08

08

மலேசியாவில் தண்டனையில் இருந்து தப்பிய இரட்டையர்கள்

drugs.jpgமலேசியாவில் ஒரே மாதிரியான உருவ அமைப்பைக் கொண்ட இரட்டையர்களில் எவர் குற்றவாளி என்பதை நீதிமன்றம் ஒன்று கண்டுபிடிக்க முடியாது போனதால், போதை மருந்து கடத்திய குற்றவாளி ஒருவர் தூக்குக் கயிற்றில் இருந்து தப்பியுள்ளார்.

இந்த வழக்கு முன்னெப்போதும் இல்லாத வகையைச் சேர்ந்தது என்று கூறிய மலேசிய நீதிபதி ஒருவர், அதனால், தன்னால், தவறான நபரை தூக்குமேடைக்கு அனுப்ப முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

2003 ஆம் ஆண்டில் ஒரு வீட்டிலும், காரிலும் போதை மருந்தை பதுக்கி வைத்திருந்த ஒருவரை மலேசிய பொலிஸார் கைது செய்தனர். ஆனால், சில நிமிடங்களுக்குப் பிறகு, அதே இடத்துக்கு வந்த அவரைப் போன்று உருவ ஒற்றுமை கொண்ட அவரது இரட்டைச் சகோதரரையும் பொலிஸார் கைது செய்தனர்.

இருவரில் எவர் முதலில் கைது செய்யப்பட்ட குற்றவாளி என்று அரச தரப்பு சட்டவாதிகள் நிரூபிக்கத் தவறிவிட்டார்கள் என்று நீதிமன்றத்தில் நீதிபதி அறிவித்தபோது, இரட்டையர்கள் இருவருமே அங்கு அழுதனர்.

இதுவரை 13ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் வந்துள்ளனர்

civilians.jpgகட்டுப் பாடற்ற பிரதேசத்திலிருந்து வவுனியாவின் அரசாங்க கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு இதுவரையில் 13 ஆயிரம் பொது மக்கள் வந்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எம்.எஸ். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்

வன்னிப்பகுதி மக்களுக்கு உணவுப்பொருட்களை அனுப்புவதில் சிரமம் – ஐ.நா

food.jpgஐ.நா. மன்ற உலக உணவுத் திட்டத்தின் மூலமாக வன்னிப் பகுதிக்கு அனுப்பப்பட்டுவந்த உணவுப் பொருட்களை தற்போது அனுப்பமுடியவில்லை.
இதனால் வன்னியில் உள்ள மக்கள் உணவு நெருக்கடியை எதிர்கொள்கிறார்கள் என்று உலக உணவுத் திட்டம் அறிவித்திருந்தது.

இது தொடர்பாக உலக உணவுத் திட்டத்தின் இலங்கை செயற்பாடுகளுக்கான துணை இயக்குநர் அஸேப் அஸ்ரத் கூறும்போது, உணவுப் பொருட்களை வன்னிக்கு அனுப்புவதற்கான எல்லா ஆயத்தப் பணிகளையும் தாங்கள் செய்திருப்பதாகவும், ஆனால் பாதுகாப்பு சூழல் தொடர்பான அனுமதியை அதிகாரிகள் கொடுக்காததால் தாங்கள் உணவுப் பொருட்களை அனுப்ப முடியாமல் இருப்பதாக கூறினார்.

இது தொடர்பாக இலங்கை அரசின் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கூறும்போது, வன்னிப்பகுதிகளில் அரசாங்க அதிபர்கள் இப்போது இல்லை என்றும், உலக உணவு திட்டத்தினர் அரசாங்க கட்டுப்பாட்டு பகுதிக்கு வரையிலுமே உணவினை கொண்டு செல்ல தயாராக இருப்பதாகவும், ஆதலால் தற்போது உணவுப்பொருட்களை மேற்கொண்டு வன்னிப்பகுதிக்கு எடுத்துச் செல்வதில் அரசாங்கம் தற்போது ஒரு இக்கட்டான நிலையை எதிர்கொண்டிருப்பதாகவும், எனினும் மக்களுக்கு உணவுப்பொருட்களை எடுத்து செல்வது குறித்து ஆலோசனைகளை நடத்தி வருவதாக அவர் கூறினார்.

