உலக நாடுகள் சிலவற்றில் இடம்பெற்ற சர்வாதிகார ஆட்சியை விடவும் பயங்கரமான கொடுங்கோல் ஆட்சி தற்போது இலங்கையில் நடைபெற்று வருவதாகத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இந்திய மத்திய அரசு இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இரட்டைவேடம் போடுவதாகவும் விசனம் தெரிவித்தது. பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ரணவிரு சேவா அதிகாரசபை தொடர்பான திருத்தச்சட்டமூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என் ஸ்ரீகாந்தா இவ்வாறு தெரிவித்தார். மேலும் கூறியதாவது;
வன்னியில் மிகப் பாரியளவில் இடம்பெற்று வரும் விமானக்குண்டுவீச்சு , ஷெல் தாக்குதல்கள் , பல்குழல் பீரங்கித் தாக்குதல்களினால் அப்பாவிப் பொதுமக்கள் தினமும் பெருமளவில் கொல்லப்பட்டு வருகின்றனர். பலர் படுகாயமடைகின்றனர். சொத்துகள் அழிக்கப்படுகின்றன. வன்னியில் பொதுமக்களுக்கு அரச படைகளால் ஏற்படுத்தப்படும் உயிரழிவுகள் தொடர்பில் எம்மிடம் தேவையான ஆதாரங்கள் உள்ளன. கடந்த 3 தினங்களில் மட்டும் வன்னியில் இடம்பெற்ற விமானக்குண்டுவீச்சு, ஷெல் தாக்குதல்கள் , பல்குழல் பீரங்கித் தாக்குதல்களினால் 55 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 230 பேர் படுகாயமடைந்துள்ளனர். 3 மாதக் குழந்தையும் சிறுவர்களும் கூட இத்தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர். இதுவொரு பாரதூரமான மனிதாபிமானப் பிரச்சினை. போரில் சம்பந்தப்படாத பொதுமக்கள் கொல்லப்படுவது இலங்கை அரசைப் பொறுத்தவரை மிகவும் சாதாரணதொரு நிகழ்வாகவே பார்க்கப்படுகின்றது.
வன்னியில் இடம்பெற்றுவரும் மனிதப் படுகொலைகள், மக்களின் அவலங்கள் தமிழ் ஊடகங்களில் மட்டுமே வெளிக்கொண்டு வரப்படுகின்றன. ஊடக சுதந்திரம் பற்றிப் பெரிதாக பேசிக்கொள்ளும் ஆங்கில, சிங்கள ஊடகங்கள் வன்னி மக்களின் உயிரழிவுகளை, அவர்களின் அவலங்களைத் திட்டமிட்டு இருட்டடிப்பிச் செய்கின்றன. தம்மைப் பெரிய ஊடகவியலாளர்களாக காட்டிக்கொள்பவர்கள் கூட இந்த அப்பாவித் தமிழ் மக்களின் மனிதாபிமான அவலங்களை வெளிக்கொண்டுவர விருப்பமின்றியுள்ளனர். இதுதான் தென்னிலங்கை ஆங்கில,சிங்கள ஊடகங்களின் நிலை.
தமிழ் மக்கள் மீது இனப்படுகொலைத் தாக்குதல்களை இந்த அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ளது. வன்னியில் அரச படைகளால் அப்பாவித் தமிழ் மக்கள் வேட்டையாடப்பட்டு கொன்றொழிக்கப்படுகின்றனர். கடந்த டிசம்பர் மாதம் 17 ஆம் திகதியிலிருந்து இன்றுவரை 115 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 410 பேர் படுகாயப்படுத்தப்பட்டுள்ளனர்.தமிழின அழிப்பை இந்த அரசு பகிரங்கமாகச் செய்து வருகின்றது.
இலங்கையில் இடம்பெறும் தமிழினப் படுகொலை தொடர்பாக தமிழகத்திலுள்ள 7 கோடித் தமிழ் மக்களும் கொந்தளித்துப் போயுள்ளனர். அங்கு இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகவும் போருக்கு எதிராகவும் போராட்டங்கள் உத்வேகம் பெற்று வருகின்றன. வன்னியில் மக்கள் வேட்டையாடப்படுவதை இனியும் தமிழினம் சலித்துக் கொள்ளாது. இலங்கைத் தமிழர் தொடர்பாக தமிழகத்தில் கொந்தளிப்பான நிலை ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய மத்திய அரசு இரட்டைவேடம் போடுகிறது. இந்திய மத்திய அரசு நினைத்திருந்தால் இலங்கையில் போர்நிறுத்தத்தை கொண்டுவந்திருக்க முடியும். ஆனால், போர்நிறுத்தத்தைக் கொண்டுவர வேண்டுமென்பதில் அது ஆர்வம் காட்டவில்லை. தனது சொந்த நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே மத்திய அரசு செயற்பட்டு வருகின்றது.
இந்திய மத்திய அரசின் இந்த இரட்டைவேடப் போக்கை நாம் மிக வன்மையாகக் கண்டிக்கின்றோம். தமிழின விரோதப் போக்கு குறித்து விசனமடைகின்றோம். தமிழினப் படுகொலையை வேடிக்கை பார்க்கும் இந்திய மத்திய அரசின் நிலைப்பாடு தொடர்பில் தமிழ் மக்கள் விரக்தியும் விசனமும் அடைந்துள்ளனர். இப்போது கூட போர் நிறுத்தத்தை ஏற்படுத்தக் கூடிய சந்தர்ப்பம் இந்திய மத்திய அரசுக்கு உள்ளது.
சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு முரணாகவும் ஜெனீவா உடன்படிக்கைக்கு விரோதமாகவும் தமிழ் மக்களின் உயிர்களுக்கு இலங்கை அரசு படைகள் வேட்டு வைப்பதை சர்வதேச நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும். இனியாவது சர்வதேச நாடுகள் தமது கண்களைத் திறந்து பார்த்து அழிவடைந்து கொண்டிருக்கும் தமிழினத்தைக் காப்பாற்ற வேண்டுமெனக் கோருகின்றோம். இலங்கை அரசிடமும் தமிழினப் படுகொலையை உடனடியாக நிறுத்துமாறு கேட்கின்றோம். போரில் சம்பந்தப்படாத அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாதென்பதையும் சுட்டிக்காட்டுகின்றோம்.
இலங்கையை தற்போது மனித உரிமைகள் தொடர்பாக கிஞ்சித்தும் கவலைப்படாத கொலை வெறிபிடித்த அரசாங்கமே ஆட்சிபுரிகின்றது. இதுவொரு கொலைகார அரசாங்கம். உலகில் நாம் எத்தனையோ சர்வாதிகாரிகளைப் பார்த்திருக்கின்றோம். ஹிட்லர், பொக்காசோ போன்ற சர்வாதிகாரிகளின் ஆட்சியை விடவும் மிகவும் மோசமான கொடுங்கோல் ஆட்சியே தற்போது இலங்கையில் நடைபெறுகிறது. இங்கு நடக்கும் அநியாயங்கள் , அட்டூழியங்கள் , இனப்படுகொலையைப் போல் நாம் எங்கும் பார்த்ததில்லை. தமிழ் மக்கள் இந்த அரசின் முகத்தில் எச்சில் உமிழ்கிறார்கள்.
அரசியல் தீர்வு என்ற விடயத்தில் விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்தினால் மட்டுமே அது சாத்தியம் என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாகவுள்ளது. பேச்சுக்குமுன் யுத்த நிறுத்தம் அவசியம். அதன் பின் நிபந்தனையற்ற பேச்சு என்பதிலும் நாங்கள் உறுதியான நிலையில் உள்ளோம். இதனை பல தடவைகள் அரசுக்கும் தெரியப்படுத்தியுள்ளோம். இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பில் இந்தியாவுக்கு ஒரு நிகழ்ச்சி நிரல் உண்டு. இலங்கை அரசுக்கு ஒரு நிகழ்ச்சி நிரல் உண்டு. ஆனால், எமக்குள்ள ஒரே நிகழ்ச்சி நிரல் போர் நிறுத்தம் ஒன்று மட்டுமே.
விடுதலைப் புலிகளிடமிருந்து நிலப்பகுதிகளைக் கைப்பற்றியதன் மூலம் விடுதலைப் புலிகளை முற்றாக அழித்து விடுவோம் என்று அரசு கூறி வருகின்றது. இது வெறும் பகல் கனவு. கிழக்கை விடுதலைப் புலிகளிடமிருந்து முற்றாக விடுவித்து விட்டதாக கூறிய அரசுக்கு அங்கு என்ன நடக்கின்றது என்பது புரியும். கிளிநொச்சியை பிடித்து விட்டோம். புலிகளை காட்டுக்குள் விரட்டி விட்டோம். விரைவில் அவர்களை கடலுக்குள் தள்ளி விடுவோம் என அரசு கூறி வருகின்றது. இப்படிக் கூறுபவர்கள் அறிவிலிகளாகவே இருப்பார்கள். விடுதலைப் புலிகளை எந்த சக்தியாலும் தோற்கடித்து விட முடியாது. தமிழ் மக்களின் உரிமைக்காக 25 வருடங்களுக்கும் மேலாக போராடி வரும் அமைப்பொன்றை அவ்வளவு எளிதில் எவராலும் அழிக்கவோ வெற்றி பெறவோ முடியாது.
தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கின்ற அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இந்திய அரசால் ஏமாற்ற முடியாது. இவர்கள் மட்டுமென்ன வேறு எந்த அரசினால் கூட ஏமாற்ற முடியாது. இதனை இந்திய அரசு புரிந்து தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் 75 வீதமானோர் இந்துக்கள். நாம் மதத்தைப் பயன்படுத்தி இந்தியாவில் பிரசாரத்தில் இறங்கினோம் என்றால் அங்கு நிலைமை எவ்வாறு மாற்றமடையும் என்பதை இந்திய அரசு புரிந்து வைத்திருக்க வேண்டும்.
இந்த நாட்டில் தமிழினப் படுகொலை இடம்பெற்று வருகையில் வன்னியில் தினமும் மக்கள் செத்து மடிகையில் அதைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாத அக்கறைப்படாத இடமாகக் காணப்படும் இந்த சபையில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் என்ற வகையில் நாம் தொடர்ந்தும் இருக்க வேண்டுமா?. நாம் இச் சபையில் தொடர்ந்தும் இருப்பது நியாயமாவென எம்மை எமது மனச்சாட்சி கேட்கத் தொடங்கி விட்டது. எனவே, நாம் மீண்டும் மீண்டும் இந்த அரசிடம் தமிழினப் படுகொலைகளை நிறுத்தி போர் நிறுத்தத்தை ஏற்படுத்தி பேச்சு மூலம் தீர்வு காண முன்வர வேண்டும் என கேட்கின்றோம்.