29

29

‘யுத்த நிறுத்தம் அல்ல’ மக்கள் பாதுகாப்பே – முகர்ஜி வருகையின் முக்கிய நோக்கம் – ஏகாந்தி

prathaf-mahi.jpgஇந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்றுமுன்தினம் (27) செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேசியவேளை வன்னியில் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்துவது தொடர்பான பேச்சு எதனையுமே எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கும் அவர்களுக்கு உதவுவதற்கும் அடிப்படை முயற்சிகள் மேற்கொள்ளப் படவேண்டும் என்று மட்டுமே மஹிந்தவிடம் கோரிக்கை விடுத்திருந்தார் என்று அறிவிக்கப்படுகிறது. அமைச்சர் பிரணாப் முகர்ஜி செவ்வாய்க்கிழமை மாலை கொழும்புக்கு திடீர் விஜயம் செய்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேசிவிட்டு புதன் அதிகாலை  அவசரமாகப் புதுடில்லி திரும்பியது தெரிந்ததே.

“பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அவர்களுக்கு உதவுவதற்கும் அடிப்படை முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென நாங்கள் இலங்கை அரசைக் கோரியுள்ளோம்’ என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். மோதல் நடைபெறும் பகுதிகளின் மனிதாபிமான நிலைவரம் குறித்து ஆராயப்பட்டது என்றும் அரசு பொதுமக்களின் உயிரிழப்புகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமக்கு உறுதியளித்துள்ளார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இலங்கை அரசு பாதுகாப்பு வலயங்களை மதிக்கிறது எனவும்  ஜனாதிபதி கூறியுள்ளார் என்று முகர்ஜி சொன்னார்.

பொதுமக்களின் அவலங்களை நீக்கி அவர்களது பாதுகாப்பை உறுதிசெய்வதே தனது இந்த இலங்கை விஜயத்துக்கான அடிப்படைநோக்கம் என்றும் முகர்ஜி தெரிவித்திருக்கிறார்.அனைத்து இலங்கையர்களும்  குறிப்பாக மோதலின் பாதிப்பை  அனுபவித்துள்ள தமிழ் மக்கள்  கூடிய விரைவில் சுமூக வாழ்க்கையை அனுபவிப்பதை உறுதி செய்வதற்காக இலங்கை அரசுடன் இணைந்து செயற்படுவோம் என முகர்ஜி தெரிவித்துள்ளார்.
 
pranab.jpgமேலும் கருத்துத் தெரிவித்த பிரணாப் முகர்ஜி, இலங்கை – இந் திய ஒப்பந்தத்தின் கீழ் உருவாக்கப் பட்ட அரசியலமைப்புக்கான 13வது திருத்தத்தை மிக விரைவில் நடைமுறைப்படுத்தப் போவதாக ஜனாதிபதி மஹிந்த கூறினார். அதேநேரம், அதில் கூறப்பட்டு ள்ள அதிகாரப் பகிர்வு யோசனைகளை மேலும் விருத்தி செய்து அமுல் செய்வதற்கான வழிமுறைகளையும் ஜனாதிபதி ஆராய்ந்து வருவதாகவும் முகர்ஜி கூறினார்.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நான் இலங்கை சம்பந்தமாக தெரி வித்துக்கொண்ட விடயங்க ளையிட்டு மகிழ்ச்சியடை கின்றேன். இலங்கையின் அண்மைக்கால அபிவிருத்தி கள் இரு நாடுகளுக்குமி டையிலான நட்புறவுகள், பரஸ்பர அக்கறையுள்ள பிரா ந்திய விடயங்கள் குறித்தும் நாம் பேச்சுவார்த்தை நடத்தி னோம். இலங்கை-இந்திய உறவுகள் மிக உறுதியாக வளர்ச்சி கண்டு வருகின்றன. எமது உறவுகளை மேலும் பலப்படுத்த வேண்டிய அவசியம் தொடர்ந்தும் உணரப்பட்டு வருகின்றது.

இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி குறித்து தான் கொண்டுள்ள நம்பிக்கை களை இலங்கை ஜனாதிபதி விளக்கினார். வடமாகாணம் உட்பட இலங்கை முழுவதும் இயல்பு நிலையைக் கட்டியெழுப்பத் தேவையான அரசியல் சந்தர்ப்பத்தை வழங்க இராணுவ வெற்றிகள் வழிவகுத்துள்ளன. 23 வருடகால மோதல்களின் பின் இந்த நிலை தோன்றியிருப்பதாக நான் தெளிவு படுத்தினேன். இலங்கை ஜனாதிபதியும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளதோடு தன் மனநிலையும் இதுவே என்று கூறினார். இலங்கை அரசாங்கத்தோடு சேர்ந்து சகல இலங்கையரும் குறிப்பாக மோதல்களால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் விரைவில் இயல்பு வாழ்க்கையை மேற்கொள்ள எம்மால் முடிந்த அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்குவோம்.

