18

18

இடம்பெயரும் மக்களுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தல்:

basil.jpgவடக் கிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும் மக்களை தங்க வைக்கும் ஒமந்தை, மெனிக்பாம், கட்டையடம்பன் முகாம்களில் கல்வி, சுகாதாரம், மின்சாரம், நீர் வழங்கல் உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பி. அதிகாரிகளுக்கு நேற்று பணிப்புரை வழங்கினார்.

மக்களை தங்க வைக்கும் முகாம் பகுதியில் வங்கி நடைமுறைகள், கூட்டுறவு கடைகள், மருத்துவ நிலையம், தற்காலிக பாடசாலைகள், மலசலகூட வசதிகள், நீர் வழங்கல், மின்சாரம் வழங்கல் போன்றவற்றை விரைவில் ஆரம்பிக்க ஏதுவாக சம்பந்தப்பட்ட துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவை நாளை திங்கட்கிழமை வவுனியாவுக்கு புறப்பட்டுச் செல்லுமாறும் பசில் ராஜபக்ஷ எம்.பி. கேட்டுக் கொண்டுள்ளார்.

அடுத்த புதன்கிழமையன்று வவுனியா முகாம்கள் தொடர்பாகவும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல் தொடர்பாகவும் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பசில் ராஜபக்ஷ எம்.பி. அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். பசில் ராஜபக்ஷ தலைமையில் நேற்றுக் காலை நடைபெற்ற விசேட கூட்டத்தில் மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரன சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீனும் கலந்து கொண்டார். புதன்கிழமையன்று அதிகாரிகளினால் சமர்ப்பிக்கப்படும் அறிக்கை அமைச்சர் ரிஷாத் பதியுத்தீனிடமும் கையளிக்கப்படும்.

வவுனியா, நெலுக்குளம் முகாம் வன்னியிலிருந்து வரும் மக்களை உடனடியாக தங்க வைக்கும் இடைத்தங்கல் முகாமாகவும், மெனிக்பாம் வடக்கு மெனிக்பாம் தெற்கில் இரண்டு முகாம்களையும் விரிவுபடுத்தி சகல உட்கட்டமைப்பு வசதிகளையும் வழங்குவதே அரசின் நோக்கமென்றும் பசில் ராஜபக்ஷ எம்.பி. குறிப்பிட்டார்.

இதேபோன்று வவுனியா வடக்கிலிருந்து வரும் மக்களை ஓமந்தையில் அமைக்கப்படும் முகாமிலும், மன்னாரிலிருந்து வரும் மக்களை கட்டையடம்பன் முகாமிலும் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும், மெனிக்பாம் வடக்கில் கிளிநொச்சியிலிருந்து வரும் மக்களையும் மெனிக்பாம் தெற்கில் முல்லைத் தீவிலிருந்துவரும் மக்களையும் தங்க வைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் அமைச்சர் ரிஷாத்  தெரிவித்தார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகள் மீட்கப்பட்டதும் அங்குள்ள மிதிவெடிகள், நிலக்கண்ணி வெடிகள், பொறி வெடிகள் போன்றவை நீக்கப்பட்டு மக்களை மீளக்குடியமர்த்த கூடிய நிலை உடனடியாக ஏற்படுத்த முடியாது என்பதாலேயே முகாம்களின் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மற்றும் படையினரின் உதவியுடன் முகாம்களுக்கு பூரண பாதுகாப்பும் வழங்கப்படவுள்ளது.

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பி.யின் தலைமையில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன், வட மாகாண ஆளுநர் டிக்ஷன் தால, முன்னாள் எம்.பி. சுமதிபால, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் பாலசூரிய, வவுனியா அரச அதிபர் திருமதி சார்ள்ஸ், சுகாதார அமைச்சின் செயலர் கஹந்த லியனகே, மீள்குடியேற்ற அமைச்சின் செயலர் ஏ. சி. எம். ராசிக், தேசத்தை கட்டியெழுப்பும் அமைச்சின் செயலர் குமாரசிறி, கல்வி அமைச்சின் செயலர் உட்பட அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

படையினரால் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் புலிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தக்கூடும் – இராணுவத் தளபதி

fonseka2.jpgவன்னி யில் பலமிழந்துவரும் விடுதலைப் புலிகள் அரச படையினரால் விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஊடுருவித் தாக்குதலை நடத்தலாமென இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். வன்னி இராணுவ படைத் தலைமையகத்துக்கு வெள்ளிக்கிழமை விஜயம் செய்து உரையாற்றியபோதே சரத் பொன்சேகா இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;

