13

13

யுத்தமற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்க ஒன்றுபடுவோம்: சேனன்

12309911698101.jpgகாசாவில் இஸ்ரேலிய இரானுவத்தின் தாக்குதலை வன்மையாக கண்டித்து உலகெங்கும் போராட்டங்கள் நடந்துவருகிறது. கடந்த 10ம் திகதி இரண்டாவது முறையாக ஆயிரக்கணக்கானவர்கள் லன்டனில் கூடி இஸ்ரேலிய தூதரகத்துக்கு எதிர்வரை சென்று தமது எதிர்ப்பை தெரிவித்தனர். அக்கூட்டத்தில் வளங்கிய பேச்சின் சுருக்கம்.
——

இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து – கடந்த எட்டு வருடத்துக்குள் – மில்லியன் கணக்கான மக்களை நாம் யுத்தத்துக்கு இழந்துள்ளோம்.

கொங்கோவில் நாலு மில்லியனுக்கும் மேல், ஈராக்கில் ஒரு மில்லியனுக்கும் மேல், டாபூர் சூடானில் அரை மில்லியனுக்கு மேல் என்று உலகெங்கும் யுத்தம் பலிகொண்ட மனித உயிர்களின் எண்ணிக்கையின் தொகை அதிகரித்துகொண்டு செல்கிறது.

தற்போது காசாவில் வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் மக்கள்மேல் கற்பனை பண்ணமுடியாத கொடிய தாக்குதலை பார்க்கிறோம்.  மனிதர் படும் துன்பங்கள் புது எல்லைகளை தாண்டிக் கொண்டிருக்கிறது.

ஏன் இது? ஒரு சொற்ப – ஆயிரக்கணக்கான பணக்கார முதலைகளின் சொத்துக்களை பாதுகாக்கத்தான் இத்தனையும்.

சொத்துக்களை குவித்தலும் அதை பாதுகாத்தலும் முதலாளித்துவத்தின் இயல்பு என்பது எமக்கனைவருக்கும் தெரியும். தமது சொத்துக்களை பாதுகாக்க முதலாளித்துவ வர்க்கம் யுத்தத்துக்கு தாவுவதை வரலாறு முழுக்க நாம் பார்த்துள்ளோம்.

மத்திய கிழக்கில் அமைதி நிலவுவது பற்றி அமெரிக்க – மேற்கத்தேய பணக்கார ஆளும் வர்க்கத்துக்கு எந்த அக்கறையும் இல்லை என்பது ஆச்சரியமான விடயமில்லை. உடனடி தீர்வை எடுக்க அவர்கள் வக்கற்றவர்கள் என்பது எமக்கு நன்றாக தெரியும்.

காசாவில் வறிய மக்கள் கொடூரமாக கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் அதே தருனத்தில் கவலை முக பாவனை காட்டி ‘மனித இனத்துக்கு கவலைப்படுவதாக’ ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கும் அதிகார மூஞ்சிகளை நாம் ஒருபோதும் நம்புவதில்லை.

ஏனெனில் எமக்கு தெரியும் – எம் நலனில் இருந்து அவர்கள் நலன் முற்றிலும் மாறுபட்டது. எண்ணை வள மத்திய கிழக்கின் வளத்தை தமது கட்டுபாட்டில் தொடர்ந்து வைத்திருக்க இஸ்ரேலிய ஆளும் வர்க்க ஆதரவு தமக்கு தேவை என்பதில் அவர்கள் தெட்டதெளிவாக இருக்கிறார்கள். வாடும் வறிய மக்கள் நலன் சார்ந்து அவர்கள் ஒருபோதும் சிந்திக்கப் போவதில்லை. வளங்களை சுறண்டுவது சொத்துக்களை சேர்ப்பது என்பதை மடடும் குறிவைத்து இயங்குவதே அவர்கள் சிந்தனை.

