24

24

லங்கா ஈ நியூஸ் பிரதம ஆசிரியர் 4ஆம் மாடியில் நேற்று தீவிர விசாரணை

லங்கா ஈ நியூஸின் பிரதம ஆசிரியர் சந்துருவன் சேனாதீர நேற்று குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிஸாரால் (சி.ஐ.டி.) தீவிர விசாரணைக்குட் படுத்தப்பட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவின் முறைப்பாடொன்றையடுத்தே இவர் சி.ஐ.டி.யினரால் விசாரணைக்குட் படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு கோட்டையிலுள்ள சி.ஐ.டி.யினரின் தலைமையகமான நான்காவது மாடிக்கு வரவழைக்கப்பட்டே ஆறு மணிநேரத்துக்கும் மேலாக நேற்று தீவிர விசாரணைக்குட் படுத்தப்பட்டார்.கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தில் வெளியான செய்தி ஒன்று தொடர்பாகவே இவரிடம் இரகசியப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  இந்தச் செய்தி தொடர்பாக முன்னரும் லங்கா ஈ நியூஸ் அலுவலகத்துக்கு வந்து சி.ஐ.டி.யினர் விசாரணைகளை மேற்கொண்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்
 

விடுதலைப் புலிகளின் கண்ணிவெடி தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் பாரிய முகாம்கள் கண்டுபிடிப்பு

_army.jpgமுல்லைத் தீவு புதுகுடியிருப்புக்கு மேற்கில் அமைக்கப்ப ட்டிருந்த புலிகளின் கண்ணிவெடிகள் தயாரிக்கும் தொழிற்சாலை உட்பட பாரிய முகாம் தொகுதி ஒன்றை பாதுகாப்புப் படையினர் நேற்று முன்தினம் கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்றுத் தெரிவித்தார்.

முல்லைத்தீவை நோக்கி முன்னேறிவரும் இராணுவத்தின் இரண்டாவது செயலணியினர் உடையார் கட்டுக்குள காட்டுப்பகுதியில் புதுகுடியிருப்புக்கு மேற்கே அமைந்துள்ள இந்த முகாமை தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்தப் பிரதேசத்தில் படைநடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இராணுவத்தின் இரண்டாவது செயலணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் ரோஹன பண்டார தலைமையிலான படையினர் அங்கு பாரிய தேடுதலுக்கு மத்தியில் தமது நிலைகளை பலப்படுத்தி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கண்ணிவெடிகள் தயாரிக்கும் தொழிற்சாலை, கட்டளை பணியகம் பாதுகாப்பான பதுங்கு குழிகள், மண் அரண்கள் மற்றும் சில களஞ்சியசாலைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய பாரிய முகாம் தொகுதியாகவே இது அமையப் பெற்றுள்ளது.

அதிசக்தி வாய்ந்த ஜெனரேட்டர்கள் மூலம் 3 வழி மின்சாரம் வழங்கப்பட்டுள்ள இந்த முகாமிலிருந்து ரி – 55 ரக சேதமடைந்த யுத்த தாங்கி – 01, பெருந் தொகையான கண்ணிவெடிகள், வெடிமருந்துகள், 81 மி. மீ. ரக மோட்டார் குண்டுகள், 61 மி. மீ. ரக மோட்டார் குண்டுகள், பெருந்தொகையான பிளாஸ்டிக் கலன்கள், இரும்பு போலைகள், பற்றரிகள், பெருந்தொகையான சிலிண்டர்கள், மற்றும் வயர்களையும் மீட்டெடுத்துள்ளனர். இது தவிர பெருந்தொகையான பி. வி. சி. குழாய்கள் மற்றும் இரும்பு குழாய்களையும், களஞ்சிய பகுதியிலிருந்து படையினர் மீட்டெடுத்துள்ளனர்.

இதேவேளை இராணுவத்தின் 57 வது படைப்பிரிவினர் தமது பாதுகாப்பு முன்னரங்குகளை மேலும் விஸ்தரித்துள்ளனர். அத்துடன் 574 வது படையினரின் கட்டளைத்தளபதி லெப்டினன்ற் கேர்ணல் சேனக விஜேசூரிய தலைமையிலான குழுவினர் நெத்தலியாறு பிரதேசத்தை ஊடுறுத்து விசுவமடுவின் மேற்கு எல்லை புரத்திற்குள் பிரவேசித்துள்ளனர். புதுகுடியிருப்பு, விசுவமடு பகுதிகளில் இரு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களின் பின்னர் படையினர் நடத்திய தேடுதலின் போது கொல்லப்பட்ட புலிகளின் ஆறு சடலங்களையும் பெருந்தொகையான ரி – 56 துப்பாக்கிகளையும் மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

சவூதி அரேபியாவிற்கான இலங்கை தூதரகம் வேறு இடத்திற்கு மாற்றம்

saudi-0301.jpg
கொழும்பிலுள்ள சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதரகம் நாளை மறுதினம் திங்கட்கிழமை முதல் 43 ஹோட்டன் பிளேஸ் கொழும்பு – 07 எனும் முகவரியில் செயற்படும் என்று தூதரகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி ஐ. எல். எம். மாஹிர் தெரிவித்தார்.

