06

06

1637 சிவிலியன்கள் நேற்று அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வருகை!

udaya_nanayakkara_.jpgமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசததிலிருந்து 1637 சிவிலியன்கள் நேற்று அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணாயக்கார தெரிவித்தார்.

இலங்கை இராணுவம் கொத்தனிக் குண்டுகளை பயன்படுத்தவில்லை! வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மறுப்பு

palitha_koahana.jpgஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தினால் தடை செய்யப்பட்டுள்ள கொத்தனிக் குண்டுகளை இலங்கை இராணுவத்தினர் பயன்படுத்தவில்லை என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கொஹன தெரிவித்துள்ளார்

பாதுகாப்புப் படையினா; புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீது கொத்தனிக் குண்டுகளைப் போட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடாபாக சீ.என்.என். செய்திச் சேவைக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார் அப்பேட்டியில் வெளிவிவகார அமைச்சின் செயலாளா மேலும் குறிப்பிடுகையில்

இலங்கை இதுவரை காலமும் கொத்தனிக் குண்டுகளைக் கொள்வனவு செய்யவோ தயாரிக்கவோ அல்லது விற்பனை செய்யவோ இல்லை. இந்நிலையில் அரசாங்கத்தினால் பராமிக்கப்படும் வைத்தியசாலைகள் மீது தாக்குதல் நடத்தும் தேவை அரசுக்கு கிடையாது.

பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மாத்திரம் இயங்கவில்லை. பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் இன்னும் பல வைத்தியசாலைகள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் அரசாங்க வைத்தியசாலைகள். அங்கு அரச உத்தியோகத்தர்களே பணி புரிகின்றனர் அப்பிரதேசங்களில் வசிப்பவர்கள் இந்நாட்டு மக்கள். எனவே அவர்கள் மீது தாக்குதல் நடத்த எந்தத் தேவையும் இல்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீது பாதுகாப்புப் படையினா கொத்தனிக் குண்டுகளைப் போட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை முற்றாக மறுத்துள்ள தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் கொடூரமான பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து தேசத்தை மீட்டெடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதாபிமான நடவடிக்கைகளில் மனித குலத்தின் அழிவுக்கு வித்திடும் பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை எனக் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் உள்ள சர்வதேச செஞ்சிலுவை சங்க தலைமையகம் மீது தாக்குதல்

red-cr.jpgஇலங்கை யின் கொழும்பு  கொள்ளுப்பிட்டி லெயார்ட்ஸ் வீதியில் அமைந்துள்ள சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் தலைமையகத்தின் மீது இன்று பிற்பகல் இனந்தெரியாத கும்பலினால் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திற்கு எதிரான கோசங்களை எழுப்பிய வண்ணம் அங்கு வந்த கும்பல் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்கள்.
 
இதன் காரணமாக செஞ்சிலுவை சங்கத்தின் ஊழியர்கள் சிலர் காயமடைந்துள்ளதாகவும், ஜன்னல் கண்ணாடிகள் உடைந்துள்ளதாகவும், உடமைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

“எதிர்காலத்தில் புலிகளுடன் பேச்சு இல்லை’

gothapaya_rajapaksa.jpgசரண டையும் நிபந்தனைகள் தொடர்பாக விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு அமெரிக்கா உட்பட இணைத்தலைமை நாடுகள் விடுத்த அழைப்பை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

உடனடியாகத் தோல்வியை எதிர்நோக்கியுள்ள புலிகள் முழுமையாக சரணடைந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியுமென பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்ததாக “ஐலன்ட்’ ஆங்கில நாளேடு நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், நோர்வே ஆகியவை கடந்த செவ்வாய்க்கிழமை விடுதலைப்புலிகளை ஆயுதங்களை கைவிடுமாறும் சரணடையும் நிபந்தனைகள் தொடர்பாக பேசுமாறும் அரசியல் பேச்சுவார்த்தையில் பங்கேற்குமாறும் கேட்டிருந்தன.

“கேலிக்கிடமானதை தவிர வேறொன்றும் இதில் இல்லை’ நிபந்தனையற்ற விதத்தில் ஆயுதங்களை சரணடையச் செய்வதைவிட அதற்கு குறைவானதாக ஒன்றும் இல்லை, என்று கோதாபய ராஜபக்ஷ கூறியுள்ளார். அத்துடன், இணைத்தலைமைகளின் அறிக்கையானது புலிகளை காப்பாற்றும் வெளிப்படைத் தன்மையான முயற்சி என்றும் தெரிவித்திருக்கிறார்.

