13

13

சென்னையில் சிங்கள பிக்குகள்-வக்கீல்கள் மோதல்

சென்னை எழும்பூரில், சிங்களர்களை விமர்சித்துப் பேசிய வக்கீல்களை, இலங்கை புத்த பிக்குகள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக இரு தரப்பினர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சென்னை எழும்பூர் கென்னட் லேன் பகுதியில் புத்த மடம் உள்ளது. இங்குள்ள வளாகத்தில் இலங்கையிலிருந்து வரும் புத்த பிக்குகள் உள்ளிட்ட சிங்களர்கள் தங்குவது வழக்கம். இந்தத் தெருவில் ஏராளமான சிங்களர்களைக் காண முடியும். இந்த நிலையில் (11) புத்த மடத்திற்கு எதிரே உள்ள ஒரு டாஸ்மாக் மதுக் கடையில், சில வக்கீல்கள் நின்று கொண்டிருந்தனர். அந்த சாலையில் நடமாடிக் கொண்டிருந்த சில புத்த பிக்குகளைப் பார்த்து, தமிழர்களை அங்கு கொன்று குவிக்கிறார்கள். இங்கு சிங்களர்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள் பார் என்று கூறியுள்ளனர்.

இதையடுத்து அந்த புத்த பிக்குகள், வக்கீல்களுடன் வாதம் புரிந்தனர். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே மோதல் மூண்டது. அப்போது புத்த பிக்குகள், வக்கீல்களை தாக்கியுள்ளனர். பதிலுக்கு லஷ்மன் என்கிற பிக்குவை வக்கீல்கள் சரமாரியாக தாக்கினர். அங்கிருந்தவர்கள் இரு தரப்பினரையும் விலக்கி விட்டனர். பின்னர் இரு தரப்பும் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். 

கோல்டன் குளோப் விருதை வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான்

ar-rahman.jpgஹாலிவுட்டின் புகழ்பெற்ற கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். 66வது கோல்டன் குளோப் விருதுக்காக இங்கிலாந்து டைரக்டர் டேனி பாயல் இயக்கிய ஸ்லம்டாக் மில்லியனர் (‘Slumdog Millionaire’) படம் 4 விருதுகளுக்கு சிபாரிசு செய்யப்பட்டது. இந்த படத்துக்கு இசையமைத்த ரஹ்மானின் பெயரும் ஒரிஜினல் இசைக்காக விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்டது.

மேலும் சிறந்த படம், சிறந்த திரைக்கதை (சிமோன் பியூபோ) ஆகிய பிரிவுகளி்ன் கீழும் இந்தப் படம் கோல்டன் குளோப் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டது. இந் நிலையில் இந்தப் படம் இசைக்கான விருதை வென்றுள்ளது. படத்துக்கு இசைமைத்த ரஹ்மான் கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளார்.

இதன் மூலம் இந்த விருதை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை ரஹ்மான் பெற்றுள்ளார். இந்தப் படம் மும்பையைச் சேர்ந்த வீதிச் சிறுவன் ஒருவனின் கதையை விவரிக்கிறது. ஒரு ஏழைச் சிறுவன் கோன்பனேகா குரோர்பதி மாதிரி ஒரு ஷோவில் பங்கேற்று மாபெரும் பணக்காரனாகும் கதை இது.

இலங்கை இனநெருக்கடிக்கு உறுதியான அரசியல்தீர்வு தேவை பாப்பரசர் வலியுறுத்தல்

pop1201.jpgஇலங்கை நெருக்கடிக்கு உறுதியான அரசியல் தீர்வொன்று அவசியமென பாப்பரசர் 16 ஆவது ஆசிர்வாதப்பர் வலியுறுத்தியுள்ளார். அபிவிருத்திக்கான திட்டங்களிலிருந்து எண்ணற்ற மனித மற்றும் மூலப்பொருள் வளங்களை இராணுவ செலவுகள் திசை திருப்பும் போது சமாதானத்தை கட்டியெழுப்ப முடியாதெனவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். கடந்த 8 ஆம் திகதி வத்திக்கானில் 178 நாடுகளின் தூதுவர்கள் மத்தியில் நிகழ்த்திய வருடாந்த உரையின் போது, சமாதானத்தை எட்டவும், வறுமையிலிருந்து, விடுபடவும், சுதந்திர மற்றும் மத உரிமைகளை உறுதிப்படுத்தவும் அரசாங்கங்கள் மக்களுக்கு நம்பிக்கை வழங்க வேண்டுமென்றும் 16 ஆவது ஆசிர்வாதப்பர் தெரிவித்திருக்கிறார்.