“இராணுவத்தினரின் படை நடவடிக்கைகளினால் விடுதலைப் புலிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளனர். மோதல்கள் இடம்பெறும் பகுதிகளிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரும் பொதுமக்களுக்கு அதிகூடிய பாதுகாப்பினை வழங்கவேண்டும். இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள பிரதேசங்கள் மற்றும் அரசினால் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் விடுதலைப் புலிகள் ஊடுருவித் தாக்குதல் மேற்கொள்ளக் கூடும்.

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து ஆயிரக்கணக்கானோர் அடுத்த ஓரிரு தினங்களில் விலகி அரசிடம் சரணடையக் கூடும். அதேவேளை, வன்னியில் படையினரால் மேற்கொள்ளப்படும் மனிதநேய நடவடிக்கைகள் தற்போது மிகவும் இக்கட்டான நிலைக்கு வந்துள்ளது’ என்றார். அத்துடன், யாழ்ப்பாணம் கொழும்பை இணைக்கும் ஏ9 வீதியை பொதுமக்களின் பாவனைக்காக திறக்கவேண்டியதன் அவசியம் குறித்தும் இராணுவத் தளபதி விளக்கியிருந்தார். வன்னிப் படைத் தலைமையகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் வன்னிப் பிராந்தியத்துக்கான கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரியா உள்ளிட்ட உயர் மட்டத் தளபதிகள் கலந்துகொண்டனர்.

18 அமைச்சுப் பதவிகளை வழங்கியதன்மூலம் முஸ்லிம்களை அரசு கௌரவித்துள்ளது – துமிந்த திசாநாயக்க தெரிவிப்பு

vote.jpgஇந் நாட்டு முஸ்லிம்களுக்கு கௌரவம் வழங்கி அதிகளவு சேவைகளை முன்னெடுத்த கட்சி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியாகும் என்று அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார். கம்பளை இல்லவதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது; மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் முஸ்லிம் அமைச்சர்கள் 18 பேர் இருக்கின்றனர். இது அரசாங்கம் முஸ்லிம்களுக்கு வழங்கிய கௌரவமாகும். இந்த அமைச்சுப் பதவிகள் மூலம் முஸ்லிம் சமூகம் தனது தேவைகளை நிறைவு செய்து கொள்ள முடியும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அரசாங்கத்தில் கல்வி அமைச்சராக செயற்பட்ட பதியுதீன் மஹ்மூத் முஸ்லிம்களுக்கு அளப்பரிய சேவையாற்றினார். ஆனால், ஐக்கிய தேசியக் கட்சி முஸ்லிம்களுக்கு இத்தகைய அமைச்சுப் பதவிகளை வழங்கவும் இல்லை, நாம் வழங்கிய அமைச்சுப் பதவிகள் மூலம் சேவையாற்ற இடமளிக்கவும் இல்லை. மத்திய மாகாண சபைத் தேர்தல் வட,,கிழக்குக்கு வெளியில் வாழும் முஸ்லிம்களைப் பொறுத்தளவில் மிகவும் முக்கியமானதோர் தேர்தலாகும்.எனவே முஸ்லிம்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

இலங்கையை பாராட்டும் மேனன்: தா.பாண்டியன்

sivashankar.jpgஇலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை செயலர் சிவசங்கர மேனன் இலங்கை ராணுவ தளபதியை பாராட்டியுள்ளார். தமிழர்கள் கொல்லப்படுவதை தடுக்க அவர் எவ்வித பேச்சும் நடத்தவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறினார். கோவை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இயக்குனர் சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோரை சந்தித்துப் பேசிய பாண்டியன் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவது பல ஆண்டுகளாக நடக்கிறது. இதற்கு இந்திய அரசு இதுவரை எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதனால் ஏற்பட்ட உள்ளக் கொதிப்பையே சீமான் உள்ளிட்டோர் வெளிப்படுத்தினர்.

ஆனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் கொடுத்த புகாரை வைத்து போலீசார் விசாரிக்காமலேயே தேச விரோதமாக பேசியதாக அவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இது ஜனநாயக கேலிக் கூத்து.

