணிகளும் மழையினால் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.

புலிகளிடம் பணம் வாங்கினேனா?- பாரதிராஜா ஆவேசம்

bharathiraja.jpgவிடு தலைப் புலிகளிடம் நாங்கள் பணம் வாங்கியதாக எந்த அரசியல்வாதியாவது நிரூபிக்க முடியுமா என சவால் விட்டுள்ளார் இயக்குநர் பாரதிராஜா. பாரதிராஜா தலைமையில் ராமேஸ்வரத்தில் இலங்கைத் தமிழர் ஆதரவுப் போராட்டம் தொடங்கிய பிறகு தமிழகத்தில் உணர்ச்சிமயமான பல காட்சிகள் அரங்கேறின. அதுவரை மௌனம் காத்தவர்கள் கூட பாரதிராஜாவுக்குப் பிறகுதான் வெளிப்படையாக இலங்கைத் தமிழருக்கு ஆதரவாகப் பேசத் தொடங்கினர்.

ஆனால் இங்குள்ள சில அரசியல்வாதிகள், பாரதிராஜாவும் மற்றவர்களும் புலிகளிடம் பணம் வாங்கிக் கொண்டுதான் இப்படி ஆதரவாகப் போராட்டங்கள் நடத்தி வருவதாகக் குற்றம்சாட்டினர். இதனால் கொதித்துப் போன பாரதிராஜா, நான் பணம் வாங்கியதாக எந்த அரசியல் தலைவராவது நிரூபிக்க முடி்யுமா? இதை நான் ஒரு சவாலாகவே விடுகிறேன். முடிந்தால் நிரூபித்துக் காட்டுங்கள் பார்க்கலாம் என்று ஆவேசமாகக் கூறியுள்ளார்.

600 மில்லியன் ரூபா மானியத்தை இராணுவத்தினருக்கு பயன்படுத்துமாறு கூறியிருக்கும் ஆட்டோ உரிமையாளர்கள்

ranjith-shiyambalapitiya.jpgமுச் சக்கரவண்டி உரிமையாளர்களுக்கு எரிபொருள் மானியமாக அரசு வழங்க முன்வந்துள்ள 600 மில்லியன் ரூபாவையும் இராணுவத்தினருக்காக பயன்படுத்துமாறு முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாக நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  புதன்கிழமை இடம்பெற்ற தேசத்தை கட்டியெழுப்புவதற்கான வரி அறவீட்டு பிரேரணையில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; முச்சக்கரவண்டி உரிமையாளர்களை அலரிமாளிகையில்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தித்து மானியம் தொடர்பாக அறிவித்த போதே முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினர் இவ்வாறு தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் இந்தச் செயலை ஐ.தே.க.வினர் முன் மாதிரியாக பின்பற்றவேண்டும். பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் தமக்கான எரிபொருள் மானியத்தையே வழங்க முன்வந்துள்ள போது ஐ.தே.க.வினர் கிளிநொச்சியை மீட்ட வெற்றியைக் கொண்டாட எரிபொருள் விலையை குறைக்குமாறு கோருகின்றனர். முச்சக்கரவண்டி உரிமையாளர்களின் மானியத்தை திரும்பப்பெற ஜனாதிபதி விரும்பவில்லை. இராணுவத்தினருக்காக இந்த தியாகத்தை செய்ய விரும்பினால் விரும்பியவர்கள் அதனை வழங்கலாமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஐ.தே.க.வினர் யுத்தம், பொருளாதாரம் ஆகிய இரு கோரிக்கைகளை முன்வைத்தே அரசுக்கெதிராக பிரசாரம் செய்தனர். இப்போது யுத்தத்தைப் பற்றி அவர்களால் பேசமுடியாது என்பதால் பொருளாதாரத்தைப் பற்றி கூச்சலிடுகின்றனர். முச்சக்கரவண்டி உரிமையாளர்களின் செயலை முன் மாதிரியாகக் கொண்டாவது ஐ.தே.க. திருந்த வேண்டும்.

இலங்கைப் பிரச்சினையில் மத்திய, தமிழக அரசுகள் இரட்டை வேடம்: இல.கணேசன்

மத்திய அரசும், தமிழக அரசும், இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகின்றன என்று பாஜக மாநிலத் தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.

இது குறித்து இல.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசும், தமிழக அரசும் இரட்டை வேடம் போடுகின்றன. தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போர் நிறுத்தத்தை கோரும் தீர்மானத்தை அமல்படுத்த தமிழக முதல்வர் நேரில் சென்று வலியுறுத்தியும் பிரதமர் மவுனம் சாதிக்கிறார். பிரணாப் முகர்ஜி கொழும்பு செல்வார் என அறிவித்து விட்டு இதுவரை செல்லாமல் இருப்பதும், அதை நியாயப்படுத்தி அமைச்சர் டி.ஆர்.பாலுவே அறிக்கை விடுவதும் திமுக மீது சந்தேகத்தை கிளப்புகின்றன.

