03

03

“விடுதலைப்புலிகளை யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர யு எஸ் ஜரோப்பிய ஒன்றியம் யப்பான் நோர்வே கூட்டாக அவசர வேண்டுகோள்”

BBC NEWS: 03 FEB2009

விடுதலைப்புலிகளை யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர யுஎஸ், ஜரோப்பிய ஒன்றியம், யப்பான், நோர்வே கூட்டாக அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது ஆயுதங்களை கீழே வைத்து விட்டு இந்த யுத்தத்தையும் மனித அவலத்தையும் தவிர்த்துக் கொள்ளும்படி கூட்டாக அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.

விடுதலைப்புலிகள் மிக குறைந்தளவிலான தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து தமது இறுதி யுத்தத்தை செய்யும் இவ்வேளையில் இலங்கை அரசு இலகுவாக இராணுவரீதியாக வெற்றி பெறக் கூடிய வாய்ப்புக்கள் உள்ள இந்த வேளையில் இந்த அவசர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகள் தமது கடைசித் துண்டு நிலத்தில் உள்ள 250 000 மக்களையும் போராளிகளையும் மனித அவலங்களிலிருந்து தவிர்க்கும்படி கேட்டுள்ளது. இந்த வேண்டுகோளில் அந்தப் பிரதேசத்தில் அகப்பட்டுள்ள மக்களின் கவனத்திலேயே இந்த மேற்குறிப்பிட்ட நாடுகள் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளது.

மேலும் இந்த நாடுகள் புலிகளை ஆயுதங்களை கீழே வைத்து விட்டு வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறும் அரசினால் அளிக்கப்படும் மன்னிப்பை ஏற்றுக் கொள்ளுமபடியும் இலங்கைத் தமிழர்க்கான இறுதியான அரசியல்த்தீர்வை எட்டும்படியும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

முல்லைத்தீவிலுள்ள ஒரே ஒரு மருத்துவமனை கடந்த சில தினங்களாக பல தடவைகள் மோட்டார் தாக்குதலுக்குள்ளாகி பலர் இறந்துள்ள நிலையிலேயே இந்த கூட்டறிக்கை வெளிவந்துள்ளது.

இக் கூட்டறிக்கையில் இரு தரப்பினரம் சர்வதேச சட்டதிட்டங்களை மதித்து செயற்ப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதிற்கு தாம் பொது மக்களை அந்தப் பிரதேசத்திலிருந்து விலகிப்போகும்படி கேட்டுக் கொண்டதாயும் அவர்கள் அப்படிபோக முடியாததிற்கு தாம் பொறுப்பில்லை என்றும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசம் தொடர்ந்து குறுகிய வண்ணமே உள்ளது. ஆயுதபாணிகள் வடக்கு நோக்கி நகர்ந்து செல்வதும், விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாதிகள் என யுஎஸ் ஜரோப்பிய ஒன்றியம் மற்றும் பல நாடுகள் அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது

இந்த கூட்டறிக்கையில் முன்னைய பேச்சுவார்த்தகைளில் நோர்வே மத்தியஸ்த்தம் வகித்து செயற்ப்பட்டபோதிலும் அரசுக்கும் – புலிகளுக்குமிடையிலான பேச்சு வார்த்தை பயனளிக்காது போனதே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனப்பிரதமர் மீது செருப்பு வீச்சு

china-pm.jpgகடந்த ஆண்டு இறுதியில், அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ் பாக்தாத் சென்றபோது அவர் மீது செய்தியாளர் ஒருவர் தனது இரு ஷூக்களையும் வீசிய சம்பவம் உலகையே பரபரப்பில் ஆழ்த்தியது. இந்த சம்பவம் மறைவதற்குள் லண்டனில், சீன பிரதமர் வென் ஜியாபோ மீது ஷூ வீசப்பட்டுள்ளது.

சீன பிரதமர் வென் ஜியாபோ 3 நாள் பயணமாக இங்கிலாந்துக்கு சென்றுள்ளார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடந்த கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அப்போது, திடீரென எழுந்த ஒரு வாலிபர், வென் ஒரு சர்வாதிகாரி. இந்த சர்வாதிகாரிக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் எப்படி பேச அனுமதி கொடுக்கலாம் என்று ஆவேசமாக கூறியபடி தன் ஷூவை கழற்றி வீசினார். ஆனால் வென் ஜியாபோ மீது ஷூ படவில்லை. வென் ஜியாபோ இருந்த மேடைக்கு முன்பாகவே விழுந்து விட்டது.