இலங்கை தமிழர் கொல்லப்படுவதை நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக சட்டசபையிலும், அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முதல்வர் தலைமையிலான குழு பிரதமரை சந்தித்து வலியுறுத்தியும் இதுவரை மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

காங்கிரஸ் செய்யும் தவறுகளுக்கு மத்திய அரசில் பங்கேற்றுள்ள திமுகவும் பொறுப்பேற்க வேண்டும். இலங்கை தமிழர் படுகொலைகளை ஐ.நா.சபைக்கு கொண்டு செல்லும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம்.

தற்போது இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை செயலர் சிவசங்கர மேனன் இலங்கை ராணுவ தளபதியை பாராட்டியுள்ளார். தமிழர்கள் கொல்லப்படுவதை தடுக்க அவர் எவ்வித பேச்சும் நடத்தவில்லை. இதில் இருந்து டெல்லியில் உள்ள அதிகாரிகள் எவ்வளவு அடிமையாக உள்ளனர் என்பது தெளிவாகிறது.

இலங்கை தமிழர்களை காப்பாற்றுவதிலும், தமிழக மீனவர்களை பாதுகாப்பதிலும் மத்திய அரசில் உள்ளவர்கள் பேசாமல் இருக்கலாம். ஆனால் தமிழக தலைவர்கள் கண்டிப்பாக பேசியாக வேண்டும். மத்திய அரசில் பங்கு வகிக்கும் திமுக இதிலிருந்து தப்பிக்க முடியாது என்றார் பாண்டியன்.

மேனன் என்ன; கடவுளே வந்தாலும் தற்போதைய நிலைமைக்கு தீர்வில்லை – ரணில்

ranil-2912.jpgஇந்திய வெளியுறவுச் செயலாளரின் இலங்கை விஜயம் காலம் தாழ்த்தப்பட்ட நிலையிலேயே மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கும் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டில் இன்று உருவாகியுள்ள நெருக்கடியான நிலைகளை நோக்கும் போது இந்தியா என்ன கடவுளே வந்தாலும் தீர்வுகாண முடியுமாவென்பது சந்தேகமே எனவும் தெரிவித்தார். இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவ் சங்கர் மேனன் இலங்கை வந்துள்ளார். அவரைச் சந்தித்துப் பேசினீர்களா என்று எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவிடம்  வெள்ளிக்கிழமை கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமையிரவு கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்புக்கு ஏற்பாடாகியிருந்தது. இதற்கு முன்னர் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் சிவ்சங்கர் மேனன் விஜயம் தொடர்பாகவும் அவரைச் சந்தித்தீர்களாவெனவும் கேள்வி எழுப்பிய போது ரணில் விக்கிரம சிங்க கருத்துத் தெரிவித்தார். இந்திய அரசு குறிப்பிட்ட காலமாக இலங்கை விவகாரத்தில் மௌனப் போக்கையே கடைப்பிடித்து வந்தது. அண்மையில் தமிழகத்தின் அழுத்தத்தைக் கூட புதுடில்லி பெரிதாக அலட்டிக்கொண்டதாகவும் தெரியவில்லை. புதுடில்லி தலையிடும் என எதிர்பார்க்கப்பட்ட காலத்தில் எதுவுமே நடைபெறவில்லை. ஆனால், காலம் கடந்த நிலையிலேயே சிவ்சங்கர் மேனன் வந்துள்ளார். எனக்கு தான் தெரிந்தவர் நல்லவர். சந்திக்க விருக்கிறேன்.

நாட்டில் இன்று நடப்பவற்றைப் பார்க்கும் போது அடுத்த நிமிடம் என்ன நடக்குமோவென அஞ்ச வேண்டியுள்ளது. தற்போதைய நிலைமைகளை நோக்கும் போது சிவ்சங்கர் மேனனாலோ வேறு எவராலுமோ பிரச்சினைக்கு தீர்வுகாண முடியுமா என்பதே கேள்வியாகவுள்ளது. ஏன் கடவுளே வந்தால் கூட நாட்டுக்கு அமைதியும் சமாதானமும் கிட்டுமா என்பது சந்தேகமே எனவும் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்தார்.