மனிதாபிமான நிலைவரத்தை கண்டறிய இலங்கைக்கு ஐ.நா.குழு -அனுப்பிவைப்பது தொடர்பாக பான் கி மூன் பரிசீலனை

banki-moon.jpgஇலங் கையில் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நிலைவரம் தொடர்பாக ஆழ்ந்த கவலையை வெளியிட்டிருக்கும் ஐ.நா.செயலாளர் நாயகம் பான்கிமூன் மனிதாபிமான நிலைமையை மதிப்பீடு செய்வதற்காக குழுவொன்றை அனுப்பி வைப்பது தொடர்பாக தான் பரிசீலனை செய்து வருவதாக தெரிவித்துள்ளார். தெற்காசிய விஜயத்தின் ஓரங்கமாக இந்தியாவுக்கு கடந்த வியாழக்கிழமை பான்கிமூன் விஜயம் மேற்கொண்டிருந்தார். அங்கு வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி உட்பட இந்தியத்தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பான்கி மூன், இலங்கை விவகாரம் தொடர்பாகவும் ஆராய்ந்துள்ளார்.

புதுடில்லியில் அசோக் ஹோட்டலில் பான்கிமூன் தங்கியிருந்தபோது சென்னையிலிருந்து வெளியாகும் “இந்து’ பத்திரிகை ஆசிரியர் என்.ராம் பான்கி மூனை பேட்டிகண்டுள்ளார். அப்பேட்டியின்போது மும்பைத்தாக்குதல்கள், இந்திய பாகிஸ்தான் உறவுகள், ஆப்கானிஸ்தான், இலங்கை, காஸா, ஈரான் பிரச்சினைகள், காலநிலைமாற்றம் என்பன தொடர்பாக “இந்து’ ஆசிரியர் ராம் எழுப்பிய கேள்விகளுக்கு பான் கி மூன் பதிலளித்திருக்கிறார். இலங்கை தொடர்பாக ராம் எழுப்பிய கேள்வியும் பான்கிமூன் அளித்த பதிலும் இங்கு தரப்படுகிறது.

எமது சொந்த இடத்துக்கு (பத்திரிகை பிரசுரிக்கப்படும் தலைமையகம்) சமீபமாக உள்ள இலங்கையில் 31 நாடுகளால் பயங்கரவாதப்பட்டியலில் உள்ளடக்கப்பட்ட இயக்கமானது 1 இலட்சத்து 20 ஆயிரம் மக்கள் தொகையுடன் குறுகிய நிலப்பரப்புக்குள் உள்ளடக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக நீங்கள் அறிந்தது என்ன? இவை தொடர்பாக தங்களுக்கு பல அறிக்கைகள் கிடைத்திருக்குமே? என்று ராம் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த பான் கி மூன் தெரிவித்ததாவது;

இலங்கை நிலைவரம் கரிசனைக்குரியதாகும், இது தொடர்பாக அண்மையில் இலங்கைத் தலைவர்களுடன் நான் ஆராய்ந்துள்ளேன். இன்று கூட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் நான் பேசவுள்ளேன். (இலங்கை ஜனாதிபதியும் பான் கி மூனும் தெலைபேசியில் உரையாடியுள்ளனர்) யாவற்றிலும் முதலாவதாக இந்த நிலைவரத்தை மதிப்பிட்டு மனிதாபிமான நிலைவரம் தொடர்பாக எனது கவலையை வெளிப்படுத்தியுள்ளேன். குறிப்பாக பொதுமக்கள் இழப்புகள் குறித்து எனது கரிசனையை தெரிவித்திருக்கிறேன். பத்து நாட்களுக்கு முன்னர், நான் பயணமாவதற்கு முன்னராக நியூயோர்க்கில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் விசேட தூதுவர் என்னை சந்தித்தார். அச்சமயம் இந்த விடயம் குறித்து கலந்துரையாடினோம். எமது விஷேட தூதுவர் ஊடாக பொதுமக்களுக்கு இழப்புகள் ஏற்படக்கூடாது என்றும் அதனை உறுதிப்படுத்துமாறும் ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கும் அவரின் அரசாங்கத்திற்கும் நான் தெரியப்படுத்தியுள்ளேன். அத்துடன், ஐ.நா.பணியாளர்கள் மற்றும் நிவாரணப்பணியாளர்களின் பாதுகாப்பு முழு அளவில் உறுதிப்படுத்தப்படவேண்டும் என்றும் கேட்டுள்ளேன். இதனை உறுதிப்படுத்துவதாக ஜனாதிபதி எனக்கு உறுதிமொழி வழங்கியிருக்கிறார் அங்கு மிகவும் பாரதூரமான மனிதாபிமான அக்கறைக்குரிய விடயங்கள் உள்ளன. அவற்றை மதிப்பீடு செய்ய குழுவொன்றை அனுப்பிவைப்பது தொடர்பாக பரிசீலனை செய்து வருகிறேன். என்று பான்கிமூன் கூறியுள்ளார்.

