ஆனையிறவைப் படையினர் கைப்பற்றிய வெற்றியானது தமிழ் மக்களுக்குக் கிடைத்த பெரும் வெற்றியாகுமென தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் எம்.பி. தெரிவித்தார். ஆனையிறவைப் படையினர் கைப்பற்றியதையடுத்து அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற இம்மாநாட்டில் முரளிதரன் எம்.பி. தமதுரையில் மேலும் தெரிவித்தாவது, புலி பயங்கரவாதம் தடை செய்யப்பட்டுள்ளது. இது வரை காலமும் அவர்கள் ஜனநாயகத்துக்கு வர சிறந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. அதனை அவர்கள் பயன்படுத்தத் தவறி விட்டார்கள். இத்தடை என்பது வரவேற்கத்தக்கது. ஜனநாயகத்தை நிலைநாட்டுவதில் இது மிகவும் உறுதுணையாக அமையும்.
கிளிநொச்சியைக் கைப்பற்றியபின் புலிகள் தமக்குப் பலம் இருப்பதாகவும், நிலம் இருப்பதாகவும் போலிப் பிரசாரங்களை மேற்கொண்டனர். இதைக் கூறியே நிதி வசூலித்தனர். இது பொய்யாகியுள்ளது. தற்போது ஏ-9 திறக்கப்பட்டதானது குடா நாட்டு மக்கள் பெரும் பலனை அனுபவிக்க வழிசமைக்கும்.
முல்லைத்தீவில் சிக்கியுள்ள மக்களை மீட்பதில் ஜனாதிபதி மிகுந்த அக்கறையுடன் செயற்படுகிறார். விரைவில் முல்லைத்தீவு மீட்கப்பட்டுவிடும். வடக்கு மக்கள் பல வழிகளிலும் பயன்களை அனுபவிக்க முடியும் எனவும் அவர்மேலும் தெரிவித்தார். இராணுவம் ஆனையிறவைக் கைப்பற்றியமை புலிகளுக்கு பேரிழப்பாக உள்ளன. 23 வருட காலத்தின் பிற்பாடு ஏ-9 வீதி திறக்கப்பட்டமை யாழ். குடா நாட்டு மக்களுக்கு சொல்லொண்ணா சந்தோஷத்தினையும் குதூகலத்தினையும் புத்தெழுச்சியையும் உண்டு பண்ணியுள்ளது.
யாழ். குடா மக்கள் தங்களது விவசாய விளை பொருட்களை தகுந்த பெறுமதிக்கு உரிய நேரத்துக்குச் சந்தைப் படுத்தவும் அதிகரித்திருந்த அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கவும் யாழ். மண்ணில் தலைசிறந்த பல்கலைக்கழகம் மீட்சி பெறவும் நீண்ட நாட்களாக ஒடுக்கப்பட்டிருந்த வன்னி மக்களுக்கும் யாழ். குடா மக்களுக்குமான உறவுகள் புதுப்பொலிவுபெறவும் ஒட்டு மொத்தமாக இலங்கையின் பல்வேறு பகுதிகளின் வளங்கள் செழுமையடைய இது வழிகோலியுள்ளது.