சவூதி அரேபியாவின் கொழும்பு தூதரகம் புதிய இடத்திற்கு மாற்றப்பட்டுள்ள போதிலும், தூதரகத்தின் அனைத்து அலுவல்களும் வழமைபோல் இடம்பெறுவதுடன் பழைய தொலைபேசி இலக்கங்கள் தொடர்ந்தும் பாவனையில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

முல்லைத்தீவிலுள்ள புலிகளின் 3 இலக்குகள் மீது தாக்குதல்

jet-1301.jpgமுல்லைத் தீவிலுள்ள புலிகளின் அடையாளங் காணப்பட்ட மூன்று இலக்குகள் மீது விமானப் படையினர் நேற்று கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். விமானப் படைக்குச் சொந்தமான ஜெட் ரக போர் விமானங்கள் மற்றும் எம் – ஐ 24 தாக்குதல் விமானங்களை பயன்படுத்தி நடத்தப்பட்ட மூன்று தாக்குதல்களும் வெற்றியளித்துள்ளதாக விமானப் படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார். முல்லைத்தீவு நகருக்கு தென் பகுதி விசுவமடுவுக்கு கிழக்கு ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள புலிகளின் பாதுகாப்பு முன்னரங்கு நிலைகள் மற்றும் மண் அரண்கள் மீதே விமானப் படையினர் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

முல்லைத்தீவை நோக்கி முன்னேறிவரும் இராணுவத்தின் 57வது, 59வது படைப் பிரிவினர்கள் மற்றும் இரண்டாவது செயலணியினர் ஆகியவற்றுக்கு உதவியாகவே இந்த விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஜனக நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் அறிக்கைக்கு பிரித்தானிய தமிழர் பேரவை கண்டனம்

BTF Banner._._._._._.

அண்மைய இலங்கை நிலவரம் தொடர்பாக ஜனவரி 21ல் பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அமைப்பு விவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையை பிரித்தானிய தமிழர் பேரவை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. பிரித்தானிய வெளிவிககார மற்றும் பொதுநலவாய விவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையையும் பிரித்தானிய தமிழர் ஒன்றியத்தின் அறிக்கையையும் கீழே காணலாம்.
._._._._._.

அண்மைய இலங்கை நிலவரம் தொடர்பாக ஜனவரி 21ல் பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அமைப்பு விவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கை :
._._._._._.

பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிரவுண் அண்மைய இலங்கை நிலவரம் தொடர்பாக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு உத்தியோகபூர்வமான கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து உள்ளார். அதனைக் குறிப்பிட்டு பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அமைப்பு விவகார அமைச்சர் டேவிட் மிலபான்ட் ஜனவரி 21 எழுத்து மூலமான அறிக்கையை வெளியிட்டு உள்ளார். அவ்வறிக்கையின் தொகுப்பு இங்கு தமிழில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. குறிப்பு: நேரடி மொழிபெயர்ப்பல்ல.

Sri Lanka Written Ministerial Statement (21/01/2009) Written Ministerial Statement by the Secretary of State for Foreign & Commonwealth Affairs on Sri Lanka, 21 January 2009.
http://www.fco.gov.uk/en/newsroom/latest-news/?view=PressS&id=12533815

._._._._._.

கடந்த 26 ஆண்டுகளில் 70,000 உயிர்கள் பறிக்கப்பட்ட நிலையில் உள்ள இலங்கையில் பிரித்தானிய அரசாங்கம் சமாதானத்தை முன்னெடுப்பதில் கரிசனையாக இருந்து வருகிறது. நாங்கள் தற்போது ஒரு முக்கிய காலகட்டத்தில் இருக்கிறோம்.

2002 யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை ஜனவரி 2008ல் முடிவுக்கு கொண்டு வந்த இலங்கை அரசு எல்ரிரிஈ யை இராணுவ ரீதியில் வெற்றிகொள்வதை கொள்கையாகக் கொண்டு உள்ளது. அண்மைக் காலத்தில் எல்ரிரிஈ யின் நிர்வாகத் தலைநகரமான கிளிநொச்சியைக் கைப்பற்றியது மற்றும் யாழ்ப்பாணக் குடாநாட்டில் எல்ரிரிஈயின் சில பகுதிகளைக் கைப்பற்றியது உட்பட இலங்கை அரசாங்கம் குறிப்பிடத்தக்க இராணுவ வெற்றிகளைப் பெற்று உள்ளது. இந்த வெற்றிகள் அரசியல் தீர்வை நோக்கி முன்னேற வேண்டியதன் அவசியத்தையும் அவசரத்தையும் ஏற்படுத்தி உள்ளது. எல்ரிரிஈ ஒரு தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு. அதற்கு தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஜனநாயகப் பொறுப்பு இல்லை. கடந்த மூன்று சகாப்தங்களாக அனைத்து சமூகங்களைச் சார்ந்த இலங்கை மக்களுக்கு எதிராகவும் பயங்கரவாதத்தை மேற்கொண்டதற்கு எல்ரிரிஈயே பொறுப்பு.