இந்த வகையில் இலங்கையின் வட பகுதியை மீளக்கட்டியெழுப்ப நாம் தயா ராக இருக்கின்றோம் என்பதையும் நான் இலங்கை ஜனாதிபதிக்குக் கூறினேன். இதன்மூலம் யுத்தத்தின் அழிவுகளிலிருந்து விடுபட்டு உறுதியான சமாதானத்துக்கான பொருளாதார மற் றும் அரசியல் அடித்தளங் களை இடுவதன் மூலம் சகல சமூகங்களும் நிம்மதியாக வாழும் சூழலை ஏற்படுத்த முடியுமென்பதே எமது நம்பிக்கையாகும். இதனடிப்படையில் உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் தேவைப்படும் இடங்களில் புனரமைப்புப் பணிகளில் ஒருங்கிணைந்து செயற்படவுள்ளோம். இந்திய அனுசரணையுடன் 500 மெகா வோட் மின் உற்பத்தி திட் டம் திருகோணமலையில் ஆரம்பிக்கப்படவுள்ளதையிட்டு நான் மகிழ்க்சியடை கின்றேன்.

இலங்கை அரசியல் சாசன த்தின் 13வது திருத்தத்தை மிக விரைவில் அமுல் செய்யப் போவதாகவும் இல ங்கை ஜனாதிபதி கூறினார். இது 1987ம் ஆண்டு இல ங்கை-இந்திய ஒப்பந்தத் தின் கீழ் உருவாக்கப்பட் டது. இதில் கூறப்பட்டுள்ள அதிகாரப் பகிர்வு யோசனை களை மேலும் விருத்தி செய்து அமுல் செய்வதற் கான வழிமுறைகளையும் அவர் ஆராய்ந்து வருகின்றார். மோதல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள மனிதாபிமான நிலைமைகள் குறித்தும் நாம் கவனம் செலுத்தினோம். மோதல்களின்போது தமிழ் மக்கள் பாதிக்கப்படுவதைக் குறைக்கும் வகையில் ஏற் படுத்தப்பட்டுள்ள பாதுகா ப்பு வலயத்தை மதித்து நட க்கப் போவதாக இலங்கை அரசு உறுதியளித்துள்ளது. மோதல்களால் பாதிக்கப் படும் மக்களுக்கு இந்தியா தொடர்ந்தும் உதவிக்கரம் நீட்டும்.

எமது கலந்துரையாடலின் பின் தமிழ்நாடு முத லமைச்சர் திரு. மு. கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையில் சர்வகட்சி குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்து நிலைமைகளை நேரடியாகப் பார்வையிடுமாறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்துள்ளார். எல்.ரீ.ரீ.ஈ. இயக்கம் ஆயுதங்களைக் கைவிட்டு விட்டு ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்துகொள்ள வேண்டுமென இவர்கள் கோரிக்கை விடுக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.  பாதிக்கப்பட்ட பகுதிகளில் மிக விரைவில் இயல்பு நிலையையும், ஜனநாயகத்தையும் மீளக்கட்டியெழுப்ப வேண்டியது, சமாதானத்தையும் ஸ்திரப்பாட்டையும் நிலைநிறுத்துவதில் அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளாகும்.  இந்த இலக்கை அடைய இந்தியா சகலரோடும் இணைந்து சகல வழிகளிலும் தனது பூரண ஒத்துழைப்பை வழங்கும்.

