வன்னியில் இடம்பெற்றுவரும் இராணுவ நடவடிக்கையின்போது நடத்தப்படும் அகோர ஷெல் தாக்குதல்கள், விமானக் குண்டு வீச்சுகள், பல்குழல் பீரங்கித் தாக்குதல்களினால் தினமும் அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டும் படுகாயப்படுத்தப்பட்டும் வரும் நிலையில் அம்மக்கள் தொடர்பில் எவ்வித அக்கறையுமற்ற நிலையில் இன்று நடத்தப்படும் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை பகிஷ்கரிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், ச.கனகரட்ணம், ந.சிவசக்தி ஆனந்தன், ச. வினோநோகராதலிங்கம், சிவநாதன் கிஷோர் ஆகியோர் கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
வன்னியில் அரசபடையினர் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கை காரணமாக என்றுமே இல்லாத மனிதப் பேரவலம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் வாழ்விடங்கள், அவர்களின் தற்காலிக இருப்பிடங்கள்
மீது தினமும் கண்மூடித்தனமான ஷெல், விமானத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. தினமும் அப்பிரதேசம் முழுவதும் மரண ஓலம் கேட்ட வண்ணம் உள்ளது. அங்கு பொதுமக்கள் இராணுவத்தினரின் தாக்குதலில் கொல்லப்படாத நாட்கள் இல்லை. இராணுவத்தினரின் ஷெல்தாக்குதலில் பலியானவரின் இறுதிக் கிரியைகள் கூட நடத்த முடியாத அவல நிலையை பொதுமக்கள் அங்கு எதிர்நோக்கி உள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில், போராட்டத்துடன் எவ்விதத்திலும் தொடர்பு படாத 4 இலட்சத்து 75 ஆயிரம் பொது மக்கள் மிகவும் குறுகிய நிலப்பரப்புக்குள் சிக்கியுள்ளனர். இராணுவத்தினரின் கடுமையான ஷெல்தாக்குதலில் சிக்கி கடந்த ஒன்பது நாட்களில் நூற்றுக்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்து உள்ளனர். காயம் அடைந்தவர்களில் பலர் தமது அங்க அவயங்களை இழந்து உள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் சாதாரண பொதுமக்கள் மீது தினமும் நடத்தப்படும் தாக்குதல் குறித்தோ அவர்களின் நிலை குறித்தோ அரசாங்கம் எவ்வித அக்கறையும் கொள்ளவில்லை. மக்களின் உண்மையான நிலை அறிந்தும் படையினரும் எதுவும் தெரியாதவர்கள்போல் உள்ளனர். மேலும் விடுவிக்கப்படாத வன்னி மக்களுக்கு பாதுகாப்புப் படையினரால் பாதுகாப்பு வலயம் நிறுவப்பட்டுள்ளது.எனினும் குறித்த பாடசாலைகளில் இயங்கிவந்த வைத்தியசாலைகள் மற்றும் தேவாலயங்கள் உள்ள பகுதிகளிலும் ஷெல்கள் வீழ்ந்து வெடித்துள்ள இந்நிலையில் அங்கு தஞ்சமடைந்த மக்களின் நிலைமையும் அபாய கட்டத்தை அடைந்துள்ளது.
புதுக்குடியிருப்பு அரச வைத்தியசாலையை உடன் மூடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மனிதாபிமான அரச வைத்திய உதவிகளை எதிர்பார்த்திருக்கும் வன்னிமக்களின் உயிரோடு விளையாடும் பாதகச் செயலாகும்.
மேலும் யுத்த நடவடிக்கையில் காயம் அடைந்து மேலதிக அவசர சிகிச்சைக்காக வன்னிப்பகுதியில் இருந்து வவுனியா பொது வைத்திய சாலைக்கு கொண்டுவரப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு குணம் அடைந்த பலர் மீண்டும் வன்னிக்கு திரும்பிச் செல்ல முடியாத நிலையிலுள்ளனர். வவுனியாவிலேயே இவர்கள் தங்கவேண்டி உள்ளதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் வன்னியில் இருந்து காயத்துடன் வந்து வவுனியா வைத்தியசாலையில் குணம் அடைந்தவர்கள் அவர்களின் குடும்பத்தை விட்டு வலுக்கட்டாயமாக பிரிக்கப்பட்டு வவுனியாவில் தங்க நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.