அத்துடன், புலிகளுக்கு எதிர்காலத்தில் அரசியல் ரீதியான பங்களிப்பு எதுவும் இருக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். ஆயுதப் படையினர் புலிகளை ஒழித்த பின்னர் பேச்சுவார்த்தை நடவடிக்கைகளில் அரசியல் கட்சியாக புலிகள் பங்கேற்பதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதிக்குமென்று சர்வதேச சமூகம் எதிர்பார்க்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆயுதங்களை கீழே வைத்து ஜனநாயக வழிக்கு வருவோரை ஏற்க அரசு தயார்

pm-srianka.jpgபுலி கள் இயக்கத்தின் சிலர் ஆயுதங்களை கீழே வைத்து அரசிடம் சரணடையப் போவதாக தெரிவித்துள்ளனர். உண்மையிலேயே அது புத்தி சாலித்தனமான தீர்மானம். ஆயுதங்களைக் கீழே வைத்து ஜனநாயக வழிக்குத் திரும்பும் அனைவரையும் ஏற்றுக்கொள்ள எமது அரசு ஆயத்தமாக இருக்கிறது என பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார்.

நேற்றுக் காலை பாராளுமன்றத்தில் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதகாலத் திற்கு நீடிப்பது தொடர்பான பிரேரணையை சமர்ப்பித்துப் பேசும்போதே பிரதமர் மேற் கண்டவாறு தெரிவித்தார். பிரதமர் தொடர்ந்தும் பேசும்போது:-

புலிகள் மக்களை கேடயங்களாகப் பயன்படுத்திக்கொண்டுள்ளார்கள். சர்வதேச சமூகத்தின் ஆதரவையும் கருணையையும் பெற்றுக்கொள்வதற்கு முயற்சி செய்கிறார்கள். எந்தவொரு அழுத்தம் வந்தபோதும் மனிதாபிமான நடவடிக்கை நிறுத் தப்படமாட்டாது. புலிகள் இன்று போக்கிடமின்றி இருக்கிறார்கள். தங்களது உறுப்பினர்களையே கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் நாம் தான் என புலிகள் உலகத்துக்கு கூறினார்கள். ஆனால் தமிழ் மக்களினாலேயே ஒதுக்கித் தள்ளப்பட்டவர்களாக இருக்கிறார்கள். சிலர் காடுகளில் ஒளிந்துகொண்டு இருக்கிறார்கள். மக்களை கேடயங்களாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். புலிகளின் சிலர் அரசிடம் சரணடையப் போவதாக ஊடகங்களினூடாக தெரிவித்திருக்கின்றனர். காலம்கடந்தாவது யதார்த்தத்தைப் புரிந்துகொண்டுள்ளமையும், புத்திசாலித்தனமாக செயல் என அரசு கருதுகிறது.

நாம் ஆரம்பத்திலிருந்து கூறியது போன்று ஆயுதங்களை கீழே வைத்து ஜனநாயக வழிக்கு திரும்பும் எவரையும் ஏற்க நாம் ஆயத்தமாக இருக்கிறோம். நாட்டின் வளங்களை, சொத்துக்களை அழிக்கின்ற, மக்களின் உயிர்களை பலி கொள்கின்ற யுத்தத்திற்குச் செல்லாமல் ஜனநாயக ரீதியாக பிரச்சினைக்குத் தீர்வு காண்பதையே புலிகள் இன்று செய்ய வேண்டியுள்ளது.

மூன்று தசாப்தங்களின் பின்னராவது யதார்த்தத்தைப் புரிந்துகொள்வதற்கு புலிகளின் சிலர் முன்வந்திருப்பது மக்களின் நன்மைக்காகவே. அவ்வாறு யதார்த்தத்தை புரிந்துகொள்ளத் தவறும் பட்சத்தில் எந்தவொரு அழுத்தத்திற்காகவும் மனிதாபிமான நடவடிக்கையை அரசு நிறுத்தப்போவதில்லை.

