30

30

வன்னியில் பெரும் மனிதாபிமான நெருக்கடி’

redcross-2801.jpgவன்னியில் குறுகிய நிலப்பகுதியில் தொடர்ந்து கடும் சமர் நடைபெற்று வருகையில் அங்கு பெரும் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக ஜெனீவாவிலுள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆசிய பிராந்திய நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான ஜேக் மே டயோ தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்;

விடுதலைப்புலிகளின் இறுதிப் பிரதேசமாகிய ஒரு சிறிய நிலப்பரப்பு மீது இராணுவம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை காரணமாக இறந்தவர்களினாலும் பெரும் எண்ணிக்கையில் காயமடைந்தவர்களினாலும் வன்னிப் பிரதேசத்தின் வைத்திய நிலையங்கள் யாவும் நிறைந்து வழிகின்றன.

மக்கள் மோதல்களில் சிக்கியிருக்கிறார்கள். வைத்தியசாலைகளும் அம்புலன்ஸ்களும் தாக்குதல்களுக்கு இலக்காகியிருக்கின்றன. காயமடைந்த சிவிலியன்களை மீட்க முயன்ற உதவிப் பணியாளர்கள் பலரும் காயமடைந்திருக்கிறார்கள். சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரின் பணிகள் அங்கு நிலவுகின்ற வன்முறைச் சூழலினால் தடைப்பட்டிருக்கின்றன.  பெரும் அச்சத்திற்குள்ளாகியுள்ள பொதுமக்களுக்குப் பாதுகாப்பு, வைத்திய கவனிப்பு மற்றும் அடிப்படை வசதிகள் தேவையாகவுள்ளது. பெரும் மோதல்கள் இடம்பெறுகின்ற 250 சதுர கிலோ மீற்றர் பரப்பளவான இடத்தில் இரண்டரை இலட்சம் பேர் சிக்கியிருக்கின்றார்கள். அவர்களுக்கு ஒதுங்கியிருப்பதற்குப் பாதுகாப்பான இடமில்லை. அங்கிருந்து தப்பியோடவும் முடியாதவர்களாக அவர்கள் இருக்கின்றார்கள்.

எல்லாச் சந்தர்ப்பங்களிலும் சர்வதேச மனிதாபிமான சட்டம் மதிக்கப்பட்டு சிவிலியன்கள் பாதுகாக்கப்படாவிட்டால் எல்லாம் ஓயும் போது எண்ணற்றவர்கள் பாதிக்கப்பட்டு மோசமான ஒரு மனிதாபிமான நிலைமை ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. நேரம் ஓடிக் கொண்டிருக்கின்றது. மேலும் இரத்தம் சிந்துவதைத் தடுத்து நிறுத்துவதற்காக உறுதியான முடிவெடுக்க வேண்டிய நேரமாக இருக்கின்றது.

மோதல் பிரதேசத்தில் இருந்து பொதுமக்கள் சுயமாக வெளியேறுவதற்கு அனுமதிப்பதுடன், அதற்கான வசதிகளையும் செய்ய வேண்டும் என மோதலில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரையும் சர்வதேச செஞ்சிலுவைக் குழு கேட்டுக் கொள்கின்றது. முடிந்த அளவு காலத்திற்கு சர்வதேச செஞ்சிலுவைக் குழு வன்னியில் இருப்பதற்குத் தீர்மானித்துள்ளது. ஆனால், அதனுடைய பிரசன்னத்தையும் அதன் பணிகளையும் இரு தரப்பினரும் மதித்துச் செயற்பட வேண்டும்.

வன்னிப் பிரதேசத்தினுள்ள மனிதாபிமான உதவிகள் அனுமதிக்கப்பட வேண்டும். சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் கூறுகின்ற படி மனிதாபிமான பணியாளர்களும் அவர்களது இடங்களும் ஷெல் வீச்சுகள், கொள்ளைகளில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும். சண்டைகளிலும் மோதல்களிலும் நேரடியாகப் பங்கு கொள்ளாதவர்களின் உயிர்களையும் பாதுகாக்க வேண்டும் என இரு தரப்பினரும் வலியுறுத்தப்படுகின்றார்கள்.