முதலாளித்து பொருளாதாரம் உலகெங்கும் கடும் ஆட்டங்கண்டுள்ள நிலையில் ஆளும் வர்க்கத்தின் கோப நடவடிக்கைகளின் வேகமும் அட்டூளியமும் பல மடங்கு அதிகரிப்பதை நாம் பார்க்கடியதாக இருக்கிறது. பச்சை பொறுக்கித்தனமான செயல்களை – மிக கொடூரமான நடவடிக்கைகளை எந்த வெக்கமும் ஒளிப்பு மறைப்புமின்றி வெளிப்படையாக செய்வதில் ஆளும்வர்க்கத்தின் தெனாவட்டு அதிகரித்திருப்பதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது. தங்களை கேள்வி கேட்க ஆளில்லை – கதைச்சுபேசி சடைஞ்சு எப்பிடியும் தப்பிவிடுவோம் என்ற அபார நம்பிக்கையுடன் அவர்கள் இந்த அட்டூளியங்களில் ஈடுபடுகிறார்கள்.

அடுத்த தேர்தலை வெல்ல வேண்டும் என்ற ஒரு காரணத்துக்காக பல இஸ்ரேலிய பாலஸ்தீன உயிர்களை பலிகொடுக்க தயங்காது நிற்கிறது இஸ்ரேலிய ஆளும் வர்க்கம். உலகெங்கும் வாழும் பெரும்பான்மை மக்களின் கடும் எதிர்ப்பிருந்தும் தான்தோன்றி தனமாக கடும் தெனாவட்டுடன் பட்ட பகலில் பச்சை கொலை செய்கிறது இஸ்ரேலிய ஆளும் வர்க்கம்.

ஆளும்வர்க்கம் உலகெங்கும் இதைதான் செய்துவருகிறது.  அமெரிக்க – மேற்கத்தேய – இஸ்ரேலிய ஆளும் வர்க்கம் கடும் அட்டூளியங்களை செய்தபிறகும் கேட்பாரற்று தப்பிவிடுவதை படிப்பினையாக எடுத்து முன்றாம் உலக நாடுகளை உலுப்பும் ஆளும் வர்க்கங்களும் இதே பாணியை பின்பற்றுகின்றன.

நான் இலங்கையில் இருந்து வந்தவன். காசாவை இஸ்ரேலிய இராணுவம் கடுமையாக தாக்கும் இதே தருனத்தில் இலங்கை இராணுவமும் வடக்கில் கடும் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. தற்போது இராணுவம் நுழைந்த பகுதியில் வாழ்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து விட்டனர். அவர்கள் எங்கே. அவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பது பற்றி யாரும் கதையில்லை.

இலங்கை இரானுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டிருக்கும் இம்மக்கள் காசா மக்களை போல்தான் கடும் பயக்கெடுதியில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என்பது உறுதி. இவர்களிள் பெரும்பான்மையானவர்களை தீவிரவாதிகள் என்று இராணுவம் நம்புவதால் இவர்களில் ஆயிரக்கணக்கானவர்கள் விரைவில் கொல்லப்படக்கூடிய சாத்தியமுண்டு. அது மட்டுமின்றி ஒரு சொற்பன் தன்னிச்சையாக இயங்க முற்படும் ஊடகங்கள் மேல் கடும் தாக்குதல்களை செய்து வருகிறது அரசு. அண்மையில் ஒரு முக்கிய ஊடகவியலாளரை அரச கூலிகள் சுட்டு கொண்டுள்ளார்கள். வரும் இந்த கிழமை இலங்கை தூதரகம் முன்னாலும் இவற்றுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒழுங்கு படுத்தப்படவுள்ளது.

யுத்தத்தால் சிதைந்த ஒரு நாட்டில் இருந்து வந்தவன் என்ற முறையில் இன்று காசா மக்கள் படும் துன்பத்தை ஓரளவாவது என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

சா எப்ப வரும் என்று தெரியாமல் எந்த நிமிடமும் சாவை எதிர்நோக்கி வாழ்வது மிக கொடிய வாழ்வு. ஒவ்வொரு குண்டு சத்தத்திலும், ஒவ்வொரு துப்பாக்கி சத்தத்திலும், விமானம் பதிந்து பறக்கும் ஒவ்வொரு தருனத்திலும் சாவை எதிர்கொண்டு தப்பி துடிக்கும் அவர்களின் துன்பம் அளப்பரியது.

அத்துடன் அவர்களுக்கு குடிக்க தண்ணியில்லை – சாப்பிட எதுவுமற்ற கடும் பட்டிணி – இதற்குள் தமது உறவுகள் நண்பர்கள் சக மனிதர்கள் தமக்கு முன்னால் கோரத்தனமாக கொல்லப்படுவதை செய்ய வழியற்று அவர்கள் பார்த்துக் கொண்டிருக்க பணிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் இதயத்தின் அடியில் நெருப்பாக துடிக்கும் இயலாமையை எம்மால் உணர முடிகிறது. இதை உணரும் இங்கிருக்கும் யாரும் அவர்களை தனியாக துன்பப்பட விடமாட்டோம்.