இனப்படுகொலையை தடுக்கக் கோரி மலேசியாவில் ஈழத்தமிழர் தீக்குளித்து தற்கொலை

0802-raja.jpgஇலங் கையில் போர் நிறுத்தத்தை கொண்டு வர அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா முன்வர வேண்டும், முயற்சி எடுக்க வேண்டும், ஈழத் தமிழர்களைக் காக்க வேண்டும் என்று கோரி மலேசியாவில் ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் தீக்குளித்து தனது உயிரை மாய்த்துக் கொண்டார். ஈழத்தைச் சேர்ந்தவர் ராஜா. 27 வயதாகும். இவர் கடந்த 3 வருடங்களாக மலேசியாவில் வசித்து வந்தார். வெள்ளிக்கிழமை அவர் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஜலான் தமன் தெருவில் உள்ள முனீஸ்வரர் கோவிலுக்கு அருகே இந்த  சம்பவம் நடந்துள்ளது. உடல் மீது பற்றி எரிந்த நெருப்புடன் அலறியபடி ராஜா ஓடியதைப் பார்த்த ஒரு டாக்சி டிரைவர் கையில் தண்ணீருடன் அவரை நோக்கி ஓடினார். ஆனால் அதற்குள் ராஜா கருகி உயிரிழந்து விட்டார். விரைந்து வந்த போலீஸார் அவரது உடலை மீட்டனர். அவரது உடலுக்கு அருகே டைரி, ஒரு பர்ஸ், தீப்பெட்டி, பை ஆகியவை மீட்கப்பட்டன.

இந்த முனீஸ்வரர் கோவிலுக்குத்தான் தினசரி இரவு வருவார் ராஜா. அங்கு வாய் விட்டு சத்தமாக, இலங்கை ராணுவத்திடமிருந்து ஈழத் தமிழர்களை காப்பாற்று என மனமுருக வேண்டுவாராம். தீக்குளித்து உயிர் நீத்த ராஜா எழுதி வைத்துள்ள ஒரு கடிதத்தையும் மலேசிய போலீஸார் மீட்டுள்ளனர்.

அதில் ராஜா கூறியிருப்பதாவது …

எனது பெயர் ராஜா. 1982ம் ஆண்டு மே 27ம் தேதி நான் பிறந்தேன். 2006ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி வேலை தேடி மலேசியாவுக்கு வந்தன். எனக்கு நல்ல வேலையும் கிடைத்தது. பிறகு ஏன் நான் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்.? இலங்கையில் நிரந்தர போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும். உடனடியாக அங்கு அமைதிப் பேச்சுக்கள் தொடங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த செயலில் நான் ஈடுபட்டேன்.

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா உடனடியாக இலங்கைக்குப் போக வேண்டும். அவருடன் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதல்வர் கருணாநிதி, நார்வே அமைதித் தூதர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரும் அவருடன் செல்ல வேண்டும். எனது டைரியை வைகோவிடம் ஒப்படைத்து விடுங்கள். அவரால்தான் எனது இறுதி விருப்பங்களை நிறைவேற்ற முடியும் என்று கூறியுள்ளார் ராஜா.

ராஜாவின் தீக்குளிப்பு சம்பவம் மலேசியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனித உரிமைகள் குறித்து பேச்சு பெருமளவில் ஆயுதங்களும் விற்பனை