உடனடியாக பாதுகாப்புப் படையினர் அந்த நபரை மடக்கிப் பிடித்து அப்புறப்படுத்தினர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

பம்பலப்பட்டி – மருதானை ரயில் சேவை நிறுத்தம் – இணைப்பு பஸ்சேவை ஆரம்பம்

train.jpgசுதந்திர தின பிரதான வைபவங்கள் கொழும்பு காலி முகத்திடலில் நடைபெறுவதை முன்னிட்டு பம்பலப்பிட்டியிலிருந்து மருதானை வரையிலான ரயில் சேவை நேற்று நள்ளிரவு முதல் இடை நிறுத்தப்பட்டுள்ளது.  இன்றும் நாளையும் இந்த புதிய நடைமுறை அமுலில் இருக்கும் என்று கொழும்பு பிராந்தியத்திற்கு பொறு பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக தெரிவித்தார்.
கொழும்பிலிருந்து புகையிரதம் மூலம் தென் பகுதிக்குச் செல்பவர்கள் பம்பலப்பிட்டி வரைக்கும், பம்பலப்பிட்டி யிலிருந்து கொழும்புக்கு வருபவர்கள் மருதானை வரைக்கும் பயணம் செய்ய தேவையான இணைப்பு பஸ் வண்டிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர் அதே புகையிரத பயணச் சீட்டை வைத்துக் கொண்டே இந்த பஸ் வண்டியில் இலவமாக சென்று வரமுடியும் என்றும் தெரிவித்தார்.

ஈழத்தில் போரை நிறுத்தாவிட்டால் குண்டை வெடிக்கச் செய்வதாக மிரட்டியவர் கைது

tinakaran.jpgஇலங்கையில் போரை நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் கல்லூரியை வெடிகுண்டு வைத்து தகர்க்க போவதாக மிரட்டிய வாலிபரை கடலூர் போலீசார் கைது செய்தனர். இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்தக்கோரி கடலூர் பெரியார் கல்லூரி மாணவர்கள் வளாகத்துக்குள் கடந்த 5 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று வாலிபர் ஒருவர் மாணவர்கள் உண்ணாவிரதம் இருக்கும் இடத்துக்கு வந்து மாணவர்களை சந்தித்து பேசினார். பின்னர் ஈழம் மலரட்டும், மத்திய அரசே இலங்கையில் போரை நிறுத்து என்று கோஷமிட்டபடி கல்லூரியின் அலுவலகத்துக்குள் நுழைந்தார். அப்போது அங்கே இருந்த பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடம் இலங்கையில் போரை நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த கல்லூரியை வெடிகுண்டு வைத்து தகர்க்க போகிறேன் என கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அலுவலக ஊழியர்கள் அவரை மடக்கிபிடிக்க முயன்றனர். அப்போது அவர், என்னை பிடிக்காதீர்கள் வெடிகுண்டு வைத்துள்ளேன் வெடித்துவிடும் என்று கையில் மஞ்சள் நிறத்தில் இருந்த ரிமோட் போன்ற கருவியை காண்பித்து பயமுறுத்தியுள்ளார். இதையடுத்து அலுவலகத்துக்குள் இருந்த பேராசிரியர்களும், ஊழியர்களும் ஓட்டம் பிடித்தனர். இதுபற்றி உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வருவதை கண்ட வாலிபர் அங்கிருந்து தப்பியோட முயன்றான்

ஆனால் போலீசார் அவரை விரட்டிச் சென்று பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பதும், கையில் வைத்திருந்தது ரேடியோ, டி.வி. போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை பழுது பார்க்க பயன்படும் `மல்டி மீட்டர்’ என்றும் தெரியவந்தது.

பின்னர் அவரை கைது செய்த போலீசார், மல்டிமீட்டர் கருவியையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அந்த வாலிபர் டெய்லர் என்றும், கடலூருக்கு அருகே உள்ள ரெட்டிச்சாவடி கிளிஞ்சிக்குப்பத்தை சேர்ந்த ஆனந்தன் என்பவரது மகன் தினகரன் என்றும் தெரியவந்தது.