முகர்ஜி வருகையின் முக்கிய நோக்கம் “யுத்த நிறுத்தம் அல்ல’ – கெஹலிய ரம்புக்வெல

இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் கொழும்பு விஜயம் யுத்தநிறுத்தம் குறித்து பேசுவதற்காக அல்லவென்றும் வடக்கை முழுமையாக மீட்டதும் அடுத்தகட்டமாக அங்கு மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி பணிகள் குறித்து ஆராய்வதே முகர்ஜி வருகையின் முக்கிய நோக்கம் என்றும் அமைச்சரும் பாதுகாப்பு விவகாரப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல நேற்று புதன்கிழமை தெரிவித்தார். ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் முகர்ஜியின் கொழும்பு பயணம் இடம்பெற்றதாகவும் கெஹலிய ரம்புக்வெல கூறினார். பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் இதனை தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது;

இலங்கை நிலைவரம் குறித்து உண்மைத் தன்மையை அறிந்துகொள்ளுமாறு ஜனாதிபதி இந்திய வெளிவிவகார அமைச்சரான பிரணாப் முகர்ஜியை தொலைபேசியில் தொடர்புகொண்டு அழைத்தார். அவரை மட்டும் அழைக்கவில்லை. தமிழக முதலமைச்சர் கருணாநிதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும், வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியே வந்துள்ளார். கருணாநிதி சுகவீனம் காரணமாக வரவில்லை. அவசர அழைப்பு விடுக்கப்பட்டதால் வேறு வேலை காரணமாகவோ என்னவோ ஜெயலலிதா வரவில்லை.

பிரணாப் முகர்ஜி இங்கு வருவதற்கு முன் இந்தியாவில் வைத்து தமிழ் மக்கள் குறித்தே தாம் கரிசனை கொண்டுள்ளதாகவும் அதற்கான உதவிகளை நாம் வழங்குவதாகவும் எனினும், விடுதலைப்புலிகள் தொடர்பில் எதுவும் பேசப்போவதுமில்லையென தெரிவித்துள்ளார். இதிலிருந்து பயங்கரவாதம் அழிக்கப்பட வேண்டுமென்ற உறுதியான தீர்மானத்தில் இந்தியா இருப்பது தெரிகிறது. ஜனாதிபதியுடனான முகர்ஜியின் சந்திப்பின் போது யுத்தநிறுத்தம் குறித்தல்லாமல் வடக்கு முழுமையாக மீட்கப்பட்டதும் அங்குள்ள மக்களுக்கு தேவையான அபிவிருத்தி திட்டம் முதல் அனைத்து வேலைத்திட்டங்களையும் முன்னெடுப்பது குறித்தே பேசப்பட்டது. இதனை செய்வதற்கு இந்தியா அனைத்து உதவிகளையும் வழங்க தயாராகவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் என்றார்.

விடுதலைப்புலிகளிடமிருந்து முழுமையாக வடபகுதியை மீட்டு நாடு ஒன்றிணைக்கப்படுவதை இலங்கை இரண்டாவது தடவையாக சுதந்திரம் பெறுவதாக உணர்கின்றேன். இதன்பின் நாட்டிலுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் பறங்கியர் உட்பட அனைத்து சமூகங்களையும் சேர்ந்தவர்கள் பயமின்றி சுதந்திரமாக வாழமுடியுமென ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கையின் வடபகுதியில் புனர் நிர்மாணப் பணிகளில் ஈடுபட இந்தியா தயார்

இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் வலுவாக அபிவிருத்தியடைந்து வருகின்றன என மேலும் தெரிவித்துள்ள முகர்ஜி, இலங்கையின் வடபகுதியில் புனர் நிர்மாணப் பணிகளில் ஈடுபட இந்தியா  தயார் என்பதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு இங்குள்ள நிலைமையை நேரில் பார்வையிட வேண்டும் எனவும், விடுதலைப் புலிகளைத் தேசிய நீரோட்டத்தில் இணையுமாறு அவர்கள் கேகாரிக்கை விடுக்கவேண்டும் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  தனிப்பட்ட அழைப்பை விடுத்தார் என்றும் கூறியுள்ளார். “வன்னியில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு வலயங்கள் மதிக்கப்படும் என்றும், பொதுமக்களின் உயிரிழப்புகளைக்  குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இலங்கை அரசு  பிரணாப் முகர்ஜியிடம் உறுதியளித்தது.’  எனக் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகர்ஜியின் கொழும்பு பயணம் தமிழர்களுக்கு பெரும் ஏமாற்றம்

தமிழர்களை பொறுத்தவரை இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் கொழும்பு பயணம் ஏமாற்றமாக முடிந்துவிட்டதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருப்பதுடன் தமிழினத்துக்கு எதிரானவர்களை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டிய வேளை வந்துவிட்டதாக குறிப்பிட்டார். இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு;

தமிழர்களைப் பொறுத்தவரை பிரணாப்பின் கொழும்பு பயணம் ஏமாற்றமாகவே முடிந்துள்ளது. ஏனெனில், இலங்கையில் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வலியுறுத்திக் கூறிவருவதற்கும் பிரணாப் முகர்ஜியின் கொழும்பு பயணத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்றும் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் தெளிவுபடுத்தியிருக்கிறது.