ஆனால் யு. என். இன் நீண்ட கொரிடோர்களில் அங்கும் இங்குமாக நடந்து விலைகூடின கமராக்களுக்கு போஸ் குடுக்கும் மேற்கத்தேய அரசியல்வாதிகளுக்கு இந்த உணர்வுகள் ஒருபோதும் புரியப்போவதில்லை. காசா மக்களின் அடி மன வேதனையை அவர்கள் ஒருபோதும் உணரப்போவதில்லை. அவர்கள் சிந்தனை வேறு விதமானது. மக்கள் மேலும் மேலும் வறுமைப்பட அவர்கள் தமது சொத்துக்களை அதிகரித்துகொண்டு யுத்த நடவடிக்கைகளுக்கான செலவையும் அதிகரித்து வருகிறார்கள். கடந்த மாதத்தில் மட்டும் அரை மில்லயனுக்கும் மேலான அமெரிக்க மக்கள் வேலை இழந்த நிலையில் அது பற்றி எந்த அக்கறையுமற்ற அமெரிக்க அரசு தனது பாதுகாப்பு நடவடிக்கை பட்ஜெட்டை அதிகரித்து வருகிறது. மொத்த ஜி.என்.பி யில் கிட்டத்தட்ட 4 வீதத்தை பாதுகாப்புக்கு ஒதுக்கியுள்ளது அரசு. கடந்த ஆண்டில் அதிகூடிய ஆயுத விற்பனை செய்தது இந்த இங்கிலாந்து அரசுதான். மூன்றாம் உலக நாடுகளின் கொடிய ஆளும்வர்க்கங்களை ஆயுதமயப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது இஸ்ரேலிய அரசு.

நாம் இதை பார்த்து கொண்டிருக்க முடியாது. நாம் யுத்தத்துக்கு எதிராக –யுத்தத்தின் மூல காரணத்துக்கு எதிராக கடுமையாக போராட வேண்டும். யுத்தத்தின் மூல காரணம் முதலாளித்துவம்தான். முதலாளித்துவம் இருக்கும் வரைக்கும் யுத்தம் இருந்து கொண்டுதான் இருக்கும். யுத்த நடவடிக்கைகளை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றால் நாம் முதலாளித்துவத்துக்கு முற்றுபுள்ளி வைத்தாக வேண்டும்.

மில்லயன் கணக்கான நாம் – தொழிலாளர்களான நாம் – உலக சொத்துக்களை சூறையாடும் ஒரு சிறு குழுவை விட மிகப் பலம் வாய்ந்தவர்கள். முதலாளித்துவத்துக்கு எதிராக நாம் ஒன்றுபட வேண்டும்.

காசா – முழு பாலஸ்தீனம் – இஸ்ரேல் – அமெரிக்க – இலங்கை என்று ஆங்காங்கு போராடிவரும் தோழர்களுடன் இணைந்து ஒன்றுபட்ட போராட்டத்தை நாம் முன்னெடுக்க வேண்டும். மனிதர் துன்பப்படாத – யுத்தமற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்க ஒன்றுபடுவோம்.

நாம் எமது யுத்தத்தை – இறுதி யுத்தத்தை செய்தாக வேண்டும். மனித துன்பத்துக்கு நிரந்தர தீர்வு கட்டும் இறுதி போராட்டத்திற்கு இணைவோம். எமது யுத்தத்தில் இனைந்து கொள்ளுங்கள். சோசலிஸ்டுகளுடன் சேர்ந்து கொள்ளுங்கள்.

