ஸ்ரீலங்கா படையினரின் ஆக்கிரமிப்புப் போரினால் வன்னியில் சிக்குண்டுள்ள மக்களின் மனிதாபிமானப் பிரச்சினைகளைத் தீர்க்கும் வழியில் விடுதலைப் புலிகளுடனான போரை நிறுத்தி உடனடிப் பேச்சு வார்த்தை ஒன்றை ஸ்ரீலங்கா அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும் என்ற அழுத்தத்தை சர்வதேச சமூகம் ஸ்ரீலங்கா அரசுக்குக் கொடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெயானந்த மூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைத்துள்ளபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன் புலம்பெயர் மக்கள் இக் கோரிக்கைகளை முன்வைத்து தத்த மது நாடுகளின் அரசுகளுக்கு கடுமையான அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் விடுதலைப்புலிகள் பலவீனமடைந்துள்ளதாக யாரும் கருதினால் விடுதலைப்புலிகளின் போரியல் தந்திரோபாயங்களை அறியாதவர்களாகவே அவர்கள் இருப்பர். புலிகள் தற்போது தம்மைப் பாதுகாத்துக் கொண்டு தக்க தருணத்திற்காக காத்திருக்கின்றனர். ஆனால் புலம்பெயர்ந்துள்ள மக்கள் வதந்திகளை நம்பாமல் தமக்கான பணிகளைச் செய்யவேண்டும். அதுவே தற்போழுது வன்னியில் சிக்குண்டுள்ள மக்களுக்கு ஏற்றதாக இருக்கும் – என்றும் ஜெயானந்த மூர்த்தி எம்.பி தெரிவித்தார்.