22

22

மலையகத்தில் மாற்றமொன்றை ஏற்படுத்த அனைவரும் எம்முடன் இணைய வேண்டும் – மனோ கணேசன் எம்.பி.

mano_ganesan_mp_.jpgநீண்ட காலமாக நாம் எதிர்பார்த்து நின்ற மலையகத்தை மாற்ற வேண்டிய அந்த வரலாற்று வேளை இன்று வந்துவிட்டது. அதில் கொழும்பு புறக்கோட்டையிலும் ஏனைய பகுதிகளிலும் புடவை , இரும்பு, நகை, உணவு மற்றும் ஏனையதுறைகள் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைத்து தமிழர்களும் தமது சொந்த ஊர்களுக்குச் சென்று எமது வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி, ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் அமைப்புகளின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்திய மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் மனோ எம்.பி. விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; மனித உரிமை மீறல்களுக்கும் அநீதிகளுக்கும் எதிரான எமது போராட்டம் இன்று சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இராஜதந்திரிகளின் கவனத்தை எம்மை நோக்கித் திருப்பியுள்ளது. தேசிய ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் எனக்கும் எமது கட்சிக்கும் கிடைத்துள்ள அங்கீகாரத்தையும் சக்தியையும் எமது மலையக உடன்பிறப்புகளுக்காக முழுமையாக பயன்படுத்துவதற்குத் தீர்மானித்துள்ளேன். மிக அதிகமாக உழைத்து மிகக் குறைவான ஊதியத்தைப் பெறும் அப்பாவித் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திட வேண்டிய கடப்பாடு எமக்கு இருக்கின்றது. கொழும்பிலே ஆரம்பித்த எங்களது வெற்றிப்பயணம் இன்று சப்ரகமுவ மாகாணத்தின் ஊடாக மத்திய மாகாணத்தைச் சென்றடைந்துவிட்டது.

மத்திய மாகாணசபைத் தேர்தலிலே எமது கட்சி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து யானைச் சின்னத்தில் போட்டியிடுகின்றது. மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக கொழும்பு வாழ் மலையக மாவட்ட தமிழர்கள் செய்ய வேண்டியது இதுதான் . நுவரெலியா , கண்டி மாவட்டங்களைச் சார்ந்த கொழும்பிலே தொழில் ரீதியாக வசிக்கும் பெரியவர்களும், இளைஞர்களும், யுவதிகளும் ஜனவரி , பெப்ரவரி மாதங்களில் தமது சொந்த ஊர்களுக்கு ஒவ்வொரு வார விடுமுறையிலும் சென்று தத்தமது தோட்டப்பகுதிகளிலும் நகரங்களிலும் எனது மலையக மாற்றத்திற்கான செய்தியையும் பிரசாரத்தையும் மேற்கொள்ள வேண்டும். நுவரெலியாவிலும் , கண்டியிலும் வாழும் தமது உறவினர்களுக்கும் , நண்பர்களுக்கும் எம்மை ஆதரித்து வாக்களிக்கும்படி தொடர்பு சாதனங்கள் மூலமாக எடுத்துக்கூற வேண்டும். பெப்ரவரி 14 ஆம் திகதி நடைபெறவிருக்கும் தேர்தலில் தவறாமல் எமது கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.

வன்னியிலிருந்து இடம்பெயர்வோருக்கு சுகாதார வசதி, போசாக்கான உணவு

hospital.jpgவன்னியில் இருந்து வவுனியாவுக்கு இடம் பெயர்ந்து வந்துள்ள மக்களுக்கும் முல்லைத்தீவில் உள்ள மக்களுக்கும் சுகாதாரவசதிகள் மற்றும் போசாக்குள்ள உணவுகள் வழங்க சகல நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டுள்ளதாக சுகாதார போசாக்கு அமைச்சின் செயலாளர் டாக்டர் அதுல கஹந்த லியனகே தெரிவித்தார்.