எந்த சக்திக்கும் நாம் முன்னெடுக்கின்ற நடவடிக்கைகளை நிறுத்திவிட முடியாது.

எந்தவொரு நாட்டுக்கும் சுயாதீனத் தன்மை இருக்கிறது. உள்நாட்டுப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அந்த நாட்டின் ஆட்சியாளர்களுக்கு அதிகாரம் இருக்கவேண்டும். இதற்கு பங்காளியாக மற்றுமொரு தரப்பினரின் உதவியை நாடவும் முடியும். அன்று சுதந்திரத்திற்காக போராடியபோதும் ஆசிய நாடுகள் ஒற்றுமையுடன் இணக்கப்பாட்டுடன் செயற்பட்டன. இதனால் ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற நேரிட்டது. இன்றும் அதே நிலைமைதான்.

உலகத்திலேயே திறமையான படை எங்களுடையதென மார்தட்டிக்கொண்ட புலிகள் இன்று காட்டுக்குள் ஒழிந்துகொண்டுள்ளார்கள். படையினருக்கு பாடம் புகட்டுவோம் என்று கூறிய புலிகள் மக்களை கேடயங்களாக வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் எமது படை வீரர்களே.

களத்தில் நிற்கின்ற படையினருக்கும், உயிர்நீத்த, படுகாயமடைந்து இன்று ஊனமுற்ற படையினருக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் நாம் கடமைப்பட்டுள்ளோம். எந்நேரமும் நன்றியுணர்வுடன் அவர்களை நினைவுகூரவும் கடமைப்பட்டுள்ளோம்.

எல்லாவற்றுக்கும் மக்களின் ஆதரவே பக்கபலமாக எமக்கும் படையினருக்கும் அமைந்துள்ளது. படையினரின் ஒவ்வொரு வெற்றிக்கும் மக்களின் ஒன்றுபட்ட ஆதரவே பக்கபலமாக அமைந்துள்ளது.

இ.கம்யூ செயலாளர் தா.பாண்டியன் கார் எரிப்பு

pandian.jpgஇலங்கைத் தமிழர் பிரச்சினை போராட்டக் களத்தில் முன்னணியில் இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனின் காரை சிலர் நேற்று இரவு தீவைத்து எரித்துள்ளனர்.

சென்னை அண்ணா நகரில் தா.பாண்டியனின் வீடு உள்ளது. நேற்று இரவு வீட்டு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தா.பாண்டியனின் காரை, சிலர் தீ வைத்து எரித்துள்ளனர். இதில் அவரது கார் பெருமளவில் சேதமடைந்தது. இலங்கைத் தமிழர் பிரச்சினையில் போராட்டக் களத்தில் முன்னணியில் இருந்து வரும் தலைவர்களில் ஒருவர் தா.பாண்டியன். ஆரம்பத்திலிருந்தே இலங்கை விவகாரத்தில் மத்திய அரசையும், காங்கிரஸையும் கடுமையாக சாடி வருகிறார்.

மேலும், இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச கோர்ட்டில் இனப்படுகொலை வழக்கு தொடரப்படும் எனவும் நேற்று செய்தியாளர்களிடம் கூறியிருந்தார் பாண்டியன் என்பது நினைவிருக்கலாம்.சம்பவம் நடந்த போது பாண்டியன் வீட்டில் இல்லை.

விசுவமடு, சாலை பிரதேசங்கள் படையினரின் பூரண கட்டுப்பாட்டில்

_army.jpgமுல்லைத் தீவில் புலிகளின் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களாக விளங்கிய விசுவமடு மற்றும் சாலை பிரதேசங்கள் முழுவதையும் பாதுகாப்புப் படையினர் முழுமையாக கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்தார்.

சாலை பிரதேசம் பூரணமாக கைப்பற்றப்பட்டதன் மூலம் புலிகள் வசம் இருந்த இறுதி கடற்புலித் தளமும் பாதுகாப்புப் படையினரால் முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். முல்லைத்தீவு முழுவதையும் புலிகளின் பிடியிலிருந்து மீட்டெடுக்கும் இறுதிக்கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினர், விசுவமடு மற்றும் சாலை ஆகிய பிரதேசங்களை முழுமையாக தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து அங்கிருந்து முன்னேறிவருவதாகவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இராணுவத்தின் 55 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் பிரசன்ன சில்வா தலைமையிலான படையணியினர் சாலை பிரதேசத்தை விடுவித்துள்ளனர்.

