19

19

புலம்பெயர் தமிழ் மக்களின் துருவ அரசியல் ஏற்படுத்தும் பதட்டமும் மிரட்டல்களும் : த ஜெயபாலன்

Stop Voilenceபிரான்சிலிருந்து ஒலிபரப்பாகும் ரிஆர்ரி தமிழ்அலை வானொலியின் முன்ணணி அறிவிப்பாளரும் அரசியல் அரங்கம் நிகழ்ச்சித் தொகுப்பாளருமான உதயகுமாருக்கு பாரிஸில் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு உள்ளது. நேற்று (பெப்ரவரி 18) மாலை பிரான்சின் புறநகர் பகுதியான டிரான்சி என்னுமிடத்திலுள்ள அவரது வீட்டுக்குச் சென்ற மூன்று இனந்தெரியாத உறுப்பினர்கள் வீட்டிலிருந்த அவரது மனைவியிடம் ‘அரசியல் அரங்கம் நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்தச் சொல்லவும் இல்லையேல் பயங்கர விளைவுகளைச் சந்திக்கவேண்டி வரும்’ என்று கணவரிடம் கூறும்படி எச்சரித்து உள்ளனர். ‘ரிஆர்ரி தமிழ்அலை வானொலியையும் ரிபிசி வானொலியையும் நாம் பார்க்கவேண்டிய விதத்தில் பார்த்துக் கொள்வோம். ஆனால் உங்கள் கணவர் அரசியல் அரங்கம் நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்த வேண்டும்’ என்று திருமதி உதயகுமாரிடம் வந்த நபர்கள் எச்சரித்து உள்ளனர்.

இப்பயமுறுத்தல் தொடர்பாக டிரான்சி பொலிசில் முறையிட்டு உள்ளதாக உதயகுமார் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார். ஏற்கனவே ரிஆர்ரி தமிழ்அலைக்கு பயமுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த உதயகுமார் நேற்றைய பயமுறுத்தல் எல்ரிரிஈ தரப்பிலிருந்தே வந்துள்ளதாக தான் நம்புவதாகவும் பொலிஸில் அவ்வாறே முறையிட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். இச்சம்பவத்தினால் அரசியல் அரங்கத்தில் மாற்றங்கள் ஏற்படுமா எனக் கேட்ட போது இதுவரை அவ்வாறான முடிவுகள் எதனையும் தாங்கள் எடுக்கவில்லை என்றும் வழமைபோல் நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

சம்பவதினம் மாலை 5 மணியளவில் உதயகுமார் வசிக்கும் அப்பாற்மன்ட் இன்ரகொம்மில் உதயகுமாரை அழைத்து உள்ளனர். அப்போது உதயகுமார் வீட்டில் இருக்கவில்லை. இன்ரகொம்மில் திருமதி உதயகுமார் உதயகுமார் வெளியே சென்றத்தைத் தெரிவிக்கவும் வந்தவர்கள் ‘நாங்கள் உங்களோடு கொஞ்சம் கதைக்க வேண்டும்’ என்று சொல்லி உள்ளனர். அவர்களது குரலில் சந்தேகம்கொண்ட திருமதி உதயகுமார் தானே கீழே வருவதாகக் கூறிவிட்டு பிள்ளைகளை அப்பாட்மன்டில் பூட்டிவிட்டு கீழே சென்றுள்ளார். அங்கிருந்த மூவரில் ஒருவர் வாயிலுக்கு வந்து ” உதயகுமாருக்கு அரசியல் அரங்கம் நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்தச் சொல்லுங்கள் இல்லாட்டி பயங்கர விளைவுகளைச் சந்திக்கவேண்டி வரும்’ என்று எச்சரிக்க பின்னாலிருந்து மற்றுமொரு குரல் ”ரிஆர்ரி தமிழ்அலை வானொலியையும் ரிபிசி வானொலியையும் நாம் பார்க்கவேண்டிய விதத்தில் பார்த்துக் கொள்வோம். ஆனால் உதயகுமார் அரசியல் அரங்கம் நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்த வேண்டும்” என்று ஓங்கி ஒலித்தது. ‘அதனை அவரிடமே சொல்லுங்கள்’ என்று திருமதி உதயகுமார் கேட்கவும் ‘சொல்ற விதத்தில் சொல்லுவோம்’ என்ற வகையில் பதில் அளித்துவிட்டுச் சென்று உள்ளனர். ‘வந்தவர்கள் தங்களை அமைப்பைச் சேர்ந்தவர்கள்’ என்று அறமுகப்படுத்தி உள்ளனர்.