ரி.எம்.வி.பி. அமைப்பின்; உறுப்பினர் சுட்டுக்கொலை

pistal.jpg
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் செங்கலிடி எல்லையில் வைத்து நேற்றையதினம் காலை 8.30 மணியளவில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

செங்கலடி நாகதம்பிரான் கோவிலடியைச் சேர்ந்த புத்திரசிகாமணி மோகனதாசன் (வயது 31) என்பவரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டவராவார். இவர் நேற்றுக் காலை சைக்கிள் ஒன்றில் தனது வீடுநோக்கி சென்றுகொண்டிருந்த வேளையிலேயே இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டதாக ஏறாவூ பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலை தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விடுதலைப் புலிகளின் 7வது விமான ஓடுபாதை கைப்பற்றப்பட்டுள்ளது

airstrip-1501.jpgவிடுதலைப் புலிகளின் 7வது விமான ஓடுபாதை கைப்பற்ற்ப்பட்டுள்ளது புலிகளின் கடைசி விமான ஓடுபாதையெனக் கருதப்படும் இந்த ஓடுபாதை முல்லைத்தீவு சுந்தரபுரத்திற்கு  மேற்குப் பகுதியிலும் பிரமந்தாறு பகுதியின் வடக்கேயும்  அமைந்துள்ளது. சுமார் 2 கி.மீ. நீளமான இந்த ஓடுபாதையை இன்று (3) காலை கைப்பற்றியுள்ள பிரிகேடியர் சவேந்திர சில்வா தலைமையிலான 58வது படையணியினர் அப்பகுதியைத் தற்போது தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவ்ந்துள்ளனர் என்று இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

“இது தமிழர்கள் பற்றியது. புலிகளை பற்றியது அல்ல”- நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ்’

redcross-2801.jpgஇலங்கைத் தமிழருக்கு உத்தரவாதமளிக்க வேண்டிய கடமை புதுடில்லிக்கு இருப்பதாக “நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகை வலியுறுத்தியுள்ளது. இது தமிழர்கள் பற்றியது. புலிகளை பற்றியது அல்ல என்று மகுடமிட்டு நேற்று திங்கட்கிழமை தீட்டியிருக்கும் ஆசிரியர் தலையங்கத்திலேயே “நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகை இதனைச்சுட்டிக்காட்டியுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

இலங்கைத் தமிழரின் தலைவிதி தொடர்பாக நெஞ்சுபடபடக்கும் திருப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது. இலங்கையின் வடபகுதியில் சிறிய நிலப்பகுதிக்குள் விடுதலைப்புலிகள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். அதிர்ச்சியும் கவலையும் தமிழ்நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. ஆனால் விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இலங்கை இராணுவம் வலுவான முறையில் முன்னேறிவருவது இரகசியமானதல்ல. கடந்த வருட முற்பகுதியில் யுத்தநிறுத்தம் முறிவடைந்த பின் கொழும்பு முழுமையாக ஒழித்து விடுவதற்கான யுத்தத்தை ஆரம்பிப்பதென முடிவு செய்தது.

உண்மையான நிலைமை யாராலும் கண்டுகொள்ளக் கூடியதாகும். ஆனால், மாநிலத்தின் (தமிழ்நாடு) அரசியல்வாதிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் இது தொடர்பாக தமது கண்களை மூடிக் கொண்டுள்ளனர். அடையாளங்கள் தொடர்பான குழப்பங்களும் உள்ளன. விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்று தமிழகத்தின் சிறிய மற்றும் குரல்கொடுக்கும் கட்சிகளைச் சேர்ந்த கணிசமான எண்ணிக்கையான தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த விடயத்தில் தலையிட வேண்டிய தெய்வீக உரிமை இந்திய அரசுக்கு இருப்பதாக அவர்கள் கருதுகின்றனர். இந்த மாதிரியான நிலைப்பாட்டை புலிகள் ஊக்குவிக்கின்றனர். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனும் இந்தியா மீதான நல்லெண்ண வெளிப்பாடு பற்றி குறிப்பிட்டிருந்தமை இதற்கு சாட்சியமாகும்.