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள வவுனியா வைத்தியசாலைக்கு நூற்றுக்கணக்கானவர்கள் அவசர மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட வேண்டியிருக்கின்றது. நெருக்கடி நிலையைச் சமாளிப்பதற்காக சர்வதேச செஞ்சிலுவைக்குழு வன்னியிலுள்ள புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்குத் தனது உதவிகளை வழங்கி வருகின்றது. அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய இரு தரப்பினருடைய உடன்பாட்டுடன் கடந்த நான்கு மாதங்களாக வன்னியில் நிரந்தரமாக இருந்து செயற்பட்டு வருகின்ற ஒரேயொரு நிறுவனமாகிய சர்வதேச செஞ்சிலுவைக் குழுவானது இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினருடன் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாணத்தில் 3 மாவட்டங்களில் 17,47,449 பேர் வாக்களிக்க தகுதி

ballot-box.jpgமத்திய மாகாணசபைத் தேர்தலில் கண்டி , மாத்தளை , நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் 17 இலட்சத்து 47 ஆயிரத்து 449 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இந்த வாக்குகளின் அடிப்படையில் கண்டி மாவட்டத்தில் 30 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 16 பேரும் மாத்தளை மாவட்டத்தில் 10 பேரும் மத்திய மாகாணசபைக்குத் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

கண்டி மாவட்டத்தில் 9 இலட்சத்து 55 ஆயிரத்து 108 பேரும் மாத்தளை மாவட்டத்தில் 3 இலட்சத்து 38 ஆயிரத்து 946 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 4 இலட்சத்து 53 ஆயிரத்து 395 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

மேலும் கண்டி மாவட்டத்தில் 13 தேர்தல் தொகுதிகளில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை விபரம் வருமாறு;

ஹாரிஸ்பத்துவ 1,45,752, கம்பளை 89,422, குண்டசாலை 84,871, நாவலப்பிட்டி 82,686, பாத்தும்பறை 76,751, யட்டிநுவர 76,262, உடுநுவர 75,994, செங்கடகல 71,886, பாத்தஹேவாஹெட்ட 64,133, உடுதும்பறை 54,923, கலகெதரை 52,169 , தெல்தெனிய 44,057 , கண்டி 36,702 வேட்பாளர்கள் உள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் நிலைப்பாடும் ஆதரவுமே படையினர் முல்லைத்தீவை கைப்பற்றுவதற்கு பிரதான காரணம்

முல்லைத்தீவினை கைப்பற்றி எமது படைவீரர்கள் பெற்றுள்ள வெற்றிக்கு இந்தியாவின் நிலைப்பாடும் ஆதரவுமே முக்கிய காரணம் என்று மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தெரிவித்துள்ளார். கண்டி ஹில்டொப் ஹோட்டலில் நடைபெற்ற இந்தியாவின் 60 ஆவது குடியரசுதின வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கண்டி இந்திய உதவி தூதரகத்தினால் உதவித்தூதுவர் ஆர்.கே. மிஸ்ரா தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ்வைபவத்தில் சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மகிபால ஹேரத், மத்திய மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர, கண்டி மாவட்ட செயலாளர் கோட்டாபே ஜயரத்ன,மத்திய மாகாண அமைச்சின் செயலாளர் சிராணி வீரகோன்,தொழிற்சங்க தலைவர்கள்,மத்தியமாகாண கண்டி மேயர் எல். பீ. அலுவிகார, மாநகரசபை உறுப்பினர்கள், பேராதனை பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஹரிச்சந்திர அபயகுணவர்தன உட்பட பலரும் கலந்து கொண்டனர்