ரிஆர்ரி வானொலியில் இடம்பெற்றுவரும் அரசியல் நிகழ்ச்சிகளான உறவுப்பாலம், அரசியல்அரங்கம் ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளையும் உதயகுமார் அவர்களே தொகுத்து வழங்கிவருகின்றார். அந்த இரண்டு நிகழ்ச்சிகளும் மிகவும் பிரபல்யம் வாய்ந்தவை. உறவுப்பாலம் நிகழ்சி வாராவாரம் ஒரு அரசியல் பிரமுகரை நேயர்கள் நேரடியாக கேள்வி கேட்கும் வகையில் அமைந்தது. கடந்த வாரம் அமைச்சரும் ஈபிடிபி செயலாளருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்ததுடன், உதயகுமாருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்திருந்தார்.

ஞாயிறுதோறும் இடம்பெறும் அரசியல் அரங்கம் நிகழ்ச்சியும் மிகவும் பிரபல்யமானது. அதேவேளை, எல்ரிரிஈ ஆதரவாளர்களும் இந்தநிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமது கருத்துக்களை முன்வைப்பதும் உண்டு. ஆனால் கடந்த சில வாரங்களாக அந்த நிகழச்சியில் கலந்துகொள்ளும் எல்ரிரிஈ ஆதரவாளர்கள் அந்த நிகழ்ச்சியையும் வானொலியின் இயக்குநர் குகநாதனையும் தனிப்பட்டவகையில் தாக்கி வருவதை அவதானிக்க முடிகின்றது.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அளித்த பதில்கள் குறித்த மிகவும் காட்டசாட்டமான விமர்சனம் ஒன்றை மனிதப் பிணங்களின் கணித ஒப்பீட்டியல்-டக்ளசின் கலந்துரையாடல் என்ற தலைப்பில் “இனியொரு” இணையத்தளத்தில் சபா நாவலன் எழுதி இருந்தார். அதில் ‘இன அடக்கு முறை தான் புலியை உருவாக்கியது. “தோழர்” டக்ளஸ் தேவந்தாவையும் கூட உருவாக்கியது. வரிக்கு வரி இனவாதத்தைக் கக்கும் மகிந்த சிந்தனையின் வரிவடிவங்களை டக்களஸ் தேவானந்தா படித்திருக்காமல் இருக்க முடியாது. இந்த கீழ்த்தரமான சிந்தனையால் விதைக்கப்பட்ட இனவாதம், பிரிந்து வாழ்வதற்கான உணர்வை தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் இன்னுமின்னும் ஆழ விதைக்கும் என்பதை அமைச்சர் தோழர் “டக்ளஸ்” சிந்திக்காமல் “மாண்புமிகு” அமைச்சராகியிருக்க முடியாது. இந்த மகிந்த சிந்தனையை மாவோ சிந்தனைக்குப் பதிலாக ஏற்றுக்கொண்டு அதற்காகப் பிரச்சாரம் வேறு மேற்கொள்ளும் மாண்புமிகு, “முன்நாள் இடதுசாரி” அமைச்சர் தேவானந்தா, இந்தச் சிந்தனையில் மக்கள் மயங்கி, அரச குடியேற்றத்திட்டத்திற்கு மகிந்த புரம் என்று திரு நாமம் சூட்ட “தோழரை” கேட்டுக் கொண்டார்களாம்.??!! இப்படித்தான் 14.02.09 அன்று டான் வானொலியில் உறவுப்பாலம் நிகழ்ச்சியூடாக நேயர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த “தோழரின்” பதில்கள் மகிந்த பாசிசத்தின் இன அழிப்பின் நியாயப்படுத்தலாக நகர்ந்து சென்றது.” என்று நாவலன் காட்டமான ஒரு விமர்சனத்தை முன்வைத்தார். இறுதியில் ”மகிந்த, பிரபாகரன், தேவானந்தா போன்ற எல்லோருமே அப்பாவிகளைக் கொன்று குவித்து அவர்கள் சாம்ராஜ்யத்தை நிறுவிக்கொண்டாலும், எஞ்சியிருக்கும் சொற்ப மக்களுக்கு மத்தியில் இவர்கள் யுத்தக் குற்றவாளிகளே! சொந்த மக்களையே கொன்று குவித்த சமூக விரோதிகளே!!” என்றும் சபா நாவலன் குறிப்பிட்டு இருந்தார்.

