12

12

இலங்கையில் மக்கள் அழியும் விவகாரம் பாதுகாப்புச் சபைக்கு வராததால் போர் நிறுத்தம் கோர முடியாது! ஐ.நா.செயலாளர் பான் கீமூன்

banki-moon.jpgஇலங்கை யில் நடைபெறும் போரினால் பெரும் இரத்தக்களரி உண்டாகி வருகின்றபோதிலும், அந்த நாட்டின் விவகாரம் பாதுகாப்புச் சபையின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்படாததால், அங்கு போர் நிறுத்தம் செய்யுமாறு அரசாங்கத்தை நான் கோர முடியாது. இவ்வாறு தெரிவிக்கிறார் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீன் மூன்.

இலங்கையில் நடைபெறும் போரினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்த விவரங்கள் குறைவாகவே வெளிப்படுத்தப்படுகின்றன என்று தெரிவித்த மூன் தாம் நாடுகளின் இறைமையை மதிப்பவர் என்றும் ஒரு கட்டத்தில் கூறினார். பல வெளிநாடுகளுக்கு விஜயம் செய்த பின்னர் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீமூன் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை நியூயோர்க்கில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடத்தினார்.

அந்த மாநாட்டில் வைத்து “இன்னர் சிற்றி பிறெஸ்” ஊடகத்தின் செய்தியாளர் மத்தி ரஸல் லீ, பான் கீ மூனிடம் காஸா, கொங்கோ ஆகிய நாடுகளில் போர் நிறுத்தத்தை கோரியது போன்று, ஏன் பெரும் இரத்தக்களரி உண்டாகியுள்ள இலங்கையில் போர் நிறுத்தம் கோரவில்லை என்று கேட்டார். அப்போதே இலங்கை விவகாரம் குறித்து பாதுகாப்பு சபையின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்படாமையால் தன்னால் போர் நிறுத்தம் கோர முடியவில்லை என்று பான் கீ மூன் சொன்னார்.

இதேவேளை அதே ஊடகவியலாளர் சந்திப்பில் இராணுவ நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்துக்கு ஏற்பநடத்தப்பட வேண்டும் என்று ஒரு சந்தர்ப்பத்திலும் ஈரான் மற்றும் காஷ்மீர் பிரச்சினைகள் குறித்தும் பிரஸ்தாபித்த போது பிரச்சினைகள் பேச்சுவார்த்தை மூலமே தீர்க்கப்படவேண்டு; இராணுவ நடவடிக்கைகளால் அல்ல என்று மற்றொரு சந்தர்ப்பத்திலும் கருத்து வெளியிட்டார்.அப்போது பான்  கீ மூன் “இன்னர் சிற்றி பிறெஸ்” செய்தியாளரிடம் மேலும் கூறியதாவது:

“இலங்கை நிலைவரம் தொடர்பாக இரு வாரங்களுக்கு முன்னர் நியூயோர்க்கிற்கு விஜயம் மேற்கொண்ட அந்த நாட்டின் சிறப்புப் பிரதிநிதியுடன்(பஸில் ராஜ  பக்ஷவுடன்) ஆராய்ந்தேன்.மேலும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனும் இந்த விடயம் தொடர்பாகத் தொலைபேசியில் தீவிரமாக ஆராய்ந்தேன்.

அவர் பொதுமக்களுக்கு இழப்பு ஏற்படுவதைத் தவிர்க்கவேண்டும், மோதலில் சிக்கியுள்ள மக்களுக்கும் உதவ வேண்டும். இதன் மூலம் அவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றலாம் எனத் தெரிவித்திருந்தேன். அவர் தன்னுடைய முழு ஒத்துழைப்பையும் வழங்குவார் எனத் தெரிவித்திருந்தார்.

இலங்கையில் அளவுக்கதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதுவே நியாயபூர்வமாகச் சிந்திக்கும் அனைவரினதும் கருத்தாகும். இலங்கை விவகாரம் பாதுகாப்புச் சபையின் நிகழ்ச்சிநிரலில் இடம்பெறவில்லை. நாடொன்றின் இறைமையை மதிப்பது என்ற விடயத்தை எனது முக்கிய கொள்கையாகக் கொண்டுள்ளேன். எனினும் இலங்கை மற்றும் காஸா நிலைவரங்கள் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் ஆளுகைக்கு உட்பட்ட விடயங்களாகும்.சர்வதேச தராதரங்கள் மீறப்படுதல் தொடர்பாக நான் தொடர்ச்சியாக எனது ஆழ்ந்த கண்டனத்தைத் தெரிவித்து வந்துள்ளேன்.