அவர் அங்கு மேலும் கூறியதாவது; இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் நீண்டகால வரலாற்று அரசியல் ,பொருளாதார, கலாசார தொடர்புகள் உண்டு. இலங்கையும் இந்தியாவும் சிறந்த நட்புகொண்ட நாடுகளாகும். பயங்கரவாதத்தின் தாற்பரியத்தினை இரண்டு நாடுகளும் உணர்ந்துள்ளன. மும்பாய் தாக்குதல் இதற்கு எடுத்துக்காட்டாகும். மும்பாய் தாக்குதலினால் உயிரிழந்தவர்களுக்காக நாமும் எமது அனுதாபத்தினை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இலங்கை சுதந்திரமடைந்து இன்று 61 வருடமாகிறது. இந்தியாவுக்கு 60 வருடமேயாகிறது. எமது மக்கள் சுதந்திரத்தின் முழுத் தன்மையையும் அனுபவிக்கவேண்டும் என்பதற்காகவே பயங்கரவாதத்திற்கெதிராக யுத்தத்தை முன்னெடுக்கின்றோம். இந்த யுத்தத்தில் நாம் பெற்றுவரும் வெற்றிக்கு இந்தியாவும் ஒரு காரணமாகும். இந்தியா கொண்டுள்ள நிலைப்பாடு போற்றுதற்குரியதாகும்.

இந்தியாவும் பயங்கரவாதத்தின் உண்மைத்தன்மை உணர்ந்துள்ளது. இன்று உலகமும் பயங்கரவாதத்தின் உண்மை நிலையை உணர்ந்துள்ளது. எனவே தான் பயங்கரவாதத்திற்கு எதிராக சகல நாடுகளும் போராட வேண்டியுள்ளது. இந்தியா பொருளாதார ரீதியிலும் இலங்கையின் நண்பனாகவேயுள்ளது. பல்வேறு முதலீடுகளை இலங்கையில் மேற்கொண்டுள்ளது. என்றார்.

இந்திய உதவித்தூதுவர் ஆர்.கே மிஸ்ரா உரையாற்றுகையில் கூறியதாவது;
இந்தியா சகல துறைகளிலும் வளர்ச்சிபெற்று வருகிறது. விவசாயத்தில் உணவுப் பற்றாக்குறையை போக்கி தன்னிறைவு பெற்று விளங்குகிறது. இந்தியாவின் வெளிநாட்டு கொள்கை நட்புரீதியானது. இலங்கையுடன் நீண்ட கால நட்பினைக் கொண்டுள்ளது. பல்வேறு துறைகளில் இணைந்து செயற்படுகிறது. இலங்கையில் நீண்டகாலமாக சகல இனமக்களுடனும் நட்பினை கொண்டுள்ளது என்றார்.

சகோதர மொழி தெரியாமையினாலேயே நாடு இன்று யுத்தகளமாக மாற்றம்

“இந்த நாட்டில் வாழும் சகல மக்களும் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். இன்று நாடு சுதந்திரம் பெற்று 61 வருடங்களாகிய போதிலும் தமிழ் பேசும் மக்களுக்கு சிங்கள மொழி தெரியாமையும் சிங்கள மக்களுக்கு தமிழ் மொழி தெரியாமையினாலேயே நாடு இன்று யுத்தகளமாக மாறியுள்ளது. இந்த நிலைமையை மாற்றி அமைப்பதற்கு எமது எதிர்காலச் சந்ததியினரான இன்றுள்ள சிறார்களுக்கு மூன்று மொழிகளையும் கற்றுக்கொள்ளக் கூடிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்’.

இவ்வாறு கடந்த சனிக்கிழமை அம்பாறை ஆரியபவன் உல்லாச விடுதி மண்டபத்தில் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசத்திலுள்ள ஊடகவியலாளர்களுக்கு கொழும்பு பல்கலைக்கழகத்தின் மனித உரிமைகளுக்கான கற்கை நிலையம் ஏற்பாடு செய்திருந்த உரிமைகள் தொடர்பான பயிற்சி முகாமில் விரிவுரை நிகழ்த்திய கண்டி மாவட்ட உயர் நீதிமன்றத்தின் அரச சட்டத்தரணி நவரெத்தின மாரசிங்க தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;

“ஊடகவியலாளர்கள் மனித உரிமைகள் பற்றி போதுமான அறிவைப் பெற்றுக்கொள்வதை மையமாக வைத்தே இந்தப் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டதுடன் , இது தொடர்பான கை நூல்களும் வழங்கப்பட்டிருக்கின்றன. இவற்றைச் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அத்துடன் சட்டங்கள் தொடர்பான விடயங்களும் இந்தப் பயிற்சியின் போது வழங்கப்பட்டுள்ளன’ என்றார்.

