தமிழர்களின் புது வருடப் பிறப்பாகிய தைப்பொங்கல் லண்டன் ஈஸ்ற்ஹாம் பகுதியில் தெரு விளக்குகள் ஒளியூட்டப்பட்டு அமைதியான முறையில் நடைபெற்றது. ஐரோப்பாவில் தைப்பொங்கல் தினம் உத்தியோகபூர்வமாக கொண்டாடப்படும் ஒரே நகரம் லண்டன் ஈஸ்ற்ஹாம் என்பது குறிப்பிடத்தக்கது. நியூஹாம் துணை மேயர் கிறிஸ்ரைன் போல்டன் தெருவிளக்குகளுக்கு ஒளியூட்டி தமிழ் புதுவருடத்தை வரவேற்றார்.
2001 முதல் கடந்த எட்டு ஆண்டுகளாக தைப்பொங்கலையொட்டி வீதி விளக்குகளுக்கு ஒளியூட்டும் நிகழ்வு ஈஸ்ற்ஹாமில் இடம்பெற்று வருகிறது. இந்நிகழ்வில் மத வேறுபாடுகளைக் கடந்து இந்துக்கள் முஸ்லீம்கள் கிறிஸ்தவர்கள் என அனைவரும் பங்கேற்பது வழமை. இன்று இலங்கையில் நிகழும் யுத்த சூழல் காரணமாக இந்நிகழ்வு மிக எளிமையான முறையில் ஒழுங்கு படுத்தப்பட்டது.
ஈஸ்ற்ஹாம் ஹைஸ்ரிற் நோத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் துணைமேயருடன் கவுன்சிலர்கள் சிவிக் அம்பாசிடர் கவுன்சில் அலுவர்கள் மற்றும் பொது மக்களும் கலந்துகொண்டனர். நியூஹாம் கவுன்சிலுக்கு மூன்றாவது முறையாகவும் தெரிவு செய்யப்பட்ட கவுன்சிலர் போல் சத்தியநேசன் இந்நிகழ்வை கடந்த எட்டு ஆண்டுகளாக ஏற்பாடு செய்து வருகிறார்.
இன்று ஏற்றப்பட்ட இவ்வெளிச்சம் இலங்கையிலும் உலகிலும் சமாதானத்திற்கான வெளிச்சம் இந்த வெளிச்சம் நம்பிக்கையைக் கொடுக்கும் என்று குறிப்பிட்டார். பல்கலாச்சார மக்களும் வாழும் நியூஹாமில் தமிழர்களுடைய புது வருடத்தை குறிக்கும் இந்நிகழ்வு இடம்பெறுவது நியூஹாமிற்கு பெருமை சேர்க்கிறது என்று குறிப்பிட்ட போல் சத்தியநேசன் நியூஹாம் மக்களுடன் சேர்ந்தே முன்னேறுகிறது என்று குறிப்பிட்டார்.
துணை மேயர் கிறிஸ்ரின் போல்டன் பேசுகையில் இலங்கையில் நடைபெறும் யுத்தம் பற்றிய தனது வேதனையை வெளிப்படுத்தினார். துன்பங்கள் வந்தாலும் இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறுவது அவசியம் என்பதனை அவர் சுட்டிக்காட்டினார்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழ் மக்களுடைய ஒரு நம்பிக்கையாக இருந்து வந்தது. இதையொட்டி எண்பதுகளின் நடுப்பகுதிகளில் அடுத்த பொங்கலில் தமிழீழம் என்பது போன்ற கருத்துக்கள் தமிழீழ விடுதலை இயக்கங்களால் தமிழ் மக்கள் மத்தியில் திட்டமிட்டு பரப்பப்பட்டு இருந்தது. ஆனால் இன்று நிலைமை மறுதலையாகி விட்டது. தங்களுக்குள் முட்டி மோதிய தமிழீழ விடுதலை இயக்கங்கள் ஒன்றையொன்று அழித்துக்கொண்டு தங்களையும் அழித்துக் கொண்டன.
இன்று இலங்கைத் தமிழர்கள் தை பிறந்தாலும் சமாதானத்திற்கு ஏதும் வழி இருக்கா என்ற அங்கலாய்ப்புடனேயே உள்ளனர்.