குறைந்தளவிலேயே தகவல்கள் கிடைத்துள்ளன இலங்கையில் தொடரும் முறைகள் தொடர்பாக தொடர்ச்சியாக  எனது கவலையைத் தெரிவித்து வந்துள்ளதுடன்   இராணுவத் தீர்வல்ல, அரசியல் தீர்வே அவசியம் என்பது குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளேன். இலங்கையில் காணப்படும் நிலைவரம் குறித்து குறைந்த எண்ணிக்கிகையிலேயே தகவல்ககள் வெளியாகியுள்ளன. எந்த மோதல் சூழ்நிலையிலும் நீங்கள் முதலில் அறிய விரும்புவது உண்மை நிலைவரம் எவ்வாறானதாக உள்ளது என்பதையே  என்றார் .

இலங்கை பிரச்சனைக்கு அரசியல் ரீதியான தீர்வு: பிரதிபா உரை

prathiba1102.jpgஇலங்கை பிரச்சனைக்கு அரசியல் ரீதியான தீர்வு காணப்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் இன்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

இலங்கையில் நிரந்தரமாக அமைதி ஏற்பட வேண்டும். இதற்காக அங்கு போர் நிறுத்தம் செய்யவேண்டும். பேச்சு வார்த்தை மூலம் அரசியல் தீர்வு காண்பதே இந்த பிரச்சனைக்கு தீர்வாகும். விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு பேச்சு வார்த்தைக்கு முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.
 
 

வன்னி நிலைமைகள் குறித்து யாழ்.ஆயருடன் அமெரிக்க தூதரக அதிகாரிகள் கலந்துரையாடல்

thomas-sawndaranayakam.jpgயாழ்ப்பாணத்துக்கு நேற்று புதன்கிழமை விஜயம் செய்த கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரக பிரதித்தலைமை அதிகாரி ஜேம்ஸ் ஆர்மோர் மற்றும் தூதரக அரசியல் விவகாரங்களுக்கான அதிகாரி மைக்டெடர் ஆகிய இருவரும் யாழ். ஆயர் அதி. வண.தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகையை சந்தித்துப் பேசியுள்ளனர்.

யாழ். ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது வன்னிப்பகுதியில் வாழும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் குடாநாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து விரிவாக இருவரும் ஆயருடன் கலந்துரையாடியதாக ஆயர் இல்ல வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேனளை, விடுவிக்கப்படாத இடங்களில் இருந்து யாழ்ப்பாண குடாநாட்டுக்கு வந்து தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் நிலைமைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இடம்பெயர்ந்துள்ள இந்த மக்கள் தத்தமது சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்லவும், அவர்களுக்கு இயல்பு வாழ்க்கை கிடைப்பதை உறுதி செய்வதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என யாழ். ஆயர் அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார் என ஆயரின் செயலாளர் அருட்தந்தை எஸ்.ஏ.றொசான் அடிகள் தெரிவித்தார். யாழ். குடாநாட்டின் அவசர மருத்துவ உதவித்திட்டத்தின் கீழ் பண்ணையில் நிறுவப்பட்டுள்ள சுகாதாரக் கிராமத்தை திறந்து வைக்க இரு தூதரக அதிகாரிகளும் யாழ்ப்பாணம் வந்திருந்தனர்.

அவசர நோயாளிகளுக்கான அம்புலன்ஸ் சேவை குடாநாட்டில் இன்று முதல்

ambulance.jpgயாழ் .மாவட்டத்தில் அவசர நிலைகளின் போது நோயாளர்களை வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்வதற்கான அவசர அம்புலன்ஸ் சேவை இன்று வியாழக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படுகின்றது.  24 மணிநேரமும் செயற்படவுள்ள இந்த அம்புலன்ஸ் சேவைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென்று யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கேட்டுள்ளார்.

இந்தச் சேவை ஆரம்பிக்கப்பட்டது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்;

இன்று ஆரம்பிக்கப்படுகின்ற இவ் அவசர அம்புலன்ஸ் சேவையை யாழ்.மாவட்டச் சுகாதார திணைக்களம் ஒருங்கிணைக்கும். அவசர நிலைகளில் இச் சேவையைப் பெற விரும்புபவர்கள் 110 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும். கையடக்கத் தொலைபேசி மூலம் 110 என்ற தொலைபேசியூடாக இச்சேவையைப் பெற்றுக்கொள்ள சில நாட்கள் தாமதமேற்படும் என்பதால் அவர்கள் 0212224444 என்ற இலக்கம் மூலம் தொடர்புகொள்ளலாம்.

அவசர அழைப்புகளை ஒருங்கிணைப்பதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் அமைக்கப்பட்டுள்ள நிலையம் 24 மணிநேரமும் செயற்படும். இங்கிருந்து அந்தந்தப் பிரதேசங்களிலுள்ள அம்புலன்ஸ்களுக்கு தகவல்கள் வழங்கப்படும்.