2006ல் மீண்டும் யுத்த முனைப்புகள் ஆரம்பிக்கப்பட்டது முதல் ஆயிரக்கணக்கான உயிர்கள் இழக்கப்பட்டு உள்ளது. இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டும் என்பதை நாங்கள் விளங்கிக்கொள்கிறோம். அதேசமயம் தனது மக்களுடைய உரிமைகளைப் பாதுகாக்கும் அவர்களுடைய அரசியல் நியாயங்களை சரியான வகையில் வெளிப்படுத்தும் பொறுப்பு இலங்கை அரசாங்கத்திற்கு உண்டு. நிரந்தரமான சமாதானம், இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களினதும் – சிங்களம் தமிழ் முஸ்லீம் என அனைவரையும் உள்ளகப்படுத்தும் அரசியல் செயற்பாடு அவசியம். அதுவே எங்களுடைய நிலைப்பாடாக தொடர்ந்தும் இருந்து வருகிறது. நாங்கள் இந்த மோதல் முற்றுப் பெறுவதைப் பார்க்க வேண்டும். நிரந்தரமான அரசியல் தீர்வை நோக்கிச் செல்ல வேண்டும். இந்த நோக்கத்திற்காக நாங்கள் இலங்கையில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுடனும் சகல சமூகங்களுடனும் தொடர்புகளை வைத்திருப்போம் அவர்களுக்கு ஆதரவளிப்போம்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள மனித அவலச் சூழல் – அதிகரித்துவரும் உள் இடப்பெயர்கள் பற்றி நாங்கள் மிகவும் கரிசனையாக உள்ளோம். இதுபற்றி கடந்த செப்ரம்பரில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச லண்டன் வந்திருந்த போது என்னுடைய நண்பர் மதிப்பிற்குரிய பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிரவுன் பேசியிருந்தார். உள்ளக இடப்பெயர்வு தொடர்பாக உயர்மட்டத்தில் எங்கள் கரிசனையை வெளிப்படுத்தி இருக்கிறோம். மோதல் இடம்பெறுகின்ற பகுதிகளில் 200 000 – 300 000 வரையான உள்ளிடம் பெயர்ந்தவர்கள் சிக்குண்டு உள்ளதாக ஐநா மதிப்பிட்டு உள்ளது. மனிதாபிமான உதவிகள் அனுப்பப்பட்ட போதும் அவை போதக் கூடியவை அல்ல என நம்பகரமான அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இலங்கை இராணுவத்தின் வெற்றிகள் உள்ளிடம் பெயர்ந்தவர்களை மிகவும் குறுகிய ஒரு பிரதேசத்திற்கள் தள்ளுகின்றது. இந்த நிலை இன்னும் மோசமானால் மனித வலமும் மோசமடையும்.

கடந்த செப்ரம்பரில் Department for International Development (DFID)  எடுத்த தீர்மானங்களின் தொடர்ச்சியாக DFID மனிதாபிமான பணி நிபுணர்கள் குழு இன்னும் சில வாரங்களில் இலங்கைக்குச் சென்று அங்குள்ள நிலைமைகளை மதிப்பிட உள்ளது. மேலும் அவர்கள் வடக்கில் இடம்பெயர்ந்தவர்களின் மனிதாபிமானப் பணிகளுக்கு வழங்கப்பட்ட 2.5 மில்லியன் பவுண்கள் எவ்வாறு விநியோகிக்கப்பட்டு உள்ளது என்பது பற்றியும் அறிக்கை வழங்குவார்கள். குறிப்பாக பொது மக்களின் பாதுகாப்பு, அவர்களின் சுதந்திரமான நடமாட்டம், மனிதாபிமான உதவிகளைப் பெறுவது விடயங்களில் களத்தில் உள்ள சர்வதேச அமைப்புகளுடன் தொடர்புபட்டு அங்குள்ள அனைத்து தரப்பினரும் சர்வதேச மனிதாபிமான விதிகைளக் கடைப்பிடிக்க வேண்டும். மோதல் இடம்பெறும் இடங்களில் இருந்து பொது மக்கள் தப்பிக் கொள்வதற்கான பாதுகாப்பான வழியை அனைத்து தரப்பினரும் உறுதிப்படுத்த வேண்டும். பாதுகாப்பான மனிதாபிமான வலயம் உருவாக்கப்பட வேண்டும். இடம்பெயர்ந்தவர்களுடைய மனிதாபிமான தேவைகள் பற்றிய சுயாதீன மதிப்பீடு ஒன்று அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம். இவ்வாறான ஒரு மதிப்பீடு தான் பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு செய்யக் கூடிய அனைத்தும் செய்யப்பட்டு உள்ளது என்பதனை வெளிப்படுத்தும். நாங்கள் தொடர்ந்தும் இந்த விடயங்களுக்கு அழுத்தம் கொடுப்போம்.