அரச பயங்கரவாதம் தோற்கடிக்கப்படாவிட்டால் நாடு விரைவில் சுடுகாடாக மாறிவிடும் – ரணில்

lasantha-2.jpgகொலைக் களமாக மாறியுள்ள தேசத்தை மீட்டெடுத்து ஜனநாயகத்தை உறுதி செய்வதற்கு அனைத்துச் சக்திகளையும் ஓரணியில் திரளுமாறு அழைப்பு விடுத்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அரச பயங்கரவாதம் உடனடியாக தோற்கடிக்கப்படாவிட்டால் நாடு சுடுகாடாக மாறும் நிலை ஏற்பட்டுவிடுமென எச்சரிக்கை விடுத்தார். லசந்த விக்கிரமதுங்கவுக்குப் பிறகு இன்னொரு படுகொலை விழுவதை எவரும் அனுமதிக்கக்கூடாது எனவும் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார். சண்டே லீடர் பிரதம ஆசிரியரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான லசந்த விக்கிரமதுங்கவின் இறுதிச் சடங்கு நேற்று திங்கட்கிழமை மாலை பொரளை கனத்தை பொதுமயானத்தில் நடைபெற்றபோது இரங்கலுரை நிகழ்த்துகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

லசந்த விக்கிரமதுங்கவின் பூதவுடலுக்கு முன்னால் அலைமோதிய பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் இரங்கலுரை நிகழ்ச்சி இடம்பெற்றது. அங்கு தொடர்ந்து உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க கூறியதாவது; லசந்த விக்கிரமதுங்க ஊழல் மோசடியில் ஈடுபடவில்லை. ஊழல் மோசடிக்கு எதிராக குரல் கொடுத்தார். மனித உரிமைகளை மீறவில்லை. அதற்கு எதிராக எழுதினார். மக்கள் மீது அடக்குமுறையை பிரயோகிக்கவில்லை. மாறாக அதனை எதிர்ப்பதற்கு தனது பேனையை பயன்படுத்தினார். இன்று அரச பயங்கரவாதம் லசந்தவை படுகொலை செய்துவிட்டது. கடந்த காலத்தில் லசந்தவுக்கு ஜனாதிபதி பல தடவைகள் அச்சுறுத்தல் விடுத்துவந்துள்ளார். கீத் நொயாரைத் தாக்கியதன் மூலமும் ஊடக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவதன் மூலமும் எச்சரித்துள்ளார். இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் லசந்த தைரியமாக தனது பேனையையும் கடதாசியையும் அராஜகத்துக்கு எதிராக பயன்படுத்தினார்.

லசந்தவின் படுகொலைக்கு முழுப்பொறுப்பையும் ஜனாதிபதியே ஏற்கவேண்டும். மக்களுக்காக பேசிய ஒரு குரல் இன்று மௌனமாக்கப்பட்டுவிட்டது. நாடு இன்று ஹிட்லர் காலத்தில் ஜெர்மனியைப் போன்று மாறியுள்ளது. நாட்டை பேரழிவிலிருந்து காப்பாற்ற வேண்டிய தருணம் உருவாகியுள்ளது. மக்கள் கொன்று குவிக்கப்படுவதை நாம் பார்த்துக்கொண்டிருப்பதா? அல்லது அரசியல் முரண்பாடுகளை மறந்து ஒன்றுபட்டு அராஜக ஆட்சிக்கு முடிவுகட்டுவதா என்பதைப் பற்றி உடனடி முடிவெடுக்கப்படவேண்டும். லசந்தவின் பூதவுடலுக்கு முன்பாக இருந்து நாம் இன்று உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும். இன்னொரு படுகொலை இடம்பெறுவதற்கு முன்னர் இந்த ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் உறுதிப்பாடே அதுவாகும். எல்லோரும் என்னுடன் ஒன்றிணையுங்கள் உங்களையும் நாட்டையும் காப்பாற்ற நான் உத்தரவாதம் தருகின்றேன். என் உயிரைப் பணையமாக வைத்தேனும் தேசத்தை அழிவிலிருந்து பாதுகாக்க உறுதியளிக்கின்றேன். எமக்கிடையே அரசியல் கருத்து முரண்பாடுகள் காணப்படலாம். அவற்றை கொஞ்சம் காலத்துக்கு ஒதுக்கிவைப்போம். நாட்டின் பொது எதிரியை முறியடிக்க அனைவரும் ஒன்றாக கைகோர்ப்போம். இதுதான் எமக்காக, நாட்டுக்காக தன்னுயிரைக் கொடுத்த லசந்தவுக்கு நாம் செய்யக்கூடிய கைமாறாகும் எனவும் ரணில் தெரிவித்தார்.