தூதுவர்களுக்கு தனித் தனியாகவும் புதுவருட வாழ்த்துகளை தெரிவித்திருக்கும் பாப்பரசர், ஆயுதகளைவு மற்றும் அணுவாயுத பரவல் தடை ஆகிய விடயங்களில் சிலவும் நெருக்கடித் தடயங்கள் குறித்தும் கவலை வெளியிட்டிருக்கிறார். அத்துடன், சில ஆசிய நாடுகளில் நிலவி வரும் தற்போதைய வன்முறைகள் தொடர்பாகவும் கவலை தெரிவித்திருக்கும் பாப்பரசர், இங்கு அரசியல் நிலைமைகளும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

இலங்கையில் சமாதானத்திற்கு அரசியல் ரீதியான உறுதியான தீர்வொன்று அவசியமென்றும் பாப்பரசர் 16 ஆவது ஆசீர்வாதப்பர் வலியுறுத்தியிருக்கிறார். பல முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் நாம் ஆவலாக இருக்கும் சமாதானம் இன்னும் தூரத்திலேயே இருக்கின்றது என்று குறிப்பிட்டிருக்கும் அவர், இதற்காக நாம் எமது முயற்சிகளை இரட்டிப்பாக்காமல், எம்மை அதைரியப்படுத்திக் கொள்ளவோ உண்மையான சமாதானத்திற்கான எமது பொறுப்புகளையும் உழைப்புகளையும் குறைத்துக் கொள்ளவோ கூடாதென்றும் சுட்டிக் காட்டியிருக்கிறார்.  இதேநேரம், காஸா வன்முறைகள் குறித்தும் கவலை வெளியிட்டிருக்கும் பாப்பரசர், இராணுவத் தெரிவுகள் ஒருபோதும் தீர்வைத் தராதென்றும் வன்முறைகள் என்பது எங்கிருந்தும் எந்த வகையில் வந்தாலும் அவை கட்டாயம் கண்டிக்கப்பட வேண்டியவையே என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

பிரபாகரனை அரசால் அடக்கி ஒடுக்க முடியுமானால் கொழும்பிலுள்ள கொலையாளிகளை ஏன் பிடிக்க முடியாது? – முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

பிரபாகரனையும் விடுதலைப் புலிகளையும் அடக்கி ஒடுக்க முடியுமென்றால் ஏன் கொழும்பு உள்ளிட்ட தென்பிரதேசங்களில் இருக்கும் கொலையாளிகள் சிலரை அரசாங்கத்தால் பிடிக்கவோ அடக்கி ஒடுக்க முடியாதென முன்னாள் ஜனாதிபதியான சந்திரிகா குமாரதுங்க கேள்வி எழுப்பியிருக்கிறார். படுகொலை செய்யப்பட்ட “சண்டே லீடர்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியரான லசந்த விக்கிரமதுங்கவின் பூதவுடலுக்கு பத்தரமுல்லையிலுள்ள அன்னாரது பாரியாரின் வீட்டில் வைத்து நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு இறுதி அஞ்சலி செலுத்தியதன் பின்னரே சந்திரிகா குமாரதுங்க இவ்வாறு தெரிவித்திருக்கிறார். அவர் இங்கு மேலும் பேசுகையில்;