வன்னியிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு இராணுவத்தினரால் அழைத்து வரப்பட்டு செட்டிக்குளம் மெனிக் பாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை அவர்களின் உறவினர்களோ, நண்பர்களோ பார்வையிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் இவர்கள் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மன்னார் மாவட்டத்தில் முசலி சிலாவத்துறை அரிப்பு பகுதியில் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு இராணுவ நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது இதன் விளைவாக கொக்கு, படையான், கொண்டைச்சி, முள்ளிக்குளம், முசலி, சிலாவத்துறை, அரிப்பு, வேப்பங்குளம், பண்டார வெளி, புது வெளி, குளாங்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 1500 இற்கும் அதிக தமிழ் முஸ்லிம் குடும்பங்கள் அகதிகளாக இடம்பெயர்ந்தனர்.
மீனவர்களாகவும் விவசாயிகளாகவும் மன்னார் மாவட்ட பொருளாதார தரத்துக்கு கணிசமான பங்களிப்பு நல்கிய மேற்படி கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தற்பொழுது தமது அசையும் அசையா சொத்துக்களையும் முற்றாக இழந்து நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள வயல் வெளிகளிலும் கைவிடப்பட்ட அரிசி ஆலைகளிலும் பொதுநோக்கு மண்டபங்களிலும் உறவினர் வீடுகளிலும் தற்காலிகமாக வசித்து வருகின்றனர்.
தற்பொழுது சிலாவத்துறை பகுதி முற்றாக விடுவிக்கப்பட்டதாக அரசாங்கம் கூறிவரும் நிலையில் அங்கிருந்து இடம் பெயர்ந்த மக்களை இரண்டு வருடங்கள் கழிந்த நிலையில் மீளக்குடி அமர்த்தவில்லை. வன்னித்தேர்தல் மாவட்டமானது முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மூன்று நிர்வாக மாவட்டமாக உள்ளது குறித்த மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் வாக்குகளிலேயே நாம் ஐந்து பேரும் பாராளுமன்ற உறுப்பினர்களாக வந்த நிலையில் நாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் தற்போது முல்லைத்தீவில் நடைபெறும் மோதலை அடுத்து கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இந்த வகையில் கடந்த மூன்று நாட்களில் இராணுவத் தாக்குதல் காரணமாக வன்னிப்பகுதியில் ஐம்பதுக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதுடன் அதிக எண்ணிக்கையானோர் கடும் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
கடந்த சில நாட்களாக வன்னிப் பகுதியில் இடம்பெற்ற ஷெல் தாக்குதலில் காயம் அடைந்து மேலதிக சிகிச்சைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டவர்களில் சிலர் தீவிர சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்ப வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது. எனினும், குறித்த காயம் அடைந்தவர்களுக்கு தேசிய அடையாள அட்டை இல்லை என்ற காரணத்தினால் அவர்களை அனுராதபுர வைத்தியசாலைக்கு அனுப்பமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தொடர்ச்சியான இடம்பெயர்வு, அகோர ஷெல் வீச்சு காரணமாக மிகவும் மரண அச்சம் நிறைந்த சூழ்நிலையில் காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்கு அனுப்பும்போது தேசிய அடையாள அட்டையுடன் அனுப்பும் நிலை எச்சந்தர்ப்பத்திலும் எவருக்கும் ஏற்படாது. இவ்வகையில் தேசிய அடையாள அட்டை வரவில்லை என்ற காரணத்திற்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு தீவிர சிகிச்சைக்கு அனுப்பப்பட்டவர்கள் சிலர் மரணத்துடன் போராடிக் கொண்டிருக்கின்றனர். இவ்விடயம் எந்த நியாய புத்தி உடையவர்களாலும் கருணை உள்ளம் கொண்டவர்களாலும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும்.
எமக்கு வாக்களித்து நாம் பிரதிநிதித்துவப்படுத்தும் இம் மக்கள் மோதலினால் உயிர்கள் உடமைகள் மற்றும் அவர்களுடைய அங்க அவையங்களை இழந்து பெரும் மனிதபேரவலத்துக்கு உள்ளாகி நடைபிணங்களாக உலாவித்திரியும் சந்தர்ப்பத்தில் இன்று நடைபெறும் மக்களின் நலனில் அக்கறை கொள்ளாத குறித்த மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தை நாம் எமது மக்களின் துன்ப நிலையை வெளிஉலகத்துக்கு தெரியப்படுத்தும் நோக்கில் பகிஷ்கரிக்கின்றோம்