இங்குள்ள ஆஸ்பத்திரிகள் ஒழுங்காக இயங்கி வருவதாகவும் அவற்றுக்குத் தேவையான மருத்துவர்கள், தாதிமார் மருந்துகள், அம்பியூலன்ஸ் வண்டிகள் என்பனவும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். வன்னியில் இடம்பெறும் மனிதாபிமான நடவடிக்கை குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு  மனித உரிமைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் நடைபெற்றது. இங்கு அவர் மேலும் கூறியதாவது:

மனிதாபிமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் வட பகுதி மக்களின் சுகாதார நடவடிக்கைகளை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி எமது அமைச்சுக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.  இதன்படி ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஆகியோரின் தலைமையில் உயர் மட்ட கூட்டமொன்று நடத்தப்பட்டது. ஏனைய பகுதிகளுக்கு சமமாக வட பகுதி மக்களுக்கும் சிறந்த சுகாதார வசதிகள் மற்றும் ஏனைய வசதிகளை வழங்க இங்கு தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி எனது தலைமையிலான உயர் மட்ட சுகாதார அமைச்சின் குழுவொன்று  (19) வவுனியாவுக்கு விஜயம் செய்தது. யுனிசெப், ஐ.சி.ஆர்.சி., உலக சுகாதார ஸ்தாபனம் அடங்கலான சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களும் இதில் கலந்துகொண்டன. வன்னியில் இருந்து வந்துள்ள மக்கள் குடியமர்த்தப்பட்டுள்ள மெனிக்பாம் பகுதிக்கும் சென்று பார்வையிட்டோம். வன்னியில் இருந்து வந்துள்ள மக்களுக்கு சுகாதார வசதிகள் வழங்குவதற்கென மருத்துவர்கள், தாதிமார்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு அம்பியூலன்ஸ், போசாக்கு உணவுகள் என்பனவும் வழங்கப்பட்டுள்ளன.

 மெனிக் பாம் முகாமுக்கு அருகில் உள்ள செட்டிக்குளம் வைத்தியசாலையையும் முன்னேற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம். நெடுங்குளத்தில் உள்ள இடைத்தங்கள் முகாமில் சுகாதார நிலையமொன்றை அமைத்து தேவையான சுகாதார அதிகாரிகள், மருந்துகள், அம்பியூலன்ஸ் என்பன வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். வன்னியில் இருந்து வரும் மக்களுக்கென திரீபோசா அடங்கலான போசாக்கு உணவுகள் 40 லொறிகளில் நேற்று முன்தினம் அனுப்பப்பட்டன.

இராணுவ கட்டுப்பாடற்ற பகுதிகளில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்குத் தேவையான மருத்துவர்கள், தாதிமார்கள் மற்றும் சுகாதார உத்தியோகஸ்தர்கள் அங்கு சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அங்குள்ள ஆஸ்பத்திரிகளின் நிலைமைகள் குறித்து முல்லைத்தீவு மாவட்ட சுகாதார சேவைப் பணிப்பாளருடன் தினமும் தொடர்புகொண்டு உரையாடி வருகிறோம். அங்குள்ள குறைபாடுகள் உடனுக்குடன் தீர்க்கப்படுகின்றன. மனிதாபிமான நடவடிக்கைகள் காரணமாக ஆஸ்பத்திரி செயற்பாடுகளுக்கோ, பொதுமக்களுக்கோ எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை. புதுக் குடியிருப்பு ஆஸ்பத்திரி மீது ‘செல்’ விழுந்து 18 நோயாளிகள் இறந்ததாக பி.பி.சி. செய்தி வெளியிட்டிருந்தது. இந்த செய்தியை முற்றிலும் நிராகரிக்கின்றோம்.

செல் தாக்குதலினால் இரு நோயாளிகள் சிறுகாயமடைந்ததாக ஆஸ்பத்திரி மருத்துவர் ஒருவர் என்னிடம் கூறினார். இந்த தாக்குதலை யார் செய்தனர் என்று தெரியாது. தாக்குதலில் புலிகள் இறந்ததை சிவிலியன்கள் என பி.பி.சி. தவறாக செய்தி வெளியிட்டிருக்கலாம். செல் விழுந்து சிவிலியன்கள் பலியானதாக தவறான தகவல் வழங்கிய மருத்துவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.

இராணுவ கட்டுப்பாடற்ற பகுதியில் உள்ள நோயாளிகள் வவினியாவுக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்கப்படுகின்றனர். இவ்வாறு வந்த 34 நோயாளிகள் சிகிச்சை பெற்ற பின் மீண்டும் புதுக்குடியிருப்புக்கு திரும்பிச் சென்றுள்ளனர். தமது உறவினர்கள் அங்கு இருப்பதால் அவர்கள் புதுக்குடியிருப்பிற்கு திரும்பிச் சென்றனர். மூன்று தினங்களுக்கு முன் மருத்துவர் ஒருவர் 7 கர்ப்பிணி தாய்மார்களை அழைத்துக்கொண்டு வவுனியா வந்தார்.