இலங்கையின் ஊடக சுதந்திரத்தின் மீது அதன் உயர்மட்டத்தில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான தாக்குதல்கள் அண்மைய வாரங்களில் இடம்பெற்று உள்ளதைக் காண்கிறோம். நாங்கள் இவ்வாறான தாக்குதல்களை கண்டிக்கிறோம். குறிப்பாக ஜனவரி 8ல் சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொலை செய்யப்பட்டது. இது தொடர்பாக உடனடியாக முழுமையான சுயாதீனமான விசாரணையை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு இலங்கை அதிகாரிகளுக்கு உண்டு. அதற்கு பொறுப்பானவர்கள் நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறான வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்படுவதில் ஏற்படும் அசிரத்தை உடனடி நடவடிக்கை அவசியம் என்பதை வலியுறுத்துகிறது.

ஆட்கடத்தல், காணாமல் போதல், வன்முறை, அவமதித்தல் என்பன இலங்கையில் தொடர்வதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சுயாதீன மனித உரிமைகள் அறிக்கைகளுக்கான உறுதியான பொறிமுறையின்றி இப்பிரச்சினையை மதிப்பிடுவது கடினமானது. மனித உரிமைகளை மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது உட்பட மனித உரிமை மீறல்களை கையாள்வதற்கான உறுதியான நடவடிக்கையை இலங்கை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்தும் கோருகிறோம். இந்த முரண்பாட்டை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வருவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்த இலங்கையில் உள்ள சமூகங்கள் அனைத்தும் அச்சம் இல்லாமல் வாழ்வதற்கான சூழல் ஏற்டுத்தப்பட வேண்டும். எங்களுடைய அழுத்தங்களைத் தொடர்ந்து அயுதக் குழுக்களால் சிறுவர் படையணயில் உள்ளவர்கள் விடுவிக்கப்பட்டதை வரவேற்கிறோம். இவை இன்னும் தொடர வேண்டும்.

என்னுடைய மதிப்பிற்குரிய நண்பர் பிரதமர் கோர்டன் பிரவுண் ஜனாதிபதி ராஜபக்சவுக்கு தன்னுடைய நிலைப்பாட்டை எழுதி உள்ளார்.

(The Secretary of State for Foreign & Commonwealth Affairs on Sri Lanka, 21 January 2009.)

பிரித்தானிய தமிழர் பேரவை வெளியிட்ட அறிக்கை :

இலங்கையில் உள்ள தமிழர்களின் நிலை தொடர்பாக பிரதமரின் கருத்துக்கு முரண்பாடான வெளிவிவகார அலுவலகத்தின் நிலைப்பாடு:

பிரித்தானிய வெளிவிவகார மற்றும், பொதுநலவாய நாடுகளின் அலுவலகம் 21-01-2009 ஆம் திகதியிட்டு வெளியிட்ட கருத்தை பிரித்தானிய தமிழர் ஒன்றியம் வன்மையாகக் கண்டிக்கின்றது. வெளிவிகார அலுவலகத்தின் இந்த அறிக்கையில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் தமிழின படுகொலை தொடர்பான கண்டனம் எதுவும் வெளியிடப்படவில்லை.

இந்த அறிக்கை பிரித்தானிய பிரதமரின் நிலைப்பாட்டுடன் முற்றிலும் முரண்படுவதாக உள்ளதை பிரித்தானிய தமிழர் ஒன்றியம் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றது. ஜனவரி 14ஆம் தகதி இடம்பெற்ற பிரதமருடனான கேள்வி நேரத்தின் போது பதிலளித்த பிரதமர் “ஸ்ரீலங்காவில் இடம்பெறும் மோசமான வன்முறைகள் தொடர்பாக (திரு. வாஸ்) அவர்கள் தெரிவித்த கருத்துடன் நான் உடன்படுகின்றேன். அத்துடன் யுத்த நிறுத்தத்தின் தேவைபற்றிய அவரது கருத்துடனும் நான் உடன்படுகின்றேன். ஜனாதிபதி சாக்ரோசியுடனும் சான்சிலர் மேக்லுடனும் பேசும் போது இதுகுறித்தும் பேசவுள்ளேன்” எனத் தெரிவித்த கருத்துக்கு முற்றிலும் மாறுபட்ட விதமாக வெளிவிவகார அமைச்சின் கருத்து உள்ளது. வெளிவிகார அமைச்சின் அறிக்கையில் யுத்த நிறுத்தம் தொடர்பான கோரிக்கை முற்றாக தவிர்க்கப்பட்டுள்ளது.