ஒட்டுமொத்தத் தமிழர்கள் எதிர்பார்த்துக் காத்து நிற்கின்ற தமிழகம் வலியுறுத்தி வருகிற போர் நிறுத்தம் பற்றி இலங்கை ஜனாபதியிடமும் அயலுறவுத்துறை அமைச்சர் பேசவே இல்லை என்பதை இந்தியத் தூதரகத்தின் அறிவிப்பு தெளிவுபடுத்தியிருக்கிறது. போரை நிறுத்த என்பதைக் கேட்டு வருவதற்காக இந்திய அயலுறவுத்துறை அமைச்சர் கொழும்புக்கு நேரில் சென்று வரத் தேவையில்லை.

இன்றே போர்நிறுத்தம். நாளை பேச்சுவார்த்தை. அடுத்து அமைதியான வாழ்வு. அதற்கு நடவடிக்கை எடுங்கள் என்று இறுதி வேண்டுகோள் விடுத்த தமிழக சட்டப்பேரவைக்கும் அதைத் தேர்ந்தெடுத்த தமிழர்களுக்கும் ஏற்படுத்தப்பட்டுள்ள மிகப்பெரிய அவமானம் இது.

தமிழினத்தை அழித்துவிட முயற்சிப்போருக்கு துணைபோய்க் கொண்டிருப்பவர்களையும் வெளிச்சம் போட்டுக்காட்ட வேண்டிய தருணம் வந்துவிட்டது. தன்மானம் உள்ள தமிழர்கள் அனைவரும் ஒன்று கூடுவோம். இன்றே முடுவெடுத்துச் செயல்படுவோம். தமிழினத்தைக் காப்போம் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

காயமடைந்த சிவிலியன்களை விடுவிக்க புலிகள் மறுப்பு பாரிய சந்தேகங்களை ஏற்படுத்துகிறது – கெஹலிய

kkhaliya.jpgவன்னியில் காயமடைந்துள்ளதாகக் கூறப்படும் 320 சிவிலியன்களை சிகிச்சைக்காக வவுனியாவிற்குக் கொண்டு வருவதைப் புலிகள் தடுப்பதானது பாரிய சந்தேகங்களை உருவாக்கியுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். நேற்று தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பில் குறிப்பிட்ட அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது :-

வன்னியில் யுத்தத்தினால் காயமடைந்தவர்கள், நோயாளர்களென 320 பேர் புதுக்குடியிருப்பு அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை வவுனியாவிற்குக் கொண்டுவந்து சிறந்த முறையில் சிகிச்சைகளை வழங்கும் நோக்கில் ஐ. நா. அதிகாரிகள் செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் மற்றும் படைத்தரப்பு அதிகாரிகள் பலரும் வன்னிக்குச் சென்றுள்ளனர்.  இறுதி நேரத்தில் அந்த நோயாளிகளை ஒப்படைக்க புலிகள் மறுத்துவிட்டனர். அரசாங்கம் உச்ச அளவில் சிகிச்சை வசதிகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே காயமடைந்தோரை அழைத்துவர தீர்மானித்தது.

அப் பகுதியில் பல சிவிலியன்கள் காயமடைந்துள்ளதாக செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்கள் சிவிலியன்களா அல்லது பயங்கரவாதிகளா என எப்படி இனங்காண்பது? ஆயுதத்தைக் கீழே வைத்தால் புலிகளும் சிவிலியன்கள்தானே? இவர்கள் சிவிலியன்கள் என ஒரு அரச சார்பற்ற அமைப்பினருக்கு எவ்வாறு இனங்காண முடிந்தது?