ரணிலின் உரை ஒலிபரப்பாகும்போது இடையில் பாடல் ஒலிபரப்பு

ranil-2912.jpgபாராளு மன்றத்தில் தான் ஆற்றிய உரை வானொலியில் ஒலிபரப்பாகும்போது இடையில் பாடல் ஒலிபரப்பியதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று செவ்வாய்க்கிழமை சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை  ஐக்கிய தேசியக் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்திலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பாக ஏற்பட்டிருந்த சர்ச்சையின் இடைநடுவே பேசும்போதே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறினார்.

சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியரான லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பாக தான் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் ஊடாக பி.பி.சி. சிங்கள செய்தி சேவையில் ஒலிபரப்பப்பட்ட போது இடையில் பாட்டு ஒலிக்கச் செய்யப்பட்டதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அத்துடன் தனது உரைக்கு இடைநடுவில் பாராளுமன்றத்திலேயே பாட்டு ஒலிக்கச் செய்யப்பட்டதா அல்லது இலங்கை ஓலிபரப்பு கூட்டுத்தாபனத்திலிருந்து ஒலிக்கச் செய்யப்பட்டதா என்று அவர் நகைச்சுவையாக கேள்வியும் எழுப்பினார்.

படகில் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 19 பேர் கைது

handcuff.jpgபுத்தளம், மாரவில பகுதியிலிருந்து இயந்திரப் படகொன்றில் அவுஸ்திரேலியா நோக்கி திங்கட்கிழமை மாலை புறப்பட்ட 19 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். படகோட்டி ஒருவருக்கு பெருந்தொகை பணம் செலுத்திய 19 பேர் கடந்த 15 ஆம் திகதி மாரவில கரையிலிருந்து படகில் புறப்பட்டனர்.

எனினும் சீரற்ற காலநிலை காரணமாக இவர்கள் சென்ற இயந்திர படகு பயணத்தை மேற்கொள்ள முடியாத நிலையில் கரைதிரும்பியது. இதையடுத்து இந்தப் 19 பேரும் கட்டுநேரிப் பகுதியில் வீடொன்றில் தங்கவைக்கப்பட்டனர். மீண்டும் திங்கட்கிழமை மாலை மாரவில கரையிலிருந்து அந்த இயந்திரப் படகில் அவுஸ்திரேலியா நோக்கிப் புறப்பட்டனர். இவர்களது நடமாட்டத்தை அவதானித்த அப் பகுதியைச் சேர்ந்த சிலர் இது பற்றி மாரவில பொலிஸாருக்கு அறிவிக்கவே, இவர்கள் புறப்படும் போது அங்கு வந்து 19 பேரையும் கைதுசெய்தனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, இதில் 15 பேர் தமிழ் இளைஞர்களெனவும் ஐவர் சிங்கள இளைஞர்களெனவும் தெரியவந்தது. மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மதமாற்ற தடைச்சட்டத்தை மீண்டும் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முயற்சி – கிறிஸ்தவ அமைப்பு கண்டனம்

மத மாற்றத் தடைச்சட்டத்தை மீண்டும் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளை மத சுதந்திரத்துக்கான கிறிஸ்தவ அமைப்பு கடுமையாக கண்டித்துள்ளது. தனிமனித சுதந்திரத்தை மறுக்கும் இச்செயலுக்கு எதிராக மக்கள் சக்தியை அணிதிரட்ட அந்த அமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது.  இது தொடர்பில் திங்கட்கிழமை கொழும்பு அளுத்மாவத்தையிலுள்ள இயேசு ஜீவிக்கிறார் பணிமனையில் நடைபெற்ற விஷேட ஊடகவியலாளர் மாநாட்டில் கடும் கண்டனமும் எதிர்ப்பும் வெளிப்படுத்தப்பட்டதோடு விஷேட அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

மீண்டும் ஒரு முறை மதமாற்ற தடைச் சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற, சில புத்த பிக்குகள் நினைக்கிறார்கள். இதை நாம் வன்மையாக எதிர்க்கிறோம். இந்தச் சட்டம் கொண்டு வரப்படுமாயின், சுவிசேஷம் சொல்ல முடியாது, ஆன்மீகக் கூட்டங்களுக்குத் தடை, ஞானஸ்தானம் கொடுக்க முடியாது, வீட்டுக் கூட்டங்கள், வைத்தியசாலை ஜெபங்கள் செய்ய முடியாது, மதப் பிரசார சுவரொட்டிகள் ஒட்டுவது போன்ற முறைகளை இந்தச் சட்டம் தடுப்பதால், நற்செய்தி அறிவிப்பது அழுத்தத்துக்குள்ளாகி இந்த நாட்டிலுள்ள கிறிஸ்தவர்களின் மத உரிமையும் சுதந்திரமும் பாதிக்கப்படுவதால் நாம் இதை வன்மையாக எதிர்க்கிறோம்.