ஜேர்மன் வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் “ அவர்கள் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக சர்வதேச உதவிகளை பெறுவதில் இருந்து முற்றாக துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளார்கள்…. பாதிக்கபட்ட பிரதேசங்களில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான நிவாரண மற்றும் மருத்துவ உதவிகள் சென்றடைய ஏதுவாக யுத்த நிறுத்தத்தை கொண்டு வருவதற்கான சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” எனத் தெரவிக்கப்பட்ட கருத்துடன் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் கருத்து முற்றிலும் முரண்பட்டதாக உள்ளது.

‘ஸ்ரீலங்காவில் இருந்து பயங்கரவாதத்தை இல்லாதொழித்தல்’ என்ற பதத்தை பாவித்து வன்னியில் ஏற்பட்டிருக்கும் பாரிய மனித அவலம் பற்றிய உண்மை நிலவரம் மூடி மறைக்கப்பட்டிருப்பதோடு சில மேற்குலக நாடுகள் ஸ்ரீலங்கா அரசின் இத்தகைய நடவடிக்கைளுக்க இராஜதந்திர பாதுகாப்பு வழங்க முற்படுகின்றன என பிரித்தானிய தமிழர் ஒன்றியத்தின் மூத்த உறுப்பினர் ஒருவர் இது தொடர்பாக கருத்து தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சின் இந்த அறிக்கை அமெரிக்காவின் புதிய நிர்வாகம் பதவியேற்ற சிலநாட்களில் வெளியாகியிருப்பது தவறான வழிகாட்டுதலை நோக்கமாக கொண்டு வெளியிடப்பட்ட ஒன்றென கருத தோன்றுகின்றது.

பிரித்தானிய தமிழர் பேரவை பிரித்தானியாவில் உள்ள 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் பல நிறுவனங்களை உள்ளடக்கிய ஒரு குடைஅமைப்பு என்ற வகையில் வெளிவிவகார அமைச்சின் இந்த அறிக்கை தொடர்பாக எமது அமைப்பு மிகுந்த கவனம் செலுத்துகின்றது. வெளிவிவகார அமைச்சின் இந்த நடவடிக்கை உலகெங்கும் உள்ள தமிழர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருப்பதுடன் இந்த விடயம் தொடர்பாக பிரித்தானிய அரசின் நடுநிலைத் தன்மையை கேள்விக்கு உள்ளாக்கியிருக்கின்றது.

வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் விடுதலைப் புலிகளுக்கு மக்கள் ஆணை இல்லை என்ற கருத்து வெளியிடப்பட்டிருக்கின்றது. 2004ஆம் இலங்கையில் நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்ற கொள்கையை தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்து போட்டியிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பெரு வெற்றியீடடியிருந்ததை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சுக்கு பிரித்தானிய தமிழர்கள் தாழ்மையுடன் சுட்டிக்காட்ட விரும்புகின்றனர். அத்துடன் 1977ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழர் தாயகத்தை (தமிழீம) மீள உருவாக்க மக்கள் ஆணை வழங்கப்பட்டது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற தவறான போர்வைக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு அடக்குமுறை அரசுகளுக்கு உதவும் வகையிலான அணுகுமுறையை தவிர்ததுக் கொள்ள வேண்டும் என பிரித்தானிய தமிழர்களான நாம் இந்த அரசிடம் வேண்டிக் கொள்கின்றோம். ஸ்ரீலங்கா அரச படைகளால் கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களினால் கடந்த மூன்று நாட்களில் மாத்திரம் தேவிபுரம், வள்ளிபுனம் ஆகிய இடங்களில் 66 இற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கா அரசின் அரச பயங்கரவாதத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இன்று பாதுகாப்புப் பிரதேசத்தில் அமைந்திருந்த மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தி 5 அப்பாவிப் பொது நோயாளர்களைக் கொன்றிருப்பதோடு 15 நோயாளர்களை காயப்படுத்தியுமுள்ளனர். அத்துடன் அங்கிருந்த மிக முக்கியமான உயிர்காப்புச் சாதனங்களும் அழிக்கப்பட்டுள்ளன.

வன்னி மக்கள் மீது தொடுக்கப்பட்டிருக்கும் போரை நிறுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்பி வைக்க ஸ்ரீலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு பிரித்தானிய தமிழர் பேரவையானது கோருகின்றது. அத்துடன் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு தவறான ஆலோசனைகளின் அடிப்படையில் உணர்வுகளைப் புண்படுத்தும் விதத்திலான அறிக்கைகளை வெளியிடுவதை தவிர்க்குமாறும் வேண்டுகின்றோம்.