எந்த சிவிலியன்களை இலக்கு வைத்தும் படையினர் தாக்குதல் நடத்தவில்லை. எனினும் சில ஊடகங்கள் இது பற்றி அங்குள்ள டாக்டர்கள் தமக்குத் தகவல் தந்ததாகத் தெரிவிக்கின்றன. ஊடகங்களின் தகவலின்படி அத்தகைய பெயருடைய எவரும் அரசவைத்தியர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை. இந்த டாக்டர்கள் தகவல் தெரிவிக்கையில்:-

இராணுவத்தினரே இம்மக்களைச் சுட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். டாக்டர்கள் எவ்வாறு இப்படி கூற முடியும். இவர்கள் புலிகள் அமைப்பின் டாக்டர்களோ என்ற சந்தேகமும் எழுகிறது. ஒரு டாக்டர் எப்படி யுத்த நிலைமை சம்பந்தமாக விளக்கமுடியும்? எனவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கேள்வியெழுப்பினார்.
இத்தகைய விடயங்கள் தொடர்பில் தகவல்களை வெளியிடும் ஊடகங்கள் கவனமாகச் செயற்படுவது அவசியம் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கருணா‌நி‌தி இல‌ங்கை செ‌ல்ல வே‌ண்டு‌‌ம்: ஜெயல‌லிதா

jaya.jpgஇலங்கை அதிபர் ராஜப‌க்சேயின் அழைப்பை ஏற்று முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி இலங்கை செல்ல வேண்டும் என்றும், அவர் சொன்னால்தான் விடுதலைப் புலிகள் கேட்பார்கள் என்றும் அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலர் ஜெயலலிதா கூறினா‌ர்.
   
அ.இ.அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் அவ‌ர் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அ‌ப்போது, இலங்கை வர வேண்டும் என்றும், பிடித்து வைத்துள்ள தமிழர்களை விடுவிக்கும்படி விடுதலைப் புலிகளை கேட்டுக் கொள்ள வேண்டும் என்றும் ராஜப‌‌க்சே கூறியிருப்பது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. இத‌ற்கு ப‌தி‌ல் அ‌ளி‌த்த அவ‌ர், எனக்கு அவர் விடுத்த அழைப்புக்கு நன்றி. நான் போவதால் எந்த நன்மையும் ஏற்படாது. விடுதலைப் புலிகள் நான் சொல்வதை கேட்க மாட்டார்கள் என்ற‌‌ா‌ர்.

மேலு‌ம் இலங்கையில் அமைதியும், போர் நிறுத்தமும் ஏற்பட வேண்டும் என்பதே இப்போது முக்கியமானதாகும். இத‌ற்காக கருணாநிதி இலங்கை போக வேண்டும். அவர் சொன்னால் விடுதலைப்புலிகள் கேட்பார்கள். ஆகவே அவரை அழைத்துச் சென்று விடுதலைப் புலிகளை ஆயுதத்தை ஒப்படைக்கும்படி கூறலாம் என்று‌ம் ஜெயலலிதா தெ‌ரி‌வி‌த்தா‌ர். 

“தமிழனாக ஏன் இந்தியாவில் பிறந்தேன் என்று வேதனையாக இருக்கு’’ : நடிகர் வடிவேலு

vadivel.jpgஇலங்கை பிரச்சனை தொடர்பாக இரண்டு மாதங்களுக்கு முன் ராமேஸவரத்தில் இயக்குநர் பாரதிராஜா தலைமையில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசினார் நடிகர் வடிவேலு. இப்போராட்டத்தில் பேசும்போது, ‘’நம்ம தமிழச்சிகளை கற்பழித்து உடம்பு முழுக்க பிளேடால் கிழிக்கிறான் சிங்களன். இந்த கொடுமையெல்லாம் எப்போது முடிவுக்கு வரும்’’ என்று அப்போது வேதனைப்பட்டார். பின்னர், சென்னையில் நடிகர் சங்கம் சார்பில் நடந்த இலங்கை பிரச்சனை போராட்டத்திலும் கலந்து கொண்டு குரல்கொடுத்தார்.

இந்நிலையில், இலங்கை பிரச்சனையை முன்வைத்து 7 வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் செங்கல்பட்டு அரசு சட்டக்கல்லூரி மாணவர்களை சந்தித்தார் வடிவேலு. அப்போது, ‘’இலங்கையில் 300 பேர் இறந்துவிட்டனர், 1000 பேர் காயமடைந்தனர் என்ற செய்திகளை படிக்கும் போது வேதனையாக இருக்கு. தமிழனாக ஏன் இந்தியாவில் பிறந்தேன் என்று வேதனையாக இருக்கு’’ என்றார். அவர் மேலும், ‘’மாணவர்கள் போராட்டம்தான் எல்லா போராட்டத்திற்கும் வெற்றியை அளித்துள்ளது. இப்போராட்டமும் வெற்றியை அளிக்கும்’’ என்றார்.