இச்சேவையின் மூலம் யாழ்.மாநகராட்சிப் பகுதியிலும் அதனை அண்டிய வலிகாமம் பகுதிகளிலும் உள்ள நோயாளர்கள் நேரடியாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படுவர்.  ஏனைய பகுதிகளைச் சேர்ந்த நோயாளர்கள் அருகிலுள்ள பிரதேச வைத்தியசாலைகளுக்கு எடுத்துச் செல்லப்படுவர். தேவையேற்படின் அவசர சிகிச்சைகளுக்குப் பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படுவர்.

இத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக பருத்தித்துறை, தெல்லிப்பளை, சாவகச்சேரி, சங்கானை மற்றும் ஊர்காவற்றுறை போன்ற வைத்தியசாலைகளின் அம்புலன்ஸ்களுக்கு அவசர முதலுதவிச் சிகிச்சைகளுக்கான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்தோடு, அம்புலன்ஸ் சாரதிகளுக்கும் பணிப்பாளர்களுக்கும் அவசர முதலுதவிப் பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து ஏனைய வைத்தியசாலைகளின் அம்புலன்ஸ்களுக்கு மருத்துவ உபகரணங்களும் சாரதிகளுக்குப் பயிற்சிகளும் வழங்கப்படும்.  யாழ்.மாவட்டத்தில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த உலக சுகாதார ஸ்தாபனமும் சர்வதேச மருத்துவக் குழுவும் உதவியளித்து வருகின்றன. ஆனால், சுகாதாரத் திணைக்களமே இதனைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது.

பிரிட்டனில் கடும் வேலைவாய்ப்பின்மை

britain.jpgபிரிட்டனில் ஒரு தாசாப்த காலத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. இருபது லட்சத்துக்கும் சற்று குறைவான எண்ணிக்கையினர் தற்போது இங்கு வேலை இல்லாமல் இருக்கிறார்கள்.

இது பிரிட்டனின் வேலைவாய்ப்புச் சக்தியின் 6.3 வீதமாகும்.

அதேவேளை பிரிட்டன் தற்போது ஆழமான பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொள்வதாக, பாங் ஒவ் இங்கிலண்டின் ஆளுனர் மேர்வின் கிங் கூறியுள்ளார். வட்டி வீதம் மேலும் குறைக்கப்படாவிட்டால், பிரிட்டனின் பொருளாதாரம் இந்த வருட நடுப்பகுதியில், இன்னும் அதிகமாக வீழ்ச்சியடையும் என்று அந்த வங்கி தனது புதிய பொருளாதார எதிர்வுகூறலுக்கான அறிக்கையில் தெரிவித்துள்ளது.

புலிகளின் குண்டுத் தொழிற்சாலை படையினரால் இன்று மீட்பு!

bomb_construct.pngமுல்லைத் தீவில் மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் இராணுவத்தின் 58 ஆவது படையணியினர் இன்று காலை சுகந்திரபுரம் பகுதியில் அமைந்திருந்த புலிகளின் குண்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலையொன்றைக் கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இத்தொழிற்சாலையில் கிளேமோர் குண்டுகள் மற்றும் 81 மி.மீ. மோட்டார் குண்டுகள் என்பன உற்பத்தி செய்யப்பட்டிருக்கலாம் என படையினர் நம்புவதாகவும் பாதுகாப்பு அமைச்சு மேலும் அறிவித்துள்ளது

புதிய பாதுகாப்பு வலயம் இன்று பிரகடனம்!

chalai_map.jpgமுல்லைத் தீவு மாவட்டத்தில் அரசாங்கம் புதிய பாதுகாப்பு வலயம் ஒன்றை இன்று பிரகடனப்படுத்தியுள்ளதாக இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது. முல்லைத்தீவு ஏரிக்கு கிழக்கே உள்ள நிலப்பரப்பில் 12 கிலோ மீட்டர் நீளத்துக்கு இந்தப் புதிய பாதுகாப்பு வலயம் உருவாக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துக்கும் இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.

பொது மக்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கவே இப்புதிய பாதுகாப்பு வலயம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் முடிந்த அளவு விரைவில் பொது மக்கள் இந்தப் பாதுகாப்பு வலயத்துக்கு வந்து சேரவேண்டும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

வன்னியிலிருந்து நோயாளரை திருமலை அழைத்துவர தொடர்ந்து நடவடிக்கை

ship-10022009.jpgவன்னியில் யுத்தத்தினால் காயமடைந்த பொதுமக்களில் 240 பேர் கப்பல் மூலம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு திருகோணமலைக்குக் கொண்டுவரப்பட்டிருக்கும் நிலையில், இதன் இரண்டாம் கட்ட நடவடிக்கைகளை இன்று வியாழக்கிழமை மேற்கொள்ளத் திட்டமிட்டிருப்பதாக சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் (ஐ.சி.ஆர்.சி.) தெரிவித்தது.