சபா நாவலனின் இவ்விமர்சனத்திற்காக அவருக்கு இன்று தொலைபேசியில் கொலைமிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மிரட்டல் உதயகுமாருக்கு மிரட்டல் வந்த பக்கத்தில் இருந்து வரவில்லை. சபா நாவலனுக்கு வந்த மிரட்டல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது வைத்த விமர்சனத்திற்காக வந்த மிரட்டல் என்கிறார் சபா நாவலன்.

ஈழத் தமிழர்களின் அரசியல் உணர்வுகள் தற்போது மிகவும் உணர்ச்சியூட்டப்பட்ட நிலையில் உள்ளது. இன்றைய இந்த அவலத்திற்கு முழு முதற் காரணமாயுள்ள இலங்கை அரசு மீதும் அதன் ஆதரவு சக்திகள் மீதும் அதேசமயம் போராட்டம் என்ற பெயரில் மக்களைப் பணயம் வைத்துள்ள எல்ரிரிஈ மீதும் கடுமையான விமர்சனங்கள் எழுகின்றன. இவை ஒரு பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இவற்றின் ஒரு வெளிப்பாடாகவே கிங்ஸ்பரி விகாரைக்கு ஜனவரி முற்பகுதியில் சில விசமிகள் தீ வைத்துள்ளனர். அதிஸ்டவசமாக தீ கட்டப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது.

மேலும் லண்டனில் நியூஹாம் கவுன்சிலர் போல் சத்தியநேசன் கொலைப் பயமுறுத்தல்களுக்கு உள்ளாகி பொலிஸில் முறையிடப்படும் வரை சென்றதுடன் சில நாட்கள் வீட்டில் தங்கி இருக்க வேண்டாம் என பொலிஸாரால் அறிவுறுத்தப்பட்டு இன்னுமொரு பாதுகாப்பான வீட்டில் தங்கவேண்டி ஏற்பட்டுள்ளது. தொழிற்கட்சி கவுன்சிலராக உள்ள போல் சத்தியநேசன் அப்பகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீபன்ரிம்ஸ் ஊடாக ஈழத் தமிழ் மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியே இப்பயமுறுத்தல் விடுக்கப்பட்டதாக தெரியவருகிறது. நியூஹாம் கவுன்சிலர் போல் சத்தியநேசன் எப்போதும் ஜனநாயக விழுமியங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பவர் என்பதும் எப்போதும் மக்கள் அணுகக் கூடிய வகையில் செயற்படும் கவுன்சிலர் என்பதும் பெரும்பாலும் அனைவரும் அறிந்ததே. ஆனால் சில இளைஞர்கள் தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையில் சிலரால் தூண்டப்பட்ட ஒரு அடையாளத்தை தேடும் நோக்கில் இவ்வாறு செயற்படுவதாக அவர் தெரிவிக்கின்றார்.

அதற்குச் சில வாரங்களுக்கு முன்னதாக ஜனவரி 26 அன்று முன்னாள் ஈபிஆர்எல்எப் உறுப்பினரும் வெளிப்படையாக தனது அரசியல் கருத்தக்களை வெளியிடுபவருமான லாபீர் என்றழைக்கப்படும் எஸ் பரமநாதன் ஈஸ்ற்ஹாமில் வைத்து மூன்று இளைஞர்களால் தாக்கப்பட்டதுடன் மேலும் தாக்கப்படுவார் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளார்.

தமிழ் மக்களிடையே இருந்து வந்த துருவ அரசியல் இந்த அவலமான சூழலிலும் மக்கள் சார்ந்ததாக இல்லாமல் தாங்கள் சார்ந்த அமைப்பை மையப்படுத்தியதாகவே இருக்கின்றது. அவற்றின் வெளிப்பாடாகவே இந்த மிரட்டல் சம்பவங்கள் அமைகிறது. மேலும் சில வன்முறைக் குழுக்களும் தங்களை இன்னார் என்று அடையாளப்படுத்தி ஒரு அடையாளத்தை தங்களுக்குப் பெற்றுக் கொள்ளும் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றது. இவ்வாறான மிரட்டல்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் முற்று முழுதாக நிறுத்தப்பட்டு தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அவலத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய ஆரோக்கியமான விவாதங்கள் அவசியம். தமிழ் மக்கள் கடந்து வந்த அரசியல் பாதை இனித் தெரிவு செய்ய வேண்டிய அரசியல் பாதை தொடர்பான விமர்சனங்கள், சுயவிமர்சனங்கள், மதிப்பீடுகள் அவசியம். வன்முறை மிரட்டல்கள் மூலம் இவற்றை நிறுத்தலாம் என்பது பூனை கண்ணை மூடிக்கொண்டு பால் குடிக்க முற்படுவதற்கு ஒப்பானது.