வடமாகாண ஆளுநரின் உப அலுவலகம் வவுனியாவில் திறந்து வைப்பு

வடமாகாண ஆளுநரின் உப அலுவலகம்  செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் வவுனியா மன்னார் வீதியில் உள்ள அரச சுற்றுலாவிடுதியில் வைபவரீதியாக திறந்துவைக்கப்பட்டது. ஆளுநர் சரத்சந்திர டிக்ஸன் தலா வைபவரீதியாக அலுவலகத்தை திறந்துவைத்ததுடன் மாகாண அமைச்சின் செயலாளர்களுடன் உயர்மட்ட கலந்துரையாடலையும் நடத்தினார்.

வடக்கின் ஐந்து மாவட்டங்களுடைய அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக முக்கிய வேலைத்திட்டங்கள் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னோடியாக அவசர தேவையாகவே உப அலுவலகம் வவுனியாவில் திறக்கப்பட்டுள்ளது. மற்றும் பொதுமக்கள் தமது தேவைகளை கவனிக்க நீண்ட தூரம் பயணம் செய்து திருகோணமலைக்கு செல்லவேண்டியுள்ளது. இதன் காரணமாகவும் இந்த உப அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. வடக்கே வசந்தம் அபிவிருத்தி வேலைத்திட்டம் துரிதமாக நடைபெறவேண்டும் என்பது ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த பிரதேசத்தின் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து செல்வோம் என ஆளுநர் இங்கு பேசும்போது குறிப்பிட்டார்.

வாரத்தில் இரு தினங்கள் உப அலுவலகத்தில் சகல மாகாண அமைச்சுகளுடைய செயலாளர்களும் பிரசன்னமாகி இருப்பார்கள் என மாகாண பிரதம செயலாளர் எஸ்.இரங்கராசா தெரிவித்தார். வவுனியா மாவட்ட திணைக்கள உயர் அதிகாரிகள் பலரும் இந்த வைபவத்தில் கலந்து கொண்டிருந்தனர். புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தலைவர் செபமாலை திரைவீரசிங்கம் மற்றும் உறுப்பினர்கள் தேசநிர்மாண அமைச்சின் இணைப்பாளர் பி.சுமதிபால ஆகியோரும் இந்த வைபவத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

மீண்டும் யாழ் தேவி புகையிரத சேவை – போக்குவரத்து அமைச்சர்

train.jpgவடக்கு மற்றும் தெற்கு மக்களுக்கு இடையிலான சகோதரத்துவத்தை மேம்படுத்தும் முகமான யாழ்தேவி புகையிரத சேவையை காங்கேசன்துறை வரையில் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போக்குவரத்து துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதனை தெரிவித்துள்ளார்.
 
இந்த நடவடிக்கைகளுக்கென நாட்டின் அனைத்து மக்களையும் இனபேதமற்ற முறையில் இணைத்துக் கொள்ளவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். யுத்தம் காரணமாக முழுமையாக சேதமடைந்துள்ள வவுனியாவில் இருந்து காங்கேசன்துறை வரையிலான 169 கிலோமீற்றர் புகையிரத பாதையின் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் இதன் போது தெரிவித்துள்ளார்.
 

“ஜெயவர்தனபுர வைத்தியசாலை நிதி மோசடி விசாரணை இல்லையேல் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்குவோம்’

ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலையில் இடம்பெற்ற நிதி மோசடி பற்றி விசாரணைகள் மேற்கொள்ளப்படாவிடின் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கப் போவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ் வைத்தியசாலைக்கு அரசாங்கம் 2007 ஆம் ஆண்டில் 680 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ள போதும் பரசிற்றமோல் மாத்திரைக்காகவும் நோயாளர்களிடம் பணம் அறவிடப்படுவதாக மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக் காட்டியுள்ளது.

இந்த நிலையில் அங்கு இடம்பெற்ற முறைகேடுகளை இனம் காணவென குழுவொன்றை நியமித்திருப்பதாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் சங்கத்தின் பேச்சாளர் உப்புல் குணசேகர தெரிவித்தார். பாராளுமன்ற சட்டத்துக்கு அமைவாக 1983 இல் நிறுவப்பட்ட இவ் வைத்தியசாலையில் தற்சமயம் மூன்றாவது நிலையில் உள்ள மருத்துவப் பட்டப் பின்படிப்புப் பட்டதாரிகள் பயிற்சி பெற்று வருகின்றனர்.

