28

28

முஸ்லிம் சமூகத்திற்கு புதியதொரு தலைமைத்துவத்தை ஏற்படுத்துவதற்காகவே நான் தேர்தலில் போட்டியிடுகின்றேன்

vote.jpgமத்திய மாகாண முஸ்லிம் சமூகத்திற்கு புதியதொரு அரசியல் தலைமைத்துவத்தை ஏற்படுத்துவதற்காக மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதாக மத்திய மாகாணசபை கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் ஏ.எல்.எம்.உவைஸ் தெரிவித்துள்ளார். கண்டி மஹிய்யாலையில் அண்மையில் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

மத்திய மாகாண முஸ்லிம்களின் அரசியலில் தலைமைத்துவ வெற்றிடம் நிலவுகின்றது. இதனை நிரப்ப கடந்த காலங்களில் அரசியல்வாதிகளால் முடியவில்லை. இவ்வெற்றிடத்தை நிரப்புவதன் மூலம் சிறந்த சேவையை முன்னெடுப்பது எனது நோக்கமாகும். மத்திய மாகாணசபைத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவது உறுதியாகிவிட்டது.

கிழக்கு மற்றும் வடமத்திய, சப்ரகமுவ மாகாணசபைகளில் அரசு பெற்ற வெற்றி இம்மாகாணசபைத் தேர்தல்களில் வெற்றிபெறுவதற்கான அறிகுறியாவவே உள்ளது. நாட்டில் யுத்தம் நிறைவுபெற்று சமாதானம் மலரும் காலம் வெகுதூரத்தில் இல்லை. எனவே நாட்டில் சகல இனமக்களும் சமாதானமாக வாழும் காலம் உருவாகும் என்றார்.

பிரபாகரனை தேடிக்கண்டுபிடிக்க இலங்கைக்கு உதவியளிக்கும் இந்தியா

army-1401.jpgவிடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை தேடிக்கண்டு பிடிப்பதற்கு இலங்கைக்கு இந்திய அரசாங்கம் உதவியளித்து வருவதாக “ஏசியன்ஏஜ்’ பத்திரிகை நேற்று முன்தினம் திங்கட் கிழமை தெரிவித்துள்ளது. பாக்கு நீரிணையில் ரோந்து நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவது மாத்திரமன்றி, விடுதலைப்புலிகள் தொடர்பான புலனாய்வுத் தகவல்களையும் புதுடில்லி பகிர்ந்து வருவதாக உயர்மட்ட பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏசியன் ஏஜ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

விடுதலைப்புலிகளின் இறுதித்தளமாக இருந்த முல்லைத்தீவின் நகர் பகுதிக்குள் இலங்கை இராணுவம் பிரவேசித்ததையடுத்து பாதுகாப்பு வட்டாரங்கள் இத் தகவலை தெரிவித்துள்ளன. “இந்திய கடற்படை எமக்கு சிறப்பான விதத்தில் ஒத்துழைப்பு வழங்குகின்றது. அத்துடன், இந்திய கடற்பரப்பில் புலிகளின் கப்பல்கள் பிரவேசிப்பதை தடுப்பதற்காக ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பான இந்தியாவின் உதவி மட்டுப்படுத்தப்படாத அளவுக்கு உள்ளது. மேலும் இந்திய இலங்கை முகவரமைப்புகள் புலனாய்வுத் தகவல்களையும் பரிமாறிக்கொள்கின்றன’ என்று அந்த வட்டாரம் தெரிவித்ததுடன், இலங்கைப் படையினருக்கு இந்தியா பயிற்சிவழங்குவதில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

பிரபாகரன் முல்லைத்தீவு காடுகளுக்குள் இருப்பதாக நம்பப்படுவதாக விநாயகமூர்த்தி முரளிதரன் எம்.பி. (கருணா) தெரிவித்துள்ளார். ஆனால்,கடல்வழியால் பிரபாகரன் சென்றிருக்கும் சாத்தியத்தை இங்கே பாதுகாப்பு வட்டாரங்கள் நிராகரிக்கவில்லை. பிரபாகரன் செக் தயாரிப்பான சிலின் 143 ரக விமானத்தில் சென்றிருக்கலாமெனவும் ஏனைய செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை, முல்லைத்தீவு நகரை படையினர் கைப்பற்றிய செய்தி தொடர்பாக மட்டக்களப்பு பகுதியிலுள்ள கிராமவாசிகள் நம்பிக்கொள்ளாமல் இல்லை. ஆனால், புலிகளின் கடைசி தளத்தில் இராணுவம் பிரவேசித்திருப்பது அமைதியைகொண்டு வருமா என்பது தொடர்பாகவும் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