”மக்களின் பேரெழுச்சியே இப்போதைய அவசரத் தேவை” சிறிதுங்கா ஜெயசூரியா-; ஜே ஜே

Srithunga_Jeyasuriyaஇலங்கையில் இன அழிப்புப் போரும் அதன் விளைவாக தமிழர்களின் மனித அவலமும் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் இந்த நிலையில், பெரும்பாலான சிங்களர்கள் போருக்கு ஆதரவாகவும் தமிழர்கள் தேசிய அபிலாசைகள் உலகத்திற்கே பெரிய இடரை விளைவிக்கும் என்கிற ரீதியிலும் தான் குரல் எழுப்பி வருகிறார்கள். சர்வதேச சமூகமும் ஏதோ சில தமிழ் ஆடுகள் இறந்து போகின்றன, அவற்றை கொடுமை செய்து கொல்லாதீர்கள், இலகுவான முறையில் கொல்லுங்கள் என்ற வகையில்தான் நிலைப்பாடு எடுத்துள்ளன. இந்த பின்னனியில்தான் சிறிதுங்க ஜெயசூரியா அவர்கள் சென்னையில் ஒரு கூட்டத்தில் பேசிய பேச்சு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளிப்பதாக இருந்தது.

சிறிதுங்கா ஜெயசூரியா இலங்கை ஐக்கிய பொது உடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர். 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு மூன்றாவது இடத்தைப் பெற்றவர். தேர்தல் அறிக்கையிலேயே தமிழர்களின் சுய நிர்ணய உரிமைக்கு ஆதரவு தெரிவித்திருந்தவர்.

இவரை அறிமுகம் செய்து வைத்தார் Committee For Workers International என்ற சோசலிச அமைப்பைச் சேர்ந்த லண்டனில் இருந்து வந்திருந்த ஈழத்தமிழர் சேனன். அவர் கூறுகையில் எத்தகைய கொலை மிரட்டல்களுக்கு எதிராக தனது கருத்தை ஜெயசூரியா முன்வைக்கிறார் என்பதைக் குறிப்பிட்டர். மனித உரிமைகள் மீறல் இருக்கலாம் என்று கூறியதற்காக BBC, CNN, ஜெர்மன் தூதர் மற்றும் சுவிஸ் தூதர் போன்ற ஆனானப்பட்டவர்களையே நாட்டை விட்டு துரத்துவோம் என மிரட்டும் அரசு இயந்திரம், ”இனப்படுகொலையை நிறுத்து” எனக் குரல் கொடுக்கும் சிங்களவரை என்ன செய்வார்கள் என்பதை யாரும் எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை.

ஒரு கேள்விக்குப் பதிலளிக்கும் பொழுது, ஜெயசூரியா சொன்னார் “நான் ஒன்றும் மறைந்து கொண்டு பிரச்சாரம் செய்யவில்லை. நான் இலங்கைக்கு திரும்பச் செல்வேன். நான் கொலை செய்யப்படலாம். எனது தோழர்கள் பலர் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.” இவரது தன்னலமற்ற பணிக்கு நான் தலை வணங்குகிறேன்.

ஆழ்ந்த கவலை தரும் ஐ.நா.வின் போக்கு – புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர்

p_nadesan.jpgமனிதத்துவத்தின் அதி உன்னத நிறுவனமான ஐ.நா.வின் போக்கு ஆழ்ந்த கவலையையும் புதிரையும் ஏற்படுத்தியிருப்பதாகவும் அப்பாவித் தமிழ் மக்களின் நலன்களையும் உயிரையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை அந்த அமைப்பு மேற்கொள்ளவில்லையெனவும் விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.  என்ன நடக்கின்றது என்று நேரில் வந்து பார்க்காமல் தவறான பக்கத்தை குற்றம் சாட்டும் பிரயோசனமற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக நடேசன் கூறியுள்ளதாக “தமிழ் நெற்’ இணையத்தளம் தெரிவித்தது.