யூலை முற்பகுதியில் பிரித்தானிய தமிழர் பேரவையின் தலைவர் சுரேன் சுரேந்திரன் தேசம்நெற்க்கு வழங்கிய நேர்காணல் :

”புலிகளுக்கும் தமிழீழம் வேணும். பிரிஎப் க்கும் தமிழீழம் வேணும். ஆனால் புலிகளின் மெதடோலஜியை பிரிஎப் சஸ்கிறைப் பண்ணவில்லை” சுரேன் சுரேந்திரனுடன் நேர்காணல் : த ஜெயபாலன்

வன்னிச் சிறுவர்களின் நிலை ராதிகா குமாரசாமி கவலை

rathika-kumarasamy.jpgவன்னியில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக அரச படைகள் மேற்கொண்டுள்ள தாக்குதல்களில் இடைநடுவில் சிக்கியிருக்கும் ஆயிரக்கணக்கான சிறுவர்களின் நிலைமை குறித்து ஐ.நா.செயலாளர் நாயகத்தின் சிறுவர்கள் மற்றும் ஆயுதமோதல்கள் விவகாரத்திற்குப் பொறுப்பான விசேட பிரதிநிதி ராதிகா குமாரசாமி விசனமும் கவலையும் தெரிவித்துள்ளார். இடம் பெயர்ந்திருக்கும் சிறுவர்கள் மற்றும் புலிகளால் போருக்குப் பயன்படுத்தப்படும் சிறுவர்களின் நிலைமை தொடர்பாக கவலை அடைந்திருப்பதாக ராதிகா குமாரசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

2008 இன் பின் அரையாண்டுப் பகுதியில் வட இலங்கையில் மோதல்கள் அதிகரித்திருப்பதால் 2 இலட்சத்து 30 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்திருப்பதாக ஐ.நா.வின் மனிதாபிமான விடயங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. மோதல் இடம்பெறும் பகுதிகளிலிருந்து சிறுவர்களும் அவர்களின் குடும்பங்களும் இடம்பெயர புலிகள் அனுமதியளிக்க வேண்டும். அதேசமயம் அந்த மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிப்பதற்கான உதவிகளை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும் என்று ராதிகா வலியுறுத்தியுள்ளார்.

இடம் பெயர்ந்தவர்களுக்காக அமைக்கப்படும் எந்தவொரு முகாமும் சர்வதேச தரத்திற்கு அமைவானதாகவிருக்க வேண்டும். இடம்பெயர்ந்தவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக சர்வதேச உள்ளூர் மனிதாபிமான பணியாளர்களுடன் இலங்கை இணைந்து பணியாற்றவேண்டும் என்றும் ராதிகா கூறியுள்ளார். அத்துடன் யுத்தத்தில் ஈடுபடுத்தப்படும் சிறுவர்களை விடுதலைப்புலிகள் உடனடியாக விடுவிக்கவேண்டும் என்றும் ராதிகா வேண்டுகோள்விடுத்திருக்கிறார். அவர்களின் வாழ்வைய் பாதுகாப்பது எப்படி என்பது தொடர்பான பேச்சுக்களில் அரசாங்கம் பங்கேற்கும் என்ற எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ள ராதிகா அதிகாரிகளும் மனிதாபிமான நடவடிக்கையிலீடுபடுவோரும் இந்த சிறுவர்களை தத்தமது குடும்பங்களுடன் சேர்ப்பதற்கு ஆயத்தமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். சிறுவர்களை நாம் மறந்துவிடக்கூடாது. அவர்களே அடுத்த தலைமுறையினராகும் சாத்தியமான அளவுக்கு அவர்கள் பாதுகாக்கப்படவேண்டியது அவசியம் என்றும் ராதிகா கூறியுள்ளார்.

நாளை மறுதினம் சூரியகிரகணம் – வெற்றுக் கண்களால் பார்க்காதீர்கள்!

lanka-map-02.jpgசூரிய கிரகணம் நாளை மறு தினம் திங்கட்கிழமை (26 ஆம் திகதி) இலங்கையில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகப் பெளதீகவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளரும், வானியல் குறித்த நவீன தொழில் நுட்பத்திற்கான ஆதர் சி கிளார்க் நிலையத்தின் ஆலோசகருமான கலாநிதி சந்தன ஜயரட்ன நேற்றுத் தெரிவித்தார்.

சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் நேரடியாகவோ, சாதாரண கண்ணாடிகள் ஊடாகவோ, புகையூட்டப்பட்ட கண்ணாடிகள் மூலமோ, வர்ண புகைப்பட நெகடிவ்கள், எக்ஸ்ரே படமெடுக்கப்பட்ட நெகடிவ்கள் என்பவற்றைக் கொண்டோ பார்க்கக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார். இவ்வாறான வழிகளின் ஊடாக சூரிய கிரகணத்தைப் பார்ப்பதால் கண்பார்வை முழுமையாகவோ, பகுதியாகவோ பாதிக்கப்படலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், திங்களன்று சூரிய கிரணம் இலங்கையில் தென்படும். பிற்பகல் 1.59 மணி முதல் காலி பிரதேசங்களிலும், பிற்பகல் 2.03 மணி முதல் மாலை 4.12 மணி வரை கொழும்பிலும், பிற்பகல் 2.14 முதல் மாலை 4.10 வரை யாழ்ப்பாணத்திலும் சூரிய கிரகணம் தென்படும். இதனை கொழும்பில் பிற்பகல் 3.12 மணிக்கும், யாழ்ப்பாணத்தில் பிற்பகல் 3.15 மணிக்கும் முழுமையாகப் பார்க்கலாம். இச் சமயம் சூரிய கிரகணத்தில் 23 சதவீத முதல் 30 சத வீதம் வரை இலங்கையரால் அவதானிக்கக் கூடியதாக இருக்கும்.

சூரிய கிரகணத்தை மொரட்டுவ கட்டுபெத்த ஆதர் சி கிளார்க் நிலையத்தில் அமைக்கப்பட்டிருக்கும் விசேட முகாமிலிருந்த படியும், குருணாகல் இப்பாகமுவ மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள இலங்கை விண்வெளி காட்சியத்திலிருந்த படியும் பொது மக்கள் பார்க்கலாம். அத்தோடு www.actimt.ac.lk  என்ற இணையதள முகவரியில் நேரடியாகவும் சூரிய கிரகணத்தைப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொறுத்துனர்கள் (welders)  பயன்படுத்தும் பாதுகாப்பு கண்ணாடியைப் பாவித்து சூரிய கிரகணத்தைப் பார்க்கலாம். சூரியனுக்கும், பூமிக்குமிடையில் நீல் வட்டப் பாதையில் வலம் வரும் சந்திரன், சூரியனுக்கும், பூமிக்கும் நேரெதிரே வருவதால் தான் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இவ்வருடம் இரண்டு சூரிய கிரகணங்களும், நான்கு சந்திர கிரகணங்களும், இலங்கையில் தென்படும். இவ்வருடம் தென்படுகின்ற முதலாவது சூரிய கிரகணமே 26 ஆம் திகதி தென்படவிருக்கிறது. இரண்டாவது சூரிய கிரகணம் ஜுலை மாதம் 26 ஆம் திகதி இங்கு தென்படும் என்றார். 

கற்பிட்டி சுற்றுலா வலய ஆரம்பப் பணிகளை ஆறு மாதத்திற்குள் ஆரம்பிக்க ஜனாதிபதி பணிப்பு

president.jpgபுத்தளம் மாவட்டத்திலுள்ள கற்பிட்டி பிரதேசத்தை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்வதற்கான பணிகள் எதிர்வரும் 06 மாத காலத்தினுள் ஆரம்பிக்கப்படவிருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கற்பிட்டியினை சுற்றுலா வலயமாக பிரகடனப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் (22) அலரி மாளிகையில் நடைபெற்றது. இதன் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

நான்காயிரம் ஏக்கர் பரப்புக் கொண்ட பிரதேசம் சுற்றுலா வலயமாக பிரகடனம் செய்யப்படவுள்ளது. உள்நாட்டவர்களையும், வெளிநாட்டவர்களையும் கவரும் வகையில் இதற்கான சூழல் அமைக்கப்படும். நவீன வசதிகளைக் கொண்ட நான்காயிரம் அறைகளுடன் கூடிய உல்லாச ஹோட்டல் ஒன்று இங்கே அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இச்சுற்றுலா வலயத்தில் உள்ளூர் முதலீட்டாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். இத்திட்டத்தை மேற்கொள்ளும் போது இப்பகுதியைச் சேர்ந்த அநேக இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இதன் மூலம் இப்பிரதேச மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும் எனவும் ஜனாதிபதி சுட்டிக் காட்டினார்.

இக்கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் மிலிந்த மொரகொட, வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரோஹித்த போகெல்லாகம, ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் கே. ஏ. பீ. ஜோர்ஜ் மைக்கல் இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் தம்மிக்க பெரேரா உள்ளிட்ட அதிகாரிகள் சிலர் கலந்து கொண்டனர்.