இது ஜனநாயகத்துக்கும் நாட்டின் சுதந்திரத்துக்கும் விழுந்த பாரிய அடியாகும். லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை மட்டுமல்லாது 2 தினங்களுக்கு முன்னர் வெட்கமில்லாமல் சிரச ஊடக நிறுவனத்துக்கும் தீ வைத்திருத்தினர். கடந்த 2 வருடங்களிலேயே நாட்டில் அதிகமான ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருக்கின்றன. ஊடகவியலாளர் கீத் நொயரை தாக்கிவிட்டு நாட்டை விட்டுச் சென்றனர். யாழ்ப்பாணத்திலும் அதிகமான ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டனர். அவர், இவர், சர்வதேச சதித் திட்டமென ஒவ்வொருவரையும் குற்றஞ்சாட்டிக் கொண்டிருப்பதில் பலன் இல்லை. நாட்டில் 12 வருடங்களாக அரசாங்கத்தை நிர்வகித்தவரென்ற வகையில் நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய முழுப்பொறுப்பும் அரசாங்கத்திற்குரியது. எனினும் இன்று நாடு படுகுழியில் விழுவதற்கு அரசாங்கமே இடமளித்திருக்கின்றமை குறித்து நான் கவலையடைகின்றேன்.

அரசாங்கத்தினால் பிரபாகரனையும் விடுதலைப்புலிகளையும் அடக்கி ஒடுக்க முடியுமானால் கொழும்பு மற்றும் தென்பகுதியிலுள்ள சில கொலையாளிகளை ஏன் அரசாங்கத்தால் அடக்கி ஒடுக்க முடியாது? இதற்கான பொறுப்பை நான் அரசாங்கத்தின் மீதே சுமத்துகிறேன். லசந்த விக்கிரமதுங்கவுக்கும் எனக்குமிடையில் பல பிரச்சினைகள் இருந்தன. எனினும் அவரை, கொல்வேன் என்று நான் ஒரு போதும் தொலைபேசியில் மிரட்டியதில்லை. எனவே இந்த பயணத்தை நிறுத்த வேண்டும், நிறுத்தப்பட வேண்டும். ஏதாவதொன்று செய்தாக வேண்டும். வேண்டுகோள் விடுக்கிறேன். ஒவ்வொருவர் மீதும் பழி சுமத்தும் வகையிலான பொய்ப் பிரசாரங்கள் நிறுத்தப்பட வேண்டும்.  இன்று இதனை கூறியதற்காக நாளை எனக்கும் வீதியில் வைத்து என்ன நடக்குமென்று தெரியாது. கடந்த 3 வருடங்களில் எனது பாதுகாப்பும் குறைக்கப்பட்டுள்ளது. எனினும் செய்வதற்கு ஒன்றுமில்லை. உண்மை பேச வேண்டும் என்று கூறினார்.

வன்னியிலிருந்து வருபவர்களின் நலன்களை கவனிக்க ரூ.30 மில். ஒதுக்கீடு – அரசாங்கம் அவசர ஏற்பாடு

a_c_m_razik_secretary1.jpgகிளிநொச்சி முல்லைத்தீவுப் பகுதிகளிலிருந்து வவுனியாவுக்கு வருகை தரும் பொதுமக்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் 30 மில்லியன் ரூபா நிதியினை வழங்கியுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் செயலாளர் ஏ. சீ. எம். ராசிக் தெரிவித்தார்.

இதுவரை 1,200 ற்கும் மேற்பட்டவர்கள் முல்லைத்தீவு கிளிநொச்சிப் பகுதிகளிலிருந்து வவுனியாவுக்கு வந்துள்ளதுடன் தொடர்ந்தும் மக்கள் வருகை தந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்த அவர், இம் மக்களுக்கான அடிப்படை வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மீள் குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சு மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை மேற்படி அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வருகை தரும் மக்களுக்கான நலன்புரி விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் இன்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பெஷில் ராஜபக்ஷ எம்.பி. யின் தலைமையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலந்துகொள்ளும் முக்கிய கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் :-

விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து அரச கட்டுப் பாட்டுப் பகுதியான வவுனியாவுக்கு வந்து சேர்ந்த மக்களுக்காக வவுனியா மெனிக்பாம் மற்றும் நெலுக்குளம் பகுதிகளில் தற்காலிக வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் அடம்பன்குளம், பூசனிப்பிட்டி பகுதிகளிலும் மேலும் தற்காலிக வீடுகளை அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வவுனியாவில் தங்கியிருப்போருக்கான சமைத்த உணவு, உலருணவுகள், உடைகள், மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட அன்றாட தேவைகளைப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகள் உரிய முறையில் இடம்பெற்று வருவதாகத் தெரிவித்த அவர் இது தொடர்பில் வவுனியாவில் உள்ள அரச அதிகாரிகளுக்கு உரிய பணிப்புரைகளும் வழங்கப்பட்டு ள்ளதாகவும் தெரிவித்தார்.