விசுவமடு நகருக்குள் பிரவேசித்த 58வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா தலைமையிலான படையணியினரும், இராணுவத்தின் 57வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் மற்றும் இராணுவத்தின் மூன்றாவது செயலணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சத்தியபிரிய லியணகே தலைமையிலான படைப்பிரிவுகளும் விசுவமடு முழுவதையும் புலிகளின் பிடியிலிருந்து நேற்று முழுமையாக விடுவித்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

விசுவமடு, சாலை கைப்பற்றப்பட்டதன் மூலம் வடக்கு, கிழக்கு கரையோரம் முழுவதும் தற்பொழுது படையினரால் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். படையினர், பொது மக்களுக்காக அறிவித்த பாதுகாப்பு வலயத்தையும், புலிகளிடம் எஞ்சியுள்ள புதுகுடியிருப்பு பிரதேசத்தையும் மிகவும் அண்மித்துள்ளதாகவும் பிரிகேடியர் சுட்டிக்காட்டினார்.

வடகிழக்கு மற்றும் கிழக்கு கரையோர பிரதேசங்களில் சுண்டிக்குளம், கட்டைக்காடு, தாளையடி, செம்பியன் பற்று, செம்மலை மற்றும் அலம்பில் ஆகிய பிரதேசங் களில் அமைக்கப்பட்டிருந்த கடற்புலிகளின் பல்வேறு முக்கிய கடற் புலி முகாம்களை கைப்பற்றிய படையினர் கடற்புலிகளின் மிகவும் பிரதான கடற்புலி முகாமாக விளங்கியசாலை கடற்புலிமுகாமை கைப்பற்றி கடற்புலி நடவடிக்கைகளுக்கு முற்றுகையிட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, விசுவமடு பிரதேசத்தில் அமைந்திருந்த இறுதியானதும், மிகப் பெரியதுமான முகாம் ஒன்றையும் படையினர் கைப்பற்றியிருந்ததாக பிரிகேடியர் கூறினார். ஏ-35 பிரதான வீதிக்கு வடக்கே தராவிக்குளத்திற்கும் அண்மித்த பகுதியில் அரை ஏக்கர் நிலப்பரப்பில் பாரிய முகாம் ஒன்றும், சுமார் ஒரு ஏக்கர் நிலப்பரபில் அமைக் கப்பட்டிருந்த மயானம் ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர். இந்த மயானத்தில் கொல்லப்பட்ட புலிகளின் முக்கிய தலைவர்கள் அடக்கம் செய்யப்பட்டிருக்கலாம் என பாதுகாப்புப் படையினர் நம்புவதாகவும் அவர் குறுப்பிட்டார்.

டயர்கள் முழுமையாக நிரப்பப்பட்ட இரண்டு கொள்கலன்கள், 5 லீட்டர் கலன், கெல்டெக்ஸ் ரக ஒயில் நிரப்பப்பட்ட கொள்கலன் ஒன்றையும் கண்டெடுத்துள்ளனர்.
இதுதவிர பெருந்தொகையான வாகன உதிரிப்பாகங்களைக் கொண்ட பாரிய பிரதேசம் ஒன்றையும், பெருந்தொகையான உதிரிப்பாகங்களையும் படையினர் மீட்டெடுத்துள்ளனர். கடந்த ஒரு வார காலத்திற்குள் பாதுகாப்புப் படையினர் புலிகளை இலக்கு வைத்து நடத்திய கடுமையான தாக்குதல்களில் சுமார் 150க்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் மேலும் தெரிவித்தார்.

களனி பல்கலைக்கழக மோதலில் 21 பேர் காயம்

kelani_.jpgகளனி பல்கலைக்கழகத்தின் இரு மாணவர் குழுக்களுக்கிடையில் நேற்று வியாழக்கிழமை ஏற்பட்ட மோதலில் 21 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் 3 மாணவர்களும் 3 பொலிஸாரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

களனி பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் விஞ்ஞான பீட மாணவர் குழுக்களுக்கு இடையிலேயே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. மோதலை கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டதுடன், சம்பவம் தொடர்பில் 9 மாணவர்களும் இரு விரிவுரையாளர்களும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் ரஞ்சித் குணசேகர கூறினார்

சுசந்திகா ஓய்வு பெறுகிறார்

susa-mahi.jpgமெய் வல்லுநர் விளையாட்டுத்துறையிலிருந்து குறுந்தூர ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க ஓய்வுபெற்றுள்ளார். உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் நாட்டுக்கு பெரும் புகழ் ஈட்டித் தந்த சுசந்திகா ஜயசிங்க, சார்க் பிராந்தியப் போட்டிகளில் பல பதக்கங்களை நாட்டுக்காகப் பெற்றுக்கொடுத்தவர்.

