வன்னிப் பிரதேசத்தின் தற்போதைய நிலைமை தொடர்பாக அரசாங்கம் நேற்று சர்வதேச சமூகத்திற்குத் தெளிவுபடுத்தியது. கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்களுக்கும் ஐ.நா. நிறுவனங்கள் உள்ளிட்ட சர்வதேச தொண்டர் நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும் வன்னியின் தற்போதைய நிலைமை தொடர்பாகத் தெளிவுபடுத்தப்பட்டதென அனர்த்த முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். அதேநேரம், சிவிலியன்களை விடுவிக்கவென புலிகள் இயக்கத்தினருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கியுள்ள 48 மணிநேர காலக்கெடு ஒரு யுத்த நிறுத்தமல்ல என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
வன்னிப் பிரதேசத்தின் தற்போதைய நிலைமை தொடர்பாக சர்வதேச சமூகத்திற்குத் தெளிவுபடுத்தியமை குறித்து ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். இச்செய்தியாளர் மாநாட்டின்போது அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது: வன்னிப் பிரதேசத்தின் தற்போதைய நிலைமை தொடர்பாக சர்வதேச சமூகத்திற்கு நன்கு தெளிவுபடுத்தியுள்ளோம். இராணுவ தளபதி மனிதாபிமான நடவடிக்கை குறித்து விஷேடமாகத் தெளிவுபடுத்தினார்.
ஜனாதிபதி புலிகள் இயக்கத்தினருக்கு வழங்கியுள்ள 48 மணி நேரக் கால அவகாசம் ஒரு யுத்த அறிவிப்பு அல்ல, மாறாக புலிகள் இயக்கத்தினர் தடுத்து வைத்துள்ள சிவிலியன்களை அவர்கள் விடுவிக்கவும் அந்த மக்கள் அரசாங்கம் அறிவித்துள்ள பாதுகாப்பு வலயத்திற்குள்ளும், இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குள்ளும் வந்து சேரவுமே இந்த கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.
புலிகள் இயக்கத்தினர் ஆயிரக்கணக்கான சிவிலியன்களை தடுத்து வைத்துள்ளனர். அம்மக்களின் சுதந்திர நடமாட்டத்தை மறுத்துள்ளனர். ஆனால் அம்மக்களும் இலங்கைப் பிரஜைகளே. அவர்களும் எமது சகோதரர்களே. எமது பாதுகாப்புப் படையினர் சிவிலியன்களை இலக்கு வைத்து மனிதாபிமான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. புலிகள் இயக்கத்தினரால் தடுத்து வைக்கப்ப ட்டுள்ள அம்மக்களை விடுவித்து அவர்களுக்கு அரசியல் யாப்பு ரீதியான சகல ஜனநாயக உரிமைகளை பெற்றுக் கொடுக்கவும், அம்மக்களுக்கு நல்வாழ்வை ஏற்படுத்திக் கொடுக்கவுமே நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அந்த மக்கள் தெற்கு மக்களுடன் சினேகபூர்வ நட்புறவுடன் வாழ்வதற்குரிய சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது அரசின் பொறுப்பாகும்.
புலிகள் இயக்கத்தினர் தடுத்து வைத்துள்ள மக்களை விடுவித்து அம்மக்கள் அரசாங்கம் அறிவித்துள்ள பாதுகாப்பு இடங்களுக்கு வந்து சேர்ந்ததும் அவர்களைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும் சர்வதேச சமூகத்திற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டிருக்கிறது. பாதுகாப்பு படையினர் அப்பாவி சிவிலியன்களை பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து விடுவிப்பதற்காகத் தான் மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். பயங்கரவாதம் ஒழித்துக்கட்டப்படும் வரையும் இந்நடவடிக்கை தொடரும்.
தற்போது புலிகள் இயக்கத்தினர் அரசாங்கம் அறிவித்துள்ள யுத்த சூனிய பிரதேசத்திற்கு மிகவும் நெருங்கிய இடமொன்றில்தான் தங்களது கனரக ஆயுதத் தளத்தை அமைத்துள்ளனர். இதனை இராணுவத்தினர் செய்மதி படங்கள் ஊடாக உறுதிப்படுத்தியுள்ளனர். அந்த இடத்திலிருந்து தான் புலிகள் இயக்கத்தினர் இப்போது இராணுவத்தினர் மீது தாக்குதல் நடாத்துவதாகவும், அந்த நிலைகள் மீது துல்லியமாக இனம் கண்டு பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடாத்துவதாகவும் இத்தாக்குதல்களில் சிவிலியன்களுக்குப் பாதிப்புகள் ஏற்படவில்லை எனவும் புலிகள் இயக்கத்தினர் அமைத்துள்ள கனரக ஆயுத நிலைக்கு அருகில் சிவிலியன்கள் இல்லை என்றும் இராணுவத் தளபதி தெளிவுபடுத்தினார்.
இதேவேளை புலிகள் இயக்கத்தினர், தாம் தடுத்து வைத்துள்ள சிவிலியன்களுக்கு இரண்டு, மூன்று நாட்கள் ஆயுதப் பயிற்சி வழங்கி அவர்களை புலிகளின் பதுங்கு குழிகளை பாதுகாக்கும் பணியிலும் ஈடுபடுத்தியுள்ளனர். சிவிலியன்களை விடுவிக்கும்படி ஜனாதிபதி கால அவகாசம் வழங்கியுள்ள இதேநேரம் ஐக்கிய நாடுகள் சபையும், சர்வதேச மன்னிப்பு சபையும், மனித உரிமை கண்காணிப்பகமும் சிவிலியன்களை விடுவிக்கும்படி ஏற்கனவே கோரியுள்ளன என்றும் குறிப்பிட்டார்.
இச்செய்தியாளர் மாநாட்டில் சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சின் செயலாளர் டாக்டர் அத்துல கஹந்த லியனகே உரையாற்றுகையில், விடுவிக்கப்படாத பிரதேசங்களில் தங்கியுள்ள மக்களுக்கு எதுவிதமான குறைபாடுகளுமின்றி ஆரோக்கிய சேவையை வழங்கும் படி ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அதற்கு ஏற்ப நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அங்கு எதுவிதமான மருந்துப் பொருள் தட்டுப்பாடும் கிடையாது. நான்கு நாட்களுக்கு முன்னர் கூட அப்பிரதேசங்களுக்கென மருந்து பொருட் தொகுதியை அனுப்பி வைத்துள்ளோம். கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதேசங்களில் பணிபுரியவென புதிதாக 40 டாக்டர்கள் கூட நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.