29

29

சமூகத்தை வழிநடத்தக்கூடிய அரசியல் தலைமைத்துவங்கள் நிலையான கொள்கையை கொண்டிருக்கவேண்டும்’

vote.jpgசமூகத் தின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் அச்சமூகத்தை வழிநடத்தும் தலைமைத்துவத்தின் ஆளுமையிலேயே தங்கியுள்ளது என்று தெரிவித்துள்ள மத்திய மாகாணசபைத் தேர்தலில் மாத்தளை மாவட்டத்தில் மாட்டு வண்டிச் சின்னத்தில் போட்டியிடும் சுயேச்சைக் குழுவின் தலைமை வேட்பாளரான எஸ். ஸ்ரீநிவாசன் இத்தேர்தலை தமிழர்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் மந்தண்டாவளை பிரதேச தமிழ் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; ஒரு சமூகம் ஆளுமை மிக்க தலைமைத்துவமொன்றை உருவாக்கிக்கொள்வதன் மூலமே தமது சமூகத்திலிருந்து நாட்டுக்கும் சமூகத்திற்கும் பேரும் புகழும் பெற்றுக்கொடுக்ககூடியதான புத்திஜீவிகளையும் கல்விமான்களையும் உருவாக்கிக்கொள்ள முடியும்.

எனவே இந்த மாகாணசபைத்தேர்தலில் மலையக தமிழ் மக்கள் தம்மை முறையாக வழிநடத்தக்கூடிய தலைமைத்துவத்தை தெரிவு செய்துக்கொள்வது அவசியமாகும் ஒரு சமூகத்தை வழிநடத்தக்கூடிய அரசியல் தலைமைத்துவங்கள் பச்சோந்திகளைப் போல் அவ்வப்போது நிறமாறிக்கொண்டிராது, நிலையானதும் உறுதியானதுமான கொள்கைகளை கொண்டிருக்க வேண்டும். தனது ஆளுமையை தனது மக்களது மேம்பாட்டுக்கு தியாகம் செய்யக்கூடிய மனப்பான்மையை கொண்டிருக்க வேண்டும்.

மத்திய மாகாணத்தைப் பொறுத்தவரையில் மாத்தளை மாவட்டத்திலேயே பெருமளவிலாக கல்விமான்களும் புத்திஜீவிகளும் உள்ளனர். பெரும்பாலும் சமூகத்தை வழிநடத்தக்கூடிய ஆளுமையும் உறுதியான அரசியல் கொள்கையுமுள்ள தலைமைத்துவமொன்றை உருவாக்கிக்கொள்ளமுடியாமல் போய்விட்டதால் பாராளுமன்ற பிரதிநிதித்துவமொன்றை பெற்றுக்கொள்ளக் கூடிய வாக்குப்பலமிருந்தும் மாகாணசபை உறுப்பினர் ஒருவரைக் கூட தெரிவுசெய்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அன்றுமுதல் இன்றுவரை மாத்தளை வாழ் தமிழ் சமூகம் குறிப்பிட்ட ஒரு சில அரசியல்வாதிகளின் சுயநலத்துக்காக பெரும்பான்மை சமூக கட்சிகளுக்கே இரையாகிப் போயுள்ளனர். இந்த மாகாணசபைத் தேர்தலில் கூட மாத்தளை மாவட்டத்தில் பெரும்பான்மைக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் தமிழர்கள் வெற்றிபெறவேண்டும். குறைந்தபட்சம் 18 ஆயிரம் விருப்பு வாக்குகளை பெறவேண்டும். இதேசமயம், சுயேச்சைக்குழுவில் போட்டியிடும் நாம் வெற்றிபெறவேண்டுமெனில் சுமார் 6 ஆயிரம் விருப்புவாக்குகளை பெற்றுவிட்டால் போதுமானது. தற்போதைய அரசியல் சூழ்நிலையில் மாத்தளை மாவட்டத்தில் பிரதான அரசியல் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் எந்தவொரு தமிழ் அரசியல்வாதியாலும் 18 ஆயிரம் விருப்பு வாக்குகளைப் பெற்றுக்கொள்வது கடினமான விடயமாகும் என்றார்.

இரு தசாப்த கால அகதி வாழ்க்கைக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முற்றுப்புள்ளி – அமைச்சர் றிஷாட் பதியுதீன்

risard.jpgஇரு தசாப்த அகதி வாழ்க்கைக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் முற்றுப் புள்ளி வைக்கும் காலம் அண்மித்துவிட்டதாக மீள் குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிஷாட் பதியுதீன் மன்னாரில் தெரிவித்தார். மன்னார் முருங்கன் பரியாரிகண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் ஒரு கோடி 30 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பாடசாலைக்கான இரு மாடிக்கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

பாடசாலை அதிபர் சந்தியாகோ தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மேலும் அமைச்சர் பேசுகையில் கூறியதாவது; சமூகத்திற்கான விடுதலைக்கு போராடுவதாகக் கூறிக்கொண்டு தனது இனத்தைச் சார்ந்தவர்களை அழித்துவந்த வரலாற்றை நாம் ஒரு போதும் மறந்துவிட முடியாது. இந்த காரணத்தால் இன்று சுமார் ஒரு இலட்சம் மக்கள் அகதிகளாக நாட்டைவிட்டு இந்தியாவில் அகதி முகாமில் அவலம் நிறைந்த வாழ்க்கையை அனுபவிக்க நேரிட்டுள்ளது. அதேபோல் எத்தனை உயிர்களை எமது சகோதரர்கள் இழந்துள்ளனர்.