ஏ-9 வீதியில் கண்ணி அகற்றும் பணிகள் ஆரம்பம்

_army.jpgஏ-9  வீதியில் புதைக்கப்பட்டுள்ள மிதிவெடிகளை அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார கூறினார். ஏ-9 வீதியில் போக்குவரத்துப் பணிகளை துரிதமாக ஆரம்பிக்கும் நோக்குடன் மிதிவெடி அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பாதையின் இருபக்கமும் உள்ள 50 அடி வரையான பகுதியிலுள்ள நிலக்கண்ணிகள் அகற்றப்பட வுள்ளதோடு நிலக்கண்ணி அகற்றும் பணிகளை 2 வாரங்களுக்குள் பூர்த்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. நிலக்கண்ணி அகற்றும் பணிகள் முடிவடைந்ததும் வீதி புனரமைக்கும் பணிகளை ஆரம்பிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் வரையுள்ள மீட்கப்பட்ட பகுதிகளில் நிலக்கண்ணி அகற்றும் பணிகள் இடம்பெறுவதாக இராணுவப் பேச்சாளர் கூறினார்.

ஒபாமா 20-ந்தேதி பதவி ஏற்பு; ஜார்ஜ்புஷ் கடைசி உரை

world_news.jpgஅமெ ரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒபாமா வருகிற 20-ந்தேதி அதிகாரபூர்வமாக பதவி ஏற்கிறார். இப்போது அதிபராக இருக்கும் ஜார்ஜ்புஷ் அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு ஓய்வு பெறுகிறார்.ஒபாமா பதவி ஏற்பு விழா ஏற்பாடுகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

அமரிக்காவில் அதிபர் பயணம் செய்வதற்கு என்றே தனி விமானம் உள்ளது. “ஏர் போர்ஸ்-1” என்று இந்த விமானம் அழைக்கப்படுகிறது. ஜார்ஜ் புஷ் “ஏர் போர்ஸ்-1” விமானத்தில் அதிபர் என்ற முறையில் நேற்று கடைசி பயணத்தை மேற்கொண்டார்.

நார்வோக் பகுதிக்கு சென்ற புஷ் ஏர் போர்ஸ்-1 விமானத்தில் நேற்று வாஷிங்டன் திரும்பினார்.40-நிமிட நேரம் பயணம் செய்து விட்டு கீழே இறங்கிய புஷ் அந்த விமானம் ஊழியர்களுடன் கை குலுக்கி அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

20-ந்தேதி ஓய்வு பெறுவதையொட்டி புஷ் வெள்ளை மாளிகையில் இருந்து நாட்டு மக்களுக்கு டெலிவிஷன் மூலம் உரை நிகழ்த்தினார். உணர்ச்சிபூர்வமான அந்த உரையில் புஷ் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் மீண்டும் ஜனநாயகத்தை ஏற்படுத்தி இருக்கிறேன்.அமெரிக்காவில் மீண்டும் அல்கொய்தா தாக்குதல் நடப்பதையும் தடுத்திருக்கிறேன் என்று தனது சாதனைகளை விளக்கி கூறினார்.

அமெரிக்காவுக்கு ஆபத்து இன்னும் முழுமையாக அகலவில்லை.மீண்டும் தாக்குதலுக்கு தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். அடுத்த அதிபராக வரும் ஒபாமா அமெரிக்க மக்களுக்கு நிச்சயம் நம்பிக்கையூட்டும் வகையில் செயல்படுவார். அவருக்கும் அவரது மனைவி,2-மகள்கள் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் புஷ் அப்போது தெரிவித்தார்.

இந்திய தொலைக்காட்சி சேவைகளுக்கு தடைவிதிக்க பாகிஸ்தான் திட்டம்

laptop.jpgபாகிஸ் தானில் இந்திய தொலைக்காட்சி சேவைகள் ஒளிபரப்புவதற்கு தடை விதிக்கப்பட வேண்டுமென பாகிஸ்தான் பாராளுமன்ற சபை பரிந்துரை செய்துள்ளது. செய்தி ஒலிபரப்புத் துறைக்கான பாராளுமன்ற நிலைக்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போதே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இக் கூட்டத்தில் செய்தித்துறை அமைச்சர் ஹெரி ரெகிமான் கலந்து கொள்ளவில்லை. பாகிஸ்தான் தொலைக்காட்சி சேவைகளை இந்தியாவில் ஒளிபரப்புவதற்கு இந்திய அரசு தடை செய்துள்ள நிலையில், பாகிஸ்தானிலும் இந்திய தொலைக்காட்சி சேவைகளின் ஒளிபரப்புக்கு தடை விதிக்க வேண்டுமென எம்.பி.யான தாரிக் அஜீம் கோரியுள்ளார்.