கல்முனை அஷ்ரப் ஆஸ்பத்திரிக்கு அவசர சத்திர சிகிச்சைப் பிரிவு

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு ஈரான் இஸ்லாமியக் குடியரசு இமாம் கொமெய்னி நிதி நிறுவனத்தால் அவசர சத்திர சிகிச்சைப் பிரிவு அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கைக்கான ஈரான் நாட்டு தூதுவர் மஃமூத் றகிமி கோஜி கல்முனை மாநகர முதல்வர் எச். எம். எம். ஹரீஸிடம் உறுதியளித்துள்ளார்.

ஈரான் தூதுவர் மஃமூத் றகிமி கோஜிக்கும், கல்முனை மாநகர முதல்வர் எச். எம். எம். ஹரீஸ¤க்கும் இடையே நேற்று முன்தினம் (27)  ஈரானிய தூதுவராலயத்தில் ஒரு மணிநேரம் இச் ந்திப்பு இடம் பெற்றது. இச்சந்திப்பின் போது கல்முனை மாநகரத்தில் நடைபெற்று வரும் அபிவிருத்தி பற்றி முதல்வர் உயர் ஸ்தானிகருக்கு தெளிவுபடுத்தினார்.

இலங்கையுடனும், ஜனாதிபதியுடனும் ஈரான் கொண்டுள்ள தொடர்புகளுக்கும் ஈரான் இலங்கைக்கு வழங்கி வரும் அபிவிருத்திசார் உதவிகளுக்கும் தனது மகிழ்ச்சியை தெரிவித்த கல்முனை முதல்வர் கிழக்கு மாகாணம் பயங்கரவாதப் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டதன் பின்னர் கல்முனை மாநகர பிரதேசத்தில் காணப்படும் கைத்தொழில்துறை, விவசாயம், மீன்பிடி என்பனவற்றின் முன்னேற்றம் பற்றியும் முதல்வரினால் எடுத்துக் கூறப்பட்டது. புலிகள் கிழக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்பு தற்போதைய அரசியல் சூழல், கிழக்கு மாகாண நிர்வாக செயற்பாடுகள், அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் பாதுகாப்பு தொடர்பாகவும் கல்முனை முதல்வர் ஈரான் தூதுவருக்கு விரிவாக எடுத்துக் கூறினார்.

கல்முனை மாநகர சபை ஏற்பாடு செய்துள்ள கலாசார பெருவிழா மார்ச் மாதம் முதல்வாரத்தில் நடைபெறவு ள்ளது. இவ் விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொள் ளுமாறு கல்முனை மாநகர முதல்வர் ஈரானிய உயர் ஸ்தானிகருக்கு விடுத்த உத்தியோகபூர்வ அழைப்பையும் அவர் ஏற்றுக் கொண்டார். இக் கலாசாரப் பெருவிழாவில் ஈரான் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் ஈரான் நாட்டுப் பொருட்கள் காட்சிப்படுத்தப்படுவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வழங்கும் உதவித் திட்டத்தில் ஈரான் கிராமிய மின் திட்டங்களுக்கு கூடுதல் உதவி புரிகின்றது. இதன் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள கிராமங்களுக்கும் இம்மின்சாரத் திட்டத்தை விஸ்தரிக்க வேண்டுமெனவும் கல்முனை முதல்வர் கோரிக்கை விடுத்தார்.

யுத்த வெற்றிக்காக அரசு, படையினரை பாராட்டுகிறார் ரணில்

ranil-2912.jpgவடபகுதி யுத்தத்தில் வெற்றியீட்டியமைக்காக அரசாங்கத்தையும் படையினரையும் எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பாராட்டியுள்ளார். வெற்றியை சாத்தியமாக்கிய எமது ஆயுதப்படைகளின் வீரத்தையும் உணர்வையும் நாங்கள் எந்தவித தயக்கமுமின்றி பாராட்டுகின்றோம். எமது நாட்டின் இறைமை பாதுகாக்கப்பட்டுள்ளது.அத்துடன் நாட்டின் ஆட்புல ஒருமைப்பாடும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்று ரணில் கூறியுள்ளார். பயங்கரவாத நடவடிக்கைகளை தடுத்ததற்காக ஆயுதப்படையினருக்கு ஐ.தே.க. மரியாதை செலுத்துகின்றது. அத்துடன் பொலிஸார் விசேட அதிரடிப்படையினரின் சேவைகளையும் ஐ.தே.க. பாராட்டுகின்றது என்று ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

இது தொடர்பாக நேற்று முன்தினம் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அறிக்கையொன்றை ரணில் விடுத்தார். அதில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது; வடக்கில் ஏற்பட்டிருக்கும் இராணுவ வெற்றிகளுக்காக ஆயுதப்படைகளுக்கு ஐ.தே.க. மரியாதை செலுத்துகின்றது. அவர்களின் வெற்றிகள் உண்மையில் மனதில் கொள்ளப்படக்கூடியவையாகும்.  இப்போது வடமாகாணத்தின் சகல மாவட்டங்களும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன. புலிகளின் பலத்தை எமது படைகள் உடைத்துவிட்டன.