flag_uk.jpgஇலங் கையில் யுத்தப் பிரதேசங்களில் சிக்கியுள்ள மக்களின் மனித உரிமைகள் பற்றிப் பேசும் பிரிட்டன் அரசு இலங்கைக்கு மிகப் பெருமளவு ஆயுதங்களை விற்பனை செய்யவுள்ளமை தெரிய வந்துள்ளதாக பி.பி.ஸி.தெரிவித்துள்ளது.  இலங்கையில் அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் கடும் சமர் நடைபெற்று வரும்நிலையில் இலங்கை அரசுக்கு பல இலட்சம் பவுன்ஸ் பெறுமதியான போர்த்தளபாடங்களை விற்பனை செய்யும் ஒப்பந்தமொன்றுக்கு பிரிட்டிஷ் அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனரக இயந்திரத்துப்பாக்கிகள், விமானப்படை விமானங்களுக்கான தொலைத்தொடர்புக் கருவிகள், ஹெலிகொப்டர்களுக்கான உதிரிப் பாகங்களும் இந்தவிற்பனை ஒப்பந்தத்தில் அடங்குகின்றன. இதேநேரம் இலங்கைக்கான ஆயுத விற்பனை குறித்து தனது கொள்கைகள் குறித்து பிரிட்டிஷ் அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டுமென வெளியுறவு விஷேட குழுவின் தலைவரும் தொழிற்கட்சி பாராளுமன்ற உருப்பினருமான மைக்கேப்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கைக்கு பிரிட்டன் விற்பனை செய்யும் ஆயுதங்கள் வடபகுதியில் நடைபெற்று வரும் போரில் பயன்படுத்தப்பட்டால், அது பிரிட்டிஷ் அரசின் வழிகாட்டு விதிகளை மீறுவதாயிருக்குமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆயுதங்களை கீழே வைத்து சரணடையுமாறு புலிகளுக்கு ஜனாதிபதி மீண்டும் அழைப்பு

mahi-raja.jpgஆயுதங் களைக் கீழே வைத்துவிட்டுப் படையினரிடம் சரணடையுமாறு நான் மீண்டும் ஒருமுறை விடுதலைப் புலிகளுக்கு அழைப்பு விடுக்கின்றேன். இதனைத் தவிர வேறு மாற்று வழி கிடையாது” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

எக்காரணத்தைக் கொண்டும் படைநடவடிக்கை நிறுத்தப் படமாட்டாது. அப்பாவித் தமிழ் மக்களை மீட்பதற்காக புலிகள் ஆயுதங்களைக் கீழேவைத்துவிட்டு சரணடைய வேண்டுமெனவும் ஜனாதிபதி உறுதியாகத் தெரிவித்தார்.

புலிகளை கடலில் தள்ளவும் முடியாத சூழலே தற்போது தோன்றியுள்ளது. அவர்களைக் களப்பில்தான் தள்ளி விட வேண்டியுள்ளது. எனினும் புலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு சரணடைய மீண்டும் சந்தர்ப்பம் வழங்கப்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

யுத்தத்தையோ வேறு எதனையோ காரணம் காட்டி மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்களை மீள அபகரிக்க ஒருபோதும் அரசு முற்படவில்லை என்பதை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வடமேல் மாகாண சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலை மையில்  தேர்தல் பிரசாரக் கூட்ட மொன்று நேற்றுக் குருநாகல் மாளிகா பிடிய மைதானத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி இங்கு மேலும் கூறிய தாவது:-

முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க இலங்கையை ஒரே நாடாகவே ஜே.ஆர். ஜயவர்தனவிடம் பாரம் கொடுத்தார். எனினும் நாம் நாட்டைப் பொறுப் பேற்கையில் புத்தளம் வரை வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பிரதேசங்கள் புலிகளுக்குத் தாரை வார்க்கப்பட்டிருந்தது.

2005 ஆம் ஆண்டு இந்த நாட்டை என்னிடம் ஒப்படைத்த மக்கள் ஒரே ஒரு ஆணையை மட்டுமே எனக்கு வழங்கினர். பயங்கரவாதத்திடமிருந்து நாட்டைப் பாதுகாப்பதே அந்த ஆணையாகும். அதனை நான் உறுதியுடன் நிறைவேற்றியுள்ளேன்.

முல்லைத்தீவில் இப்போது இறுதி யுத்தம் நடக்கிறது. புலிகள் போக்கிடமின்றி தற்போது சிவிலியன்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பிரதேசத்தில் ஒழிந்து கொண்டுள்ளனர்.

நான் குருநாகல் மாவட்டத்திற்கு வருகை தரும்போது பெருமைப்பட முடிகிறது. வட க்கு யுத்தத்தில் ஈடுபட்டுள்ள பெரும்பாலான படைவீரர்கள் இம்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதே அந்தப் பெருமைக்குக் காரணமாகும். இப்பிரதேச மக்களும் என்னைப் போன்றே பெருமைப்படுவீர்கள் என்பது உறுதி என்றார்.