யுத்தத்தை நிறுத்துவதே இந்த நேரத்தில் தேவைப்படுவதாகும். அதற்கு இடமளித்துக் கொண்டு பொதுமக்கள் துன்பங்களுக்காக கவலை தெரிவிப்பது தவறான கொள்கையாகும் என்றும் நடேசன் கூறியுள்ளார். ஐ.நா.வின் கொழும்பு அலுவலகம் மற்றும் யுனிசெப் விடுத்த அறிக்கைகள் தொடர்பாக தமிழ் நெற்றுக்கு நடேசன் தெரிவித்திருப்பதாவது;

இடம்பெறும் யுத்தம் பொதுமக்களுக்கு சகல விதமான துன்பங்களையும் ஏற்படுத்தியுள்ளது. ஆதலால் உடனடியாக யுத்தம் நிறுத்தப்பட வேண்டும். பேச்சுவார்த்தைக்கு இடமளிக்கப்பட வேண்டும். புலிகள் யுத்தத்தை ஆரம்பிக்கவில்லை. அவர்கள் எப்போதும் பேச்சுவார்த்தைக்கு ஆயத்தமாக உள்ளார்கள். ஆதலால் பொதுமக்களின் துன்பம் தொடர்பாக கரிசனையுடைய உலக அரசாங்கங்களும் சர்வதேச அமைப்புகளும் யுத்தத்தை நிறுத்துமாறு இலங்கை அரசைக் கோர வேண்டும்.

துரதிர்ஷ்டவசமாக யுத்தத்துக்கு இடமளிக்கும் கடுமையான நிலைப்பாட்டை சர்வதேச சமூகம் உள்வாங்கிக் கொண்டுள்ளது. புலிகளுக்கு எதிரான யுத்தம் என்று இலங்கை அரசாங்கம் கூறுகிறது. ஆனால், முழுமையாக தமிழருக்கு எதிராகவே மேற்கொள்ளப்படுகின்றது உண்மையாகும்.

கொழும்பின் யுத்தத்தை நியாயப்படுத்துவதும் பொதுமக்கள் இழப்புகள் தொடர்பாக கவலைப்படுவதுமான இரட்டைத் தனமான கொள்கை அடிப்படையில் தவறானதாகும். இந்தத் தவறான நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள ஐ.நா. கடுமையாக உழைக்க வேண்டும். மனித உயிர் , கௌரவம், மனித உரிமைகளை உறுதிப்படுத்துதல் என்பவற்றை மோதல் வலயத்தில் மட்டுமல்லாது முழுத்தீவிலும் உறுதிப்படுத்த பணியாற்ற வேண்டும்.

வன்னியிலுள்ள பொதுமக்களின் உடனடிக்கவலைகள், தாக்குதல் பயத்திலிருந்தும் விடுபடுவதும் மருந்து , உணவு, நீர் மற்றும் தமது கிராமங்கள் வீடுகளுக்கு அச்சமின்றி திரும்பிச் செல்வதுமாகும். இந்தக் கவலைகளுக்கு எதிராக புலிகள் செயற்படவில்லை. தற்காலிக மோதல் நிறுத்தக் கோரிக்கையைக் கூட கொழும்பு செவிமடுக்கவில்லை என்பதை ஐ.நா. நன்கறியும். உணவு, மருந்து விநியோகத்திற்கும் அனுமதியில்லை. ஆதலால் பொதுமக்களின் கவலைகளுக்கு பரிகாரம் காணும் விடயத்தில் ஐ.நா. தவறான விதத்தில் குற்றம் சாட்டுகிறது.

அத்துடன் 18 வயதுக்கு குறைந்த எவரையும் அமைப்பில் புலிகள் இணைத்துக்கொள்ளவில்லை. பொதுமக்கள் தமது சொந்த விருப்பத்திலேயே எமது பகுதிக்குள் இருக்கின்றனர்