சிவ்சங்கர் மேனன் வருகையால் இலங்கையில் மாற்றம் ஏற்படாது’

sivashankar.jpgஇந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனன், பாதுகாப்பு செயலாளர் விஜேசிங் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய உயர்மட்டத் தூதுக்குழு எதிர்வரும் வியாழன் அல்லது வெள்ளிக் கிழமையளவில் கொழும்புக்கு வருகைதரும் சாத்தியம் காணப்படுகிறது.  விடுதலைப்புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் மற்றும் வன்னிப் பகுதியிலுள்ள 3 இலட்சம் பொதுமக்களின் நிலைமை குறித்து இலங்கைத் தலைமைத்துவத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்தியத் தூதுக்குழு வருகை தரவிருப்பதாக “நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகை நேற்று திங்கட்கிழமை தெரிவித்தது.

ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷவும் இந்திய அரசாங்கத்திடம் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். அந்த அடிப்படையிலேயே இந்தியத் தூதுக்குழு இங்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது, என்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ “ஐலன்ட்’ பத்திரிகைக்கு கூறியுள்ளார். ஜனவரி 15 அல்லது 16 இல் இந்தியத் தூதுக்குழு கொழும்புக்கு வருகை தருமென இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.  முல்லைத்தீவு முற்றுகையிடப்பட்டிருக்கும் தருணத்தில் இந்தியத் தூதுக்குழுவின் வருகை முக்கியமான விடயமாக கருதப்படுகிறது.

வீதி விபத்தில் மனோ கணேஷன் காயம்

mano_ganesan.jpg
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேஷன் நேற்று திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் சிறிய காயங்களுக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவிசாவளை வீதியில் இவர் பயணித்த வாகனம் வீதியை விட்டு விலகியதை அடுத்தே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் மனோகணேஷனுக்கும் ஏனைய மூன்று பேருக்கும் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

கொழும்பு ஹட்டன் வீதியில் நேற்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் மனோ கணேசன் பயணம் செய்த “மொன்டரோ’ ரக ஜீப் மோசமான விபத்தில் சிக்கி பலத்த சேதமடைந்துள்ளது.  ஹட்டனில் நடைபெற்ற ஜனநாயக மக்கள் முன்னணியின் நுவரெலியா மாவட்ட முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின் கொழும்பு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

புலம்பெயர் நாடுகளில் தமிழர்களின் பொங்கல் விழாக்கள் யாவும் நிறுத்தம்

ponkal.jpgவன்னியில் தொடர்ந்தும் இடம்பெற்றுவரும் பாரிய படை நடவடிக்கையால் தமிழ் மக்கள் தாங்கொணா வேதனைகளை அனுபவித்து வருவதால் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் பொங்கல் திருநாள் கொண்டாட்டங்கள் அனைத்தையும் நிறுத்துவதாக புலம்பெயர் ஈழத் தமிழர் அமைப்புகள் அறிவித்துள்ளன. இது தொடர்பாக ஐரோப்பிய, அவுஸ்திரேலிய, கனடா மற்றும் அமெரிக்கப் பிரதிநிதிகள் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள வேண்டுகோளில் “வன்னியிலுள்ள தமிழ் மக்கள் மீதான இராணுவத்தின் இன அழிப்புத் தாக்குதலைத் தடுக்கக்கூடிய அழுத்தம் தமிழ் நாட்டிலிருந்து மட்டுமே வரமுடியும். இலங்கையில் நடத்தப்படும் இனதேசியப் போரானது புதுடில்லியின் மூலோபாயத்திலும் அதன் உலகப் பங்காளிகளின் தந்திரோபாயப் பங்களிப்புடனும் முன்னெடுக்கப்படுகிறது.

தமிழ் மக்கள் சர்வதேச சமூகத்தின் மீது கொண்டிருந்த மிகச் சிறிய நம்பிக்கையையும் இழந்துவிட்டனர். இலங்கைப்படைகள் கிளிநொச்சியை கைப்பற்றிய பின்னர் அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளே அவர்களையும் அவர்களது புவிசார் நலன்சார் செயற்பாடுகளையும் அம்பலப்படுத்திவிட்டன.

இலங்கையின் அகோர போர் வெறியினால் வன்னியிலே மக்கள் தாங்கொணா வேதனையை அனுபவிப்பதால் பொங்கல் திருநாள் கொண்டாட்டங்கள் அனைத்தையும் நிறுத்துவதாகவும் தெரிவித்துள்ளன.
 