900 சதுர கிலோமீற்றருக்குள் புலிகள் முழுமையாக முடக்கம்

_army.jpgஆனையிறவுக்கு கிழக்கே அமைந்துள்ள கெவில் பிரதேசத்தை பாதுகாப்பு படையினர் முழுமையாக கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். ஆனையிறவை கைப்பற்றிய படைப்பிரிவுகளில் ஒன்றான இராணுவத்தின் 53வது படைப்பிரிவினர் இந்தப் பிரதேசத்தை தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஆனையிறவைக் கைப்பற்றி அங்கிருந்து கிழக்கை நோக்கி முன்னேறிய 53வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் கமல் குணரத்ன தலைமையிலான படையினர் கெவில் பிரதேசத்தை வந்தடைந்துள்ளனர். வெற்றிலைக்கேணிக்கு தென்கிழக்கு கரையோரத்தில் அமைந்துள்ள கெவில் பிரதேசம் புலிகளின் மற்றுமொரு பலமான நிலையாக விளங்கியுள்ளது.

கடல் மார்க்கமான சில நடவடிக்கைகளுக்கு புலிகள் இந்தப் பிரதேசத்தைப் பயன்படுத்தியுள்ளதாக தெரிவித்த இராணுவப் பேச்சாளர், தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ள வெற்றி லைக்கேணி முதல் கெவில் வரையான பிரதேசத்தை பலப்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.  புலிகளால் இந்தப் பிரதேசங்களில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளையும், மிதிவெடிகளையும் மீட்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, வடக்கு, கிழக்கின் பெரும்பாலான பகுதிகளில் பரந்திருந்த புலிகளை தற்பொழுது படை நடவடிக்கைகள் மூலம் 900 சதுர கிலோமீற்றர் பரப்புக்குள் முடக்கி விட முடிந்துள்ளதாக தெரிவித்த பிரிகேடியர் இராணுவத்தின் ஒன்பது பிரிவினர் எஞ்சியுள்ள பிரதேசங்களை முழுமையாக கைப்பற்றும் நோக்கில் தொடர்ந்தும் முன்னேறி வருவதாகவும் குறிப்பிட்டார்.

முகமாலை தொடக்கம் ஆனையிறவு வரையான பிரதேசம் கைப்பற்றப்பட்டதையும், ஏ-9 பிரதான வீதி முழுமையாக விடுவிக்கப்பட்டதையும் அடுத்து, யாழ். குடாநாடு முழுவதும் படையினரின் பூரணகட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளதாகவும் பிரிகேடியர் குறிப்பிட்டார்.

சுண்டிக்குளமும், அதனை அண்மித்த சிறியதொரு பிரதேசம் மாத்திரம் யாழ். குடாவில் கைப்பற்றப்பட வேண்டியுள்ளதாக குறிப்பிட்ட அவர், யாழ். குடாவில் இருந்த புலிகளின் அச்சுறுத்தல் தற்பொழுது நீங்கியுள்ள தாகவும் குறிப்பிட்டார். விடுவிக்கப்பட்ட ஏ-9 பிரதான வீதியின் முகமாலை தொடக்கம் ஓமந்தை வரையான வீதியில் நிலைக் கொண்டுள்ள படையினர், கடுமையான தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன் இடைக்கிடையே வீதிகளில் ஏற்பட்டுள்ள உடைவுகள் மற்றும் வெடிப்புக்களை திருத்தும் நடவடிக்கைகளை இராணுவத்தின் பொறியியல் பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, கிளிநொச்சிக்கு கிழக்கே உள்ள வட்டக்கச்சி பிரதேசத்தை கைப்பற்றும் நோக்கில் 57 வது படைப்பிரிவினர் கடுமையான தாக்குதல்களை நடத்தி முன்னேறி வருகின்றனர். அத்துடன், பரந்தனுக்கு கிழக்கே அமைந்துள்ள முரசுமோட்டை பிரதேசத்தை முழுமையாக விடுவிக்கும் நோக்குடன் முன்னேறிவரும் இராணுவத்தின் 58 வது படைப்பிரிவினர் விசுவமடு பிரதேசத்தை நோக்கி முன்னேறி வருகின்றனர்.

