யுத்தத்தைக் காரணம் காட்டி அபிவிருத்தியை நிறுத்தும் நோக்கம் அரசுக்கு இல்லை. சகல மக்களும் சுதந்திரமாகவும் உரிமைகளுடனும் வாழக்கூடிய நாட்டை விரைவாகக் கட்டியெழுப்பவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அபிவிருத்தியை நோக்கிய அரசாங்கத்தின் பயணம் எவ்வித தடையுமின்றி தொடர்ந்து செல்லும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மத்திய மாகாண சபைக்கான தேர்தல் பிரசாரக் கூட்டம் (18) மாத்தளை மாவட்டத்தின் நாவுல்ல பொது விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது. இத்தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது :-
பயங்கரவாதத்தினால் சீரழிந்திருந்த நாட்டை மீட்டெடுக்க மாவிலாறிலிருந்து தொடங்கிய மனிதாபிமான நடவடிக்கைகள் இன்று புலிகளை கடலில் தள்ளும் நிலைவரை முன்னெடுக்கப்பட்டுள்ளது. புலிகளை முழுமையாகக் கடலில் தள்ளும் காலம் வெகு தூரத்தில் இல்லை.அந்நாள் விரைவில் மலரும். அத்தினத்தில் சுதந்திரத்தின் மகிழ்ச்சியை சகலரும் கொண்டாடும் அதேவேளை, அதனைப் பெற்றுத் தந்த படைவீரர்களை கெளரவிக்கும் வகையில் உங்கள் வீடுகளில் சிங்கக்கொடியை ஏற்றுங்கள். கண்டியில் 6,500 ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் எம்மோடு இணைந்தனர். மாத்தளையிலும் இணைவர். இந்தப் பிரசார மேடையில் ஜே. வி. பி.யில் போட்டியிடும் அபேட்சகரான சரத் விஜேசிங்க எம்முடன் இணைந்துகொண்டுள்ளார். இது எமது பெரு வெற்றியினை நிரூபிக்கின்றது.
நாம் நாட்டை அபிவிருத்தி செய்யும் அதேவேளை சகல கிராமங்களின் குறைபாடுகளையும் நிவர்த்திப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். விரைவில் உங்கள் கிராமங்களும் அபிவிருத்தி காண்பது உறுதி. மாத்தளை மாவட்டத்தில் மாத்திரம் 300 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அபிவிருத்தியை மேற்கொள்ளும் பொறுப்பு எங்களுடையது. அதேபோன்று ஆதரவு வழங்கவேண்டியதும் உங்களது பொறுப்பாகிறது. எதிர்வரும் பெப்ரவரி 14ம் திகதி வெற்றிலைக்கு வாக்களித்து அரசாங்கத்துக்கு ஆதரவு தாருங்கள். இத்தேர்தலில் நீங்கள் வழங்கும் ஆதரவு ஐக்கிய இலங்கையை உருவாக்கவும் அபிவிருத்திப் பயணத்தைத் தொடரவும் மிக முக்கியமானதாக அமையும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். இந்நிகழ்வின் போது மத்திய மாகாண சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் 13 அபேட்சகர்களும் ஜனாதிபதியிடம் தமது உறுதிமொழியினைத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.