பிரிட்டிஷ் பிரதித்தூதர் குடாநாடு விஜயம்

gooding_1.jpgயாழ். குடாநாட்டின் மனிதாபிமான, பாதுகாப்பு நிலைவரங்களை நேரில் கண்டறிவதற்காக பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி உயர் ஸ்தானிகர் மார்க் கூடிவ் இருநாள் விஜயத்தை மேற்கொண்டுள்ளார். தமது விஜயத்தின்போது அவர் யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய படைத்தளபதி, யாழ்.மறைமாவட்ட ஆயர், அங்குள்ள சர்வதேச அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்களின் தலைவர்களைச் சந்தித்தார்.

அதேசமயம் இடம்பெயர்ந்தவர்கள் தங்கியிருக்கும் முகாம்களுக்கும் சென்று நிலைமையை நேரில் அவர் கண்டறிந்தார்.  மேலும், வரலாற்று புகழ்மிக்க நல்லூர் ஆலயம், யாழ்ப்பாண நூல் நிலையம் ஆகியவற்றுக்கும் பிரிட்டிஷ் தூதுவர் விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதேவேளை யாழ்.அரச அதிபருடனான சந்திப்பு நேற்று பிற்பகல் 2.45 மணியளவில் மாவட்ட செயலகத்திலுள்ள அரச அதிபரின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இச் சந்திப்பின்போது குடாநாட்டின் தற்போதைய நிலைமைகள், வன்னியில் இடம்பெறும் யுத்தத்தால் குடாநாட்டுக்கு இடம்பெயர்ந்து வருவோரைத் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரதித் தூதுவருடன் பிரித்தானிய உயர்ஸ்தானிகத்தின் அரசியல் மற்றும் ஊடக அதிகாரி நிருபன் முத்தையாவும் வருகை தந்திருந்தார்.
 

முல்லை. மாவட்ட வைத்தியசாலை படையினர் வசம் – இராணுவப் பேச்சாளர்

_army.jpgபுலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அடிக்கடி வந்து செல்லும் முக்கிய இடமொன்றை இலக்கு வைத்து விமானப் படையினர் நேற்று கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். புதுக்குடியிருப்பு காட்டுப் பகுதியில் அமைந்துள்ள இந்த இடத்தை பிரபாகரன் இரகசியமாக மறைந்திருக்க பயன்படுத்தியுள்ளதாகவும் விமானப்படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.

விமானப் படைக்குச் சொந்தமான ஜெட் ரக போர் விமானங்களைப் பயன்படுத்தி நேற்று மாலை 6.00 மணியளவில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். புலிகள் இயக்கத் தலைவரும், அவரது முக்கிய சகாக்களும் புதுக்குடியிருப்பு காட்டில் அமைந்துள்ள இந்தப் பிரதேசத்தை ஒன்று கூடி ஆராயும் பிரதேசமாகவும் பயன்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவை நோக்கி முன்னேறிவரும் படையினருக்கு இராணுவ மற்றும் விமானப் படையின் புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவல்களையடுத்தே உரிய இலக்குகள் மீது விமானப் படையின் ஜெட் விமானங்கள் தாக்குதல்களை நடத்தியதாக தெரிவித்த விங் கமாண்டர் ஜனக நாணயக்கார, தாக்குதல்கள் வெற்றியளித்துள்ளதாக விமான ஓட்டிகள் உறுதி செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, முள்ளியாவலை தண்ணீரூற்று பிரதேசத்தில் அமைந்துள்ள முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையை பாதுகாப்புப் படையினர் நேற்று கைப்பற்றியுள்ளனர். முன்னேறிவரும் இராணுவத்தின் 59 வது படைப் பிரிவினர் இந்த வைத்தியசாலையை நேற்றுக் கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இந்த வைத்தியசாலையின் சுற்றுப்புறம் முழுவதிலும் புலிகளின் பாரிய பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் வைத்தியசாலையும் பங்கர்களாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். வைத்தியசாலையில் பொருத்தப்பட்டிருந்த மின்விசிறிகள், குளிரூட்டிகள், சிகிச்சை மற்றும் சத்திர சிகிச்சை அறையிலுள்ள உபகரணங்களையும் புலிகள் எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவித்த அவர், இங்குள்ள அறைகள் முழுவதிலும் மண் மூடைகளைக் காணக்கூடியதாக இருந்ததாகவும் குறிப்பிட்டார்.