இரணைமடு பகுதியிலுள்ள புலிகளின் விமான ஓடுபாதைக்கு அண்மித்த பகுதியில் இருதரப்பினருக்கு மிடையில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வரும் அதேசமயம், 59வது படைப்பிரிவினர் முல்லைத்தீவுக்கு மேற்கை நோக்கி முன்னேறிவருகின்றனர். இந்தப் பிரதேசத்தில் அமைந்துள்ள புலிகளின் பாதுகாப்பு முன்னரங்கு நிலைகளையும், மண் அரண்களையும் இலக்கு வைத்து கடுமையான தாக்குதல்களை படையினர் மேற்கொண்டு வருவதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, பெரியகுளம், புதுக்குடியி ருப்பு மற்றும் கற்குளம் பகுதிகளில் பல தடவைகள் இடம்பெற்ற மோதல்களுக்கு பின்னர் படையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது கொல்லப்பட்ட புலிகளின் எட்டு சடலங்களை படையினர் மீட்டெடுத்துள்ளனர். அத்துடன் ரி-56 ரக துப்பாக்கிகள் 6 அதற்கு பயன்படுத்தும் ரவைகள் 3,850 மற்றும் காட்டுப் பிரதேசத்தில் இருப்பவர்கள் அணியும் உடைகள் படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

பயங்கரவாதத் தாக்குதலில் சதித் திட்டம் தீட்டியவர்களை பாகிஸ்தான் சட்டத்தின் முன் நிறுத்தவில்லை என்றால் இந்தியா நடவடிக்கைகளை எடுக்கும்

pranab-1312.jpgகடந்த நவம்பர் மாதம் மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் சதித் திட்டம் தீட்டியவர்களை பாகிஸ்தான் சட்டத்தின் முன் நிறுத்தவில்லை என்றால் இந்தியா மேலதிக நடவடிக்கைகளை எடுக்கும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.  எவ்விதமான நடவடிக்கை என்பதை முகர்ஜி விபரித்துக்கூறவில்லை என்றாலும், பாகிஸ்தானிடம் ஆதாரங்கள் அடங்கிய ஆவணங்களை இந்தியா கையளித்துவிட்டது என்றும், பாகிஸ்தான் அரசு அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் என்று இந்தியா எதிர்பார்க்கிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.

 மும்பையில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு பாகிஸ்தானின் அரசு நிறுவனங்களுடைய ஆதரவு இருந்திருக்கத்தான் வேண்டும் என்று இந்தியா வலியுறுத்துவதை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது.  இப்படியான அறிக்கைகளால் போர் பீதிதான் மேலோங்குகிறது என பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பெர்வேஸ் முஷாரஃப் எச்சரித்துள்ளார்.

29 பொதுமக்கள் பலி 200 பேர் காயம்

kili-01.jpgகிளி நொச்சி பகுதியில் நவம்பர் மாதம் தொடக்கம் கடந்த சனிக்கிழமை வரை ஷெல் மற்றும் விமானத் தாக்குதலினால் 29 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 200 பேர் காயமடைந்துமுள்ளதாக வன்னியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.வன்னிப்பகுதியில் இடம்பெற்று வரும் தொடர்ச்சியான ஷெல் மற்றும் விமானத் தாக்குதல்கள் காரணமாக கொட்டும் மழைக்கு மத்தியிலும் கிளிநொச்சி மாவட்டத்தின் கிழக்குப் பிரதேச மக்கள் விசுவமடு பகுதியை நோக்கி பெரும் எண்ணிக்கையில் இடம்பெயர்ந்துவருகின்றனர்.  கடந்த நவம்பர் மாதத்திலிருந்து சனிக்கிழமை வரையிலான காலப்பகுதியில் கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரம் 6 குழந்தைகள் உட்பட 29 சிவிலியன்கள் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தாக்குதல்களில் 36 பிள்ளைகள் உட்பட 200 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்தத் தாக்குதல்களினால் பொதுமக்கள் மத்தியில் உயிரிழப்புக்கள் அதிகரித்துள்ளதுடன், பலரும் காயமடைந்துள்ளனர். இதனால், அங்கு மக்கள் மத்தியில் பெரும் பதற்ற நிலைமை தோன்றியிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