புலிகளின் தடைகளையும் மீறி 5000 சிவிலியன்கள் நேற்று வருகை

udaya_nanayakkara_.jpgமோதல்கள் நடைபெறும் வன்னிப் பகுதியிலிருந்து நேற்று மேலும் சுமார் 5000 பொதுமக்கள் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளனர். இவர்களுள் மிதிவெடியில் சிக்கி காயமடைந்த ஒருவரும், புலிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த இருவரும் உள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

நேற்றுவரை வவுனியாவுக்குள் 8200 பொதுமக்கள் வந்துள்ளனர். வன்னியிலிருந்து வரும் பொது மக்களை தங்கவைக்கவென பம்பைமடுவில் மேலும் ஒரு முகாம் நேற்றுமுன்தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

விஸ்வமடு, இராமநாதபுரம், புதுக்குடியிருப்பு, குப்பிலான் குளம் பகுதியிலிருந்து நேற்றுமுன் தினம் 5000 பேர் படையினரின் கட்டுப்பட்டுப் பிரதேசத்துக்குள் வந்துள்ளனர். இவர்கள் அனைவரையும் நேற்று படையினர் கிளிநொச்சிக்கு அழைத்து வந்தனர். இவ்வாறு படையினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் வந்தவர்களுள் சுமார் 1000 பேர் நேற்று வவுனியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். காயமடைந்தவர்கள் வவுனியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

புதுக்குடியிருப்பு ஆஸ்பத்திரியிலிருந்து வடக்கு, கிழக்கு நோக்கி சுமார் 4 கிலோமீற்றர் தூரத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட சுமார் 400 நோயாளர்களையும் பாதுகாப்பாக வெளியேற்றி அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு கொண்டு வந்து தருமாறு சுகாதார அமைச்சு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் கேட்டுள்ளது.

புதுக்குடியிருப்புக்கு வடகிழக்கே 4 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள இரண்டு சனசமூக நிலைய ங்களிலேயே தற்காலிகமாக புதுக்குடியிருப்பு ஆஸ்பத்திரி இயங்குகின்றது. இப்பகுதி கடற்கரைப் பகுதியை அண்டியுள்ளதால் நோயா ளிகளை கடல்மார்க்கமாகவேனும் திருகோணமலைப் பிரதேசத்திற்கு அழைத்துவருமாறு சுகாதார அமைச்சு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் கேட்டுள்ளது என சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் கஹந்த லியனகே தெரிவித்தார்.

அத்துடன் கிளிநொச்சி நகர் படையினரின் முழுமை யான கட்டுப்பாட்டில் வந்துள்ளமையால் கிளிநொச்சி ஆஸ்பத்திரிக்கு மாவட்ட வைத்திய பணிப்பாளர் மற்றும் அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் உள்ளிட்ட டாக்டர்கள் அடங்கிய குழுவொன்றை அனுப்பவும் கிளிநொச்சி ஆஸ்பத்திரியை மீண்டும் இயங்கவைக்கவும் சுகாதார அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.

இலங்கைக்கு ஆயுதம் அனுப்பவில்லை: காங். தங்கபாலு

thangabalu.jpgஇலங்கைத் தமிழர்களைக் கொல்வதற்காக இந்திய அரசு ஆயுதம் அனுப்பவில்லை என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் தங்கபாலு கூறியுள்ளார்.

இலங்கை தமிழர் நல உரிமை பேரவை சார்பில் இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும், இலங்கை தமிழர் பிரச்சினைக்கு ஜனநாயக முறையில் தீர்வு காண கோரியும் சென்னை தங்கசாலை மணிக்கூண்டு அருகே நேற்று இரவு பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு,  

இலங்கை தமிழர்களுக்காக காங்கிரசும், தி.மு.க.வும் பல முனைகளில் போராடி உள்ளன. இந்த பிரச்சினையில் தீர்வு காண்பதற்காக பலநேரங்களில் முயற்சி மேற்கொண்டுள்ளோம். இலங்கை பிரச்சினைக்காக இப்போது குரல் கொடுக்கும் கட்சிகளே அப்போது கிடையாது.

இலங்கைக்கு சீனா, பாகிஸ்தான், இஸ்ரேல் போன்ற நாடுகளில் இருந்து ஆயுதம் சப்ளை செய்யப்படுகிறது. தமிழர்களைக் கொல்வதற்காக இந்திய அரசு ஆயுதம் அனுப்பவில்லை என்பதை இந்த மேடையில் பட்டவர்த்தனமாக சொல்கிறேன். மத்திய, மாநில அரசுகளுடன் அனைவரும் ஒத்துழைத்தால்தான் தமிழனைக் காப்பாற்ற முடியும் என்றார்.