இராணுவ வெற்றியை தொடர்ந்து பேச்சுவார்த்தை இடம்பெறும் வரை பிரச்சினை தொடர்ந்திருக்கும் சாத்தியம் உள்ளதாக தன்னை அடையாளம் காட்ட விரும்பாத மட்டக்களப்பு நகரைச்சேர்ந்த ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் ஏசியன் ஏஜின் நிருபருக்கு கூறியுள்ளார். அடிப்படை பிரச்சினைக்கு தீர்வுகாணாவிடின் பிரபாகரன் இருந்தாலோ இல்லாவிடிலோ எமது பிரச்சினைகள் தொடர்ந்தும் இருக்கும் என்றும் அவர் மேலும் கறியுள்ளார்.

“இராணுவ நடவடிக்கை முடிவுறும் நிலை ஆனாலும் மோதல் தொடரும்’

truck.jpgமரபு ரீதியான யுத்த ஆற்றலை இழந்திருக்கும் விடுதலைப் புலிகள் கெரில்லா உபாயத்தைப் பயன்படுத்திப் போரிடுவார்கள் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இராணுவத்தின் நடவடிக்கை முடிவுறும் நிலைக்கு வந்து விட்டது. ஆனால், மோதல் தொடரும் என்று கொழும்புப் பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான பீடத் தலைவரான கலாநிதி ஜயதேவ உயன்கொடவை மேற்கோள் காட்டி ஏ.எவ்.பி.செய்திச் சேவை தெரிவித்தது.

முன்னர் இருந்தது போன்று அரசியல் மற்றும் இராணுவ ரீதியான பலத்தை புலிகள் பெற்றுக்கொள்ள முடியாது. ஆதலால் அவர்கள் கெரில்லா தந்திரோபாயத்திற்கு திரும்புவார்கள் என்றும் உயன்கொட தெரிவித்துள்ளார்.  அதேவேளை, புலிகள் தற்போதும் கணிசமான அளவுக்கு வெளிநாட்டு வலைப்பின்னல் அமைப்பை கொண்டிருப்பதாகவும் அதன் மூலம் கெரில்லாப் போருக்கு நிதியுதவி பெற்றுக்கொள்ளக்கூடும் என்றும் முன்னாள் இலங்கை இராஜதந்திரியான நந்தகொடகே கூறியுள்ளார். மோதலின் ஆரம்ப நாட்களில் இருந்த பயங்கரவாதத் தாக்குதல் போன்றவற்றை நாம் எதிர்பார்க்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் விதியே எதிர்கால கெரில்லா போராளிகளுக்கு ஊக்குவிப்பளிப்பதற்கான முக்கியமான காரணியாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம்

risard.jpgமன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று முன்தினம் மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அமைச்சர் றிஷாத் பதியுதீன், வடமாகாண ஆளுநர் டிக்ஸன்தால ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் அமைச்சர் கூறியதாவது :- முல்லைத்தீவு, கிளிநொச்சி பகுதிகளில் வசிக்கும் மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பங்கள் அப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்துள்ளதால் அவர்களை இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அரசாங்கம், வடக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள மனிதாபிமான சம்பவங்களால் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பிவரும் மக்களை மீண்டும் அவர்களது வாழ்விடங்களில் மீளக் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கும்வரை தற்காலிக இடைத் தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்படுவார்கள். கண்ணி வெடிகள் அகற்றும் பணியினை பாதுகாப்புத் தரப்பு மேற்கொள்ளும்வரை இவ்வாறு இடம்பெயரும் மக்களுக்கான அனைத்து வசதிகளையும் எவ்வித குறைவுமின்றி பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி எம்மைப் பணித்துள்ளார். மின்சாரம், குடிநீர், சுகாதாரம், பாடசாலை வசதிகள் மற்றும் ஏனைய வசதிகள் இவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

இன்னும் சில தினங்களில் முல்லைத்தீவு, கிளிநொச்சி பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு வரலாமென்பதால் முன்கூட்டியே ஏற்பாடுகளை செய்ய கவனம் செலுத்த முடிந்ததாக அமைச்சர் றிஷாத் பதியுதீன் கூறினார்.