இவ் வைத்தியசாலை முகாமைத்துவ சபையின் சீரற்ற நிர்வாகத்தால் கடுமையான நிலையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சைகளை வழங்க முடியாதுள்ளதாக சங்கத்தின் பேச்சாளர் தெரிவித்தார். முறைகேடுகளை விசாரிப்பதற்கான பாராளுமன்ற தெரிவுக் குழுவின் அறிக்கையின் படி, மிக மோசமான முறைகேடுகள் இடம்பெறும் நிறுவனங்களில் ஜெயவர்தன புர வைத்திய சாலை 9 ஆவது இடத்தை வகிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் வைத்திய சாலையின் இந்த நிலைமைக்கு எவரும் பொறுப்புக் கூறுவதாக இல்லை. இது விடயத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார். இவ்வைத்திய சாலைக்கான நியமனங்கள் அனைத்தும் சுகாதார அமைச்சரால் மேற்கொள்ளப்பட்டு விட்டன. இவற்றில் அரசியல் ரீதியாக வழங்கப்பட்ட சில நியமனங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார். இந்த வைத்தியசாலையின் தற்போதைய சீர்கேடான நிலைமையை திருத்தியமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிடின் உரிய பயிற்சியைப் பெறுவதற்கு இவ்வைத்தியசாலை தகுதியற்றது என பயிற்சி பெறும் பட்டப்பின்படிப்புப் பட்டதாரிகளுக்கு கடிதம் எழுதவுள்ளதாகவும் வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமைச்சுப் பதவிகள் மூலம் கிடைக்கும் வரப்பிரசாதங்கள் உரிய முறையில் தொழிலாளர்களுக்கு கிடைக்கவேண்டும் – மனோ எம்.பி. தெரிவிப்பு

mano_ganesan_mp_.jpgஇன்று பெருந்தோட்ட மக்கள் அனுபவிக்கின்ற துன்பங்களுக்கும், வேதனைகளுக்கும் அரசாங்கங்களைக்குறை கூறுவதால் எவ்வித பிரயோசனமுமில்லை. மாறாக அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்டு மக்களுக்கு உரிய சேவைகளைச் செய்யாதவர்களையே உண்மையில் குறை கூற வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

பொகவந்தலாவைப் பிரதேசத்திலுள்ள எலிபடை மேற்பிரிவு, கீழ்ப்பிரிவு, கேர்க்கஸ்வோல்ட் மத்திய பிரிவு, கேர்க்கஸ்வோல்ட் கீழ்ப்பிரிவு, பெற்றசோ ஆகிய தோட்டங்களில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டங்களில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மனோ கணேசன் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது;

இன்று பெருந்தோட்ட மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். அதிகமாக உழைத்துக் குறைந்த வருமானம் பெறுகின்ற ஒரே சமூகமாக பெருந்தோட்டச் சமூகம் இன்றும் இருந்து வருகின்றது. ஒவ்வொரு அரசாங்கத்திலும் அமைச்சுப்பதவிகளை வகிக்கின்ற இந்தப் பெருந்தோட்டச் சமூகப்பிரதிநிதிகள் இந்த மக்களின் தேவைகளை உணர்ந்து சேவை செய்யாமல் தத்தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதிலேயே கண்ணும் கருத்துமாய் இருக்கின்றனர்.

மலையகத்தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களெல்லாம் இன்று அமைச்சுப்பதவிகளை வகித்துக்கொண்டிருக்கின்ற போதும் இவர்களால் சமூகத்துக்கு எந்த வித பிரயோசனமுமில்லை. இந்த மக்கள் நாளுக்கு நாள் சொல்லிக்கொள்ள முடியாத வேதனைகளை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய ஏமாற்றுத் தலைமைகளைத் துடைத்தெறிவதற்கு தான் நாம் இன்று மலையகத் தேர்தல் களத்தில் குதித்துள்ளோம். மலையகம் எனது தாயகம், இந்த மண்ணையும் என்னையும் பிரிக்கமுடியாது.