சுற்றிவர கட்டடங்களைக் கொண்ட வைத்தியசாலையை காயமடைந்த புலிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்கு பாவிக்கப்பட்டுள்ள தடயங்களும் காணப்படுவதாகவும் இராணுவப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவிலிருந்து மேலும் 176 சிவிலியன்கள் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருகை

ahathi-1.jpg
முல்லைத்தீவிலிருந்து புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்த 176 சிவிலியன்கள் நேற்று பாதுகாப்பு படையினரிடம் தஞ்சமடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். 176 சிவிலியன்களில் பெருந்தொகையான சிறுவர், சிறுமிகள் அடங்குவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

சோரன்பற்று, இயக்கச்சி மற்றும் வெற்றிலைக்கேணி பிரதேசங்களை நோக்கி 107 சிவிலியன்கள் வருகை தந்துள்ளனர். இவர்கள் இராணுவத்தின் 53 வது படைப் பிரிவினரிடம் தஞ்சமடைந்துள்ளனர். ஓமந்தை பிரதேசத்தை நோக்கி 60 சிவிலியன்கள் வருகை தந்துள்ளனர். ஒன்பது சிறுமிகள், ஏழு சிறுவர்கள், 27 ஆண்கள் மற்றும் 20 பெண்கள் இவர்களுள் அடங்குவர். வட்டக்கச்சி பிரதேசத்தை நோக்கி ஐந்து சிவிலியன்கள் வருகை தந்துள்ளனர். இந்த ஐவரில் 3 ஆண்களும், 2 பெண்களும் அடங்குவர்.

இதேவேளை, இரணைமடு பிரதேசத்தை நோக்கி நான்கு சிவிலியன்கள் வருகை தந்துள்ளனர். இந்த நால்வரில் இரண்டு குழந்தைகள், ஒரு பெண் மற்றும் ஒரு ஆணும் அடங்குவதாக இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

பிரபாகரனுக்கு உயிர்மூச்சு கொடுப்பதற்காகவே எதிர்க்கட்சிகள் போராட்டங்களை நடத்துகின்றன -அமைச்சர் பந்துல

bandula-2.jpgபொருட்களின் விலைகளை குறைத்து மக்களுக்கு பல்வேறு நிவாரணங்களையும் வழங்குவதுடன் அரசாங்கம் பயங்கரவாதத்தை வெற்றி கொள்ளும் நோக்குடன் செயற்பட்டுவரும் வேளையில் எதிர்க்கட்சியினர் இதற்கு ஒத்துழைக்காது பிரபாகரனுக்கு உயிர்மூச்சுக் கொடுக்கும் முகமாக போராட்டத்தை நடத்துகின்றனரென அமைச்சர் பந்துல குணவர்தன குற்றஞ்சாட்டியுள்ளார். தகவல் திணைக்களத்தில் அண்மையில் இடம் பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்; சர்வதேச ரீதியாக உணவு நெருக்கடி ஏற்படுமென எச்சரிக்கை விடுக்கப்படுவதற்கு மூன்று வருடத்துக்கு முன்னரே அரசாங்கம் உள்நாட்டு விவசாய உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கையெடுத்தது. அத்துடன் உணவு நெருக்கடியை எதிர்கொள்வதற்கு கமிட்டியையும் அமைத்து செயற்படுவதனால் பணவீக்கத்தை நாம் குறைத்துள்ளோம்.

பயங்கரவாதிகளுக்கு எதிரான வெற்றியைபெறும் அதேநேரம் கடந்த நவம்பர் முதல் சமையல் எரிவாயுவின் விலையையும் பெரியளவில் குறைத்துள்ளோம். மேலும் டீசலை 40 ரூபாவாலும் மண்ணெண்ணெயை 30 ரூபாவாலும் பெற்றோலை 34 ரூபாவாலும் குறைத்துள்ளோம். இதனால் போக்குவரத்து கட்டணம் 4.3 வீதத்தால் குறைந்துள்ளது. சாதாரண மக்களின் பஸ் கட்டணத்தை 15 வீதத்தால் குறைத்துள்ளோம். அத்துடன் பால்மாவின் விலையை ஒரு கிலோவுக்கு 50 ரூபாவாலும் சீமெந்தின் விலையை 75 ரூபாவாலும் குறைத்துள்ளோம்.