உலகில் திறமை மிக்கவர்கள் படையினர் என்றால் ஏமாற்றுவதில் அரசு திறமை மிகுந்தது- கபீர் ஹாசிம் கூறுகிறார்

sri-lanka-parliment.jpgஅரச படையினர் பயங்கரவாதிகளை தோற்கடித்த உலகின் திறமை மிகு படையினர் என்றால், அரசாங்கமோ மக்களை ஏமாற்றுவதில் திறமை மிக்கதாக இருப்பதாக தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான கபீர் ஹாசிம் நாட்டு மக்கள் தொடர்பான பல பிரச்சினைகள் இருக்கும் நிலையில் அரசாங்கமோ யுத்த வெற்றியில் மூழ்கிக் கிடப்பதாகவும் சுட்டிக் காட்டினார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற, சுங்கக் கட்டளை சட்டத்தின் கீழான இறக்குமதி தீர்வைகள் சம்பந்தமான தீர்மானம் மற்றும் 2007 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க ஒதுக்கீட்டு சட்டத்தின் பிரகாரமான கட்டளை மீதான விவாதத்தில் பேசும் போதே கபீர் ஹாசிம் எம்.பி.இவ்வாறு கூறினார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்; அரசாங்கம் புகழின் உச்சத்தில் இருக்கும் சந்தர்ப்பத்திலேயே இந்த மத்திய மற்றும் வட மேல் மாகாண சபை, தேர்தல் நடைபெற்றிருக்கிறது. இதற்கும் அரசாங்கம் பல உபாயங்களை கையாண்டது. எமது படையினர் பயங்கரவாதத்தை தோற்கடிக்க முடிந்த உலகின் சிறந்த படையினர் என்றால், அரசாங்கமோ, மக்களை ஏமாற்றுவதில் திறமை மிக்கதாக இருக்கிறது.

பயங்கரவாதிகளுக்கு எதிராக எமது படையினர் பல வெற்றிகளை பெற்ற போதிலும், அரசியல் வாதிகளே மலர் மாலைகளை அணிந்து கொள்கின்றனர். இதேநேரம், காயமடைந்தவர்களுக்கு சத்திர சிகிச்சை செய்வதற்கான மருந்துகள் காலாவதியாகி விட்டமையால், தற்போது, அந்த மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. நாட்டின் சுகாதார அமைச்சர் உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவராக இருக்கும் போதே நாட்டில் இந்த நிலைமை நிலவுகிறது.

நாட்டு மக்கள் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் இருக்கும் நிலையில், அரசாங்கமோ யுத்த வெற்றியில் மூழ்கிக் கிடக்கிறது. நாட்டின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை.கிராமிய அபிவிருத்தி மற்றும் பொருளாதார எழுச்சிக்கான சிறந்த சந்தர்ப்பம் இது. அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்குரியதே என்றார்.

இடம்பெயரும் மக்களுக்கான மனிதாபிமான உதவிகளுக்கு நிதி தேவைப்படுவதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தெரிவிப்பு

red-cross.jpgமோதல் நடைபெறும் பகுதிகளில் இருந்து இடம்பெயரும் மக்களின் மனிதாபிமான பணிகளை முன்னெடுக்க நிதி உதவி தேவைப்படுவதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. இப் பணிகளுக்காக நிதி உதவி வழங்க விருப்புவோர் கொழும்பு 10, ஹைட் பார்க், இலங்கை வங்கிக் கிளையின் 8860012 என்ற கணக்கிலக்கத்துக்கு பணத்தை அனுப்பி வைக்க முடியுமென சங்கம் அறிவித்துள்ளது.

இடம்பெயரும் மக்களுக்காக தேவைப்படும் மனிதாபிமான உதவிகள் தொடர்பாக செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்டுள்ள தகவல் மேலும்; பொருள் உதவிகளை வழங்க விரும்புவோர் பால்மா, பிஸ்கட், குடிநீர், போத்தல்கள், துணிகள், சுத்திகரிக்கப்பட்ட ஆடைகள், படுக்கை விரிப்புக்கள், துவாய், சவர்க்காரம், பற்பசை மற்றும் தேவையான பொருட்களையும் வழங்கி உதவ முடியும்.

நீர்தாங்கி மூலமாக குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. மக்களின் வசதி கருதி ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்ட 50 நவீன மலசலகூடங்களுடன் புதிதாக 50 மலசலகூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மக்களுக்கு தேவைப்படும் மருத்துவ உதவிகள் மூன்று அம்புலன்ஸ் வண்டிகள் மற்றும் தொண்டர்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வவுனியாவை நோக்கி இடம்பெயரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை அடுத்து வவுனியா செஞ்சிலுவைச் சங்கக்கிளை மனிதாபிமான பணிகளை முன்னெடுப்பதற்கு வசதியாக 25 தொண்டர்களை சேவையில் ஈடுபடுத்தியுள்ளது. வவுனியா வைத்தியசாலையில், சிகிச்சைப்பணிகளுக்காக 60 ஆண், பெண் பணியாளர்கள் சுழற்சி முறையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறான சேவைகள் அநுராதபுரம் வைத்தியசாலையிலும் வழங்கப்படுகின்றன.