இதேவேளை, மற்றொரு எம்.பி.யான ஹாஜி அஜீல் தெரிவிக்கையில்; இந்தியாவின் பொழுதுபோக்கு சேவை தொலைக்காட்சிகளைத் தான் தடை செய்ய வேண்டும். செய்திச் சேவைகளைத் தடைசெய்தால் இந்தியாவின் பிரசாரங்களை அறியமுடியாதெனத் தெரிவித்தார். ஆனாலும், மின்னியல் மற்றும் தொலைத் தொடர்புகள் கட்டுப்பாட்டு அதிகாரிகளுடன் ஆலோசித்து இந்திய தொலைக்காட்சி சேவைகளிற்கு தடை விதிக்கப்படுமென ஊடகத்துறை செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண பாடசாலைகளில் சாரணியத்தை அபிவிருத்தி செய்ய ஏற்பாடு

batti_.jpgகிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக சாரணியத்தை அபிவிருத்தி செய்ய கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. பாடசாலைகளில் சாரணியக் குழுக்களை அமைத்தல், மாவட்ட சாரணிய சங்கங்களின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குதல், சாரணிய பயிற்சிகளுக்கு உதவுதல், வருடத்திற்கு மூன்று தடவைகள் சாரணிய ஆணையாளரின் ஒன்று கூடலை நடத்துதல் போன்ற செயற்பாடுகளுக்கு மாகாண கல்வித் திணைக்களம் ஒத்துழைப்பு வழங்கவுள்ளது.

இவ் விடயம் தொடர்பான கலந்துரையாடலொன்று கடந்த வாரம் திருகோணமலை துளசிபுரத்திலுள்ள மனிதவள அபிவிருத்தி நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அக்கரைப்பற்று கல்முனை மாவட்ட சாரண ஆணையாளர் எம். ஐ.எம். முஸ்தபா, மட்டக்களப்பு மாவட்ட ஆணையாளர் எஸ். இருதயநாதன், திரு கோணமலை மாவட்ட ஆணையாளர் இராஜ ரஞ்சன், கிழக்கு மாகாண சாரண ஆணையாளர் யூ.எல்.எம். ஹாஸிம் உட்பட பல உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இஸ்ரேல் குண்டு வீச்சில் ‘ஹமாஸ்’ இயக்க அமைச்சர் பலி- ஐ. நா. சபை உதவிக்குழு கட்டடமும் தகர்ப்பு

gaza_war02.jpgபலஸ் தீனத்தின் காஸா நகரம் மீது இஸ்ரேல் விமானங்களும் பீரங்கிப் படையினரும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. 21வது நாளாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலை நிறுத்தும்படி ஐ. நா. சபை விடுத்த கோரிக்கைகளையும் இரு தரப்பினரும் ஏற்றக்கொள்ளவில்லை.

ஏற்கனவே பலஸ்தீனத்தின் காஸா நகரில் இருந்த ஹமாஸ் இயக்கத்தினரின் அலுவலகங்கள் தகர்க்கப்பட்டு விட்டன. 21 நாட்களாக நடந்த தாக்குதல்களில் பலியானவர்கள் எண்ணிக்கை 1000-க்கும் அதிகமாகிவிட்டது. இந்த நிலையில் பலஸ்தீனத்தின் ஜபாலியா பகுதியில் ஹமாஸ் இயக்கத்தின் உள்துறை அமைச்சர் சயீத் சலாம் வீடு மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசியது. இதில் அந்த அமைச்சர் பலியானார். அவரது மகன் மற்றும் சகோதரரும் இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீச்சில் கொல்லப்பட்டனர்.

காஸா பகுதியில் தாக்குதலில் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கி உள்ளவர்களுக்கு நிவாரணப் பொருள்கள், மருந்துகள், உணவுப் பொருட்கள் வழங்க ஐ. நா. சபை ஏற்பாடு செய்துள்ளது. காஸா பகுதியில் உள்ள ஐ. நா. சபை கிளை அலுவலகத்தில் டன் கணக்கில் இந்த பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டு இருந்தன.

அந்த கட்டடம் மீதும் இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசின. இதில் 3பேர் பலியானதுடன் டன் கணக்கில் மருந்து பொருட்கள் நாசம் அடைந்தன. இஸ்ரேலின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து ஐ. நா. சபை அவசரமாகக் கூடுகிறது.