திருமங்கலம் இடைத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் லதா வெற்றி

latha-adiyaman.jpgதமிழ் நாடு திருமங்கலம் சட்டப் பேரவை இடைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் தி. மு. க. வேட்பாளர் லதா அதியமான் 39 ஆயிரத்து 266 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தல் 190 வாக்குச் சாவடிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அ. தி. மு. க. சார்பில் முத்துராமலிங்கம், தி. மு. க. சார்பில் லதா அதியமான், தே. மு. தி. க. சார்பில் தனபாண்டியன் மற்றும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பத்மநாபன் உட்பட 26 பேர் போட்டியிட்டனர். மொத்தம் 1,38,369 வாக்குகள் பதிவாகியிருந்தன.

இதில் 67,748 ஆண்களும், 70,621 பெண்களும் வாக்களித்தனர். வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே, தி. மு. க. வேட்பாளர் லதா அதியமான் 79,422 வாக்குகளையும், அவரைத் தொடர்ந்து அ. தி. மு. க. வேட்பாளர் முத்து ராமலிங்கம் 40,156 வாக்குகளையும் பெற்றிருந்தனர். அதாவது அ. தி. மு. க. வேட்பாளரைவிட தி. மு. க. வேட்பாளர் 39,266 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மேலும் தே. மு. தி. க. வேட்பாளர் தனபாண்டியன் 13,136 வாக்குகளையும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் பத்மநாபன் 831 வாக்குகளையும் பெற்றனர்.

யுத்தத்தை அரசியல் மயமாக்கி அரசியல் இலாபம் தேடும் அவசியம் அரசுக்குக் கிடையாது – நந்திமித்ர ஏக்கநாயக்க

vote.jpgவடக்கே பயங்கரவாத யுத்தத்தையும், இராணுவத்தினரின் யுத்த வெற்றியையும் அரசியல் மயமாக்கி அரசியல் இலாபம் தேட வேண்டும் என்ற எந்தவொரு அவசியமும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கோ அல்லது அரசுக்கோ கிடையாது. வடக்கே யுத்தம் தொடர்ந்தாலும், விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே வைத்து நிராயுதபாணிகளாக ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் கலந்து கொள்ளும் வரை இராணுவத்தினரின் யுத்த நடவடிக்கை வடக்கே தொடர்ந்து கொண்டே இருக்கும். இதுவே ஜனாதிபதியின் முக்கிய குறிக்கோள் என மத்திய மாகாண சபையின் மாத்தளை மாவட்ட ஐ. ம. சு. மு. வேட்பாளர் நந்திமித்ர ஏக்கநாயக்க தெரிவித்தார்.

இராணுவத்தினரின் பாரிய முயற்சியின் காரணமாக வடக்கு மீளப்பட்டுக் கொண்டிருக்கின்றது. கிழக்கை இராணுவத்தினர் மீட்டபொழுது அங்குள்ள மக்கள் எவ்வாறு சுதந்திரக் காற்றை சுவாசித்தனரோ இதே சுதந்திரக் காற்றை வடக்கே உள்ள மக்களும் சுவாசிக்கும் நாள் வெகு தூரத்திலில்லை.

எனவே, கிழக்கு மாகாண மக்கள் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அரசை வெற்றி பெறச் செய்தது போல், வட மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தல்களில் அரசை மக்கள் வெற்றி பெறச் செய்தார்களோ இதே வெற்றியை மத்திய மாகாண மக்களும் அரசியல் மற்றும் ஏனையவேறுபாடுகளை மறந்து மத்திய மாகாண சபையை வெற்றி பெறச் செய்ய வேண்டும். எனவும் நந்திமித்ர ஏக்கநாயக்க தெரிவித்தார்