இந்த இராணுவ நடவடிக்கைகளை மேற்பார்வை செய்த ஜனாதிபதி , பிரதமர் , அமைச்சர்கள் ஆகியோரையும் நாம் பாராட்டுகிறோம். அதேவேளை பலதடைகளை அரசு தாண்ட வேண்டியுள்ளதையும் நாம் நினைவூட்டுகிறோம். உண்மையான அரசியல் தீர்வே இறுதியான சமாதானத்தை கொண்டுவரும் . அதுவும் தாண்டப்படவேண்டிய தடைகளில் ஒன்றாக உள்ளது. அத்துடன் அது வன்னியில் இடம்பெயர்ந்த மக்களின் நிலைமைபற்றியதாகும். அவர்கள் நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டவர்கள். சகல பிரஜைகளையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பை நாம் வலியுறுத்துகிறோம். இந்த விடயம் கடமை மட்டுமல்லாமல் பிரக்ஞையானதுமாகும

கல்மடுகுளம் உடைக்கப்பட்டதால் பொதுமக்களே பாதிக்கப்பட்டனர் – இராணுவ பேச்சாளர்

vanni-kalmadu.jpgகல்மடு குளத்தை உடைப்பெடுக்கச் செய்து இராணுவத்தை பாதிப்படையச் செய்ய நினைத்த புலிகளின் திட்டம் பலிக்கவில்லை. மாறாக பெருமளவிலான பொதுமக்களும் பொதுமக்களின் சொத்துக்களுமே பாதிக்கப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

புலிகள் கல்மடு குளத்தின் அணை மீது நடத்திய தாக்குதலில் படையினருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. தர்மபுரம் பகுதியிலிருந்த பொதுமக்களின் வீடுகளே பெரும் சேதத்துக்குள்ளாகின எனவும் அவர் தெரிவித்தார். தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவின் பல பகுதிகளைப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

நகரிலுள்ள டெலிகொம் நிறுவனத்துக்குச் சொந்தமான கட்டடத்தில் புலிகள் பல்வேறு சிதைவுகளை ஏற்படுத்தியுள்ளதைக் காண முடிந்தது. மீட்கப்பட்ட பகுதிகளில் புலிகளின் மோட்டார் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படும் நவீன இயந்திரம் அழிக்கப்பட்டுள்ளதுடன் அப்பகுதிகளிலிருந்து வெடி பொருட்களையும் படையினர் கைப்பற்றியுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வங்கிகளுக்கான எரிபொருள் ஹெட்ஜிங் கொடுப்பனவு மோதலை உயர்நீதிமன்றம் முடிவுக்கு கொண்டு வந்தது

petrol-pump2801.jpgவங்கி களுக்கான எரிபொருள் ஹெட்ஜிங் கொடுப்பனவுகள் தொடர்பான மோதலை உயர்நீதிமன்றம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. கடந்த நவம்பரில் வங்கிகளுக்கான எரிபொருள் ஹெட்ஜிங் கொடுப்பனவுகளை இடைநிறுத்திய உயர் நீதிமன்றம், உலகச் சந்தையில் எரிபொருள் விற்கப்படும் விலைக்கமைய பெற்றோலின் சில்லறை விற்பனை விலையையும் இடைநிறுத்திவைக்கும் பணிப்புரையை விடுத்திருந்தது.