தங்களது பதவியை தக்க வைத்துக் கொள்ளவும், ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டிலிருந்து தப்பித்துக் கொள்ளவும், சொத்துக்களை காப்பாற்றிக் கொள்ளவும் ஈழத் தமிழரின் உடமையை காவு கொடுக்க திமுக தயாராகிவிட்டது என்பதையே இந்த மெத்தனம் நிரூபிக்கிறது. அதேபோல சிங்கள ராணுவத்துக்கு ஆயுதமும், ஆலோசனைகளையும் பயிற்சியையும் இந்தியா தான் வழங்கி வருகிறது என்கிற குற்றச்சாட்டையும் மத்திய அரசு மறுக்கவில்லை.

சீனாவுடனும், பாகிஸ்தானுடனும் நாம் போரினை சந்தித்த போது இலங்கை அரசு நம்மை ஆதரிக்கவில்லை. ராணுவத் தீர்வு சாத்தியமல்ல என்று இந்தியா உட்பட உலக நாடுகள் எல்லாம் கருத்து சொல்லிய பிறகும் தீர்வு என்ன என்பதைச் சொல்லாமலேயே இனப்படுகொலை நடத்திக் கொண்டிருக்கும் சிங்கள அரசின் அரசே நடத்தும் பயங்கரவாதத்தை கண்டிக்கிறேன். மத்திய, மாநில அரசுகள் தங்களது இரட்டை வேடத்தை கலைத்துவிட்டு இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்தி பேச்சு வார்த்தை துவங்கிட இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும்.

மாறாக இலங்கை அரசு போரைத் தொடருமானால் இந்தியா தனது அணுகுமுறையை மறுபரிசீலனை செய்ய நேரிடும் என எச்சரிக்க வேண்டும். சம உரிமை இலங்கைத் தமிழரது பிறப்புரிமை என்பதை சுட்டிக் காட்டவும், இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதை தடுத்து நிறுத்தவும் மத்திய அரசை வற்புறுத்தி சென்னையில் 12.1.09 திங்கட்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் எனது தலைமையில் நடைபெறும்.

இதற்கு தேசிய செயலாளர் சு.திருநாவுக்கரசர் முன்னிலை வகிப்பார். கட்சியின் அனைத்து முன்னணி நிர்வாகிகளும் இதில் கலந்து கொள்கின்றனர். இதன் காரணமாக சென்னையில் 9ம் தேதி பிஜேபி நடத்த திட்டமிட்டிருந்த ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது. தமிழகத்தில் சரக்குந்துகள் வேலை நிறுத்தம், வாகனங்களுக்கான எரி பொருளை நிரப்ப நீண்ட வரிசை, எரிபொருள் இருப்பு இல்லை என்கின்ற வாசக அட்டைகள் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் தொங்குகின்றது. காரணம் எண்ணெய் வளத்துறையினர் வேலை நிறுத்தம் செய்துள்ளார்கள்.

நம்நாட்டின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்திக் கொண்டிருக்கும் 9 நிறுவனங்களுக்கு நவரத்னா எனப் பெயர் சூட்டி அதற்கான விசேஷ விதிமுறைகளும் பின்பற்றப்பட்டது. அந்த நிறுவனங்கள்தான் அரசுக்கு கோடிக்கணக்கில் லாபம் ஈட்டி வருகிறது. அந்த லாபத்திற்கு நிர்வாகி கள் தொழிலாளர்கள் ஆகியோரும் காரணம் என்பதால் அந்த லாபத்தில் ஓரளவு அவர்களுக்கு ஊதியமாக வழங்கப்படுகிறது.ஆனால் அரசு சமீபத்தில் சம்பள சீர்திருத்தம் குறித்து கணக்கிடும் போது இந்த லாபம் ஈட்டும் நிறு வனங்களுடன் நஷ்டத்தையே சந்தித்துக் கொண்டிருக்கும் நிறுவனங்களையும் சமமாக்கி பரிந்துரைத்தது.

பொதுவாகவே சம்பள சீர்திருத்தம் என்றாலே ஏதேனும் கொஞ்சமாவது சம்பள உயர்வு இருக்கும் என எதிர் பார்ப்பது இயற்கை. விசித்திரமான முறையில் எண்ணெய் நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு சம்பளம் குறைந்துள்ளது. பணிபுரிபவர்கள் மட்டுமல்ல, நிர்வாகமே கூட சம்பள உயர்வு வரும் என எதிர்பார்த்து முன்பணமாக ஒரு தொகையை தந்தது. மாறாக சம்பளம் குறைந்த தால் ஏற்கனவே நிர்வாகமே தந்த பணத்தை ஊழியர்கள் திரும்பக் கட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை கட்டிக் காக்கும் நிறுவனங்களின் அதிகாரி களுக்கு உரிய சம்பளம் வழங்கப் படுதல் அவசியம்; நியாயமும் கூட. மாறாக அவர்கள் வஞ்சிக்கப்படுவார் களானால் தனியார் துறை நிறுவனங் கள் அவர்களது திறமையை பயன் படுத்திக் கொள்ள அதிக சம்பளம் தர காத்துக் கிடக்கின்றன. இதைத்தான் அரசு சார்பான சில பெரியவர்கள் விரும்புகிறார்ளோ என நான் சந்தேகிக்கிறேன். தனியாரிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு அரசின் பொதுத்துறை நிறுவனங்களை அழிக்க முயற்சிக்கும் சிலரது திட்டமோ என சந்தேகிக்கின்றேன்.