திருகோணமலை வைத்தியசாலைக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் கொண்டு வரப்பட்ட நோயாளிகளுக்கு திருகோணமலை செஞ்சிலுவைச் சங்கமும் உதவிகளை வழங்கிவருவதாகவும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது

புலிகளின் விமானத்தின் பகுதிகள் படையினரால் வட்டக்கச்சியில் மீட்பு!

ltte_aircraft.pngமுல்லைத்தீவு வட்டக்கச்சி பிரதேசத்தில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினர் புலிகளினது விமானங்களின்; சில பகுதிகளைக் கண்டுபிடித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. விமானத்துக்குரிய சில உதிரிப்பாகங்கள் தப்பியோடிய புலிகளால் தீயிட்டு எரிக்கப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விமானங்கள் தொடர்பான கைநூலொன்றும் அவற்றை இயக்கும் முறைகள் அடங்கிய வரைபடங்களும் இப்பிரதேசத்திலிருந்து படையினரால் மீட்கப்பட்டுள்ளன. இங்கு விமானங்களை உருவாக்கும் முயற்சியிலும் அவற்றை இயக்கும் பயிற்சியிலும் புலிகள் ஈடுபட்டுள்ளனர் என படையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இப்பிரதேசத்திலிருந்து மோட்டார் இயந்திரங்களின் பாகங்கள் அலுமினியத் தகடுகள்,  ஆணிகள் தயாரிக்கும் இயந்திரங்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சு மேலும் அறிவித்துள்ளது. 

மதுரையிலும் போலீஸ்-வக்கீல்கள் மோதல்

சென்னை உயர்நீதிமன்றத்தில் போலீசாருக்கும் வழக்கறிஞர்களுக்கும்  இடையே நடந்த வரலாறு காணாத மோதலை அடுத்து தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை உயர்நீதிமன்ற வளாகத்தில் காவலுக்கு நின்றிருந்த போலீசார்களை தாக்கி தங்களது ஆத்திரத்தை தீர்த்துக்கொண்டனர்.பதிலுக்கு போலீசாரும் திருப்பி தடியடி கொடுத்தனர். நிலைமை இன்னும் கட்டுக்குள் வரவில்லை. இதனால் மதுரையில் பெரும் பதட்டம் நிலவுகிறது.

ஏ 35 வீதி படையினர் வசம்!

udaya_nanayakkara_.jpgமுல்லைத் தீவு மாவட்டத்திலுள்ள ஏ 35 வீதியை படையினர் இன்று முழுமையாக கைப்பற்றியுள்ளனர் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்

இந்த வீதியை மீட்பதற்காக இடம்பெற்ற மோதலில் புலி உறுப்பினர்கள் 23 பேர் கொல்லப்பட்டனர் எனவும்   கைப்பற்றப்பட்ட பகுதியில் தொடர்ந்தும் தேடுதல் மெற்கொள்ளப்பட்டு வருவதோடு படையினர் அங்கு நிலை கொண்டுள்ளனர் எனவும் பிரிகேடியர் உதய நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.

சுவாமியை கைது செய்யக் கோரி வக்கீல்கள் ரகளை- ஹைகோர்ட் காவல் நிலையம் எரிப்பு- நீதிபதிக்கும் அடி

_swamy_.jpgஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமியைக் கைது செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெளியே வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அது பெரும் கலவரமாக மாறியது. போலீஸாரும், வக்கீல்களும் கடுமையாக மோதிக் கொண்டனர். ஒரு நீதிபதி உள்பட பலர் படுகாயமடைந்தனர்.

ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி நேற்று முன்தினம் உயர் நீதிமன்றத்திற்கு வந்தபோது வக்கீல்கள் சிலர் அவரை தாக்கி அழுகிய முட்டைகள், தக்காளிகளை வீசி பெரும் ரகளையில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக தனது தலைமையி்ல் ஐந்து நீதிபதிகள் விசாரணை நடத்துவார்கள் என தற்காலிக தலைமை நீதிபதி முகாபாத்யாயா இன்று அறிவித்தார்.