தேயிலை, உரத்துக்கு மானியம், அரச ஊழியர் சம்பள உயர்வு மற்றும் பொருட்களின் விலையைக் குறைக்க, துறைமுக மற்றும் விமான நிலைய வரியை குறைத்துள்ளோம். இவ்வாறு மக்களுக்கு சலுகைகளை வழங்கி பயங்கரவாதத்தை வெற்றி கொள்வதற்காக அரசாங்கம் அரச செலவினத்தை 5 சதவீதத்தாலும் அமைச்சர்களுக்கான செலவை 10 வீதத்தாலும் பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் செலவை 15 வீதத்தாலும் குறைத்துள்ளது.

இவ்வாறு மக்களுக்கு சலுகைகளை அரசாங்கம் வழங்கிவருகின்ற நிலையில், பயங்கரவாதத்தை வெற்றி கொள்வதற்கு எதிர்க்கட்சிகள் அரசுக்கு ஒத்துழைக்காது பொருட்களின் விலையுயர்வைக் கண்டித்து போராட்டங்களை நடத்துகின்றனர். இவ்வாறு இவர்கள் செயற்படுவதற்கு காரணம் தோல்வியை சந்தித்துள்ள பிரபாகரனுக்கு உயிர்மூச்சு கொடுப்பதற்காகவே என்றார்.
 

ராஜபக்சே கூட்டத்துக்கு சமாதி கட்டும் நாள்தான் தமிழர்கள் சாப்பிட்ட சாப்பாடு செரிக்கும் நாளாகும் – வைகோ

ponkal.jpgராஜபக்சே கூட்டத்துக்கு சமாதி கட்டும் நாள்தான் தமிழர்கள் சாப்பிட்ட சாப்பாடு செரிக்கும் நாளாகும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார். விடுதலைப் புலிகளை இலங்கை ராணுவத்தால் வெல்ல முடியாது என்று ஈரோட்டில் நடந்த ம.தி.மு.க தேர்தல் நிதியளிப்பு விழாவில் பொதுச்செயலாளர் வைகோ பேசினார்.

இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் ஈவு இரக்கமின்றி கொலை செய்யப்படுகிறார்கள். 4 ஆண்டுகளாக இந்திய அரசு இலங்கை அரசுக்கு அனைத்து வகையிலும் உதவி செய்து வருகிறது. அதனால் தான் இந்த அளவு பாதிப்பு இலங்கை தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால், விடுதலைப் புலிகளை வெல்ல முடியாது. மத்திய அரசின் கூட்டணியில் இருக்கும் எந்த கட்சிகளும் இலங்கை தமிழர் விரோத போக்கை கண்டுகொள்ளவில்லை. ஹிட்லர் ஆட்சியில் கூட நடக்காத கொடுமை இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்படுகிறது. இதைத்தான் சினிமா இயக்குனர் சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோர் பேசினார்கள். இதில் என்ன தவறு உள்ளது?.

போபர்ஸ் பீரங்கி ஊழல் பிரச்சினையில் இருந்து விடுபட ராஜீவ் காந்தி இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பினார். ராணுவம் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டது. இதை சீமான் சொன்னதில் என்ன தவறு உள்ளது? தற்போது ராணுவ உதவி மட்டுமின்றி உளவு அமைப்பான ரா மூலமும் இலங்கை ராணுவத்துக்கு இந்திய அரசு உதவி செய்து வருகிறது. இந்தியா கொடுத்த பணத்தில் ஆயுதம் வாங்கி இலங்கை அரசு நம் இனத்துக்கு எதிராக பயன்படுத்துகிறது.

உண்மையில் விடுதலைப் புலிகள் முல்லைத்தீவில் உள்ள 6 லட்சம் தமிழர்களுக்கு அரணாக உள்ளனர். அவர்களை வீழ்த்த முடியாது. ராஜபக்சே கூட்டத்துக்கு சமாதி கட்டும் நாள்தான் தமிழர்கள் சாப்பிட்ட சாப்பாடு செரிக்கும் நாளாகும் என்றார் வைகோ.