பாடசாலை மாணவர்களுக்கென 30 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை

bus.jpgசிசு செரிய” பாடசாலை பஸ் சேவை திட்டத்தின் கீழ் வட மத்திய மாகாண பாடசாலை மாணவர்களுக்கென 30 பஸ்கள் எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் சேவையில் ஈடுபடுத்த உள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது. இதன் மூலம் நாடளாவிய ரீதியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பாடசாலை பஸ்களின் தொகை 522 ஆக உயர்கிறது. பாடசாலை பஸ் சேவை ஆரம்பிப்பது தொடர்பான வைபவம் 27 ஆம் திகதி காலை 10 மணிக்கு அனுராதபுரம் சீ. டீ. சீ. மண்டபத்தில் நடைபெற உள்ளதோடு அமைச்சர் டளஸ் அலஹப்பெரும, வட மத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திசாநாயக்க உட்பட பலர் இந்த வைபவத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.

பாடசாலை மாணவர்களுக்கு சிறந்த போக்குவரத்து சேவையொன்றை வழங்குவதற்காக வரவு செலவுத் திட்டத்தினூடாக 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதோடு தனியார் துறையுடன் இணைந்ததாக மேற்படி “சிசு செரிய” பாடசாலை பஸ் சேவை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த வருட முடிவுக்குள் ஆயிரம் பஸ்களை பாடசாலை பஸ் சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் அலஹப்பெரும கூறினார்.

மேனன், அகாசி வருகை பயங்கரவாத ஒழிப்புக்கு எந்த பாதிப்பையும் தராது – போகொல்லாகம

rohitha-bougo.jpg
இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான உதவிகளை வழங்கும் நடவடிக்கைகள் குறித்து மதிப்பீடொன்றை செய்யும் பொருட்டே ஜப்பானின் இலங்கைக்கான விசேட தூதுவரான யசூசி அகாசி இலங்கைக்கு வருகை தந்திருப்பதாக வியாழக்கிழமை சபையில் தெரிவித்த வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம, அகாசியின் இந்த விஜயத்தால் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு எந்தவொரு தடங்கலும் ஏற்படாதெனவும் கூறினார்.

பாராளுமன்றத்தில் ஜே.வி.பி.யின் பாராளுமன்ற குழுத் தலைவரான அநுரகுமார திஸநாயக்க, இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் மற்றும் ஜப்பானின் இலங்கைக்கான சிறப்புத் தூதுவர் யசூசி அகாசி ஆகியோரின் இலங்கை விஜயங்களுக்கான நோக்கம் மற்றும் அவர்கள் நடத்திய சந்திப்புகள், இவற்றின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள், எட்டப்பட்ட இணக்கப்பாடுகள் தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து பேசும்போதே அமைச்சர் போகொல்லாகம இவ்வாறு கூறினார். அத்துடன், இரு தரப்பு உறவுகள், இலங்கை மற்றும் சார்க் வலய அரசியல் மற்றும் பாதுகாப்பு நிலைவரங்கள் பற்றி பேச்சுக்களை நடத்தவே இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் சிவ்சங்கர் மேனன் இலங்கை வந்திருந்தார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அமைச்சர் இதன்போது மேலும் விளக்கமளிக்கையில்;  “இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நட்புறவானது முன்னொருபோதும் இல்லாத வகையில் சுமுகமான ஒத்துழைப்புடன் இருப்பதாக இரு தரப்புகளும் ஏற்றுக்கொண்டுள்ளன. இதற்கமைய இரு நாடுகளுக்குமிடையில் உயர்மட்ட அதிகாரிகளுக்கும் அரசியல் தலைமைகளுக்கும் இருதரப்பு பேச்சுக்களுக்கான அழைப்பு எப்போதும் திறந்தே உள்ளது.  இதற்கமைய இருநாடுகளுக்குமிடையிலான இரு தரப்பு உறவுகளை மேலும் உறுதிப்படுத்திக்கொள்வது மற்றும் குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தற்போதைய அரசியல், மனிதாபிமான மற்றும் பாதுகாப்பு நிலைவரங்கள் பற்றி நன்கு மதிப்பீடு செய்து அது தொடர்பாக இருதரப்பு கருத்துக்களை பரிமாறிக் கொள்ளல் ஆகியவையே சிவ்சங்கர் மேனனது இலங்கை விஜயத்தின் அடிப்படை நோக்கமாக இருந்தது.

இதேநேரம், இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த ஜப்பானினால் மேற்கொள்ள வேண்டிய உதவி செயற்பாடுகள் குறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி மதிப்பீடொன்றை செய்யவும், அது தொடர்பாக உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்து பேசவுமே யசூசி அகாசி இலங்கை வந்திருக்கிறார்.  இந்த பேச்சுகளினால் இலங்கையின் இறைமைக்கும் ஆட்புல ஒருமைப்பாட்டுக்கும் எந்த வகையிலும் பாதிப்போ அல்லது பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு எந்த தடங்கலோ ஏற்படாது. அகாசி இந்த விஜயத்தில் பலதரப்பட்ட அதிகாரிகளையும் அரசியல் தலைவர்களையும் சந்தித்து பேசவிருக்கிறார்’ என்றார்.