இலங்கை இறைமையுள்ள ஒரு நாடென்பதும் இந்தியாவோ அல்லது வேறு எவரோ உள்நாட்டு விவகாரத்தில் தலையிட முடியாதென்பதும் உண்மையானதொன்றாகும். 1987 இல் மேற்கொள்ளப்பட்ட இந்திய இலங்கை உடன்படிக்கை தோல்வி கண்டது. பல காரணங்கள் இருந்தாலும் புலிகள் அதில் ஆர்வம் காட்டாதமையும் ஒரு காரணமாகும். 2002 இல் நோர்வே அனுசரணையுடனான யுத்த நிறுத்தமும் தோல்வி கண்டது. நம்பிக்கை தொடர்பாக இருதரப்பும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை தெரிவித்தன. எவ்வாறாக இருப்பினும் இலங்கையில் தமிழர்களுக்கு உத்தரவாதமளிக்க வேண்டிய கடமை புதுடில்லிக்கு உண்டு.

யுத்தம் முடிவடைந்த பின் தமிழர்கள் கௌரவத்துடனும் பாதுகாப்புடனும் அவர்கள் வாழ வேண்டியது அவசியமாகும். 25 வருட காலமாகக் கடுமையான போராட்டங்களின் பின்னரும் தலைமுறையினர் இடம்பெயர்ந்த பின்னரும் அவர்கள் எதிர்பார்க்கும் ஆகக் குறைந்த விடயமாக இது காணப்படுகிறது. இதனையே இங்குள்ள அரசியல் கட்சிகள் மேம்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால், இது தொடர்பான திட்டம் பலரிடம் இல்லை. அவர்களுடைய தற்போதைய நிலைப்பாடு சிந்தனையின் வங்குரோது தனத்தையே காட்டுவதுடன் நம்பிக்கையை ஊக்குவிப்பதாக இல்லை.

மனிக்பாமில் பாடசாலை ஆரம்பம்; அமைச்சர் ரிஷாத் திறந்து வைப்பு

risard.jpg
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து செட்டிக்குளம் மனிக் பாமில் தங்கியுள்ள 315 மாணவர்களுக்கான பாடசாலை நேற்று காலை 10 மணிக்கு உத்தியோகபூர்வமாக மீள் குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சர் ரிஷாத் பதியுதீனினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இரண்டு தற்காலிக கொட்டில்கள் அமைக்கப்பட்டு 45 ஆசிரியர்களைக் கொண்டு இந்த பாடசாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்து வந்துள்ள மாணவர்களுடைய கல்வி நடவடிக்கையினை கருத்திற்கொண்டு வகுப்புக்களை ஆரம்பிக்குமாறு கல்வி அமைச்சு உத்தரவு பிறப்பித்திருந்தது தெரிந்ததே.

மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் பாடநூல்கள் கடந்த வாரம் வழங்கப்பட்டன. சீருடைகள் வழங்கப்படவுள்ளது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களிலிருந்து இதுவரையில் வவுனியாவிற்குள் சுமார் ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வந்துள்ளனர். இவர்களுடைய பிள்ளைகள் கல்வி கற்பதற்கே நலன்புரி நிலையத்தில் தற்காலிக இரண்டு கொட்டகைகள் அமைக்கப்பட்டு வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வடமாகாண பிரதம செயலாளர் எஸ். இரங்கராசா, வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ. இளங்கோவன், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், அரச அதிபர், செட்டிக்குளம் பிரதேச செயலாளர் உட்பட உயர் அதிகாரிகள் பலரும் இந்த வைபவத்தில் கலந்து கொண்டனர்.

செட்டிக்குளம் மகா வித்தியாலய அதிபர் எஸ். யேசுதாசன் தற்காலிக அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். மாணவர்களுக்கு சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்குமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். க.பொ.த உயர்தர மாணவர்களின் நலன்கருதி மேலதிக கல்வி நடவடிக்கைக்காக இம் மாணவர்களை செட்டிகுளம் பாடசாலையில் உள்வாங்குவதற்கான நடவடிக்கைகளையும் பணிகளையும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்ட நிலையில் மெனிக் பாம் முகாமில் தங்கியுள்ள மாணவர்கள் நான்கு பேரையும் உடனடியாக கல்வி நடவடிக்கைகளுக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு வவுனியா அரசாங்க அதிபருக்கு பணிப்புரை விடுத்தார்.