அத்துடன், பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் அஜந்த டி மெல் ஆகியோரையும் இடைநிறுத்தி வைக்கும் பணிப்புரையை விடுத்திருந்தது. ஆனால், நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. “இதனால் இடைநிறுத்தஉத்தரவும் முடிவுக்கு வந்துள்ளது. அவர்கள் வழக்கை தள்ளுபடி செய்து விட்டனர். விபரத்திற்காக நான் காத்திருக்கின்றேன்’ என்று அமைச்சர் பௌசி இது தொடர்பாக ராய்ட்டர் செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.  இந்த வழக்கை வர்த்தகர் ஒருவரும் சில எதிரணி அரசியல்வாதிகளுமாக தாக்கல் செய்திருந்ததாகவும் அதனை முன்கூட்டியே அவர்கள் வாபஸ்பெற முன்வந்ததாகவும் வழக்கறிஞர்கள் கூறினர். “நீதிமன்ற வழக்கு விசாரணைகளை பிரதம நீதியரசர் முடிவுக்கு கொண்டுவந்துள்ளார். இதன் விளைவாக சகல இடைக்கால உத்தரவுகளும் செயலிழந்துவிட்டன’ என்று மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி உதித்த எகலாஹேவ தெரிவித்தார்.

முஸ்லீம்கள் யோகா செய்ய இந்தோனேசிய உலமாக்கள் தடை

yoga.jpgஇந்தோ னேசியாவில் வசிக்கும் முஸ்லிம் மக்கள் யோகா செய்வது, வேத மந்திரங்களை முழங்குவது, தியானம் செய்வது ஆகியவற்றுக்கு இந்தோனேசிய உலமா கவுன்சில் தடை விதித்துள்ளது. இந்தோனேசியாவின் முக்கிய மத அமைப்பா உலமா கவுன்சில் சமீபத்தில் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதில் யோகா முஸ்லீம் மத நம்பிகைகக்கு விரோதமானது என தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், முழுமையான தடையை அவர்கள் விதிக்கவில்லை. இதுகுறித்து உலமாகவுன்சில் எடுத்த முடிவில், இந்தோனேசிய முஸ்லிம்கள் யோகாவை வெறும் உடற்பயிற்சியாக மட்டுமே செய்ய வேண்டும். அதோடு இணைந்து வேத மந்திரங்களை உச்சரிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்படி வேத மந்திரங்களை முழங்குவது, தியானம் செய்வது, முஸ்லிம் மத சட்டங்களுக்கு எதிரானது. இதனால் முஸ்லிம் மக்கள் வேறு மதத்தினரின் நம்பிக்கையை பின்பற்ற நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் சேவையில் ஈடுபடும் பஸ்கள் கொண்டிருக்க வேண்டிய தகைமைகள்

intercity-bus.jpgபயணிகள் சேவையில் ஈடுபடும் தனியார் சொகுசு பஸ் மற்றும் அரைச் சொகுசு பஸ்கள் கொண்டிருக்க வேண்டிய பயண வசதிகள் தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. பயணிகளை கவர்வதற்கான சிறந்த பயண சேவையை வழங்கும் நோக்கில், இந்த அறிவித்தலை ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இதற்கிணங்க, ஆசன ஒதுக்கீட்டின் அடிப்படையில் அரைச் சொகுசு பஸ்களில் பின்வரும் 8 பயணிகள் வசதிகள் பூர்த்தி செய்யப்பட்டிருக்கவேண்டும். பயணிகள் ஆசனம் 700 மில்லிமீற்றர் உயரமும் 40 பாகை சரிவையும் கொண்டிருப்பதுடன் பக்க வாட்டில் கை இருக்க வசதிகள் இருக்கவேண்டும்.

ஆசனத்துக்கு மேலே இருக்க வேண்டிய இடைவெளி 680 மில்லிமீற்றர் ஆகவும் இரு ஆசனங்களுக்கு இடையிலான தூரம் 300 மில்லிமீற்றராகவும் இருப்பதுடன் ஆசனங்கள் இலக்க மிடப்பட்டிருப்பதுடன் பயணச் சீட்டுகள் ஆசனங்கள் தொடர் இலக்கத்தையும் கொண்டிருக்க வேண்டும்.

ஆசனங்களின் எண்ணிக்கை 40க்கு அதிகமில்லாமலும் பொதிகள் வைப்பதற்கான இடம் ஒரு சதுர மீற்றர் இடைவெளி கொண்டதாகவும் இருப்பதுடன் சாரதிக்கான பக்க கண்ணாடிகள் தவிர ஜன்னல் கண்ணாடி இலேசான நிறம் கொண்டவையாக இருக்க வேண்டும்.

அத்துடன், சொகு பஸ் வண்டிகளுக்கு இந்த வசதிகளுடன் மேலதிகமாக ஆசனங்கள் 25 ஆக இருப்பதுடன் குளிரூட்டப்பட்ட பஸ் சேவையாக இருக்க வேண்டும் எனவும் ஆணைக்குழுவின் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.