இந் நிலையில் இன்று மாலை உயர் நீதிமன்றத்தில் வக்கீல்கள் பெருமளவில் திரண்டனர். சுப்பிரமணியம் சுவாமியைக் கைது செய்யக் கோரி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை கலைந்து போகுமாறு போலீஸார் கூறினர். ஆனால் வக்கீல்கள் கேட்கவில்லை. அத்தோடு நிற்காமல், போலீஸாரை கற்களை வீசித் தாக்க ஆரம்பித்தனர். உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் இருந்த காவல் நிலையத்தை தாக்கத் தொடங்கினர். அங்கிருந்த பொருட்களை எடுத்து வெளியே வீசி சூறையாடினர்.

மேலும், காவல் நிலையத்திற்கு சிலர் தீ வைத்ததால் பதட்டம் ஏற்பட்டது. வெளியில் இருந்த ஒரு போலீஸ் பைக்கும் தீவைத்துக் கொளுத்தப்பட்டது. இதில் காவல் நிலையம் எரிந்து சாம்பலானது. இதையடுத்து போலீஸார் தடியடியில் இறங்கினர். கலவரத்தில் ஈடுபட்ட வக்கீல்களை சரமாரியாக தடிகளால் அடித்து விரட்டினர்.

இதனால் மேலும் கோபமடைந்த வக்கீல்கள், உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் புகுந்து கண்ணில் பட்ட வாகனங்களையெல்லாம் தாக்கி சேதப்படுத்தினர். பல மோட்டார் சைக்கிள், கார்கள் உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கினர். இந்த பயங்கர ரகளையில் ஒரு நீதிபதி உள்பட பலர் படுகாயமடைந்தனர். இந்த மோதலில் சில டிவி கேமராமேன்களும் காயமடைந்தனர்.கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் இந்த அமளி துமளி நீடித்தது.

‘சன்’ நிலைய மறு ஒளிபரப்பு நிலையமே சீல்வைப்பு: ஊடக சட்டத்தை மீறிய ஊடுருவல்; – ஹெகலிய

kahaliya.jpgசென்னை யிலிருக்கும் “சன்’ தொலைக்காட்சி நிலையத்தின் மறு ஒளிபரப்பு நிலையமே வவுனியா வைரவபுளியங் குளத்தில் படையினரால் “சீல்’ வைக்கப்பட்டதாக தெரிவித்த தேசியப் பாதுகாப்புப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல இலங்கை அரசாங்கத்தின் அனுமதியைப் பெறாமலேயே இந்த மறு ஒளிபரப்பு நிலையம் இயங்கி வந்ததாகவும், இது ஊடகசட்டவிதிகளை மீறிய ஊடுருவல் எனவும் சுட்டிக்காட்டினார். கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய தரப்பில் கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் ரம்புக்வெல்ல மேற்கண்டவாறு பதிலளித்தார். இந்த மறு ஒளிபரப்பு நிலையம் அங்குள்ள இயக்க அலுவலகமொன்றிலேயே இயங்கி வந்ததாகத் தெரிவித்த அமைச்சர் ரம்புக்வெல்ல அது சென்னையிலுள்ள சன் தொலைக்காட்சி நிலையத்தின் மறு ஒளிபரப்பு நிலையமாக இலங்கையில் செயற்பட்டுள்ளது.

தமிழகத்தில் இடம்பெறும் இலங்கை அரசுக்கு எதிரான பிரசாரங்கள், புலிகளுக்கு ஆதரவான நடவடிக்கைகளை இந்த மறுஒளிபரப்பு நிலையம் தொடர்ச்சியாக இங்கு ஒளிபரப்பி வந்துள்ளது. அத்துடன் இந்த மறு ஒளிபரப்பு நிலையம் இயங்குவதற்கான அனுமதிப்பத்திரத்தையோ, அரச அங்கீகாரத்தையோ சன் தொலைக்காட்சி நிலையம் பெற்றிருக்கவில்லை. எனவே இது சட்டவிரோதமான ஊடக நிறுவனமாகவே இங்கு இயங்கி வந்துள்ளது. இதன் காரணமாகவே படையினர் இந்த மறு ஒளிபரப்பு நிலையத்தை மூடி சீல் வைத்ததோடு அங்கு கடமைபுரிந்த நால்வரையும் கைது செய்துள்ளனர் என அமைச்சர் ரம்புக்வெல்ல தெரிவித்தார்