புலிகளின் பிடியிலுள்ள மக்களை விடுவிப்பதே இன்றைய முதற்பணி – ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணி அறிக்கை

sangari.jpgsitharthan.jpgsritharan.jpgவன்னியில் சிக்கியிருக்கும் மக்களை தாம் விரும்பிய பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதற்கு புலிகள் எதுவித நிபந்தனைகளுமின்றி அனுமதிக்க வேண்டுமென ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணி வேண்டுகோள் விடுத்துள்ளது. அதேநேரம் அந்த மக்களை பேரவலத்திலிருந்து மீட்பதே இன்றைய முதன்மையான பணியென்றும் மேற்படி கூட்டணி சுட்டிக்காட்டியுள்ளது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் வீ. ஆனந்தசங்கரி, தி. ஸ்ரீதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கையெழுத்திட்டு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

வன்னியில் பேரவலத்தினுள் சிக்குண்டுள்ள மக்கள் பற்றிய கவலை மனிதநேயமுள்ளவர்களின் மனச்சாட்சியை உலுக்கி நிற்கிறது.

வன்னியில் பரந்து வாழ்ந்த இம்மக்கள், மாதக்கணக்கில் பணயமாக கொண்டு செல்லப்பட்டு இன்று 200 சதுர கி.மீ.க்கு குறைவான நிலப்பரப்பில் ஒடுங்க, ஒதுங்க வைக்கப்பட்டுள்ளார்கள். அன்றாடம் காயமும் மரணமுமென்று அவர்கள் சாவுக்கும் வாழ்வுக்குமிடையே அகப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

அதேவேளை அரசாங்கம் அந்த மக்கள் பாதுகாப்பாக வந்து சேர்வதற்கு அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் பாதுகாப்பு இருக்கின்றது என்பதை உணரும்படியாகவும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். அதாவது, நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.

இந்த மக்கள் கடந்த 15 வருடங்களாக புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தார்கள். ஏதோவொரு வகையில் புலிகளுடன் சம்பந்தப்பட்டு வாழ வேண்டிய துரதிர்ஷ்ட நிலையே இந்தக் காலப்பகுதியில் அவர்களுக்கு வாய்த்திருந்தது. இதனால் அவர்கள் மத்தியில் அச்சநிலை காணப்படுகிறது.

அரச கட்டுப்பாட்டுப் பகுதி பற்றிய புலிகளின் பொய்யான பிரசாரங்களும் அந்த மக்களை பீதிக்கும், அச்சத்திற்கும் உள்ளாக்கியுள்ளது. மேலும், அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் கடந்த காலங்களில் நிகழ்ந்த ஒருசில சம்பவங்களும் அவர்களிடம் இந்த தயக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு வரும் மக்கள் ஐ.நா. நிறுவனங்களின் கண்காணிப்புடன் அல்லது ஒத்துழைப்புடன் பராமரிக்கப்படல் வேண்டும்.

ஜனநாயக அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள், உறவினர்கள், நண்பர்களுடன் இம்மக்கள் தொடர்புகொள்வதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்படல் வேண்டும்.

வயோதிபர்கள் தமது உறவினர்கள் நண்பர்களுடன் சென்று வாழ்வதற்கு அனுமதிக்கப்படல் வேண்டும். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் காயமடைந்தவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு உறவினர் யாராவது அருகிலிருந்து உதவுவதற்கு அனுமதிக்கப்படல் வேண்டும்.

மரணப் பொறியில் அகப்பட்டிருக்கும் இந்த இலட்சக்கணக்கான மக்களை மீட்பதில் உரிய அழுத்தங்கள் சர்வதேச சமூகத்தாலும், குறிப்பாக இந்தியாவாலும் பிரயோகிக்கப்படல் வேண்டும். காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுபவர்கள், தற்போது முகாம்களில் இருப்பவர்கள், இனிமேல் வரவிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும் உரிய கட்டமைப்பு வசதிகள், ஏற்பாடுகள் விரிவாக திருப்திகரமாக செய்யப்படல் வேண்டும்.

இந்தக் காரியங்களை செய்வதன் மூலமே மக்களின் மனக்காயங்களை ஆற்ற முடியும். பேரவலங்களில் இருந்து அவர்களை மீட்க முடியும்.

அவர்களுக்கு வாழ்வின் மீதான நம்பிக்கையை கட்டியெழுப்ப முடியும்.