இந்த மக்களுக்காக மனமுவந்து சேவை செய்வதற்கு முன்வந்துள்ளோம். எம்மை ஏன் இங்கு வந்தீர்கள் என்று கேள்வி கேட்பதற்கு யாருக்கும் எவ்வித அதிகாரமும் கிடையாது. எதிர்வரும் தேர்தலில் எமக்கு உரிய பலத்தை வழங்குவதற்கு மலையக மக்கள் முன்வரவேண்டும்.

தொடர்ந்து தோட்டத்தொழிலாளர்களுக்கு உரிய சம்பளம் கிடைக்காவிட்டால் உரிய தரப்பினருடன் நாம் பேச்சுவார்த்தை நடத்தி தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வைப்பெற்றுக்கொடுப்பதில் தயங்கப்போவதில்லை.
எனவே ஆளுகின்ற அரசாங்கங்களில் எம்மவர்கள் அமைச்சுப்பதவிகளை வகிப்பதை நான் ஒருபோதும் குறை சொல்லமாட்டேன். மாறாக அந்த அமைச்சுப்பதவிகள் மூலம் கிடைக்கின்ற வளங்கள், வரப்பிராசாதங்கள், அதிகாரங்கள் அனைத்தும் இந்த மக்களுக்குக் கிடைக்கவேண்டும் என்பதே எனது எண்ணமாகும். ஆகவே எதிர்வரும் தேர்தலில் மலையக மக்கள் எனக்கு வாக்களிக்கின்றீர்கள் என்று கருதி எனது அமைப்பின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.

சிவிலியன்களை விடுவிக்க: புலிகளுக்கு ஜனாதிபதி 48 மணிநேர காலக்கெடு

mahi-raja.jpgவடக்கில் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அடுத்து வரும் 48 மணி நேரத்தினுள் சிவிலியன்களை சுதந்திரமாகச் செல்வதற்கு அனுமதிக்க வேண்டுமென ஜனாதிபதி புலிகளிடம் வற்புறுத்திக் கேட்டுள்ளார்.

அதேநேரம், வடக்கிலிருந்து இடரற்ற சூழலை நோக்கிப் பாதுகாப்பாகச் செல்லும் சகல மக்களினதும் சொந்தப் பாதுகாப்புக்கும், உரிமைகளுக்கும் தான் உத்தரவாதம் வழங்குவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

வடக்கில் புலிகளின் பிடியில் சிக்குண்டுள்ள பொதுமக்களின் நிலை தொடர்பாக ஜனாதிபதி நேற்றிரவு அறிக்கையொன்றை விடுத்தார். அந்த அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:- என்னுடைய அரசாங்கம் எப்போதும் நாட்டிலுள்ள மக்கள் அனைவரினதும் நலன்புரி நடவடிக்கைகளிலும், அவர்களது பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திலும் பெரும் அக்கறையுடனேயே செயற்பட்டு வருகிறது.

விசேடமாக, புலிகளின் ஆதிக்கத்தின் கீழ் வடக்கு, கிழக்கில் வாழும் மக்களின் நலனிலும் எனது அரசாங்கம் பெரும் கரிசணை கொண்டு செயற்படுகிறது. இந்த வகையில், இலங்கையிலுள்ள சகல மக்களும் சமாதானமாக வாழ வேண்டுமென்பதில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது.

விசேடமாக வடக்கு, கிழக்கில் வாழும் மக்களுக்கு அவர்களது ஜனநாயக உரிமையை அனுபவிக்கும் வாய்ப்பு இருக்கிறது. அதேநேரம், இலங்கையில் நீண்டகாலம் பின்பற்றப்பட்டுவரும் ஜனநாயகப் பாரம்பரியம் மூலம் அவர்களது அபிலாஷைகளுக்கேற்ப தேர்தல் மூலம் அவர்களுடைய தலைவர்களை சுதந்திரமாகத் தெரிவு செய்யும் வாய்ப்பு இருக்கிறது.

என்றாலும், வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கு பேச்சுவாரத்தை மூலம் தீர்வுகாண எடுக்கப்பட்ட முயற்சிகள் யாவும் புலிகளால் குழப்பியடிக்கப்பட்டன. இலங்கை மக்கள் மீது புலிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு நான் நிர்ப்பந்திக்கப்பட்டேன். பயங்கரவாதத்தை அகற்றி மக்களை அதிலிருந்து விடுவிப்பதற்கான மனிதாபிமான நடவடிக்கைகளை பாதுகாப்புப் படையினர் முன்னெடுத்தனர்.