வன்னியில் காயமடைந்தவர்களில் ஒரு பகுதியினர் ஐ.சி.ஆர்.சி.யினால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட “கிரீன் ஓஷியன்’ எனும் கப்பல் மூலம் மேலதிக சிகிச்சைகளுக்காக முல்லைத்தீவிலிருந்து நேற்று முன்தினம் இரவு திருகோணமலைக்குக் கொண்டுவரப்பட்டிருந்தனர்.

அரச கட்டுப்பாடற்ற பிரதேசமான முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியிலுள்ள சனசமூக நிலையத்தில் இயங்கும் தற்காலிக ஆஸ்பத்திரியிலிருந்தே இவர்கள் திருகோணமலைக்குக் கொண்டுவரப்பட்டனர்.

கடந்த வாரம் இடம்பெற்ற தொடர்ச்சியான ஷெல் தாக்குதல்கள் காரணமாக புதுக்குடியிருப்பு வைத்தியசாலையிலிருந்த அனைத்து நோயாளிகளும் காயமடைந்தவர்களுமே ஐ.சி.ஆர்.சி. மூலம் புதுமாத்தளன் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர்.

இந்த நிலையிலேயே, முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியிலிருந்து நோயாளிகள் மற்றும் காயமடைந்தவர்கள் 240 பேர் கப்பல் மூலம் நேற்று முன்தினம் இரவு திருகோணமலைக்குக் கொண்டுவரப்பட்டிருப்பதாக ஐ.சி.ஆர்.சி.யின் கொழும்பு அலுவலக பேச்சாளரான சரசி விஜேரட்ண தெரிவித்தார்.

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்

indonesia_map_.gif
இந்தோனேஷியாவின் வடக்கு சுலவேசிதீவில் இன்று காலை மிக பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 7.4 புள்ளிகளாகப் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகள், கட்டடங்கள், மருத்துவமனைகள், தேவாலங்கள் இடிந்து விழுந்தன. இதில் 17 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். ஒரு மருத்துவமனை இடிந்ததில் தான் பெரும்பாலானவர்கள் காயமடைந்தனர்.

கடலுக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சிறிய நில அதிர்வுகள் தொடர்ந்தன. நிலநடுக்கம் ஏற்பட்டதும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர். ஆனால் பின்னர் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.

‘ஐ. சி. ஆர். சி பணியாளர்கள் வன்னியிலிருந்து வெளியேறவில்லை’ -தகவல் அதிகாரி

red-cr.jpgவன்னியில் மோதல்கள் இடம்பெறும் பகுதிகளிலிருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் (ஐ. சி. ஆர். சி) பணியாளர்கள் வெளியேறி வரவில்லையென்று சங்கம் தெரிவித்தது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பணியாளர்கள் தொடர்ந்தும் மனிதாபிமானப் பணிகளில் ஈடுபடுவார்களென்று சங்கத்தின் தகவல் அதிகாரி சரசி விஜேரட்ன  தெரிவித்தார்.

வன்னியிலிருந்து நோயாளர்கள் கப்பல் மூலம் கொண்டுவரப்பட்ட போது, ஐ. சி. ஆர். சி பணியாளர்களும் அவர்களுடன் வந்துள்ளனர். ஆனால், அவர்கள் அந்தப் பகுதிகளுக்குத் திரும்பிச் சென்று பணிகளை ஆரம்பிப்பார்களென்றும் அவர் தெரிவித்தார். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வெளியேறிவிட்டதாக வெளியான தகவல்களில் உண்மை கிடையாதெனவும் அவர் கூறினார்.

வன்னியிலிருந்து ஒரு தொகுதி நோயாளர்கள் மேலதிக சிகிச்சைக்காக ஐ. சி. ஆர். சி. கப்பல் மூலம் நேற்று முன்தினம் திருகோணமலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு- மாத்தளன் கடற்பரப்பிலிருந்து கப்பல் மூலம் நோயாளர்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான நோயாளர்களுள், கடுமையாகக் காயமுற்றவர்கள் பலர் இருந்துள்ளார்கள். இதனால், நோயாளர்களோடு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்களும் உடன் வந்தார்கள் என்று அதன் தகவல் அதிகாரி சரசி தெரிவித்தார்.

“நோயாளர்களுடன் வந்துள்ள பணியாளர்கள் மீண்டும் அந்தப் பகுதிகளுக்குச் சென்று வழமை போன்று மனி தாபிமானப் பணிகளை மேற்கொள்வார்கள். இதிலிருந்து சங்கம் விலகி நிற்காது” என்றும் அவர் மேலும் தெரிவித்தார். நேயாளர்கள் வந்த கப்பலில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அனைத்துப் பணியாளர்களும் வெளியேறி வந்து விட்டதாக வெளியாகியிருந்த செய்தியை அவர் மறுத்தார்.