மெனிக் பாம் பகுதியில் உள்ள மாணவர்களின் கல்விப் பணிகளை மேற்பார்வை செய்ய வவுனியா வலய உதவிக் கல்விப் பணிப்பாளரை இணைப்பாளராக நியமிக்குமாறு கல்விப் பணிப்பாளருக்கு பணிப்புரை வழங்கினார். மெனிக் பாம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பல நோக்குக் கூட்டுறவுச் சங்க கடைத்தொகுதி மற்றும் மருத்துவ மத்திய நிலைய பணிகளையும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பார்வையிட்டார். மெனிக்பாம் முகாமிலிருந்து செட்டிகுளம் பாடசாலைக்கு செல்லவுள்ள உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். அமைச்சருடன் வடமாகாண ஆளுநரின் பிரதம செயலாளர் வி. தியாகலிங்கம், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ். இளங்கோவன், வவுனியா அரசாங்க அதிபர் திருமதி பீ.எம்.ஏ. சார்ள்ஸ், வட மாகாண ஆளுநரின் பிராந்திய ஆணையாளர் எஸ்.எல். டீன், கல்விப் பணிப்பாளர் எம்.எம். சியான் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

சவூதியில் இருந்து 18 பேர் நாடு திரும்பினார்கள்

images-01.jpgசவூதி அரேபியாவில் இருந்து பதினெட்டுப் பேர் கடந்த புதன்கிழமை அதிகாலை விமானம் மூலம் நாடு திரும்பினார்கள்.  சில மாதங்களுக்கு முன்னர் அங்கு சென்ற இவர்கள் தமக்கு உரிய சம்பளம் மற்றும் வசதிகள் செய்யப்படவில்லை என்றும் அதனால் தாம் அங்கு தொழில் செய்ய முடியாத நிலையில் நாடு திரும்புவதாகவும் தெரிவித்தனர்.

இவர்களை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியக அதிகாரிகள் விமான நிலையத்தில் பொறுப்பேற்று சொந்த இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

திமுகவின் இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை-

0302-karunanidhi.jpgஇலங்கைத் தமிழர்கள் அனைத்து நல உரிமைகளையும் பெற தேவையான நடவடிக்கை எடுக்கக் கோரி, இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை என்ற புதிய குடையின் கீழ் தமிழகம் முழுவதும் பேரணிகள், கூட்டங்கள், மாநாடுகள் நடத்தப்படும் என திமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இலங்கைப் பிரச்சினை தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டும் என தமிழக சட்டசபையில் இருமுறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கடைசியாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள் என முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்தார். இதற்கும் மத்திய அரசு செவி சாய்க்காவிட்டால், திமுக செயற்குழுவைக் கூட்டி முக்கிய முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று திமுக செயற்குழு கூடியது. இக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பங்கேற்றார். கூட்டத்தில் அமைச்சர்கள் அன்பழகன், மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், தென் மண்டல திமுக அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக தீக்குளித்து உயிர் நீத்த முத்துக்குமாருக்கு இரங்கல் தெரிவித்து முதலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அடுத்து, இலங்கைத் தமிழர்களுக்கு நல உரிமைகளைப் பெற்றுத் தர ஒத்தக் கருத்துடைய அரசியல் கட்சிகள், சான்றோர்களைத் திரட்டி பட்டி தொட்டியெங்கும் விளக்கக் கூட்டங்கள், பேரணிகள், மாநாடுகளை நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதில், இலங்கைத் தமிழர் வாழ்வுரிமையைப் பெற்றுத் தரவும்-அந்த நாட்டில் போர் நிறுத்தம் ஏற்பட்டு அமைதியான நிலை தோன்றவும்-ஜனநாயக முறையில் அந்த நாட்டில் ஒரு தீர்வு காணவும்- ஒத்தக் கருத்துடைய சமுதாய இயக்கங்கள், தமிழ்ச் சான்றோர் கள், மற்றும் அரசியல் கட்சிகளைக் கொண்டு- “இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை” என்ற அமைப்பின் பெயரால்-தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் மக்களைத் திரட்டி விளக்கக்கூட்டங்கள், மக்கள் பேரணிகள், மனிதச்சங்கிலிகள், மாநாடுகள் போன்ற பிரச்சார சாதனங்களைப் பயன்படுத்தி அறப்போராட்டங்களை நடத்தி தமிழ்நாட்டு மக்கள் எழுப்பும் கோரிக்கைகளை இந்திய மத்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் எட்டுமாறு எழுச்சிப் பணிகளைத் தொடர்வது என்று இந்தச் செயற்குழு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.