இந் நடவடிக்கையின் போது அரசாங்கத்தினரும் படையினரும் சிவிலியன்களின் நலன்புரி நடவடிக்கைகளிலும், உயிர்களைப் பாதுகாப்பதிலும் சொத்துக்களை அழிக்காமல் இருப்பதிலும் மிகவும் அக்கறையுடன் செயற்படுகின்றனர். மேலும், ஜனநாயக ரீதியில் மக்கள் ஆணைபெற்ற அரசாங்கம் என்ற வகையில் இலங்கையின் இறைமையையும் ஆட்புல ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதில் உறுதியுடன் செயற்படுகிறது. இலங்கை மக்களை ஐக்கியப்படுத்தும் அதேநேரம் சகல பிரச்சினைகளுக்கும் ஜனநாயக வரையறைக்குள்ளேயே தீர்வு காண வேண்டுமென்பதிலும் அரசாங்கம் உறுதியாக இருக்கிறது.

இந்த வகையில் அரசாங்கத்தினதும் மக்களினதும் இலக்கை அடைவதற்கு பாதுகாப்புப் படையினர் வெற்றிகரமான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர். ஜனநாயகத்தை மீளக் கட்டியெழுப்புவதில் அரசாங்கம் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்கிறது. வடக்கில் வாழும் மக்கள் தங்களது ஜனநாயக உரிமைகள் மூலம் தங்களது தலைவர்களைத் தேர்ந்தெடுத்து வாழ்வதற்கு உரிமை இருக்கிறது.

சகல பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலமும் கலந்துரையாடல் மூலமுமே தீர்வு காணப்படும். வன்முறைகள் மூலம் தீர்வுகாண அரசாங்கம் ஒருபோதும் முயற்சிக்காது. பாதுகாப்புப் படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கையால் வடக்கில் குறுகிய நிலப்பரப்பினுள் பொது மக்கள் புலிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

பெரும் தொகையான மக்கள் புலிகளால் பலாத்காரமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இதன் மூலம் அப்பாவி மக்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

புலிகளால் பொதுமக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை கவனத்தில் கொண்ட நாம், யுத்தப் பிரதேசத்தில் பொது மக்கள் பாதுகாப்பு வலயமொன்றை பிரகடனப்படுத்தினோம். இது முழுக்க முழுக்க சிவிலியன்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டே ஏற்படுத்தப்பட்டது.

படையினருக்கும், ஆயுதம் ஏந்திய புலிகளுக்குமிடையில் மோதல்கள் ஏற்படுகின்ற போது பொது மக்களைப் பாதுகாப்பதே இதன் நோக்கமாகும்.துரதிர்ஷ்டவசமாக பாதுகாப்பு வலயத்தினுள் புலிகள் ஆட்லறித் தாக்குதல் நடத்தி வருகின்ற அதேநேரம் அந்தப் பகுதிகளினுள் இருந்து கொண்டு பாதுகாப்புப் படைவீரர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இதனால், கண்மூடித்தனமான முறையில் சிவிலியன்களைக் கொல்கின்றனர்.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அடுத்து வரும் 48 மணி நேரத்தினுள் சிவிலியன்கள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்க வேண்டுமென நான் புலிகளிடம் கேட்டுக் கொள்கிறேன். அந்த சிவிலியன்கள் அனைவரும் ஒரு பாதுகாப்பா இடரற்ற சூழலுக்குள் பாதுகாப்பாக செல்வதை நான் உறுதிப்படுத்துகிறேன்.

வடக்கில் மோதல் நடைபெறும் பகுதிகளில், (புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களில்) வாழும் சகல மக்களினதும் சொந்தப் பாதுகாப்பும் இலங்கையில் வாழும் ஏனைய பிரதேச மக்கள் அனுபவிக்கும் உரிமைகளும் அந்த மக்களுக்கும் கிடைக்கும் வகையில் நான் உத்தரவாதம் வழங்குகிறேன். இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்தார்.