இலங்கை அரசியல் யாப்பின் 3 ஆம் அத்தியாயம் 10,12 ஆம் ஷரத்துக்களின்படி ஒவ்வொரு மனிதனும் தனது சுய சிந்தனைக்கு சுதந்திரமானவனென்றும், சுய நினைவின்படி முடிவெடுக்கவும் ஒரு மதத்தின் கொள்கையை பின்பற்றவோ அல்லது ஒரு மதத்தை தழுவவும் அல்லது ஒரு நம்பிக்கையை தன் விருப்பப்படி பின்பற்றவும் சுதந்திரமானவன் என்றும் எந்த பிரஜையும் சாதி, சமயம், மொழி, பால், அரசியல் நோக்கம், பிறந்த இடம் இப்படிப்பட்ட நிலைமைகளில் ஒடுக்கப்படலாகாது என்றும் உள்ளது. ஆகவே ஒவ்வொரு மனிதனும் தனது சுயவிருப்பத்திற்கமைய எந்த சமயத்தையும் தெரிந்தெடுக்கவும் உரிமை உடையவன்.

2003 ஆம் ஆண்டு  இந்தச் சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கப்பட்டு பல எதிர்ப்புக்களால் கைவிடப்பட்டது. மீண்டும் 2004 ஆம் ஆண்டு இச்சட்டமானது ஹெல உறுமயவினால் கொண்டு வர முயற்சிக்கப்பட்டு பாராளுமன்ற குழப்ப நிலைமைகளால் கைவிடப்பட்டது. மீண்டும் 3 ஆம் முறையாக இச்சட்டத்தை கொண்டுவர முயற்சிப்பது கவலைக்குரிய விடயமாகும். எனவே இந்த சட்டத்தை இலங்கை வாழ் கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல, சர்வதேச ரீதியில் உலகம் வாழ் கிறிஸ்தவர்களும் எதிர்க்கின்றனர். கிறிஸ்தவ நாடுகள் மற்ற சமயங்களிலுள்ளவர்களுக்கு இடையூறு விளைவித்து, சமய நம்பிக்கைகளில் தடைகள் ஏற்படுத்துவதில்லை. சகலருக்கும் மத சுதந்திரம் கொடுத்துள்ளார்கள்.

அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ள மத சுதந்திரத்தைப்பாதுகாப்பது அரசாங்கத்தின் கடப்பாடாகும். எனவே ஜனாதிபதியிடம் நாம் வலியுறுத்திக் கேட்பது மீண்டுமொருதடவை மதமாற்றத்தடைச்சட்டத்தைக் கொண்டு வரும் முயற்சியை உடனடியாகத் தடுத்து நிறுத்துமாறும் சகல இனமக்களும் ஒற்றுமையுடன் வாழும் நிலையை உறுதிப்படுத்துமாறும் கேட்கின்றோம்.  தேசிய கிறிஸ்தவ சகோதரத்துவத்தின் செயலாளர் வணபிதா ரொஷான் டி.எஸ்.ஏக்கநாயக்க கருத்துத் தெரிவிக்கையில் இந்த நாட்டில் சமீபகாலமாக கிறிஸ்தவ மக்கள் மிகவும் மோசமாக கணிக்கப்பட்டு வருவதாகவும் அடிமைகள் போல் நடத்தப்பட்டு வருவதாகவும் விசனம் தெரிவித்தார். ஒரு ஜனநாயக நாட்டில் மத சுதந்திரம் மறுக்கப்படுவதை எவராலும் அனுமதிக்க முடியாது. அதுவும் சட்டத்தின் மூலம் தடை செய்ய முயற்சிப்பதன் மூலம் ஜனநாயகம் வலுவிழக்கச் செய்யப்படுவதாகவே கருத வேண்டியுள்ளது. எனவே நாட்டிலுள்ள அனைத்து கிறிஸ்தவ மக்களும் மத மாற்றத் தடை முயற்சிக்கு எதிராகப் போராடத் தயாராக வேண்டுமென அழைப்பு விடுத்தார்.