எனவே அரசு உடனடியாக போராடும் ஊழியர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி உடனடியாக வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு முயற்சிக்க வேண்டும். மாறாக வேலை நிறுத் தத்தை ஒடுக்க கடுமை தண்டனை வழங்கும் நடவடிக்கைகளை மேற் கொள்வதை வன்மையாக கண்டிக்கிறேன் என்றார்.

தேவையற்ற விதத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பாக். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி நீக்கம்

tajmahal-hotel27112008.jpgபாகிஸ் தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மெஹ்மூட் அலி துர்ரானி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மும்பாய் தாக்குதலையடுத்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையில் பதற்றம் உருவாகியுள்ள நிலையில் இவர் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். ஓய்வுபெற்ற இராணுவ ஜெனரலான துர்ரானியை பிரதமர் யூசுப் ராசா ஹிலானி பதவி நீக்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியமான கருத்துகளைத் தெரிவிக்கும் பொழுது உயர்மட்ட அரசியல் தலைவர்களுடன் கலந்தாலோசிக்காமல் கருத்து வெளியிட்டமைக்காகவே மெஹ்மூட் அலியைப் பணி நீக்கம் செய்துள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

மும்பைத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட அஜ்மல் பாகிஸ்தானைச் சேர்ந்தவரென இந்தியா தொடர்ந்தும் குற்றம் சாட்டி வருவதுடன் அதற்கான ஆதாரங்களையும் பாகிஸ்தானிடம் இந்தியா கையளித்துள்ளது.

ஆனால், இந்தியாவின் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள பாகிஸ்தான், அஜ்மல் பாகிஸ்தானைச் சேர்ந்தவரல்லவெனவும் தெரிவித்து வருகின்றது.  இந்நிலையில், மும்பைத் தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் பாகிஸ்தானைச் சேர்ந்தவரென பாகிஸ்தான் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மெஹ்மூட் அலி துர்ரானி தெரிவித்த சில மணித்தியாலங்களின் பின்னர் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, அஜ்மல் பாகிஸ்தானைச் சேர்ந்தவரென்று பாகிஸ்தானின் தகவல் அமைச்சர் செர்றி ரகுமானும் அறிவித்துள்ளார்.  இவ்விடயம் தொடர்பாக பாகிஸ்தானின் பாதுகாப்பு ஆலோசகர் மெஹ்மூட் அலி துர்ரானி தெரிவிக்கையில்;

மும்பைத் தாக்குலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அஜ்மல் பற்றி பாகிஸ்தானின் சட்ட அமுலாக்க அதிகாரிகள் நடத்திய ஆரம்ப கட்ட விசாரணையில் அவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் தான் என்பது தெரிய வந்துள்ளது.

அவர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் ஒகரா மாவட்டத்திலுள்ள பரித்கோட் கிராமத்தில் பிறந்தவர். அவரது பெற்றோர் அமீர் கசா இலாகி.

விசாரணை அதிகாரிகளிடம் அஜ்மலின் பெற்றோர் கூறும் போது, தங்கள் மகன் அஜ்மல் 4 வருடங்களுக்கு முன்பு வீட்டை விட்டுச் சென்று விட்டதாகவும் அதற்குப் பிறகு இடைப்பட்ட காலங்களில் சில தடவைகள் அவர் தங்களுடன் தொடர்பு கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், மும்பைத் தாக்குதலின் போது ஊடகங்களில் வெளியான புகைப்படங்கள் மூலம் அவரைத் தங்கள் மகன்தான் என்று அடையாளம் கண்டுகொண்டதாகவும் அஜ்மலின் பெற்றோர் கூறியிருக்கிறார்கள்.

இந்த விசாரணை அறிக்கையின் நகல்கள் உள்துறை அமைச்சகத்திடமும் பிரதமர் கிலானியிடமும் சமர்ப்பிக்கப்பட்டு இருக்கிறது. இது பற்றிய முறைப்படியான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஆரம்ப கட்ட விசாரணையில் மும்பையில் தீவிரவாதிகள் தங்களாகவே தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்கள் எனவும் பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைப்புக்கும் அவர்களுக்கும் எந்த விதத் தொடர்பும் இல்லை என்றும் தெரியவந்துள்ளதென தெரிவித்தார்.

இதேவேளை, அஜ்மல்கஸாப் பாகிஸ்தானை சேர்ந்தவர் தான் என்பதை பாதுகாப்பு அமைப்புகள் தனக்கு உறுதிப்படுத்தியுள்ளதாக துர்ரானி தெரிவித்துள்ளார்.