கடந்த வாரத்தில் சுசந்திகா ஜயசிங்க மெய்வல்லுநர் விளையாட்டுத்துறையிலிருந்து ஓய்வுபெற்றுக்கொண்டார். தான் ஓய்வுபெற்றதையடுத்து நேற்று வியாழக்கிழமை அலரிமாளிகைக்குச் சென்று ஜனாதிபதியைச் சந்தித்துள்ளார்.

இச்சந்திப்பின்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சுசந்திகா ஜயசிங்க நாட்டுக்கு பெரும் புகழை ஈட்டித் தந்தவர் எனப் பாராட்டியதோடு, அவரது சேவையை நாடு ஒருபோதும் மறக்காது எனக் குறிப்பிட்டார்.

விளையாட்டுத்துறையை உலகளவில் உன்னத இடத்துக்குக் கொண்டுசெல்ல பாடுபட்டவர்களில் சுசந்திகா குறிப்பிடத்தக்கவர் எனவும் ஜனாதிபதி பாராட்டுத் தெரிவித்தார். சுசந்திகாவை கௌரவிக்கும் முகமாக ஜனாதிபதி 50 இலட்ச ரூபாவுக்கான காசோலையொன்றையும் நினைவுப் பரிசொன்றையும் வழங்கினார்.

இந்தச் சந்திப்பின்போது விளையாட்டுத்துறை அமைச்சர் காமினி லொக்குகேயும் குறுந்தூர ஓட்ட வீராங்கனை தமயந்தி தர்ஷாவும் சுசந்திகாவின் குடும்பத்தினரும் கலந்துகொண்டனர்.

இனப்பிரச்சினை தீர்வுக்கு மக்கள் ஆணையை பெறத் திட்டம்

பொதுத் தேர்தல் ஒன்றுக்குத் தயாராயிருக்குமாறு அமைச்சர்கள் அனைவரையும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விடுதலைப் புலிகளை மிக விரைவில் முற்றாக அழித்து விடலாமென அரசு மிகவும் நம்பிக்கையுடனிருப்பதால் எதிர்வரும் மே மாதத்தில் பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்த ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அண்மைக் காலத் தேர்தல்களில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக மக்கள் ஆணையைக் கோரி வந்த ஜனாதிபதி, மே மாதத்திற்கு முன் புலிகளை முற்றாக ஒழித்துவிடலாமென்ற நம்பிக்கையில் இருப்பதால் பொதுத் தேர்தலில் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு மக்கள் ஆணையைக் கோருவாரெனவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்காக மக்கள் ஆணையைப் பெறும் சர்வஜன வாக்கெடுப்பாக அது கருதப்படுமெனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதன் மூலம் தங்கள் கட்சி மிகப்பெரும் பெரும்பான்மைப் பலத்தை பெறுமென அரசு நம்புவதாகவும் கூறப்படுகிறது.  நாட்டில் கடைசியாக 2004 ஆம் ஆண்டே பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் தெரிவு செய்யப்பட்ட எம்.பி.க்கள் அனைவரும் ஏப்ரல் மாதத்துடன் ஐந்து வருடங்களைப் பூர்த்தி செய்வதால் அவர்கள் ஓய்வூதியத்தைப் பெறத் தகுதிபெற்றுவிடுவர்.

பொதுத் தேர்தல் நடத்தத் திட்டமிட்டுள்ளதால் அதற்குரிய ஆரம்ப வேலைகளில் அரசு இறங்கியுள்ளது.  இதற்கமைய தொகுதி அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து சென்று அரசுடன் இணைந்து கொண்டவர்களுக்கும் தொகுதி அமைப்பாளர்கள் பதவி வழங்கப்பட்டு வருகிறது