உரிமைகளுக்காகக் குரல் எழுப்பிய நாங்கள் இன்று சலுகைகளை பெற்றுக்கொள்வதற்கு கூட பெரும் போராட்டங்களை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வடக்கு மக்கள் எனக்களித்த வாக்குப் பலத்தால் இந்த அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியை பெற்றுக்கொண்டு நாட்டு மக்களுக்கும் வடக்கில் வாழும் எமது மக்களுக்குமான அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

இந்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் நிக்கிலஸ் பிள்ளை, கல்விப் பணிப்பாளர் ஆர்பல் ரெவல், அமைச்சின் இணைப்பு செயலாளர் அலிகான் ஸரிப் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்வதில் புதிய நடைமுறை

ballot-box.jpgதேர்தல் மோசடிகள் இடம் பெறுவதை தடுப்பதற்காக தேர்தல் திணைக்களம் இம் முறை சில விசேட திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக உதவித் தேர்தல் ஆணையாளர் பந்துல குலதுங்க தெரிவித்தார்.

வழமையாக வாக்களிப்பு முடிவடைந்தவுடன் வாக்குப்பெட்டிகளில் கட்சி பிரதிநிதிகளின் ஸ்ரிக்ர்கள் ஒட்டப்பட்டபின் வாக்குப் பெட்டிகள் சீல் வைத்து எடுத்துச் செல்லப்படும். ஆனால் வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லும் வழியில் மோசடிகள் இடம்பெறுவதைத் தடுப்பதற்காக வாக்குப்பெட்டிகளை பாதுகாப்பான பொதிகளில் இட்டு ‘சீல்’ வைத்து வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லவுள்ளதாகவும் அவர் கூறினார். இந்தத் திட்டத்துக்கு அரசியல் கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தவிர வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லும் வாகனங்களுடன் கட்சி பிரதிநிதிகளின் வாகனங்கள் உடன் செல்வதற்கு அனுமதி வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தேர்தல் தினத்தில் வாக்கு மோசடிகள் இடம்பெறுவதை தடுக்கவும், விசேட திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளன. அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு வாக்களிக்க அனுமதி வழங்கப்படாதெனவும் வாக்காளர்அட்டை அற்றவர்களுக்கு தற்காலிக அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பில் இரத்ததான முகாம்

school2701.jpgமட்டக் களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் நிலவும் இரத்தத் தட்டுப்பாட்டை நீக்க இரத்ததான முகாம்கள் நடத்தப்படுவதாக போதனா வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் எம். முருகானந்தம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சுகாதாரநல கல்வி நிலையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இரத்ததான முகாம், மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையில் நடைபெற்றது. போதனா வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் எம். முருகானந்தம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

மேற்படி நிலையத்தின் மாணவர்களினால் 30 பைந்த் இரத்தம் சேகரிக்கப்பட்டது. நாளொன்றுக்கு 50 முதல் 60 பைந்த் இரத்தம் இரத்த வங்கியிலிருந்து விநியோகிக்கப்படுவதாக பணிப்பாளர் தெரிவித்தார்.

வன்னி மனிதாபிமான நெருக்கடி குறித்து இலங்கையிடம் ஐரோப்பிய ஒன்றியம் கவலை.

peneetha.jpgஇலங் கையில் ஏற்பட்டிருக்கும் “மனிதாபிமான நெருக்கடி’ தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் விசனமும் கவலையும் தெரிவித்துள்ளது. வடக்கில் மோதல் பகுதிகளில் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகமவிடம் கவலை தெரிவித்துள்ளனர்.  “சர்வதேச தரத்திற்கு மதிப்பளிக்கப்பட வேண்டியது அவசியம்’ என்று கோடிட்டுக் காட்டியிருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரங்களுக்குப் பொறுப்பான ஆணையாளர் பெனிற்றா பெரேரோ வோல்ட்னர், ஐ.நா.மனிதாபிமான முகவரமைப்புகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள கட்டுப்பாடுகள் இருக்கக்கூடாது என்று தெரிவித்திருக்கிறார். ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் இக்கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் ஏற்படுத்தும் பாதையை நோக்கிய அரசியல் தீர்வை அமுல்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்று பெனிற்றா கூறியுள்ளார். அதேசமயம், அண்மையில் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயம் செயற்படும் முறைமை குறித்து விளக்கங்களை அளிக்குமாறு பெரேரோ வோல்ட்னரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக ஆணையாளர் கதரீன் அஸ்ரனும் இலங்கை வெளிவிவகார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஒன்றியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னியில் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடி மற்றும் மனித உரிமைகள் தொடர்பான கவலைகளையும் ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். வெளிவிவகார அமைச்சர் போகொல்லாகம, பெல்ஜியப் பிரதமர் ஹேர்மன் ரொம்பையையும் சந்தித்துள்ளார